06/10/2011

மனிதமும் மதமும் - க.ஜ.உஷா நந்தினி

தமிழ் இலக்கியப் பெட்டகத்துள் நீதி நூல்களுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், சமயச் சார்பற்ற நன்மையையும், மனித நலக் கோட்பாட்டு நெறிகளையும் தொன்றுதொட்டுத் தமிழ் நீதி நூல்கள் உலகிற்கு உணர்த்தி வருகின்றன. மேலைநாட்டு அறிஞர்களின் கருத்தினை முதன்முதல் கவர்ந்த தமிழ் இலக்கிய நூல் திருக்குறள். நீதிநூல்கள் அனைத்திலும் படிப்போரை இன்புறுத்தும் இயல்பைக் காட்டிலும் அறிவுறுத்தும் இயல்பே மேலோங்கி நிற்கின்றது. ஆனாலும் விழுமிய கருத்துகளும், சொல்நயமும், பொருட்பொலிவும் எடுத்துரைக்கும் நிலையும் இவ்வகை நூல்களைத் தன்னிகரற்றுத் திகழச் செய்கின்றன.

நாலடி நான்மணி நானாற்பதைந் திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மூலம்

இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே

கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு

என்ற வெண்பாவினால் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என அறியலாம்.

எல்லாப் பொருளும் இதன் பாலுள - இதன்பால்

இல்லாத எப்பொருளும் இல்லையால்

(மதுரைத் தமிழ்நாகனார்)

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்

(ஒளவையார்)

என்று திருவள்ளுவமாலையில் பாராட்டப்பெற்ற இந்நூலின் மேன்மையை உய்த்துணர்ந்த முண்டாசுக் கவிஞர் பாரதி,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என்று வள்ளுவரைப் போற்றி மகிழ்ந்தது ''உண்மை வெறும் புகழ்ச்சியில்லை''.

மதம் சாரா மாண்புடையோன்

திருவள்ளுவர் இறைவனை ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன் எனப் பல்வகைப் பெயர்களால் பொதுவாய்க் குறிப்பிட்டிருந்தாரே தவிர, தனியாக எந்த ஒரு மதத்தின் இறைவன் பெயரையோ வடிவையோ கோடிட்டுக் காட்டவில்லை.

நதிகள் பலவாயினும் அது கலக்குமிடம் கடலே என்ற விவேகானந்தரின் கருத்துக்கேற்ப அமைந்த

கடலை நாடி ஓடிவரும் பல நதிகள் போல

கடவுள் நாடி ஓடிவரும் பல மதங்கள்

இதய உண்மை காண எந்த மதமானால் என்ன?

இறைவன் நாடிச்செல்ல எந்த வழியானால் என்ன?

என்ற பாடலின் தத்துவத்தை இலக்காக்கி மதங்களினால் மதம் பிடிக்காமல் மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளம்பிய தீர்க்கதரிசி வள்ளுவர்.

இந்துமதம்

இந்து மதத்தின் உட்கருத்தின்படி

எல்லா உயிர்களிலும் நானேயிருக்கிறேன்

என்றார் கண்ணபெருமான்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

என்றார் வள்ளலார். இறைவன் ஒவ்வோர் உயிரிலும் இருப்பதினால் தான் வள்ளுவரும்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

- - - (குறள் 322)

என்றும்

சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை

- - - (குறள் 230)

இறப்பை விடத் துன்பம் வேறொன்றுமில்லை. ஆனால் ஏழைகளுக்குக் கொடுக்க முடியாத நிலை வரும்போது இறப்பதுகூட இனிமையானதே என்றும் கூறகிறார்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

- - - (குறள் 8)

என்ற குறளின்படி சிலர் வள்ளுவரே அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு என்பதால் இவர் இந்துமதத்தினை ஆதரிப்பவரோ? என்று ஐயப்படலாம். அந்தணன் என்பவன் யார்?

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டுஒழுக லான்

- - - (குறள் 30)

என்று பின்வரும் குறளில் விளக்கமளித்ததால் அருள் செலுத்துபவரைத் தான் அந்தணன் என்று வள்ளுவர் சுட்டுகிறார் எனப் புரிந்து கொள்ளலாம்.

கிறித்துவ மதம்

''ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு''

என்றார் இயேசு.

''எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ

அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ

அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்''

என்றார் யோவான்.

கிறித்து இறக்கும் தறுவாயில் கூட தனக்குத் தீங்கிழைத்த பாவிகளை மன்னித்து அவர்கள் பொருட்டு இறைவனிடம் ''பிதாவே! இவர்கள் தாம் செய்வது இன்னதென அறிகிலார். இவர்கள் பிழையை மன்னியுங்கள்'' என்று கனிவாய் மலர்ந்தருளினார் என்கிறது புனித பைபிள். இதனையே வள்ளுவரும்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

- - - (குறள் 151)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

- - - (குறள் 314)

என்று கூறியுள்ளார்.

இசுலாமிய மதம்

ஒருவன் தன் வருமானத்தில் விளம்பரமின்றி 40 விழுக்காட்டில் 2 1/2 ரூபாய் ஏழை எளியவர்க்கு வழங்கிட வேண்டுமென்பது அவனின் கட்டாய கடமை என்று குரானில் வலியுறுத்தப்படுகிறது. வள்ளுவரும் அறநெறியால் கிடைக்கும் இன்பமே உண்மையான இன்பம், மற்றவை இன்பங்கள் போலத் தோன்றினாலும் பின்னர் துன்பத்திலேயே முடியும் என்கிறார்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல

- - - (குறள் 39)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல் என்ற வள்ளுவரின் குறள் இங்கும் கருத்தில் கொள்ள வேண்டியது ஒன்றல்லவா?

புத்த மதம்

புத்தர் கூறுவது என்ன? ஆசையே துன்பத்திற்குக் காரணம்; ஆசையைத் துறந்தால் துன்பத்தைத் துறக்கலாம்; பிற உயிர்களைக் கொல்லாமை; என்பன புத்தரின் முக்கியமான அறிவுரைகளாகும்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்புஈனும் வித்து

- - - (குறள் 361)

அனைத்து உயிர்களுக்கும் எக்காலத்திலும் நீங்காமல் வருகின்ற பிறவி என்னும் துன்பத்திற்கு ஆசை என்பதே விதை என்கிறார் வள்ளுவர். மேலும்

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்

- - - (குறள் 368)

என்ற குறள் ஆசை இருந்தால் துன்பங்கள் தொடர்ந்து மேன்மேலும் வந்து கொண்டிருக்கும் என்பதைத் தானே வலியுறுத்துகிறது.

மைந்தருள் ஊமை மகனை ஒருமகன்

வாளால் அரிந்து கறி சமைத்தால்

தந்தையும் உண்டு களிப்பதுண்டோ - இதைச்

சற்றுநீர் யோசித்துப் பாருமையா!

............... கொன்று பழிதேடி வேண்டாமையா - இனிக்

கொல்லா விரதம் மேற்கொள்ளுமையா!

என்று புலால் உண்ணுதலைத் தேசிகவிநாயகம் பிள்ளை சாடுகிறார். வள்ளுவரும்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்

- - - (குறள் 251)

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்

- - - (குறள் 260)

என்று புத்தரின் கருத்தினைப் புகழ்கிறார்.

ஜைனம்

இதே கொல்லாமை தான் ஜைனர்களின் அடிப்படைக் கருத்தும் கூட. ஜைனர்களின் தீவிரக் கொள்கை உயிரைக் கொலை செய்யாதிருத்தலேயாகும். சிறு எறும்புக்குக் கூட துன்பம் கொடுக்காத தன்மை அவர்களின் உயிர்நாடி. நம் வள்ளுவரும் இதைத்தான் கூறுகிறார்.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி

- - - (குறள் 324)

பிற உயிர்களைக் கொல்லாது வாழ்பவனுடைய வாழ்க்கையே மிகச் சிறந்த அறமாகும்.

இவ்வாறு வள்ளுவர் இந்து, கிறிஸ்து, முஸ்லீம், புத்த, ஜைன மதத்தவரின் பொதுவான கருத்துகளை விளக்கியுள்ளார். திருக்குறள் தனிப்பட்ட மனிதனுக்கோ, மதத்திற்கோ, நாட்டிற்கோ அல்லாமல் நாடு, இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து மக்களாய்ப் பிறந்த அனைவருக்கும் எக்காலத்திற்கும் இயைந்த கருத்துகளைக் கூறுகிறது.

மதம் மக்களை நல்வழிப்படுத்துவதற்கே அன்றி அவனைக் காட்டுமிராண்டித்தனமாகவோ, கண்மூடித்தனமாகவோ நடந்துகொள்ளத் தூண்டுவதற்கன்று.

மக்கள் நலத்திற்கு மதமா? - அன்றி

மதத்தின் நலத்துக்கு மக்களா சொல்வீர்

என்றார் பாரதிதாசன்.

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

என்ற பாரதியார்,

சாதிகள் இல்லையடி பாப்பா

.............................................

............................................

நீதிஉயர்ந்த மதிகல்வி அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்

என்றும் கூறுவது சாதிக்கு மட்டுமா? எம்மதத்தின் அடிப்படை உணர்வுக்கும் இது பொருந்தும். அன்பென்ற அடிப்படை உணர்வினைப் புரிந்துகொண்டால் மதபேதங்கள் மறையுமன்றோ? அப்படிப்பட்டவரே மேலோர்.

மதங்கள் அனைத்தும் மக்களை நல்வழிப்படுத்தி ஒழுக்கமுடன் வாழ வைப்பதற்கே. எந்த மதத்தினர் கூறுகிறார்கள் என்று பாராமல் கூறும் கருத்துகள் என்னவென்று மனத்திற்கொண்டு அனைவரிடமும் அன்பு பூண்டு ஒழுகவேண்டும். மதங்களின் பெயரினால் மக்கள் மாக்களாக மாறுவதை வள்ளுவப் பெருந்தகையார் விரும்பாததினால் தான்

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு

- - - (குறள் 73)

என்று வாழ்க்கையின் பயனையும்,

அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

- - - (குறள் 80)

என்று அன்பில்லாதவர்களுடைய உடம்பானது எலும்பினால் போர்த்தப்பட்ட வெறும் உடம்பாம் என அன்பின் சிறப்பையும் கூறுகின்றார். அன்பின் வழியே உயிர்நிலை என்ற உயர்ந்த தத்துவத்தையும் விளக்கி மனிதம் மேம்பட வழிவகுக்கிறார் வள்ளுவர்.

முடிவுரை

எவர் உடம்பினும் - சிவப்பே

இரத்த நிறமப்பா

எவர்விழி நீர்க்கும் - உவர்ப்பே

இயற்கைக் குணமப்பா

- - - (ஆசியஜோதி)

உடம்பில் ஓடும் குருதியிலும் வடியும் கண்­ரிலும் தேடினாலும் சாதி தெரியாது. எல்லாருடைய குருதியின் நிறம் சிவப்பாகவும், கண்­ர் உவர்ப்பாகவும் இருப்பது தானே இயற்கை. துன்பம் வரும்போதும் மனம் வருந்தும்போதும் ஒரு தாய் வயிற்று மக்கள்போல் மனிதர்கள் உதவவேண்டும். ஆனால் இன்று சிலர் இதனை மறந்து மதவேறுபாடு காரணமாக இரத்தம் சிந்துவது வேதனைக்குரியது. நெற்றியில் திருநீற்றுடனோ, முப்புரிநூலுடனோ சிலுவையுடனோ வேறு எந்த மதக் குறியீடுகளுடனோ எவரும் பிறந்திலர்.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

- - - (குறள் 972)

என்னும் குறளுக்கேற்ப பிறப்பினால் எவர்க்கும் பெருமை இல்லை. அவர்கள் சிறப்புற வேண்டுமெனில் நல்ல செயல்களில் ஈடுபடவேண்டும். நன்மை செய்பவரே உயர்ந்த குலத்தினர். தீமை செய்பவரே என்றும் தாழ்ந்த குலத்தினராவார் என்று முக்காலமும் உணர்ந்த வள்ளுவர் விளக்குகிறார்.

குறிப்பிட்ட மதத்தினைச் சாராமல் அனைத்து மதங்களின் அடிப்படைத் தத்துவங்களை அறமாகக் கற்பித்து அவற்றின் வழியே சென்று மனிதன்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

- - - (குறள் 50)

என்ற குறளுக்கிணங்க இறைவனாய் ஒளிவிட வேண்டுமென விரும்புகிறது வள்ளுவம். மதங்கள் மனத்தை நெறிப்படுத்தவே! மனிதத்தை மதங்கள் மேன்மைப்படுத்துகின்றன. அதற்கு வள்ளுவம் அறநூலாய் மதவேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் வழிகாட்டுகிறது. இவ்வழியே சென்றால் இன்றைய மதவேறுபாட்டுச் சிக்கல்களால் மனிதன் அழிந்துபடுவதை உறுதியாகத் தடுத்து உயர்ந்த நிலையை எய்ய முடியும் என்பதில் ஐயமுண்டோ!

துணை நூல்கள்

1. டாக்டர் மு. வரதராசனார், திருக்குறள் தெளிவுரை, கழக வெளியீடு, 2003.

2. யோவான் எழுதிய சுவிசேஷம், 2002, ப. 62.

3. தேசிகவிநாயகம் பிள்ளை, ஆசியஜோதி.

திருமதி. க.ஜ. உஷா நந்தினி

உதவியாளர்

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

அண்ணா பல்லைக்கழகம்

சென்னை - 600 025.

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை: