30/01/2011

சிவப்பிரகாசரின் புதுமைச் சிந்தனைகள் - பி. சரவணக்குமார்

கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புறச்சமயங்களின் தாக்கம் தமிழகச் சமுதாயக் கட்டமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இம்மாற்றங்களால் சமூகக்கட்டுப்பாடுகள் தேவையான ஒன்றாக மாற்றமடைந்தன. இச்சூழ்நிலையைப் புரிந்து கொண்ட புலமையாளர்கள் தங்களது புலமையாலும், சமூக அக்கறையினாலும் வெட்டுண்டு கிடந்த மக்களை இணக்கத்துடன் பிணைக்க முற்பட்டனர். அவ்வாறு முற்பட்டவர்களில் சிவப்பிரகாசரும் ஒருவர். இவரைத் தமிழ் இலக்கிய உலகம் ''கற்பனைக் களஞ்சியம்'' என்றும், நன்னெறி என்ற நீதி நூலை எழுதியமையால் ''நன்னெறிச் சிவப்பிரகாசர்'' என்றும், இவர் சிறிது காலம் வாழ்ந்த இடமாகிய துறைமங்கலத்தைக் குறிப்பிடும் வகையில் ''துறைமங்கலம் சிவப்பிரகாசர்'' என்றும் குறிப்பிட்டு அழைக்கின்றது.

சிவப்பிரகாசர் நல்ல புலமையாளராக மட்டும் இல்லாமல் நல்ல திறனாய்வாளராகவும் விளங்கியுள்ளார். மற்றவர்களது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுடன் சில சமயங்களில் அதை மறுத்துத் தனது கருத்துக்களை முன் வைப்பதைப் பார்க்க முடிகின்றது.

''அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தா னிடையை - மறுத்தார்சம்

பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்(று)

உந்துஞ் சிவிகையினை யூர்ந்து'' (நால்வர் நான்மணிமாலை, பா.33)

என்னும் இப்பாடல் சிவப்பிரகாசரின் சிந்தனையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இப்பாடலின் முன் இரண்டு அடிகள் ''அறத்தாறு.... இடை'' என்னும் குறள் கருத்தை வேறுகோணத்தில் முன்வைக்கிறது. ஏன் மறுக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன என்பதற்கான வினா எழுகின்றது.

இப்பாடலின் கருத்து ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சைவ சமயத்தை நிலைநிறுத்தும் பொருட்டுத் தலங்கள்தோறும் சென்று தமிழ்ப் பாமாலை பாடி சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்கள். இந்நிலையில் ஒருசமயம் ஞானசம்பந்தர் சிவிகையில் ஊர்ந்து செல்லுங்கால் அச்சிவிகையை அன்பின் மேலீட்டால் நாவுக்கரசர் யாரும் அறியா வண்ணம் சிவிகையைத் தாங்கும் அடியவர்களுடன் தானும் ஒரு அடியவனாகத் தாங்கி வந்தார். இந்நிலையில் ஞானசம்பந்தர் தன் உள்ளக்கிடக்கையில் ஏற்பட்ட எண்ணத்தால் அப்பர் எங்கு உள்ளார் என்று வினவ ''அடியேன் ஒப்பரிய தவஞ்செய்த பயனாகத் தங்களுடைய திருவடிகளைத் தாங்கிவரும் போது பேறுபெற்றேன்'' என்றார். இச்செய்தியைச் சிவப்பிரகாசர் பின்வருமாறு சிந்தனை செய்கின்றார்.

பல்லக்கில் அமர்ந்து வந்த திருஞான சம்பந்தரும் பல்லக்கைச் சுமந்து வந்த நாவுக்கரசரும் புண்ணியம் செய்தவர்களே. அவர்களிடையே பாவ புண்ணிய வேறுபாடு இல்லை. இருவரும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களே அப்படியிருக்கும்போது எப்படி ஞானசம்பந்தர் மட்டும் அறம் செய்தவர் என்றும் நாவுக்கரசர் அறம் செய்யாதவர் என்றும் கொள்ள முடியுமா? என்ற வினாவை எழுப்புகின்றார்.

மேற்குறிப்பிட்ட இச்சிந்தனை சிவப்பிரகாசரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணம் பின்வரும் செய்திகளின் அடிப்படையாகக் கூட இருக்கலாம். அஃதாவது ஞானசம்பந்தரின் காலச் சூழ்நிலையும் சிவப்பிரகாசரின் காலச்சூழ்நிலையும் ஏறக்குறைய ஒரே தன்மையுடையதாக விளங்கியது. இவ்விருவேறு காலக்கட்டங்களிலும் புறச் சமயங்களின் தாக்கம் தமிழகத்தில் நிலவியது இந்நிலையில் சைவ சமயத்தை மீட்டெடுக்க உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற இருவேறு பாகுபாடுகளைக் களைந்து அனைவரையும் ஒற்றுமையடையச் செய்தால் மட்டுமே சமய விடுதலை பெறமுடியும் என்ற காரணமாகவும் கூடத் திருவள்ளுவரின் சிந்தனையை மறுத்துரைத்தார் எனலாம்.

நாவுக்கரசரின் சிறப்பை உரைக்க வந்த சிவப்பிரகாசர் அவரின் கரையேறிய அருட்திறத்தைப் பற்றிய செய்தியில் தனது வினாவை எழுப்புகின்றார். அவ்வினாவிற்குரிய பாடல்:

''அருகக் கடல்கடந் தேறிய தோசிலை யம்பியெனப்

பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு

கருகக் கடல்விடம் உண்டோன் அடியிற் கசிந்துமனம்

உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த உனக்கரிதே'' (நால்வர் நான்மணிமாலை - 22)

1. சமணர்களுடைய மதமாகிய சமணக்கடலைக் கடந்தது சிறப்பா அல்லது

2. பல்லவ மன்னன் மகேந்திரனால் கல்லால் கட்டப்பெற்றுக் கடலில் வீசிய பின் மீண்டது சிறப்பா என்று வினா எழுப்புகின்றார்.

கடலைக் கடக்க ஒரு கருவிப்பொருள் வேண்டும் கருவிப்பொருள் இல்லாமல் கடப்பது என்பது இயலாத ஒன்று என்பதைப்

''பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்'' (குறள்.10)

என்ற குறள் மூலம் விளக்குகின்றார் வள்ளுவர். அதுபோல் கடலில் விடப்பட்ட நாவுக்கரசருக்கு அவரைப் பிணைந்திருந்த கல்லே தெப்பமாக மாறி அவரைக் கரைசேர்த்தது. இதைச் ''சிலையம்பி'' என்ற சொல்லால் விளக்குகின்றார்.

சமண சமயமாகிய கடலில் இருந்து கரையேறுவதற்குத் தெப்பமாக எது பயன்பட்டிருக்கும் என்பது அடுத்த வினா. ஏன் எனில் கடலுக்கு ஒரு குணம் உண்டு தனக்குத் தேவையில்லாத எந்தப் பொருளையும் அது தன்னகத்தே வைத்துக் கொள்வதில்லை. அவற்றைக் கரைசேர்த்துவிடும். ஆனால் சமண சமயமாகிய கடலில் இறங்கியவர்கள் கரையேறுவது என்பது இயலாத காரியம். இந்நிலையில் தான் நாவுக்கரசர் இதிலிருந்து எவ்வாறு வெளியேறினார் என்பதைப் பார்க்க வேண்டும் இங்கு சிவப்பிரகாசரின் இலக்கியப் பயிற்சி வெளிப்படுகின்றது எனலாம்.

''தம்பியார் உளராக வேண்டும் என வைத்தயா

உம்பர் உலகு அணையவுறு நிலைவிலக்க உயிர்தாங்கி

அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி

இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்'' (பெரியபுராணம்....)

என்னும் பாடல் கருத்து அவரின் மனக்கண் எழுந்தது போலும். ஆகவே சமண சமயத்தில் இருந்து மீள்வதற்கு அவரது தமக்கையாகிய திலகவதியார் தெப்பமாக விளங்கினார் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தார்.

அவர் வாழ்ந்த சமுதாயத்தில் நிலவிய பல ஏற்றத்தாழ்வுகளை நயம்பட மறுத்துரைக்கின்றார். பிறப்பினால் மனிதர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிந்திருப்பதை உணர்த்துகிறார். ஆல கால விஷத்தைக் கக்கிய பாம்பு என்றாலும் அதன் தலையில் அமைந்த மாணிக்கக் கல்லை எவரும் வெறுக்கமாட்டார் என்பதை ஒரு பாடலில் கூறுகிறார். அப்பாடல்

''ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்

மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு

பவர் ஆர்? அரவின் பருமணிகண் டென்றும்

கவரார் கடலின் கடு'' (நன்நெறி - 22)

என்னும் பாடல் ஆகும். மேலும் இதுபோன்ற செய்தியை விளக்கும் முகமாகத் தனது சமய இலக்கியப்படைப்பான பிரபுலிங்கலீலையில்

''சாதியும் குறியும் நீத்துச் சரணரைச் சிவனே என்று

பாதபங் கயம் இறைஞ்சிப் பத்திசெய் குவனந் நந்தி....'' (பிரபு - அக்கமா - 47)

என்று குறிப்பிடுகின்றார். இறைவன் அருளைப் பெறவேண்டும் என்றால் சாதிகளையும், ஆண், —ண் என்ற பேதங்களையும் நீக்கி அடியவர்களைச் சிவமே என்ற அடிதொழுதால் இறைவன் அருளைப் பெறலாம் என்கின்றார்.

பிள்ளை என்றாலே ஆண்பிள்ளையையே குறிக்கும் சமுதாயம் இது. இங்குப் பெண் என்பவள் ஆணுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தன்மையுடையவளாகவே சித்தரிக்கப்படுகின்ற காட்சியைக் காணலாம்

''பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற''

என்ற குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் ''அறிவறிந்த'' என்ற சொல் ''பெண்ணொழிந்து நின்றது என்பர்'' இதை மறுத்துரைக்கும் சிவப்பிரகாசர் மணமக்களை வாழ்த்தும்போது நல்ல ''ஆண் மகளைப் பெற்று'' உயர்வாயாக என்று வாழ்த்துவது உலகியல் வழக்கு. ஆனால் இவ்வழக்கத்துக்கு மாறாக ''ஆண்மகற் பெறுக என்று ஆசி சொல்பவர் நாணும்படி பெண் பெற்றார்'' என்று குறிப்பிடுகின்றார்.

''கற்றார் அறிகுவர் மக்கள்தம் பேறுஎனக் கட்டுரைத்த

சொல்தான் ஒரு பெண் ஒழித்ததுஎன் பாரொடு தொல் உலகில்

நற்றாண் மகற்பெறுக என்று ஆசி சொல்பவர் நாண உனைப்

பெற்றான் மலையரை யன்குறை வாழும் பெரியம்மையே'' (பெரியநாயகியம்மை கலித்துறை - 12)

இவ்வாறு சிவப்பிரகாசர் தனது இலக்கியங்களில் சமூகத்தைப் புதுமைக் கண் கொண்டு பார்க்கின்றார்.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

யாழ்ப்பாணத் தமிழ்: சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாது - மு. சதாசிவம்

பூனை புலியினத்தைச் சேர்ந்ததே என்றாலும் பூனைக்கும் புலிக்கும் எத்துணை வேறுபாடுள்ளது! நெல் என்பது ஒரு வகையான புல் என்று கூறினால் அற்பமான புல்லுக்கும், உயிர்காக்கும் நெல்லுக்கும் எத்துணை வேறுபாடு! ''உருவுகண்டு எள்ளாமை வேண்டும்'' என்றார் வள்ளுவர்.

ஒரு மொழியின் வளர்ச்சியில் பண்டு வெவ்வேறு வடிவங்களைப் பெற்றிருந்த சொற்கள் காலப்போக்கில் ஒரே வடிவத்தை ஏற்றுக்கொள்ளுதல் உண்டு. எடுத்துக்காட்டாக ''அத்தம்'' என்ற சொல் சங்க காலத்தில் ''வழி'' என்ற பொருளைப் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வடசொற்கள் வடவெழுத்து ஒரீஇத் தமிழில் அளவின்றிப் புகுந்தபோது ஹஸ்தம் (கை), அர்த்த (பாதி), அருத்தம் (பொருள்) என்ற மூன்று வடசொற்கள் தமிழில் ''அத்தம்'' என்ற ஒரே வடிவத்தைப் பெற்றுவிட்டன. நான்கு வெவ்வேறு பொருட்களைப் பெற்றுள்ள ''அத்தம்'' என்பது ஒரு சொல்லா? பல பொருள் ஒரு சொல்லா? எனில் நான்கு சொற்களின் திருந்திய வடிவமாதலின் பலபொருள் ஒரு சொல் (Homonym) எனப்படும். அகராதியில் நான்கு வெவ்வேறு சொற்களாக எண்கள் தரப்பட்டு வேர்கள் கூறப்பட்டிருக்கும்.

பிறமொழிச் சொற்கள் கலவாத போதுகூடத் தமிழிலேயே வெவ்வேறு பொருள்களையுடைய சொற்கள் ஒரே வடிவத்தைப் பெற்று விடுதலுமுண்டு. நந்து என்ற சொல் தழைத்தல், அழிவுறல் என்ற முற்றிலும் முரண்பட்ட பொருளைத் தருவது போலவே ''படு'' என்ற சொல்லும் ''தோன்று, அழிவுறு'' என்ற இருவேறு பொருள்களைத் தந்து நிற்கின்றது. ஒரு சொல் எப்பொருளில் வழங்கப் பெற்றுள்ளது என்பதை அச்சொல்லைச் சூழ்ந்துள்ள பிறசொற்களின் துணையால் அறிந்து கொள்ளலாம். இதிலிருந்த ஒரு சொல்லின் பொருள் காலத்துக்கேற்பவும், இடத்திற்கேற்பவும் வேறுபடும் என்பது பெறப்படும். சிலபோது உணர்த்துவான் (பேசுவான்) குறிப்பிற்கேற்பவும், உணர்வான் (கேட்போன்) குறப்பிற்கேற்பவும் கூடப்பொருள் மாற்றம் நிகழ்வதுண்டு. எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் எந்தச் சமயத்தில் ஏற்படும் என்று எவரும் எதிர்பார்த்துக் கூற முடியாது. இதனால்தான் மொழியியலில் எழுத்தியல், ஒலியியல் போலப் பொருளியல் ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்றிருக்கவில்லை என்று கூறுவர். ஒரு சொல்லுக்கு எக்காலத்திலும் ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியும் என்று கூற முடியாதாகலின் ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருப்பதாகக் கருதமுடியாது. எனினும் காளிதாசர் தம் ரகுவம்சத்தில் கடவுள்வாழ்த்துப் பாடும்போது ''சொல்லும் பொருளும் போல இணைபிரியாத மாதொரு பாகனை (அர்த்தநாரீசுவரனை) வணங்குகின்றேன்'' என்று கூறியுள்ளார்.

இலங்கையின் ஒரு பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்று கூறுகின்றனர். யாழ்ப்பாணத் தமிழையும், தமிழகத் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போபது பல உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. கடலால் பிரிக்கப்பட்ட பகுதியாதலின் தமிழின் பல தொன்மைக் கூறுகளை யாழ்ப்பாணத் தமிழ் இன்னும் காப்பாற்றி வருகிறது. சங்ககாலச் சொற்களில் பல சொற்கள் இன்றும் யாழ்ப்பாணத் தமிழில் உலா வருகின்றன. அவன் இவன் என்ற இரு சொற்களுக்கும் இடைப்பட்ட உவன் என்பது தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் காணப்படுகிறது. அதைப் போலவே சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்ட பொருளைக் குறிக்கும் உது, உவர், உப்பால், உங்கை (உங்கே), உம்பர், உவண், உவள், உதை (அதை), உதுக்கு முதலிய பல சொற்கள் யாழ்பாணத் தமிழில் வழக்கில் உள்ளன. தமிழகத் தமிழில் அவை வழக்கு வீழ்ந்துவிட்டன மேலும் யாழ்த் தமிழில் வழங்கும் பல சொற்கள் அதே வடிவத்தில் தமிழகத் தமிழில் வேறு பொருள்களைப் பெற்று வழங்குகின்றன. இவ்வாறு பல்லாயிரம் சொற்கள் என்னால் தொகுக்கப்பெற்றுள்ளன. ஒரு சிலவற்றை மட்டும் ஈண்டுக்காண்போம்.

சம்பல் என்பது கொங்குப் பகுதியில் விலை குறைந்தது. விலை மலிவானது என்ற பொருளைத் தரும். துணியின் விலை சம்பலாகி விட்டுது என்றால் விலை குறைந்துவிட்டது என்பது பொருள்.

யாழ்ப்பாணத்தில் சம்பல் என்பது வற மிளகாய்ச் சட்டினியைக் குறிக்கும்.

''நீ அவனோடு கதைக்காதே'' என்றால் அவனோடு பேசாதே என்பது யாழ்ப்பாண வழக்கு. தமிழகத்தில் கதைக்காதே என்றால் கதைவிடாதே, பொய்யாகப் புனைந்து கூறாதே என்ற பொருள்தான் உண்டு.

வடிவு என்பது அழகு, நன்கு என்ற பொருளில் யாழில் (யாழ்ப்பாணத்தில் என்பதன் சுருக்கம்) வழங்குகிறது. அவள் வடிவாயிருக்கிறாள் என்றால் அழகாயிருக்கிறாள் என்றும் அதை வடிவாய்ச் செய்கிறான் என்றால் நன்றாகச் செய்கிறான் என்றும் பொருள் தமிழகத்தில் வடிவு என்பது உருவம் என்ற பொருளில் வழங்குகிறது. இலக்கியத்தில் மட்டும் வடிவு என்பது அழகு என்ற பொருளைப் பெற்றிருக்கும்.

யாழில் தாமசிக்கிறான் என்றால் ஓரிடத்தில் குடியிருக்கிறான் என்று பொருள். மலையாளத்திலும் இச்சொல் இப்பொருளில் வழங்குகிறது. தமிழகத்தில் காலந்தாழ்த்துகிறான் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒற்றை மாட்டு வண்டியைத் திருக்கல் வண்டில் என்று கூறுவர். வண்டில் என்பது பழஞ்சொல், தமிழில் வண்டி என்றும் தெலுங்கில் பண்டி என்றும் வழங்கும். தமிழ்நாட்டில் திருக்கல் என்பது குதர்க்கம், பிரச்சனை என்ற பொருளைத்தரும்.

யாழ் நாட்டில் திறப்பு என்பது சாவியைக் குறிக்கும். கொங்கு நாட்டில் சாவியைத் தொறப்புக் குச்சி என்பர். தமிழகத்தில் திறப்பு என்றால் சாவி என்ற பொருள் இல்லை. திறத்தல் என்ற பொருளே உள்ளது. திறப்புவிழா, படத்திறப்பு முதலிய தொடர்களைக் காண்க.

யாழ்ப் பேச்சு வழக்கில் ''தீத்து'' என்பது ஊட்டு என்று பொருள்படும். ''நான் உனக்குச் சாப்பாடு தீத்தப் போறன். சோற்றைக் குழந்தைக்கு தீத்திவிடு'' என்று கூறுவர். தமிழகத்தில் தீத்துதல் என்றால் ஒரு பொருளைக் கூர்மையாக்குதல் (தீட்டுதல்) என்று பொருள்படும்.

சாட்டு என்பது சாக்குப் போக்கு என்ற பொருளில் யாழில் வழங்கப்படுகிறது. ''எல்லாவற்றிற்கும் விதியைச் சாட்டுச் சொல்லாதீர்கள்'' என்பர். தமிழகத்தில் சாட்டு என்பது குற்றஞ்சாட்டு, பூச்சாட்டு (பூச்சாற்று) என்ற பொருளில் வழங்குகிறது.

யாழில் ஆறுதல் என்பது ஓய்வைக் குறிக்கும். ''ஆறுதலாய்க் கதைக்கலாம்'' என்றால் சாவகாசமாப் பேசிக் கொள்ளலாம் என்று பொருள். தமிழ்நாட்டில் ஆறுதல் என்பது தணிதல் (சினம் ஆறுதல்); தேறுதல் (ஆறுதல் கூறு), சூடு ஆறுதல் முதலிய பொருள்களில் வரும்.

அண்டாது என்ற சொல் யாழில் போதாது, பத்தாது என்ற பொருளில் வழங்குகிறது. ''இதுகளுக்கு எப்படிக் குடுத்தாலும் அண்டாது'' என்பர். தமிழகத்தில் அண்டாது என்றால் போய் ஒட்டாது என்று பொருள்படும்.

யாழில் அப்பு என்றால் அப்பாவைக் குறிக்கும். தமிழகத்தில் அறை, குழியை நிறை என்ற பொருளில் வரும். அவதானம் என்பது யாழில் கவனித்தல் என்ற பொருளில் வழங்குகிறது. அவதானமாகக் கேள் என்றால் கவனமாகக் கேள். அவதானிக்கத் தொடங்கு - கவனிக்கத் தொடங்கு. அவதானமாக - கவனமாக. அவதானமாக இரு, எச்சரிக்கையாக இரு. தமிழ்நாட்டில் அவதானம் என்பதை நினைவாற்றல் என்ற பொருளில் வழங்குகின்றனர். அட்டாவதானம், சதாவதானம் என்று கூறுவர். இப்போது எண்கவனகம், நூற்றுக் கவனகம் என்று கூறுகின்றனர். கரந்தை என்பது யாழில் மாட்டுவண்டியைக் குறிக்கும். தமிழகத்தில் கரந்தை பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கில் அது ஒரு திணையைக் குறிக்கும்.

மாராப்பு என்பது தமிழகத்தில் பெண்கள் மார்பின் மேல் அணியும் துணியைக் குறிக்கும். மார் + யாப்பு = மாராப்பு என்று வரும். யாழில் வண்ணாள் துவைப்பதற்காகக் கட்டி வைக்கும் அழுக்குத் துணிகளைக் குறிக்கும்.

குடிமை என்பது யாழில் அடிமையைக் குறிக்கும். தமிழகத்தில் குடிமக்களைப் பற்றிய அறிவு என்று பொருள்படும். பள்ளிகளில் ஒரு காலத்தில் குடிமைப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

அணியம் என்பது யாழில் கப்பலின் முன்பகுதியைக் குறிக்கும். இக்காலத் தமிழகத்தில் ''தயார்'' என்ற இந்திச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக உள்ளது.

கெதி என்றால் அவசரம் என்பது யாழ்ப்பாணப் பொருள் கெதியா வா - விரைவாக வா.

தமிழகத்தில் கெதி என்ற பேச்சு வழக்குச் சொல் ஆதரவு, நற்பேறு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அவனுக்கு வேறு கெதியில்லை; அவன் ஒரு கெதி கெட்டவன் என்பவை பேச்சு வழக்கு.

எடுப்பு என்றால் யாழில் ஊதாரிச் செலவு என்று —‘பருள். ''நானும் உந்த எடுப்பு வேண்டாமெண்டு எத்தினை அவனுக்குச் சொல்லியிருக்கிறன்''.

தமிழகத்தில் எடுப்பு என்றால் எடுத்தல், கவர்ச்சி முதலிய பொருள்களைத் தரும். எடுப்புச் சாப்பாடு என்றால் சாப்பாட்டு விடுதியிலிருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் உணவு. இது எடுப்பாக இருக்குது என்றால் அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது என்று பொருள்.

எத்து என்றால் யாழில் பாத்திரத்திலிருந்து நீரைக் கொட்டு என்று பொருள். தமிழகத்தில் அச்சொல் ஏமாற்று என்ற பொருளைத் தருகிறது.

ஏத்தம் என்பது யாழில் பெருமை என்ற நல்ல பொருளைத் தருகிறது. தமிழகத்தில் ஏத்தம் என்பது ஏற்றம் (இறைத்தலைக்) குறிக்கும். திமிர் என்ற பொருளையும் தரும். ''அவனுக்கு ரொம்ப ஏத்தம் இருக்குது'' என்பது பேச்சு வழக்கு.

கறுப்பு என்பது யாழில் சாராயத்தைக் குறிக்கும். இங்கே கறுப்பு நிறத்தையும், பேயையும் குறிக்கும். இவ்வாறு ஒரே வடிவத்தைப் பெற்ற சொற்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு பொருளையும், தமிழகத்தில் வேறு பொருளையும் தருவதை அவதானிக்கலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

பழந்தமிழில் மாயோன் தொன்மம் - வளர்ச்சியும் சுழற்சியும் - சு. சந்திரா

காடுறை கடவுளாகப் போற்றப்படுபவன் மாயோன். இயற்கை யுருவினாக உருவான மாயோன் பற்றிய தொன்மக் குறிப்புகள் கதைக் கூறு உடையனவாய் உள்ளன. பண்பாட்டுக் கலப்புடன் வேதத்தில் குறிப்பிடப்படும் கிருஷ்ணனுடன் இணைந்து உள்ளன. தொன்மக் கதைகளாய் வளர்ந்துள்ளன. தத்துவநோக்கில் இயற்கையில் பரந்து சுழற்சி பெற்றுள்ளன. இதனை ஆய்வதே ஆய்வுரையின் நுவல் பொருளாகும்.

பழந்தமிழ் நூல்களில் மாயோன்:-

மாயோன் பற்றிய குறிப்புகள் பிற தெய்வங்களைவிட மிகுதியாகப் பழந்தமிழ் நூல்களில் பரவிக் கிடக்கின்றன. ''தேயா விழுப்புகழ்த் தெய்வமாக'' (கலி:103:76) உள்ள மாயோனைக் குறிக்கும் திருமால் எனும் சொல் பழந்தமிழில் யாங்கனும் குறிப்பிடப்படவில்லை.

குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, மலைபடுகடாஆம் முதலிய பத்துப்பாட்டு நூல்களிலும் ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலிய எட்டுத்தொகை நூல்களிலும் மாயோன் பற்றிய தொன்மக் குறிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

மாயோன்: இயற்கையுரு:-

மாயோன் என்ற சொல் கரியநிறமுடையவன் என்ற பொருளைத் தருகின்றது. மணிவரை அன்ன மாஅயோனே (புறம்.229) மண்ணுறுதிருமணி (புறம். 56:5) நீலநிற உறவின் நெடியோன் (பெரும். 30.402) இருள் மயங்கும் மேனியன் (பரி.15:50) என இயற்கையுருவாக மாயோன் குறிப்பிடப்படுகின்றான்.

காய்மலர்ப் பூவை கடலை யிருண்மணி

அவையைந்து முறழு மணிகிளர் மேனியை (பரி.13:42-43)

எனக் காயாம்பூ, கடல், நீலமணி என இயற்கையின் உரு, கடவுளாகச் சங்க இலக்கியத்தில் சுட்டப்படுகின்றது.

மாஅல்:-

பெரிய எனும் பொருண்மை உடைய மாஅல் என்னும் பெயரும் மாயோனுக்கு உரியதாகப் பழந்தமிழ்ப் பாடல்களில் பயின்றுவரக் காண்கிறோம். முல்லை நிலக்காடுறைப் பகுதியின் நெடிய உருவினை மாயோனுக்கு ஏற்றி மாலாகக் கொள்ளும் முறையினைப் பத்துப்பாட்டின் பல இடங்களில் காணமுடிகிறது.

''மால்வரை நிவந்த சேணுயர் வெற்பு'' (முருகு.12) ''மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்'' (நற்.32:1) என நெடியோனாக மாஅல் உயருகின்றான்.

மாயோன்: முல்லை நிலக்கடவுள்:-

அகன் ஐந்திணைக்கு உரிய நிலத்தினைக் கூறுமிடத்துத் தொல்காப்பியர், மாயோன் மேய காடுறை உலகமும் எனச்சுட்டுகிறார். காடுறை கடவுளாகச் சுட்டப்படும் மாயோன் காயம்பூ சூடினமையை, ''பூவை விரிமலர் புரையும் மேனியை'' (பரி.1:6-7) ''பறவாப் பூவை பூவினோயே'' (பரி.3:73) என்ற தொடர்கள் வெளிப்படுத்துகின்றன.

காடுறை கடவுளான திருமால் கானகத்தின் நெடுமையையும் மாமை நிறத்தினையும் உடையோனாய் இருப்பதோடு அந்நிலத்திற்கு உரிய பெரும்பொழுதான கார்காலத்துக் கரிய மேகத்தின் நிறத்தினைப் பெற்று, காயாம்பூ சூடி முல்லை நிலக்கடவுளாக விளங்குவதனை உணர முடிகின்றது. இதனைத் ''தங்கள் கண்ணுக்குப் பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கையழகை மால் என்று வழுத்தினர்'' (திரு.வி.க. தமிழ்நூல்களில் பௌத்தம், ப.27) என்ற கருத்து அரண் செய்கிறது.

இவ்வாறு மாயோன் அடர் கானகப் பசுமையின் இயற்கையழகில் முகிழ்த்த முல்லைக் கடவுளாக எழிலுறுகிறான் எனலாம்.

அகவாழ்வின் தலைவன்:-

முல்லை நிலக் கடவுளாகிய மாயோனை, முல்லைநிலத் தலைவனோடு இயைத்தும் பாடும் மரபு பழந்தமிழில் பரந்து கிடக்கக் காணலாம்.

அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்

மரம்செல மிதித்த மாஅல் போல

புன்தலை மடப்பிடி உண்இயர் அம்குழை

நெடுநிலை யாஅம் ஒற்றிநனைகவுள்

படி நிமிறு கடியும் களிறே தோழி (அகம். 59:5-10)

என ஆற்றியிருக்கும் தலைவிக்குத் தோழி தலைவன் செல்லும் வழியிடைக் காட்சி ஒன்றினைக் கூறி ஆற்றுவிக்கின்றாள். இக்கவிதையில் மால் களிறுக்கு உவமையாகி முல்லை நிலத் தலைவனுக்கு இறைச்சிப்பொருளாய்ச் சுட்டப்படுவது இன்றியமையாத குறிப்பாகும்.

எருதின் மீது பாயும் தலைவனுக்கு மால் ஒப்பாவான் என்றும் (கலி.104:35-38) தலைவனைப் பிரிந்திருந்த தலைவி தலைவனை அடைவது மாயோன் மார்பில் உள்ள திருமகளை ஒக்கும் (கலி.109:17-18) என்றும் கலித்தொகை குறிப்பிடுகின்றது.

மாயோன்: பூவை நிலையின் வெற்றி வீரன்:-

பூவை நிலைத் துறையின் புகழ்நிலைக்கு உரிய கடவுளாகிய மாயோன் வெற்றி வீரனாகின்ற தலைவனுக்கு உவமையாகின்றான்.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறனைப் போற்றும் முகத்தான், ''புகழ் ஓத்தீயே, இகழுநர் அடுநனை'' (புறம். 56:13) என மாயோன் உவமிக்கப்படுகின்றான். பிறிதோரிடத்தில்,

புகழ்தலுற்றோர்க்கு மாயோனன்ன

உரைசால் சிறப்பிற் புகழ்சான்மாறா (புறம்.57:1-3)

என மன்னனது சிறப்பிற்கு மாயோனது சிறப்பு உவமையாகின்றது. இவ்வாறு முல்லை நிலத்தாரின் அகவாழ்விற்கும் புறத்திணை வீரர்களின் (அரசர்களின்) புகழுக்கும் மால் உவமையாக்கப்படுவது எண்ணத்தக்கதாகும். இயற்கையின் மூலபடிவ உருவினனான மாயோன் மாந்தர்தம் வாழ்வியல் கூறுகள் வழி மூலபடிவபாத்திரமாக (Archetypal Charecter) உயர்ந்தமை இன்றியமையாக் குறிப்பாகும்.

மாயோன்: காத்தல் கடவுள்:-

இயற்கையின் உருவாகிய மாயோன் பற்றி குறிப்புகள், கதைத்தன்மையுடன் இணைந்து வளர்ச்சியுற்ற நிலையில் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றன. காலத்தால் பிற்பட்ட இலக்கியங்களில் அவை புராணிகத் தன்மை மிக்கிருக்கும் பான்மையில் இடம் பெறுகின்றன.

பரிபாடலில் மாயோன் முத்தொழில் புரிபவனாக முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழில் எனப் படைப்பு, அளிப்பு, அழிப்பு, என்னும் தொழில் புரிபவனாக உள்ளான் (பரி.3.71) முத்தொழில் வல்லவனாக மாயோன் இருப்பினும் காத்தல் தொழில் மாயோனுக்கு உரியதாகச் சுட்டப்படுகின்றது. ''உலகாள் மன்னவ'' (பரி 3.85) என்னும் ''ஒருமை வினைமேவு உள்ளத்தினை'' (பரி.13.49) என்றும் மாயோனின் காத்தல் தொழில் சுட்டப்படுகிறது. காத்தல் கடவுளாக விளக்கமுற்ற மால் உலக முதல்வனாகப் பேருரு கொண்டமையினையும் பழந்தமிழ் வழி அறிய முடிகின்றது.

மாயோன்: உலக முதல்வன்:-

மாயோனாகிய திருமாலின் முழுமுதற்றன்மையினையும் அவதாரங்களையும் ஆற்றலுடைய முழுமுதற்கடவுளாக உயர்ந்தமையையும் பரிபாடல் குறிப்பிடுகின்றது. இக்குறிப்புகள் வடமொழிப் புராணமரபுடன் இணைந்து செழித்தவை என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

திருமால் அனைத்துக் கடவுளாக உள்ளமையை, ''எவ்வயினோயும் நீயே'' (பரி.4:67-70) என்ற தொடர் சுட்டுகின்றது. பலராமன், காமன், அநிருத்தன், பிரமன் என ஐவராகவும் மாயோன் உள்ளமையும் பரிபாடலில் (பரி 3.81-94) குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான குறிப்புகள் வைணவப் பஞ்சராத்திரக் கொள்கையின் வளர்ச்சி என்பர் திறனாய்வாளர் (இந்திரபவாநி, சங்க நூல்களில் கிருஷ்ண வழிபாடு, ப.62)

இயற்கையின் உருவாகிய மால் நெடியோனாகி, பேருரு பெற்று கடவுளானமையும், வடமொழிப் புராணக்கலப்பால் கதைத் தன்மையுடன் கூடி வளர்ச்சியுற்றமையையும் கண்டோம். தத்துவப் பொருளாகிய நெடியோன் இயற்கையின் எல்லாப் பொருளிலும் பரந்து விரிந்து ஊடுருவிய நிலையினையும் பரிபாடலில் பரக்கக் காணலாம்.

மாயோன் அவதாரங்கள்:-

அவதாரம் என்பதற்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். அவ்வாறு இறங்குதல் உயிர்களின் பொருட்டு என்றும் கூறுவர். அவதாரம் என்பதற்குத் தோற்றம் என்ற சொல்லாட்சி கையாளப்படுகின்றது. மால் எடுத்த தோற்றங்கள் பத்தென்பர். அவற்றுள் கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருட்டிணன் என எட்டுத் தோற்றங்கள் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர பழந்தமிழில் தொன்மை வகைமை வளர்ச்சி, பி.எச்டி ஆய்வேடு, ப.169)

மாயோன் தொன்மம்: வளர்ச்சியும் சுழற்சியும்:-

மாயோன் தொன்மம் வளர்ச்சி பெற்றுச் சுழற்சி பெற்றமையை அறியலாம்.

இயற்கையின் அடர் பசுமை, கானகத்தின் பரிதி நுழையாத அடர் இருள் முதலிய மூலபடிவு எண்ணங்களுக்கு மாயோன் வித்தாகின்றான். அடர் கானகத்தின் பெரிய பரப்பிற்கும், நெடிய சார்பாக நெடியோனாகக் காடுறை கடவுளாக உயருகின்றான். காடுரை மக்களின் அகவாழ்வாம் காதல் வெற்றிபெற வழியாகும் ஏறு தழுவும் தலைவனாய்ப் பழந்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நனவிலி மனவுணர்வுகளின் உருவாகக் காட்சியளிக்கத் தொடங்குகின்றான். அரசர்களின் புகழுக்கும் படிமமாகி. பூவை நிலை எனும் புறப்பொருளில் மையமிடுகின்றான்.

வடமொழிப் புராணக் கலப்புற்று வளர்ச்சி பெற்ற தொன்மக் கடவுளாகப் பழந்தமிழில் குறிப்பிடப்படுகின்றான். மணிதிகழ் உருபின் மாயோன், மூவேழ், உலகமாய்ப் பரந்தமையும் பிறவாப் பிறப்பாகவும் சிறந்து உலக முதல்வனாகின்றான். விட்டுணுவின் தசாவதாரங்களுள் பல தோற்றங்களின் வடிவாகின்றான். சமய தத்துவச் சார்பின் பொருண்மையாகின்றான். இவ்வாறு மாயோன் தொன்மம் பிறமொழி மற்றும் பண்பாட்டுக் கலப்பால் வளர்ச்சியுற்ற நிலையை உணர முடிகின்றது.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

பின் நவீனத்துவம்: ஒழுங்கவிழ்ப்பின் கூறுகள் - மு. சாதிக் பாட்சா

கடந்த காலத்தில் 50-க்கும் மேற்பட்ட இலக்கிய இயக்கங்கள் என்ற சிந்தனைகள் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டன. காலம் செல்லச் செல்ல இன்னும் பல இலக்கிய இயக்கங்கள் தோன்றலாம். அதற்கான காரணங்கள் நிறைய உள்ளன. அந்த வரிசையில் சமீப காலமாகப் பெண்ணியம், தலித்தியம் போன்ற இலக்கிய இயக்கங்கள் இன்று ஊற்றெடுத்து ஓடுகின்றன. இக்கட்டுரையின் துவக்கத்தில் சொல்லாமற் விட்ட இலக்கிய இயக்கங்களையும், சொல்லப்பட்டுள்ள இரண்டு இலக்கிய இயக்கங்களையும் தனக்குள்ளே இழுத்துக் கொள்ள முயற்சிக்கப் புதிய சிந்தனை தோற்றம் பெற்றுள்ளது. அச்சிந்தனை பின் நவீனத்துவச் சிந்தனை என்று பெயர் பெற்றுள்ளது.

இப்பின்நவீனத்துவ சிந்தனை மேலோட்டமாக ஆறு வகையான கூறுகளைக் கொண்டுள்ளது. அவ்வாறான,

1. பெருங்கதையாடல் தகர்வு.

2. தன்னிலையை முன்னிலைப்படுத்துதல்

3. ஒழுங்கவிழ்ப்பு

4. பகுத்தறிவைக் கேள்விக்குள்ளாக்குவது

5. மொத்த தத்துவத்தை மறுத்தல்

6. பன்மைத் தன்மைகளை வலியுறுத்தல்

எனவாகும்.

இதில் ஒழுங்கவிழ்ப்பு என்னும் கூறு மட்டும் இங்கு நோக்கப்படுகிறது.

ஒழுங்கவிழ்ப்பு:-

மனிதன் எல்லா நிலைகளுக்கும் தான் வாழுகின்ற தளத்தில் ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்கிறான். அவ்வொழுங்கிற்கு இலக்கணத்தை ஏற்படுத்திக்கின்றான். அவ்விலக்கணத்தின்படி செயற்படுகிறான். இது எதார்த்தமல்ல. இந்த ஒழுங்கு அசவியமற்றது. எதார்த்தத்திற்கு எதிரானது. சான்றாக, ''வீடு ஒழுங்காக உள்ளது. அடுக்கி வைக்கப்ட்ட பொருள் அப்படியே அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனால் குழந்தைகள் சிலர் உள்ளனர். குழந்தைகள் உள்ள வீட்டில் பொருட்கள் வைத்த இடத்தில் வைக்கப்பட்ட நிலையில் உள்ளதெனில் அக்குழந்தைகள் இலக்கணத்துடன் வளர்க்கப்பட்டுள்ளனர். அதனால் குழந்தைப் பருவத்தை அக்குழந்தை இழந்து நிற்கிறது. வீட்டு ஒழுங்கிற்கும், குழந்தைத் தனத்திற்கும் என்ன தொடர்பு? என்ற வினா எழும்பலாம்.

குழந்தை விளையாடினால் வீடு ஒழுங்கற்றுப் போகும். குழந்தை விளையாடாவிட்டால் வீடு ஒழுங்குடன் இருக்கும். குழந்தை விளையாடாமல் இருக்குமா? நாம் அதைத் தடுக்கிறோம். குழந்தை விளையாட்டைத் தடுத்தால் குழந்தைக்கும் நமக்குமுள்ள அன்பு குறையும். வீடு ஒழுங்கெனில் பெறோர் குழந்தையிடம் அன்புப் பிணைப்பு இல்லையென்று பொருளாகும்.

வீடு ஒழுங்கற்று இருப்பதே பின் நவீனத்துவச் சிந்தனையாகும். இதுவே ஒழுங்கவிழ்ப்பாகும். இந்த ஒழுங்கவிழ்ப்பு என்பது எல்லா நிலைகளிலும் நடைபெற வேண்டும் என்பதே பின் நவீனத்துவ வாதிகளின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், இக்கருத்து மனித ஒழுக்கச் சீர்கேடு நடைபெறும் தளங்களிலோ, மனிதன் சமுதாயத்திற்குச் செய்யும் இடையூறுகளுக்கோ, தனிமனிதனைத் துன்புறுத்தலோ போன்றவைகளுக்குப் பொருந்தாது. அங்கு எதார்த்தம், பின் நவீனம் என்பது மனித ஒழுங்குபடுத்துதலே. ஆனால் மனிதன் செயற்படும் பல தளங்களுக்கு இது பொருந்திப் போகும். அத்தளங்களை அ. மார்க்ஸ் என்னும் பின் நவீனத்துவ வாதியால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் ''ஒழுங்கவிழ்ப்பின் தேவைகள், சாத்தியங்கள்'' என்னும் நூலின் வழி சில கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மாற்றுக்கல்வி,

முழுவிடுதலை,

மருத்துவத்தில் மாற்றங்கள்.

என்ற ஒழுங்கவிழ்ப்பின் சில கூறுகளை இக்கட்டுரையாளன் தன் போக்கில் கொண்டு செல்வதே இக்கட்டுரைத் தளம் அ. மார்க்ஸ்-ன் சில கருத்துக்களை விவரிப்பதுதானே தவிர, அதை அப்படியே கொள்வதல்ல இக்கட்டுரை.

உலகில் மனிதன் பகுத்தறிவு வாதி. நன்று - நன்றலல, நடப்பது - நடவாதது, சொல்வது - சொல்லாதது, கற்பிக்கவல்லது - கற்பிக்க இயலாதது என்பவற்றை அறிந்தவனாகிறான். உலகில் நடக்கும் அத்தனையையும் தனக்குள் கொண்டு வருகிறான். அதைப் பின்பற்றுகிறான். பின்பற்றுதல் வழிக் கட்டமைப்புச் செய்யப்படுகிறான். செய்து கொள்கிறான். அதிலிருந்து, சிலர் மாறவே மறுக்கின்றனர். இது எதார்த்தமல்ல என்பது பின்நவீனம்.

ஆனால் மிருகம் கட்டமைத்துக் கொள்வதுமில்லை. கட்டமைக்கப்படுவதுமில்லை. சில மிருகங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் இயற்கை மீறவில்லை. மிருகம் தன் குரல் மாற்றிக் கொள்ள இயலாது. தன் உணவு முறையை மாற்றிக் கொள்ளாது; தெரியாது. தூய்மை தெரியாது. இது எதார்த்தம் என்பது பின்நவீனம்.

இதை மார்க்ஸ். பாவ்ளேஃப்ரெய்ரே வழி நின்று,

''மனிதன் இருத்தல் என்பது மற்றவர்களுடனும் உலகுடனும் உறவினை ஏற்படுத்திக் கொள்வதே. எனவே தன்னில் இருந்து வேறுபட்ட புறவயமான எதார்த்தமாக உலகை மனிதனால் காண முடிகிறது. ''தான்'', ''தானல்லாதது'' எனப் பிரித்துப் பார்க்கும்போது தானல்லாத எதார்த்தம் அவனது அறிதலுக்குட்பட்ட பொருளாகி விடுகிறது. மிருகங்கள் அப்படியல்ல. அவை எதார்த்தத்தில் மூழ்கிவிடுகின்றன. எதார்த்தத்தைப் புறவயமாக்கி அவற்றால் பார்க்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால் மிருகங்கள் உலகில் உள்ளன. மனிதனோ உலகில் மட்டுமல்ல, உலகத்தோடும் உள்ளான்'' (ப.17) என்கிறார்.

மனிதன் ஒவ்வொரு நாளையும் சிந்திப்பவன் ஒவ்வொரு மனி நேரத்தையும் சிந்திப்பவன். ஒவ்வொரு நிமிடத்தையும் சிந்திப்பவன். அவன் ஆயுட்கணக்கைக் கன நேரத்தில் முடிவு செய்து அதன்படி செயற்படுபவன். எதிர்காலம் பற்றிக் கணக்குப் போடுகின்றான். சிறந்த கருத்தைக் கணக்கில் கொள்பவன். ஆனால் மிருகம் எக்கணக்கையும் போடுவதில்லை மார்க்ஸ்-ன் கருத்தில் ''மிருகங்களுக்கு எல்லாமே இன்று தான்'' (ப. 18)

மேலும் மனிதன் மிருகம் பற்றிப் பேசும் அந்நூல் மனிதர்களுக்கும் ஏற்படுத்தப்படும் ஒழுங்குகள் அவர்களில் பிரிவினையுண்டாக்குகிறது. அந்தப் பிரிவு ஒருசார் மக்களை மௌனமாக வாழவைத்து ஒடுக்கிவிடுகிறது. அதை,

''ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது சொற்களைப் பேசும் உரிமை இருப்பதில்லை. பண்பாட்டு ஆக்ரமிப்பு நடவடிக்கைகளின் முலமாக மௌனப் பண்பாடு (Culture of Silence) என்று அவர்கள் மீது போர்த்தப்பட்டு இது நிறைவேற்றப்படுகிறது'' (ப. 19)

''ஒடுக்கப்பட்டவர்களுக்கான பிரதிவாதிகளால் ஒடுக்கப்படுபவர்களாலேயே உருவாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் முன் நிறுத்தப்படுகின்றனர். பண்பாட்டுத் தளத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய எதிர் உரையாடல் நடவடிக்கைகளைப் பண்பாட்டு ஆக்ரமிப்பு (Cultural Invasion) என்கிறோம். (ப.20) என்ற பத்திகளில் தருகிறார்.

மேற்கண்ட இரு பத்திகளின் மூலம் மனிதனின் ஒழுங்கமைவு மனிதனையே சிறைப்படுத்துவதாக உள்ளது.

எனவே இங்கொரு ஒழுங்கவிழ்ப்புத் தேவைப்படுகிறது. அந்த ஒழுங்கவிழ்ப்பில் சாதி, சமயம் என்னும் கட்டுப்பாடுகள் உடைய வேண்டும். மௌனப் பண்பாடு வளர்த்துக் கொள்ளும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். மௌனப் பண்பாட்டிலிருந்து வெளியேறி ஒடுக்குவோரிடமிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதே அ. மார்க்ஸ் அவர்களின் கருத்தாகப்படுகிறது.

மேற்கண்ட செயல் நடைபெற வேண்டுமெனில், ''விமர்சன உணர்வுநிலை'' உருவாக வேண்டும். அந்த விமர்சன உணர்வு நிலையில், ''மௌனம், செயலற்ற தேக்கம் நெகிழ்வற்ற அதிகாரத்துவ அரசு ஆகியவற்றுக்குப் பதிலாக எளிதில் ஊடுருவக்கூடிய, கேள்வி கேட்கும் திறனுடைய ஓய்ச்சலற்ற உரையாடல் நிரம்பிய வாழ்முறையும், சனநாயக அரசு பற்றிய கருத்தாக்கங்களும் இடம் பெறுகின்றன'' (ப. 24) என்கிறார் மார்க்ஸ்.

இப்போதுள்ள கல்வியை ஒழுங்கமைப்புக்குள் கொண்டு வருகிறார் மார்க்ஸ்.

அங்கொருங்கமைவு என்பது, ''எந்த முழுமையுடன் இணைத்துப் பார்ப்பதால் விமர்சனச் சிந்தனைகள் தோன்றுமோ அந்த முழுமையிலிருந்தும் அன்றாட வாழ்விலிருந்தும் விலகியிருக்கும் விசயங்களைச் சொற்பொலிவின் மூலம் ஆசிரியர் நிரப்புகிறார்'' (ப. 26) என்கிறார்.

இதை நாம் ஆமோதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. பல்கலைக் கழகம், கல்லூரி, வகுப்பறை இந்த வழியில் மாணவரிடம் வந்து சேரும் கல்வி வகைமுறைக்குள் இடப்பட்டதாக, உறைக்குள் இடப்பட்டதாக, உறைக்குள் இட்ட கத்தியாக நிற்கிறது. இது தாண்டும்போது வெளிப்பாடம் (Out of position) எனத் தள்ளப்படுகிறது. அதே போல், ஆசிரியர், மாணவர் என்ற நிலையையே அங்கீகாரம் செய்யும் நிலையாகத் தெரிகிறது. இந்த ஒழுங்கமைவு சிதைக்கப்பட வேண்டும் என்கிறார்.

ஓமியோபதியை முன்னிறுத்துவதற்கான காரணிகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்.

1. நோயாளியைப் பிரத்தியோகத்தின், நோய்க்குறிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நோயாளிக்கான தீர்வைத் தீர்மானிக்கிறது.

2. உடலை ஓர் உயிரியல் முழுமையாகப் பார்க்கிறது.

3. நோய்த்தீர்வுக்கான விதிகளை உருவாக்குகிறது.

4. நோய்க் குறிகளுக்கு அடிப்படையான காரணியை அகற்றுகிறது.

5. ஆரோக்கியமான மனித உடலில் ஏற்படுத்தும் விளைவுகளினடிப்படையில் மருந்தின் பயன்பாட்டை ஓமியோபதி தீர்மானிக்கிறது.

6. மருத்துவரின் ஆக்கத்திறனுக்கு முழுவாய்ப்பளிக்கும் நோய்த் தீர்வுக்கலையாக அணுகப்படுகிறது.

7. நோய்த் தீர்வு என்பதை எதையும் சார்ந்திராத தனித்துறையாக மாற்றுகிறது.

8. குறிப்பிட்ட உடலுறுப்புகளின் பெயரால் நோயை அழைப்பதில்லை.

மேற்கண்ட காரணங்களால் ஓமியோபதியை முன்னிறுத்துகிறார்.

ஏன்? அலோபதியை ஒழுங்கவிழ்ப்புச் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

1. பொருளாதாரச் சுரண்டல், காலனியக் கொள்கை என்பதைத்தவிர நவீன மருத்துவம் என்பது அணுகல் முறையிலேயே பிற்கால முதலாளியத் தன்மைக்கேற்றவாறு அதிகாரங்களை மக்களிடமிருந்து பிரித்தெடுத்துக் களத்தில் குவிக்கும் நோக்குடையதாக இருக்கிறது. (ப.72)

2. நவீன மருத்துவத்தில் நோய் தீர்வு பற்றி விதிகள் எதுமில்லை. நோய்க் காரணிகளின் அடிப்படையில் வைத்தியம் செய்தல், நோய்ப் பெயரின் அடிப்படையில் அணுகுதல், முன்கூட்டி அனுமானித்து வைத்தியம் செய்தல் எனப் பல்வேறு அணுகுமுறைகளை அது கையாளுகிறது.

மேற்கண்ட நிலைகளில் அலோபதி மனிதனைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதைத் தடுத்து நிறுத்த அதில் ஒழுங்கவிழ்ப்புச் செய்ய வேண்டியுள்ளது என அ. மார்க்ஸ வலியுறுத்துகிறார்.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

இளங்கோவின் அறம் - முனைவர் ஆ. செல்லப்பா

மனித இனத்திற்கு உரிய தலைசிறந்த பண்புகளில் அறம் முக்கியமாக இடம் வகிக்கின்றது. அறம் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஒவ்வொருவராலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அறம் செய்வதில் எல்லை கிடையாது. அறம் செய்யும் போது முழு மனதுடனும், உடலாலும் மனத்தூய்மையுடனும் செய்ய வேண்டும். எந்தெந்த வகையில் எல்லாம் பிறர்க்கு அறம் செய்ய முடியுமோ அந்த வகையில் அறம் செய்ய வேண்டும். தமிழ்க்காப்பியங்கள் பொதுவாக அறம் செய்வதன் இன்றியமையாமையை வலியுறுத்துகின்றன. தமிழ் முதல் காப்பியமான சிலம்பில் இளங்கோ தமது அறச் சிந்தனைகளை வலியுறுத்துகின்றார்.

அறம் - விளக்கம்:-

அறம் என்னும் சொல் கையறம், தர்மம், நீர்மை, பெரியோருடைய இயல்பு என்னும் பொருள்களில் வழங்குகின்றது. அறக்கடவுளாகப் புத்தர் (அறம் பகர்ந்தோன்) விளங்குகிறார். அறு + அம் எனப் பகுத்து அறு என்பதற்கு வரையறைகள் அல்லது அறுதி என்ற பொருள்பட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய கொள்கைகள் என்று விளக்கம் கூறுவர். அறம் என்ற சொல்லுக்குத் தீமை நீக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். வள்ளுவரின் கூற்றுப்படி, அறம் என்பது மனம் மாசின்றி அன்பின் அடிப்படையில் பகுத்துண்டு, தத்தமக்குரிய வாழ்வியல் கடமைகளை ஆற்றி உண்மை பேசி அருள் உள்ளத்தோடு ஒழுகுவதே ஆகும். மக்கள் இனத்தின் பழக்க வழக்கங்களையும், நடத்தைகளையும் பண்புகளையும் பொருளாகக் கொண்டு உருவாகிய அறவியல் கலையை மெய்ப்பொருள் ஆய்வுடன் (philosophical enquiry) தொடர்பு கொண்டு முதன் முதலில் ஆராய்ந்தவர் அறிஞர் அரிஸ்டாட்டில் ஆவார். உலகச்சிந்தனை வரலாற்றில் கி.மு. 700-500 வரையிலான காலப்பகுதி முக்கியத்துவம் பெற்றது. உலகின் கீழ்த் திசைகளிலும், மேற்பகுதியிலும் சிறந்த சிந்தனையாளர்கள் தோன்றினர். கி.மு. 580-500-இல் வாழ்ந்த பிதாகோரஸ் (Pythogoras) என்னும் அறிஞர் இத்தாலியில் குரோடோனா (Crotona) எனும் நகரில் அறவியல் சமயச் சங்கத்தினை நிறுவினார். இவர் தமது சீடர்களுக்கு பிரம்மச்சரியம், இன்பம் விழையாமை, மிதமான உணவு, துறவு, தியானம், பக்தி, சமூக அறங்கள், இந்தியாவிலிருந்து பரவியதாகக் கருதப்படும் உயிர்களின் மறுபிறவிக் கொள்கை, நல்வினை, தீவினைகளுக்கு ஈடாகச் சுவர்க்கம், நரகம் புகுதல் என்பனவற்றைப் போதித்து வந்தார். கி.மு. 488-400 கால கட்டத்தில் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் என்பவர் அறிவும் அறமும் ஒன்று என்ற கொள்கையைப் போதித்தார். நல்லன அறிதலே அறிவு. அறிந்து செயல்படுதலே அறம், அதனால் அறிவும் அறமும் ஒன்றே என்பது அவர்க் கருத்து, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற மேதைகள் அறனெனப்படுவது மகிழ்வுதான் (Virtue is happiness) எனும் கொள்கையினை நிலை நிறுத்தினர். இந்நிலை தமிழகத்திலும் அறிஞர்களிடமும் இருந்ததை அறிய முடிகின்றது.

இளங்கோவின் புதிய அறம்:-

தமிழகத்தில் 1950களிலும் 60களிலும் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வு மேலோங்கி இருந்ததைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாக அறியலாம். சிலப்பதிகாரத்தில் தமிழ் மன்னர்கள் இகழ்ந்த கனகன், விசயன் என்ற வடநாட்டு மன்னர்களை வெற்றிக் கொண்டான் சேரன், செங்குட்டுவன். இமயத்தில் கல் எடுத்து அவர்களின் தலையில் ஏற்றிக் கண்ணகிக்குச் சிலை அமைத்தான். இதன் மூலம் தமிழகத்தில் ஆரியத்திற்கு எதிரான உணர்வுச் சூழல் இருந்ததைக் காண முடிகின்றது. அதன் காரணமாகவே சிலப்பதிகாரத்திற்குத் தமிழ்நாட்டில் செல்வாக்கு இருந்ததையும் அறிய முடிகின்றது. மூன்று தமிழ் மன்னர்களுக்கிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையை இளங்கோ தமது காப்பியத்தில் கூறியிருப்பது அறவழிப்பட்டதே ஆகும்.

தமிழ்ப்பெண் கண்ணகியின் கற்பு மேன்மையைக் காப்பியத்தில் முழுமையாகக் கூறியுள்ளார். அநீதி செய்த மன்னனுக்கு எதிராகச் செயல்பட்ட கண்ணகியின் ஆவேசம் காப்பியத்தின் முக்கிய அறமாக வலியுறுத்தப்படுகின்றது. தமிழகத்தில் சமணம், சைவம், ஆகிய சமயங்களை வேற்றுமை கருதாமல் இளங்கோ தமது காப்பியத்தில் கூறியுள்ளார். பழந்தமிழகத்தில் எண்ணற்ற கலைகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. மாதவி கணிகைக் குலத்தில் பிறந்தவள் என்றாலும் அவள் கற்புள்ளவளாகவும், கலைத்திறம் மிக்கவளகாவும் காப்பியத்தில் காட்டப்பட்டிருப்பது இளங்கோவின் புதிய அறமாகும். தமிழகத்தின் இயற்கை வளங்களும், இயற்கை வழிபாடுகளும் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. அதோடு தமிழ் இசைப்பாடல்களும் அவற்றின் நுட்பங்களும் விரிவாக ஆசிரியரால் எடுத்தாளப்பட்டுள்ளன. அதே சமயத்தில் தமிழ் மக்களின் குறைகளையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. அரசனின் ஆட்சிமுறை ஒழுங்காக இல்லாத நிலையையும் இளங்கோ கூறியுள்ளார்.

முடிவுரை:-

அறம் என்பதன் விளக்கமும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அறம் பற்றி மேலைநாட்டறிஞர்களின் கருத்துக்களும், அறம் மேலை நாடுகளில் எவ்வாறு பரப்பப்பட்டுள்ளது என்பதும் ஆராயப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வு செல்வாக்குடன் விளங்கியது. தமிழ்ப்பெண்ணுக்கு ஆதரவாக ஆரிய அரசர்களை வெற்றி பெற்ற திறத்தை ஆசிரியர் இளங்கோ தமது அறக்கொள்கையாகக் கொண்டுள்ளார். தமிழ்ப்பெண் கண்ணகியை உயர்வாகச் சித்தரிப்பது இளங்கோவின் புதிய அறமாகும். மன்னனுக்கு எதிராக ஒரு பெண் செயல்பட்டு நீதிக்காக உயர்த்தப்பட்ட நிலையை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். தமிழகத்தில் இயற்கை வழிபாடு மேலோங்கி இருந்ததையும் மக்கள் அவற்றின்பால் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கியதையும் அறியமுடிகின்றது. மக்கள் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்த செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

கலித்தொகை காட்டும் மகளிர் - அ. கீதாரமணி

சங்க காலத்தில் மகளிர் ஆடவருக்கு நிகராக விளையாட்டிலும், திருவிழாக்களில் கலந்து கொள்வதிலும் உரிமைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைக் கலித்தொகை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சங்ககால மகளிர் இல்லற வாழ்க்கையில் சிறந்தும் விளங்கியிருக்கின்றனர். ஆடவரைப் போலவே மகளிரும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கரைக்கும் சென்று விளையாட உரிமை பெற்றிருந்தனர். கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டனர் என்று எம்.ஆரோக்கியசாமி குறிப்பிடுவர்.

விளையாட்டு:-

அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும், பல இலைகளைக் கோர்த்தும் விளையாடினர் என்று மருதக்கலி மூலம் அறியமுடிகிறது. ''மடக்குறு மாக்களோடு ஓரை அயரும்'' (82.5) எனச் சிறுமியர் கோரைப் பொம்மை செய்து விளையாடியச் செய்தியை மருதநில நாகனார் கூறியுள்ளார். மகளிர் தழைகளைக் கொய்து விளையாடியதைக் ''கொய்குழை அகை காஞ்சிதத் துறை அணி'' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊசல் ஊர்ந்தாடல் மகளிர்க்குரிய இனிய பொழுதுபோக்குகளாகும். இச்செய்தியினை நெய்தல்கலி குறிப்பிடுகிறது. தாழையின் விழுது கயிறாகவும், நெய்தல் மாலை அக்கயிற்றில் கட்டிய மாலையாகவும், சுறாவினது மருப்புக் கோத்த பலகை அமரும் பலகையாகவும் அமைக்கப்பெற்ற ஊசலில் மகளிர் ஊசலாடுவர். ஊசலாடும் போது மகளிர் பாடவும் செய்வர். இக்கருத்தமைந்த பாடல் பின்வருமாறு.

''இனமீன் இகன்மாற வென்ற சினமீன்

எறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த

நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்துக் கையுளர்வின்

யாழிசை கொண்ட இனவண்டு இமிர்ந்து ஆர்ப்பத்

தாழாது உறைக்கும் தடமலர்த் தண்தாழை

வீழ்ஊசல் தூங்கப் பெறின்

மாழை மடமான் பிணைஇயல் வென்றாய் நின்ஊசல்

கடைஇயான் இகுப்ப நீடுஊங்காய் தடமென்தோள்

நீத்தான் திறங்கள் பகர்ந்து (131. 6-14)

பழக்க வழக்கம்:-

பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வாழ்க்கைக்குத் தேவையானதாகக் கருதப்படுகிறது. அவரவர்க்கு விரும்பிய மனநிறைவையும் அது தருகிறது. பழக்கத்தின் தொடர்நிலை வழக்கம் எனப்படுகிறது. இது சமூகம் சார்ந்த ஒன்று. பழக்கமாகிவிட்ட செயல்களைச் சமூகத்தில் வழக்கம் என்கிறோம். வழக்கம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் சமூகச் செயல்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியம் வழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், ''முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை'' என்று கூறுகின்றது. பண்டை மகளிரின் பழக்கவழக்கங்களைச் சில முல்லைக்கலிப் பாடல்கள் காட்டுகிறது.

ஆயமகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுவர். ஆநிரை மேய்க்கும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும், பாலும் கொண்டு செல்வர். தாம் மணக்க விரும்பிய காதலன் மாலையைக் கூந்தலுக்குள் மறைவாகச் சூடிக்கொள்வர். கூந்தலில் வெண்ணெய் தேய்த்துக் கொள்வர். சிற்றூரிலும், பேரூரிலும் மோர் விற்பர். மோருக்கு மாறாக மாங்காயை ஊறுகாயாகக் கூட்டி நுகர்வர். தெய்வங்களுக்கும் பால்மடை கொடுப்பது வழக்கம். மேலும், குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானைக் கொம்பிலான உலக்கை கொண்டு தினை, மூங்கில்நெல் ஆகியவைகளைக் குத்தும்போது வள்ளைப்பாட்டுப் பாடுவர். சேம்பின் இலையை முறமாகவும் பயன்படுத்தினர். இவ்வள்ளைப் பாட்டு முருகனைப் பாடுவதுபோலக் காதலனைப் பாடுவதாகவும் அமையும். திருமணம் கைகூடின் தெய்வத்திற்குப் பலியிடுவர். இதனை,

''சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்

ஐவன வெண்நெல் அறை உரலுள் பெய்து இருவாம்

ஐயனை ஏத்துவாம் போல'' (43. 5-7) என்றும்

''நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு, தன்மாட்டுப்

பலசூழும் மனத்தோடு பைதலேன் யான்'' (46.15-17)

என்றும் பாடல் வரிகளால் அறியலாம்.

திருமணம்:-

அக்கால மகளிர் தமக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சாநெஞ்சினனாகவும் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தனர். இக்குறிப்பு கலித்தொகையில் காணமுடிகிறது. காளையை அடக்கிய ஆடவனைக் கைப்பிடிக்கும் ஆயமகளின் திருமணம் கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றினைத் தழுவிய பொதுவனுக்கே தலைமகளை தமர்கொடை நேர்வர். மணத்தைக் கூட்டுவிப்பது தெய்வம் என்று கருதப்பட்டது. பூவாலூட்டிய இல்லின் முற்றத்தில் மணம் தாழப்பரப்பி எருமைக்கொம்பை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெறும். ஆனால் காளையை அடக்காத வீரர்களை மகளிர் ஒருபோதும் மணந்ததில்லை. இக்கருத்தினை,

''நேரிழாய் கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்

காரிகதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே

ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்'' (104, 73-76)

என்ற பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

நம்பிக்கை:-

நாளும் கோளும் பார்த்தாலும் நன்மை தீமைக்கான நிமித்தம் பார்த்தாலும் குறிகேட்டலும் மக்கள் வாழ்வோடு ஒன்றி போய்விட்டன எனலாம். நம்பிக்கை நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. கபிலர் பாடல்கள் அவர் காலத்திலிருந்த சில நம்பிக்கைகளை உணர்த்துகின்றன. கற்புடைய மகளிர் தம் மன ஒருமைப்பாட்டால் மழையையும் வரவழைக்க முடியும் என நம்பினர். குறிஞ்சிக் கலியில் தலைவியின் பெருமையைக் குறிக்கும் போது, அவள் உலகிற்கு மழை வேண்டுமெனின் அதனை வருவித்துப் பெய்விக்கும் ஆற்றல் சான்ற பெருமையள் என்று கூறப்படுகின்றது. ''அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே'' இக்கருத்தினை ''வான்தரும் கற்பின் மனையுறை மகளிர்'' என மணிமேகலையில் கூறியிருத்தலைக் காணலாம்.

''அறம் பிறழ்ந்து அல்லவை செய்பவன் வாழும் நாட்டில் வளம் குன்றும்'' என்பது சான்றோர் நம்பிக்கை. வள்ளுவரும்.

''வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்'' (குறள். 23-9) என்பார்.

அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் வள்ளிக்கொடியும் நிலத்தடியில் கிழங்கு இடாது, மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது என்றுரைப்பர்.

''வள்ளி கீழ்விழா, வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலை வாழ்நர்

அல்ல புரிந்தொழுக லான்'' (36. 12-14)

மலைப்பக்கத்து வாழும் குறவர்தம் மடந்தைமார் தவறாது தம் கணவரைத் தொழுதெழுவதால் அக்குறவர் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம். ஒருவர் செய்யும் நல்வினை அவரைச் சேர்ந்தோர்க்கும் பயன் விளைவிக்கும் என்ற நம்பிக்கை,

''வாங்கமை மென்தோள் குறமட மகளிர்

தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்

தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்''

என்னும் பாடலடிகளால் புலனாகிறது.

முடிவுகள்:-

கலித்தொகையில் காணக்கூடிய மகளிர் ஆடவர்களுக்கு நிகராக உரிமை பெற்றிருந்தனர். அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்தும் விளையாடினர். ஊசல் விளையாட்டில் சுறாவினது எலும்பை அமரும் பலகையாக மேற்கொண்டனர். மகளிர் சந்தன மரத்தாலான உரலில் யானைக் கொம்பாலான உலக்கையைக் கொண்டு நெல் குத்தினர் என்று தெரியவருகிறது. சங்க மகளிர் வீரம் உடைய ஆண்மகனை மணந்ததாக முல்லைக்கலி கொண்டு அறியமுடிகிறது. கற்புடைய மகளிரால் மழை வரவழைக்க முடியும் எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

பிரபஞ்சன் சிறுகதைகளில் பெண்களின் மனித நேயம் - பெ. சுமதி

மனிதரை நெருங்கி அவர்களைப் ''புரிந்து கொள்ளுதல்'' என்கின்ற பண்பு நம்மிடம் குறைந்து வருகின்றது. மனிதரை மதிக்க நமக்கு அவகாசம் இல்லை. ஆகவே நாம் மனிதரை நேசிப்பதும் இல்லை. மனிதரை அவர்களின் நிறைகுறைகளுடன் நாம் புரிந்து கொள்ளுவதும் இல்லை. நாள்தோறும் நாம் தனிமனிதராகி வருகின்றோம். நம் பக்கத்து வீடு நமக்கு அண்டை நாடாகி வருகின்றது. நம் பக்கத்து வீட்டு மனிதர்களை நமக்கு எதிரிகளாக நினைக்கின்றோம். இன்னும் சாதி, மதங்களைப் பேணி, பாதுகாத்து வருகின்றோம். ஆதலால் மனிதன் மனிதரை நேசிக்கும்போதுதான் மனிதநேயம் வளரும். மனிதநேயம் இல்லையெனில் மனிதனிடம் எந்த மகத்துவமும் இல்லை. நம் நாட்டு மக்களிடம் கல்வியறிவு இல்லாமையும், ஆண்கள் பெண்களை நடத்தும் விதமும் மாபெரும் கொடுமையாகும். நம் மரபில் பெண்களை உடம்பாக மட்டுமே பார்க்கின்றோம். அவர்களை மனுஷ’யாக நாம் பார்ப்பதில்லை. ஆண் - பெண் வாழ்வைச் சமூகச் சட்டங்களும் நீதிமன்றச் சட்டங்களும் இயக்குவதால் அவர்களிடையே அன்பும், காதலும் சுதந்திரமும் இல்லை. இதனால் மனிதநேயப் பண்புகள் குறைந்து வருகின்றன. மாப்பஸான், செகாவ் போன்ற சிறுகதைப் படைப்பாளர்களின் தாக்கத்திற்கு ஆட்பட்ட பிரபஞ்சன் தன்னுடைய சிறுகதைகளில் மனித நேயச் சிந்தனைகளை அழுத்தமாக வலியுறுத்துகின்றார்.

''நான் பெரியவனும் அல்லன், உத்தமனும் அல்லன். மனிதனாக வாழ்ந்து, கௌரவமாக மரிக்க வேண்டும் என்கிற வாதையே எனக்குள் மிஞ்சிக் கொண்டிருக்கிறது''

எனப் பிரபஞ்சன் குறிப்பிட்டிருப்பது அவருடைய மனிதநேயச் சிந்தனையைக் காட்டுவதாகும். மேலும் அவர்,

''மனிதர்களுக்காக இரங்க வேண்டாம் என்கிறது அறிவு. ஆனால் என் மனம் இரங்குகிறது. நாம் எல்லாவற்றையும் பெறத் துடிக்கிறோம். பெற்றும் விடுகிறோம். ஆனால் மகத்தானதாகிய வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். வாழ்க்கையை இழந்தும் வாழ்வா? எனக்கு இது இரங்கத் தக்கதாகவே வருகிறது. வாடிய பயிரையும் கண்டு வருந்துகிற மனோபாவம் மனிதம்''

என மனிதநேயத்தைக் கோடிட்டுக் காட்டியிருப்பதும் சிந்திக்கத்தக்கது. இவ்வாறு மனிதனை நேசிக்கும் மனிதநேயச் சிந்தனைகளை உள்ளடக்கிய அவருடைய கரிய முகம், ஒரு மனுஷ’, உயிர், யாசுமி அக்கா, பாயம்மா ஆகிய சிறுகதைகளைப் பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்துவதே இப்பகுதியின் நோக்கமாகும்.

மனிதநேயம்:-

மனிதனை மனிதன் மதித்தாலும் மனித மதிப்பைப் பேணுதலே மனித நேயமாகும். மனிதனை மனிதன் மதிக்க வேண்டுமானால் முதலில் மனிதன் தன்னைப் போன்றே மற்ற மனிதர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அன்பே இன்பத்தின் ஊற்றாகும். அவ்வின்ப ஊற்றே மனித இனத்தில் படிந்துள்ள மாசுகளை நீக்கும். மனிதனை மனிதனாக வாழ வைக்கும்.

''அன்பின் வழிய துயர்நிலை அஃதிலார்க்

கென்புதோல் போர்த்த உடம்பு''

என்று திருவள்ளுவர் அன்பை உலகப் பொதுமறையாக்குவார் அன்பின் அடிப்படையில் எழுந்த இக்கோட்பாட்டை ஃபிரோலே (Frolo) பின்வருமாறு சுட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

''மனிதநேயம்; மனிதனது பெருமையையும் உரிமையையும் மதிக்கும் வகையில் அமைந்ததொரு கோட்பாடு. மனிதனின் ஆளுமைப் பண்புகளை மதிக்கவும், அவனது நலன்களைப் பேணிவரவும், சமூக வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மனிதன் முழுமையான வளர்ச்சியைப் பெறவும் துணைபுரிவது இக்கோட்பாடு. சமயம் மற்றும் இனவெறிக் கொடுமை, சமயக் காழ்ப்பு, மாற்றுக்கோட்பாட்டை வெறுத்தல் ஆகிய அனைத்து இயல்புகளையும் களைவது இக்கோட்பாட்டின் நோக்கமாகும். பொருள் முதலியவைச் சார்ந்த இக்கோட்பாடு மனித இனத்தின் விடுதலைக்காக உரத்து முழங்குவதுடன் சமயங்களையும் அதன் சடங்குகளையும் முற்றாக எதிர்ப்பது''

மனிதநேயக் கோட்பாட்டின் குறிக்கோள் மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்பதாகும். மனித நேயக் கோட்பாட்டின் குறிக்கோளினை எஸ்.போபொவ் பின்வருமாறு எடுத்துக் காட்டியுள்ளார்.

1. ''மனிதனின் பெருமையினையும் உயர்வினையும் உறுதி செய்தல்.

2. எந்த மதிப்பும் மனிதனைக் காட்டிலும் பெரியது அன்று என்று உறுதி செய்தல்.

3. மனித உழைப்பிற்கு மதிப்பளித்தல்.

4. மனிதனுடைய ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை வைத்தல்.

5. சுதந்திரமான வளர்ச்சியில் மனிதனுடைய உரிமைக்கு ஏற்ப வழங்கல் என்பதாகும்.

திருடனிடம் அன்பு காட்டும் மனிதநேயம்:-

''திருடனிடம் அவனை மனிதன் என நினைத்து அன்பு காட்டுவதே மனிதநேயம்'' என்பதைப் பிரபஞ்சன் ''கரியமுகம்'' (திரை) என்னும் சிறுகதையில் எடுத்துக்கூறுகின்றார். இச்சிறுகதையில் வரும் செங்கோடனும் அவன் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் தம்பதியினரின் வீட்டில் திருடுகின்றனர். சிறுவயது இளைஞனான செங்கோடன் மட்டும் அத்தெருவில் வாழும் மக்களிடம் அகப்பட்டுக் கொள்ளுகின்றான். ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் மகாதேவன், அத்தெருவில் வாழும் வரதராஜன் ஆகியோர் அத்திருடனை அடித்து உதைத்துச் சித்தரவதை செய்தனர். அத்தெருவில் சாருவும் அவள் கணவனும் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர். அந்த வீட்டின் உரிமையாளரும் அவருடைய மனைவியும் அத்திருடனிடமும் அன்புகாட்டி, அவனை அடித்து உதைத்துச் சித்தரவதை செய்யாமல் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர்.

''கூட்டத்தை விலக்கிக் கொண்டு வீட்டுக்கார அம்மாள் வந்தாள்; அவள் கை டம்ளரில் டீ இருந்தது. என்னடி இது, என்றார் வீட்டுக்காரர், டீ... ஆனாலும் அந்தக் குழந்தையை அப்படிப் போட்டு அடிச்சிருக்கப்படாது என்றார் அந்த அம்மாள்''

இவ்வாறு திருடனிடமும் அன்புகாட்டி அரவணைக்கும் வீட்டுக்கார அம்மாவின் நற்பண்புகளைப் பிரபஞ்சன் இச்சிறுகதையில் படம்பிடித்துக் காட்டி, திருடனிடமும் அன்பு காட்டும் மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்படத் துணை நடிகையின் மனிதநேயம்:-

பிரபஞ்சன் ''ஒரு மனுஷ’'' என்ற சிறுகதையில் திரைப்படத் துணை நடிகையின் மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இச்சிறுகதையில் வரும் சேகர் என்பவன் புகைப்படக்காரன். திரைப்பட நடிகைகளைக் கவர்ச்சியாகப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்குக் கொடுத்து பிரசுரிக்கச் செய்வது அவன் தொழிலாகும். விஜயா என்ற லாவண்யா கோடம்பாக்கத்திற்கு வந்த புதிதில் சேகர்தான் அவளைக் கவர்ச்சியாகப் படம் பிடித்துச் சில பத்திரிகைகளுக்குக் கொடுத்துப் பிரசுரம் செய்து அவளைத் திரைப்படத் துறையில் துணை நடிகையாக அறிமுகப்படுத்தினான். அந்த நன்றிக் கடனுக்காக விஜயா எப்பொழுதும் உதவி வருகின்றாள். வயிற்றுப் பசியால் சேகர் விஜயாவிடம் பொய்சொல்லி பிலிம் இல்லாத கேமிராவில் படம் பிடிக்கின்றான்; இந்த உண்மை தெரிந்தும் விஜயா அவன் கேமிரா முன்பு விதவிதமாகத் தோன்றி காட்சி தருகின்றாள்; திரைப்படத் துணை நடிகையாக பிழைப்பு நடத்தும் விஜயா தன் தோழி வரலட்சுமியிடம் ஐம்பது ரூபாய் கடன்வாங்கி சேகருக்குக் கொடுத்து உதவுகின்றாள், விஜயா வரலட்சுமியிடம்,

''நல்ல மனுஷங்கா படம் எடுக்கிறவரு. நான் மொதோ மொதோ, இங்க வந்தப்போ, என்னைப் படம் எடுத்தவரு இவருதாங்கா. இப்பவும் எடுத்தானா? எடுத்தாரு ஆனா... ஆனா....? கேமிராவில் ஃபிலிம் இல்லாமே எடுத்தாரு. கண்ணைப் பார்த்தா தெரியுதே. சாப்பிடல்லைன்னு? சோத்துக்காக நல்ல மனுஷன் பொய் சொல்றாரு. பாரு.... அதான்''

என்று கூறுவதிலிருந்து விஜயா என்பவள் தான் வறுமையில் வாழ்ந்தாலும் தனக்கு உதவி செய்த சேகருக்கு நன்றிக் கடன் மறக்காமல் தன்னால் இயன்றளவு கடன்வாங்கி பணம் கொடுக்கும் திரைப்படத் துணை நடிகையின் மனிதநேயத்தை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

மிருகங்களிடத்தில் அன்பு:-

''எந்த உயிர்களாக இருந்தாலும் அன்பு செய்து அரவணைக்க வேண்டும்'' என்ற மனிதநேயச் சிந்தனையைப் பிரபஞ்சன் ''உயிர்'' (மனிதர்களைத் தேடி) என்னும் சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளார். பிரபஞ்சன் சிறுகதைகள் அனைத்தும் மனிதநேயம் பேசுவன; அன்பை விதைப்பன என்பதற்கு இச்சிறுதை தக்க சான்றாகும்.

இச்சிறுகதையில் வரும் மீனா பள்ளிச்சிறுமி ஆவாள். அவள் தன் வீட்டு மொட்டை மாடியில் ஒரு அணிலுடன் நட்புகொண்டு அதற்கு லச்சுமி என்று பெயர் வைக்கின்றாள். அணிலுக்குப் பலவகையான உணவு பொருட்களைத் தின்பதற்குக் கொடுக்கின்றாள். ஆனால் அந்த அணிலை ஒரு கடுவன் பூனை அடித்துக் கொன்று தின்றுவிடுகின்றது. அதிலிருந்து கடுவன் பூனையாகிய அச்சனியனைக் கண்டு மீனா வெறுத்தாள். ஆனால் பூனை பிடிப்பவன் அக்கடுவன் பூனையை ஈட்டியால் குத்திக் கொன்றபோது மீனா அப்பூனைக்காக அழுகின்றாள்.

''பூனை பிடிப்பவன், மெத்தைக் கைப்பிடி சுவரில் மறைந்து, தன் சுழிக்கொம்பைத் தூக்கி எறிந்தான். பொத்தென்று விழுந்தது பெரிய கடுவன் பூனை. வெள்ளை உடம்பு இரத்தத்தில் நனைந்து துடித்துது. மீனா அழுதாள். அதுவரை, அவள் கடுமையாக வெறுத்த அந்தப் பூனைக்காக அவள் அழுதாள்.''

இவ்வாறு பிரபஞ்சன் எந்த உயிர்களாக இருந்தாலும் அவைகளிடத்தில் அன்பு செய்து அவற்றை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்னும் மனிதநேயச் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார்.

வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் மனிதநேயம்:-

''யாசுமின் அக்கா'' (வசந்தம் வரும்) என்ற சிறுகதையில் யாசுமின் அக்காவும் - ஜெகன்பாயும் கணவன் மனைவியர் ஹஜ்ரு அவர்களுடைய மகள் ஆவாள். ஜெகன் பாய் அயல்நாட்டில் பாத்திமா என்ற பெண்ணைத் திருமணம் செய்து பின்னர் அவளை விவாகரத்துச் செய்த நிகழ்ச்சியை ஈராணி அத்தையிடமிருந்து யாசுமின் தெரிந்து கொள்கின்றாள். ஜெகன்பாய் இறந்தவுடன், யாசுமின் பாத்திமாவிற்கு ஐந்து இலட்ச ரூபாய் பணம் அனுப்ப முடிவு செய்து பாத்திமாவிற்குக் கடிதம் எழுதுகின்றாள். அதற்குப் பாத்திமா பதில் கடிதத்தில்

''அக்கா உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு. மனுசர்கள் இப்படியும் இருக்கிறதை நினைக்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அக்கா, தங்கள் கணவர் என்னை மணந்ததும் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பெயர் கஜ“தா இருக்கிறதும் உண்மை. இரண்டு பேரும் மனசு ஒத்து ''தலாக் பண்ணிக்கொண்டோம். தங்கள் கணவர் எனக்குப் போதுமான சவுகரியங்கள் செய்த பிறகே ''தலாக்'' செய்தார். நான் சந்தோஷமாக இருக்கிறேன்... எனக்கு உரிமையில்லாத பணத்தைப் பெறுவது ''ஹராம்'' அல்லவா அக்கா? இக்கடிதத்தை அழுதுகொண்டு தான் எழுதுகிறேன். அக்கா, நீங்கள் ரொம்பவும் பெரியவர் அக்கா... உங்கள் சகோதரியாக என்றும் இருக்க ஆசைப்படும் பாத்திமா. கடிதம் பல இடங்களில் ஈரம்பட்டு எழுத்துக் கலங்கி இருந்தது. பாத்திமாவுக்கு எந்த வகையில் பணத்தைச் சேர்க்கலாம் என்று யோசிக்கலானாள் யாசுமின் அக்கா''

முடிவுரை:

பிரபஞ்சன் சிறுகதைகளில் பெரும்பாலானவை பெண்களின் நற்பண்புகளையும், உயர்ந்த குணங்களையும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. திருடனிடமும் அன்புகாட்டி அரவணைக்கும் மனிதநேயம் மக்களுக்கு வேண்டும் என்பதையும் கரியமுகம் என்ற சிறுகதையில் ஒரு பெண்ணின் மனிதநேயத்தின் மூலம் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமையில் வாழ்ந்தாலும், நன்றிக் கடன் மறக்காமல் உதவி செய்யும் திரைப்படத் துணை நடிகையின் மனித நேயத்தை ஒரு மனுஷ’ என்ற சிறுகதையில் பெண்களுக்கே உரிய குணங்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் யாசுமினின பெருந்தகையான மனிதநேயப் பண்புகளும் போற்றுதலுக்குரியவை என்பதை ஆசிரியர் பிரபஞ்சன் பதிவு செய்வதை அறியலாம். எத்தகைய வறுமையில் இருந்தாலும் பிறர் உதவியை எதிர்பாராமல் தன் சுய உழைப்பில் வாழ வேண்டும் என்று நினைக்கும் பாத்திமாவின் நேர்மையான மனிதநேயப் பண்பு பூக்களை மதிப்பவர்கள் என்னும் சிறுகதையில் வெளிப்பட்டு இருப்பதை அறியலாம்.

நன்றி: ஆய்வுக் கோவை

 

உள்வழிப்படுதல் - சி. சிதம்பரம்

தொல்காப்பியம் தமிழரின் முதல் அடையாளமாகத் திகழ்கிறது. தமிழ்மொழிக்காப்பு முயற்சி மட்டுமின்றித் தமிழின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், சமுதாய வாழ்வு பற்றிய சான்றுகளைப் பொதித்து வைத்த ஆவணமாகவும் அமைந்துள்ளது. அவற்றுள் இலக்கியம் படைக்கும் நெறிமுறை கூறும்பகுதி பொருளதிகாரம். தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கணமாக மட்டுமின்றி இலக்கியமாகவும் திகழும் மாண்புடையது. தொல்காப்பியர் படைத்துள்ள அகத்திணை மாந்தர்களுள் தலைவிக்கு முக்கிய இடமுண்டு. தலைவிக்கு உரிய மாண்புகளில் குறிப்பிடத்தக்கது. ''கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை'' என்பதாகும். இக்கருத்தைச் சங்க இலக்கியப் பாடல்களுடன் ஒப்பிட்டு நோக்கப்படுகிறது.

தொல்காப்பியத் தலைவி:

தொல்காப்பியர் தலைவிக்குரிய பண்புகளை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், ஆகிய இயல்களில் விளக்குகிறார். ''மூந்நீர் வழக்கம் மகடூவோடு யில்லை'' (தொல்.அகத்.34). என்றும், ''மடலேறுதல் மகளிர்க்கு இல்லை'' (தொல்.அகத்.35) என்றும் குறிப்பிடுகிறார். ''காமக்கிழவோன் உள்வழிப்படுதல்'' தலைவிக்கு உரிய செயலாகக் குறிப்பிடும் இடம் உற்று நோக்கத்தக்கது.

உள்வழிப்படுதல் - விளக்கம்:

''உள்வழிப்படல்'' என்ற சொற்றொடர் ''உள்ளத்தின் வழியே செல்லுதல்'' என்ற பொருளைக் குறிப்பதை அறிய முடிகிறது. எக்காலத்தும் ஒரு பெண்ணுக்கு உயிரைவிட நாணம் சிறந்தது. நாணத்தைவிடக் குற்றமற்ற, அறிவார்ந்த கற்புச் சிறந்தது. இதனை உட்கொண்ட மனத்துடன் தன் காமத்திற்கு உரியவனாகிய தன் தலைவன் இருக்குமிடம் தேடிச்செல்ல நினைத்துப் பேசினும், குற்றமற்ற பிற நன்மொழிகளாய் அதனோடு தொடர்புடையனவற்றைத் தலைவி சொன்னாலும் அவ்வகைப்பட்டன பிறவும் பாடுபொருளாக அக இலக்கியத்தில் இடம் பெறும்.

உரையாசிரியர் கருத்து:

இளம்பூரணர், ''உயிரினும் நாண் சிறந்தது; அதனினும் குற்றந்தீர்ந்த காட்சியினையுடைய கற்புச் சிறந்தது என முன்னோர் கூற்றையுட்கொண்டு தலைவன் உள்ளவிடத்துச் செல்லலும், வருத்தமில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகைப் பிறவும் தோன்றும் அவை பொருளாம்'' என்று உரை செய்கிறார். எனவே ''இவ்வாறு செய்தல் பொருளல்ல என்று கூறுக என்றவாறு'' என விளக்கமும் தருகிறார்.

பண்டைக்காலத்தில் பொதுவாகத் தலைவனைத் தலைவி தேடிச் செல்வது இழுக்கான செயல் என்று கருதப்பட்டது. தொல்காப்பியத்தை அடியொற்றியே சங்கப்பாக்களும் அமைகின்றன. இளம்பூரணர் கருத்துப்படி, தலைவி தலைவன் இருக்குமிடத்தைச் சென்று அடையலாம் என்றால் அவர் எடுத்துக்காட்டும் பாடலில் அத்தகைய குறிப்பு இல்லை. ''தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது'' என்ற துறைபட அமைந்த குறுந்தொகைப் பாடலில் (11) தலைவி, தலைவன் இருக்குமிடத்தை அடைவோம் எனத் தன் நெஞ்சிற்குக் கூறிய பாடலையே எடுத்துக்காட்டுகிறார். இந்தப் பாடலில் தலைவி, தலைவன் இருக்கும் இடத்தைச் சென்று சேர்ந்ததாகக் குறிப்பு இல்லை. இதனை,

''எழுவினி வாழியென் நெஞ்சே...

...................................................

மொழிபெயர் தேத்தா ராயினும்

வழிவிடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே (குறுந்.11; 4-8)

என்ற பாடலடிகள் மெய்ப்பிக்கும். எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் ''உள்வழிப்படுதல்'' என்ற சொல்லாட்சி, தலைவன் இருக்கும் இடத்தை தலைவி தானே அடைதல் என்ற பொருளை ஒருபோதும் வலியுறுத்தவில்லை. தொல்காப்பியர் பொருளியலில்,

''உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்

என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக்

கிழவோற் சேர்த்தல் கிழித்திக்கு இல்லை. (தொல்.பொரு.9)

என பிரிவால் உடம்பும் உயிரும் வாடிய போதும், இவை ஏன் இப்படியாயின என வருந்துவதல்லது, தலைவன் இருக்குமிடம் தேடிச்செல்வது தலைவிக்கு இல்லை என மீண்டும் வலியுறுத்துகிறார். தனித்து நெஞ்சோடு பேசும் காலத்து, தலைவனிருக்குமிடம் போவோமா? எனக் கூறுவதுண்டு. ஆனால் அவ்வாறு தலைவனை நாடிச் செல்லுதல் இல்லை (தொல்.பொரு.10) என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறு தலைவன் இருக்குமிடம் செல்வோமா? என்ற கூற்று மடற்கூற்றையொத்தது. தலைவன் ''மடலேறுவேன்'' என்று கூறுவது அன்பின் ஐந்தினை. அதுபோலவே தலைவி, தலைவன் உள்வழிப்படுவதாகக் கூற்று நிகழ்த்துவாளே தவிர, அவ்வாறு ''உள்வழிச் செல்லுதல்'' இல்லை. வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியாரின் குறுந்தொகைத்தலைவி, தலைவனின் பிரிவால் வாடியவழி உழன்று.

''யாங்கண் செல்கம் எழுகென ஈங்கே

வல்லர் கூறி இருக்கும்...'' (குறுந்தொகை. 219; 4-5)

என்று பாடுகிறாள். தலைவனே தலைவியை நாடிச்செல்லும் இயல்பும் வழக்கத்தில் உண்டு. பண்டைக்காலத்தில் தலைவி பெரும்பாலும் இல்லம் சார்ந்த இடங்களிலேயே உலவி நின்றாள் எனத் தெரிகிறது. ''மனைவி'', ''இல்லாள்'', ''மனையுறை மகளிர்'' போன்ற சொற்றொடர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. தலைவி குறிகள் நிகழும் இடத்தைக்கூட தானே குறிக்கிறாள். இதனைத் தொல்காப்பியர்,

''இரவுக் குறியே இல்லகத்துள்ளும்

மனையோர் கிழவிகேட்கும் வழி அதுவே

மனையகம் புகா அக் காலையான (தொல்.கள.40)

''பகற்புணர் களனே புறன்என மொழிப

அவள் அறிவுணர வருவழியான'' (தொல்.கள.41)

என்று புலப்படுத்துகிறார். எனவே, தலைவி தன் இல்லத்தின் புறத்தே, இல்லில் உள்ளோர் பேசுவது கேட்கும் தூரத்தில் மட்டுமே செல்லும் இயல்பினை உடையவளாக இருந்திருக்கிறாள். இறையனார் அகப்பொருளும்

''இரவு மனை இகந்த குறியிடத்தல்லது

கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை'' (இறை. அகப்பொருள் 21)

என்ற நூற்பாவில், தலைவி, தலைவனைச் சேரும் எல்லையை வரையறை செய்கிறது. அகநானூற்றுத் தலைவியை, ''தன் இல்லத்தை விட்டுச் செல்லாதே; நீ பேதைப் பருவத்தினள் அல்லள் பெதும்பைப் பருவத்தினை அடைந்துவிட்டாய்!'' எனக் கடிந்து கொள்ளும் தாயை (அக.7; 5-7) கயமனார் காட்டுகிறார்.

நச்சினார்கினியர் கருத்து:

நச்சினார்க்கினியரும் இளம்பூரணர் கருத்திற்கு உடன்படுகிறார். சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக் ''கற்புச் சிறப்ப நாண் துறந்தாலும் குற்றம் இன்றென்றற்குச் செயிர்தீர்'' என்றார். நன்மொழி என்றார் கற்பின் திரியாமையின் அவை ''இன்னோரன்னவழி நெஞ்சோடு கிளத்தல் போல்வன'' என விளக்கம் தருகிறார். இதற்கு ''யாண்டும் காணேன் மாண்தக் கோனை'' (குறுந். 31) என்ற ஆதிமந்தியாரின் பாடலை எடுத்துக் காட்டுகிறார்.

ஆதிமந்தி - யார்?:

கரிகாற் சோழனின் மகளான ஆதிமந்தியார் என்னும் சங்கப் பெண்பாற்புலவர். தன் கணவனான ஆட்டனத்தியைத் தேடித் திரிந்ததாகப் பாடிய பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. ஆதிமந்தியின் கணவன் கிழார் நகரினை அடுத்த காவிரியில் புதுவெள்ளப்புணல் விழாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தன் கணவனைத் தேடி ஊர், ஊராகச் சென்று அலைந்து புலம்பிய அவல நிலையை, பரணர் தம் அகப்பாடல்களில் (அகம். 76,135,222,236) குறிப்பிடுகிறார். ஒளவையாரும்,

''நெறிப்படு கவலை நிரம்பா நீளிடை

வெள்ளிவீதியைப் போல நன்றும்

செலவயர்ந் தசினால் யானே'' (அகம்.147; 8-10)

என்று, வெள்ளி வீதியார் தன் கணவனைத் தேடி அலைந்து திரிந்த செய்தியைக் குறிப்பிடுகிறார். பரணரும், ஒளவையாரும் முறையே ஆதிமந்தி, வெள்ளிவீதியார் ஆகியோர் தம் காதலர்களைத் தேடி அலைந்த செய்தியை உவமையாகவே கையாண்டுள்ளனர் என்பது இவண் நோக்கத்தக்கது.

தொல்காப்பியர், தலைவனிருக்கும் இடத்தைத் தேடிச்செல்லும் வழக்கு இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள போதும், சங்க இலக்கியத்தில் ஆதிமந்தியார் பாடல் (குறுந்.31) மட்டும், தன் தலைவனை ஊர் ஊராகத் தேடி அலைந்து புலம்பிய அவல நிலையைப் பாடியுள்ளது. ''பெண் எழுத்தைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதற்கான தேவை இன்று வரை நீடித்து வருகிறதென்றே கூறவேண்டும். படைப்பிலக்கியம் புனைவதற்காக எழுதுகோலைப் பெண் எடுத்த காலகட்டம் தொடங்கி, ஆணாதிக்கக் கருத்தியல்கள் சமூகத்தில் நிலைப்பட்டுப் போய் வேர்பிடித்துத் தழைத்துவிட்டன என்பதும் அவற்றின் தாக்கங்கள் குடும்பத்தளத்தில் மட்டுமின்றிக் கலை, இலக்கியம், சமயம், அரசியல் எனச் சமுதாயத்தின் பல தளங்களிலும் தமது சுவடுகளை அழுத்தமாகப் பதியத் தொடங்கிவிட்டன'' (எம்.ஏ.சுசீலா, பெண் - இலக்கியம் - வாசிப்பு, பக். 68,69) என்று கூறுகின்ற கருத்தாக்கம் ஈண்டு மனங்கொள்ளத்தக்கது.

சங்க அகப்பாடல்களில், அவற்றின் திணை துறைக் கட்டமைப்பிற்கேற்ப காதல் வயப்பட்ட பெண்ணின் மன ஆற்றாமைகளையும், உடல் சார்ந்த பசலைத் துன்பங்களையும் ஆண்பாற் புலவர்கள் போலவே பெண் கவிஞர்கள் காட்டியுள்ள போதிலும் ஒரு சில பாடல்கள், பெண்ணுக்குரிய மரபு வழி மதிப்பீடுகளை விமர்சனம் செய்து அவற்றைத் தாண்டும் எல்லைப் பெண் துணிவதைச் சித்தரிப்பதாகவே உள்ளன. அவற்றுள் ''யாண்டும் காணேன் மாண்தக் கோனை'' என்ற ஆதிமந்தியாரின் பாடலும் குறிப்பிடத்தக்கது.

ஆதிமந்தியார் தன் கணவனைக் காவிரியாற்றில் தொலைத்த நிலையில் அவனைத் தேடிச் செல்கிறாள். ''தன் கணவன் என்ன ஆனான்'' என்று தெரியாமல் அவனைத் தேடிச் செல்கிறாள். ஆதிமந்தியார் சென்ற செலவின் நோக்கம் வேறுபட்டது. தலைவி, தலைவனைப் புணர்ச்சியின் நோக்கமாகத் தான் தேடிச்செல்லுதல் கூடாது'' என்று தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். ஆதிமந்தியார் புணர்ச்சி நோக்கமின்றித் தன் ''முதலையே'' தொலைத்த நிலையில் தேடிச் செல்லுதல், தமிழ்பண்பாட்டு மரபைச் சிதைப்பதாகப் பொருள்கொள்ளக்கூடாது. தலைவி தன் முதல்வனையே தொலைத்த நிலையில் தலைவன் உள்ளவிடத்துத் தேடிச் செல்லலாம் என்ற புதிய விதி தொல்காப்பியத்துள் மறைந்து நிற்பதை ஆதிமந்தியாரின் பாடல் வழி அறியமுடிகிறது.

 

இலக்கியத்தில் அலர் - இரா. சந்திரசேகர்

மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அவனால் தனித்து இயங்க இயலுவதில்லை. ஏதேனும் ஒரு காரணம் பற்றி அவன் தன்னைச் சுற்றி இருப்போரைச் சார்ந்திருக்கின்றான். இந்நிலையில் அவன் எந்த ஒரு செயலையும் சுற்றி இருப்போரின் உடன்பாடு இன்றிச் செய்ய இயலுவதில்லை. அவ்வாறு செய்கையில் அவன் சமுதாயத்தின் விமர்சனத்திற்கு ஆளாகிறான். இது சங்க இலக்கியத்தில் அலர் என்று சுட்டப்பட்டது எனலாம். சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம் வரையிலும், அலர் என்ற சொல் சுட்டப்படுகின்றது. அதனைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அலர்:

அலர், அம்பல், கவ்வை ஆகியவை ஒத்த பொருளைத் தரும் சொற்களாகும். இலக்கியத்தில், கற்புக் காலத்தில் தலைவன் தலைவியை நெடுநாள் பிரிந்தால் ஊரார் கூறும் சொல் ''பழிச்சொல்'' என்று குறிக்கப்படுகின்றது. மன்னன் தவறு செய்தால் அவனைத் திருத்துவதற்காகக் கூறும் சொற்கள் ''செவியறிவுறூஉ'' என்று சுட்டப்படுகின்றது. ஆனால் களவுக் காலத்தில் தலைவன் களவொழுக்கத்தை நீட்டிக்கையில் ஊர்ப்பெண்கள் கூறும் சொற்களே அம்பல், அலர், கவ்வை என்று சுட்டப்படுகின்றது.

அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல் என்றும் அலர் என்பது சொல் நிகழ்தல் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர். இறையனார் களவியலுரையாசிரியர், ''அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்வதாயிற்று, இன்னிதின் கண்ணது என்பது அறியலாகாது. அலர் என்பது இன்னானோடு, இன்னாளிடை இது போலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது பெரும் போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலர் என்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமையென வேற்றுமை சொல்லப்பட்டதாம்'' என்று விளங்குவர்.

கௌவை என்பதற்குக் ''கலக்கம், துன்பம், பழிச்சொல்'' எனறு தமிழ்ப்பேரகராதி பெருள் கூறும். ஆகவே இளம் பெண்ணின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் என்றும் வெளிப்படையாகப் பேசுவது அலர் என்றும் குறிக்கப்படும் எனலாம்.

அலர் தோன்றக் காரணம்:-

சங்க இலக்கியத்தில் களவு மணம் தவறாகக் கொள்ளப்படவில்லை. பெண்கள் தங்களுக்கு ஏற்ற தலைவனைத் தாமாகவே தேடிக் கொள்வதும், களவு மணம் புரிவதும், உடன்போக்கில் ஈடுபடுவதும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஆயினும் தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தினை அறிந்த ஊர்ப் பெண்டிர் அவர்கள் உறவைப் பற்றித் தமக்குள் பேசிக்கொள்ளும் நிலையும் இருந்துள்ளது. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அது தலைவன், தலைவி, களவு வாழ்வு கற்பு வாழ்வாக மலரவே துணையாக இருந்துள்ளது என்பது விளங்கும்.

ஆணின் மனம் என்றும் களவு வாழ்வினையே நீட்டிக்கவிரும்பும். ஏனெனில் களவு காலத்தில் எந்த வித சுமையும் இன்றித் தலைவியுடன் கூடியிருக்கும் இன்பத்தையே தலைவனின் மனம் பெரிதாக எண்ணும். ஆனால் தலைவி மனமோ தனக்குச் சமுதாயத்தில் மனைவி என்னும் தகுதி கிடைப்பதனையே பெரியதாக எண்ணும். நேரடியாகத் தலைவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கூறுவது அவன் மேல் நம்பிக்கை இல்லாத நிலையைச் சுட்டுவதாக அமையும். ஆனால் தலைவியைப் பற்றிப் பிறர் தவறாகக் கூறினால் அதனைத் தலைவனது மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே ''அலர்'' தோன்றியதாகக் கூறி மிகுதியும் அக இலக்கியத்தில் வரைவு கடா அதல் நிகழ்கின்றது. வரைவுகடா அதலின் பொருட்டே அலரும் விரித்துரைக்கப்படுகிறது.

அலர் தூற்றுபவர்:-

இலக்கியங்களில் அலர் தூற்றுபவர் பெண்களாகவே சுட்டப்படுகின்றனர்.

வெவ்வாய்ப் பெண்டிர் (குறுந். 373, அகம். 50)

அலர் வாய்ப் பெண்டிர் (நற். 36)

அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற். 143)

அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர் (அகம். 203)

என்று இவர்கள் சுட்டப்படுகின்றனர். இதன் காரணம் என்னவென்று ஆராயப் புகுவோமேயானால் தமிழ்ச் சமுதாயத்தின் நாகரிகம் புலனாகும்.

அக இலக்கணம் கூற வந்த தொல்காப்பியர் கூற்றிற்கு உரியவர்களாகக் கூறும்போது தலைவன், தலைவி, நற்றாய், செவிலி, விறலி, பரத்தை என்று பெரும்பாலும் பெண்களையே சுட்டுகிறார். அறத்தோடு நிற்றலை விளக்கும் போதும் தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் வீட்டில் இருப்பவர்களுக்கும் அறத்தோடு நிற்பர் என்று கூறுகிறார். இங்கு எந்த ஓர் இடத்திலும் தலைவன், பாங்கன், பாணன் இவர்களைத் தவிர வேறு ஓர் ஆண் இடம் பெறவில்லை. ஒரு பெண்ணின் களவொழுக்கம் குறித்து, வேறு ஆண் மகன் வெளிப்படையாகப் பேசுவது நாகரிகம் அன்று என்ற தமிழரின் பண்பாட்டின் வெளிப்பாடே இஃது எனலாம்.

அலர் தூற்றும் தன்மை:-

பெண்கள் அலர் தூற்றும் தன்மையினை நற்றிணைப் பாடல் ஒன்று அழகாக வெளிக்காட்டும்.

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்

சிறுபோல் வலந்தனள்.... (நற். 149)

இங்கு அம்பல் என்பது தமக்குள் கரவாகப் பேசியதைக் குறிக்கும். தலைவி உயர்ந்த குடியில் பிறந்தவள். ஆகையால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அயல் பெண்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும் தமக்குள் மறைவாகப் பேசியபடி அலர் உரைத்தனர் எனலாம். தாயும் தன் மகள் மீது ஐயம் கொண்டு அவளை அடித்தாள் என்பதை விட, பிறர் சுட்டிக்கூறும் அளவிற்கு நடந்து, பிறந்த குடிக்கு இழிவைத் தந்துவிட்டாளே என்ற எண்ணத்திலேயே தலைவியை அடித்தாள் எனலாம்.

அலர் அச்சம்:-

ஊரில் அலர் பரவிய நிலையில் தலைவிக்குத் துன்பம் ஒருபுறம் தோன்றும் எனினும் மறுபுறம் அலரின் விளைவால் தலைவன் விரைந்து திருமணம் செய்து கொள்வான் என்ற எண்ணம் அவளுக்கு இன்பத்தையே தோற்றுவிக்கும். ஆயினும், அலரினைத் தாய் அறிந்தால் நேரிடும் விளைவை எண்ணி அஞ்சுகிறாள். அன்னை கோபம் கொண்டு தண்டிப்பாளே என்ற எண்ணத்தை விடவும் இற்செறித்துவிட்டால் தலைவனைச் சந்திக்க இயலாது போய்விடுமே என்ற எண்ணமே அங்கு மேலோங்கி இருப்பதை அறிய முடிகின்றது.

அலரே அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை

அரியவாகும் நமக்கு (நற்.4)

என்ற ஏக்கக் குரலையே நாம் கேட்க முடிகிறது.

தலைவியின் மனநிலை:-

அலருக்கா ஒருபுறம் வருந்தினாலும் மற்றொரு புறம் தலைவி மகிழவே செய்வாள். தடைபோட, தடைபோட காதலில் ஆழம் அதிகரிக்கும்.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும் இந்நோய் (குறள் 1147)

என்பது வள்ளுவர் வாக்கு. இதே கருத்தினை,

ஊரவர் கவ்வை எருஇட்டு அன்னை சொல்நீர்படுத்து

ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்

பேர்அமர் காதல் கடல் புரைய விளைவித்த

கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே (திருவாய்மொழி. 5.3.4)

என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் தெரிவித்துள்ளார். தலைவியின் களவொழுக்கத்தை முதலில் தாய் அறிந்த பின்பே ஊரார் அறிவர். ஆனால் ஊரார் பழியை முதலில் கூறிப் பின் தாயாரின் வார்த்தையாகிற நீர் பாய்ச்சுவதற்கு முன்னே நிகழக்கூடியதான எருவாக இங்கு உருவகம் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ''தன்னைப் போல மகள் உலக மரியாதைகளை மீறாள்'' என்றே தாய் எண்ணியிருந்தாள். ஆனால் ஊரார் பழி சொன்ன பின்னே தாய் அறிந்தாள் என்பதாகும். அன்னை சொல்லை எருவாகவும், ஊரார் பழியை நீராகவும் உருவகம் செய்யாதது ஏன் என்றால், எரு அடியிலே ஒருமுறை இடப்படுவது; நீர் அடிக்கடி பாய்ச்சப்படுவது ஊரார் ஒருமுறை சொல்லி விட்டுவிடுவர். ஆனால் தாயோ வீட்டிற்குள்ளே இருந்து எப்போதும் ஒரே தன்மையாகக் கூறிக் கொண்டிருப்பாள். ஆகவே தாயின் வார்த்தை நீராகக் கூறப்பட்டது.

அலர் என்பது தலைவன், தலைவியின் களவொழுக்கத்திற்குத் தடையாக இருப்பது. ஆயினும் களவு வாழ்வு கற்பாக மாறுவதற்கு வழி வகுப்பது. ஆகவே அலரைத் தமிழரின் பண்பாட்டினுள் அடக்கலாம். பண்பாடடின் வெளிப்பாடாக அமைந்த அலர் பின்னாளில் இலக்கியச் சுவைக்காகவும், நாடகத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்பட்டது எனலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

நம்பிக்கையே வழிபாடு - வி.பி. சுதாமகேஸ்வரி

மனிதன் தங்களின் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக அமைவது, தாம் வணங்கும் தெய்வத்தின் அருட்செயல்களே என நம்பினர். இந்த நம்பிக்கையின் ஊற்றுக்கண் உள்மனம் என்பர். உள்மனம் மூளைக்கு உணர்த்தும் எண்ணங்கள் உண்மையாகி உறுதிபடும்போது நம்பிக்கையாகிறது. நம்பிக்கை அடிப்படையில் வழிபாடு செய்கின்றனர். இவ்வழிபாட்டில் ஒவ்வொரு செயலிலும் காரணங்களும், காரியங்களும் அறிவியல் உண்மைகளும் பொதிந்தும் செரிந்தும் காணப்படுகின்றன.

வழிபாட்டின் தொடக்கம்:

மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது என்பதனை உணர ஆரம்பித்த நிலையில் வழிபாட்டுக் கோட்பாடுகள் உருவாகின. அச்ச உணர்வே வழிபாட்டின் அடிப்படை எனலாம். இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் அதனை அமைதிபடுத்த வழிபாட்டை உருவாக்கினான். ''இருக்கு வேத கால மக்கள் இயற்கையினையும் பாம்பு போன்ற உயிரினங்களையும் வழிபட்டு வந்தனர்.'' என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆதிமனிதனின் தொடக்க வழிபாடு இயற்கை வழிபாடு எனலாம்.

ஆவி வழிபாடு:

மனிதன் தன்னுடன் வாழ்ந்த ஒருவன் இறந்து விட்டால் அவனின் ஆவி பூமியில் உலவும் என நம்பினான். ஆவிகள் மனிதனின் அனைத்து செயல்களையும் இயக்க வல்லவை என்ற எண்ணமே ஆவி வழிபாட்டுக்கு அடிகோலியது எனலாம். இதனை ''சமயத்தின் தொடக்கம் ஆவிகளின் பால் ஏற்பட்ட நம்பிக்கையிலிருந்து தோன்றியது'' என்பர் டைலர். இதனால் ஆவிகளை அமைதிபடுத்தவும், நன்மைகளைப் பெறவும் இறந்தவர்களுக்கு வழிபாடு செய்தனர்.

முன்னோர் வழிபாடு:

நம் முன்னோர்கள் இறந்த பின்னர் நம்முடன் காற்று வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நமக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வழிபடுகின்றனர். நடுகல் வழிபாடே முன்னோர்கள் வழிபாடு. பிற்காலத்தில் நடுகல் வழிபாடே வழிபாடு கோயில்களாக மாறின.

ஆவி வழிபாட்டிலிருந்து தெய்வ வழிபாடும், தெய்வ வழிபாட்டிலிருந்து சிறுதெய்வ வழிபாடும் தோன்றின. சிறுதெய்வ வழிபாட்டிலிருந்தே பெருந்தெய்வ வழிபாடு தோன்றியது என்பர்.

சிறுதெய்வ வழிபாடு:

சமூகத்தின் அடித்தளத்து மக்கள் வழிபடும் தெய்வங்களைச் சிறுதெய்வங்கள் என்றும் மேல் தளத்து மக்கள் வழிபடும் தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள் என்றும் அழைப்பர். சிறு தெய்வ வழிபாட்டில் அம்மன் வழிபாடே சிறப்பிடம் பெறுகிறது. திராவிடர்களின் தாய்தெய்வ வழிபாட்டையே குறிக்கிறது. ஆதிமனிதனின் வளமைச் சடங்குகள் பெண்ணுடன் தொடர்பு உடையதாலும் அனைத்துக்கும் இருப்பிடமான பூமியைப் பெண்ணாகக் கருதுவதாலும் பெண் தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பிற்போக்கில் ஆண் ஆதிக்க காலத்தில் ஆண் தெய்வங்களையும் படைத்துக் கொண்டனர்.

வழிபாட்டு முறைகள்:

சிறுதெய்வ வழிபாடு ஓர் வரையறைக்கு உட்படாதது, இரத்தபலி கொடுத்தல், சடங்குகளைச் செய்தல், நிகழ்த்திக் காட்டுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளைக் கொண்டது.

பலிகொடுத்தலும் நம்பிக்கையும்:

தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலியிட்டு இரத்தத்தைக் காணிக்கை செலுத்துவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆடு, மாடு, கோழி, பன்றி, நரி முதலிய விலங்குகளைப் பலியிடுகின்றனர். தெய்வங்களுக்கு பலியீடு செய்வதனால் மக்கள் தமக்கு நன்மை உண்டாகும் என நம்பி பலியிடுகின்றனர். தெய்வங்கள், இரத்த தாகம் கொண்டவை. ஆனால் இரத்தத்தைக் கடவுளுக்குப் பலியிட்டு உடலை மனிதன் சாப்பிடுகிறான்.

சிலப்பதிகாரக் காலத்தில் மனிதனைக் கடவுளுக்குப் பலி கொடுத்துள்ளனர். இதனை,

''உயிர்பலி புண்ணும் உருமுக்கு நன் முழுக்கத்து

மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி''

வெற்றியின் பொருட்டு வீரர்கள் தங்களின் தலையைப் பலி கொடுத்ததை அறியலாம். காலப்போக்கிலும், நாகரிகத்தாலும், சட்டத்தின் காரணமாகவும் நரபலி நிறுத்தப்பட்டது.

காளைமாடு பலியிடல்:

சங்க காலத்தில் பசுமாட்டினைப் பலி கொடுத்துள்ளனர். ''வேம்பினடியில் உறையும் தெய்வத்திற்குக் கொழுப்பு நிறைந்த பசுவைப் பலி கொடுத்துள்ளனர். இக்காலத்தில் காளிக் கோயில்களுக்குக் காளைக்கன்றுகளைப் பலி கொடுக்கின்றனர்.

பெண் இனத்தை இனப்பெருக்கத்திற்காகப் பலி கொடுப்பதில்லை. காளைக்கன்றுகளைப் பலிகொடுப்பதினால் அவ்வினம் பெருகும் என நம்புகின்றனர்.

சுடுவான் சுடுதல்:

அங்காள அம்மன் கோயில் குட்டிப்போடாத பெண் ஆட்டைக் கூட்டி வந்து பக்கவாட்டில் ஈரலை எடுத்துக் கோயிலை ஈரலுடனும் ஆட்டுடனும் சுற்றி வருவர். வழியில் ஆடு இறந்து விட்டால் ஊருக்குக் கேடு என்றும், இறக்கவில்லை என்றால் ஊர் அவ்வருடம் செழிப்படையும் என்றும், மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆட்டிலிருந்து எடுத்த ஈரலைச் சுட்டுச் சாமிக்குப் படைப்பர். இதனையே ''சுடுவான் சுடுதல் எனபர்''

பரண் பூஜை:

பரண் பூஜை என்பது நான்கு கல்லை நட்டு அதில் கருங்கிடாயை வைத்துக் கத்தியால் பிளப்பர். கிடாயின் இரத்தத்தில் வாழைப் பழத்தைப் போட்டு பிணைந்து பூசாரிகள் உண்பர். இதனைப் பரண் பூஜை என்பர். இப்பழத்தைச் சாப்பிடும் பெண்களுக்குக் குழந்தை பேறு கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

பன்றி குத்துதல்:

சிறு தெய்வ வழிபாட்டில் பன்றி வேட்டை சடங்காகக் கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் மக்கள் ஒன்று கூடி பயிர்கள் நாசம் செய்யும் பன்றியை அழித்தனர். அதனை நினைவு கூறும் முகமாக இன்னும் கிராம தேவதைக்குப் ''பன்றிகுத்து'' சடங்கைச் செய்கின்றனர். கொங்கு நாட்டில் இப்பன்றி குத்தைச் ''சலகை குத்தல்'' என்று அழைக்கின்றனர்.

பொதுவாக மனிதனின் தீமைகளை விலங்குகளுக்கு ஏற்றி அதனை இறைவனுக்குப் பலியிட்டு விடுவதால் மனிதனின் தீமைகள் மறைந்து விடுவதாக நம்புகின்றனர். கோயிலில் பலியிடப்படும் விலங்குகளின் இறைச்சியை உண்பதால் இறைவனின் அருள் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இதனால் சிறுதெய்வ வழிபாட்டில் பலியிடல் ஒரு புனிதச் சடங்காகக் கருதப்படுகிறது.

பிற்காலத்தில் உயிர் பலியிடுதல் பாவம் எனக் கருதி போலிப்பலி கொடுத்தனர். பூசணிக்காய் எலுமிச்சைப்பழம் ஆகியவற்றை வெட்டி, அதில் குங்குமத்தைப் பூசி பலியாகக் கொடுக்கின்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது.

பூக்குழி (குண்டம்) இறங்கலும் பூச்சட்டி எடுத்தலும்:

''நெருப்பைத் தூய்மையின் அடையாளமாகப் பழந்தமிழ் மக்கள் எண்ணினர். தூய்மையடைய தீ மிதிக்க வேண்டும் என்பது சமுதாயக் கோட்பாடாக இருந்திருக்கிறது.''

இக்கருத்தின் அடிப்படையில், இராமன் சீதையைத் தூய்மையின் பொருட்டு நெருப்பில் இறங்கி வரச் செய்தான் என்பர்.

மாரியம்மன் கோயில்களில் தீச்சட்டி எடுத்தல் ஒரு சடங்காக இன்றும் நடைபெறுகிறது. ''தீச்சட்டி எடுத்தல் கண்ணகி மதுரையை எரித்ததின் விளைவாக ஏற்பட்டது என்கிறார் மு. வரதராசன் ''மக்களைக் காக்கும் பொருட்டு அம்மன் அக்கினி பகவானைக் கையிலேந்தினாள்'' அம்மனுக்கு நேர்த்திக்கடனாக மக்கள் அதே அக்னியைக் கையிலேந்துகிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

தீச்சட்டி எடுத்தல் அம்மனின் சினத்தைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படும் வழிபாடாகும். தீச்சட்டி சூரியனைக் கையிலேந்தும் குறியீடு என்பர்.

சாமியாட்டம்:

தொல்காப்பியர் காலத்திலேயே சாமியாட்டம் இருந்திருக்கிறது சாமியாடியை ''வேலன்'' என்று அழைத்தனர்.

''வெறியறி சிறப்பின் செவ்வாய் வேலன்'' என்பர்.

''வேலன் வந்து வெறியாடும் வெங்களம்'' என்று சிலம்பு பகரும் தெய்வத்தின் ஆவி குறிப்பிட்ட மனிதன் வாயிலாக வெளிப்பட்டுத் தோன்றும் என்று நம்பிக்கையின் வெளிப்பாடாகச் சாமியாட்டம் இடம் பெறுகிறது.

''சாமியாடுபவர்கள் மனித உருப்பெற்ற தெய்வங்கள்'' என்று பிரேசர் குறிப்பிடுகிறார்.

இப்போது சாமியாட்டம் சமூக அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் ஆடுகின்றனர். மனநிலையில் பாதிக்கப்பட்டவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தங்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்த ஒரு கருவியாகச் சாமியாட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் சிலர் விளம்பரத்துக்காகவும், வியாபாரத்துக்காகவும் சாமியாடுகின்றனர்.

பேய் பிடித்தல்:

விபத்து, கொலை, தற்கொலை போன்றவற்றால் இறந்தவர்களே பேய்களாக மாறுகின்றனர். உண்மையில் பேய்பிடித்தல் என்பது ஆழ்மன நிலையில் ஏற்படும் பாதிப்புகளே.

பேய் பிடித்தல் மனநோய் என்பர். உடலமைப்பு, பாரம்பரியம், குடும்பச் சூழ்நிலை, சமூக கலாச்சாரம் பொருளாதார நிலைகள் பண்பியல் தொகுப்பு மற்றும் மனவளர்ச்சி குறைபாடுகள் உண்டாகும்போது மனநோய் ஏற்படுகிறது. இதனையே பேய் பிடித்தல் என்கின்றனர்.

ஏமாற்றங்களால் ஏற்படும் உணர்வினால் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது. நரம்பு மண்டலத்தின் சீர் குலைவினால் ஏற்படும் மாற்றங்களையே பேய் பிடித்தல் என்கின்றனர். கோயில்களில் நடைபெறும் பேயோட்டும் சடங்கு உளவியல் மருத்துவத்துக்கு நிகரானது என்பர் டாக்டர். சு.சண்முகசுந்தரம்.

முளைப்பாலிகை:

முளைப்பாலிகை மந்திரத்துடன் தொடர்புடைய பாவனை நடனம் என்பர். பாவனை நடனத்தின் மூலம் மழை வேண்டுவது மட்டுமின்றி, தானியங்களின் செழிப்பையும் மானுடச் செழிப்பையும் தூண்டும். செழிப்புச் சடங்காகவும் முளைப்பாலிகை அமைந்துள்ளது. முளைப்பாலிகை நன்கு செழித்து வளர்ந்தால் அவ்வாண்டு விளைச்சல் பெருகும் என்ற நம்பிக்கை கொண்டனர். முளைப்பாலிகையை வீட்டு முற்றத்தில் வைத்துக் கும்மி கொட்டுவர். இதனை ''நற்பலன் மிகுதியாகப் பயிர்கள் தர நல்லிசை கூட்டவேண்டும் என்ற ஏ.என்.பெருமாள் கூற்றுப் பொருத்தமுடையதாகும்.

மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தங்கள் இருக்கின்றன. அச்சத்தின் அடிப்படையில் இறைவழிபாடு தொடங்கினாலும், நன்றி உணர்வில் முடிவடைகிறது எனலாம். கடவுளிடம் ஒரு செயலை எதிர்பார்க்கும்போது கைமாறு செய்யவேண்டும் என்பதற்காகப் பல நேர்த்தி கடன்களை உருவாக்கி கொண்டனர். காரணம் தெரியாமலேயே மனிதன் வழிபாட்டுடன் பல மருத்துவத்தையும், உளவியலையும், விஞ்ஞானத்தையும் கையாண்டுள்ளனர்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

தமிழ்ஒளி கவிதைகள் - மையம் - மா. நடராசன்

அடையாளம்:

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மாணவர் என்ற முறையில், ஆரம்பகாலத்தில் திராவிட மாணவர் கழகத்தில் பங்கு கொண்டிருந்தவர் (அவர் வாழ்ந்த காலம் 21.09.1924 முதல் 29.3.1965). 1947-ல் புதுவையிலிருந்து சென்னை வந்து தாம் அணிந்திருந்த கருஞ்சட்டையைக் களைந்துவிட்டு, பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டவர். அவர்தான் விஜயரங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ்ஒளி. அவருடைய கவிதைகள் தனித்தன்மை கொண்டவை எனக் கூறவேண்டும். பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பாணியில் இல்லாமல் ஒரு தனித்தன்மையோடு பாடல்கள் பாடினார். ''அந்தத் தனித்தன்மைதான் கொள்கை முழக்கம்! உழைக்கும் வர்க்கத்தின் போர்க் குணத்தை, வீறுகொண்ட எழுச்சியை அவர் அற்புதமாகப் பாடியிருந்தார். அது மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் அவலம் தோய்ந்த வாழ்க்கையைச் சித்தரிப்பதிலும் அவர் வெளிப்படுத்தியிருந்த வேதனைகள், வெற்றுப் புலம்பல்களாக இல்லாமல், வீர உரைகளாக வெடித்துச் சிதறிய வேகம் தமிழ்ஒளியின் தனித்தன்மைக்குச் சான்றாக விளங்கின'' என்று அவர் கவிதைகளின் பதிப்பாசிரியர் செ.து. சஞ்சீவி கூறுகிறார்.

பாரதி பரப்பு: நோக்கம்

பாரதியைப் பாடாத கவிஞர்கள் இல்லை. பாரதியைப் பின்பற்றாத கவிதைகள் இல்லை. அத்தனையும் பாரதியின் புகழ்பாடும்; வணங்கும். பாரதியை அவன் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் எவ்வாறு மதித்தனர்? ஏன் அவனைப் பாதுகாக்கவில்லை என்பதையெல்லாம் எண்ணவில்லை. காரணம் பாரதியின் பரிணாமம் பெற்ற விஸ்வரூபம்தான் அந்தக் கவிஞர்களுக்குத் தெரிகிறதே ஒழிய, அவன் அவ்வாறு விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு என்ன நிலையில் இருந்தான் என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால் தமிழ்ஒளியோ, தாம் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எவ்வாறு சில தனி மனிதர்களாலும் சமுதாயத்தாலும் சீரழிக்கப்பட்டார் என்பதைத் தம் நண்பரும் பதிப்பாசிரியருமாகிய செ.மு.சஞ்சீவியிடம் உரையாடும்போது வெளிப்படுத்திய உணர்வால் புரிந்துகொள்ள முடியும். அந்த உரையாடல் வருமாறு:

''நான் செத்துவிட்டதாக ஒரு செய்தியைப் பரப்பினார்களே, (தமிழ்ஒளி)

''இல்லை'' என்றேன் (செ.து. சஞ்சீவி)

''அவன்தான், அந்தத் துரோகி முத்திரைக் கதை எழுத்தாளன்தான் அந்தப் பொய்யைப் பரப்பினான். நான் அவனை எழுத்தாளன் ஆக்கியதற்கு, எப்படி நன்றிக் கடன் செலுத்திவிட்டான் பார்த்தீர்களா?'' (தமிழ்ஒளி)

இது ஏற்படுத்தியது போன்ற மனஅழுத்தம், உளைச்சல் பாரதிக்குத் தோன்றியிருக்கும் என்பதை உணர்ந்து ''பிரதிக்ஞை'' என்ற ஒரு கவிதையை இரண்டு பகுதியாக அமைத்துள்ளார். அந்தக் கவிதையின் முதற்பகுதி தமிழர்களின் ஆத்மா பேசுவதாகவும், இரண்டாம் பகுதி தமிழர்கள் பேசுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் பாரதிக்கு அந்தப் பகுதி மக்கள் கொடுக்காத அங்கிகாரத்தை அங்கலாய்த்துப் பாடுகிறார். அப்போது,

''நன்மை செய வந்தவனை நாடு கடத்திவிட்டோம் / இன்மை, துயர்ச்சுமையை ஏற்றிவிட்டோம் உன்முதுகில்'' என்று வேதனையோடு பாடுகின்ற போக்கில், ''பாட்டைத் திருத்திப் பதத்தைத் தனியாக்கிப் / போட்டோம், அதற்காகப் போட்டோம் சிறையிலுனை/'' என்று முடிக்கிறார்.

ஏழைகள் சார்பு கவிஞர்:

தமிழ்ஒளி பொதுவாகத் தொழிலாளியின் துயரத்தைப் பாடி, அவனுக்காக அவனைச் சார்ந்தே எழுதுபவர். அப்படி எழுதும்போது ஒரு கதை சொல்வது போலச் செய்தியை அமைத்துக் கருவை விரிவாக்குவார். அந்த விரிவாக்கம் கவிதையின் மையக் கருத்தைச் சுற்றிப் பின்னப்படும் கெட்டி இழைகளாலான வலைப்பின்னல். அவருடைய கவிதையில் கையாளப்படும் மையக் கருத்துக்குரிய மக்களின் வாழ்க்கை நிலையை முழுமையாகப் படித்து முடிக்கும்போது தமிழ்ஒளியின் நோக்கத்தைச் சார்ந்தவர்களாக, நம்மை நாமே மாற்றிக்கொள்ள முடியும். மாற்றிக் கொள்வோம் என்பதை ''நீ யார் பக்கம்?'' என்ற கவிதை வாசிப்பின் அனுபவம் நமக்குப் புலப்படுத்தும். அந்தப் பாடலில் ஓர் ஏழைத் தொழிலாளியின் வாழ்க்கையும் அவன் நோய்வாய்ப்படுவதும், யாரும் கருணை காட்டாமல் கவனிப்பாரற்றுக் கிடத்தலும் முதலாளியின் மனிதத் தன்மை இல்லாமையும் ஆதிக்க வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரியின் இருண்ட மனநிலையும், மனித நேயம் இன்மையும் போன்ற கொடுமைகளால் ஓர் ஏழை எப்படி வதைபடுகிறான்? அந்த வதையிலிருந்து எப்படி ஒவ்வொரு ஏழைத் தொழிலாளியும் உழைக்கும் வர்க்கமும் விடுபடுவது என்பதைப் பற்றிப் பாடி இருக்கிறார்.

குடிசையில் மனைவி படும் துன்பம், ஆலையில் அந்தத் தொழிலாளி படும் துயரம் - இந்த இரண்டையும் முதன்மைப்படுத்தி வந்த கவிஞர் தமிழ்ஒளி, தெளிவாகத் தம் சார்பைச் சொல்லிவிடுகிறார். இந்தப் பாடல் ஒரு ஓரங்க நாடகம் போல் அமைந்துள்ளது. ஒரு காட்சி குடிசையில்; அடுத்த காட்சி ஆலையில்; மூன்றாவது காட்சி மீண்டும் குடிசையில்; உள்ளத்தை உருக்குகின்ற பச்சாதாப உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் ஏழையின் நிலையைச் சொல்கிறார்.

உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வேறுவழி இல்லாத கட்டாயத்தால் ஒரு தொழிலாளி ஆலை வேலைக்குச் சென்றுள்ளான். அவன் குடும்பத்தில் வறுமை. அதை மனைவி ''வாடிவிட்ட பயிரானோம்! நாளும் நம்மை மரண நிழல் தொடர்கிறது பசி ரூபத்தில்!'' என்று வேதனையுற்று, வேலைக்குச் சென்றுள்ள கணவனுக்காக ''மூடி வைத்த நொய் கஞ்சி மொந்தையிலே கிடக்கிறது!'' என்று குமுறுகிறாள். அப்போது அவள் நிலையை, ''பேய் போன்ற முதலாளி கொடிய பாவி, பெருங்குருடன் - விடுமுறையும் அளிக்க மாட்டான் / வாய் செத்த ஏழைகளை வாட்டுகிறான் வறுமையிலே புழுவானோம் என்ன செய்வோம்? / தேய்கின்றோம்'' எனப் பலவும் எண்ணி எண்ணித் தேம்பி விழி நீர் சொரிந்து கண்ணயர்ந்தாள்! என்று தமிழ்ஒளி படம்பிடித்துக் காட்டுகிறார்.

ஆலையில் அவள் கணவன் கடுமையான காய்ச்சலினால், உடல் துரும்பாக இளைத்து உணவு உண்ணமுடியாத வேதனையினால் ஆலைக்குரிய மருத்துவரிடம் செல்கிறான். அந்த மருத்துவரோ, ஒரு காதல் கதையை, புத்தகத்தில் படித்துக்கொண்டு, ஆனந்த சஞ்சாரத்தில் இருக்கின்றார். அவன் இருமிக் கொண்டு சென்றது அவருக்கு இடையூறு ஆகிவிட்டது. அதனால் ''நாய் மகனே ஏன் வந்தாய் இந்நேரத்தில்? நாசமாய்ப் போனாயா? கொள்ளை நோயா? / ஓய்ந்திருக்கும் நேரத்தில் வந்துவிட்டாய், உயிர்வாங்க'' எனச் சொல்லிக் குதித்தார் டாக்டர். என்று அந்த நேரத்தில் டாக்டர் காதல் கதை படிக்கும் சுவாரஸ்யத்தில் தடை ஏற்பட்டுவிட்டதால் கோபப்படுவதைக் காட்டுகிறார். ஏழைத் தொழிலாளியோ தன் வாழ்க்கையே ருசியற்றுப் போனதால் வெந்துயர் அடைந்து கலங்குகிறான் என்று சமுதாய முரண்பாட்டை, வர்க்க முரண்பாட்டைப் படம் பிடித்துக்காட்டுகிறார்; குமுறுகிறார். அந்த குமுறலின் - கோபத்தின் - வெளிப்பாடு.

''காதகரைப் பொதுவிடத்தில் ஏற்றி வைத்தால் கடுங்கொலைகள் நடக்காமல் என்ன நேரும்?'' என்ற வரிகள்! நெருப்பை உமிழ்கின்றன! நம்மையும் நெருப்பாகச் சிவக்க வைக்கின்றன. தொழிலாளி எவ்வளவோ மன்றாடியும், கெஞ்சியும் கேட்டுக் கொண்டபிறகு, அந்த மருத்துவர் அவசரமாய் எழுந்து சென்று அலமாரிக்குள் அடுக்கி வைத்திருந்த மருந்துகளுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து விழுங்கு என்றார். விழுங்கிவிட்டான். சிறிது நேரத்தில் கண்கள் சுற்ற, இருள் அடைய, தலை சுற்றத் தள்ளாடிக் கீழே விழுந்துவிட்டான். அடி வயிறு கலக்கியது; மனைவி முகம் நினைவில் நிழலாடியது. ஏதோ சொல்ல வாய் திறந்தான். வாந்தி; சாய்ந்தான் அலறிக்கொண்டே! அதனைத் தமிழ்ஒளி, ''............ தலையெடுத்த நாள் முதலாய் உழைத்ததன்றி / வாய்த்த பலன் காணாதான், வறுமையன்றி வளம் படைத்து வாழாதான் உலகைவிட்டுப் / போய்விட்டான்! மரணத்தை யணைத்துக் கொண்டான்! என்று சோகமாகச் சொல்கிறார்.

ஏழைகளின் வேதனைக்கான காரணி:

துறைமுகத் தொழிலாளி, கழைக்கூத்தாடி போன்றோர்களின் வாழ்க்கை நிலை மிகவும் வேதனைக்குரியது. அதற்கெல்லாம் காரணம், அவர்களே அல்லர். அவர்களை அப்படி வாழவைத்து உழலவிட்டுச் சுரண்டிக் கொண்டுள்ள இந்தச் சமூகமும் சமூக அமைப்புமே அவர்களுடைய வாழ்க்கையின் கீழ்நிலைக்குக் காரணம் என்று தெளிவாகவும் கூர்மையாகவும் சொல்லுகிறார்.

துறைமுகத் தொழிலாளி ஒருவன் கடுமையான உழைப்பாளியாயினும் வறுமையின் காரணமாகச் சோகமே அவன் வாழ்வில் மிஞ்சியது! அதைக் கண்டு வேதனைப்பட்ட கவிஞர் கோபம் கொண்டு, ''சுயராஜ்ஜியம் வந்ததெனச் சொன்னார்கள்; அந்தச் சுயராஜ்யம் யார்க்கென்று சொல்லிடுவீர் நாட்டீரே! ஒற்றைக்கு இரட்டைவிலை எறியுமே உட்கார / வெற்றிலைக்கு நான்கு வெள்ளி விக்கிரயம் ஆயிற்று! இந்நிலையில் அவ்வேழை என்ன கதி அடைவான்'' என்று கேட்டுவிட்டு, இத்தனைக்கும் காரணம் ''ஆளும் வர்கத்தின் அக்கிரமம் கா­ரோ'' என்று விடையளிக்கிறார்.

வர்க்க முரண் ஒழிபடல் வேண்டும்:

தொழிலாளிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் தம் கவிதைகளில் பெரும்பாலானவற்றைத் தொடுக்கிறார். அதனால் மே தினத்தை வரவேற்றுப்பாடும் புதிய உலகப் பொதுமையை மேற்கொண்டார். நகரத் தூய்மைத் தொழிலாளர்களை அக்கறையோடும் கரிசனத்தோடும் பாடிய முதல் தமிழ்க் கவிஞர் தமிழ்ஒளி என்றால் அது மிகையல்ல. நகர சுத்தித் தொழிலாளர்கள், ''பொருள்களின் விலை விஷம்போல் ஏறிவிட்டது. சம்பளத்தைச் சேர்த்துக் கூட்டிக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டனர். தமிழகத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சி அந்தத் தொழிலாளர்கட்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று கூறிச் சிறையில் அடைத்தது. அப்போது அந்தத் தொழிலாளர் வீட்டுப்பெண்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளோடு திரண்டு வீதிக்கு வந்து போராடினர். தங்கள் குடும்பத்து ஆண்களைச் சிறையிலிருந்து வெளியே அனுப்புமாறு போராடினர். அதற்கு அந்தப் போலீஸ் கும்பல் ''இந்த மாதிரிப் போராட்டத்திற்கு உம்மைத் தூண்டி விட்டது யார்?'' என்ற ரீதியில் ''உமைத்தூண்டி விட்டவரைச் சொல்லாவிட்டால் ஒழித்திடுவோம், துப்பாக்கிச் சனியனாலே / இமை நடுங்க விழி நடுங்கக் குத்திச் சாய்ப்போம்!'' என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண்களில் ஒருத்தி தன் கைக்குழந்தையைக் காட்டி, ''கோபத்தைத் தூண்டியது பால் இல்லாமல் குமுறியழும் குழந்தைகளின் குரலே'' என்றாள்; தொழிலாளிப் பெண்கள் எல்லாம் முழக்கம் இட்டனர். தொடை நடுங்கிச் செந்தலையர் விழிக்கலானார்!'' மேலும், மந்திரிமார்களும், போலீஸ்காரர்களும் ''தப்பாகப் பணமெல்லாம் செலவழித்து, டாம்பீகம் அடிக்கின்றீர்! தொழிலாளர்கள் உப்புக்கு வகையின்றி வாடுகின்றார்! உபதேசம் செய்கின்றீர் அவர்க்கு'' என்று போராடுகின்றார்கள் பெண்கள். உலகமெல்லாம் ''ஒழிக முதலாளி'' எனப் புரட்சிவீரர் பொங்கி எழும் காட்சியைப் பாருங்கள் என்று தமிழ்ஒளி அக்கவிதையை முடிக்கின்றார்.

இக்கட்டுரை மூலம் கீழ்க்கண்ட கருத்துக்களைப் பெறமுடிகிறது.

1. பாண்டிச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் முழுமையாக அவருடைய தியாகத்தையும் மக்கள் மீது தமக்கு இருந்த அக்கறையையும் அங்கிகரிக்காத மக்கள் செய்கைக்காக மிக வருந்தி, இனி மேலேனும் பாரதியைப் பரப்ப முழுமூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று தமிழ்ஒளி ஒரு கொள்கை வகுத்துக் கொண்டார்.

2. தமிழ்ஒளி ஏழைகளின் சார்பாகக் கவிதையைப் படைத்துத் தம் சார்பை வெளிப்படுத்திக் கொள்கிறார். ஏழைகளையும் தொழிலாளர்களையும் பற்றிப் பாடும்போது ஒரு கதை சொல்வதுபோல உண்மை நிகழ்ச்சிகளைக் கவிதையாக அமைத்து அவர்கள் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

3. வர்க்க முரண்பாட்டைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டி, ஏழைகளின், தொழிலாளிகளின் வேதனைகட்கும் வாழ்க்கைச் சீரழிவுகட்கும், ஆளும் வர்க்கமும் முதலாளி வர்க்கமுமே காரணம் என்று தீர்மானமாகச் சொல்கிறார்.

4. ஆகவே வர்க்க முரண்பாட்டை ஒழிக்க வேண்டும். அதற்கு உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து புரட்சி செய்ய வேண்டும். அந்தப் புரட்சியை நோக்கித்தான் உலகம் நடைபோடுகிறது என்று தம் தூரநோக்குச் சிந்தனையைப் புலப்படுத்துகிறார். கவிஞர் தமிழ்ஒளி இந்தக் கருத்தில் உறுதியாக இறுதி வரை இருந்துள்ளார்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

இலக்கியக் கல்வியின் தகவமைப்பு - கு. தயாநிதி

பொருள் மைய வாழ்க்கையே தொழிற்புரட்சிக்குப் பின் பொருள்முதல் வாதமாக மாற்றுரு கொண்டது. அதுவும் இன்று பொருள் முனைப்பு வாழ்க்கையாக மாற்றம் கொண்டு வருகிறது. மனித வாழ்க்கையில் எந்த கோணத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் அது மற்ற எல்லாக் கோணங்களையும் பாதிப்பது நியதி. இதன் அடிப்படையிலேயே கல்வியும் மாற்றம் கொண்டுள்ளது. மனித உளத்தை வலிமைப்படுத்திய கல்வி இன்று வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான தகுதிப்பொருளாக மாறிவருகிறது. இத்தகைய சூழலில் மொழி / இலக்கியக் கல்வி இயங்க இயலுமா? அல்லது இயங்க வைக்க இயலுமா? என்ற வினாக்களுக்கு விடை காண முயல்வது நோக்கு.

கல்வி - இலக்கியக் கல்வி:-

அறியாமை பேரின்பம் என்றாலும் அறிந்து கொள்ளுதல் மனிதனின் இயற்கைப் பண்பாகிறது. கல்வி என்பது தன்னை உணர்ந்து கொண்டு தான் சார்ந்துள்ள சுற்றுச்சூழலை அறிந்துகொண்டு அதனைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்வதும் தாம் அதற்குப் பயன்படுவதுமாக ஏற்படும் வினைகளுக்கு வினையூக்கியாகச் செயல்படுவதே கல்வி. கல்வி எதனையும் நல்கக் கூடிய பொருளல்ல.

பண்பு, அறிவு, வேலை, சமுதாய நலன் என்ற நான்கும் கல்விக்குரிய கால்கள் என்று அறிஞர் க.ப.அறவாணன் (1988:243) குறிப்பிடுவர். பண்பு, அறிவு, சமுதாய நலன் என்ற மூன்றும் வடிவமைக்கப்படுகிற ஒன்று. வேலை கொடுக்கப்படுகின்ற ஒன்று. மாற்றி அமைப்பது கொடுக்கும் பொருளாக மாறும்பொழுது அதன் தரம் மாறுபடுவதை உணரமுடிகிறது.

ஆரம்பநிலையில் ஆழ்ந்த அறிவு நுட்பத்தையும், அகன்ற அறிவுத்திறனையும் ஒருங்கிணைந்த வகையில் கல்வி அமைந்தது. இன்று அவசர தேவையின் அடிப்படையில் அறிவு நுட்பதை மட்டும் முதன்மைப்படுத்திய துறைகள் பல பெருகிவிட்டன. அனைத்துத் துறைகளும் முன்பு ஒருங்கிணைந்ததாகவே இருந்தன. ஆகையால் அது இலக்கியக் கல்வியாக இருந்திருக்க வேண்டும்.

ஏனைய துறை ஆசிரியர்களைக் காட்டிலும் தமிழ்த் துறையினர் பரந்த அறிவுடையவராகவும், பல்வேறு துறை அறிவுடையவர்களாகவும் இருப்பர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுவதை உணர முடிகிறது. ஆசிரிய / மாணவர் உறவிலும் இலக்கியத்தில் மாறுபட்டுக் காணப்பெறுகிறது.

கல்விக்கு மொழியே அடிப்படை, மொழி வழியாகவே பிற பாடங்களைக் கற்றோம். எனவே மொழிக் கல்வி என்பது மொழி பற்றிய கல்வி (இலக்கணம், இலக்கியக் கல்வி) ஆகவும், மொழிவழிக் கல்வி என்பது பிற பாடங்களை வரலாறு, சமூகவியல், அறிவியல் போன்றவைகளைக் கற்பதைக் குறிக்கும் என்று செ.வை. சண்முகம் குறிப்பிடுவர் (1996; xii).

மொழிவழிக் கல்வி என்பது பிற்காலத்திய கருத்து ஒரு மொழி பயன்பாட்டில் இருக்கும்பொழுது, பிறமொழி வருகையும், செல்வாக்கும் பெற்ற பின்பே மொழிவழிக்கல்வி என்று கருத்துத் தோன்றும். ஆக, ஆங்கில மொழி வருகைக்கு முன்னால் அனைத்தும் இலக்கியக் கல்வியாகவே செயல்பட்டு இருத்தல் வேண்டும். இத்தகைய சூழலில் மொழிவழிக் கல்வி அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்ட நிலையிலும் அதனை நடைமுறைபடுத்துவதற்கான சாத்திய கூறுகள் மிக அரிது.

இதனாலேயே, மொழிப் பயன்பாட்டிலும், இலக்கியத்திலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பொழுதும் அதற்கான இலக்கணங்கள் தோன்றவில்லை. மொழிவழிக் கல்வி வினா குறியதானதால் இலக்கணத் தேவையும் சுருங்கிவிட்டன. பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களில் இலக்கியக் கல்வி மட்டுமே காணமுடிகிறது. பள்ளி இறுதி, மேனிலை அரசு தேர்வுகளில் முதல், இரண்டாம் தாள் என்று இருந்த தமிழ்த்தேர்வு, ஒரு தாளாக மாற்றப்பட்டுவிட்டது.

தேவையை மையப்படுத்தியே சமுதாயம் இயங்கும். ஒரு துறையில் மேலோட்டமான அறிவு போதும் என்ற நிலையில் இலக்கியப் பாடம் ஒரு ஒட்டாத பாடமாகவே மாணவர்களால் எண்ணப்படுகிறது. துணைப் பாடத்தைப்போன்று எண்ணுகின்றனர் (Non detailed study).

தகவமைப்பு:-

இட, கால சூழலுக்கு ஏற்ப, உலகில் உயிரினம் முதலான அனைத்துப் பொருட்களும் வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் பெறும். எதிர்பாராத நிலையில் சூழல் மாறும்பொழுது பொருட்களும் மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாத பொருளால் வாழ இயலாது. மற்றைய பொருட்களின் வாழ்க்கைக்கு எதிராகப் போட்டியிட முடியாது. இதனாலேயே ''வல்லது வாழும்'' என்ற கருத்துத் தோன்றியது.

இலக்கியக் கல்வியின் தகவமைப்பு:-

மேற்கண்டவாறு இலக்கியக் கல்வியும் மாணவ சமுதாயத்தின் தேவையை உணர்ந்து தகவமைத்துக் கொண்டால் / கொள்ளச் செய்தால் அதன் வாழ்க்கை எல்லையைச் சற்று நீட்சி பெறச் செய்ய இயலும். மொழியும், இலக்கியமும் காலந்தோறும் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் மாறி வந்துள்ளது யாவரும் அறிந்தது. தற்போது கூட ''அறிவியல் தமிழாக'' மாற்றம் பெறச் செய்வதற்கான முயற்சிகள் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அங்ஙனம் இருக்க இக்கட்டுரை குறிப்பிடும் தகவமைப்பு சற்று மாறுபட்டது. இலக்கியத்தில் இன்றைய மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் துறைகளாகக் கருதப்படுகிற துறைக்கருத்துக்கள் விரவி கிடக்கின்றன.

இதனை மையப்படுத்தி நூல்களும் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை மாணவர்களின் கற்பித்தல் கோணத்தில் மாற்றி அமைக்க முயற்சி செய்தோமெனில் இலக்கியக் கல்வியை இயங்க வைக்க இயலும். எடுத்துக்காட்டாகத் தொடர்பியல் தொடர்பான நுட்பங்கள், திறன்கள், இலக்கியத்தில் உள்ளன. அப்பகுதிகள் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றாலும், ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் இல்லை. தற்கால இலக்கியம், சங்க இலக்கியம் என்று இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நிலையிலேயே உள்ளது. அதனைக் கற்பிக்கும் ஆசிரியரும் செய்யுளுக்கான தெளிவுரை, இலக்கிய நயம் பாராட்டல் என்ற வட்டத்தோடு நிறுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு இன்றி அவ்வித பகுதிகளை ஒருங்கிணைத்துப் பாடத்திட்டத்தில் கொடுத்தால் தொடர்பியல் மாணவர்களுக்கு வலுசேர்ப்பனவாக அமையும். இதற்குத் தக பாடத்திட்டங்கள் அமைவதோடு கட்டுரையும், நூல்களும் எழுதப்படுவது அவசியமாகிறது.

பிறதுறைகளோடு இயைபுடைய கருத்துக்கள்:-

இயைபுடைய துறைகள் பல இருப்பினும் ஒரு சில மட்டும் இங்குச் சுட்டப்படுகின்றன.

1. மருத்துவக் கருத்துக்கள் சித்தர் இலக்கியத்திலும், அறநூல்களிலும் இருப்பது அனைவரும் அறிந்தது.

2. சங்க இலக்கியக் கூற்றுகள் தொடர்பியல் கருத்துகளே. மேலும் தொடர்பியல் காட்சி, தொடர்பியல் புதிய துறையாகும் இலக்கிய வருணனைகள் எல்லாம் காட்சி தொடர்பியலுக்குரியன.

3. முதல், கரு, உரிப்பொருள் கருத்து உயிர்நுட்பவியல் / சுற்றுச்சூழல் துறைக்குப் பொருத்தமானது.

4. தொல்காப்பிய நூற்பாக்கள் சில மரபியல் / பரிணாம வளர்ச்சிக்குரியன.

5. வணிக ஆட்சியலுக்கு மையமான ''பொருளாதாரம்'' இலக்கியத்தில் முழுமையாக உள்ளன. மேலும் மேலாண்மைக்குப் பொருத்தமான, ஆட்சிமை, ஆளுமை பண்புகள் கம்பராமாயணம் முதலான காப்பியங்களில் உள்ளன.

6. தாவர, உயிரினச் செய்திகளும் அவையவை துறைக்குரியன.

முடிவுரை:-

இலக்கியக் கல்வி இந்த கோணத்தில் மாற்றி அமைக்கப்படுமேயானால் அதனை இயங்க வைக்க இயலும். கருத்திற்கும், நடைமுறைக்கும், இடைவெளி இருப்பது இயல்பு. அப்படியே இதற்குமான சிக்கல், இருக்கலாம். அறிந்திட இருப்பினும் இப்படியொரு கோணம் உள்ளது என்பதைப் பார்வைக்குக் கொண்டு வருவதே இக்கட்டுரையின் இலக்கு.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

சங்கப் பாடல்களில் அவலம் - சு. பாலு

இருளும் பகலும் போல இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை. வாழ்வில் இன்பமும் துன்பமும் காணப்பட்டாலும் அவற்றுள் அவலம் (அழுகை) ஒன்றே வாழ்வில் அனைத்திலும் மேலோங்கி நிற்கிறது. மெய்ப்பாடு எட்டனுள் அவலம் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. நகைச்சுவைக்கு அடுத்ததாகத் தொல்காப்பியர் அழுகைச் சுவையை வைத்ததன் நோக்கம் அதற்கு நேர்மாறானது என்பதால் ஆகும். தமிழக மக்கள் தமது அக, புற வாழ்க்கையில் அவலம் மீதூரக் கண்டார்கள். அவர்களது அவல வாழ்க்கையை இன்பம் தோன்ற, சுவை தோன்றப் புலவர்கள் பலர் பாடல்களாகப் பாடினார்கள். அப்படிப்பட்ட சில அவலச்சுவை சங்கப் பாடல்களை, தொல்காப்பியர் கூறும் அழுகைச் சுவையுடன் ஒப்பிட்டுக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியர்:

''இழிவே இழவே அசைவே வறுமையென

விளிவில் கொள்கை அழுகை நான்கே'' (தொல்.மெய்.5)

என அழுகையை முறையே இழிவு, இழவு, அசைவு, வறுமை என நான்கு நிலைகளில் அழுகை பிறக்கும் எனக் கூறுகிறார். இதற்கு,

இழிவு என்பது பிறர் தன்னை எளியன் ஆக்குதலால் பிறப்பது. இழவு என்பது உயிரானும் பொருளானும் ஒன்றை இழத்தலால் பிறக்கும். அசைவு என்பது தளர்ச்சி அது தன்னிலைத் திரிதலால் பிறக்கும். வறுமை என்பது நல்குரவு. என இளம்பூரணர் விளக்கம் தருகிறார்.

இழிவு:

பிறரால் இழிந்துரைக்கப்படும் சிறுமை தொழில் காரணமாக மனம் வேதனைப்பட்டு அழும் அழுகை இழிவால் ஏற்படும் அழுகை (அவலம்) ஆகும்.

''விண்தோய் வரைபந்து எறிந்த அயாவீட

தண்தாழ் அருவி அரமகளிர் ஆடுபவவே

பெண்டிர் நிலம் வெளவி தன்சாரல் தாதுஉண்ணும்

வண்டின் துறப்பான் மலை'' (கலி. 40.22-25)

தலைவன் ஒழுக்கக் கேட்டினைக் கூறும் தலைவி தோழியிடம், மலை நாடான நம் தலைவன் அம்மலையில் வண்டுகள் எவ்வாறு மலருக்கு மலர் தாவி தேன் உண்ணுகிறதோ, அதனைப் போன்றே பல பெண்களுடன் இன்பம் நுகர்கின்றான் எனத் தலைவனை இழிவுபடுத்துவதாக இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

இழவு:

இழவு தன் சுற்றத்தாரையும், இன்பத்திற்கும் ஏதுவான பொருள்களையும் இழந்து அழும் அழுகை இழவால் ஏற்படும் அவலம் ஆகும். இதனை இரண்டு வகைப்படுத்திக் கூறலாம். 1. ஒருவர் தான் ஒன்று இழந்தமைக்காக அழுதல், 2. பிறர் ஒன்று இழந்தமைக் கண்டு தான் அழுதல் என வகைப்படுத்தலாம். ''கதிர்மூக்கு ஆரல் கீழ்ச்சேற்று ஒளிப்பு'' எனத் தொடங்கும் புறநானூற்றில் வரும்

''அழுதல் ஆனாக் கண்ணன்

மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே'' (புறம். 249.13-14)

எனும் வரிகளில் கணவனை இழந்த மனைவியானவள், இறந்த கணவனுக்கு உணவு படைக்கும் வகையில் புழுதிப் படிந்த சிறிய முறம் அளவாகிய இடத்தைத் தூய்மையாகச் செய்ய தண்­ர் கொண்டு சாணத்தைக் கரைத்து மெழுகினாள் என்பதால் இது தான் ஒன்று இழந்தமைக்காக வரும் அவலம் ஆகும்.

வெற்றி தோல்வி இன்றி இரு படைகளின் வீரர்கள் அனைவரும் அஞ்சாது போரிட்டு வீழ்ந்தனர். இந்த அழிவைக் கண்ட பரணர் போரின் விளைவு ஆக்கமன்று அழிவே என்பதை,

''எனைப்பல் யானையும் அம்பொரு துளங்கி

விளைக்கும் வினையின்றிப் படை ஒழிந்தனவே

விற்றபுகழ் மாண்ட புரவி எல்லாம்

மறத்தகை மைந்தரொடு ஆண்டுபட் டனவே

தேர்தர வந்த சான்றோர்..................

...........................................

காமர் கிடக்கை அவர் அகன்தலை நாடே'' (புறம் 63.1-11)

என்று கூறுகின்றார். இது பிறர் ஒன்று இழந்தமைக் கண்டு தான் வருந்துதல் ஆகும்.

அசைவு:

உடலாலும் உள்ளத்தாலும் தளர்ச்சியுற்று வருந்துதல். அது தன்னிலைத் திரிதல் என்பதாகும். அதாவது பண்டைய உயர்வு முதலியன கெட்டுத் தாழ்வுறும் நிலை.

''அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்

எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்

வென்று எறிமுரவின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையுமே இலமே'' (புறம்:112.1-5)

சென்ற மாதத்தின் முழுநிலவு தினத்தில் நாங்கள் எம் தந்தையை உடையவராக இருந்தோம். எங்கள் மலையையும் பிறர் கைப்பற்றவில்லை. இந்த மாதம் இம் முழுநிலவு நாளில் வெற்றி கொண்டு முழங்கும் முரசுடைய வேந்தர்கள் எங்கள் மலையையும் கைப்பற்றிக் கொண்டார்கள். நாங்கள் எம் தந்தையையும் இழந்தவரானோம் என்று பண்டைய உயர்வு முதலியன கெட்டு தளர்ச்சியுற்றுப் பாடுகின்றனர் பாரிமகளிர். இது அசைவு என்ற நிலையினால் வரும் அவலம் ஆகும்.

வறுமை:

வறுமை என்பது நல்குரவு. அதாவது பொருள் இன்மையாலும், இன்னும் பிறவற்றாலும் வறுமையுற்றுக் காணப்படுதல் எனும் நான்காவது நிலை அவலம் ஆகும். கண் விழிக்காத நாய்க் குட்டிகள் தாயின் காம்பில் பால் குடிக்க பசியில் ஆற்றாத குட்டி ஈன்ற நாய் குரைக்கின்றது. பழுதடைந்த குடிசையில் இசைவாணர் கூட்டம் மயங்கிக் கிடக்கின்றது. இல்லத் தலைவியானவள் குப்பையில் கிடந்த வேளைச்செடியின் கொழுந்துகளைக் கிள்ளி வேக வைக்கின்றாள். வீட்டில் உப்பும் இல்லை. இருந்த போதிலும் தனது வறுமையை அடுத்தவர் அறியாத வகையில் கதவடைத்துத் தன் சுற்றத்தினருக்கு வெந்த உப்பில்லாத கீரையை கொடுக்கின்றாள் என்பது,

''ஓல்பசி உழந்த ஒருங்குநண் மருங்கில்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைந்து

இரும்போர் ஒக்கலோடு ஒருங்குடன் மிசையும்

அழி பசி வருத்தம்'' (சிறுபாண்.135-140)

என்று சிறுபாணாற்றுப் பாடல் வரிகளில் கூறப்பெற்றுள்ளது.

பண்டைத் தமிழரது புற வாழ்க்கையில் மக்களைக் காப்பாற்றிய வள்ளல்கள் மன்னர்கள் மறைந்த போதும், அவர்கள் போரில் மடிந்த போதும் வீரரது தம் கைம்மை வாழ்வை உதறித் தம் கணவருடன் உயிர் நீத்த போதும் அவலச்சுவை இருப்பதைக் காணமுடிகிறது. எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் இழிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கு நிலைகளில் அவலம் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இன்றுள்ள நமது வாழ்க்கையிலும் நாள்தோறும் அவலச் செய்திகளைத் தான் கேட்டு வருகின்றோம். செய்தித் தாள்களில் அதிகப்படியான செய்திகள் அவலம் பற்றியனதாகவே இருப்பதைக் காணமுடிகிறது. கொலை, கொள்ளை, தற்கொலை, படைக்களன்கள், படைப்பலம், போட்டி, பொறாமை இவற்றின் மூலம் அவலம் இன்றைய வாழ்வில் தலைதூக்கி இருப்பதை அறியமுடிகிறது. நாடுகள் மக்கள் வாழ்வியலைப் பெருக்குவதற்கு பதிலாக படைக்களன்களைப் பெருக்குகின்றன. இதுவே இன்றைய வாழ்வில் உயிரை விஞ்சிய அவலமாகும்.

நன்றி: கட்டுரை மாலை

 

கம்பராமாயணத்தில் உள்ளுறை - நா. நாகலிங்கம்

சங்க அகப்பாடலுக்கு உரிய உத்தியாகச் சிறப்பித்துச் சொல்லப்படும் ''உள்ளுறை'' குறிப்புப் பொருளாகவும் தொனிப்பொருளாகவும் பிற இலக்கியங்களிலும் இடம்பெறுவதைக் காணுகின்றோம். கவிஞன் மனத்தில் ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றும்போது அவற்றை வெளிப்படுத்துவதற்கு இக்குறிப்புப் பொருள் வாயிலாக அமைகின்றது. பின்வரும் நிகழ்வை முன்னுணர்த்தும் மறைச்சுட்டாகவும், கவிஞனின் காப்பியப் பொதுநோக்கில் இடம்பெறும் சில பாவிக எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளியிடவும் உள்ளுறை பயன்படுகின்றது. இவ்வாறு உள்ளுறை உத்தியாகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். உள்ளுறையில் ஒன்றுக்கொன்று மாறான இருநிலைகள் உள்ளன.

1. ஒரு கருத்தைச் சொல்லுவதனால் அதற்கு இணையான மற்றொரு பின் கருத்தைக் குறிப்பாகச் சுட்டுவது.

2. வலியுறுத்தப்படுகின்ற கருத்தால் எதிர்மறைக் கருத்து வெளிப்படுவது. இவற்றைத் தக்க சான்று மூலம் கம்பராமாயணத்தைக் கொண்டு விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒத்த எண்ண இணைவுக் குறிப்பு - கம்பனின் சகோதரத்துவச் சிந்தனை:

கம்பன் நாட்டுப் படலத்தில் கோசல நாட்டின் வளத்தையும் மருதநிலச் சிறப்புக்களையும் வெளிப்படுத்தும்போது பல்வகை உயிரிணைவைக் காட்டுகின்றான். அன்னமும் எருமையும் தவளையும் இணைந்து வாழும் ஒரு இன்பப் பின்னணி வருணனைப் பாங்கில் சுட்டப்பெறுகின்றது.

''சேல்உண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்

மால்உண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை

கால்உண்ட வேற்றுமேதி கன்ற உள்ளிக் கனைப்பச் சோர்ந்த

பால்உண்டு துயில் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை''

பலவகை உயிரினங்களும் வாழும் மருத நிலத்தில் பறவையினத்தைச் சார்ந்த அன்னமும், விலங்கினத்தைச் சேர்ந்த எருமையும், நீரிலும், நிலத்திலும் வாழும் தவளையும் அன்பு பூண்டு ஒன்றையொன்று ஆதரித்து முரணின்றி வாழ்வது இங்குச் சுட்டப்பெறுகின்றது. கோசல நாட்டின் இயற்கைப் பின்புலத்தைப் புலப்படுத்தும் இக்காட்சி, அந்நாட்டு இளவரசனான இராமனின் வருங்கால இயல்பைக் குறிப்பாகச் சுட்டுவதாகத் தொனிப்பொருளில் அமைகின்றது. இறைவன் அவதாரமாகிய இராமன் அரச மரபில் வந்து மானுடனாகத் தோன்றிய போதும் பலவகை உயிரினங்களோடும் நட்பும் சகோதரத்துவமும் கொண்டு வாழ்கின்றான். பறவையினத்துச் சடாயு, குரங்கினத்துச் சுக்கிரீவன், அனுமன், அங்கதன், அரக்கர் இனத்து வீடணன், வேடர் இனத்துக் குகன் ஆகியோர் இராமனுக்குச் சகோதரர்களாகவும் நெருக்கமுடையவர்களாகவும் அமைகின்றனர். குகனைத் தம்பியாக ஏற்றதால் ஐவராகவும், சுக்கிரீவனையும், வீடணனையும் இணைக்கவே எழுவராகவும் அமைய இராமன்.

''குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின்குன்று சூழ்வான்

மகனொடும் அறுவர் ஆனேம் எம்உழை அன்பின்வந்த

அகன் அமர்காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்

புகல் அருங்காமை தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை''

எனக் குறிப்பிடுவதிலிருந்து இதனை அறியலாம். இந்த உயிரிணைவுச் சிந்தனை பல்இனஒற்றுமைக் கருத்து நாட்டுப் படலத்தில் கோசலக் காட்சியில் குறிப்பாகச் சுட்டப்படுகின்றது.

எதிர்மறைச் சிந்தனை:

நாட்டுப் படலத்தில் குறிக்கோள் நாட்டைக் கற்பித்து அதனைக் கோசலமாகப் பொருத்திக் காட்டுகின்றான் கம்பன். ஆயினும் இக்குறிக்கோள் தன்மையிலிருந்து முரண்பட்ட நிறைகளும் குறைகளும் உடைய ஒரு நாடு தொடர்ந்து வரும் படலங்களிலும் காண்டங்களிலும் சுட்டப்படுவதையும் காணுகின்றோம். சான்றாக,

''கூற்றம் இல்லை ஓர்குற்றம் இலாமையால்

சீற்றம் இல்லைதம் சிந்தையின் செம்மையால்

ஆற்றல் நல்அறம் அல்லது இலாமையால்

ஏற்றம் அல்லது இழிதகவும் இல்லையால்''

என்னும் பாடல் எதிர்மறையாக வரும் கூற்றத்தையும், குற்றத்தையும், சீற்றத்தையும் செம்மையில்லாச் சிந்தனையையும் மறத்தையும் இழிவையும் குறிப்பாகச் சுட்டுவதையும் காணுகின்றோம். காப்பியத் தொடக்கத்தில் நிலவிய இன்பமான சூழல் கூனியின் சீற்றத்தாலும் செம்மையில்லாச் சிந்தனையாலும் மாறுகின்றது. அவளது கூற்றமன்ன சொற்கள் கைகேயியை நிலையிழக்கச் செய்து மறவழியில் செலுத்துகின்றன. உருவாகிய குற்றம் தசரதன் உயிரைக் குடிக்கின்றது. அயோத்தி பொலிவிழக்கின்றது. இராமன் காட்டிற்குச் செல்லுகின்றான். இவ்வாறு காப்பியத்தின் தொடக்கப்படலப் பாடல்களில் சில எதிர்நிலையாக வரும் நிலையழிவுக் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. குறிக்கோள் உலகை முன்வைத்த காப்பிய நோக்கம், பிற்பகுதிகளில் குற்றத்தையும் போரையும் உயிரிழப்புக்களையும் கூற்றத்தையும் காட்டுவதும் சிந்திக்கத் தக்கதாகும்.

சொல்லில் குறிப்புப் பொருள்:

சொல்லிலும் குறிப்புப் பொருள் அமையும் பாங்கு நகர் நீங்கு படலத்தின் இராமன் உரையில் அமைவதைக் காணுகின்றோம். ஓரளவு இங்கு வெளிப்படையாகவே பொருள் சுட்டப்படுகின்றது. தானும் இராமனுடன் காட்டிற்கு உடன்வருவேன் எனச் சுற்றி நிற்கும் சீதையை விலக்க எண்ணிய இராமன், ''விளைவு உன்னுவாய் அல்லை. போக அமைந்தனை ஆதலில் எல்லை அற்ற இடர்தருவாய்'' என அறிவுறுத்துகின்றான் இங்கு வெளிப்படையாக இன்ன இடர் உறும் என விளக்கப் படாதபோதிலும், சீதை இராமனுடன் காட்டிற்குச் சென்றால் துன்பம் வரும் என்பது ஓரளவு புலப்படத் தொனிக்குறிப்பாக வெளிப்படுவதைக் காணுகின்றோம்.

எரியில் புகுவதுபோலத் தாமரையில் அமர்ந்த அன்னங்கள்:

பம்பை வாவிக் காட்சியில் எரியில் புகுவது போன்ற தோற்றத்துடன் தாமரையில் அமர்ந்த அன்னங்களைக் கம்பன் அமைத்துக் காட்டுகின்றான்.

''அரிமலர்ப் பங்கயத்து அன்னம் எங்கணும்

புரிகுழல் புக்க இடம் புகல்கிலாதயாம்

திருமுகம் நோக்கலாம் இறந்து தீர்றும் என்று

எரியினில் புகுவனஎனத் தோன்றும் ஈட்டது''

சீதையை இழந்த பிரிவுச் சூழலில் இராமனின் மனத்துயரத்திற்கு ஏற்றவாறு இந்தத் தற்குறிப்பேற்றக் காட்சி அமைக்கப்பட்டிருப்பினும், ஏற்கனவே பலமுறை கம்பன் சீதையை அன்னமாகக் காட்டியிருப்பதால், இவ்விடத்தில் ஒரு குறிப்பையும் தருவதாகச் சொல்லலாம். இராவணன் அழிவிற்குப் பின்னர் இராமனின் ஐயம் நீங்கச் சீதை தீப்புகுந்ததன் முற்குறிப்பு இங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

குறிப்பாக உள்ளுறையில் பொருள் தரும் கம்பனின் கவிவன்மை:

இவ்வாறு ஆழமாக நோக்கினால் கம்பனின் ஒவ்வொரு காட்சியிலும் புனைவிலும் சொற்றொடரிலும் தொனியும் குறிப்பும் உள்ளுறையும் புலப்படுவதைப் பரவலாகக் காணலாம். குறிப்பாக உள்ளுறையில் பொருள் தரும் கம்பனின் இக்கவிவன்மை, உலாவியற் படலத்தில் - இராமனைக் கண்ட மகளிர்,

''தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம்அன்ன

தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே''

எனச் சுட்டுவதிலிருந்து அறியலாம். அம்மகளிர் இராமனின் மூன்று செயல்களின் குறிப்பான புலப்பாட்டை இங்குக் காணுகின்றனர்.

1. தோள்கண்டார் - இராமன் மிதிலை மக்கள் முன்னிலையில் வில்லொடித்த நிகழ்ச்சி

2. தாள்கண்டார் - இராமன் பாதம்பட்டு அகலிகை உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி

3. தடக்கை கண்டார் - இராமன் செய்த தாடகை வதம் பற்றிய நிகழ்ச்சி

இவ்வாறு சங்க அகப்பாடலுக்குரிய உள்ளுறை உத்தியைக் கம்பம் தன் காப்பியக் கட்டமைப்பில் செறிவாகவும் பொருத்தமாகவும் அமைத்துக் கற்பனை வளத்தினால் தோற்றுவிக்கப்பட்ட இலக்கியச் சுவைமிக்க உள்ளுறைகள் காப்பியம் முழுமையும் பரவலாக இடம்பெற்றிருப்பதைக் காணுகின்றோம்

நன்றி: ஆய்வுக்கோவை.