30/01/2011

நாட்டுப்புறப்பாடல்களில் கற்பனை - நீ.வ. கருப்புசாமி

இலக்கியத்தோற்றத்துக்குக் காரணமாய் அமைபவைகளில் கற்பனையும் ஒன்று. நாட்டுப்புற பாடல்களில் கற்பனை அதிகமாக இடம் பெற்றிருத்தலை இக்கட்டுரையில் அறியலாம்.

நீண்டநாள் குழந்தையில்லாமல் பின்னர் மகனைப்பெற்ற தாய் தாலாட்டுப் பாடும்போது தந்தையின் தவச்சிறப்பைப் பாடுகிறாள். கடலை வளைத்து, கல்தூணையும் வளைத்து, நிலவைப் பொழுதாக மாற்றித் தவம் செய்த பிறந்தவனோ எனப்பாடுகிறாள்.

''கன்னி தலைமுழுகி கனநாள் தவசிருந்து

வெள்ளைமுழுகி உங்கள் ஐயா வெகுநாள் தவசிருந்து

கடலைத் திரை வளைச்சி கல்தூண் உன் வளைச்சி

நிலவைப் பொழுதாக்கி - உங்கள் ஐயா

நின்னு தவம் செய்த கண்ணோ''.

பாட்டைக் கேட்டு குழந்தையும் அழுகிறான். தாயின் கற்பனைப் பாடலிலே பரந்து விரிந்து வெளிவருகிறது.

''தம்பி அழுத கண்­ர்,

ஆறாகப் பெருகி ஆனை குளித்தேறி,

குளமாகத் தேங்கி குதிரை குளித்தேறி,

வாய்க்காலாய் ஓடி வழிப்போக்கர் வாய் கழுவி,

இஞ்சிக்குப் பாய்ந்து எலுமிச்சை வேரோடி,

மஞ்சளுக்குப் பாய்ந்து மருதோன்றி வேரோடி,

தாழைக்குப் பாய்கையிலே தளும்பியதாம் கண்­ரும்,

வாழைக்குப் பாய்கையிலே வற்றியதாம் கண்­ரும்''.

தாய் பலவாறு கற்பனைத் திறனோடு ஒப்பிட்டுப் பாடுகிறாள்.

நாட்டுப்புறப்பாடலில் காவல் திறதை விளக்கும் பாடப்பகுதி கற்பனைக்குச் சான்றாகும்.

''கட்டேது காவலறியார்கள் தேசம்

கறந்த பால் வெளி வைத்தால் காசு மணுகாது''

காவலில்லாமலே நாட்டில் பாதுகாப்பு மிகுந்திருந்தது. மேலும் கறந்த பாலை வெளியில் வைத்தால் காகம் கூடத் தொடாது என்பதை அறியலாம்.

நடவுப் பாடல் பாடுபவர்,

''உள்ளான் உழுதுவர ஊர்க்குருவி நாத்தரிக்க

தாரை பரம்படிக்க - நட்டுவாடி குட்டப்பிள்ளை''

பறவைகளின் தொடர்புடன் தங்கள் செயல் நடப்பதாகப் பாடுவது மக்களுக்கு கற்பனைத் திறனைக் காட்டுகிறது.

ஒப்பாரிப் பாடல்களில் பாடும் மக்கள் கற்பனை வளர்ச்சியை மிகுதியாகக் காட்டுகிறார். கணவன் இறந்ததனால் வாழ்வு பாதியில் சிதைந்த நிலையைப்பாடும் பெண் பாலூற்றில் பாக்குமரமும், நெய்யூற்றில் நெல்லி மரமும் உண்டாக்கி நின்று வாழ முடியவில்லையே என வேதனைப்படுவது கற்பனைக்குச் சான்றாகும்.

''பாலூத்தி பாத்தி கட்டி - பாக்குமரம் உண்டாக்கி

பாக்கும் தழையிலேயே பாதிநாள் வாழலையே!

நெய்யூத்துப் பாத்தி கட்டி - நெல்லிமரம் உண்டாக்கி

நெல்லியும் தழையிலேயே - நான்

நின்னோடு வாழலையே''

இப்பாடலில் ''செல்வத்தால் மட்டுமே நிறைவு பெற்றுவிட இயலாது'' என்ற பொருளையும் உணர்த்துகிறது.

மக்களின் வாழ்க்கையை நினைக்கும் போது திருமணத்திற்குப் பொருத்தம் பார்த்தும், தாலி செய்தும், துணிமணிகள் எடுத்தும் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஆனால், பெண்ணின் மனக்கண் தோன்ற அவளது கற்பனைப் பாடலாக வடிவெடுத்து வருகிறது.

''தாலிக்கு அரும்பெடுத்து தட்டாலும் கண் குருடோ

சேலைக்கு தூலெடுத்த சேணியனும் கண் குருடோ

எழுதினவன் தான் குருடோ எழுத்தாணி கூரிலையோ

பஞ்சாங்கம் பார்க்கவந்த பார்ப்பானும் கண் குருடோ''

தலையெழுத்து சரியில்லை என்ற தனது விதியை நினைத்துப் புலம்பும் வேதனையின் வெளிப்பாடே எனலாம். இவ்வேதனைக் குரலுடன் விடும் கண்­ரே எங்கெங்கு பாயும் என்று பாடும் ஒப்பாரியிலும் கற்பனையின் உயர்வைக் காணலாம்.

''தங்கை விடுங் கண்­ரு தலைமலையைச் சுற்றிவரும்,

செல்வி விடுங் கண்­ரு சீமையெல்லாம் சுற்றிவரும்,

மங்கை விடுங் கண்­ரு மலையெல்லாம் சுற்றிவரும்''.

தன்னுடைய காதலியின் மீது வைத்த ஆசையின் காரணமாகக்

காதலனின் கற்பனை எவ்வாறு செல்கிறது எனப் பார்க்கும்போது,

''கண்ணுக்கு மையாவேன், காலுக்கு மெட்டாவேன்,

நாயகியாள் நெற்றியிலே நற்சாத்துப் பொட்டாவேன்''

தான் காதலியின் கண்ணுக்கு மையாகவும், காலுக்கு மெட்டியாகவும், நெற்றியிலே பொட்டாகவும் மாறிவிடலாம் எனக் கற்பனை செய்கிறான்.

உடன்பிறப்பும் இல்லாத பெண் கணவனை இழந்தவுடன் பாடும்பொழுது,

''வானம் சலித்த தென்றால் - அது

மண்மேலே மழைபொழியும் - நான்

பொண்ணு சலித்தே என்றால்

போயடைய ஏது இடம்?

எனப் பாடுகிறாள். இவ்வாறு நாட்டுப்புற பெண்களின் ஒப்பாரிப் பாடல்களிலும் கற்பனையின் உணர்வைக் காணலாம்.

நாட்டுப்புற மக்களின் பொருளியல் வாழ்வு தன்னிறைவு பெற்ற அளவிலும், பெறாத அளவிலும் இருக்குமேயன்றி, செல்வம் மிகுந்தவராகிறார். ஒப்புரவறியும் பண்பினை நாட்டுப்புறத்தில் தான் பார்க்கலாம். அவர்களது கற்பனையில் பனைஓலை கூடம் பொன்னோலையோகும். மூங்கில்கட்டு வெள்ளியாகும்.

ஒரு பந்தலமைப்பு பற்றிப் பாடும் பாடல்,

''வெள்ளியிலே கால்நிறுத்தி - வெற்றிலையால் பந்தலிட்டு

பொன்னாலே கால்நிறுத்தி - பூவாலே பந்தலிட்டு

கமுகாலே கால்நிறுத்தி - கரும்பால் பந்தலிட்டு

தங்கத்தாலே கால்நிறுத்தி - தாமரையால் பந்தலிட்டு''

என்ற இலக்கணம் அறியாத மக்கள் இலக்கண முறை சிதையாமல் நாட்டுப்பாடல் பாடும் விதம் உள்ளத்தில் எழும் சிந்தனையின் திறமை எனலாம்.

நல்லதங்காள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தவிதத்தை,

''கல்யாணம் என்று சொல்லி - கடல் ஏறி பாக்கு வைத்தார்,

மாட்டின்மேல் பாக்கு ஏற்றி - மனிதருக்கு போகவிட்டார்,

சின்ன மடி கட்டியே சீமை எங்கும் பாக்கு வைத்தார்

பாக்கு வைத்தும் பாங்குடனே என்ன செய்தார்''

மேலும் பெண்ணுக்கு சீதனங்கள் கொடுத்து வழி அனுப்பிய விதத்தைக் கூறும் பொழுது,

''கலியாணம் முடிந்து - கணக்கு உடனே என் செய்தார்

என்னென்ன சீதனங்கள் எங்கள் இளங்கொடிக்கு,

தங்கப் பணிவிடையாம் தந்தார், தானும் அங்கே

உட்கார்ந்து மோர்கடைய முக்காலி பொன்னாலயாம்

பிடித்து இருந்து பால் கறக்க - பிடிகயிறு பொன்னாலயாம்''

என்று சீர் செய்த விதத்தை கற்பனை சிறக்க பாடப்பெறும் படல்களை மிகுதியும் கதைப் பாடல்களிலும் காணலாம்.

உறவுநிலைக் கூட கற்பனை மிகுதியாக இருப்பதைப் பார்க்கலாம்,

''மாமன் அடிச்சானோ என்சாமி

மல்லிகைப்பூ செண்டாலே என்னே

அத்தை அடிச்சாலோ - என்சாமி

அரளிப்பூ செண்டாலே - என்னே

யாருமில்லை, அடிக்கவில்லை என்னம்மா

ஐவிரலும் தீண்டவில்லை நான்

வம்புக்கேன் அழுதுவந்தேன் என்னம்மா

வாயெல்லாம் தேன்வடிய''

நாட்டுப்புறப் பாடல்களிலும் கற்பனையும் யாப்பு அமைதிக்கேற்ப அமைந்துள்ள பாங்கினைக் காணும்போது இலக்கியத்தின் கருவாய் விளங்கும் நாட்டுப்புற மக்களிடமிருந்த பாடல்களே இலக்கணத்திற்கும், இலக்கியத்திற்கும் கருவாக அமைந்து இருக்கலாம்.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

 

கருத்துகள் இல்லை: