30/01/2011

தொன்மக் கதைகளில் நங்கைகள் - தே. நாகலெட்சுமி

தொன்மக் கதைகள் பல கன்னியர்களைப் பற்றிப் பேசினாலும் அக்கன்னியர்களில் சிறந்து விளங்குபவர்களைப் பஞ்சகன்னியர்களில் அடக்குவார்கள். பஞ்சகன்னியர்களை ஒருசாரார் மேனகை, சாவித்திரி, அருந்ததி, அனுசூயை, சுநீதி என்றும் மற்றொரு சாரார் அகல்யை, மண்டோதரி, சீதை, தாரை, திரௌபதி என்றும் வகைப்படுத்துவார்கள். இப்பாகுபாடுகள் ஒவ்வோர் அடிப்படையில் அமைந்தன எனக் கொள்ளலாம். முதல்வகைப் பஞ்சகன்னியர்களின் சாவித்திரி, அருந்ததி, அனுசூயை என்ற மூவரைப் பற்றிய கதைகள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.

சாவித்திரி:

சாவித்திரி, பாரத கண்டத்தில் மத்திரா நாட்டு மன்னன் அஸ்வபதிக்கும் மாளவிக்கும் பிறந்த குழந்தை ஆகும். இக்குழந்தையைப் பெறுவதற்கு அவர்கள் 18 ஆண்டுகள் சாவித்திரி என்ற தெய்வத்தை நோக்கித் தவமிருந்தார்கள். அத்தெய்வத்தின் அருளால் பிறந்ததால் தங்கள் குழந்தைக்குச் சாவித்திரி என்ற பெயரிட்டு வளர்த்தனர்.

திருமண வயது அடைந்தவுடன் சாவித்திரி நாடு கடத்தப்பட்ட தியூமத்சேனனின் மகன் சத்தியவான் மீது காதல்கொண்டு அவனை மணக்க முற்பட்டாள். நாரதர் சத்தியவான் ஓர் ஆண்டில் இறந்து விடுவான் என்பதையும் பொருட்படுத்தாமல் அவனை மணந்து அவனது பெற்றோரோடும் வனவாசம் செய்து வாழ்ந்து வந்தாள். சத்தியவான் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு சாவித்திரி கௌரி விரதம் இருந்து கணவன் உயிரைக் காப்பாற்ற கடுந்தவம் செய்தாள்.

சத்தியவானுக்கு விதிக்கப்பட்ட நாளில் அவன் ஹோமத்திற்கு விறகு எடுத்து வரத் தன் மனைவி சாவித்திரியோடு சென்றான். அவன் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்பொழுது நோவடைந்து மனைவி சாவித்திரியின் மடியில் உயிர்விட்டான். அப்பொழுது அவனது ஆவியை யமன் நெருங்கி வந்து பற்றிச் சென்றான். இதனைக் கண்ணுற்ற சாவித்திரி யமனைப் பின்தொடர்ந்து சென்றாள். யமன் அவளிடம் கணவனது ஆவியைத் தவிர வேறு வேண்டுகோளைக் கேட்கும்படி கூற, அவளும் யமனிடம் தன் மாமன் முதலியோர்க்குக் கண்ணும் நாடும் கிடைக்க வேண்டிப் பெற்றாள். சிறிது தூரம் சென்றபின் கணவனின் ஆவியைக் கேட்டாள். யமன் அவள் தந்தைக்கு 100 புத்திரர்கள் கிடைக்க வரம் கொடுத்தான். இதிலும் நிறைவு பெறாத சாவித்திரி யமன் தன் நகரின் அருகில் செல்ல முற்பட்ட பொழுது சாவித்திரி தனது பதிவிரதா சக்தியால் அவனைப் போகவிடாமல் தடுத்து அவனிடம் கணவனுக்கு உயிர்ப்பிச்சைக் கேட்டாள். யமன் அவளது பதிவிரதா சக்தியின் மகிமை அறிந்து கொண்டான். அவள் தன் நரக லோகத்திற்கு வந்தால் அவளது சக்தியால் நரக லோகத்தில் உள்ளவர்கள் நீங்கிவிடுவர் என்று அஞ்சித் சத்தியவானை உயிர்ப்பித்தான். இதனால் உலகில் உள்ள பெண்மணிகள் சாவித்திரியைப் போன்று மனைவியாக அமைந்தால் கணவனுக்கு ஏற்படும் இன்னல்களை நீக்கிப் பல்வளம் பெற்று வாழ்நாளைக் கூட்டமுடியும் என்பதை அறியலாம்.

அருந்ததி:

கௌவுதம முனிவரின் மகளாகிய அருந்ததி வசிட்டரின் மனைவியாகிய சக்திமுனிவர் முதலான நூறு குழந்தைகளைப் பெற்ற அருந்ததியைத் தமிழ் இலக்கியங்கள் ''வடமீன்'' எனக் குறிப்பிடுகின்றன. இவள் கற்புக்கு எடுத்துக்காட்டாக அமையும் பெண்மணி ஆகும்.

தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் தவத்தால் செருக்குக் கொண்டார்கள். அதனால் சிவபெருமான் பாலவேடம் தரித்து அவர்கள் இயல்பை அறிய தாருகவனம் சென்று இறைவனைப் புகழ்ந்தார். செருக்குக் கொண்ட முனிவர்கள் தங்கள் கருமமே பயன்தரும் என்றும் தெய்வம் தேவையில்லை என்றும் அவர்கள் மனைவியர்கள் கற்பில் சிறந்தவர்கள் என்றும் அவரை இகழ்ந்தார்கள். அவர்கள் செருக்கினை அடக்க சிவன் உருவம் மாறி சென்றபொழுது முனிவர்களின் தேவியர்கள் தங்கள் கணவர்களை மறந்து அவரை மனத்தால் தழுவி 48,000 முனிக் குழந்தைகளைப் பெற்றுக் கற்பழித்தார்கள். ஆனால் வசிட்டரின் மனைவியாகிய அருந்ததி மட்டும் நிலைகுலையாமல் பதி விரதையாக இருந்தாள். சிவனார்கூட அவளது பதிவிரதத் தன்மைக்குத் தோற்றுப் போனார்.

ஒருநாள் அருந்ததி அர்க்கிய பாத்திரத்தில் நீர் கொண்டு வரச் செல்லும் பொழுது சூரியன், இந்திரன், அக்னி ஆகிய மூவரும் வேதியர்கள் உருக்கொண்டு அவளைத் தடுத்தார்கள். அப்பொழுது அவள் தனது கற்பின் திறத்தால் தன்னைத் தடுத்தவர்கள் தேவர்கள் என அறிந்து கொண்டாள். அவர்கள் அர்க்கிய பாத்திரத்தைத் தாங்களே நீர் நிறைத்து தருவதாகக் கூற அவளும் அதற்கு இசைந்தாள். ஆனால் அவ்வேதியர்கள் மூவரும் பாத்திரத்தின் கால் பங்காக நிறைத்த பொழுது பாத்திரத்தில் முக்கால் பங்குதான் நீர் நிரம்பியது. அவள் தன் கற்பின் பலத்தால் எஞ்சிய கால்பகுதியை நிறைத்தாள்.

இதனை அபிதான சிந்தாமணி ப. 95-ல்

இரகசிய ஸ்தானமும் இதர புருஷ

சம்பாஷணையுங் கிடைக்கா வெல்லை

ஸ்திரீகள் பதிவிரதைகள் ஆதலின் காக்க

என்று கூறியவுடன் பாத்திரம் முழுவதும் நீர் நிரம்பியதை உணர்த்துகின்றது. அருந்ததி சுவாகாவால் அனுக்ரகம் பெற்றாள். மேற்கூறிய சான்றுகளால் அருந்ததியை உலக மக்கள் கற்பின் திறத்தைப் பின்பற்ற முற்பட்டார்கள். இத்தொன்மக் கதை இன்றும் நம்பப்பட்டுத் திருமணக் காலத்தில் மணமகன் கற்பின் இலட்சியமாக அருந்ததியைத் தனது மனைவிக்குக் காட்டுதல் மரபாக இருந்து வருகின்றது. கற்பிற்கு இலட்சியமாக அருந்ததி விளங்கியதைத் தமிழ் இலக்கியங்களும் உணர்த்துகின்றன.

அருந்ததி யினைய கற்பின் (ஐங்குறுநூறு - 332)

வடமீன் போற்றொழுதேத்த வயங்கிய கற்பினள் (கலித்தொகை - 2:21)

இவை தவிர புறம். 122-ஆம் பாடலிலும், சிலம்பு 27 காதையிலும், பெரும்பாணாற்றுப்படையிலும் இவளது கற்புப் போற்றப்படுகிறது.

அருந்ததி உரைசால் பத்தினி ஆகி வானின் வடக்குத் திசையில் விண்மீன் வடிவம் பெற்றுப் பிறர் பார்க்கும் படியாக இன்றும் நிலவுகிறாள். மணமகள் அருந்ததியை வணங்கினால் தன் கணவன் அன்புடன் பிற பெண்களை விரும்பமாட்டான், செல்வந்தனாகவும் இருப்பான் என்ற எண்ணம் இன்று உலவி வருகின்றது. இதனால திருமணக் காலத்தில் மணமகள் அம்மி மிதித்து அருந்ததியைப் பார்த்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அனுசூயை:

தக்கன் மகளாகிய அனுசூயை அத்திரி முனிவரின் தேவியாகிய தண்டகவனத்து. அருகிலுள்ள வனத்தில் வாழ்ந்து வந்தாள். அத்திரி அனுசூயை தம்பதியார் வாழ்ந்த ஆசிரமத்தில் இராமன். இலக்குமணன், சீதை ஆகிய மூவரும் வந்து தங்கினார்கள். இம்மூவரும் அத்திரி முனிவரைக் கண்டு வணங்கியவுடன் அவர் தேவர்களே நேரில் வந்து காட்சி தந்ததாக உளம் மகிழ்ந்து பேரிலா உவகை கொண்டார். இதனை,

குமரர்நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ

அமரர் யாவரொடும் எவ்உலகும் வந்தது அலவோ?

எமரின் யார்தவம் முயன்றார்கள் என்று உருகினன் (கம்பர், ஆரண்ய காண்டம், பா.3)

அத்திரி முனிவர் தன் தவத்தின் பயனாக இராம இலக்குமணர் சீதை வந்தார்கள் என எண்ணினார். இம்மூவரும் ஒரு நாள் இரவு தங்கி மறுநாள் விடைபெற்றுச் செல்லும் பொழுது கற்பின் செல்வியாகிய அனுசூயை சீதைக்கு ஆபரணம், ஆடை, சந்தனம் முதலியவற்றைக் கொடுத்து அணியச் செய்து இவை துணைசெய்யும் எனத் தனது சக்தியைச் சீதைக்குக் கொடுத்தாள். அசோகவனத்தில் சீதை மனங்கலங்காமல் இருப்பதற்கு அனுசூயை கொடுத்த பொருட்களே துணைபுரிந்தன. அனுசூயையும் தன் கற்பின் வலிமையால் சீதைக்கு வர இருக்கும் துன்பங்களை அறிந்தவள் என அறியமுடிகிறது.

அனுசூயையின் கற்பின் திண்மையால் நாரதர் கொடுத்த இரும்புதுண்டை கடலையானது. மும்மூர்த்திகளைக் குழந்தையாக ஆக்கச் செய்து பாலூட்டியது, பின் அவர்களின் முந்தைய உருவத்தை அடையச் செய்தது. அம்மூர்த்தியின் அருளால் துர்வாசர், தத்தாத்திரேயன், சோமர் என்ற மூன்று குழந்தைகளை அடைய முடிந்தது.

சாவித்திரி, அருந்ததி, அனுசூயை ஆகிய அனைவரும் பூண்டு ஒழுகிய அவர்களது குணம், சேவை, உள்ளம், அன்பு, ஆத்மதிருப்தி, பக்தி ஆகிய எல்லாம் அவர்களது கற்பிற்கு மெருகு ஊட்டுவதாக அமைந்துள்ளது. அதனால்தான் உலகில் வாழும் பெண்களும், பிறகும் அவர்களை வணங்கிப் பயன்பெறுகிறார்கள். சுருங்கக் கூறின் பெண்களின் வாழ்விற்கு இவர்கள் வாழ்க்கை முன்னோடியாக அமைந்துள்ளது எனலாம்.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

கருத்துகள் இல்லை: