30/01/2011

திருவள்ளுவர் காவியத்தல் பெண்கள் - முனைவர் ஞா. ஞானசிங்காரம்

1958-ஆம் ஆண்டு பண்டிதர் அ.கிருஷ்ணசாமி நாயுடு அவர்களால் வெளியிடப்பட்ட காப்பிய நூலே திருவள்ளுவர் காவியம் திருவள்ளுவர் காவியம் சமுதாயம் மேன்மையுற வேண்டும் என்ற நோக்கம் கொண்டது சமுதாயச் சீர்திருத்தம் நாட்டுப்பற்று, உழைப்பு, உயர்வு, ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு விளங்குகிறது. காவிய ஆசிரியர், மனுதர்மம் கூறும் சாதிப்பிரிவினைகள், வேள்வி நிலை, பெண்கல்வி மறுப்பு, பெண்களுக்கு பால்யத்திருமணம், புலால் உண்ணுதல், களவி, சூது, கள்ளுண்ணல், கொலை போன்றவற்றை மறுத்துரைக்கின்றார். ஆசிரியர் தமது காவியத்தில் பல இடங்களில் தனியுடமைக் கொடுமைகளைத் துணிவுடன் எதிர்க்கிறார்.

திருவள்ளுவர் காவியத்தில் திருவள்ளுவரே காவியத் தலைவர், இந்நூலில் கல்விக் காண்டம், யாத்திரைக் காண்டம், முப்பால் காண்டம், உரிமைக்காண்டம், அமைதிக்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3995 வெண்பாக்களையும் கொண்டுள்ளது. சமுதாயத்தில் பரவிக் கிடக்கும் சீர்கேடுகள் ஒழித்து, சீரான சிறப்பான சமுதாயம் உருவாக வேண்டும் என்ற ஆசிரியரின் விருப்பமும், சாதி சமயமற்ற சமதருமச் சமுதாயம் உருவாக வேண்டுமென்ற அவரது நோக்கமும் பாடல்களில் வெளிப்படுகின்றன.

பெண்களைப் பாவப் பிறவிகளாகக் கருதப்படுவதையும், அடிமைகளாக நடத்தப்படுவதையும் திருவள்ளுவர் கண்டிக்கிறார். பெண்களின் பெருமை பற்றிப் பேசுகின்றார். வள்ளுவர் பெண்கட்கு மதிப்பளித்தார். மகளிர் பிறரால் கட்டுப்படுத்தப்படுதலின்றி உரிமையுடன் வாழ வேண்டுமென விரும்பினார். ஆயினும் இல்லத்தில் தலைமை ஆடவனுக்கே உரியது என்று எண்ணினார் என்பது பெண் வழிச்சேறல் என்னும் அதிகாரத்தினின்றும் புலனாகும்.

பெண்ணைப் பேய் என்றும், மாயை என்றும், அவளே உலகத்துன்பங்களுக்கு காரணம் என்றும் கூறுவோரை ஆசிரியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்.

''பெண் பிறவி பாவமெனில் பெண்ணினுற் தோன்றிய

மண்பிறவி ஆண்மகனும் மாபாவி - என பிறவித்

தாயைப் பழித்துரைக்கில் பூத்தாயும் தாங்குவளே?

வாயைக் கிழித்திடுவள் வந்து''

இவ்வாறு பெண் பிறவியைப் பாவமாகக் கருதுபவரைக் கண்டிக்கிறார் ஆசிரியர்.

''தற்கொண்டான் வளத்துக்காள் வாழ்க்கைத் துணை'' என்பதிலிருத்து குடும்பத் தலைவன் தேடிய பொருளைத் தக்கவகையில் செலவு செய்து அப்பொருள் இல்லத்திற்கு நற்பயனளிக்குமாறு செய்பவர் மனைவியே என உணரலாம். கூட்டுக்குடும்ப வாழ்கையாக இருப்பின் தலைவனின் தாய் பொருளைச் செலவு செய்து இல்லறத்தை நடத்தல் பொருந்தும். வள்ளுவர் மனைவியை இல்லத்தின் தலைவியாக எண்ணி கொண்டான் வளத்துக்குத் தக வாழ்பவள் ஆதல் வேண்டும் என்றார்.

''எப்பருவத்துப் பெண்ணாகயிருப்பினும், தன் விருப்பப்படி எப்போதும் எச்செயலையும், தன் வீட்டில் கூட நிறைவேற்ற உரிமை இல்லாதவள் என்றும், தந்தை அல்லது உடன் பிறந்தவன் செய்வதை ஏற்றுக்கொள்வதே பெண்களின் கடமை'' என்றும் பெண்கள் அடிமையாக வாழ்வதற்கே பிறந்ததாகவும் மநுதர்மம் கூறுகிறது. பெண்ணை அடிமைப்படுத்துவதை ஒரு பெண்ணே எதிர்த்துப் புரட்சி செய்வதாக,

''பெய்யென்று கொண்டிலர்,பேயடிமை கொண்டனர்.

கண்ணென்று கண்டிலா, கைம்லாப்போல்-எண்ணிப்

பிசைந்து பிசைந்து பிழிகின்றார்,அய்யோ!

இசைந்தே இருக்கேன் இனி''

என்ற செய்யுளின் மூலம் ஆசிரியர் நிருபிக்கின்றார்.

அகப்பாடல்களில் உண்மைக் காதல் பெண்மகளுக்கே உண்டு. ஆண்மகனுக்கு இல்லை. ஆண்மகனின் காமவெளியாட்டுக் கூறுகின்ற பரத்தைத் திணை அகப்பாட்டில் உண்டு என்று பாணன் வள்ளுவரிடம் கூறுவதாக ஆசிரியர் கூறுவது தொன்று தொட்டு ஆண்மகன் தன்னலம் மிகுந்தவனாகவும் பெண்ணை இழிவுபடுத்துபவனாகவும் இருந்திருக்கிறான் என்பதை உணாத்துகிறது.

மனைவியை வாழ்க்கைத் துணை எனக் கூறிய வள்ளுவர் ஒரு தாரமுறையையே விரும்பினார் எனக் கொள்ளல் பொருந்தும். அவர் பலதாரம் கொள்ளுதல் தவறு என எங்கும் வெளிப்படையாக கூறவில்லை எனினும் காமத்துப்பால் முழுவதும் ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழும் வாழ்க்கையைக் காட்டுகிறது. பரத்தையிற் பிரிவு காரணமாக ஊடல் நிகழ்வதாக வள்ளுவர் எங்கும் கூறவில்லை. திருக்குறளில் தலைவி,

''இல்லை தவறாக் காயினும் ஊடதல்

வல்ல தவரளிக்கு மாறு'' என்று கூறுகிறார்.

ஊடற் சுவையின் பொருட்டு தலைவனின் அன்பை மிகுதிப்படுத்தும் பொருட்டும் இல்லாத காரணத்தைக் கற்பித்துக்கொண்டே தலைவி ஊடுகிறாள்.

வையகம் இகழப் பைந்தமிழில் பரத்தைப் பிரிவு எனச் செய்யுள் இயற்றுவித்துச் செந்தமிழ்த் தாய்குக்கு ஊறு விளைவித்தவன் ஆண்மகனே என்று ஆசிரியர் கூறுவது பெண்ணை இழிவு செய்வது தமிழுக்கே இழிவு செய்வதைப் போன்றதாகும் என்னும் கருத்தை வெளிப்டுத்துகின்றது.

இல்லாள் என்பவள் மனைவி, அதாவது மனைவி என்பதும் துணைவி, துணையாள். இல்வாழ்க்கைக்கு துணையாணவள் யார்? என்பதைத் திருக்குறளில் 5வது அதிகாரமான இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளை எடுத்துக் கூறி, அடுத்த இரண்டடிகளில் துணையாள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் என்ற ஆறாவது அதிகாரத்தில் வரும் குறளை அழகாக இணைத்து எடுத்துக் கூறுகிறார். இரு குறள்களையும் கருத்து, பொருள் ஒப்புமை நோக்கி இணைத்துக் கூறியிருக்கும் அழகு நம்மை வியக்கவைக்கிறது.

''இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றில் நின்ற துணை, அதற்குச்- செல்வ

மனைத்தக்க மாண்புடையவர் ளாகித்தற் கொண்டான்

வளத்துக்காள் வாழ்க்கைத் துணை''

இல்லறத்தில் வாழ்பவளாகச் சொல்லப்படுகின்றவள். அறத்தில் இயல்புடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவாள் என்றும் இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணையாவாள் என்று குறள் கருத்துகளை தெரிவிக்கின்றார் ஆசிரியர்.

இல்லற வாழ்வு என்பது மக்கட்செல்வம் இன்றி முழுமை பெறுவது இல்லை என்பது ஆன்றோர் கொள்கை. திருமணத்தின் இன்பப் பயன் மக்கட் பேறாகும். மேலும் ஒருவனுக்கு வீடு, விலங்கு, காடு, கழனி, பொன், அணி ஆகியவை பொருளன்று மக்களே பெரும் பொருளாகும் என்றும் மக்கட்பேறொன்றே மிகுதியான அன்பினை ஊட்டிப் பின் மேலான அருளைக் கற்பித்துத் தெய்வப் பிறப்புச் செய்யும் என்றும் மக்கட்பேற்றைப் பற்றிக் கூறுகிறார். மேலும் மக்களைப் பெறுவதிலும் அடக்கம் வேண்டும் என்பதை அடக்கமுடமை அதிகாரத்தில் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவர் கருத்துப்படி இல்லத் தலைவியிடம் சிறப்பாக வேண்டப்படும் பண்பு நலம் கற்பே. கற்பெனும் திண்மையுண்டாகப் பெறின் பெண்ணிற் சிறந்ததது பிறிதில்லையென்றார். தின்மை மனவுறுதியாகு, கற்பு அவளுக்குக் கணவன் நலத்தையும் குடும்ப நலத்தையும் பேணுவதில் உறுதி நல்குகிறது. கற்புடை பெண்ணின் சிறப்பைக் கூறுங்கால் வள்ளுவர்,

''தெய்வந் தொழா அள் கொழுநற் றொழு தொழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை'' என்றார்.

கற்பிற் சிறந்த பெண் பிறதெய்வத்தைத் தொழாளாய்த் தன் கணவனையே வணங்கியெழுவாள் என வள்ளுவர் கருதினார். அன்பின் மிகுதியால் எப்பொழுதும் தன் கணவன் நினைவாகவே இருக்கும் பெண், அவன் நினைவாகவே எழுவாள் என்று வள்ளுவர் கருத்து தெரிவிக்கின்றார்.

ஆண்மகன் காமம்தீயினால் சூழ்ச்சி செய்து பெண்ணை கற்பழித்தான் என்றும், குடித்தல், அடித்தல், புகைத்தல், அழித்தல், கெடுத்தல் ஆகிய தீய பழக்கங்கள் கொண்டவன் ஆண்மகனே தவிர பெண்மகள் அல்லள். ஆணுடைய சூழ்ச்சிக்கு பெண்பலியாவதை ஆசிரியர் வெறுக்கிறார்.

இவ்வாறு பெண்ணை இழிவுபடுத்தும் ஆண்கள் அடங்கித் திருந்தி நடக்க நற்கல்வி கொடுப்பது மட்டும் போதாது. கடுமையான தண்டனைகளும் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர் வற்புறுத்துகிறார். வரைவில் மகளிர் உருவாவதற்குச் செல்வம் மிக்க ஆண்மக்களே காரணம் என்பது ஆசிரியர்

கருத்தாகும் ஆண்மகனே, காம மிகுதியால் பெண்மகளைத் தேடி வருகின்றனேயன்றி பெண்மகள் ஆணைத் தேடிக் கொள்வதில்லை.

ஆண்களே அறிஞர் விதித்ததற்கு மாறான தீயபழக்கங்களை முதலில் மேற்கொள்பவர்.

ஆண்கள் பெண்களை மறுமணம் செய்கின்ற இழிவை ஆசிரியர் கடிந்து மொழிகிறார்.

''இந்தியா தோன்றிய அன்று முதல் இன்று வரை

செந்தார் மறுமணம் சேயிழையார்-சிந்தையில்

எண்ணியதும் இல்லை. அதை எண்ணாமல் ஆண்மகன்

பண்ணினதேன் வேறுமணம் பார்த்து''

என்று வள்ளுவனார் மறம் செய்த ஆண்மகனைப் பார்த்துக் கேட்கின்றார்.

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி காவிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.காவியத்தில் உண்மை அன்புடன் கூடிய கற்பு மணம் வலியுறுத்தப்படுகிறது.

முடிவில் காவிய ஆசிரியர் பெண்களை பெரிதும் போற்றுகிறார்.பெண்களின் அருமை பெருமைகளும், பெணகளிடம் ஆசிரியர் கொண்டுள்ள மதிப்பும், அவர்களை அடிமைப்படுத்தி இழிவு படுத்தும் செயலைக் கண்டித்துரைக்கும் பாங்கும், பெண்கள் கல்வி பெற வேண்டுமென்று வலியுறுத்துவதும், இல்லறத்தில் இருந்து கொண்டு பெண்கள் கைம்மாறு கருதாமல் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டுமென்று அறிவுறுத்துவதும் அழகும் காவியத்தின் சிறப்புகளாகும்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்.

 

கருத்துகள் இல்லை: