30/01/2011

வாலிவதை - ஒரு கண்ணோட்டம் - இரா. நாராயணன்

கம்ப இராமாயணத்தில் இடம்பெறும் வாலிவதை, சீதை தீ புகுதல் ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு புதிய விளக்கம் கொடுக்கும் முயற்சி இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது. இராமனுடன் எப்போதும் கூடவே இருக்கும் இலக்குவன் இராமனின் ஆளுமையைப் பாதிக்கிறான் எனற கருத்து இக்கட்டுரைக்குக் கருதுகோளாக அமைகிறது. இராமன் - இலக்குவன் இருவரின் மனம் சார்ந்த போராட்டமே இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் காரணம் என்பதை இக்கட்டுரை விளக்க முயல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் சமூக வாழ்க்கையில் பல்வேறு இக்கட்டான சூழல்களைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதன் அடிப்படையிலேயே வாழ்க்கைப் போக்குத் தீர்மானிக்கப்படுகிறது. வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஒருவன் எடுக்கும் முடிவுகள் அவன் வாழ்க்கையின் தன்மையைத் தீர்மானிக்கின்றன. இப்படி ஒருவன் முடிவுகளை எடுக்கும்போது அவன் சார்ந்திருக்கும் சமூகம், அமைப்பு, இனம், தனிநபர் முதலானவற்றின் தாக்கமும் குறுக்கீடும் நிகழ நிறைய வாய்ப்பிருக்கிறது.

''இனம் இனத்தைச் சேரும்'', ''சேர்ந்ததன் வண்ணமாகும்'' என்ற பழமொழிகள் மனிதன் சார்புநிலை கொண்டவன் என்பதை வெளிப்படுத்துகின்றன எனலாம். அவன் முடிவுகளை எடுக்கும்போது புறநிலையில் நின்று தனித்து இயங்குவதில்லை. அவன் சார்ந்திருக்கும் அகக்கூறுகளும் அவன் எடுக்கும் முடிவுகளுக்குக் காரணமாகின்றன. இதனையே, ''எவராலும் முற்றிலும் புறவயமாக எதையும் பார்க்க இயலாது. மொழி, கருத்தியல் மற்றும் தன்னிலையால் (subject) பிரதிகள் கட்டப்பட்டுள்ளது போல, மனித தன்னிலையும் கட்டப்பட்டதுதான் என்று பின்னை நவீனத்துவம் கூறுகிறது.'' எனவே, ஒருவன் எதைச் சார்ந்து இருக்கிறானோ அதன் அடிப்படையிலேயே அவனுடைய அறிவுத்தளம் இயங்கும் எனலாம்.

''மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்

கினத்துள தாகும் அறிவு''

என்பார் திருவள்ளுவர். இதனுடைய பொருளாவது, ''ஒருவனுடைய அறிவானது எப்படிச் செயல்படும் என்றால், தன்னுடைய மனத்தைக் கொண்டு தானே செயல்படுவதாகக் காட்டிக் கொள்ளும். ஆனால் உண்மையாக நோக்கும்போது அவன் சேர்ந்த இனத்தின் அடிப்படையிலேயே இயங்கும்'' என்பதாகும்.

(பரிமேலழகர் உரை: அறிவு - அவ்விசேட உணர்வு: ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின்கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உளதாம்) பரிமேலழகர் இக்குறளுக்கு விளக்கம் எழுதும்போது ''மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும், பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின்'' என்று எழுதுவார். எனவே ஒருவன் எடுக்கும் முடிவுகள் அவன் மனத்திலிருந்து அவனே செயல்படுவது போலத் தோன்றினாலும் ஆராய்ந்து பார்க்குமிடத்து அவன் சார்ந்து இருக்கும் சூழல் அடிப்படையிலேயே அவனுடைய அறிவு இயங்குவதைத் தெளியலாம். இந்த அடிப்படையில் அணுகும் போது இராமன் எடுக்கும் முக்கியமான முடிவுகள் அவன் உடன் இருந்து இயங்கும் இலக்குவனை முன்னிறுத்தியே எடுக்கப்படுகின்றன என்று சொல்வதற்கான வாய்ப்பைத் தருகிறது.

அயோத்தியை விட்டு வந்து கானகத்தில் உறையும் இராமன் - இலக்குவன் இடையே கருத்து வேறுபாடு தோன்றும் முதல் நிகழ்ச்சி மாரீசன் மானாக வந்த நிகழ்ச்சியாகும். இராவணனின் ஏவலால், மாயப்பொன்மான் வடிவம் தாங்கிச் சீதை முன் வருகிறான் மாரீசன். மானைக் கண்டு மயங்கிய சீதை இராமனிடம் தான் கண்ட மானின் தன்மையைக் கூறுகிறாள். அப்போது ராமன் மானைச் சென்று பார்க்கலாம் என்று கூறுகிறான். ஆனால் இலக்குவன் இதில் மாயம் இருக்கிறது என்ற எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறான். அதனைக் கேட்காத இராமன் மானைப் பார்க்க அழைத்துச் செல்கிறான். மானைக் கண்டவுடன் இலக்குவன்,

''ஈண்டு கண்டது கனக மானேல்....மீள்வதே மேன்மை''

''வெய்ய வல்அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த கைதவ மான்''

என்று எடுத்துரைக்கிறான். இவ்வாறாக மானைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் தொடர்கின்றன. இறுதியில் இலக்குவன், தான் சென்று மானைப் பிடித்து வருவதாகக் கூறுகிறான். அப்போது சீதை இராமனை நோக்கி ''நாயக நீயே பற்றி நல்கலை போலும்'' என்கிறாள். உடனே இராமன் தம்பியை நோக்கி,

''மான் இதுநானே பற்றி வல்லையின் வருவென் நன்றே

கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி''

என்று கூறிவிட்டு மானைப் பிடிக்கப் புறப்படுகிறான்.

மானச் துரத்திச் சென்ற இராமன் அது மாயமான் என்பதை உணர்ந்து அம்பு எய்து மானைக் கொன்றுவிடுகிறான். மானின் அலறல் குரல் கானகம் முழுவதும் கேட்கிறது. அதனைக் கேட்ட சீதை,

''ஒருபகல் பழகினும் உயிரை ஈவரால்;

பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ

வெருவலை நின்றனை; வேறுஎன்? யான்இனி

எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு''?

என்று கூறுகிறாள். உடனே இலக்குவன், ''வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ?'' என்று இராமனைத் தேடிப்புறப்படுகிறான்.

வழியில் இலக்குவனைக் கண்ட இராமன் ''நீ இங்கு எதைக்கருதி வந்தாய்?'' (நின்று உன்னி வந்த நிலை என்கொல்?) என்று வினவுகிறான். அதற்கு இலக்குவன் ''மாயக்குரல்'', ''அரக்கர் சூழ்ச்சி'' என்றெல்லாம் எடுத்துக்கூறினேன். கேளாத சீதை,

''ஏகாதுநிற்றி எனின்யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா மாகானகத்தினிடை ஓடலோடும் மனம்அஞ்சி வஞ்ச வினையேன் போகாது நிற்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா

ஆகாது இறக்கை அறன்அன்று எனக்கொடு இவண் வந்தது''

என்கிறான் பின்னர் இருவரும் சீதையிருந்த இடத்தை அடைந்தபோது அங்கே சீதையைக் காணமல் அரற்றுகின்றனர்.

இப்பகுதியானது உளவியல் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழச் செய்யும் இடமாக அமைகிறது.

அண்ணனின் ஆணையை மீறியதால் தானே சீதையை இழக்க நேர்ந்தது? என்ற வருத்தம் இலக்குவனுக்கு ஏற்படுகிறது. தான் சொன்ன காரணங்களை அண்ணன் ஏற்றுக்கொண்டானா? ''வஞ்ச வினையேன்'' என்று சீதை சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என்று அண்ணன் நம்மீது ஐயம் கொள்வானா? என்பன போன்ற எண்ணங்கள் இலக்குவன் மனதில் எழ இங்கே வாய்ப்பிருக்கிறது எனலாம்.

''வஞ்ச வினையேன்'' எனறு சீதையால் கடியப்பட்ட இலக்குவனின் மனக்கலக்கத்தைப் போக்க வேண்டிய தேவை இராமனுக்கு ஏற்படுகிறது. நான் உன்மீது எந்தவித ஐயமும் கொள்ளவில்லை. சீதையின் பிரிவிற்கு நீ காரணமில்லை; உன்மீது எனக்குத் துளியும் வருத்தம் இல்லை. உன்னை நான் உண்மையிலேயே நேசிக்கிறேன் என்பதை விளக்க வேண்டிய மனப்போராட்டம் இராமனுக்கு ஏற்படுகிறது. இதை எப்படிச் செய்வது என்ற மனப்போராட்டத்துடன் வந்து கொண்டிருக்கும் இராமனுக்கு வாலி - சுக்ரீவன் என்ற அண்ணன் - தம்பி போராட்டம் வாய்ப்பாக வந்து அமைகிறது.

சுக்ரீவன் மீது ஐயம்கொண்டு வாலி அவனைக் கொல்லக் கருதியதைக் கேள்விப்பட்ட (சவரி, சுக்ரீவன் மூலமாக) இராமன்,

''மற்று இனி உரைப்ப என்னே? வானிடை, மண்ணின், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்; உன்கிளை எனது; என்காதல் சுற்றம், உன்சுற்றம்; நீஎன் இன் உயிர்த் துணைவன்''

எனக் கூறிவிடுகிறான். இலக்குவன் மீது தான் ஐயம் கொள்ளவில்லை என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருந்த இராமனுக்கு இந்த இடம் வாய்ப்பாக வந்து அமைந்துவிடுகிறது. எடுத்த எடுப்பிலேயே அபயம் கொடுத்து விடுகிறான்.

நடந்த நிகழ்வுகளை அனுமன் தெளிவாகக் கூறியபோது இராமன்,

''உலகம் எழினோடு ஏழும்வந்து அவன் உயிருக்கு உதவி விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டி, தலைமையோடு, நின்தாரமும், உனக்குஇன்று தருவென்; புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு.''

என்று புகல்கிறான். இங்குத் ''தம்பி மீது ஐயம் கொள்ளும் அண்ணன் கொல்லப்பட வேண்டியவன்'' என்ற கருத்தை முன் வைக்கிறான் இராமன். இதன் மூலம் தான் இலக்குவன் மீது ஐயம் கொள்ளவில்லை என்ற தன் மனக்கருத்தை வெளிப்படுத்துகிறான் எனலாம். அதனாலேயே வேறு நின்று கொல்ல வேண்டிய நிலையும், வாலியின் நியாயமான வினாக்களுக்கு இராமனால் விடையளிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது எனலாம்.

இராம-இலக்குவர் மனப்போராட்டத்தின் தொடச்சியாகவே சீதை தீயில் இறங்கிய நிகழ்வைக் காணலாம். ''வஞ்ச வினையேன்'' என்று சீதையால் கடியப்பட்ட இலக்குவனின் மனவருத்தத்தைப் போக்கும் விதமாகவே இந்நிகழ்வு அமைகிறது. ''இருத்தி'' என்ற இராமனின் ஆணையை மீறுவதற்குக் காரணமான கடுஞ்சொல்லே சீதை தீயில் இறங்கக் காரணமாகிறது. இதற்கு வலிமை சேர்க்கும் வகையிலேயே இலக்குவனைக் கடிந்த சொற்களை நினைத்துச் சீதை வருந்தும் பகுதி அமைகிறது. அசோக வனத்தில்,

''என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன்

சொன்ன வார்த்தை கேட்டு, ''அறிவுஇலள்'', எனத் துறந்தானோ''

என அவள் நினைவைக் கொல்வதைக் காண முடிகிறது.

இராமன் எடுக்கும் முடிவுகள் இலக்குவனை முன்நிறுத்தியே எடுக்கப்பட்டன என்பது இங்கு விளக்கப்பட்டது. இதன் மூலம் வாலி வதைக்கு ஒரு புதிய விளக்கம் கிடைக்கிறது எனலாம். மேலை நாட்டாரின் உளவியல் கோட்பாடு அடிப்படையில் காப்பியத்தை அணுகினால் மேலும் பல விளக்கங்கள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.|

நன்றி: ஆய்வுக்கோவை.

 

கருத்துகள் இல்லை: