03/04/2011

குமரி மண்ணின் மரபு நாஞ்சில்நாடும் விளவங்கோடும் - குமாரசெல்வா

உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது”

(மத்தேயு 26 : 73)

விளவங்கோடு வட்டார மக்களிடையே நாட்டுப் புறக் கதை ஒன்று வழக்கில் உள்ளது. விளவங்கோட்டுக்காரன் ஒருவன் மதுரைக்குப் போனான். அங்குள்ள மக்களின் பேச்சைக் கேட்டுத் தானும் இனிமேல் செந்தமிழில் பேசுவதாகச் சபதம் கொண்டான். எதிரே பழக்கடை தென்பட்டது. அங்கே சென்று உரையாடினான்.

“வணிகரே! பழங்கள் உள்ளனவா?”

“இங்க இருப்பது பழங்களாகத் தெரியலையா?”

“பொறுத்தருள்க! பழம் ஒன்று என்ன விலையோ?”

“ஒரு ரூபாய்.”

“ஐம்பது காசுக்குத் தரக் கூடாதா?”

“தருகிறேன்.”

“அப்படியானால் இரண்டு பழங்கள் பூயும்.”

“பூயுமா? அப்படீண்ணா என்னாங்க?”

“வேல மயிரு காட்டாத ரெண்டு பழம் இனிஞ்சி எடுவிலே இஞ்ச.”

தனது வட்டாரச் சுபாவத்தை ஒருவனால் ஒருபோதும் திரைபோட்டு மறைக்க முடியாது. மனத்தில் ஆழப்பதிந்த அது எந்த வகையிலாவது பேச்சில் வெளிப்பட்டே தீரும். அதனால்தான் விளவங்கோட்டுக்காரனால் இன்னொரு வட்டாரம் சார்ந்த மொழியில் தொடர்ந்து உரையாட முடியவில்லை.

தாய்த் தமிழகத்திலுள்ள மக்கள் பலரும் என்னிடம் அதிகமாகக் கேட்கும் கேள்வி, “நீங்கள் தமிளும் மளையாளமும் களந்து பேசுகிறீர்களே?” என்பதாகும். அப்போதெல்லாம், நாங்கள் மலையாளிகள் அல்ல என்றும் தமிழன் இழந்த நிலப்பரப்பில் முதன்முதலாக அறுநூறு சதுர கி.மீ. பரப்பளவை மலையாளிகளிடமிருந்து மீட்டெடுத்தவர்கள் நாங்கள்தானென்றும் அதற்கான வீரஞ்செறிந்த போராட்டத்தில் சுடப்பட்டு இறந்தும் வீட்டுக்கொருவர் ஊனம்பட்ட கதைகள் குறித்தும் நாங்கள் பேசும் தமிழ் சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் இருக்கிறது என்றும் பட்டியலிட்டு மிகப் பெரிய சொற்பொழிவையே நிகழ்த்த நேரிடும்.

இதற்கு ஒரு படி மேலே போய் இலக்கியவாதிகள் என்னிடம், “ஒங்க நாஞ்சில் தமிழ் அருமை” என்று கூறுவதுண்டு. நாஞ்சில் நாட்டுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நான் அவர்களுக்கு விளக்குவது இருக்கட்டும், முதலில் ஒட்டுமொத்தக் குமரிமாவட்டத்தையும் ‘நாஞ்சில்நாடா’க மாற்றியவர்கள் யாரென்று தெரிந்துகொள்வது அவசியம் அல்லவா.

குமரி மண்ணின் மேற்குக் கரையோரமாக இருக்கும் எங்கள் விளவங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிலர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘நாஞ்சில்’ என்னும் அடைமொழியை ஏன், எதற்கென்று தெரியாமலேயே போட்டுக்கொள்கிறார்கள். மலையாளம் தாய்மொழியாகக் கொண்ட நாஞ்சில் மனோகரனைப் பார்த்துச் சூடுபோட்டுக் கொள்ளும் முயற்சி இது. தென்னைமரமேறும் சாதியைச் சேர்ந்த மனோகரனுக்குத் திராவிட அரசியலில் தன்னை வெள்ளாளராக அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அடுத்தது இலக்கியவாதிகள். “ஹெப்சிபாவின் கதை மாந்தர்கள் தென்மாவட்டமான நாஞ்சில் பகுதியின் கிறிஸ்தவச் சமயத்திலிருந்து விளைந்தவர்கள்”- சிற்பி. பாலசுப்ரமணியன்.

“கன்னியாகுமரி மாவட்டமும் திருவனந்தபுரத்தின் தமிழ்ப் பகுதியும் இங்கு நாஞ்சில்நாடாகக் கருதப்படுகிறது. வயலும், வயல் சார்ந்த பகுதியாக உள்ள இதனை உழவுக்கருவியால் நாஞ்சில் என்று வழங்குகின்றனர்.” (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப:13)

“அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்கள் மட்டுமே நாஞ்சில்நாடு என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டபோதிலும் அகஸ்தீசுவரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்களுமே பொதுவாக நாஞ்சில்நாடு எனக் கருதப்படுகிறது என்பதைக் குமரிமாவட்டம் நீங்கலாக இதர மாவட்டங்களிலுள்ள வாசகர்களுக்கு விளக்குவது அவசியம் என்று கருதுகிறேன்” (என். ராமகிருஷ்ணன், ஜி.எஸ். மணி - குமரிக்கடலின் புயற்பறவை)

மேற்கூறியவற்றிலிருந்து இதற்குப் பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் என்று நாம் அறிந்துகொள்ளலாம். இந்தத் தாராளவாதப் போக்கில் ஒலிப்பது வெள்ளாளக் கருத்தியல் புனைவாகும்.

1684 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இன்றைய குமரிமாவட்டம் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தையும் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தையும் தென்கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவையும் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலையும் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது. இதில் மூன்று முக்கிய இயற்கைப் பிரிவுகள் அடங்கியுள்ளன. வடகிழக்குப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டதாகும். விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்கள் அதிகமாக இதன் பாதிப்பில் உள்ளன. ‘காணிகள்’ என்று சொல்லப்படும் ஆதிவாசிகள், ரப்பர் தொழிலில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர்கள், பனையேறிகள், கேரளம் முழுக்கச் சென்று கட்டடம் கட்டும் உழைப்பாளர்கள், வாழை, மரிச்சினி கிழங்கு, காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலரும் இவ்விரு தாலுகாக்களையும் சேர்ந்தவர்கள். தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய மூன்று புறங்களும் நீரோடி முதல் ஆரோக்கியபுரம்வரை 68 கி.மீ. தூரம் நீண்ட கடற்கரை. இப்பகுதிகளில் மீனவர்களும் இசுலாமியர்களும் பிறசாதி மக்களும் வசிக்கிறார்கள். மலையின் ஆதிக்கத்தில் உள்ள சமவெளிப் பிரதேசமான தோவாளைப் பகுதியின் சில பாகங்களே நாஞ்சில்நாடாகும். அகஸ்தீசுவரம் தாலுகாவில் காற்றாடிமலை, மருத்துவா மலை, கல்மலை இருப்பதுபோலத் தோவாளை தாலுகாவிலும் தாடகை, மகேந்திரகிரி மலைகள் உள்ளன. மகேந்திரகிரி மலையின் வடக்குப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் பறளியாறு, கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாக்களின் வழியாக ஓடித் திருவெட்டாற்றில் கலந்து தேங்காய்ப்பட்டணம் கடலோடு சேர்கிறது. நாஞ்சில்நாட்டின் வேளாண்மைக்காகப் பறளியாற்றின் குறுக்கே பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ‘பாண்டியன் அணை’ கல்குளம் தாலுகாவில் உள்ளது. தாய்த் தமிழகத்தோடு பண்பாட்டுத் தொடர்பை ஓரளவு வைத்திருப்பது தோவாளை தாலுகா என்பதால்தான் நாஞ்சில்நாட்டை மொத்தத்திற்கும் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆரல்வாய் மொழிக் கணவாய் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கும் வகையில் அமைந்து, நெல்லையைத் தாய்த் தமிழகத்தின் எல்லையாகவும் குமரியைத் தொல்லையாகவும் ஆக்கிவிட்டது.

தமிழகத்தோடுள்ள தொடர்பு நிலவியல் எல்லை என்பதையும் தாண்டி வரலாற்றிலிருந்தே அதற்கான ஆதாரங்களை நாம் கண்டுகொள்ள முடியும். நாஞ்சில் நாட்டைப் பாண்டியர்களும் அதன் பின் சோழ மன்னர்களும் ஆண்டபோது, விளவங்கோடு பகுதிக் குறுநில மன்னர்களான ஆய் மற்றும் வேணாட்டரசர்களின் கீழ் இருந்துவந்தது. பாண்டிய மன்னர்கள் ஆய்க்குறுநில மன்னர்கள்மீது தொடர்ந்து படையெடுப்புகளை நடத்தினார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கே ஆய் மன்னர்களின் ஆதிக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டதால் மேற்குப் பகுதியில் அவர்கள் நிலைபெற்றனர். இந்தப் பேரரசு - சிற்றரசு மோதல்தான் இன்றளவும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்களைக்கூட ‘நாஞ்சில் நாடு’ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கல்வெட்டுக் குறிப்புகள் அகஸ்தீசுவரம் தாலுகாவிலுள்ள பல பகுதிகள், அதாவது கன்னியாகுமரி, சாமித்தோப்பு, சுசீந்திரம், வடசேரி இவையெல்லாம் ‘புறத்தாய நாடு’ என்பதன் கீழ் அடங்கியிருந்ததாகக் கூறுகிறது. இது தவிரக் கல்குளம் தாலுகாவில் ‘வள்ளுவ நாடு’ என்றொரு நாடு இருந்த தகவலையும் அறிகிறோம். உழக்கிலே கிழக்கு மேற்கு என்றாற்போல முஞ்சிறைச் செப்புப்பட்டயங்களைப் பார்க்கும்போது, முடாலநாடு, தெங்க நாடு, ஓமாயநாடு, குறும்பனைநாடு என்று பலநாடுகள் இருந்திருக்கும்போது பண்பாட்டுக்குள்ளே மாற்றங்களும் வித்தியாசங்களும் உருவாகாமலா இருக்கும்?

வட்டாரம்சார்ந்தும் சாதிசார்ந்தும் மொழிசார்ந்தும் பண்பாடுசார்ந்தும் எத்தனையோ பிரிவுகள் இந்த இரண்டாயிரத்துக்கும் குறைவான சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட, மொத்தத் தமிழ்நாட்டில் 1.29 சதவீதம் நிலமுடைய, இந்தப் பகுதியில் காணப்படுகின்றன. சேரநாட்டு அரசதிகாரத்தின் கீழாகவும் பாண்டிய மன்னர்களின் ஆட்சியிலும் சோழர்களின் அதிகாரத்திலும் மலையாள ஆட்சியின் இன அழிப்பு நடவடிக்கையின் கீழும், பல்வேறு அரசியல் போராட்டங்களின் களமாகவும் இப்பகுதி திகழ்ந்துள்ளது. இயேசுவின் சீடரான தோமா, பிரான்சிஸ் சேவியர், வாஸ்கோடகாமா, இஸ்லாமியரான முகிலன், அய்யா வைகுண்டர், நாராயண குரு, டிலனாய், றிங்கல் தௌபே, புத்தசமயம், சமணசமயம், விவேகானந்தர் தவம், பீர்முகமது அப்பா ஞானி இன்னும் எத்தனையோ சிந்தனைகள் முட்டி மோதிநிற்கும் களம் இது. எழுத்தாளர்களிடம் இந்த வேறுபாடுகள் மிகப் பெரியதாக விளங்குகின்றன.

ஒரே சாதிசார்ந்த, ஒரே மதம்சார்ந்த இரண்டு எழுத்தாளர்கள் ஹெப்சிபா ஜேசுதாசனும் ஐசக் அருமைராசனும். ஆனால் எழுத்தில் வேறுபடுகிறார்கள். ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த ஐசக் அருமைராசனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள். இருவருமே புன்னைக் காடு பற்றி எழுதி இருந்தாலும் இரண்டுமே வேறுபட்டவை. நீல. பத்மநாபனின் தலைமுறைகள் சாதிசார்ந்தும் தோப்பில் மீரானின் சாய்வு நாற்காலி சமயம்சார்ந்தும் வெளிப்படுகின்றன. மீனவர் சமுதாயத்திலிருந்தும் ஆதிவாசிகள் சமூகத்திலிருந்தும் காத்திரமான படைப்புகள் இன்னும் வெளிப்படவில்லை. தமிழவன், லஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின் எழுத்துக்களும் ஏனைய குமரிமாவட்ட எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பவை. புனைகதை எழுத்துக்களைவிடக் கவிதைகளில் இந்த வேறுபாடுகள் துல்லியமாகத் தெரிகின்றன. இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ‘நாஞ்சில் இலக்கியமாக’ எப்படிப் பொதுவாக்க முடியும்?

இந்த உண்மையை உணர்ந்த நாஞ்சில் நாடன் கூறுகிறார், “பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையையும் நீல. பத்மநாபனின் தலைமுறைகளையும் ஹெப்சிபா ஜேசுதானின் புத்தம் வீட்டையும் தோப்பில் முகம்மது மீரானின் நாவல்களையும் ஜெயமோகனின் ரப்பரையும் ஐசக் அருமைராசனின் கீறல்களையும் எனது நாவல்களையும் நாஞ்சில் வட்டார வழக்கு நாவல்கள் என்கிறார்கள். இது எவ்வளவு நகைப்புக்குரிய பகுப்பு. இவர்கள் எழுதுவது எல்லாம் ஒரு மொழியா? ஒரு வட்டாரமா? எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட மொழி, வாழ்க்கை, பண்பாடுகள்” (‘எனது நாவல்களும் வட்டார வழக்கும்’ கட்டுரையிலிருந்து.)

ஒரு வட்டாரம் அதற்குள்ளேயே சுழலும்போது மதம் அல்லது சாதியின் மேட்டிமைப் பண்பால் இறுகிவிடக்கூடிய அபாயம் உண்டு. பிறசமூகங்களுடன் கலப்பை ஏற்படுத்தும்போது அந்த வட்டாரம் படைப்பிற்குள் விரிவடைந்து இன்னொரு பரிமாணம் பெறுகிறது. நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும் நாவல் இதற்கு உதாரணம். அரங்கநாதனின் பரளியாற்று மாந்தர்கள் நாவலில் வரும் நல்ல பெருமாள் உதாரணம். ஒரு வட்டாரம் எனப் பகுத்த எல்லைக்கு உள்ளேயும் நமக்குத் தெரியாத வாழ்க்கை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு வாஸவேச்வரம் கிருத்திகாவும் பா. விசாலமும் அழகிய நாயகி அம்மையாரும் சாட்சிகள்.

பிறசமூகங்களிடையே கலப்பு ஏற்படுத்தி எழுதுபவர் விளவங்கோடு வட்டார எழுத்தாளர் தோப்பில் மீரான். இவரளவுக்கு இஸ்லாமிய - மீனவ மக்களின் பேச்சைக் கலந்து எழுதிய எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தில் வேறு எவரும் இல்லை. கரையோரம் வாழும் நாடார், ஆசாரி, புலையர், வண்ணார், காணி போன்ற சிறுகுழுக்களின் அடையாளங்களையும் பதிவுசெய்தவர் இவர். சாதிக்கலவரத்தில் தப்பியோடிய இஸ்லாமியக் குழந்தைக்குப் புலையர் சாதி தேவி பால்கொடுப்பது, இரவில் ஓலைச்சூட்டுப் பந்தம் கொடுக்க இஸ்லாமியரிடையே குடியமர்த்தப்பட்ட இந்து அப்பா, ஆங்கிலப் பள்ளியை சரஸ்வதி கோயில் என்று கூறிக் கொளுத்த மறுக்கும் தாழ்த்தப்பட்ட கறுப்பன், முன்சிறை சின்னான் ஆசான் போன்றவர் மாணிகளின் மருத்துவப் பணிகளை விதந்தோதுவது போன்ற சித்தரிப்புகள் மீரானைப் பெருந்தன்மை மிக்க படைப்பாளியாக்குகின்றன. இளைய தலைமுறைப் படைப்பாளிகள் பார்த்துப் படிக்க வேண்டிய மிகப் பெரிய முன்னுதாரணத்தை மிகப் பிந்தி இலக்கிய உலகில் வெளிப்பட்ட இந்த மூத்த எழுத்தாளர் தருகிறார்.

விளவங்கோடு வட்டாரத்தில் ஜோசப்பிலிப், அசோகஜெயன், ஜெயடேவி, ஜே. ஆர். வி. எட்வர்ட், அதங்கோடு கலா போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் எழுத்துக்களில் கேரள எல்லைப் பகுதியில் அரிசி கடத்துபவர்கள், முந்திரி ஆலைத் தொழிலாளர்கள், வயோதிகக் காலத்திலும் பனையேறிப் பிழைப்பவர்கள், கேரளா சென்று பிழைக்கும் கட்டடத் தொழிலாளர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் போன்றவர்களின் அவலங்கள் வெளிப்படுகின்றன. குமரிமாவட்டத்தின் இதரப் பகுதி எழுத்தாளர்களிடமிருந்து தனித்தும் வித்தியாசப்பட்டும் எழுதும் இவர்கள் ஒவ்வொரு தொகுப்புடன் அடங்கிப்போனதால் தாய்த் தமிழகம் இவர்களை அறியும் வாய்ப்பு இல்லாமற்போய்விட்டது.

விளவங்கோடு வட்டாரத்தில் தற்போது குறும்பனை பெர்லின், புத்தன்துறை தாமஸ் போன்ற எழுத்தாளர்கள் மீனவர்களிடையே தோன்றி எழுதுகிறார்கள். இவர்களின் எழுத்துக்களைச் சற்றுப் பொறுத்திருந்து மதிப்பிடலாம். அதுவரைக்கும் ஒட்டுமொத்த ஆதரவை வழங்கி நிலைநிறுத்துவோம். ஆதிவாசிச் சமூகம் இவர்களைப் போல் தனக்குள்ளிருந்து ஒரு எழுத்தாளனை நாளை தரலாம். சுரேஷ்சாமியார் காணி என்ற பழங்குடி பாரதி போன்ற காணி மக்களின் முன்னேற்றத் தொண்டர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது. இந்த வித்தியாசங்கள் அனைத்தையும் உள்ளடக்கி ‘குமரி மண்ணின் எழுத்து மரபு’ எனக் கூறலாமே தவிர, ‘நாஞ்சில்’ என்பதன் கீழாகவோ அதற்கெதிராகத் தக்கலையில் சிலர் ‘வேணாடு’ என்று நிலைநிறுத்துவதுபோலவோ செயல்பட்டால் அவை எல்லாம் சாதியை நிலைநிறுத்தும் மரபுகளாக மாறிவிடும்.

நன்றி காலச்சுவடு

கருத்துகள் இல்லை: