30/01/2011

குறுந்தொகையில் உவமை நலம் - எம்.ஆர். தேவகி

முன்னுரை:-

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நான்கடி முதல் எட்டடி வரையிலான பாடல் வரிகளைக் கொண்டது. இந்நூலின் சிறப்புக் கருதி இதனை நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு சிறப்பித்துள்ளனர். குறுந்தொகைப் பாடல்களைப் பலரும் பெருமளவு மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ளமை இதன் சிறப்பிற்கு மற்றொரு சான்றாகும். குறுந்தொகை ஓர் உவமைக் களஞ்சியம் என்று கூறுமளவுக்குப் பெருமளவு உவமைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மக்களின் எண்ண நினைவுகளையும், புலவர்களின் மனநிலைகளையும் புலப்படுத்துகின்றன. இவ்வுவமைகளின் பொருள் மரபுகளை இக்கட்டுரை ஆய்கின்றது.

உவமை - வரையறை:-

புலவர்கள் தாம் கூறு விழையும் பொருளை மக்களுக்கு உணர்த்த, அவர்கள் அறிந்த ஒன்றை ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமையாகும். உவமைகள் மூலம் விளக்கப்பெறும் கருத்துக்கள் மக்கள் மனத்தில் எளிதில் விரைவாகச் சென்று சேர்வது தனிச்சிறப்பாகும். இத்தகைய உவமைகளை இடத்திற்கேற்ற வகையில் பயன்படுத்துவதில் சங்ககாலப் புலவர்கள் சிறந்து விளங்கினர் என்பதற்குக் குறுந்தொகையே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

உவமை - வகைகள்:-

உவமை தோன்றும் இடங்கள் என்ற வகையில் உவமையை நான்காக வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்.

''வினைபயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்'' (தொல். 272)

ஆனால் தண்டியலங்கார ஆசிரியர் இந்நான்கினையும் சுருக்கி பண்பு, தொழில், பயன் என்ற மூன்று வகையுள் அடக்குவார்.

''பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந்து

ஒப்புமைத் தோன்றச் செப்புவது உவமை.'' (தண்டி. 31)

உவமையின் இயற்கை:-

உள்ளதை உள்ளபடி உரைத்தல் இயல்பு உவமையாகும். கயமனார் என்னும் சங்கப்புலவர் தம் பாடலில் ஓர் இயற்கைக் காட்சியினைத் தம் கற்பனைத் திறத்தால் வளப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

''பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்

இனமீன் இரும்கழி ஒதம் மல்குதொறும்

கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்'' (குறுந். 9)

என்னும் பாடல் வரிகளில் திரண்ட காம்புகளை உடைய நெய்தல் மலரானது பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. மிகுந்த மீன்களும் காணப்படும் இக்குளத்தில் வெள்ளம் பெருகும்போதெல்லாம் பெரிய நீர்ச்சுழியில் சிக்கும் நெய்தல் மலர்கள் வெள்ளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்கின்றன. இக்காட்சியானது குளங்களிலே மூழ்கி விளையாடும் பெண்களின் கண்களைப் போன்று இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய,

''தாரைப் பூத்த தடாகத்திலே - முகத்

தாமரை தோன்ற மூழ்கிடுவாள்''

என்றப் பாடல் வரிகளும் இங்கு நினைவுகூரத்தக்கன. இயற்கைக் காட்சியினை விளக்கும் மற்றொரு பாடல் குறுந்தொகையின் முதற்பாடலாகும். தலைவியின் கூட்டத்தைப் பெற விளையும் தலைவன் தோழியை உதவுமாறு வேண்டி செங்காந்தன் மலரைத் தோழிக்குப் பரிசளிக்க முற்படுகையில் தோழியின் கூற்றாக அப்பாடல் அமைந்துள்ளது.

''செங்களம் படக்கென்று அவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பிற் செங்கோட்டு யானைக்

கழல்தொடிச் சேஎய் குன்றம்

குறுதிப் பூவின் குலைக்காந் தட்டே'' (குறுந். 1)

தலைவனே நீ கொண்டு வந்திருக்கும் சிவந்த நிறமுடைய இச்செங்காந்தள் மலர் எங்களுக்கு அரிதான பொருள் இல்லை எளிதில் கிடைக்ககூடியது. மேலும் அவுணர்களைக் கொன்று குவித்ததால் போர்க்களம் முழுவதும் சிவப்புறுமாறு செய்வதன் முருகன் - பகைவரைக் குத்திக் கொன்றதால் அவனது வேலும், களிற்றின் கோடுகளும் சிவப்புற்றன. இத்தகைய சிறப்புடைய முருகன் குடிகொண்டிருக்கும் இம்மலையில் சிவந்த நிறமுடைய காந்தள் மலர்கள் எங்கும் மலர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இச்சிறிய பொருளைக் கொடுத்து தலைவியாகிய பெரிய பொருளை அடைய எண்ணுவது அறிவீனம். அதனால் நின் கையுறையாகிய இம்மலரை, யாம் ஏற்பதற்கு இல்லை என்று கூறுகிறாள். தோழியின் கூற்றாக அமையும் திப்புத்தோளார் இயற்றிய இப்பாடல் மூலம் எங்கும் காந்தள் மலர்கள் பூத்துச் சிவந்து கிடக்கும் மலைக் காட்சியினை நம் கண்முன் நிலைநிறுத்துவதாக அமைகிறது.

உவமையில் உளவியல்:-

உளவியல் எனப்படுவது உள்ளத்தின் இயல்புகளைக் கூறுவது. உளம்+இயல் எனப் பிரித்தால், உள்ளத்தின் இயல்புகளைக் கூறுவது அல்லது ஆராய்வது எனப் பொருள்படும்

''Psychology is concerned with understanding the mind and the

behaviour of man''

என்ற கூற்றினை நோக்கும் போது உளவியல் மனித உள்ளத்தையும் நடத்தையையும் ஆராயும் துறையாகத் திகழ்கிறது. சங்கத் தலைவி ஒருத்தியின் உள்ளத்தினைப் படம் பிடித்துக் காட்டுவதாய் விளக்கும் பின்வரும் பாடல் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தன் உள்ளம்படும்பாட்டைத் தோழிக்குக் கூறுவதாக அமைகிறது.

''அது கொல் தோழி காமநோயே!

வதிகுறு உறங்கும் இன்நிழல் புன்னை

உடை திரைத் திவலை அரும்பும் தீநீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே'' (குறுந். 5)

தோழி! இந்நோய் குறித்து இதுவரை யான் அறிந்தது இல்லை. இப்போது புரிந்து கொண்டு விட்டேன். கடற்கரையில் நிழல்தரும் புன்னை மரங்களில் தங்கியிருக்கும் நாரைகள் கவலையின்றி உறங்குகின்றன. கடல் அலைகள் மோதுவதனால் புன்னை மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அத்தகைய கடற்கரையை உடையவன் தலைவன். நம்மைப் பிரிந்து சென்ற தலைவன், சென்ற இடத்தில் நன்கு உறங்குவார். நான் மட்டும் தூக்கமின்றித் தவிக்கிறேன் என்ற தலைவியின் உள்ளத்தினை, ''வதிகுருகு உறங்கும் இன் நிழல் புன்னை'' என்ற அடியால் விளக்குகிறார் நரிவெரூஉத்தலையார் எனும் புலவர்.

உவமையில் அகப்பொருள்:-

அகப்பொருளாவது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் அனுபவிக்கும் இன்பம் இத்தகையது என்று பிறரிடம் கூற இயலாததாய் அமைவது. குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பின்வரும் பாடல் பண்டைத் தமிழர் நாகரீகத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஒரு சிறந்த பாடலாகத் திகழ்கிறது.

''யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே''

செந்நிலத்திலே பெய்யக்கூடிய மழைநீரானது நிலத்தின் சுவையை, நிறத்தை இயற்கையைப் பெற்றதுபோல், தலைவனும் தலைவியும் மனத்தால் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டனர் என்று விளக்குகிறார்.

''காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்

பொழுதுஇடைத் தெரியின் பொய்யே காமம்'' (குறுந். 32)

இத்தகைய அகப்பொருள் பாடல்கள் பண்டைத் தமிழர் வரலாற்றை, பண்பாட்டை, நாகரிகத்தை நமக்குத் தெரிவிக்கும் அரிய பெட்டகமாக விளங்குகின்றன.

உவமையில் அழகுணர்வு:-

உவமையில் அழகுணர்வு என்பது புலவனின் மனநிலையை இரசிக்கும் தன்மையைப் பொறுத்தது. சங்ககாலப் புலவர்களின் கற்பனைத் திறத்திற்குச் சான்றாக அமைகிறது பின்வரும் பாடல்,

. . . . . . . . . . . . . . . . . ஆரியர்

கயிறாடு பறையின் கால்பொரக் கலக்கி

வாகை வெண்நெற்ற ஒலிக்கும்

வேய்பயில் அழுவம் முன்னி யோரே'' (குறுந். 7)

இப்பாடலில் வாகை மரங்களில் உள்ள காய்ந்த நெற்றுக்கள் காற்றினால் கலகலவென்று ஒலிக்கின்றன. இக்காட்சி ஆரியர் கயிற்றின் மேல் நின்று கூத்தாடுகின்ற போது அடிக்கின்ற பறையொலி போல் ஆசிரியருக்குத் தோன்றுகிறதாம். வாகை மரங்களில் காய்ந்த நெற்றுக்கள் எழும்பும் கலகல ஒலி, ஆரியர் கூத்தாடும் போது எழுப்பும் பறையொலி இவை இரண்டும் புலவர் இரண்டு வேறுபட்ட காலங்களில் கண்டதும் கேட்டதும் ஆகும். இருப்பினும் இவை இரண்டினையும் இணைத்து ஓர் அழகிய கவிதையாக்கி காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகமாக மாற்றியது புலவரின் கைவண்ணமாகும்.

கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் இறையனார் பாடிய குறுந்தொகையின் இரண்டாவது பாடல் அழகுணர்ச்சிக்கு மற்றொரு சான்று. இந்நூலின் தனிப் பெருமைக்கு இப்பாடலும் ஒரு காரணமாகும். கூட்டத்தின் போது தலைவியின் கூந்தலை நுகர்ந்த தலைவன் இன்ப வெள்ளத்தில் மிதந்தான். அந்தக் கூந்தல் மணம் இதுவரை அவன் அறியாதது. உன் கூந்தல் மணம் ஒப்பற்றது என்று புகழ நினைத்தான். அப்படி நேரடியாக கூறுவது அழகல்ல என்று எண்ணி வண்டிடம் கேட்பதாக அமைந்தது இப்பாடல்.

''கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ'' (குறுந். 2)

தலைவன் வண்டிடம் ஒவ்வொரு மலராகச் சென்று தேன் உண்டு திரிவது உன் தொழில். உனக்கு எத்தனை அழகான சிறகுகள்! உன்னைக் கேட்கிறேன். நீ என் கேள்விக்கு மனம் மகிழும் வண்ணம் விடைகூற வேண்டிய அவசியம் இல்லை; என் விருப்பத்திற்கிணங்கவும் விடைகூற வேண்டாம்; ஒரு நிலையாக நின்று பதில் சொல். என்னோடு நெருங்கிய நட்புடையவளும், மயில் போன்ற மெல்லிய தன்மையுடையவளும், நெருங்கிய அழகிய பற்களையும் உயர்ந்த பண்பையும் சிறந்த வனப்பையும் உடையவளுமான இவளுடைய கூந்தலைப் போல நறுமணம் கமழும் மலர்கள் உண்டா? நீ கண்டறிந்த பூக்களிலே ஏதாவது இப்படி மணமுள்ளதாக இருந்தால் சொல் என்கிறான்.

முடிவுரை:-

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள உவமைகள் வழி அக்கால மக்களின் பண்பு நலன்களும், புலவர்தம் கற்பனைத்திறனும் தெற்றென விளக்குவதை இக்கட்டுரை வாயிலாக அறியப் பெறுகிறோம்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்.

 

கருத்துகள் இல்லை: