30/01/2011

தலித் இயக்கங்களும் - சாதி ஒழிப்பும் - சுப. குணசேகரன்

அறிமுகம்

தலித்தியம் எங்கும் பேசப்படுகின்றது. தலித் விடுதலை சார்ந்த அரசியலும் தலித் பண்பாட்டின் தனித்துவமும் எடுத்துச் சொல்லப்படுகின்றன. தலித் இலக்கியம் தன் முழு வளமையோடும் உள் பலத்தோடும் இந்தியாவின் பிற மொழிகளிலும் தமிழிலும் வளர்ந்து காலூன்றி வருகின்றது. தலித் அரசியல் பண்பாட்டு இலக்கிய இயக்கங்கள் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் முதலியவ்றின் அடிப்படையில் ஒரு சமுதாய ஒழுங்கைக்கட்டிவைக்க உருவாக்க முயல்கின்றன. ஒரு புதிய சமுதாய ஒழுங்கை உருவாக்குவதற்கு / கட்டியமைப்பதற்கு இப்போது நிலவுகின்ற சமுதாய ஒழுங்கை அல்லது அமைப்பினை உடைத்தெறியவேண்டியது அவசியமாகின்றது. இதன் அடிப்படையில் இப்போது நிலவுகின்ற சாதிய சமுதாய அமப்பினை சாதியத்தை உடைக்கும் முயற்சியை இவ்வியக்கங்கள் முன் முயற்சியாகக் கைக்கொண்டுள்ளன. சமுதாய வரலாற்றுப் போக்கில் சாதியத்தை எதிர்க்கும் கலகக் குரல்கள் பலவற்றைக் காண முடிகிறது. எனினும், அவை போராட்டங்களாகக் கட்டியமைக்கப்படாமல் நலிந்து போயிருப்பதை அறிய முடிகின்றது. எனவே தலித் இயக்கத்தில் தொடங்கியுள்ள போராட்டத்தினை வளர்த்தெடுக்கும் முயற்சிக்கு துணைசேர்க்கும் வகையில் சாதியம் - தீண்டாமை குறித்த புரிதல் அவசியம் என்கின்ற நோக்கிலேயே இக்கட்டுரை தயாரிக்கப்படுகின்றன.

இந்தியச் சூழலும் சாதியமும்

அடிப்படையில் சாதியம் சமூக வளர்ச்சியின் இயல்பு போக்கில் உருவானது அல்ல. மேலும், "சாதி" என்பது சமூக ஒழுங்கை அல்லது குழுக்களின் தனித்துவங்களை நிலைநிறுத்திப் பாதுகாப்பதற்கென்று அறிவியல் பார்வையில் உருவாக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனம் என்னும் கூற்றையும் மறுக்க வேண்டியிருக்கின்றது. மாறாக, எந்தக் குழு சமூக அந்தஸ்தில் மேல்நிலையில் இருந்ததோ, பிற சமூகங்களின் மீது அதிகாரத்தைத் திணிக்கக்கூடிய வல்லாண்மை கொண்டிருந்ததோ அந்தக் குறிப்பிட்ட குழுவினரின் சுயநலத்தையும் அதிகாரத்தையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட சமூக நிறுவனமே "சாதி" என்பதே உண்மை.

இச்சாதியத்தின் தன்மைகளாகக் குறிப்பிடும் பல கூறுகள் தெற்காசிய சமூகங்களில் காணப்படுகின்றன. அதனினும் சாதியத்தின் குறிப்பான அம்சங்கள் பிற நாடுகளில் வெளிப்படுவதைக் காட்டிலும் இந்தியப் பகுதிகளில் அதிகம் வெளிப்படுகின்றன என்பர்.

இந்தியச் சமூகம் அடிப்படையில் ஒரு சாதிய சமூகமாகும். இச்சாதியம் ஏறக்குறைய 2000 ஆண்டு கால இந்திய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தே காணப்படுகிறது. இந்தியப் பண்பாடு குறித்துப் பெருமைப்படுகின்ற எவரும் சாதியம் குறித்தும் தீண்டாமை குறித்தும் பேசுவதில்லை என்பதே இதன் தன்மையையும் தீமைகளையும் தெளிவுப்படுத்திக் காட்டும். இன்றைய சூழலில் சாதியம் ஒரு சமூகச்சிக்கல் என்று மட்டும் இல்லாமல் அதனையும் தாண்டி ஓர் அரசியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இச்சாதியத்தை / சாதி அமைப்பினை மாற்றி அமைக்கவில்லை / முடியவில்லை.

அண்மைக்காலங்களில் சாதி ஒழிப்பு குறித்த அறிவுப்பூர்வமான விவாதங்களும், ஆக்கப்பூர்வமான தேடல்களும் இச்சிக்கல் குறித்த புரிதல்களையும் தெளிவையும் நமக்கு வழங்கியுள்ளன. பல்வேறு சமூகவியல், மானிடவியல், அறிஞர்களின் கருத்துக்களும் அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ரா. முதலானோரின் அறிவியல் அடிப்படையிலான சிந்தனைகளும் இச்சாதி ஒழிப்புப் போராட்டத்தை வளர்த்தெடுக்கின்றன. இவ்வறிஞர்களின் கருத்துக்களின் ஊடாக நாம் சாதியத்தைப் புரிந்து கொள்ள முயலலாம்.

இந்திய மக்கள் அனைவரும் - ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், ஸ்கேதியன்கள் ஆகியோரைக் கொண்டகலப்பே ஆகும். இவர்கள் அனைவரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாங்கள் ஒரு தொல்குடி மக்களாய் இருந்த நிலையில் பல திசைகளிலிருந்து பல்வேறு பண்பாடுகளோடு இந்தியாவிற்குள் நுழைந்தனர். பெரும் போராட்டத்திற்குப் பின் தங்களுக்கு முன்பே வசித்து வந்தவர்களை வீழ்த்திவிட்டு தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டனர். பிறகு காலப்போக்கில் போராட்டத்திற்குப் பின் அமைதியான உறவுகள் கொண்டுவாழ்ந்தனர். இது அவர்களுடைய சமூகம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் ஒரு பரஸ்பரத்தை ஏற்படுத்தியதோடு இனக்கலப்பிற்கும் வழி வகுத்தது. இதனை

" அயலவர் கலப்பு இல்லாத வகுப்போ, சாதியோ இந்தியாவில் இல்லை.

பிராமணர்களின் நரம்புகளிலும் வேற்று இன இரத்தக்கலப்பு இருப்பதை

மறுக்கமுடியாது".

என்பார் கீழ்த்திசை சமூகவியல் ஆய்வாளர் டாக்டர் பந்தார்கள் ஆரியர் பற்றிய மேன்மையான கருத்துக்களை எடுத்துக்கூறி, ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தினை உருவாக்க முயன்ற மாக்ஸ்முல்லரும்,

ஆரியர்களின் இனம், ஆரியர்களின் இரத்தத் தூய்மை ஆரியர்களின் கண்கள், ஆரியர்களின் தலைமயிர் முதலியவற்றைப் பேசுகின்ற எந்த மனித இன ஆய்வாளரையும் ஒரு குற்றவாளியாகவே நான் கருதுகிறேன் என்று கூறியிருப்பதும் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

இவ்வாறு பரஸ்பரத்தோடு வாழ்ந்து வந்த பழங்கால மக்களிடையே தொழில்முறைப் பிரிவுகள் இருந்துவந்துள்ளன எனக்கொள்ளலாம். இத்தொழில்முறைப் பிரிவுகளே பிற்காலத்தில் வருணங்களாக உருவெடுத்தன. ஆயினும் சாதி என்கின்ற பிரிவிற்கு மாறக்கூடிய சமூக இயங்கியல் தன்மை இருந்திருக்கிறது. ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது. மீனவராய்பிறந்த வியாசர் மகாபாரதம் எழுதியவர்; அகத்தியர் வேடர் குலத்தில் பிறந்தவர். சத்திரியராகப் பிறந்த விசுவாமித்திரர் குருவாக மாறினார். சூத்திரராகப் பிறந்த சுதாஸ் மன்னராக இருந்தார் என்பது போன்ற புராண இலக்கியக் கருத்துக்கள் இதற்குச் சான்றாய் அமையும். காலப்போக்கில் இப்பிரிவுகள் வருணங்களின் இடத்தைச் சாதிகள் பற்றிக்கொண்டன.

சாதியத்தின் தோற்றமும் - கோட்பாடுகளும்

சாதியத்தின் தோற்றம் குறித்து இந்திய அறிஞர்களும், மேலைநாட்டு அறிஞர்களும் பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கித் தந்துள்ளனர். மேலோட்டமாகச் சொல்லப்போனால் ஐந்துவகையான கோட்பாடுகள் நிலவுகின்றன. அவையானவன,

முதலாவது: மரபு ரீதியான பார்வை என்று சொல்லலாம். மனுவை, அவர் எழுதிய மனுஸ்மிருதியை ஆதாரமாகக் கொண்டது. அதாவது, தொழில் பிரிவகுளே பிற்காலத்தில் சாதிகளாகத் தோற்றம் பெற்றன என்பது.

இரண்டாவது: இனக்குழுக்களையும் - மதங்களையும் ஆதாரமாகக் கொண்டு விளக்கப்படுவது. இனக்குழுக்களே சாதிகளாக உருவெடுத்தன - மதம் அதில் முக்கியப் பங்குவகித்தது என்பது.

மூன்றாவது: மரபணுவியல் ரீதியில் விளக்கம் தருவது. சாதி என்பது ஒரு மூடிய நிறுவனம். அது ஒரு பொதுப்பெயர் கொண்ட குடும்பங்களைக் கொண்ட குழுக்களைக் குறிக்கும் - ஒரு குறிப்பிட்ட முன்னோடியின் வம்சாவழியாகக் சொல்லிக்கொள்ளும் என்பது.

நான்காவது: இன அடையாளங்களும், இனக்கலப்புகளும் சாதிகளுக்குத் தோற்று வாயாய் அமைந்தன என்று விளங்குவது.

மேலே குறிப்பிட்ட நான்கு கோட்பாடுகளும் சாதியன் தோற்றம் குறித்துத் தெளிவாக விளக்கவில்லை என்றே கூறலாம். அவை சாதியின் குறிப்பிட்ட பண்புகளையே விளக்குகின்றன. சாதியின் தோற்றம் குறித்து ஆராயும்போது அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அரசியல் என்ன? என்பது பற்றி ஆராய்தல் இதனை நன்கு விளங்கிக்கொள்ள உதவும். ஐந்தாவும் கோட்பாடு இந்நோக்கில் அமைந்துள்ளது. அம்பேத்கரின் கருத்தின்படி சாதியின் தோற்றம் புரோகிதர்களின் மேலாண்மையின் அமைந்து கிடக்கிறது. பண்டைக் காலத்தில் புரோகிதர்களே மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையிலான ஒரே இணைப்பாக நிறுவிக் கொண்டனர். இந்த மேலாண்மையையும் தூய்மையையும் நிலைநிறுத்திக்கொள்ளவே, வெளிக் குழுக்களிலிருந்து மணம் முடிப்பதை தடைசெய்துகொண்டனர்; அக மணமுறையைமேற்கொண்டனர். இதுவே சாதியின் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்தது. இப்பழக்கம் பிற்காலத்தே பிற குழுக்களால் பின்பற்றப்பட்டது. (இக்கருத்தினை அம்பேத்கர் கேப்ரியல் டிரேடியின் "போலச் செய்தல்" கோட்பாட்டினைக்கொண்டு நிறுவுவதைக் காணமுடிகின்றது.) இவ்வாறு தோன்றி வளர்ந்த சாதியத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடாகவே "தீண்டாமையைப்" புரிந்துகொள்ள முடிகிறது.

தீண்டாமை

"தீண்டாமை" என்பது உடலியல் மற்றும் சமூகவியல் பிரித்தல் என்று புரிந்து கொள்ளலாம். பண்டைக்கால சமூகங்களில் பெரும்பாலானவற்றில் உறுப்பினர்களை ஒதுக்கிவைக்கும் பழக்கம் இருந்ததற்கான சான்றாதாரங்கள் இருக்கின்றன. எனினும் அவை தனிமனிதனோடு சம்பந்தப்பட்டு இருந்ததோடு வழக்கின்படி தள்ளிவைத்தல் / ஒதுக்கிவைத்தல் என்பது தற்காலிகமானது. சில சடங்குமுறைகளுக்குப்பின் இது முடிந்துவிடுகிறது. ஆனால் சாதியத்தின் துணைப்பொருளாக விளைந்த தீண்டாமைக் கோட்பாடு அதன் தன்மைகளில் மிகவும் மாறுபட்டதாகும். இங்கு தீண்டத்தகாதவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே வாழ்ந்து சாகும்போதும் தீண்டத்தகாதவர்களாகவே சாகிறார்கள். தாம் பெற்றெடுக்கும் குழந்தைகளையும் அதே தீட்டோடே தீண்டத்தகாத குழந்தைகளாகவே பெற்றெடுக்கிறார்கள். இங்கு தீண்டாமை நிரந்தரமானமது, மரபு வழியானது, வேறு எந்தக் கூறும் இதனை மாற்றியமைக்க முடியாத தன்மையைக் கொண்டது.

மக்களின் அன்றாட வாழ்வியல் - பழக்கவழக்கங்கள், நிகழ்வுகள் முதலியவறறின் அடிப்படையில் இத்தீண்டாமை உருவானது என்றுசிலர் சமாதானம் சொன்னாலும் இக்கொடிய பழக்கத்தினை உருவாக்குவதில் மதங்களுக்கு இருந்த பங்கை மறுக்கமுடியாது. தூய்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் மதங்களால் உருவாக்கப்பட்ட இத்தீண்டாமை நோய் பிற்காலத்தே ஸ்மிருதிகள், சாத்திர நூல்கள் முதலியவற்றால் நியாயம் கற்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இக்கருத்தின் அடிப்படையில் தங்களது குழுக்களின் மேலாண்மை, தனித்துவம் முதலியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் புரோகிதக் குழுக்களில் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதே தீண்டாமைக் கோட்பாடு என்பது தெளிவாகின்றது.

முடிவு

தீண்டாமை எனும் சாபக்கேட்டினை அகற்றுவதற்குப் பல சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டாலும் அவை நடைமுறையில் செயல்தன்மை அற்றவைகளாகவே அமைந்திருக்கின்றன. இன்றளவில் நாள்தோறும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நிகழ்த்தப்பட்டு வருவதே இதற்குத் தக்க சான்றாய் அமையும். மொத்தத்தில் சாதிய அடிப்படையின் மேல் எந்த ஒன்றையும் கட்டி எழுப்ப முடியாது. அவ்வாறு சாதிய அடிப்படையின்மேல் கட்டி எழுப்பப்பட்ட எந்த ஒன்றும் எப்போதும் முழுமையாக அமையாது. இந்நோக்கிலேயே சாதிய அடிப்படையிலான சமூக அமைப்பிற்கு எதிரான தலித் இயக்கங்களின் இன்றைய போராட்டங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

அடிக்குறிப்புகள்

1. The New Encyclopedia Britanica, Vol-III, Pg. 983-991.

2. அம்பேத்கர், சாதி ஒழிப்பு (மொ.பெ.) ப. 63 (எடுத்தாளப்பட்டது).

3. Baisantry, D.K., Dr. Ambedkar on Castes & Untouchability P.3 (Quoted)

4. Ibid., P.4.

5. கேசவன், கோ., சாதியம், ப.13

6. அம்பேத்கர், இந்தியாவின் சாதிகள் (மொ.பெ.) பக்.7-13

7. மேலது, பக். 40-44.

8. கேசவன், கோ, முந்து நூல், ப.77

9. Baisantry, D.K., Ibid, P.12.

 

கருத்துகள் இல்லை: