30/01/2011

இலக்கியக் கல்வியின் தகவமைப்பு - கு. தயாநிதி

பொருள் மைய வாழ்க்கையே தொழிற்புரட்சிக்குப் பின் பொருள்முதல் வாதமாக மாற்றுரு கொண்டது. அதுவும் இன்று பொருள் முனைப்பு வாழ்க்கையாக மாற்றம் கொண்டு வருகிறது. மனித வாழ்க்கையில் எந்த கோணத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் அது மற்ற எல்லாக் கோணங்களையும் பாதிப்பது நியதி. இதன் அடிப்படையிலேயே கல்வியும் மாற்றம் கொண்டுள்ளது. மனித உளத்தை வலிமைப்படுத்திய கல்வி இன்று வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான தகுதிப்பொருளாக மாறிவருகிறது. இத்தகைய சூழலில் மொழி / இலக்கியக் கல்வி இயங்க இயலுமா? அல்லது இயங்க வைக்க இயலுமா? என்ற வினாக்களுக்கு விடை காண முயல்வது நோக்கு.

கல்வி - இலக்கியக் கல்வி:-

அறியாமை பேரின்பம் என்றாலும் அறிந்து கொள்ளுதல் மனிதனின் இயற்கைப் பண்பாகிறது. கல்வி என்பது தன்னை உணர்ந்து கொண்டு தான் சார்ந்துள்ள சுற்றுச்சூழலை அறிந்துகொண்டு அதனைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்வதும் தாம் அதற்குப் பயன்படுவதுமாக ஏற்படும் வினைகளுக்கு வினையூக்கியாகச் செயல்படுவதே கல்வி. கல்வி எதனையும் நல்கக் கூடிய பொருளல்ல.

பண்பு, அறிவு, வேலை, சமுதாய நலன் என்ற நான்கும் கல்விக்குரிய கால்கள் என்று அறிஞர் க.ப.அறவாணன் (1988:243) குறிப்பிடுவர். பண்பு, அறிவு, சமுதாய நலன் என்ற மூன்றும் வடிவமைக்கப்படுகிற ஒன்று. வேலை கொடுக்கப்படுகின்ற ஒன்று. மாற்றி அமைப்பது கொடுக்கும் பொருளாக மாறும்பொழுது அதன் தரம் மாறுபடுவதை உணரமுடிகிறது.

ஆரம்பநிலையில் ஆழ்ந்த அறிவு நுட்பத்தையும், அகன்ற அறிவுத்திறனையும் ஒருங்கிணைந்த வகையில் கல்வி அமைந்தது. இன்று அவசர தேவையின் அடிப்படையில் அறிவு நுட்பதை மட்டும் முதன்மைப்படுத்திய துறைகள் பல பெருகிவிட்டன. அனைத்துத் துறைகளும் முன்பு ஒருங்கிணைந்ததாகவே இருந்தன. ஆகையால் அது இலக்கியக் கல்வியாக இருந்திருக்க வேண்டும்.

ஏனைய துறை ஆசிரியர்களைக் காட்டிலும் தமிழ்த் துறையினர் பரந்த அறிவுடையவராகவும், பல்வேறு துறை அறிவுடையவர்களாகவும் இருப்பர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுவதை உணர முடிகிறது. ஆசிரிய / மாணவர் உறவிலும் இலக்கியத்தில் மாறுபட்டுக் காணப்பெறுகிறது.

கல்விக்கு மொழியே அடிப்படை, மொழி வழியாகவே பிற பாடங்களைக் கற்றோம். எனவே மொழிக் கல்வி என்பது மொழி பற்றிய கல்வி (இலக்கணம், இலக்கியக் கல்வி) ஆகவும், மொழிவழிக் கல்வி என்பது பிற பாடங்களை வரலாறு, சமூகவியல், அறிவியல் போன்றவைகளைக் கற்பதைக் குறிக்கும் என்று செ.வை. சண்முகம் குறிப்பிடுவர் (1996; xii).

மொழிவழிக் கல்வி என்பது பிற்காலத்திய கருத்து ஒரு மொழி பயன்பாட்டில் இருக்கும்பொழுது, பிறமொழி வருகையும், செல்வாக்கும் பெற்ற பின்பே மொழிவழிக்கல்வி என்று கருத்துத் தோன்றும். ஆக, ஆங்கில மொழி வருகைக்கு முன்னால் அனைத்தும் இலக்கியக் கல்வியாகவே செயல்பட்டு இருத்தல் வேண்டும். இத்தகைய சூழலில் மொழிவழிக் கல்வி அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்ட நிலையிலும் அதனை நடைமுறைபடுத்துவதற்கான சாத்திய கூறுகள் மிக அரிது.

இதனாலேயே, மொழிப் பயன்பாட்டிலும், இலக்கியத்திலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பொழுதும் அதற்கான இலக்கணங்கள் தோன்றவில்லை. மொழிவழிக் கல்வி வினா குறியதானதால் இலக்கணத் தேவையும் சுருங்கிவிட்டன. பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களில் இலக்கியக் கல்வி மட்டுமே காணமுடிகிறது. பள்ளி இறுதி, மேனிலை அரசு தேர்வுகளில் முதல், இரண்டாம் தாள் என்று இருந்த தமிழ்த்தேர்வு, ஒரு தாளாக மாற்றப்பட்டுவிட்டது.

தேவையை மையப்படுத்தியே சமுதாயம் இயங்கும். ஒரு துறையில் மேலோட்டமான அறிவு போதும் என்ற நிலையில் இலக்கியப் பாடம் ஒரு ஒட்டாத பாடமாகவே மாணவர்களால் எண்ணப்படுகிறது. துணைப் பாடத்தைப்போன்று எண்ணுகின்றனர் (Non detailed study).

தகவமைப்பு:-

இட, கால சூழலுக்கு ஏற்ப, உலகில் உயிரினம் முதலான அனைத்துப் பொருட்களும் வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் பெறும். எதிர்பாராத நிலையில் சூழல் மாறும்பொழுது பொருட்களும் மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாத பொருளால் வாழ இயலாது. மற்றைய பொருட்களின் வாழ்க்கைக்கு எதிராகப் போட்டியிட முடியாது. இதனாலேயே ''வல்லது வாழும்'' என்ற கருத்துத் தோன்றியது.

இலக்கியக் கல்வியின் தகவமைப்பு:-

மேற்கண்டவாறு இலக்கியக் கல்வியும் மாணவ சமுதாயத்தின் தேவையை உணர்ந்து தகவமைத்துக் கொண்டால் / கொள்ளச் செய்தால் அதன் வாழ்க்கை எல்லையைச் சற்று நீட்சி பெறச் செய்ய இயலும். மொழியும், இலக்கியமும் காலந்தோறும் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் மாறி வந்துள்ளது யாவரும் அறிந்தது. தற்போது கூட ''அறிவியல் தமிழாக'' மாற்றம் பெறச் செய்வதற்கான முயற்சிகள் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அங்ஙனம் இருக்க இக்கட்டுரை குறிப்பிடும் தகவமைப்பு சற்று மாறுபட்டது. இலக்கியத்தில் இன்றைய மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் துறைகளாகக் கருதப்படுகிற துறைக்கருத்துக்கள் விரவி கிடக்கின்றன.

இதனை மையப்படுத்தி நூல்களும் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை மாணவர்களின் கற்பித்தல் கோணத்தில் மாற்றி அமைக்க முயற்சி செய்தோமெனில் இலக்கியக் கல்வியை இயங்க வைக்க இயலும். எடுத்துக்காட்டாகத் தொடர்பியல் தொடர்பான நுட்பங்கள், திறன்கள், இலக்கியத்தில் உள்ளன. அப்பகுதிகள் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றாலும், ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் இல்லை. தற்கால இலக்கியம், சங்க இலக்கியம் என்று இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நிலையிலேயே உள்ளது. அதனைக் கற்பிக்கும் ஆசிரியரும் செய்யுளுக்கான தெளிவுரை, இலக்கிய நயம் பாராட்டல் என்ற வட்டத்தோடு நிறுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு இன்றி அவ்வித பகுதிகளை ஒருங்கிணைத்துப் பாடத்திட்டத்தில் கொடுத்தால் தொடர்பியல் மாணவர்களுக்கு வலுசேர்ப்பனவாக அமையும். இதற்குத் தக பாடத்திட்டங்கள் அமைவதோடு கட்டுரையும், நூல்களும் எழுதப்படுவது அவசியமாகிறது.

பிறதுறைகளோடு இயைபுடைய கருத்துக்கள்:-

இயைபுடைய துறைகள் பல இருப்பினும் ஒரு சில மட்டும் இங்குச் சுட்டப்படுகின்றன.

1. மருத்துவக் கருத்துக்கள் சித்தர் இலக்கியத்திலும், அறநூல்களிலும் இருப்பது அனைவரும் அறிந்தது.

2. சங்க இலக்கியக் கூற்றுகள் தொடர்பியல் கருத்துகளே. மேலும் தொடர்பியல் காட்சி, தொடர்பியல் புதிய துறையாகும் இலக்கிய வருணனைகள் எல்லாம் காட்சி தொடர்பியலுக்குரியன.

3. முதல், கரு, உரிப்பொருள் கருத்து உயிர்நுட்பவியல் / சுற்றுச்சூழல் துறைக்குப் பொருத்தமானது.

4. தொல்காப்பிய நூற்பாக்கள் சில மரபியல் / பரிணாம வளர்ச்சிக்குரியன.

5. வணிக ஆட்சியலுக்கு மையமான ''பொருளாதாரம்'' இலக்கியத்தில் முழுமையாக உள்ளன. மேலும் மேலாண்மைக்குப் பொருத்தமான, ஆட்சிமை, ஆளுமை பண்புகள் கம்பராமாயணம் முதலான காப்பியங்களில் உள்ளன.

6. தாவர, உயிரினச் செய்திகளும் அவையவை துறைக்குரியன.

முடிவுரை:-

இலக்கியக் கல்வி இந்த கோணத்தில் மாற்றி அமைக்கப்படுமேயானால் அதனை இயங்க வைக்க இயலும். கருத்திற்கும், நடைமுறைக்கும், இடைவெளி இருப்பது இயல்பு. அப்படியே இதற்குமான சிக்கல், இருக்கலாம். அறிந்திட இருப்பினும் இப்படியொரு கோணம் உள்ளது என்பதைப் பார்வைக்குக் கொண்டு வருவதே இக்கட்டுரையின் இலக்கு.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

கருத்துகள் இல்லை: