30/01/2011

தமிழ் இலக்கியங்களில் மகளிர் பந்தாட்டம் - இரா. லதா

முன்னுரை: சங்ககாலம் முதற்கொண்டு சிற்றிலக்கியக் காலம் வரை பந்தாட்டம் மகளிர்க்கு மட்டுமே உரியதாக இருந்தது. பிற்கால இலக்கியங்களில் சிறுவர்களும் பந்தாடியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் மகளிரைவிட ஆடவரே அதிகமாக ஆடுகின்ற ஆட்டமாக இது மாறியுள்ளது. காப்பியங்களில் மகளிர் பந்தாட்டம் காணப்படுகின்றன.

பந்து செய்முறை:

பந்து செய்வதற்கென்று சில வழிமுறைகளை வகுத்திருந்தனர். நெட்டி, பஞ்சு, உலண்டு, நூல் ஆகியவற்றில் ஒன்றே உள்ளே வைத்து பீலி, மயிர், ஆகியவற்றை அதன்மேல் சுற்றி, அதனை நூலாலும் கயிற்றாலும் சுற்றிப் பந்து செய்தனர். அப்பந்துகள் பாம்பின் தோல், மயிற் பீலிக்கண், பூம்புனல் நுரை ஆகியன போன்று காணப்பெறும். வெண்மை, செம்மை, கருமை ஆகிய நிறத்தில் இருந்தன. அடிப்பார் இல்லையெனினும், காற்று வீசினாலும் மேலெழும் தன்மையுடையன. கண்டார் கண்களை ஈர்க்கும் அழகுடையன. அவர்கள் நெஞ்சை விட்டு அகலாதன என்று பந்தின் சிறப்பு பெருங்கதையில் கூறப்படுகிறது. மகளிரின் பெண்மைக்கும், சிறப்பிற்கும், செல்வ வளத்திற்கும் ஏற்ற முறையில் பந்துகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. கைவிரல் ரேகை, பந்தின் மீது பதிந்துவிடும் அளவு, அதன் மேற்ப்பரப்பு பளபளப்பாக இருந்துள்ளது. பதிந்த விரல் ரேகையைக் கொண்டு பந்தைப் பிடித்தவளின் உருவத்தையும் வரைந்து மகிழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

பந்தாடும் களம்:

பந்தாடும் மகளிர் தங்கள் வீட்டின் முற்றங்களிலும், மேல் மாடங்களிலும் விளையாடியுள்ளனர். நாட்டின் செல்வ வளத்திற்கு ஏற்ற முறையில் பந்தாடும் களம் அமைந்திருந்தது. ஏமாங்கத நாட்டில் பந்தாடுகின்ற களங்களின் விளிம்புகளில் முத்துக்கள் பதிக்கப்பட்டும், பொன்னாலே செய்யப்பட்டும் இருந்தன. இக்காட்சி வானுலகை இவ்வுலகில் இருத்தினாற்போல் அமைந்திருந்தன எனச் சீவகசிந்தாமணியில் பாடப்பெற்றுள்ளது.

''முத்தம் வாய்பு ரித்தன மொய்க திர்ப்பகம் பொனாற்

சித்தி ரத்தி யற்றிய செல்வ மல்கு பன்மணி

பத்தி யிற்கு யிற்றிலான் பதித்து வைத்த போல்வன

இத்தி றத்த பந்தெறிந் திளையராடு பூமியே'' (சீவக - 121)

பந்தாட்டத் திறன்:

தமிழ் இலக்கியங்களில் பந்தினைக் குறிக்கும் கந்துகம் என்ற சொல் மட்டுமே காணப்படுகிறது. சங்க இலக்கிய அகப்பாடல்களில் மகளிர் பந்தாடுகின்ற காட்சி காட்டப்பெறவில்லை. தலைவனுடன் செல்ல விரும்பும் தலைவி வருந்தும் நிலையிலும், தலைவி உடன் சென்ற பிறகு தலைவியின் பந்தைக் கண்டு வருந்தும் தாயின் மனநிலையைக் காட்டும் நிலையிலும், தலைவியின் மென்மையைக் குறிக்கும் நிலையிலும் பந்தாட்டம் குறிக்கப்படுகிறது. உவமை நிலையிலும் பந்து குறிக்கப்படுகின்றது.

சங்கப் புறப்பாடல்களில் தோல்வியுற்ற மன்னர்களை இழிவுபடுத்த விரும்பிய வெற்றி வேந்தர்கள் தோற்றவர்களின் மதிலில் பந்து, பாவை ஆகியவற்றைத் தொங்கவிட்டனர்.

''மதில்மேல் வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்

பொருநரைத் தேய்த்த போரரு வாயில்'' (திருமுருகு. 68 - 69)

என்று திருமுருகாற்றுப்படை இயம்புகிறது. பெரும்பாணாற்றுப்படையில், உயர்ந்த வான்தோய் மாடத்தில் மகளிர் வரிப்பந்து ஆடிக் களைத்தாக கூறப்பெற்றுள்ளது.

காப்பியங்களில் மகளிர் பந்தாடும் காட்சி வர்ணிக்கப்படுகிறது. மகளிர் வரிப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடினர். அப்பாடல்கள் கந்துகவரி என்று குறிக்கப்பட்டது. தெய்வமான கண்ணகி, தன் தோழியரைப் பந்தாட அழைக்கிறாள். மகளிர் பந்தாடும் பாடல் சந்த நயத்துடன் அமைந்துள்ளது. அப்பாடல் பந்தாடும் காட்சியைக் கண்முன்னே நிறுத்துகிறது. அவர்கள் ஆடும்போது அணிந்திருந்த பொன்னலங்கு மணிகள் வானவில்லின் தோற்றத்தைத் தருகின்றன. சிலப்பதிகார வாழ்த்துக் கதையில் அமைந்த

''துன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை நீணிலம்

தன்னினின்றும் அந்தரத்து எழுந்ததில்லை தான்எனத்

தென்னன் வாழ்கவாழ்க என்றுசென்ற பந்தடித்துமே

தேவரார மார்பன் வாழ்க என்றுபந் தடித்துமே''

என்ற பாடலடிகள் மூலம் பந்தாடும் காட்சியை அறிய முடிகிறது.

மணிமேகலையில் பரத்தையார் கற்க வேண்டிய பல்வேறு கலைகளில் பந்தாட்டமும் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. பந்தாட்டம் தொடர்பான நூல்கள் இருந்தன என்றும் அந்நூலைக் கணிகை மகளிர் கற்க வேண்டும் என்றும் சித்திராபதி கூறுகிறாள். கந்தரக் கருத்து என்று அந்நூலில் சுட்டப்படுகிறது.

சீவக சிந்தாமணியில் மகளிர் பந்தாட்டத்தில் வல்லவராகக் காட்டப்படுகின்றனர். சீவகனின் தாயாகிய விசயை ''பந்தாட்ட விரலினார் விசயை'' என்று சிறப்பிக்கப்படுகிறாள். ஏமாங்கத நாட்டு மகளிர் பந்தைக் கையால் தொடாமல் காலால் தட்டியெடுத்தனர். மாலைக்குள் மறைத்தனர், கைத்தலத்தில் ஒட்டினர், நெற்றியில் தீட்டினர், வரிசையாக அடித்தனர் என்று மகளிரின் பந்தாடும் திறன் கூறப்படுகிறது. (சீவக.நாமகள்-122) அவர்கள் தாவித் தாவிப் பந்தாடும் காட்சியானது தோகையுடைய ஆண்மயிலானது சுற்றிப் பறக்கின்ற ஈயலைப் பிடிக்கத் தாவித் தாவிச் செல்வதைப் போல் காட்சியளித்தன (சீவக.குணமாலை-75)

விமலையார் பந்தாடுகின்ற காட்சியைத் திருத்தக்க தேவர் விமலையார் இலம்பகத்தில் எடுத்துக்காட்டுகிறார். அவள் கையில் இருந்த ஐந்து பந்துகள் மாலையைச் சூடும் வண்டு போல மேலே பொங்கி எழுகிறது. பந்தை முறையாக அடித்தல், தன்னைச் சூழ்ந்து வர அடித்தல் என்னும் முறையில் அவள் பந்தாடுகிறாள். இன்று மிதிவண்டி ஓட்டிக்கொண்டே பல்வேறு செயல்களைச் செய்வதைக் காணமுடிகிறது. மகளிர் பந்தாடிக் கொண்டே பல்வேறு செயல்களைச் செய்தமையை விமலையார் மூலம் அறிய முடிகிறது. மயில்போல் பந்தாடும் அவள், எண்திசையும் பந்தைக் கொண்டு உலாவுதல், குங்குமம் அணிதல், கோதை வேய்தல் ஆகிய பல செயல்களையும் பந்தாடிக் கொண்டே செய்கிறாள் என்பதைத் தெரிய முடிகிறது. இதனை,

''மாலை யுட்சுரந்த பந்து வந்து கைத்தலத்தவாம்

ஏல நாறிருங்க ழற்பு றத்த வாண்முகத்தவாம்

நூலி னேர்நு சுப்பு நோல வுச்சி மாலையுள்ளவாம்

மேலே முந்த மீநிலத்த விரல கைய லாகுமே'' (சீவக.விமலை.66)

என்று விமலையாரின் பந்தாட்டத்திறன் சிறப்பிக்கப்படுகிறது.

பந்தாட்டப் போட்டி:

அரசிகள் தங்களில் உயர்ந்தவர் யார் என நிறுவத் தங்கள் தோழியரின் பந்தாட்டத் திறமையை பயன்படுத்தியுள்ளனர். பெருங்காதையில் இப்பந்தாட்டப் போட்டி விளக்கம் பெற்றுள்ளது. பத்மாவதியின் தோழி இராசனை என்பாள் ஏழு பந்துகளைக் கொண்டு தோழிமாரைக் கண்ணிமையாமல் எண்ணுங்கள் என்று கூறி ஆயிரங்கை பந்தடித்தாள். அவள், கால் கைகளைச் சுற்றி வருமாறு அடித்த பந்துகளை உள்ளடக்கியும், மீண்டும் தட்டியும் தனித்தனியாகப் போக்கியும் பந்தாட்டத்திறமையை வெளிப்படுத்தினாள். (பெருங். 12-57-64)

வாசவதத்தையின் தோழியாகிய காஞ்சனமாலை 1500 முறை பந்தடித்தாள். அவள் பூம்பந்து அடித்து விசும்பு ஏற்றியும், குழலின்மேல் வந்தவற்றைக் குவிவிரால் அடித்தும், மேகலையில் நேர்முகத் துடித்தும். கண்ணியில் சார்த்தியும் கைக்குள் போக்கியும், உண்ணின்று இருத்தியும் விண்ணுறச் செலுத்தியும் பந்தடித்தாள் (12. 65-75) என்பதைக் காணமுடிகிறது.

ஆரியைக்குப் போட்டியாக வாசவத்தையின் தோழி மானனீகை பந்தாடினாள். தோழியர் அனைவரினும் இவள் பந்தாட்டத்தில் சிறந்தவளாக விளங்கினாள். அவளுடைய பந்தாட்டம் வியக்கத்தக்கதாய் இருந்தது. அவள் விளையாடுவதற்கு முன் பந்தாட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தாள். ஆராய்ந்தெடுக்கப்பட்ட முரண்பட்டுத் தோன்றிய அழகிய அப்பந்துகளைப் பகிர்ந்து தன்னைச் சூழ வட்டமாக வைத்தாள். அவற்றை எடுத்து மேலெறிந்து விளையாடினாள்.

பந்தாடுவதற்கு நடுவே, அவள் பல்வேறு செயல்களையும் செய்தாள். ஆடையைத் துடைத்தாள், கையில் பற்றிய பந்தினைச் சுற்றுகின்ற முறைகளை அவையோர்க்குக் கூறினாள், மாலைகளையும் அணிகலன்களையும் பன்முறைத் திருத்தினாள், தன்மேற் படிந்த வண்டுகளையும் எழுப்பினாள், பந்துகளைத் துடைத்தாள், இசை பாடினாள், பந்துகளைச் சக்கரம் போன்று சூழல் வீசினாள், இடையிடையே தோழிகளுடன் பேசினாள், பற்பல கதியில் பந்துகளைச் செலுத்தினாள். இவ்வாறு 21 பந்துகளைக் கொண்டு 8000 கை அடித்தாள். மன்னவனும் கண்டு காதல் கொள்ளும் வண்ணம் அவளுடைய பந்தாட்டத்திறன் அமைந்திருப்பதாகப் பெருங்கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பெருங். 12. 170-245)

குற்றாலக் குறவஞ்சி இலக்கியத்தில் மகளிரின் பந்தாட்டம் குறிக்கப்படுகிறது. பந்தாடும் மகளிரின் உருவ வர்ணனை சிறப்பாகக் கூறப்படுகிறது.

''கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில்

வசந்தவல்லி கொடிய காமன்

முந்தடிபிந் தடிஇடைபோய் மூன்றடிநா

லடிநடந்து முடுகி மாதர்

சந்தடியில் திருகியிட சாரிவல

சாரிசுற்றிச் சகிமார் சூழப்

பந்தடிக்கும் பாவனையைப் பார்க்க அயன்

ஆயிரங்கண் படைத்தி லானே'' (குற்றால - 21)

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

 

கருத்துகள் இல்லை: