30/01/2011

சாதியை மையமிட்ட கலகக்குரல்களின் வரலாறு - இரா. பழனிச்சாமி

மனிதன் பிறப்பு முதல் பல அனுபவங்களைச் சந்திக்கிறான். அவன் சந்திக்கும் மனிதர்களும்; அனுபவங்களும் அவனுக்குச் சாதகமாக அமையாத பொழுது ஏற்படும் விரக்தியின் மூலம் அவன் சந்தித்தவற்றிற்கு எதிர்ப்பான கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறான். அப்பகுதி மற்றையோரின் நடவடிக்கைகளை எதிர்த்த கலக நடவடிக்கையாக அமைந்து விடுகிறது. இக்கால நடவடிக்கை அவனுடன் தொடர்புடைய சாதி, பொருளாதாரம், பண்பாடு, அரசியல் என அனைத்து நிலைகளிலும் எதிரொலிக்கத் துவங்கிவிடுகிறது. இவ்வாறு எதிரொலிக்கத் தொடங்கிய சாதியை மையமிட்ட கலகக்குரல்களின் வரலாற்றைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. சமூக நலனுக்கு எதிரான பல பழக்க வழக்கங்கள் சமூகத்தின் ஏற்புடைமை பெற்றனவாகவும் உள்ளன. அத்தகைய ஏற்புடமையினைப் பெறுவதற்கு ஏதேனும் காரணங்களும் இருந்திருக்கலாம். எனினும், அத்தகைய பழக்க வழக்கங்கள் மக்களைப் பிரித்து வேறுபடுத்தும் போக்கினையும் கடைபிடிக்கின்றன, இதற்கு ஏற்புடமை பெற்ற சமூகச் சீர்கேட்டுப் பழக்கங்களுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் சாதி சமயத்தை முன்னிறுத்திய இந்திய மதச் சூழலில் கலகக்குரல்கள் என்று அழைக்கப்படுகின்றன. அக்குரல்கள் மக்களின் வாழ்க்கைத் தேவையுடன் இணைந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுவதால் மக்களின் அனைத்து நிலைகளிலும் எதிர்புணர்வு தோன்றுவதும் இயற்கையாக அமைந்து விடுகிறது.

இவ்வாறு தோன்றும் கலகக்குரல்களின் நோக்கம் மையத்தை விளிம்பை நோக்கிக் கொண்டு செல்வதல்ல. விளிம்பை மையத்தை நோக்கி அழைத்துச் செல்லும் அதே வேளையில் மையத்திலுள்ள தேவையில்லாத அம்சங்களையும் கட்டாயத்தில் திணிக்கப்பட்ட கருத்துக்களையும் கேள்விக்குட்படுத்தி மையத்தையும், விளிம்பையும் இணைக்கும் முயற்சியில் இத்தகைய குரல்கள் ஈடுபடுகின்றன. அம்முயற்சிகள் மையத்திலிருந்து விளிம்பை நோக்கிச் செல்லும் பொழுது சமரசமாகவும் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிச் செல்லும் பொழுது மேனிலையாக்கமாகவும் கருத்துருப் பெறுகின்றன. தமிழிலக்கிய வரலாற்றிலே சாதி பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம் முதல் காண முடிகிறது சங்க இலக்கியங்களிலும், கவிகைப் புலையன் (கவி : 95) எரிகோல் கொள்ளும் இழிசன (புறம். 287), இழிசனன் குரலே (புறம். 289) பசைவிரல் புவைத்தி (அகம். 387) என்ற சொற்களின் வழியே சாதியின் இருப்புப் பற்றி அறியமுடிகிறது. என்றாலும் அக்காலத்தில் சாதியத்திற்கெதிரான கலகக்குரல்கள் ஓங்கி ஒலித்ததைக் காணமுடியவில்லை. அதற்கு அடுத்த காலகட்டமான நீதி நூல்கள் எழுந்த காலத்தில் சமூகம் பல்வேறு சமூகச் சீர்கேட்டுப் பழக்கங்களுக்கு ஆட்பட்டிருந்தது. எனவே தான் மக்களை நல்வழிப்படுத்தும் நூல்கள் இயற்ற வேண்டிய கட்டாயத்தை சமூகச் சூழல்கள் ஏற்படுத்தியுள்ளன. அத்தருணத்தில் சாதிய அளவில் எழுந்த சில எதிர்ப்புக்களை சமப்படுத்துவதற்கென்று சமத்துவம் பேசும் ஒரு தன்மை மேலோங்கியது. இதனை,

''சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்

இட்டோர் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ளபடி'' (நல்வழி : பாடல் 2)

என்பதன் மூலமும்,

''மேலிருந்தும் மேலார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லர் கீழல் லவர்'' (குறள் 973)

என்று திருவள்ளுவர் கூறுவதன் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. சாதிய எதிர்ப்புக்குரல் பலமாக ஒலிக்கத் தொடங்கிய காலகட்டங்களில் மையத்தில் இருப்போரும் சாதியத்திற்கெதிரான குரல்களை எழுப்ப வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது. இதனை மையத்திலுள்ள ஏனையோரும் அங்கீகரிக்க வேண்டிய சூழலும் நிலவியுள்ளது. இதனை விளிம்பு நிலை மக்கள் திரளிடமிருந்து அதிகார மையங்களை நோக்கிய கலகக்குரல்கள் எழுவது என்பது சமூக வரலாற்று விதிகளில் ஒன்றாகும். அதிகார மையங்களுள் முரண்பாடுகள் தோன்றுவதும் வரலாற்று விதிதான் என தொ. பரமசிவன் குறிப்பிடுவதன் வழியே அறிய முடிகிறது. எனினும் உள்முரண்பாடுகளும் கூட உள்நோக்கத்திலேயே எழுந்துள்ளதையும் காணமுடிகிறது.

சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்த பெரியவர்கள் தங்கள் சமய வளர்ச்சிக்கு ஒரு கருவியாக சாதியொழிப்பு என்பதைப் பேச வேண்டிய கட்டாயம் இருந்ததை அறியமுடிகிறது. எனவேதான் சாத்திரம் பல பேசும் சழக்கர்கள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் என்று அப்பர் தமது சமயச் சித்தாந்தத்தை வளர்க்க, தாழ்த்தப்பட்ட மக்களையும் தமது சமயத்தில் ஒன்றிணைப்பதைக் காணமுடிகிறது. இவரைப்போன்றே நம்மாழ்வரும்,

''குலம்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ்இழிந்து எத்தனை

நலம்தான் இல்லாத சண்டாளர் சண்டாளர்களாகிலும்

வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்

கலந்தார் அடியார்தம் அடியார் என் அடிகளே'' (திருவாய்மொழி, பா. எண் : 2971)

எனப்பாடுவதன் மூலமும் சாதிப் பிரிவுகளை ஏற்றுக் கொள்வதை அறிகிறோம். வர்ணாசிரமத் தர்மப்படி நால்வர்ணத்தை ஏற்றுக் கொண்ட நம்மாழ்வார் அந்த நான்கிலும் குறிப்பிடாத கீழ்ச்சாதியினரையும் தம் அடியார்களாக ஏற்றுக் கொள்ளக் காரணம் அச்சண்டாளர்களும் திருமாலை வணங்குவதேயாகும் என்று தமது சமயத்தை மக்களிடம் பரப்பும் போக்கைக் கடைபிடிப்பதையே காண முடிகிறது. திருமாலை வணங்குபவர்கள் அனைவரும் அடியவர்கள் என ஏற்றுக் கொண்டால் கி.பி. 1900த்துக்குப் பிறகு ஏன் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது என்பதை மேலே கண்டவற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம் சைவ, வைணவ சமயங்கள் சார்பாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் எழுப்பிய சாதிய எதிர்ப்புக்குரல் என்பது சமயத்தை நிலை நிறுத்த எழுந்த குரல்களே என்பதை அறிய முடிகிறது. இதனை சிவன் அல்லது திருமால் வழிபாடு என்ற பெருநெறிக்குள் சாதி வேற்றுமை தேவையில்லை என்னும் சிந்தனை பேசப்பட வேண்டியதாயிற்று என தொ.பரமசிவன் கூறுவதன் மூலம் மேலும் உறுதி செய்யலாம்.

பக்தி இயக்க காலகட்டத்தில் சாதியம் இறுக்க மடைந்ததிருந்த பக்தி இயக்கங்களான சைவம், வைணவம் என்பனவற்றுள்ளும் சாதிய அடையாளத்தை முதன்மைப்படுத்தாத வைணவ இலக்கியங்களிலும், வைணவ மதத்தினருள்ளும் சித்தர்கள் போன்ற கலகக்காரர்களைக் காணமுடியவில்லை. இராமானுஜர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளையே காணமுடிகிறது. இதனை அறிவதற்கு இறைவனை அடைய ஆழ்வார்களும், நாயன்மார்களும் மேற்கொண்ட பக்தி மார்க்கமே நமக்குத் தெளிவுப்படுத்துவதாக அமைகிறது. பறையர் சாதியில் பிறந்த நந்தனார் பல துன்பங்களைச் சந்தித்து நாளை, நாளையென்று நாட்களைக் கடத்தி இறுதியாக இன்னல் தரும் இடிபிறவி இது, அம்பலத்தைக் காணத் தடை ஆயிற்றே என வருந்தித் துயில் கொண்ட இவரது கனவில் கூத்தர் பிரான் புன்முறுவலுடன் தோன்றி இப்பிறவி நீங்க எரியினிடை மூழ்கி முப்புரி நூல் மார்புடன் என்னை அடைவாயாக என இறைவன் கூறியதாகக் கூறுவதன் மூலம் சாதிய அடக்குமுறைகள் சைவ சமயத்தில் எவ்வாறு கடைபிடிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இதனை மேலும் அறிய கண்ணப்பநாயனார் போன்ற தாழ்த்தப்பட்டவர்களின் தெய்வ தரிசனமும் உதவுகிறது. வைணவ சமயத்தில் மேலே கண்ட போக்கு இல்லை.

இங்கு இறைவனின் அருள் அனைவர்க்கும் ஒரே தன்மையுடன் கிடைக்கின்றது. பாணர் குலத்தவராகிய திருப்பாணாழ்வார் உறையூரில் பிறந்து திருமாலை வழிபட்டார். தான் தீண்டப்படாதவரென்பதால் காவிரியின் தென்கரையிலிருந்து வழிபட்ட அவரை, நாள்தோறும் காவிரியிலிருந்து நீர் கொணரும் அர்ச்சகரது கனவில் தோன்றித் தோளில் சுமந்து வருமாறு திருமால் பணித்தார். அவரும் அவ்வண்ணமே செய்ய ஆழ்வார் அறங்கனின் அழகைக் கண்ணாரக் கண்டு போற்றினார் எனத் தமிழண்ணல் குறிப்பிடுவதன் மூலம் அறிகிறோம். மேலே கண்ட அடியவர்களின் தெய்வத்தரிசனம் என்பது தெய்வத்துடன் மட்டும் தொடர்புடையதன்று. தெய்வத்தின் பெயரால் மறைந்து கொண்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்டுவிக்கும் மையத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதன் மூலம் சாதியம் என்பது சமயங்களின் கூறாக உருவாக்கப்பட்ட வரலாற்றை ஓரளவு கணிக்கலாம். மேலே கண்டவற்றின் மூலம் சைவ சமயத்தில் சாதியத்தை இறுக்கமாக்குகிற போக்கு காணப்படுவதை அறிய முடிகிறது. எனவே தான் சைவ சமயத்தில் பின்பற்றப்பட்ட அடக்கு முறைகளுக்கெதிராக சித்தர்கள் என்ற கலகமரபுக்காரர்கள் குரல் கொடுப்பதைக் காண முடிகிறது. சித்தர்களை தெ.பொ.மீ. போன்றோர் கலகக்காரர்கள் எனப் பெயர் சுட்டுமளவிற்கு அவர்களின் குரல் கலகக்குரலாக ஒலிப்பதைக் காண முடிகிறது. சித்தர்களின் பாடல்களின் அடிநாதமாக சாதிய எதிர்ப்புக் குரல் தொடர்ந்து ஒலிப்பதைக் காண முடிகிறது.

சித்தர்கள் பல்வேறு தளங்களில் சாதியத்திற்கெதிராகக் குரல் எழுப்பினாலும் சமயத்தின் உள்ளேயிருந்து கொண்டு எழுப்பிய குரல்கள் சமூகத்தை அடியோடு மாற்றிவிடவில்லை. என்பதை, சித்தர்கள் சமயச் சிந்தனையைக் கடந்தவர்கள் அல்ல, சமய சடங்காச்சாரங்களைப் புறக்கணித்தவர்கள் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று குறிப்பிடும் பொழுது இவற்றை உணரலாம். ஆனால் சமயக்கட்டுக்கோப்புக்குள் வாழ்வியலை அமைத்துக் கொண்டு சமூகத்தின் வர்ணாசிரம, சாதிய வேறுபாடுகளைக் கட்டறுக்க நினைத்தனர். இதுவே இவர்களின் சமுத்துவ சிந்தனையுன் அடித்தளமும் பலவீனமுமாகும் என கோ.கேசவன் குறிப்பிடுவதன் மூலம் அறியலாம் எனினும் சாதியத்திற்கெதிராகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் பலமாகக் குரல் கொடுத்ததன் மூலம் சாதிபற்றிய விழிப்புணர்வுச் சிந்தனையை ஏற்படுத்தியவர்கள் சித்தர்களே என்பது மறுக்க முடியாத உண்மை நிலையாகும். எனவே தான் சித்தர்களை மதரீதியாக சமயப் பஞ்சமர்கள் என்று சைவர்கள் குறிப்பிட்டனர் என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

சித்தர்களுக்குப் பின் சாதிய நெறியை நோக்கிக் குரல் கொடுத்தவர்களுள் முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் ஆவார். இவரின் குரல் சாதிசமயச் சமூகத்திற்கெதிரான கலகக்குரலாக ஒலிப்பதை அடையாளம் காண முடிகிறது. எனவே இவரை€யும் சித்தர்களைப் போன்று சைவர்கள் ஒதுக்கிப் பார்த்தனர் என இராஜ்கௌதமன் குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திய நூற்றாண்டு என கூறலாம் தமிழ் இலக்கியங்களிலும் இக்காலம் மறுமலர்ச்சிக் காலம் என அழைக்கப்படுகிறது. இக்கால கட்டங்களில் சாதியத்திற்கெதிராகப் பலர் குரல் எழுப்பியுள்ளனர். அவர்களுள் தமிழிலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ள பாரதியார், பாரதிதாசன் போன்றோர் முக்கியமானவர்கள் ஆவர். அந்தண குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் சாதித் தீமைகளைத் சாடியதில் பாரதிக்கு தனிச்சிறப்பான இடம் உண்டு. அவர் தமது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களைத் தம்முடன் அரவணைத்துச் சென்றவர் என்பதை அறிய முடிகிறது. பாரதியார், சிவவாக்கியார் போன்ற சித்தர்களின் சாதிய எதிர்ப்புக் கருத்துக்களைத் தமது பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். எனவே தான் பாரதி சித்தர்களின் வரிசையில் வைத்து எண்ணிப் பார்க்கப்படுகிறார். இவரைப் போன்று பாரதிதாசனும் சாதி சமயத்திற்கெதிரான தமது குரலைப் பதிவு செய்துள்ளார் இவர்களைப் போன்று எண்ணற்ற கவிஞர்களும் அறிஞர்களும் சாதியத்தை மையமிட்ட இச்சமூக அமைப்பிற்கெதிராகக் கலகக் குரல்களை எழுப்பி வந்துள்ளனர் வருகின்றனர்.

இவ்வாறு காலங்காலமாகத் தமிழிலக்கியங்களில் எழுப்பப்பட்டுவந்த கலகக்குரல்கள் 1990க்குப் பிறகு வீறு கொண்டுள்ளது. மேலை நாட்டுக் கோட்பாடுகளின் வரவின் மூலம் புதிதாகக் கிளைத்த இலக்கிய வகைகளில் ஒன்றாகத் தலில் இலக்கியம் என்னும் வகை, தமிழிலக்கியப் பரப்பிலே வேர்விட்டு விழுதுபரப்பி வருகிறது. இவ்வகை இலக்கியம் வந்தவுடன் சாதியத்திற்கெதிரான பதிவுகள் தீவிரப்பட்டுள்ளன எனக் கூறலாம். எவையெல்லாம் இழிந்தவை என்று கருத்தாக்கம் ஏற்படுத்தப்பட்டு மக்களை அடக்கியாள வகை செய்தனவோ அத்தகைய தாழ்மைப்படுத்தப்பட்ட பண்புகள் இன்று சிறப்புப் பெற்றுள்ளன. கீழானவை எனக் கருதப்பட்டவை மனிதனின் சமூகத் தேவையுடன் இணைந்தவை எதார்த்தமானவை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. முன்பிருந்த இலக்கியங்களின் தன்மை சோதிக்கப்பட்டு தரமற்றவைகளை தலைகீழாக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், முன்பு எழுதப்பட்டவை மேட்டுக்குடிச் சாதியினரைத் திருப்திப்படுத்த என எழுந்த இயக்கியங்கள் முன்வைக்கின்றன. தம் சாதிப் பெருமையை பறைசாற்றும் அதே வேளையில் ஒட்டு மொத்த சாதியொழிப்பிற்கான குரலையும் முன்வைப்பதால் இவ்வகை இலக்கியத்தை கலக இலக்கியம் என்றும், மொழி நடையில் இழிவானதாகக் கருதப்பட்ட எதார்த்தமான பேச்சு மொழியைப் பதிவு செய்து சாதியத்திற்கெதிரான குரலைப்பதிவு செய்வதால் கலக மொழி என்றும் கட்டப்படுவதைக் காண்கிறோம். இவ்வாறு அவை அழைக்கப்படக் காரணம் சாதி - சமயத்திற்கெதிராகவும், மரபு வழியான பண்பாட்டிற்கெதிராகவும் தமது குரலைப் பதிவு செய்வதுடன், சாதிய அடையாளத்தை அழித்துச் சாதியற்ற சமத்துவ சமுதாயம் படைக்க முயல்வதே என்பதையும் அறிய முடிகிறது.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

 

கருத்துகள் இல்லை: