30/01/2011

வழிபாட்டுப் பாடல்களில் வேளாண்மை - து. வெள்ளைச்சாமி

சிவகாசி வட்டாரப் பகுதியில் சேகரிக்கப்பட்ட பாடல்களில் முளைப்பாரி பாட்டு, கும்மிப்பாட்டு என்ற இரண்டு வகைப்பாடல்களே வழிபாட்டுப் பாடல்களில் வேளாண்மை என்னும் இந்த ஆய்வில் ஆய்வுப் பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளன. தெய்வ வணக்கத்திற்குக் காரணம் அச்சமும், அன்பும், கலைக்களஞ்சியம் கூறுவது போன்று, ஆதிகுடிகள் இயற்கையில் காணும் தீ, இடி, பெருமழை, பூகம்பம் போன்ற அச்சந்தரும் நிகழ்ச்சிகளுக்கும் நோய்களுக்கும் காரணம் உலகின்கண் உலவும் கணக்கற்ற ஆவிகளே என்றும் நம்பியிருந்தனர். அந்த ஆவிகளின் சினத்தைத் தணிக்க அவற்றை தேவதைகளாக கொண்டு வழிபட்டனர்.

நாட்டுப்புறத் தெய்வங்கள்:

நாட்டுப்புறத் தெய்வங்களை ஊர்த்தெய்வங்கள், இனத் தெய்வங்கள், குலத் தெய்வங்கள், மாலைத் தெய்வங்கள், சமாதித் தெய்வங்கள், துணைத் தெய்வங்கள் என ஆறு வகையாகப் பகுக்கிறார் டாக்டர் துளசி இராமசாமி. கும்மிப்பாட்டிலும் முளைப்பாரிப் பாட்டிலும் ஊர்த்தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன.

வேளாண்மை:

பொதுவாகத் தொல்காப்பியம் காலந்தொடங்கி சங்க காலம், சங்க மருவிய காலம் முடிய வேளாண்மை என்னுஞ் சொல் பெரும்பான்மை உதவி என்ற பொருளிலும் சிறுபான்மை உழவுத் தொழில் என்ற பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. இலக்கண நூலால் வேளாண் என்னுஞ் சொல்லை வேள் ஆள் எனப் பிரிப்பர். வேள் என்னும் வேர்ச் சொல்லுக்கு மண் என்ற ஒரு பொருள் உண்டு. வேளாண் மண்ணை ஆளுதல் என்ற பொருளைத் தரும்.

முளைப்பாரிப் பாட்டு:

நாட்டுப்புறங்களில் முளைப்பாரி அம்மனுக்காக வளர்க்கப்படுகிறது. வேளாண்மை சிறப்பாக இருக்க வேண்டியும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்வு அமைய வேண்டியும் முளைப்பாரி வளர்க்கப்படுகிறது. திருவிழாவிற்காக முளைப்பாரி வளர்க்கப்படுகிறது. எந்தெந்த மாதங்களில் திருவிழா நடைபெறும் என்ற செய்தியும், முளைப்பாரி வளர்க்கத் தேவையானவைகள் எவை என்ற விளக்கமும் இந்த ஆய்வில் கண்டறியப்பட உள்ளது. முளைப்பாரி வளர்க்கத் தேவையான பொருள்கள் தயாரிப்பதிலிருந்து முளைப்பாரி போட்டு முளைத்து கோவிலுக்குக் கொண்டு வரும் வரை மக்கள் ஒவ்வொருவரும் மனக் கலக்கத்துடன் இருப்பர். அதனுடைய வளத்தினை வைத்து அவ்வருடத்தில் முளைப்பாரி போட்ட குடும்பத்தினரது வாழ்வு அமையும் என்பதையும் இவ்வகைப் பாடல்கள் உணர்த்துகின்றன. முளைப்பாரி பாடல்கள் இறைவணக்கத்துடன் தொடங்கும். முளைப்பாரி உயரமாக வளரச் செய்ய பல வேளாண் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை கீழ்வரும் பாடல் உணர்த்துகிறது.

பாடல்கள்:

முளைப்பாரி பாடல்கள் கணபதியை வணங்கித் தொடங்கப்படுகின்றன. பின்பு பிற தெய்வங்களும் வணங்கப்படுகின்றன.

''முந்தி முந்தி விநாயகரே

முருக சரஸ்வதியே

கந்தனுக்கு முன் பிறந்த

கணபதியே காப்பு''

என்ற பாடல் இதனைப் புலப்படுத்துகின்றது.

முளைப்பாரி வளர்ப்பதற்கு நல்ல நாள் பார்த்து நாள் உறுதி செய்யப்படுகிறது. முளைப்பாரி போடுவதற்கு பெண்கள் எல்லாம் நல்ல தண்­ர் எடுத்து வந்து முளைப்பாரி போடுதல் மரபாக உள்ளது.

''நல்ல தண்­ர் எடுத்து வந்து

நாங்கள் முளை போட்டோம்

சிவ பாலரெல்லாம் போட்டோம்

போட்ட முளை பழுதில்லாமல்

பொங்கி நல்லா வளர''

என்ற பாடலால் இதனை அறிய முடிகிறது.

''சீர்துவரை நேர் நிறைத்து

புறுமணிப்பயர் உளுந்து கலந்து

நல்ல தினுசு அவரை நிறைத்து

வெள்ளை சிவப்பு பச்சை கலந்து

நவ தானியம் ஒன்பதும் கலந்து

போட்ட முளை பழுதில்லாமல்

பொங்கி நல்லா வளர''

பயிர் உயரமாக வளரச் செய்ய வைக்கோல் சோளத்தட்டை, கம்பத்தட்டை, பருத்திக்குச்சி போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்ற செய்தியினை

''சோளத்தட்ட ரெண்டெடுத்து

சோக சோகயாக உருச்சுவச்சு

கம்பந்தட்ட ரெண்டெடுத்து

கணுகணுவா ஒடுச்சுவச்சு

பருத்தி குச்சி ரெண்டெடுத்து

பளபளன்னு பாவி வச்சு''

என்ற வரிகளால் அறிந்து கொள்ள முடிகிறது.

மேற்கண்ட பாடல்கள் மூலம் முளைப்பாவுதலால் தெய்வ வழிபாட்டோடு இணைத்து வளமைச் சடங்குகள் வேளாண்மைச் செய்முறைகள் பராமரிக்கப்பட்டு வந்துள்ள தன்மை விளங்குகிறது.

கும்மிப்பாட்டு:

பெண்கள் வட்டமாக நின்று கும்மி கொட்டிப்பாடும் பாடல் கும்மிப்பாட்டு எனப்படும். இப்பாடல்கள் கோவில்களில் நடைபெறும் விழாக்களில் பாடப்பெறும். கும்மிப்பாட்டு வழிபாட்டு பாடலாக விளங்குகிறது. காளியம்மன், மாரியம்மன் போன்ற தெய்வங்களை வேண்டி கேட்டதைக் கொடுக்கச் சிறப்பித்துப் பாடப்படும் பாடல்கள் உள்ளன.

மழை வரம் வேண்டிப் பாடுவதாக கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.

''ஆத்துக்குள்ள சப்பரமோ

ஆயிரங்கள் தீபம் - அது

அழகரோட மகிமை தேர் நடக்க வேணுமின்னா

மழ பெய்யனுந் தாயே''

மேலும்

''ஊசி போல மின்னல் மின்னி

உத்திரம் போல் கால் இறங்கி

பாசி போல் மின்னல் மின்னி

பத்துத்துளி துளித்து வருகுதாம் காவேரி''

என்ற பாடலும் மழை வளம் வேண்டும் பாடலாக அமைந்துள்ளது.

கீழ்வரும் பாடலில் கரும்பு விளைந்து அதை எடுத்துக் கொண்டு போக வியாபாரி கப்பலில் வருவான் என்பதை அறியமுடிகிறது.

ஒரு கட்டுக் கரும்புகளாம்

எல்லாம் ஆயிரமாம்

அந்தக் கட்டுக் கரும்ப

கப்பலும் கொள்ளாம

கப்பல் செட்டி மகன் கந்தையா

இப்ப வருவாரோ

பல்வகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிடும் கும்மிப்பாடல்களும் உள்ளன.

பூசணிப் பூவ போல நம்ம காளியம்மா

புருவ கட்டழக பாருங்கம்மா

இஞ்சி நட்டத பாருங்கம்மா

இஞ்சிச்செடி படர்ந்தத பாருங்கம்மா

மஞ்ச நட்டத பாருங்கம்மா

மஞ்ச செடி படர்ந்தத பாருங்கம்மா

மஞ்ச செடி போல நம்ம காளியம்மாளுக்கு

மங்களம் சொல்லி பாடுங்கம்மா

என்ற பாடல் பல பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதைச் சுட்டுகிறது எனலாம்.

முடிவுரை:

இன்றைய அறிவியல் வேளாண்மைத் தொழில் நுட்பங்களில் உழவர்கள் அனுபவத்தின் வாயிலாகக் கண்டு தேர்ந்து செயல்படுத்தி வந்துள்ள தன்மை வெளிப்பட்டுள்ளது. முளைப்பாவுதலால் தெய்வ வழிபாட்டோடு இணைந்து வளமைச் சடங்குகள் வேளாண்மைச் செய்முறைகள் பராமரிக்கப்பட்டு வந்துள்ள தன்மை விளங்குகிறது.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

 

கருத்துகள் இல்லை: