மணிமேகலையில் நிலையாமை - மு. கமலா

மணிமேகலைக் காப்பியம் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல். இந்நூலில் நிலையாமைக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவற்றைச் சாத்தனார் பாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்தும் திறனை விளக்குவது இக்கட்டுரை:

நிலையாமை - விளக்கம்:

தொலகாப்பியர் காஞ்சி என்பதற்கு நிலையாமை என்று கூறுவதை,

''பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.புறத் 23)

என்ற நூற்பாவின் மூலம் உணரலாம்.

அறம், பொருள், இன்பம் ஆகிய பொருட்பகுதியானும் அவற்றுள் பகுதியாகிய உயிரும், யாக்கையும், செல்வமும், இளமையும் முதலியவற்றானும் நிலைப்பேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியை உடையது காஞ்சி என்று விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்..

மதுரைக்காஞ்சி நிலையாமையை உணர்த்தும் திணைப்பெயராக வந்துள்ளது என்று தெளிவுறுத்துகிறார். நாச்சினார்க்கினியர்

வள்ளுவப் பெருந்தகை நிலையாமை என்னும் ஓர் அதிகாரமே படைத்திருக்கின்றார். அவ்வதிகாரத்தில்,

''நில்லாத வற்றை நிலையின் என்றுணரும்

புல்லறி வாண்மை கடை'' (குறள் 331)

என்று வாழ்க்கையில் இழிந்தநிலை சுட்டப்படுகின்றது.

மணிமேகலையில் நிலையாமைக் கருத்துக்கள்:

நிலையாமை ஒன்றே நிலையான உண்மை என்று கௌதம புத்தர் கூறுகிறார். ''தோற்றம் உண்டேல் மரணம் உண்டு'' என்கிறார் சுந்தரர். இக்கருத்துக்களுக்கெல்லாம் அரண் செய்யும் வகையில் மணிமேகலையில் சாத்தனார் நிலையாமை கருத்துக்களைப் பாத்திரங்கள் வழி விளக்குகின்றார்.

உதயகுமரன், மணிமேகலையின் திறம் குறித்து சுதமதியிடம் வினவுகின்றான். அப்போது அவள் யாக்கையின் நிலையாமையைக் கூறுகின்றாள்,

''யாக்கை நிலையாமை

உதயகுமரனிடம் சுதமதி,

வினையின் வந்தது வினைக்குவிளை வாயது

புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது

மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை

பற்றின் பற்றிடங் குற்றங் கொள்கலம்

புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை

அவலக் கவலை கையா றழுங்கல்

தவலா உள்ளந் தன்பா லுடையது

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து'' (மணி 4 113-130)

என்று கூறுகின்றாள்.

நாகர்களின் தலைவனுக்கு சாதுவன் கூறும் அறுவுரைகளிலும் நிலையாமைக் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. அவன் பின்வருமாறு,

''பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்

அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்'' (மணி 16 86-89)

என்பன. இதே கருத்து திருக்குறளிலும் இடம்பெறுகிறது. அவை

''உறங்குவது போலுந் சாக்காடுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு'' (குறள் - 339)

என்ற குறள் சுட்டுகின்றது. எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது. அதனால் அறம் செய்ய வேண்டும் என்பது அறிஞர்களின் தெளிந்த கருத்தாகும்.

இளமை, யாக்கை, செல்வநிலையாமை:

விசாகை தன மாமன்மகள் தருமதத்தனுக்குக் கூறும் அறிவுரையில்,

''இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா

வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறமே விழுத்துணை யாவது''

என உணர்த்துகின்றாள். இதன் வழியாகத் தாமை செய்ய வலியுறுத்துவதையும் அறியலாம். உலகில் வாழும் மக்கள் அனைவரும் பட்டினியால் வருந்திச் சாகாமல் உணவளிக்க வேண்டும். இவ்வாறு உணவளிப்பவர்கள் தாம் உயிர் கொடுத்தவர் என்பதை,

''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' (மணி 11 95-96)

எனும் இவ்வரிகள் கூறுகின்றன.

இளமை, யாக்கை நிலையாமை:

உதயகுமரன், மணிமேகலையிடம் இடங்கழிகாமம் அடங்காதவன் என்பதால், அவளிடம் தவம் மேற்கொண்டது எதற்கு என்று காரணம் வினவுகின்றான். அதற்கு அவள் பதிலிறுக்கும்போது,

''பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும்

இறத்தலுமுடைய திடும்பைக் கொள்கலம்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்'' (மணி 18 136-139)

என்று கூறுகின்றாள். இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது எனப் பட்டினத்தார்.

''முடிசூடும் நாடாளும் மன்னரும் அவர் அடிதழிஇ வாழ்வாரும்

இறுதியில் வேறுபாடின்றி இறந்து பிடிசாம்பலாய்ப்போவது உறுதி'' (திருத்தில்லை. பா.எ.7)

என மொழிகின்றார்.

மனிதன், இளமை நிலைபேறுடையது என்று எண்ணுகின்றான். அவன் அறச்செயல்களைப் புரிவதற்கே இளமை என்று உணரவேண்டும். எனவே, மணிமேகலை, உதயகுரனிடம் ஒரு நரை மூதாட்டியைக் காட்டி, இளமையின் நிலையாமையை, என இருபத்தெட்டு அடிகளில் விளக்குகின்றான்.

''தணணநல் வண்ணந்திரிந்து வேறாகி

வெண்மணலாகி கூந்தல் காணாய்

பிறைநுதல் வண்ணங் காணாயோ நீ

நரைமையிற் றிரை தோற்றகையின் நாயது

விறல் விற் புருவம் இவையுங் காணாய்''

இறப்பது உறுதி:

இவ்வுலகில் பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது உறுதி என்பதை,

''தவத்துறை மாக்கள், மிகப்பெருஞ்செல்வர்

ஈற்று இளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்

முதியோர் என்னான் இளையோர் என்னான்''

இவர்கள் அனைவரையும், காலம் முடிவுற்றபின் கொடுந்தொழிலையுடைய எமன் கொன்று குவிக்கின்றான். இவ்வாறு எமனால் உயிர் குடிக்கப்பட்ட உடம்புகளை,

''அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்

கழிபெரும் செல்வக் கள் ஆட்டு அயர்ந்து

மிக்க நல்லறம் விரும்பாது வாழும்

மக்களின் சிறந்த மடவார் உண்டோ'' (மணி 6 97-107)

என வரும் அடிகள் எல்லோரும் இறப்பது உறுதி இறப்பைத் தடுக்க யாராலும் இயலாது என்ற உண்மையை உணர்த்துகின்றன.

துணையாவது அறம்:

காலம் கடத்தாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில் உலக வாழ்வு நிலையற்றது. அதனால் அவரவர் முடிந்தவரையில் நல்லறம் செய்ய வேண்டும். அது சிறந்த துணையாகும் என்று சாதுவன், விசாகை, மணிமேகலை, சுதமதி கூற்றுக்கள் வழியாக ஆசிரியர் சுட்டுகின்றார்.

மணிமேகலைக் காப்பியம் காட்டும் அறநெறி:

புத்தமதக் கொள்கைகளிலே நால்வகை வாய்மையும், ஐவகைச் சீலமும் முதன்மையானவை. இவற்றை இக்காப்பியம்

''பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றோர் உறுவது அறிக''.

என்று சுட்டுகின்றது.

''கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்

உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை''

என ஐவகைச் சீலத்தையும் கூறுகின்றது. நான்கு வகை வாய்மைகளும், ஐந்து வகைச் சீலங்களும் எல்லா மதத்தவரும் ஏற்கும் அறமாகும். நல்வினைகளைப் பின்பற்றவும், தீவினைகளை விட்டொழிக்கவும் வலியுறுத்துகின்றது புத்தம்.

முடிவு:

மேற்சொல்லப்பட்ட நிலையாமைக் கருத்தின்வழி, உலகில் வாழும்வரை நல்லவைகளைக் கடைபிடித்து, அல்லவைகளை நீக்கி, அறநெறிகளைப் பின்பற்றினால் நல் உலகு அடைவது உறுதி, என்பதை மணிமேகலை வற்புறுத்துகிறது.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

0 கருத்துகள்

புதியது பழையவை