24/10/2011

மொழிப் பயிற்சி – 61 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

இரண்டு சொற்களில் ஏற்படும் விகாரங்கள் பற்றி மட்டும் காண்போம்.

 

மூன்று + நூறு= முந்நூறு (முன்னூறு - பிழை) மூன்று எனும் நிலைமொழியில் இறுதி "று' வும் இடையில் "ன்'னும் கெட்டு, "மூ' எனும் நெடில் "மு' எனக் குறுகி, திரிந்து, மு+நூறு - முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஐந்து + நூறு - ஐந்நூறு என எழுதிட வேண்டும். இறுதி (து) கெட்டு "ந்' - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் "ந்' தோன்றி ஐந்நூறு ஆகிற்று. ஐநூறு எனில் பிழை.

 

"உலக அறிவுச் சார்ந்த கேள்விகளுக்குச் சரியான விடை தருபவர்க்குப் பரிசு உண்டு' இது தொலைக்காட்சியில் எழுதப்பட்டு வந்த வாக்கியம். அறிவுச் சார்ந்த - என்பதில் "ச்' வல்லொற்று வரக் கூடாது. அறிவு சார்ந்த என்று இயல்பாக இருத்தல் வேண்டும். அறிவுசார்ந்த எனில் அறிவைச் சார்ந்த எனப் பொருள்.

 

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்திருக்கும்போது ஒற்று மிகாது. அவ்வுருபு வெளிப்பட்டிருப்பின் (வேற்றுமை விரி) ஒற்றுமிகும்.

 

"திங்கள் முதள் வெள்ளி வரை நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்' இது பெண்மணி ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி அறிவித்த வாக்கியம். சொற்றொடரில் பிழை இல்லை. உச்சரிப்பில் (ஒலிப்பில்) பிழை. முதல் என்னும் சொல்லை முதள் என்று லகரத்தை ளகரமாக உச்சரித்தார். திங்கள், வெள்ளி ளகரம் இருப்பதால், இந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருக்கலாம். நா நெகிழ் பயிற்சிகள் சிலவற்றால் இக்குறையைப் போக்க முடியும். முயற்சி வேண்டும்.

 

தூக்குத் தண்டனையா? தூக்கு தண்டனையா?

 

அண்ணாத்துரை என்னும் பெயருக்குச் சொன்ன விளக்கம்தான் இதற்கும். அஃதென்ன? "த ' வை (tha)என்று அழுத்தி வல்லொலியில் சொன்னால் "த்' வரும். "த' வை (dha) என மெல்லோசையில் "த்' வராது. தண்டனை (tha) என்பது தமிழ்க்குரிய ஒலி.

 

dha - த என்பது வடசொல் உச்சரிப்பு. ஆயின் தண்டனை தமிழ்ச் சொல்லா? வட சொல்லா? சாம, பேத, தான, தண்டம் - இவை வடசொற்கள். தண்டாயுதபாணி (தண்டு எனும் கருவியைக் கையிற் கொண்ட முருகன்) வடமொழிப் பெயர். தண்டம் - ஒறுத்தலையும் (தண்டித்தல்) தண்டு (ஆயுதத்தையும்) குறிக்கின்றன.

 

தமிழிலும் இந்தத் தண்டு இருக்கிறது. தாமரைத் தண்டு, வாழைத் தண்டு, முதுகுத் தண்டு, தண்டுவடம் என்பன எல்லாம் தமிழ் சொற்களே. tha என்றே ஒலிப்பவை இவை.

 

"பணத்தை வசூல் செய்தார்கள்' என்று பேசுகிறோம். வசூல் என்பதைச் சில பகுதிகளில் பணம் தண்டுதல் என்று சொல்லுகிறார்கள். நெல்லையில் பணம் பிரித்தல் (பறித்தல்) என்றும் சொல்லுவார்கள். வசூல் தமிழன்று.

 

தண்டு என்பதற்குச் சேனை (படை) என்ற பொருளும் உண்டு. கலிங்கத்துப் பரணியில் காண்க. ஒரு செலவு வீணான செலவு என்றால் தண்டச் செலவு என்கிறோம். உருப்படாத ஒருவனை "தண்டம், தண்டம்' என்று திட்டுகிறோம்.

 

தண்டனை ஒறுத்தல் என்னும் பொருளுடைய வடசொல்லாயினும் தமிழ் ஓலியில் (tha) தண்டனை என்று ஒலித்தால், தூக்குத் தண்டனை பொருத்தமானது. கீரைத் தண்டு, வாழைத் தண்டு எல்லாம் தமிழ்ச் சொற்களே. இங்கே (tha) தண்டினை (dha) தண்டு ஆக்க வேண்டாம்.

 

பாடாத தேனீ, வாடாத மலர், கேளாத காது - இவையெல்லாம் எவை? எதற்காக இந்த எடுத்துக் காட்டுகள்?

 

பாடாத் தேனீ, வாடா மலர், கேளாக் காது - இவற்றையும் பாருங்கள்.

 

இரண்டு வகை எடுத்துக் காட்டுகளிலும் எதிர்மறைப் பொருளில் (பாடாத, கேளாத) வந்துள்ளன. முற்றுப் பெறாத எச்சமாக நின்று தேனீ, மலர் , காது என்னும் சொற்களால் முற்றுப் பெற்றுள்ளன.

 

முன்னர் உள்ளவை எதிர்மறைப் பெயரெச்சம். அடுத்து உள்ளவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். எப்படி? விளக்கம் என்ன? பார்ப்போமே.

 

ஒரு முற்றுப் பெறாத வினைச் சொல் (எச்சவினை) ஒரு பெயர்ச் சொல் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம்.

 

(எ-டு) ஓடிய குதிரை, வந்த பையன்

 

இத்தகைய பெயரெச்சம் எதிர்மறை வினை பெற்று வரின் எதிர்மறைப் பெயரெச்சம். (எ-டு) உலவாத தென்றல், கேளாத காது.

 

இதில் உலவாத என்னும் வினைச் சொல்லைச் சற்றே மாற்றி உலவா என்று சொல்லுதலும் உண்டு. ஈற்று (கடைசி) எழுத்து இல்லாமையால் இது ஈறு கெட்ட வினை. எப்படி முடிக்கலாம்? உலவாத் தென்றல், கேளாக்காது. இவை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்.

 

முதலில் பெயரெச்சம் - புரிந்து கொள்ளுங்கள். அடுத்து எதிர்மறைப் பெயரெச்சம். பின்னர் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். விளங்கிற்றா? இல்லையெனில் விட்டுவிடுங்கள். மீண்டும் அடுத்த நாள் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். புரியும்.

 

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: