30/01/2011

மரப்பாச்சி கட்டவிழ்க்கும் ஆணுலகம் - ந. மகாராசன்

தமிழ் இலக்கியத் தளத்தின் வடிவமும் உள்ளடக்கமும் காலந்தோறும் மாறியிருக்கின்றன. மாற்றம் பெற்றும் வருகின்றன. அத்தகைய வடிவ உள்ளடக்க மாற்றத்திற்கான சூழல்களைச் சமூகமே உருவாக்கித் தருகின்றது. சமூகத்தில் நிலவுகின்ற கருத்தியலை அப்படியே பதிவு செய்தோ - மறுத்தோ - எதிர்த்தோ - மாற்றியோ இலக்கியமாக்கும் முயற்சிகள் வெற்றியடைவதும் தோல்வி அடைவதும் இயல்பாய் ஆகிவிட்ட ஒன்றுதான். பாடுபொருள்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கியத் தளம் என்பது சமகாலத்தில் விரிவடைந்திருக்கிறது. புனைவுகளின் கோர்வைகள் மட்டுமே இலக்கியமாகாமல், மனித வாழ்வின் எதார்த்தங்கள் அதன் போக்கில் இயல்பான மொழியால் இலக்கியமாக உருக்கொள்ளும் நிலை தற்காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. எதார்த்த படைப்புகளின் ஊடாகக் கலகத் தன்மையினையும், அதற்கான அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளையும் பார்க்க முடிகின்றது. இத்தகையைப் போக்குகள் தலித் எழுத்துக்களிலும் பெண் எழுத்துக்களிலும் வெளிப்பட்டு வருவதைக் கவனிக்கலாம்.

தமிழ் இலக்கியப் பரப்பைப் பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. பெண்களும் தங்களின் அறிவுத் தேடல்களை - வாழ்க்கை அனுபவங்களை மொழிப்படுத்தி வருகிறார்கள். ஆண் மொழிகிற எழுத்துக்களிலிருந்து பெண் மொழிகிற எழுத்துக்கள் வேறுபட்டிருக்கின்றன. பெண் மொழிக்கான உலகம் ஆணுக்கான உலகத்திலிருந்து வேறுபடுகின்றது. பெண் மொழியானது ஆண் உலகத்திடம் சமரசத் தன்மை கொண்டோ - புனைவுத் தன்மை கொண்டோ அணுகாமல், ஆண் மொழி கட்டமைத்து வைத்திருக்கிற ஆதிக்கக்கூறுகளை எதிர்த்துக் கலகக் குரலாய் வடிவம் கொண்டு வெளிக்கிளம்பியிருக்கிறது. பெண்ணில் உண்டாகிற ரணங்கள், வேதனைகள், அழுகைகள், அவற்றால் ஏற்படுகிற மவுனங்கள், தனிமை, வெறுமை என எல்லாமே குருதியோடும், வியர்வையோடும் இழைந்து இழைந்து பருப்பொருளாய் - பருப்பொருளில் இருந்து வெளிக்கிளம்பும் நுண்பொருளாய் பெண் உலகம் மாறுகிறது. அவ்வகையில் அடர்த்தியாய் பரவிக்கிடக்கும் ஆணின் மொழிக்குள் ஊடுறுவி இலகுவான பெண் மொழியால் ஆணுலகத்தைக் கட்டவிழ்ப்பு செய்கின்றன உமா மகேசுவரியின் மரப்பாச்சி சிறுகதைகள்.

அழியாச் சோகங்களையும் பிழிந்து சக்கையாகிப்போன கனவுகளையும், விம்மிக் கொண்டிருக்கும் மவுனங்களையும் சேர்த்து, குருதியினையும் வியர்வையினையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பெண்கள் வழியாக எடுத்துச் செல்லப்படுவதை மரப்பாச்சி கதைகள் மிக நேர்த்தியாகச் சொல்கின்றன. மரப்பாச்சி கதைகளின் மொழியாக்கம் பெண் பேச்சில் அமைந்திருக்கிறது. வரலாற்றின் துணையோடும் பெண்ணியத்தோடும் அல்லாமல், எதார்த்தமான உலகை இயல்பான பெண்பேச்சில் அம்பலப்படுத்தும் வகையில் கதை சொல்லல் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தொடக்க கால ஆதிப்பொதுவுடைமைச் சமூகத்திற்குப் பிறகு, குறிப்பாகத் தாய் வழிச் சமூகத்திற்குப் பிறகான தந்தைவழிச் சமூகம் முதற்கொண்டு, முதலாளித்துவச் சமூகம் வரைக்குமான வரலாற்றுக் கட்டமைப்புப் பின்புலத்தில் ஆணின் ஆதிக்கம் நிலவி வருகின்றது. நிலத்தோடு பெண்ணைத் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற ஆணின் கருத்தியலில் பெண் என்பவள் உடைமைப் பொருளாக - உற்பத்திப் பொருளாக - நுகர்வுப் பொருளாகவே இருந்து வருகிறாள். இதனால், பெண்ணின் உடல்மீது நிகழ்த்தப்படும் காயங்களால் வடுவாகிப் போன பின்பும் கூட, அதனை மீண்டும் மீண்டும் கிளறுவதன் மூலம் ஏற்படும் ரணங்களால் உண்டாகிற பெண்ணின் வலி மொழியால் கதையாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சமூக அமைப்புகளுக்குள்ளும் - இலக்கிய தளத்துள்ளும் பெண்ணின் உணர்வுகள் அழுத்தமாகப் பதியாத நிலையில், மரப்பாச்சி கதைகள் முழுவதும் பெண்ணின் உணர்வுகளையே மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. இதுவரையில் நாம் கண்ட பெண் புனைவுகள் என்ற தளத்திலிருந்து விலகி, உண்மைகளைப் புரிய வைக்கின்ற தளமாக விரிந்திருப்பது மரப்பாச்சி கதைகளுக்குக் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பெண்ணின் அடையாளத்தையே அழித்துவிட்ட பெருஞ்சோகத்தின் முனகல் மரப்பாச்சியில் கேட்கிறது. மொழியால் கட்டமைக்கப்பட்ட கதைகளாக அல்லாமல், உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை மொழியானது பெண்ணின் மொழியாக மரப்பாச்சியில் படிந்திருக்கிறது.

தாய் தந்தையரிடமிருந்து கிடைக்க வேண்டிய பாசம் - அன்பு - அரவணைப்பு போன்றவற்றின் போதாமை பெண்ணைத் தனிமைப்படுத்துகின்றது. உயிருள்ள மனிதர்களிடமிருந்து எழவேண்டிய உணர்வுப் பரிமாற்றங்களைப் பெறமுடியாத நிலையில், மரப்பாச்சிப் பொம்மை உயிருள்ளதாக ஆகிவிடுகின்றன. பெண் தனக்கு வேண்டிய உலகத்தை மரப்பாச்சியில் நிர்மாணித்துக் கொள்கிறாள். பெண் எதை விரும்புகிறாளோ அதனை மரப்பாச்சியால் தர முடிவதற்குக் காரணம், மரப்பாச்சிக்கு உயிர் இருப்பதாக எண்ணிக் கொள்வதால் தான். மரப்பாச்சியிடம் ஒரு பெண் தன்னுடைய உள்ள - உடல் கிளர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்கிறாள். பெண்ணில் ஏற்படக்கூடிய உடற்கூறு மாற்றங்களையும், அதனால் உண்டாகிற மன உணர்வுகளையும் யாரிடமும் வெளிக்காட்டவோ - சொல்லவோ விரும்பாத நிலையில், பெண்ணின் மன எல்லைக்குள் வந்துபோகிற உரிமை மரப்பாச்சிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

''நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்'' அனு கேட்கையில் மரப்பாச்சி ''மவுனமாய் விழிக்கும், எனக்கு யாரிருக்கா? நான் தனி'', அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் அவள் வைத்தாள் ''ஆ. பொசுக்குதே'' என்று முகத்தைக் கோணும், அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக சிலநேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும் (ப.8).

குழந்தைப் பருவத்திலிருந்து மேடேறி பூப்படையும் பருவம் நோக்கி நகரும் பெண்ணின் தனிமை நிலையில் தனக்குரிய வடிகாலாகவும் மரப்பாச்சி அமைகின்றது. அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள், மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகளை உதிர்த்து மார்பெங்கும் திடீரென்று மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்த இடுப்பு நேராகி, உடல்திடம் அடைந்து வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவர் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குனிந்து அனுவை அருந்தியது (ப.10)

தனக்கான தோழியாகவும் - அதே வேளையில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் ஆணாகவும் மரப்பாச்சி மாறிக் கொள்கிறது. அதனால்தான் முலைகள் கொண்ட மரப்பாச்சி பொம்மை மீசை முளைத்து ஆணின் வடிவம் கொள்கிறது. இந்த ஆண் எதார்த்த உலகில் மற்ற ஆண்களைப் போல அல்லாமல், தன்னைத் தாங்கிக் கொள்கிற ஆணாக - தான் விரும்பும் உலகத்தைப் படைத்துத் தரும் ஆணாகவே பெண் கற்பனை செய்து கொள்கிறாள். ஆணுக்குள் எளிதாக ஊடாட்டம் நிகழ்த்த நினைக்கிற பெண்ணின் ஏக்கங்கள் கனவுகளாகி - கனவுகள் பிரம்மையாகி நிகழும் தளத்தில் மலையேற்றம் கதை அமைந்திருக்கிறது. கனவின் சாயலாய் உளவியல் கூறுகளைக் கொண்ட ஆண் பற்றியப் புனைவுகள் கட்டமைக்கப்படுகின்றன.

மலை தீர்மானங்களின் திரளாகத் தொலைவில் எழும்பியிருந்தது. அதன் திடம், கம்பீரம், இறுக்கம் உறைந்த மவுனம், உதிராக் கடினம் எல்லாம் அதை எட்ட முடியுமென்று நம்புதலை ஏற்படுத்துவதாயில்லை. ஆனால் மலையின் அழைப்பு பகிரங்கமாகவும், உரத்தும் கேட்டது. அதன் நீல விளிம்புகள் நிறுத்தாமல் சபலமேற்படுத்துபவனாக ஒளிர்ந்தன. (பக்.85). ஒரு மலையை இரு பெண்கள் அடைகிறார்கள். தாங்கள் நுழையக் கூடிய - சுதந்திரமாய்த் திரியக்கூடிய இடமாய் மலை அமைந்திருப்பதாக உணர்கிறார்கள். மலை எதார்த்த உலகின் ஆணைப்போல அல்லாமல் தன் ஆணவத்தை அழித்துக் கொள்வதாகவும் - எளிதாய் ஊடாட்டம் நிகழ்வதாகவும், கருதிக் கொண்டு மலையேறுகிறார்கள். மலைப் பெண்ணைப் பார்த்துக் கேலியாய்ச் சிரிப்பதாகவும், ஊடாட்டம் நிகழ்த்தி முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்களிடம் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புவிக்கும் இடத்திற்கு வருவதாகவும் மலை அமைந்து போகிறது பெண்ணின் மனதில், எந்த பற்றுதலையும் நிரந்தரமாய்க் கொள்ளாமல், குவிந்து கூர்ந்த உச்சியையே இலக்காகக் கருதி.

ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம் ................... உயர, உயரக் காற்றின் உந்து சக்தி என்னுள் புகுந்தது, ஆடை கலைந்தது, தோலைத் திறந்து சதைகளைக் காற்று தீண்டத் தீண்ட, உடல் எடையிழந்து, இறகாகி இழைந்தது. துவக்கச் சிரமங்கள் முற்றிலும் விலகி, உடல் வசமிழந்து சுழன்றும் மேலே பறந்தும் மேலேறுவதை ஆச்சர்யமுடன் பார்த்தேன் ........................ அறிந்தேயிராத அதீத உடலின்பத்தின் உச்ச நிலைபோல் தொடை நரம்புகள் தொய்ந்து தெறிக்க, மெல்லிய தசையிடுக்குகள் விண்விண்ணென அதிர்ந்தன. கூம்பி, விரிந்து உடல் மையம் சிலிர்த்துத் துடித்தது. (ப. 88). இங்கே, மலைச் சிகரம் ஆணாக ஆகலாம், மலையில் நீர் அருந்துகிறார்கள். அந்த மலையேற்றம் சுலபமாக அமையாவிட்டாலும் இறுதியில் தன்னை ஒப்புவித்துக் கொள்ளும் மனநிலை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். பெண் மனம்தேடும்.

நன்றி: நட்டுப்புறவியல் ஆய்வுகள்

 

கருத்துகள் இல்லை: