30/01/2011

நாட்டுப்புற மக்கள் பண்பாட்டில் காலப்பகுப்புமுறை - சு. மாயழகு

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இயற்கை மாற்றத்தினால் தோன்றுகின்ற காலத்தைப் பருவகாலம் எனலாம். உலகம் முழுவதும் பருவகாலம் பொதுவானதாக உணரப்பட்டுள்ளது. ஆனால் இடத்திற்கு இடம் பருவகாலம் வேறுபடும். நாட்டுப்புற மக்கள் பண்பாட்டில் காலப்பகுப்பு முறை என்பது தொழிலை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்படுகிறது என்பதை கள ஆய்வின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. குறிப்பிட்ட பருவங்களில் முறை தவறாமல் வீசும் காற்றை ''பருவக்காற்று'' என்றும் பருவம் தவறாமல் பெய்யும் மழையை ''பருவமழை'' என்றும் அழைப்பது நம் மரபு. இவை இரண்டு பருவநிலை மாறும் போதும், முறையற்றுப்போகும் போதும், புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கையின் சீற்றத்திற்கு நாம் ஆளாகின்றோம். ஆகவே நாம் அமைதியாக வாழப் பருவம் சீராக அமைய வேண்டும்.

வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய காலப்பகுப்பு முறைகள் குடும்பத்துக்கு குடும்பம், வட்டாரத்திற்கு வட்டாரம், சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டுக் காணப்படும். இப்படிப்பட்டக் காலப்பகுப்பு முறைகள் குறித்துக் கள ஆய்வுத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு விளக்கும் முயற்சி இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது. கோள்களின் அசைவுகளைக் கொண்டும் அறிவியற் கருவிகளைக் கொண்டும் காலத்தைக் கணிப்பதற்கு முன்னர் இயற்கையில் ஏற்படும் பருவ மாற்றத்தைக் கொண்டே காலத்தைக் கணித்தனர். காலத்திற்கு முறையான வரலாறு தோன்றுமுன்னர் காலம் பருவகாலங்களால் தான் கணிக்கப்பட்டு வந்தது என்பர். நாட்டுப்புற மக்கள் பண்பாட்டு மரபில் குறிப்பாக தமிழ்ச் சிந்தனை மரபில் பண்பாட்டுக் காலம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது.

இயற்கைக் காலம்:

இயற்கைக் காலம் என்பது இயல்பாக உருவாவது. இப்படி உருவாகும் காலத்திலிருந்து பண்பாட்டுக் காலம் மனிதனால் உருவாக்கப்படுகிறது. மனிதன் ஒரு பண்பாட்டுக்காலம் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மனிதன் தொழில் முறை தேவை காரணமாக பண்பாட்டுக் காலம் உருவாக்கப்பட்டது. எப்போது மனிதன் தன்னுடைய உணவு தேவைக்காக ஒரு தொழிலை மேற்கொண்டானோ அப்போது அவன் இயற்கைக் காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. இயற்கைக் காலத்தை இரவுக்காலம், பகற்காலம், வெயிற்காலம், மழைக்காலம், குளிர்காலம், வசந்தகாலம், இவையெல்லாம் ஒரு வகையில் இயற்கையின் காலங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் இதன் தன்மை மாறிக்கொண்டே இருக்கும். இயற்கைக் கால மாற்றத்தைச் சுற்றுப்புறச் சூழல் ஏற்படும் மாற்றத்தின் மூலம் உணர்ந்துகொள்கிறான். ஆனால் இந்த இயற்கைக் காலத்தைப் பண்பாட்டுக் காலமாகவும் இயற்கைக் காலமாகவும் மாற்றுகிறார்கள். எப்போது மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறானோ அப்போது அவன் இயற்கையைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பிறகு இந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்டுதான் இயற்கை, பண்பாட்டுக் காலத்தை, செயற்கைக் காலமாக கருத்துக்கட்டமைப்பில் மாற்றுகிறான். இரவு - பகல் என்ற காலத்தை மனிதன் கருத்துக்களால் வேறொரு நிலையில் கட்டமைக்கிறான். இது ஒரு வகையில் தொழில் செய்வதற்கு ஏற்றகாலம், இரவு ஓய்வு காலம், அடிப்படையில் காலத்தை வகைப்படுத்தினர் என்றால் தொழிலுக்குச் செல்ல இயலாத காலம், தொழிலுக்கு உரிய காலம் (உழைப்புக்காலம், உழைப்பில்லா காலம்) என்று கூறலாம்.

காலம் என்பதை ஒரு பரந்த நிலையில் காணும்போது வேட்டைச் சமூகம், கால்நடை வளர்ப்புச் சமூகம் என்று மானிடவியலாளரின் பிரிவு அடிப்படையில் அணுக முடியும். இவற்றில் நாடோடிகளாக ஓடிச்சென்ற காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் தங்கி வேலை செய்ய ஆரம்பித்தவுடன் காலம் ஒரு குறிப்பிட்ட பரப்பில் பிரிக்கப்படுகிறது. நிலம், காற்று, நீர், வெயில் எல்லாவற்றையும் சரியாக உணர்ந்து செய்யும் தொழில், தாவரத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்தையும், உற்று நோக்க வேண்டிய காலம் இருந்தது. தளிர்க்கின்ற, பூக்கின்ற, பிஞ்சு, காய், கனி சில குறிப்பிட்ட பயிர்களை (அவரை, பீர்க்கை, பாகற்காய்) குறிப்பிட்ட காலத்தில் தான் பயிர்செய்வார்கள். ஆனால் இது இயற்கைக் காலம், இது ஒரு வட்ட வடிவமான காலம் என்று கூறலாம். விதைப்புக்காலம், முளைப்புக் காலம், காய்ப்புக் காலம், அறுவடைக்காலம் என்று தாவரங்களின் வளர்ச்சி நிலையை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வகைப்படுத்துகிறார்கள். அதே போல் ஏர் பூட்டுவதை வைத்து காலத்தை உருவாக்கினார்கள். (ஆடிப்பட்டம் தேடிவிதை) அதே போல் சடங்கின் மூலமாகவும் காலத்தை உருவாக்குகிறார்கள்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சடங்கு செய்யப்படுகிறது. தைமாதம் - அறுவடைக்காலம். அதே காலம் இயற்கை நிகழ்வை வைத்தும் காலத்தை வகைப்படுத்துகிறார்கள் (எ.கா.) சூரியன் நகர்வு, சந்திரன் நகர்வு, இதே போல் நம்முடைய தமிழ் மாதங்கள் சந்திரன் நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட காலம். ஆங்கில மாதங்கள் சூரியன் நகர்வை அடிப்படையாகக் கொண்ட காலம், தாவர வளர்ச்சியையும், இயற்கை நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டும் காலம் மனிதனால் வகைப்படுத்தப்படுகின்றது.

தனி மனித காலம்:

மனிதனுடைய உடலுக்கு வெளியே உள்ள புற உலகம், சிறு பிரபஞ்சம், பெருபிரபஞ்சம் இவற்றிற்கு மிக நெருக்கமான உறவு உண்டு. இயற்கையில் தட்பவெப்பம் ஏற்பட்டால் சிறு பிரபஞ்சமான உடலைப் பாதிக்கும், உணர்வையும் பாதிக்கும். (எ.கா.) வெயில் காலம் என்ற ஒன்று எப்போதுமே மனிதனுடைய மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும், எரிச்சல் ஊட்டும். இப்படி இன்ப உணர்வு, துன்ப உணர்வு ஆகிய இவற்றிற்கும் புற உணர்வுக்கும் தொடர்பு உண்டு.

குளிர்காலம் - உணர்வை ஊட்டக்கூடியது

வசந்தகாலம் - மகிழ்ச்சி தரக்கூடியது

கூதிர் காலம் - காதல் உணர்வை தரக்கூடியது

கோடைக்காலம் - போருக்கு ஏற்ற காலம்

இப்படி மனிதர்களின் உணர்வுக்கு ஏற்பகூடகாலம் கட்டமைக்கப்படுகிறது. மனிதனுடைய உடல் உணர்வு சார்ந்தது. உணர்வு புற உலகு சார்ந்தது. புற உலகில் மாற்றம் ஏற்பட்டால் உடல் பாதித்து உணர்வும் பாதிக்கும். மனித வாழ்க்கைக்கும் கோள்கள் நகர்கின்ற கணத்துக்கும் அல்லது குரு பெயர்ச்சி நடக்கும் காலம், சனிப்பெயர்ச்சி நடக்கும் காலம், புதன் இடம் பெயரும் காலம், ஜாதக காலம், இப்படி ஒவ்வொரு காலத்தையும், மனித வாழ்வுடன் தொடர்புபடுத்தினர். ஒரு மனிதன் பிறக்கும் போது எந்த கோள் எந்த இடத்தில் இருக்கிறது. பிறகு கால மாற்றத்திற்கு ஏற்ப இடம் பெயரக்கூடிய நிலை; இப்படி வாழ்க்கைக் காலத்தை கணிக்கக் கூடிய காலத்தில் பார்த்தால் பண்பாட்டுக் காலம் எப்படி உருவானது என்பது புரியும் (எ.கா) நல்லநேரம், கெட்ட நேரம் மனிதனால் உருவாக்கப்படும் இந்தக் காலத்தை மேட்டுக்குடி மக்கள் வேறொரு நிலையில் உருவாக்குகிறார்கள். இப்படி திசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குவது ஆனால் நாட்டுப்புற மக்களிடம் நம்பிக்கை சார்ந்த காலம் அவர்களால் உருவாக்கப்படுகிறது. தங்களுடைய உடல் உறுப்புகளின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் காலம் உருவாக்கப்படுகிறது. நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பரந்து விரிந்த உலகத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் அடக்குவது, நேரத்தை இப்படி நாட்களாக, வாரமாக, மாதமாக, வருடமாக, வினாடியாக வரையறுத்தனர். இதே போல் கிராம மக்கள் நட்சத்திரத்தைக் கொண்டும் வேளாண்மை மக்கள், மீன் பிடிப்பவர்கள், காடுகளில் வாழும் இனக்குழு மக்கள் ஆகியோரின் கணிப்பு தொழில் வாழ்க்கையின் நிலைமையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. இயற்கை நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மனிதன் உருவாக்குகிறான்.

குடும்பநேரம்:

பண்பாட்டுச் சூழலுக்கேற்ப குடும்பக் காலப் பகுப்பு வேறுபடும். மீன்பிடித்தொழிலையும், அதனோடு தொடர்புடைய வாழ்க்கை முறைகளையும் உடைய குடும்ப உறுப்பினர்கள் அமைத்துக்கொள்ளும் காலப்பகுப்பிற்கும் வேளாண்மைத் தொழிலையும் அதனோடு தொடர்புடைய வாழ்க்கை முறைகளையும் உடைய குடும்ப உறுப்பினர்கள் அமைத்துக்கொள்ளும் காலப்பகுப்பிற்கும் இடையே நிறைய வேறுபாடு காணப்படுகின்றன. ''வயலுக்குப்போற நேரமும்'' ''கடலுக்குப் போற நேரமும்'' ஒன்றாக இருப்பதில்லை. அறுவடைக்காலமும், மீன் வரத்துக்காலமும் வேறு வேறானவை, உழவுக்காலம், விதைப்புக்காலம், களைஎடுப்புக்காலம், பலன் தரும் காலம் போன்றவற்றை மீனவ சமுதாயத்தில் காணமுடியாது. இதைப் போன்றே குடும்ப உறுப்பினர்களுள் ஆண், பெண் பாலினங்களுக்கேற்பவும், காலப் பகுப்பு முறை அமைக்கப்பட்டுள்ள முறை குறித்து விளக்கப்பட வேண்டும். பூப்புக்காலம், பேறுகாலம், மாதவிலக்குக் காலம் போன்றவை பெண்பாலுக்கு மட்டும் உரியவை, இப்படிப் பல நிலைகளில் வேறுபடுத்தி விளக்க முடியும்.

தொழில் நேரம்:

நாட்டுப்புற மக்களிடம் காணப்படும் தொழிலை மையமாக வைத்து தொழில் நேரமானது மாறுபட்டுக் காணப்படுகிறது. குறிப்பாக இக்கட்டுரையில் வேளாண்மைத்தொழில் சார்ந்த காலத்தினை அடிப்படையாகக் கொண்டு பல காலங்களை விளக்குகிறது. வேளாண்மைத் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள நாட்டுப்புற மக்களிடையே, காலம், நேரம் பற்றிய கருத்துக்கள் கூட வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

வேளாண்மைக் காலம்:

எந்த ஒரு தொழிலை மேற்கொண்டாலும் அதற்குக் காலம் அவசியம். ஒரு ஆண்டில் ஏற்படும் கால மாற்றத்தைப் பல பருவங்களாகப் பிரித்துள்ளனர். அவை உழவுக்காலம், விதைப்புக்காலம், நடுகைக் காலம், களை எடுப்புக்காலம், நீர் பாய்ச்சும் காலம், உரமிடுங்காலம், பூக்கும் காலம், காய்க்கும் காலம், அறுவடைக்காலம் என்று இவைகள் அனைத்தும் வேளாண்மைக் காலம் என்று வகைப்படுத்தி அறிந்து வைத்திருக்கிறார்கள். இவ்வாறு நாட்டுப்புறமக்கள் பண்பாட்டில் காலப்பகுப்பு முறை என்பது தனி மனிதன் குடும்பம், சமூகம், தொழில் இவைகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்.

 

கருத்துகள் இல்லை: