30/01/2011

சங்கப் பாடல்களில் அவலம் - சு. பாலு

இருளும் பகலும் போல இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை. வாழ்வில் இன்பமும் துன்பமும் காணப்பட்டாலும் அவற்றுள் அவலம் (அழுகை) ஒன்றே வாழ்வில் அனைத்திலும் மேலோங்கி நிற்கிறது. மெய்ப்பாடு எட்டனுள் அவலம் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. நகைச்சுவைக்கு அடுத்ததாகத் தொல்காப்பியர் அழுகைச் சுவையை வைத்ததன் நோக்கம் அதற்கு நேர்மாறானது என்பதால் ஆகும். தமிழக மக்கள் தமது அக, புற வாழ்க்கையில் அவலம் மீதூரக் கண்டார்கள். அவர்களது அவல வாழ்க்கையை இன்பம் தோன்ற, சுவை தோன்றப் புலவர்கள் பலர் பாடல்களாகப் பாடினார்கள். அப்படிப்பட்ட சில அவலச்சுவை சங்கப் பாடல்களை, தொல்காப்பியர் கூறும் அழுகைச் சுவையுடன் ஒப்பிட்டுக் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியர்:

''இழிவே இழவே அசைவே வறுமையென

விளிவில் கொள்கை அழுகை நான்கே'' (தொல்.மெய்.5)

என அழுகையை முறையே இழிவு, இழவு, அசைவு, வறுமை என நான்கு நிலைகளில் அழுகை பிறக்கும் எனக் கூறுகிறார். இதற்கு,

இழிவு என்பது பிறர் தன்னை எளியன் ஆக்குதலால் பிறப்பது. இழவு என்பது உயிரானும் பொருளானும் ஒன்றை இழத்தலால் பிறக்கும். அசைவு என்பது தளர்ச்சி அது தன்னிலைத் திரிதலால் பிறக்கும். வறுமை என்பது நல்குரவு. என இளம்பூரணர் விளக்கம் தருகிறார்.

இழிவு:

பிறரால் இழிந்துரைக்கப்படும் சிறுமை தொழில் காரணமாக மனம் வேதனைப்பட்டு அழும் அழுகை இழிவால் ஏற்படும் அழுகை (அவலம்) ஆகும்.

''விண்தோய் வரைபந்து எறிந்த அயாவீட

தண்தாழ் அருவி அரமகளிர் ஆடுபவவே

பெண்டிர் நிலம் வெளவி தன்சாரல் தாதுஉண்ணும்

வண்டின் துறப்பான் மலை'' (கலி. 40.22-25)

தலைவன் ஒழுக்கக் கேட்டினைக் கூறும் தலைவி தோழியிடம், மலை நாடான நம் தலைவன் அம்மலையில் வண்டுகள் எவ்வாறு மலருக்கு மலர் தாவி தேன் உண்ணுகிறதோ, அதனைப் போன்றே பல பெண்களுடன் இன்பம் நுகர்கின்றான் எனத் தலைவனை இழிவுபடுத்துவதாக இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

இழவு:

இழவு தன் சுற்றத்தாரையும், இன்பத்திற்கும் ஏதுவான பொருள்களையும் இழந்து அழும் அழுகை இழவால் ஏற்படும் அவலம் ஆகும். இதனை இரண்டு வகைப்படுத்திக் கூறலாம். 1. ஒருவர் தான் ஒன்று இழந்தமைக்காக அழுதல், 2. பிறர் ஒன்று இழந்தமைக் கண்டு தான் அழுதல் என வகைப்படுத்தலாம். ''கதிர்மூக்கு ஆரல் கீழ்ச்சேற்று ஒளிப்பு'' எனத் தொடங்கும் புறநானூற்றில் வரும்

''அழுதல் ஆனாக் கண்ணன்

மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே'' (புறம். 249.13-14)

எனும் வரிகளில் கணவனை இழந்த மனைவியானவள், இறந்த கணவனுக்கு உணவு படைக்கும் வகையில் புழுதிப் படிந்த சிறிய முறம் அளவாகிய இடத்தைத் தூய்மையாகச் செய்ய தண்­ர் கொண்டு சாணத்தைக் கரைத்து மெழுகினாள் என்பதால் இது தான் ஒன்று இழந்தமைக்காக வரும் அவலம் ஆகும்.

வெற்றி தோல்வி இன்றி இரு படைகளின் வீரர்கள் அனைவரும் அஞ்சாது போரிட்டு வீழ்ந்தனர். இந்த அழிவைக் கண்ட பரணர் போரின் விளைவு ஆக்கமன்று அழிவே என்பதை,

''எனைப்பல் யானையும் அம்பொரு துளங்கி

விளைக்கும் வினையின்றிப் படை ஒழிந்தனவே

விற்றபுகழ் மாண்ட புரவி எல்லாம்

மறத்தகை மைந்தரொடு ஆண்டுபட் டனவே

தேர்தர வந்த சான்றோர்..................

...........................................

காமர் கிடக்கை அவர் அகன்தலை நாடே'' (புறம் 63.1-11)

என்று கூறுகின்றார். இது பிறர் ஒன்று இழந்தமைக் கண்டு தான் வருந்துதல் ஆகும்.

அசைவு:

உடலாலும் உள்ளத்தாலும் தளர்ச்சியுற்று வருந்துதல். அது தன்னிலைத் திரிதல் என்பதாகும். அதாவது பண்டைய உயர்வு முதலியன கெட்டுத் தாழ்வுறும் நிலை.

''அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்

எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்

வென்று எறிமுரவின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையுமே இலமே'' (புறம்:112.1-5)

சென்ற மாதத்தின் முழுநிலவு தினத்தில் நாங்கள் எம் தந்தையை உடையவராக இருந்தோம். எங்கள் மலையையும் பிறர் கைப்பற்றவில்லை. இந்த மாதம் இம் முழுநிலவு நாளில் வெற்றி கொண்டு முழங்கும் முரசுடைய வேந்தர்கள் எங்கள் மலையையும் கைப்பற்றிக் கொண்டார்கள். நாங்கள் எம் தந்தையையும் இழந்தவரானோம் என்று பண்டைய உயர்வு முதலியன கெட்டு தளர்ச்சியுற்றுப் பாடுகின்றனர் பாரிமகளிர். இது அசைவு என்ற நிலையினால் வரும் அவலம் ஆகும்.

வறுமை:

வறுமை என்பது நல்குரவு. அதாவது பொருள் இன்மையாலும், இன்னும் பிறவற்றாலும் வறுமையுற்றுக் காணப்படுதல் எனும் நான்காவது நிலை அவலம் ஆகும். கண் விழிக்காத நாய்க் குட்டிகள் தாயின் காம்பில் பால் குடிக்க பசியில் ஆற்றாத குட்டி ஈன்ற நாய் குரைக்கின்றது. பழுதடைந்த குடிசையில் இசைவாணர் கூட்டம் மயங்கிக் கிடக்கின்றது. இல்லத் தலைவியானவள் குப்பையில் கிடந்த வேளைச்செடியின் கொழுந்துகளைக் கிள்ளி வேக வைக்கின்றாள். வீட்டில் உப்பும் இல்லை. இருந்த போதிலும் தனது வறுமையை அடுத்தவர் அறியாத வகையில் கதவடைத்துத் தன் சுற்றத்தினருக்கு வெந்த உப்பில்லாத கீரையை கொடுக்கின்றாள் என்பது,

''ஓல்பசி உழந்த ஒருங்குநண் மருங்கில்

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைந்து

இரும்போர் ஒக்கலோடு ஒருங்குடன் மிசையும்

அழி பசி வருத்தம்'' (சிறுபாண்.135-140)

என்று சிறுபாணாற்றுப் பாடல் வரிகளில் கூறப்பெற்றுள்ளது.

பண்டைத் தமிழரது புற வாழ்க்கையில் மக்களைக் காப்பாற்றிய வள்ளல்கள் மன்னர்கள் மறைந்த போதும், அவர்கள் போரில் மடிந்த போதும் வீரரது தம் கைம்மை வாழ்வை உதறித் தம் கணவருடன் உயிர் நீத்த போதும் அவலச்சுவை இருப்பதைக் காணமுடிகிறது. எனவே தொல்காப்பியர் குறிப்பிடும் இழிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய நான்கு நிலைகளில் அவலம் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இன்றுள்ள நமது வாழ்க்கையிலும் நாள்தோறும் அவலச் செய்திகளைத் தான் கேட்டு வருகின்றோம். செய்தித் தாள்களில் அதிகப்படியான செய்திகள் அவலம் பற்றியனதாகவே இருப்பதைக் காணமுடிகிறது. கொலை, கொள்ளை, தற்கொலை, படைக்களன்கள், படைப்பலம், போட்டி, பொறாமை இவற்றின் மூலம் அவலம் இன்றைய வாழ்வில் தலைதூக்கி இருப்பதை அறியமுடிகிறது. நாடுகள் மக்கள் வாழ்வியலைப் பெருக்குவதற்கு பதிலாக படைக்களன்களைப் பெருக்குகின்றன. இதுவே இன்றைய வாழ்வில் உயிரை விஞ்சிய அவலமாகும்.

நன்றி: கட்டுரை மாலை

 

கருத்துகள் இல்லை: