30/01/2011

முளைப்பாரி சடங்கு - செ. கோவிந்தசாமி

மனிதன் தனக்கும் மேம்பட்ட ஆற்றல் ஒன்று இருப்பதாக நம்புகிறான். இந்த அடிப்படையில் கிராமத் தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கொடை நிகழுகின்றது. இக்கொடை நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகவே முளைப்பாரி இடம் பெறுகிறது. காளி, மாரி, பத்ரகாளி முதலான பெண் தெய்வங்களை நோக்கி முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் சடங்கு முளைப்பாரியாகும். அம்மன் என்றழைக்கப்படும் கிராமத் தெய்வங்களுக்க உகந்ததாக கருதப்படும் மாதங்களிலேயே கொடை நிகழ்வது வழக்கம். கொடையானது செவ்வாய் கிழமைதான் நடைபெறும். ஏனெனில் செவ்வாய் கிழமைதான் அம்மன் பிறந்ததாக நம்பப்படுகிறது. கொடை நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு கால்கோள் நிகழுகின்றது. இதனைப் பொங்கல் சாட்டுதல் அல்லது கொடை சாட்டுதல் என்பார்கள். இந்த பொங்கல் சாட்டுதல் நிகழும் அன்றுதான் முளைப்பாரி சடங்கும் தொடங்குகிறது. சங்கரன் கோவில் வட்டம் கீழநீலிநல்லூர் கிராமத்தில காளியம்மன் கோவில் கொடை வைகாசி மாதம் இரண்டாம் செவ்வாய் அன்று நிகழுகின்றது. இதனையொட்டி முளைப்பாரி சடங்கு நிகழும் முறையினை இக்கட்டுரை வாயிலாக காணலாம்.

முளைப்பாரி சடங்கில் பெண்கள்:

முளைப்பாரி சடங்கில் பூப்பெய்திய வயதிலிருந்து குழந்தை பேற்றை இழக்கும் வயதுக்கு முன் உள்ள பெண் வரை முளைப்பாரி போடத் தகுதியானவர்களாக விளங்குகிறார்கள். மேலும் மாதவிலக்கு சமயத்திலுள்ள பெண்கள், புதியதாக திருமணம் செய்த பெண்கள் இந்த முளைப்பாரி சடங்கில் பங்கு பெறுவதில்லை. பெண்கள் முளைப்பாரி போடுவதற்கான காரணம் இவர்கள்தான் வளமையின் குறியீடாகத் திகழ்கின்றனர். எனவே பெண்கள் இதனைச் செய்கின்றனர்.

முளைப்பாரி போடும் விதம்:

முளைப்பாரி போட கொண்டு வந்து கொடுத்துள்ள சில்வர் குத்துச் சட்டிகளில் கரம்பையை நொருக்கி சட்டியின் அரையளவு போட்டு அதன் மேல் ஆட்டுப் புழுக்கையும், மாட்டுச் சாணத்தையும் நொறுக்கி பரவலாக தூவுவார்கள். தூவிய பின் தட்டாம் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப் பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை ஊர் செழிப்பாக உள்ள காலத்தில் 21 வகையான விதைகளையும், செழிப்பு குறைந்த காலத்தில் 11 வகையான விதைகளையும் போடுகின்றனர். மேலும் சுரைவிதை, பூசணி விதை, புடலைவிதை, போன்ற விதைகளைப் போடுவதில்லை. படரும் விதைகளைப் போட்டால் மற்ற பயிர் வகைகளை வளரவிடாது படர்ந்துவிடும். எனவே, இந்த விதைகளைப் போடுவதில்லை. இது போன்ற விதைகளைத் தவிர்த்து மற்ற விதைகளை சாணங்களின் மேல் பரப்பி பின் அதன் மேல் நெருங்கிய சாணத்தை பரவலாகப் போடுவார்கள். இவ்வாறு செய்தவற்றை முளைப்பாரி என்கின்றனர். கோவில் தோன்றிய காலம் முதல் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை ஓலைக் கொட்டான்களில் முளைப்பாரி போட்டு வந்தனர். நாகரீக மாற்றத்தின் காரணமாக 5 ஆண்டாக சில்வர் சட்டியில் முளைப்பாரி போட்டு வருகின்றனர்.

ஆ. சிவசுப்பிரமணியன் முளைப்பாரி போடும் விதம் பற்றி கூறும்போது புதிதாக மண்பானையோ, மண்குடமோ வாங்கி அதன் அடிப்பகுதியைச் சீராக உடைத்து அதன் வாய்ப்பகுதியை தரையில் படும்படி தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்படும். பானையாக இருந்தால் அதன் குறுக்கு வசத்தில் இரண்டு மூங்கில் அல்லது அகத்திக் கம்புகள் ஆகியவற்றை பெருக்கல் குறி போல வைக்கப்படும். சிறிது வைக்கோலையும் அதன் மேல் பரப்பி அதன் மேல் ஆட்டுப் புழுக்கையும், மாட்டுச் சாணத்தையும் உரலில் இட்டுத் தூளாக்கியதை கரம்பை மண்ணுடன் கலந்து தூவுவார்கள். இதனையே முளைப்பாரி அல்லது முளைக்குடம் என்று கூறுகின்றனர். காளியம்மனுக்கு 21 பெண் குழந்தைகள் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே இதனை நினைத்து இவ்வூர் மக்கள் ஒரு குழந்தைக்கு ஒன்று என்று கருதி 21 எண்ணிக்கையில் முளைப்பாரி போடுகின்றனர். இந்த முளைப்பாரிகளுக்கு தினந்தோறும் காலையிலும், மாலையிலும் முளைப்பாரிக்கு முன்னால் பத்தி, சூடம் கொழுத்திய பின்பு தான் தண்­ர் தெளிக்கின்றனர். முளைப்பாரியை தெய்வமாகக் கருதுவதால் இவ்வாறு செய்கின்றனர். இதனால் தான் விதை நன்றாக வளர்கின்றது என்று இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள்.

மகளிர் செயல்:

முளைப்பாரி போட்ட மறுநாளிலிருந்து முளைப்பாரி போட்ட வீட்டின் முன்பு வட்டமாக நின்று கும்மியடிக்கிறார்கள். இந்த கும்மி ஓசை எழும்புவது போல் முளைப்பாரியும் வெளிவரும் என்று கூறுகின்றனர். ஆகவேதான் பாடும்போது கும்மியடித்துக் கொண்டு பாடுகின்றனர். இப்பாடல்களில் மழை வளத்தையும், குழந்தை மற்றும் வளமான வாழ்க்கையும் தங்களுக்கு தர வேண்டும் என்பதாக கீழ்க்கண்டவாறு பாடுகின்றனர்.

''பூக்காத மரம் பூக்காதோ - நல்ல

பூவுல வண்டு விழாதோ

பூக்க வைக்கும் காளியம்மனுக்கு

பூவால சப்பரம் சோடனையாம்

காய்க்காத மரம் காய்க்காதோ

காயில வண்டு விழாதோ

காய் காய்க்க வைக்கும் காளியம்மனுக்கு

காயால சப்பரம் சோடனையாம்''

என்றவாறு பூக்காத மரம் பூக்க வேண்டும், காய்க்கத மரம் காய்க்க வேண்டும் என்று பாடுவது தாவரச் செழிப்பை வேண்டி பாடுவதாகவும், முளைப்பாரி நன்கு வளர்வது போன்று அந்த ஆண்டு வேளாண்மைப் பயிர்களும் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்று நம்புகின்றனர். இவையெல்லாம் இவ்வூரின் கடவுளாக விளங்கும் காளியம்மனால் நடைபெறுகிறது என்று எண்ணி இவ்வூர் பெண்கள் இத்தெய்வத்திற்கு முளைப்பாரி போடுகின்றனர்.

முளைப்பாரியின் முடிவு:

கோவில் கொடையின் நிறைவு நிகழ்ச்சியாக முளைப்பாரியினை அவ்வூர் பொதுக் கிணற்றில் முளைப்பாரி போட்ட பெண்கள் போடுகின்றனர். அப்போது பெண்கள்

''வாயக் கட்டி வயித்தக்கட்டி

வளர்த்தேன்ம்மா முளைய - இப்ப

வைகாசி தண்ணியில

போரேயம்மா முளைய''

என்று பாடிக் கொண்டு முளைப்பாரியை போடுகின்றனர்.

முளைப்பாரியை நீர் நிலைகளில் போடுவதற்கான காரணம் பயிர் வகைகள் ஒரு பருவத்தில் அழிந்து மறுபருவத்தில் துளிர் விடுவதின் குறியீடாக முளைப்பாரியை கிணற்றில் போடுகின்றனர் என்பதனை அறிய முடிகிறது. இதே கருத்தையே ஆ.சிவசுப்பிரமணியனும் கூறுகிறார்.

முடிவுரை:

இம்மை வாழ்வில் தீமை வராமல் மென்மேலும் செழுமை ஓங்குவதற்காக செய்யப்படுவதே முளைப்பாரியாகும். எனவே இவ்வூரில் உள்ள காளியம்மன் தெய்வம் இவ்வூர் மக்களுக்கு நன்மை செய்யும் காவல் தெய்வமாக விளங்குவதால் இத்தெய்வத்திற்கு முளைப்பாரி என்ற செழிப்புச் சடங்கு செய்யப்படுகிறது. மேலும் முளைப்பாரி சடங்கு செய்வதால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். இதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள இறுக்கம் குறைந்து குடும்பம் மகிழ்ச்சியில் செழித்து ஓங்க வழிவகுப்பதின் அடித்தளமே இந்த முளைப்பாரி சடங்கு என்பதனை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

 

கருத்துகள் இல்லை: