30/01/2011

அயலகத் தமிழ்ச் சிறுகதைகளில் சர்வதேசத்தன்மை - பெ. சுபாசு சந்திரபோசு

தமிழ்ச் சிறுகதைப் படைப்பு என்பது தற்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகளில் குடியேறியுள்ள தமிழ்ப் படைப்பாளிகளாலும் படைக்கப் பெற்று வருகின்றது. இதனால் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு சர்வதேசத் தன்மை கிடைத்துள்ளது. இக்கதைகளில் பூகோள அடிப்படையிலும், கலாச்சார மாறுதல்களுக்கிடையிலும் மனித வாழ்க்கையின் மகத்துவமும், அவலமும் எதார்த்த முறையில் கலையம்சத்தோடு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் எழுத்தாளர்களின் கதைகளில் வெளிப்படும் சர்வதேசத்தன்மை விவாதிக்கப்பட்டுள்ளது.

கதையும் பன்முகத்தன்மையும்:

இலங்கைச் சிறுகதைகளில் சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட இனக் கலவரம் மேலோங்கிக் காணப்படுகிறது. சொந்த நாட்டில் வாழ முடியாமல் புலம் பெயர்ந்து செல்வதும் அந்நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், வாழ்க்கை முறைகளும் கதைகளில் ஒரு நவீனத் தன்மையாகவும், சர்வதேச வாழ்க்கைப் புலப்பாடாகவும் வெளிப்படுகின்றன. இக்கதைகளில் பல நாடுகள் பல மொழி பேசும் மக்கள் இடம் பெறுவதால் பன்முகத் தன்மை விசாலப்பட்டுள்ளது. இப்போக்கால் தமிழ்ச் சிறுகதைகளில் பன்னாட்டுப் பின்னணியுடன் ஒரு நவீனத் தன்மையுடன் புதிய வாழ்க்கையின் அனுபவங்கள் காணப்படுகின்றன.

மு. தளயசிங்கம் எழுதிய ''இரத்தம்'' என்னும் கதை யாழ்ப்பாணத் தமிழர்களின் பாரம்பரியமான நாகரிகமாகப் பூச்சின் எதிர்முகமான கதையாக அமைந்துள்ளது.

சோமுவின் ஆச்சி வாழ்ந்த யாழ்ப்பாணக் கலாச்சாரமும், சோமு விரும்பிய கலாச்சாரமும் இனக்கலவரத்தால் மாறிப் போய்விடுகின்றன. இது இலங்கை மக்களின் பண்பாட்டுத் தளத்தில் எதிர்ப்புக் குரலையும், மாறிப் போன வாழ்க்கையயும் அடையாளப்படுத்துகிறது. கமலத்தை யாழ்ப்பாணத்தில் எட்டுப் பேர் கெடுத்த கொடூரமும் அவள் கணவனை இன வெறியர்கள் அணுஅணுவாய்க் கொன்ற நிகழ்வும் இலங்கையில் மாறிப்போன சமூக வாழ்வைக் காட்டுகின்ற. இக்கொடுமையிலிருந்து தப்பி அகதிக்கப்பலில் கமலம் கொழும்பில் பைத்தியம் மாதிரி அலைகிறாள். இக்காட்சிகள் சோமுவின் பூச்சு வாழ்க்கையை உடைத்துவிடுகின்றன.

''கமலம் என்ற ஒரு பெண்ணின் ஏன் கமலம் என்ற ஓர் இனத்தின், கமலம் என்ற ஒரு கலாச்சாரத்தின், கமலம் என்ற மொழியின் விதவைக் கோலம்'' அவனுக்குள் மேல்பூச்சுக் கலாச்சாரம், தப்பும் மனப்பான்மை ஆகியவற்றிலிருந்து விலகித் தமிழ் இனம் எதிர்கொள்ள வேண்டிய எதிர் முகாமை உணர்ந்து மாற்றமடைகிறான்.

மாத்தளை சோமு எழுதிய ''சொந்த சோதரர்கள்'' என்ற கதையில் உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நாடும் ஏதாவது பிரச்சனையில் சிக்கி தவிக்கும்போது மக்கள் எதிர்கொள்ளும் அனுபவமும், புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நெருக்கடியும் வெளிப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்த குமார் கொழும்பு வந்து யாழ்ப்பாணப் பெண் சாந்தாவைத் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்படுகிறான்.

''விமான நிலையத்தில் பிரியாவிடைக் காட்சி அம்மா அழுதாள். அப்பா அழவில்லை.... அடக்கிக் கொண்டு இருந்தார். குமாரின் கண்களில் கண்­ர்..... அப்பாவுக்கு மகனைப் பிரிவதில் கவலைதான். ஆனால் இராணுவத்திடம் மாட்டி எங்கிருக்கிறான் என்று மகனைத் தேடுவதைவிடக் கண்காணாத தேசத்தில் உயிரோடு இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருப்பது எவ்வளவோ மேல்'' என்று கருதுவது இலங்கையின் நிகழ்கால வாழ்வைக் காட்டுகிறது. அதனால் முன்பின் தெரியாத நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கையோடும் பலரும் பயணப்படுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் குமாருக்கு உதவ வந்த இன்னொரு தமிழர் ராசண்ணன் கொழும்பிலிருந்து வரும் அகதிகளுக்குப் புனித வின்சென்ட் பால் சமூக அமைப்பு வீட்டுப் பொருள்களை வழங்கி ஆதரிக்கும் அறக்கட்டளை. இங்கு இலவசமாகப் பெற்ற பொருள்களை ராசண்ணன் அறுநூறு டாலருக்கு விற்று ஏமாற்றுகிறான். ஆனால் குமார் ராசண்ணன் செய்த உதவியை மனைவி சாந்தாவிடம் சொல்லிப் புகழ்ந்து பேசுகிறான். அந்நிய தேசத்தில் சொந்தச் சோதரர்களை ஏமாற்றும் மனிதர்களின் அடையாளமாக ராசண்ணன் படைக்கப்பட்டுள்ளான்.

அயலக வாழ்க்கையும் இனபேதமும்:

''அக்காவிற்கு அன்பளிப்பு'' என்ற கதையில் யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்த சகோதரிகளான கமலாவும் விமலாவும் எதிர்கொள்ளும் வாழ்க்கை முறைகளால் ஏற்படும் பிரச்சனைகள் பேசப்பட்டுள்ளன. விமலா படிக்கின்ற காலத்திலேயே விடுதலை இயக்கங்களில் ஈடுபடுகிறாள். நாட்டைவிட்டு ஓடுவதில் விமலாவுக்கு உடன்பாடில்லை. கமலா ஜெர்மனிக்குச் சென்று அங்கு குமார் என்பவரைப் பதிவுத்திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகின்றாள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இயற்கையான வாழ்க்கையையும், ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் செயற்கையான இயந்திர வாழ்க்கையையும் ஒப்பிட்டுக் கமலா மனம் வருந்துகின்றாள். ''ஜெர்மனியில் மனிதர்கள் மனிதாபிமானம் இல்லாத பிறவிகளாகவே எனக்குத்தெரிகிறார்கள். அடுத்த வீட்டு அண்ணா முன்னர் அடிக்கடி சொல்லுவானே ''முதலாளித்துவம் மனிதர்களை யந்திரமாக்கிவிடுகிறது'' என்று, அதை ஜெர்மனியில் நாள்தோறும் பார்த்து, வாழ்ந்து அலுத்துவிட்டது. எல்லோரும் அமைதியின்றி ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். இதற்குப் பெண்களும் விதி விலக்கல்ல. பெண்கள் உழைப்பதனால் ஓரளவு விடுதலை உணர்வு பெற்றவர்களாக உள்ளனர். அதுமட்டுமல்ல கணவன் மனைவி இருவரும் உழைத்தால் தான் குடும்பம் நடத்தமுடியும்'' என்று ஜெர்மானிய வாழ்க்கையின் விரக்தியைக் கமலா வெளிப்படுத்துகின்றாள்.

ஜெர்மனி மக்களின் வாழ்க்கை முறைகளோடும், கலாச்சாரத்தோடும் தமிழர்களால் ஒன்றி வாழ முடியாது. அவர்களும் தமிழர்களோடு நெருங்கிப் பழக விரும்புவதில்லை. இதனால் அங்கு வாழும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமகனாக ''யாழ்ப்பாண நெருக்கடிக்கு இது பரவாயில்லை'' என்னும் இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்ற உணர்வோடும் வாழ்ந்து வருகின்றனர். ஜெர்மனியில் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கு அரசு தாராளமாக உதவுகிறது. ஆனால் ஜெர்மன் பெண்கள் குழந்தையைப் பெற்று வளர்க்க அஞ்சுகிறார்கள். இதனால் அவர்களின் மக்கள் தொகையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ''அடுத்த குழந்தை எப்போது பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள்'' எனக் கேள்வி கேட்டுப் பல நிறுவனங்கள் வேலைக்குச் சேர்க்கின்றனர். பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுமுறை, ஊதியம், ஓய்வு ஆகியன வழங்குவது வீண் செலவு என்று தனியார் நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால் சில பெண்கள் கர்பப்பையை நீக்கிய சான்றிதழைக் காட்டி ''இனிமேல் குழந்தைகள் பெறமாட்டோம்'' எனக் கூறும் போக்கு அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் இந்தியாவைப் போல் ஆண் குழந்தை, பெண் குழந்தை போன்ற வேறுபாடு இல்லை. இத்தகவல்களையும், உணர்வுகளையும் கமலா தன்னுடைய தங்கை விமலாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள். அத்துடன் கமலா விமான நிலையத்தில் வாங்கிய சிமிக்கியைத் தங்கைக்கு அனுப்பி வைக்கிறாள். அத்துடன் விமலாவின் நினைவாக ஏதேனும் ஒரு சிமிக்கியைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றாள். விமலாவிடமிருந்து வந்த ''அக்காவிற்கு அன்புடன் விமலா'' என எழுதப்பட்டிருந்த கடிதத்தைக் கமலா ஆவலோடு பிரித்துப் பார்க்கின்றாள். எதிர்பார்த்தது போல சிமிக்கியை அனுப்பவில்லை. ஆனால் அதில் ஒரு பிடி செம்மண் இருந்தது. இவ்வாறு விமலா தன் நாட்டின் மீதும், இனத்தின் மீதும் கொண்டிருந்த பற்றின் அடையாளமாகக் கதை முடிகிறது. இக்கதை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் கொழும்பிலும், ஜெர்மனியிலும் வாழும் சமூகச் சூழலை எடுத்துக்காட்டுகிறது. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள இனக் கலவரத்தால் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் தாய்நாட்டை விட்டு அந்நிய நாடுகளில் தனித்தனியாக வாழ்ந்து கொண்டு வரும் சர்வதேசத்தன்மையை இக்கதை காட்டுகிறது.

''அவன் ஒரு இனவாதி'' என்ற கதையில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உலகில் நடைபெறும் இனவெறியை, இனத்தாக்குதலைக் கதைப்போக்கில் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனில் குடியேறியவர் மைதிலி. இவள் மூன்று ஆண் குழந்தைகளோடு அங்கு ஒரு புனரமைப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். இக்கதையில் நைஜ“ரியர்கள், பங்களாதேஷ் பெண், வெள்ளையன் ஆகியோரைச் சந்திப்பதும், அவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நிகழ்த்தும் காதல்கள், சோகங்கள், இனவாதக் கோஷங்கள் எல்லாவற்றையும் மைதிலி கேட்கின்றாள். ஒரு நாள் வயதான பங்களாதேஷ் பெண்ணின் முகத்தில் ஒரு மொட்டை வெள்ளையன் காறித் துப்பிவிட்டு ஓடி விடுகிறான். இக்காட்சியைக் கண்ட மைதிலி பிறந்த ஊரில் இனக்கொலைகளுக்கு அஞ்சி, பிழைப்பதற்கு வந்த லண்டனிலும் இனவெறி இருப்பதைக் கண்டு பெருமூச்சு விடுகிறாள். இரண்டாவது மகன் வேலைக்குச் செல்லும் அம்மாவிடம் இனவாதிகள் இங்கு மோசமாக நடந்து கொள்வதால் பாதுகாப்பாக வேலைக்குச் சென்று வருமாறு கூறுகின்றான். இனக்கலவரம் இங்கிலாந்திலும் குழந்தைகளைப் பாதித்துள்ளது என்பதை இவ்வுரையாடல் தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் இனத்தாக்குதல்கள் பல்வேறு வகையாக நடக்கிறது. ஓர் ஆண்டுக்கு ஏழாயிரத்துக்கு மேற்பட்ட இனத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அதில் ஐம்பது விதமான தாக்குதல்கள் லண்டனில் நடைபெறுகின்றன. இவற்றில் தாக்கப்படுபவர்கள் ஆசிய மக்களான இந்தியர், பாகிஸ்தானியர், இலங்கையர் ஆவர். ''ஹ’ட்லர் எப்போதோ இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் உலகமெங்கும் ஹ’ட்லர்கள் உருவாகி விட்டார்கள் போலும். சிறுபான்மையினர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். இன்று கிழக்கு லண்டனில் இனவாதிகள் கொடுமை செய்கிறார்கள்'' என்று மைதிலி தனக்குள் கருதுகிறாள். கிழக்கு லண்டனில் இனவாதிகளால் மூன்று குழந்தைகளின் தந்தை மேர்ஸாவைக் கொலை செய்த காட்சியைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அந்த அப்பாவி தந்தை ஒரு காரணமும் இல்லாமல் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிருடன் பயங்கரமான குளிர்நீரில் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.

மதிப்பீடு:

இலங்கை, சிங்கப்பூர் அயலகத் தமிழ்ச் சிறுகதைகள் யாவும் பொழுதுபோக்கு நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் இனத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை மையமிட்டுள்ள படைப்புகள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பைப் பின்புலமாகக் கொண்ட இச்சர்வதேசக் கதைகளில் அயலக வாழ்க்கை முறைகள் எதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ன. தமிழ் இன அடையாளத்தை மீட்டெடுக்கும் நோக்கு இக்கதைகளில் மேலோங்கிக் காணப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள் அங்கு நிலவி வரும் போர்ப்பிரகடனம், இனப்படுகொலை ஆகியவற்றின் காரணமாக அயல்நாடுகளில் குடியேற்றம் பெறுகின்றனர். அந்நாடுகளில் அவர்களின் வாழ்க்கையை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதோடு தமிழர்கள் அத்தேசத்தாரோடு சமமாக மதிக்கப்படுவதில்லை. மாறாக இனவெறியர்களால் மீண்டும் தாக்கப்படுகின்றனர். நாடோடிகளாக அலையும் தமிழர்களின் வாழ்வு எப்போது வளம் பெறும்? சொந்த மண்ணில் நிம்மதியாக வாழும் சூழல் எப்போது உருவாகும்? என்ற ஏக்கமும் துக்கமும் இலங்கைச் சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. சிங்கப்பூரில் மூன்று வர்க்கத் தமிழர்கள் வாழ்கிறார்கள். மூன்றாம் வர்க்கத்தினர் தமிழ் உணர்வோடும் பற்றோடும் இன வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்கள். முதலாம் வர்க்கத்தினர் அந்நிய மோகத்தில் தமிழ் இன அடையாளத்தைத் தொலைத்துவிட்டுச் சுகபோக வாழ்க்கைக்காக அயல் நாடுகளுக்குப் பயணப்படுபவர்கள். சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைச் சிங்கப்பூர் கதைகள் பிரதிபலிக்கின்றன.

தமிழர்கள் அயல் நாடுகளில் குடியேற்றம் பெற்றும் தமிழ் இன அடையாளத்துடன் வாழ்கின்றனர், அதற்காகப் போராடுகின்றனர் என்பதை இக்கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் நாம் நம் அடையாளத்தைத் தமிழ்நாட்டில் நிலைநாட்டுகின்றோமா?

நன்றி: ஆய்வுக்கோவை.

 

கருத்துகள் இல்லை: