30/01/2011

சங்க மகளிரின் கற்பும் கைம்மையும் - முனைவர் இரா. ரெங்கம்மாள்

தமிழ் நிலம் தொன்மையானது. தமிழ்மொழி தொன்மைமிக்கது. மூவாயிரம் ஆண்டுப் பழமைச் சிறப்புடையது சங்க இலக்கியம். இந்திய இலக்கியங்களில் தனித்தன்மை வாய்ந்தன என்பதை எடுத்து விளக்குவன சங்க இலக்கியங்கள். உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். தமிழை உயர்தனிச் செம்மொழி என உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்கள். சங்ககால மகளிர் கல்வி, ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கினர். கவிபாடும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தனர். புலமைமுற்றிய பூவையராகப் பல பெண்கள் திகழ்ந்திருக்கின்றனர். அத்தகைய சங்க மகளிரின் கற்பும் கைம்மையும் குறித்து ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியத்தில் மகளிர்:

சங்க இலக்கியத்தில் கற்பு என்பது ஆணுக்கு அடங்கி அவன் சொற்படி நடக்கும் அடக்கக் கோட்பாடாக அமைந்தமையையும், கைம்மை என்பது பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதையும் காணலாம். அச்சம், நாணம், மடம் ஆகிய இப்பண்புகள் பெண்ணுக்குச் சமூக எதிர்ப்பார்ப்புக்களாக விளங்கின.

திருமண முறையும் குடும்பம்:

குடும்பம் என்பது சமூகத்தில் ஒரு சிறிய அலகாகும். சங்க மகளிரின் திருமண முறை பற்றிச் சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல்களில் தெளிவான செய்திகள் காணப்படுகின்றன (அகம்.86,136) சங்க இலக்கியக் குடும்ப அமைப்பு தனிக்குடும்பம் வகையைச் சார்ந்ததாகும். திருமணம் என்பது பாலின நிறைவுக்கு அப்பாற்பட்ட குடும்ப வாழ்க்கையைக் குறிப்பது என்ற கருத்து சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றது. உடன்போக்கு, களவு மணம் ஆகியவற்றில் மட்டுமே பெண் தன் உரிமையை நிலைநாட்டியமை புலப்படுகின்றது. திருமணத்திற்குப்பின் பெண்கள் பிறந்த வீட்டில் உடனுறைந்து வாழவில்லை. சங்க இலக்கிய மகளிர் கணவரைப் பேணும் பண்புடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

''கற்பு'' பண்பாட்டு விளக்கம்:

''தமிழ்ச்சமுதாயத்தின் தொடர்வரலாற்றில் பெண் நான்கு நிலைகளில் விளங்குகிறாள்.'' 1. கன்னி, 2. குடும்பத் தலைவி 3. விதவை, 4. பரத்தமை என்பனவாகும். முற்கூறப்பட்ட நான்கு பிரிவினரும் சங்க இலக்கியத்தில் காட்டப்படுகின்றனர். பெண்ணை நான்கு நிலைகளிலும் வேறுவேறாகப் பிரித்துப் பார்க்க வைப்பது கற்பு என்னும் கோட்பாடு தான். தந்தைவழிச் சமுதாயம் கற்புக் கோட்பாட்டில் வலுவடைகிறது. பரத்தமை, கைம்மை, இரண்டும் கற்பின் அடிப்படையில் ஆதிக்கம் பெறுகின்றன. ''ஒரு தார மணம் உருவாகிய கால கட்டத்தில் பலதார மணமும், பரத்தமையும் ஆணுக்கு மட்டுமே உள்ளனவாக ஆயின. பெண் மட்டுமே கற்புடன் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. பெண் தன்னைப் பொறுத்தவரைக் கற்புடனும் தாம்பத்திய ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும்'' (ஏங்கெல்ஸ், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.103) ''கற்பு'' என்பது ஒருவருடைய நடவடிக்கையில் பால் உறவில் தன்னைக் கட்டுப்படுத்துவதைக் குறிப்பதாகும். உடல் தூய்மை என்பது திருமணப் பிணைப்பிற்கும் வெளியே பாலுறவு நடவடிக்கையில் கட்டுப்பாடுடன் செயல்படுவதைக் குறிக்கும்'' என்றும் குறிப்பிடுகின்றது கலைக்களஞ்சியம்.(The Encyclopedia of Religion Volume-3, p.228)

சங்க இலக்கியத்தில் ''கற்பு'' என்ற சொல்:

மாசில் கற்பு, முல்லை சான்ற கற்பு, கடவுட் கற்பு, நகரடங்கிய கற்பு, மறுவறு கற்பு, நிலைஇய கற்பு, மனைமாண் கற்பு, அடங்கிய கற்பு, உவர்நீங்கு கற்பு, மறுவில் கற்பு, அருந்ததி அனைய கற்பு போன்ற பல தொடரமைப்புக்கள் கற்பின் மேம்பாட்டை உணர்த்துகின்றன.

கற்பு, கைம்மைக்குரிய தோற்றம்:

இந்து மதத்தில், தமிழ்ச் சமுதாயத்தில் கற்புக்கு ஒரு தோற்றம், கைம்மைக்கு ஒரு தோற்றம் என்பது இன்றும் காணப்படக்கூடிய காட்சியாகும். பெண்களின் ஒப்பனை கணவன் இறந்த நிலையில் சிதைவு பெற்று கைம்மைக்குரிய தோற்றத்தை உருவாக்குகிறது.

கற்பிற்குரிய அடையாளங்கள்:

கற்பிற்குரிய தோற்றப் பொலிவாக மங்கல அணி இடம்பெறுகின்றது. மங்கலப் பொருட்களாகப் பொட்டு, தாலி, மிஞ்சி, மஞ்சள் ஆகியன கருதப்படுகின்றன. இவற்றில்கூட இன்றும் பொட்டும் தாலியும் பெண்ணுடன் இணைந்தனவாகக் காட்சியளிக்கின்றன.

சங்க மகளிரின் திருமண நிகழ்வுச் செய்திகள்:

அ) வாகையிலை, அறுகின் கிழங்கில் உள்ள அரும்புகளோடு சேர்த்துக்கட்டப்பட்ட வெண்ணூலாகிய காப்பு.

ஆ) தூய உடை

இ) இழை அணிகள் அணிதல் (அகம். 136).

ஈ) தலைமகன் தலைமகளுக்குப் பின்னிருங் கூந்தலில் மாலை அணிவித்தல் (ஐங்.294).

உ) மக்களைப் பெற்ற வாலிழை மகளிர் கற்பு நெறியினின்று வழாமல், தமர் தர ஓர் இல் கூடுதல் (அகம்.86) ஆகியவற்றைத் திருமண நிகழ்வுச் செய்திகளாகக் காண முடிகிறது.

கைம்மை பற்றிய செய்திகள்:

அ) வளைநீக்கல் (புறம்.237:7-14)

ஆ) தொடி கழிதல் (புறம்.238: 6-7, புறம்.280:4-9)

இ) இழை களைதல் (புறம்.224:10-11)

ஈ) கூந்தல் களைதல் (புறம்.25:10-14, 250:3-4, 262,280)

உ) இன்னாப் பொழுதில் உண்ணல் (புறம். 248:3-4)

ஊ) பச்சைக்கீரை உண்ணல் (புறம். 246)

எ) பாயின்றி வதிதல் (புறம். 246) ஆகியன குறிக்கப்பட்டு உள்ளன.

சங்க மகளிரின் திருமணத்தில் இழை அணிகள் அணியப்பட்டன. கைம்மையில் இழை, வளை, தொடி களையப்பட்டன. கைம்மை வாழ்க்கையில் கூந்தல் களைதலில் மலர் நீக்கம் தானாகவே நடக்கிறது. திருமணத்தில் மங்கல மகளிர் வாழ்த்துகின்றனர். சங்க காலத்தில் கைம்மை மகளிர் வாழ்த்தியதாகவோ, நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகவோ செய்திகள் இல்லை. கற்பு வாழ்க்கையில் விருந்தோம்பல் பண்பு சிறப்பாகப் போற்றப்பட்டது. இன்னாப்பொழுதில் பசலைக்கீரை, புல்லரிசி, வெள்ளைச்சாந்து, பழஞ்சோறு உண்பது கைம்மைக்குரியதாக உள்ளது.

கைம்மையின் மூன்று நிலைகள்:

கைம்மையில் ஒப்பனை நீக்கம், உணவு நீக்கம், பழக்கநீக்கம் என்ற மூன்று நிலைகள் காணப்படுகின்றன. வளை, தொடி, இழை ஆகியன கணவன் துஞ்சிய நிலையில் களையப்பட்டிருக்கின்றன. பெருஞ்சித்திரனார், வெளிமான் என்னும் வள்ளல் துஞ்சிய போது, வருந்திப் பாடிய பாடலில் இச்செய்தி வெளிப்படுகின்றது. அறனில்லாத கூற்றம் வெளிமான் உயிரைக் கவர்ந்தமையால் அவனது மகளிர் தம் மார்பில் அறைந்து கொள்வதையும் கைம்மைக் கோலத்தின் அறிகுறியாக அவர் கைவளைகளை உடைப்பதையும் அவை வாழைப் பூப்போல சிதறிக்கிடப்பதையும் பாடியுள்ளார் (புறம். 237: 7-14). கைம்மை மகளிர் தம் கூந்தலை நீக்கிய செய்தியைப் புறநானூற்றில் நான்கு பாடல்கள் எடுத்து இயம்புகின்றன (புறம். 25,250,261,280). திருமணத்திற்கு முன்பும், மணநிலையிலும், பெண்கள் பூச்சூடியிருக்கின்றனர். கைம்மையில் கூந்தல் நீக்கத்துடன் மலர் நீக்கமும் இயல்பாகவே நிகழ்ந்துள்ளது.

கைம்மை - சமூகப்பண்பாட்டு விளக்கம்:

தமிழகத்தில் கணவனை இழந்த பெண்டிர் கைம்மை மகளிர் என அழைக்கப்பட்டனர். கைம்மை நிலை என்பது தந்தைவழிச் சமுதாயத்தின் ஒருதார மணமுறை என்ற சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டது. கணவர் இறந்தால் மனைவி இறக்க வேண்டும். ஆனால் மனைவி இறந்தால் கணவர் இறக்க வேண்டியதில்லை. நற்றிணை, புறநானூறு ஆகிய நூல்களில் மட்டுமே கைம்மை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. கணவனை இழந்த நிலையில் இப்பெண்டிரது வாழ்க்கைமுறை, தொழில் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில்,

1. ஆளில் பெண்டிர் (நற்.353)

2. கழிகல மகளிர் (புறம்,280)

3. பருத்திப்பெண்டிர் (புறம்.125)

4. தொடிகழி மகளிர் (புறம்.238)

5. கைம்மை (புறம்.125, 261)

6. படிவமகளிர் (நற்.273)

7. உயவற்மகளிர் (புறம்.246)

என அழைக்கப்பட்டனர்.

மணிமேகலை கூறும் மூன்று நிலைகள்:

கணவனை இழந்த கைம்மை மகளிர் நிலையை இன்னுயிர் ஈதல், நளிமூயெரிபுகுதல், நோற்றுடம்படுதல் என்று மூன்றாக வகைப்படுத்திக் கூறுகிறது. மணிமேகலை, கைம்மை மகளிர் அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் தலைக்கற்பினர், இடைக்கற்பினர், கடைக்கற்பினர் என மூன்று வகைப்படுத்துகின்றனர். (எம்.கே.எம். அப்துல்காதீறு ராவுத்தர், செந்தமிழ்ச்செல்வி, தொகுதி ஆறு, பக். 356-359)

தலை, இடை, கடையாய கற்பு:

தலையாய கற்பு என்பது கணவன் உயிர் துறந்த செய்தி கேட்டு உயிர் விடுதலாகும். புறம். 62 ஆம் பாடல் தலைக்கற்பினைக் கூறுகின்றது. கணவனுடன் உயிர் விடுதலைத் தலையாய கற்புடையவர் என்பார் உ.வே.சா. (உ.வே.சா.உரை, புறம். 62.ப.151).

கடைக்கற்பு என்பது கணவனுடன் தானும் உயிர்மடிதலாகும். இதனைப் பெண்டிர் கணவரின் சிதையிலோ அல்லது தீவளர்த்தோ, தீப்புகுந்தோ அல்லது உயர்ந்த மலையில் ஏறிக்குதித்து உயிரை மாய்த்தலாகிய வரைபாய்தல் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றுவர். இடைக்கற்பாகிய உடன்கட்டை ஏறுதலை புறம். 240 பாடல் உணர்த்துகிறது. ஆய் ஆண்டிரன் இறந்தபோது அவன் உரிமை மனைவியர் உடன் உயிர் நீத்த செய்தியை இப்பாடல் காட்டுகின்றது.

கணவன் இறந்த பின் உயிர்மேல் பற்றுக்கொண்டோ அல்லது சந்ததியினைக் காக்கவோ, கைம்பெண்டிர்க்குரிய சில நடைமுறைக் கட்டுப்பாடுகளைக் கொண்டு உயிர் வாழ்தலாகும். சங்க இலக்கியத்தில் இக்கைம்கை நோன்புமுறை தங்களை வருத்திக் கொண்டு வாழும் நிலையினைதாகக் காட்டப்படுகின்றது. கைம்மை நோன்பு ஐந்து நிலைகளில் அமைந்துள்ளது. அவை 1. அணிகலன்களைக் களைதல், 2. கூந்தல் கொய்தல், 3. பாயின்றிவதிதல், 4. கட்டுப்பாடான உணவு உண்ணுதல், 5. குறிப்பிட்ட தொழிலை மேற்கொள்ளுதல் ஆகும்.

முடிவுகள்:

சங்க இலக்கியத்தில் ''கற்பு'' என்பது ஆணுக்கு அடங்கி அவன் சொற்படி நடக்கும் அடக்கக் கோட்பாடாக உள்ளது. ''கைம்மை'' என்பது பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. தாய் வழிச் சமுதாயம் என்பது சங்க இலக்கியத்தில் இல்லை. பெண்களை ஒடுக்கி வைப்பதற்கான இலக்கியக் குறியீடு ஒருதார மணமுறை. சங்க இலக்கியத்தில் ''கற்பு'' என்ற சொல்லைத் ''தூய்மை'' என்ற பொதுப்பொருளில் குறித்துள்ளனர்.

நன்றி: முன்னைத்தமிழ் இலக்கியம்.

 

கருத்துகள் இல்லை: