30/01/2011

தமிழில் தொல்பொருள் ஆய்வு - க. பீரிதா

ஆய்வு வரலாற்றின் நிலைகள்:

1910 க்கு முன்பு வரை ஐரோப்பியர்கள் பழம் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர். எனவே ஆரம்பத்தில் இந்த ஆய்வு, பொழுது போக்காகவே அமைந்தது. தங்களுடைய மதத்தை பரப்புவதற்காக இங்கு வந்த ஐரோப்பிய பாதிரிமார்கள் இந்தியர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினர். இந்திய ஆராய்ச்சியாளர்கள் 1940 - 45 கால கட்டங்களில் நம் நாட்டின் தொல் பொருட்களை அறிய முற்பட்டனர். பின்பு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வட்டார அளவில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 1956 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு அமைந்தது. ஐரோப்பியர்களின் பொழுது போக்கு அம்சமாகத் தொடங்கி அப்பாதிரிமார்களின் ஆராய்ச்சி வளர்ச்சியாகி இந்திய அறிஞர்களின் கவனத்தை கவர்ந்து பின்பு வட்டார அளவில் மேன்மையடைந்தது.

பண்டைக்கால மக்கள் விட்டுச்சென்ற சான்றுகளின் அடிப்படையில் அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அம்மக்களது நாகரிகத்தைப் பற்றியும் எடுத்தியம்புவது தொல்லியலாகும். ஐரோப்பியர்கள் பழம் பொருள்களைப் பொழுது போக்கிற்காக சேகரித்தனர். இதன் நீட்சியாகவே ''மியூஸ’யம்'' என்னும் அருங்காட்சியகம் பின்பு ஏற்பட்டது. ஆங்காங்கே இருக்கக் கூடிய மக்களின் வாழ்வியலையும், பழங்குடி மக்களைப் பற்றிய செய்திகளையும் விரிவாக எழுதி வைத்தனர். இவ்வாறு சேகரித்த குறிப்புகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வைத்தனர். இவ்வாறு முதன் முதலில் தொகுத்தவர் மெகன்ஸ’ ஆவார். இதுவே பின்னாளில் தொல்பொருள் ஆய்வாக உருவெடுத்தது. அதன் வழி பழங்கால மக்கள் பயன்படுத்திய நாணயங்கள், எழுத்துக்கள் பானைஓடுகள், பாறைகள், உருவங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியன கிடைத்தன.

1910 லிருந்து 1940 வரை:

ஐரோப்பியர்களிடையே கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியர்களைப் பற்றிய ஆராய்ச்சி எழுந்தது. இந்தக் காலகட்டங்களில் ஐரோப்பியர் ஏற்படுத்திய கல்வித் துறையின் விளைவாக பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத் துறை தோன்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சிகளின் உச்சகட்ட வளர்ச்சியாக 1920 ஹ“ராஸ் பாதிரியார் ஹரப்பா - மொகஞ்சதாரோ தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியே இந்திய தொல்பொருள் ஆய்வின் தொடக்கமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வரலாற்றை எழுத தொல்பொருள் ஆய்வு சிறந்த வழிகாட்டியாய் அமைந்தது. இதனால் பிரிட்டிஷ்க்காரர்கள் இந்தியாவில் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கி வைத்தனர். இந்நிறுவத்திலிருந்து பல தொகுப்புகள் அச்சாக வெளிவரத் தொடங்கின. இதன் விளைவாக, பிரிட்டானிகா - இண்டிகா என்ற கல்வெட்டுத் தொகுப்பு வெளிவந்தது.

இந்திய அறிஞர்களின் தொல்பொருள் ஆய்வு:

1940 க்குப் பின் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் ஐரோப்பியர்களால் இந்த ஆய்வு நிறுத்தப்பட்டது என்றே சொல்லலாம். 1920 களில் நடந்த அளவு 1940 களில் இந்த ஆராய்ச்சி சிறப்படையவில்லை. இந்தியர்களே தொல்பொருள் ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இந்திய அரசாங்கத்தால் 1861 ல் தொல்லியல் ஆய்வு நிறுவனம் நிறுவப்பட்டது. இந்திய மொழிகளில் வந்த இதழ்களில் கல்வெட்டு தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை இந்திய கல்வெட்டு அறிஞர்கள் எழுதலாயினர். இந்தியத் துனைக்கண்டத்தில் தொல்லியலின் முக்கியத்துவம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தான் உணரப்பட்டது. வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1784 இல் ஆசியக்கழகம் என்ற அமைப்பின் வாயிலாக இந்திய இலக்கியங்கள், கோயில்கள், கலைகள் ஆகியவற்றின் பெருமைகளை ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். இந்திய வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு காலத்தில் தொல்லியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1946 இல் வீலர் என்பவர் ''பண்டைய இந்தியா'' என்னும் மலரை வெளியிட்டார். மேலும் ''இந்தியத் தொல்லியல் - ஓர் மதிப்பீடு'' என்னும் இதழ் 1953 ஆம் ஆண்டிலிருந்து வெளியானது.

இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றுப் புகழ் பெற்றது. ஆதலின் புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்றது. எனவே இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சிக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. அக்கழகத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்தவர் அலெக்சாண்டர் கன்னிங் ஹாம் ஆவார். அவரது பேருழைப்பின் பயனாக நாலந்தா, தட்சசீலம், பாடலிபுத்திரம், கோசாம்பி முதலிய பழைய நகரங்களைப் பற்றிய விவரங்களை அறிய முடிந்தது. தென்னிந்தியாவின் அமராவதி என்னும் இடத்தில் வியக்கத்தக்க சிற்பங்களும், கல்வெட்டுகளும், கட்டிடச் சிதைவுகளும் கிடைத்தன. இந்தியத் தொல்பொருள் ஆய்வு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வாக அமைந்தது சிந்து வெளி மற்றும் ஹரப்பா - மொகஞ்சதாரோ புதைபொருள் ஆராய்ச்சியாகும்.

சிந்து சமவெளி ஆராய்ச்சி:

இவ்விடம் புதைபொருள் ஆராய்ச்சிக்கு வளமான இடமாக இருக்கின்றது. இங்கு சான்ஹ’தேரோ, அலிமுராத், பாண்டிவாஹ’ முதலிய இடங்கள் உள்ளன. இது பற்றி எழுந்துள்ள ஆராய்ச்சி நூல்கள் பலவாகும். சிதைந்த கட்டிடம், மட்பாண்டம், நுண்ணிய துளையுடைய மிகச் சிறியமணிகள், வழவழப்பான களிமண் பொம்மை, பலவகை கற்களாலான விளையாட்டுப் பொருள், சித்திர எழுத்து, ராஜ முத்திரை ஆகியன கண்டறியப்பட்டன.

மொகஞ்சதாரோ ஆராய்ச்சி:

1922 இல் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நகரத்தில் கிடைத்துள்ள பொருள்கள் கணக்கில. அதனைப் பற்றி ஆராய்ச்சி கூறுகையில், இப்பொருள்களைப் பயன்படுத்திய மக்கள் ஏறத்தாழ கி.மு.3000 ஆண்டுகட்கு முற்பட்டவர்கள் என்றும் இவர்கள் நிலம் கடந்தும், கடல் கடந்தும் வாணிகம் செய்து பொருளீட்டியவர்கள் என்கிறது. மேலும் இவர்கள் பல தெய்வ வழிபாடு, உயர்ந்த ஆடை, அணிகலன், கைத்தொழில், இசை, ஓவியம், நடனம், மருத்துவம் ஆகியவற்றை அறிந்து வைத்திருந்தனர். இவர்கள் இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர்க்கு முற்பட்ட மக்கள் என்பதில் ஐயமில்லை. ஆயின் திராவிடரா? பிறரா? என்பது இன்றுள்ள ஆராய்ச்சி கொண்டு திட்டமாகக் கூறுவதற்கில்லை.

இந்திய வரலாற்றில் புதுமை:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய வரலாற்றுப் பாடநூல்களில் ஆரியர்க்கு முன் அநாகரிக மக்கள் வாழ்ந்தனர் என்ற வாக்கியம் சிறப்பிடம் பெற்றிருந்தது. ஆனால் இன்றைய நூல்களில் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு பாடமாக இடம் பெற்றுப் பழைய எண்ணத்தை மாற்றி விட்டது. இதனால் புதைபொருள் ஆராய்ச்சியின் சிறப்பினை நன்குணரலாம் அஃது ஒரு நாட்டு வரலாற்றில் மாறுதல்களை உண்டாக்கிக் கொண்டே செல்வது.

1956 லிருந்து ......1956 இல் மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு நேரு கூறியவாறு தொல் பொருள் சேகரிப்பு எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட்டது அதன்படி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சிகளில் முக்கியமானவை இரண்டு. அவை,

1. அரிக்கமேடு ஆராய்ச்சி

2. மணச்ச நல்லூர் ஆராய்ச்சி

மேலும் பூம்புகார் அகழ்வாராய்ச்சி, கங்கை கொண்ட சோழபுரம், உரையூர் ஆகிய இடங்களிலும் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்வழி கல்வெட்டுகள், எழுத்துக்கள், பாறைகள், நடுகற்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

கல்வெட்டாய்வு:

1837 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜேம்ஸ் பிரின்சப் கல்வெட்டுக்களையெல்லாம் திரட்டிப் படித்து இந்தியாவின் வரலாற்றைத் தெளிவாக்கினார். பின் ஆசியாவின் ஆராய்ச்சிகள், ஆசியக் குழுவின் இதழ், இந்தியாவின் பழைமை போன்ற நூல்கள் கல்வெட்டுக்களைப் பற்றி வெளிவந்தன. தமிழ்நாட்டில் செந்தமிழ், தமிழ்ப்பொழில் போன்ற இதழ்களில் தமிழ் அறிஞர்கள் மு.இராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், சதாசிவ பண்டாரத்தார், மயிலை சீனி. வேங்கடசாமி, சுந்தரேச வாண்டையார் போன்றறோரும் கல்வெட்டுக்கள் பற்றிய கட்டுரைகளை எழுதினர். தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதிகள் இதுவரை 25 வெளிவந்துள்ளன. தமிழகத்தில் சீவெல், மெகன்ஸ’ போன்றோர் ''தென்னிந்திய வரலாற்றுக் கல்வெட்டுக்கள் 18'' என்னும் தொகுதியை வெளியிட்டனர். ஐராவதம் மகாதேவன் ''ஹரப்பா எழுத்துக்களின் தொகுதி 26'' என்ற நூலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு இராமநாதபுரம் மாவட்டம் பூலாங்குறிச்சியில் பெரிய கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளது. அக்கல்வெட்டு 1600 (அ) 1700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1861 இல் கல்வெட்டாய்வு தொடங்கப் பெற்று இதுவரையில் சுமார் 75,000 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்பேடுகள் :

சென்னையில் இருந்த தமிழ் வரலாற்றுக்கழகம் பல்லவர் செப்பேடுகள் முப்பது, பாண்டியர்கள் செப்பேடுகள் பத்து ஆகிய இரு தொகுதியை வெளியிட தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை விழைந்துள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்துத் தொல்லியல் துறை தென்னிந்திய பழைமை எழுத்தியல் 25 என்ற நூலையும், மெக்கன்ஸ’யன் கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றையும் நூலாகவும் வெளியிட்டது.

நடுகற்கள் :

இறந்த சிறந்த மறவர்க்கு, இருக்கும் மறவர் கல் நாட்டி வழிபட்டனர். கல்லில் மறவர் தம் பெயரையும் பெருமையையும் பொறித்தனர். சில இடங்களில் உருவத்தையும் வரைந்தனர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்கள் கல்நடும் முறையை விரிவாகப் பேசுகின்றன. கி.பி.3 ஆம் நூற்றாண்டினின்று அண்மைக்காலம் வரை தொடர்ச்சியாக நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. பண்டு வீர மறவர்க்கு மட்டுமே நடுகல் எடுக்கப்பட்டது என்பதை ''வீரன்'' என்ற சிறு தெய்வப்பெயர் நினைவூட்டும்.

புதை பொருள் ஆராய்ச்சி :

பண்டை மக்கள் வாழ்ந்த பலதிறப்பட்ட இடங்களை அறிந்து அகழ்ந்ததுப் பார்த்து அவ்விடங்களில் காணப்படும் பொருள்களை ஆராய்ந்து அவற்றைப் பற்றித் தோன்றும் செய்திகளையும் அவற்றைப் பயன்படுத்திய மக்களைப் பற்றிய விவரங்களையும் அறியும் முயற்சியே புதைபொருள் ஆராய்ச்சி என்பது. பல்லாரி ஜில்லாவில் பெருங்கற்கள் அடுக்கிக் கட்டப்பட்ட பல வகைச் சமாதிகள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அனந்தப்பூர் ஜில்லாவில் கற்கால மக்கள் புறக்கணித்த கல் உளிகள், எந்திரங்கள், கத்திகள் முதலியன புதைபொருள் ஆராய்ச்சியில் சிக்கின. செங்கற்பட்டு ஜில்லாவில் (பல்லாவரம்) சவக்குழிகள், மண்பெட்டிகள், தாழிகள், எலும்புகள் முதலியன கிடைத்தன. திருநெல்வேலியிலுள்ள ஆதிச்ச நல்லூரில் பல ஏக்கர் பரப்பிள்ள இடங்களில் ஏராளமான தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. சேலம் ஜில்லாவில் (பல்லடம் தாலுக்கா) பல மண்மேடுகளும், கறுப்பு நிற மட்பாண்டங்கள், கோப்பைகள், ஆடு மாடு நிற்பது போன்ற கோலங்கள் ஆகியன கிடைத்தன.

அரிக்கமேடு அகழ்வாய்வு :

இவ்வூர் புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பத்திற்குப் பக்கத்தில் செங்சியாற்றங்கரையில் இருக்கிறது. புதைப்பொருள் ஆராய்ச்சியில் பெயர் பெற்ற ''துப்ரேய்ல்'' என்ற அறிஞரும் அவரது நண்பருமே அரிக்கமேட்டை கண்டுபிடித்தனர். அம்மேட்டின் உயரம் ஆற்று நீர்மட்டத்திலிருந்து 20 முதல் 30 அடி வரை இருக்கலாம். இங்கு மணிகள், சங்குகள் கற்கள், எலும்புத் துண்டங்கள், சிறப்பான உரோம சக்கரவர்த்தி அகஸ்டஸ் உருவம் பொறிக்கப்பட்ட கர்னீலியன் மணி ஆகியன கிடைத்தன. இவருக்கடுத்து சென்னைப் பொருட்காட்சி நிலையத்தலைவர் டாக்டர். ஐயப்பன், துப்ரேய்லின் உதவி பெற்று புதை பொருள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அப்போது 2மற்றும் 3 ஆம் நூற்றாண்டில் சாதவாகர்கள் வெளியிட்ட நாணயங்களும், கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட நாணயம் ஒன்றும் கிடைத்தது. டெர்ரகோட்டாவினால் செய்யப்பட்ட பதுமைகள் அரிக்கமேட்டில் இருந்த ஓவியத்திறனை காட்டின. அவ்வேலைப்பாடு தென்னிந்தியாவிற்கு புதிது. இங்குள்ள பெருங்கொண்டை இடப்பட்ட பதுமையும், மகாபுருஷர் முகங்கொண்ட பதுமையும் இந்தியாவில் ஓவியமும், சிற்பமும் செழித்திருந்த முதல் மூன்று நூற்றாண்டுகளைக் காட்டும். அரிக்க மேட்டின் மணிகளை சோதித்த எம். கார்ட்டனென அதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதுகிறார். அரிக்க மேட்டின் பொருளுக்கும் அமராவதியிற் கிடைத்த பொருளுக்கும் உள்ள ஒருமைப்பாட்டை உணர்கையில் இதன் காலம் முதல் மூன்று நூற்றாண்டுகள் என்கிறார் டாக்டர். இராச மாணிக்கனார்.

அகழ்வாய்வு :

இந்தியா 1950 ஆம் ஆண்டு குடியரசு நாடாக ஆன பிறகு எல்லா மாநிலங்களிலும் தனித் தொல்லியல் துறைகள் ஏற்படுத்தப்பட்டன. இவை மாநில அளவில் கலைச் செல்வங்களைக் காப்பதிலும், கள ஆய்விலும் கவனம் செலுத்தின. தமிழக பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் தொல்லியல் துறைகள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு அகழ்வாய்வினில் போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு மத்திய தொல்லியல் துறைகள் உதவின. தமிழர்கள் தமிழ்நாட்டினரே என்பதற்கான அகழ்வாய்வு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் இடைக்கற்காலப் பொருள்கள் வடமதுரை, அத்திரம்பாக்கம், காஞ்சிபுர வட்டம், மதுரை திருமங்கல வட்டம் ஆகிய இடங்களில் கிடைத்தன. புதிய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம், வட ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கிடைத்துள்ளன. சேலம் மாவட்டத்திலுள்ள பையம்பள்ளி என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட புதுக்கற்காலக் கருவிகள் வரலாற்று முதன்மை வாய்ந்தவை. புகழ் பெற்ற ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வு புதுக்கற்காலத்தைச் சேர்ந்ததே, இங்குக் கிடைத்த வேல்கள், கோழி உருவங்கள் ஆகியன தமிழருக்கு நெருக்கமான முருக வழிபாட்டோடு தொடர்புடையவை. தமிழகத்திற்கே உரியவையான நெல், கொள், சோளம், கேழ்வரகு முதலான தானியங்கள் மக்கிய நிலையில் இங்குக் கிடைத்துள்ளன. இங்கே கிடைத்த சில வெண்கலப் பாத்திரங்கள் மீது அப்பியபடி பருத்தித் துணி எச்சங்கள் காணப்பட்டன. எனவே ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தமிழ் மொழியைக் குறிக்கும் நேர் முகக் குறியீடு எதனையும் பெறாவிடினும் தமிழர் தம் பழக்க வழக்கத்தைக் குறிக்கும் சான்றுகளைத் தருகிறது.

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு:

புதுக்கோட்டைப் பகுதி புதைபொருள் ஆராயச்சிக்கு ஏற்ற இடம் ஆகும். இங்கு ஆராய்ச்சி மேற்கொண்ட போது இறந்தவன் உடல் உட்கார்ந்த நிலையில் தாழியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாழியைப் புதைத்த குழி மணல் இடப்பட்டு பாறையால் முடப்பட்டு இருந்தது இந்த இடங்கள் நிலத்தை விட சிறிது உயர்ந்துள்ளன. தாழிகள் பல வடிவின. பல அளவின. இவ்விடங்களை முற்றும் அகழ்ந்து ஆராய்ச்சி செய்யும் போது கற்கால, இரும்புக்கால மக்களைப் பற்றிய செய்திகளை அறியலாம். இவ்வாறே கர்நாடகத்திலிருந்து ''எபிகிராபிகா கர்நாடிகா - 9'' என்ற தொகுதியும், கேரளத்திலிருந்து ''திருவிதாங்கூர்'' தொல்லியல் வெளியீடுகள்'' என்பதும் ஆந்திராவிலிருந்து ''திருமலைதிருப்பதி தேவஸ்தானக் கல்வெட்டுக்கள் 13 '' என்ற தொகுதியும் தொல்பொருள் ஆய்வு வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

இறுதியாக:

1941 ஆம் ஆண்டிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சி மிக மெதுவாக நடைபெற்று வந்தாலும் அதனால் அறியப்பட்டுள்ள உண்மைகள் பலவாகும். 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வழி வந்து இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வு சமூக வரலாறு, பண்பாட்டுவரலாறு, பரிணாமம், கட்டிடக்கலை போன்ற பிற துறைகளுடன் தொடர்பு கொண்டு இருந்தது. அதிலும் குறிப்பாக மானிடவியல் ஆய்வுடன் நெருக்கமுடையதாய் அமைந்தது, இத்தகைய ஆய்வை இந்திய அரசாங்கம் சீரிய முறையில் கவனித்தால் பல வரலாற்று உண்மைகள் புலப்படுவது உறுதி.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.

 

கருத்துகள் இல்லை: