10/06/2014

"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? - தமிழண்ணல்

பல சிற்றரசுகளை எல்லாம் ஒருங்கிணைத்த மகதப் பேரரசுதான் இந்திய வரலாற்றில் முதலிடம் பெறுகிறது. தொடக்கத்தில் பிம்பிசாரனும் அவன் மகன் அஜாதசத்துருவும் ஆட்சி செய்தனர். பிம்பிசாரன் இராஜகிருகம் என்ற தலைநகரிலிருந்து ஆண்டான். ஆனால் அவன் மகன் அஜாதசத்துரு தலைநகரைக் கங்கைக்கரைக்கு மாற்றினால், அரசை விரிவுபடுத்தவும் சிற்றரசுகளை அடக்கி ஆளவும் உதவும் என எண்ணினான். இவ்வாறு ஓரளவு நடுவண் உள்ள இந்தியப் பகுதியில், பாடலிபுத்திரம் என்ற நகரை மிகவும் திட்டமிட்டு, உலகிற் சிறந்ததாக உருவாக்கினான்.

150 ஆண்டுகள் மகதப் பேரரசு சிறந்து விளங்கியது. பின்னர் நந்தர்கள் என்ற சிற்றரசு மேலோங்கி, மகத நாட்டை, பாடலிபுத்திர நகரையே தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். ஏறத்தாழ 250 ஆண்டுகள் நந்தர்கள் ஆட்சி சிறந்தோங்கியது. நந்தர் புகழ் இந்திய நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் அது பரவியதால், சங்க இலக்கியத்தில் அவர்கள் தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.

கி.மு.550 முதல் கி.மு.322 வரை சிறப்புற்றிருந்த நந்தர்களைப் பற்றிக் குறிக்கும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் அக்காலத்தது என்பதில் ஐயம் இல்லை. "பாடலிபுத்திர நகரம்' எங்கே இருந்தது? கங்கைக் கரையோரம் இருந்ததாக வரலாற்றறிஞர் எல்லோரும் எழுதியுள்ளனர். ஆனால், அது கங்கையில் கலக்கும் "சோனை' என்ற சிறு கிளை நதியின் கரையில்தான் இருந்தது. சோனை நதி கங்கையிற் கலக்கும் சங்கமுகத் துறைக்கு இரண்டு கல் தொலைவில் அந்நகரம் இருந்தாலும், உலகறிந்த கங்கைக் கரையில் என எழுதும் பழக்கம் தொடர்ந்தது.

தளபதி வாடல் என்பார், அகழ்வாராய்ச்சி மூலம் 1892-இல் இதனை வெளியிட்டார். அதன் அடிப்படையில், இந்திய வரலாற்றறிஞர் வி.ஏ.ஸ்மித் விரிவாக எழுதியுள்ளார்.

""பாடலிபுத்திர நகரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது; அது கங்கையுடன் சோனை நதி கலக்கும் சங்கமுகத் துறையை ஒட்டிய இடத்திலிருந்து, சோனை நதியின் வடக்குக் கரையில், கங்கையிலிருந்து சில கல் தொலைவில் உள்ளது அது’'

இந்த அரிய செய்தி, சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் பதிவாகியிருப்பதுதான் பெருவியப்பு அளிக்கிறது. குறுந்தொகையில், படுமரத்து மோசிகீரனார், ""வெண் கோட்டு யானை சோனை படியும், பொன்மலி பாடலி'' (75) என்று, சோனை நதிக்கரை என்பதைப் பதிவு செய்திருப்பது வேறு எங்கும் காணாததாகும். சங்க இலக்கியம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை நிறுவ இது வலுவான சான்றாக அமைகிறது.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: