சங்கப் பாடல்களின் முக்கிய சிறப்பியல்பு மானிட வாழ்வின் மீது, அதன் இன்ப, துன்பங்களின் மீது அதற்குள்ள அக்கறையே ஆகும். ஆனால், எந்த ஒரு பாடலும் இயற்கையை விட்டு முற்றிலும் விலகி நிற்க இயலாது. இயற்கை மானிட வாழ்வின் ஒரு நாடகம் அரங்கேறும் மேடையாகவும், பின்னணியாகவும் சங்க இலக்கியத்தில் இடம் பெறுகிறது.
இயற்கை அதன் எல்லாத் தன்மைகளிலும் முக்கியத்துவம் பெற்று, மனித வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது. அதாவது, இயற்கையின் முன்னிலையில் மனிதன் பெறும் உணர்ச்சிகளைத் தெளிவாகக் காட்டுகிறது. காதலனைப் பிரிந்து துயருறும் தலைவிக்கு கடல்நீரின் "இழும்' எனும் ஓசை, தன் சொந்த அழுகுரலைப் போலவே கேட்கிறது (கலி.129). கடல் அவளோடு சேர்ந்து அழுவதாகத் தோன்றுகிறது. சில வேளைகளில் முரண்பாட்டுக்குரல் ஒலிக்கிறது. எதிர்ப்பு அல்லது அலட்சியம் உணரப்படுகிறது. அதே தலைவி, சில வேளைகளில், அலைகள் நிரம்பிய கடல் அவளுடைய துயரங்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இரக்கமற்று இருப்பதாகவும் உணர்கிறாள் (ஐங்.141).
இவ்வாறு மாறிவரும் மன நிலைகளின் அழுத்தத்தைக் காட்ட, சங்கப் புலவர்கள் இயற்கையைக் கருவியாக்கிக் கொண்டனர். இது உணர்வை பலப்படுத்த இயற்கையைப் பயன்படுத்திய நிலை. அதே இயற்கை, உணர்வை ஏற்படுத்துவதும் உண்டு.
இயற்கையின் வருணனை நம் கண்முன் காட்சியாய் விரியும் வண்ணம் அமைந்து சிறக்கிறது. கண்டும் கேட்டும் இன்புறுதற்கான நாட்டியக் கலையின் சொல்லோவியத்தை அகநானூற்றுப் பாடல்களில் காணலாம். இனிமையும் எழிலும் கொண்டமைந்த ஆடற்கலை, சங்ககாலத் தமிழ் மக்களின் கலை வாழ்க்கையில் உயர்ந்த இடம் பெற்றுத் திகழ்ந்தது. அவர்களுடைய பண்பாடுமிக்க வாழ்க்கையைத் தம் பாடல்களில் புலவர்கள் பாடி, அக்கலைச் சிறப்பைப் போற்றியுள்ளனர். மக்கள் மன்றத்திலும் மன்னர் அவையிலும் செல்வாக்குப் பெற்றமையால், புலவர்கள் நாவிலும் கற்பனையிலும் அக்கலை இடம் பெற்றது.
அகநானூற்றில் இடம்பெற்ற கபிலரின் இக்கற்பனை ஓவியம், குறிஞ்சி நில வளத்தையும், நலத்தையும் குறிக்க எழுந்ததாயினும், தமிழ் மக்களின் வாழ்வில் அன்று சிறப்பிடம் பெற்றிருந்த இசையும், நாடகமும் எய்தியிருந்த சிறப்பை அடிப்படையாகக் கொண்டும் அமைந்துள்ளது.
குறிஞ்சி, எழில் நலமிக்க நீலமலைச் சாரல்; அங்கு நெடிது வளர்ந்து, அசைந்தாடி நிற்கும் மூங்கில்; அவற்றில் வண்டுகளால் துளைக்கப்பட்ட துளை; அதனிடையே விரைந்து வீசும் காற்று; புல்லாங்குழலின் ஒலி அங்கு தானாய் எழுகிறது. அருகில் பாடிக் குதித்தோடும் பனிநீர் அருவி எழுப்பும் "இழும்' எனும் ஓசை, எண்ண இனிக்கும் வண்ண மலர்கள்; அதில் தேனை உண்ண நாடிப் பறக்கும் வண்டுகளின் இன்னோசை, தோகை விரித்து இனிமையாக ஆடும் மயிலின் ஆட்டம்; இவற்றைக் கண்டும் கேட்டும் இன்புற்று வியக்கும் குரங்குகள். இயற்கையின் இந்த எழிற்கோலத்தில் ஈடுபட்ட சங்கப் புலவராகிய கபிலர், இதை அழகுமிக்கதொரு நாட்டிய அரங்கமாகக் கற்பனை செய்கிறார்.
""ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழலின் துதை குரலாகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடும்மயில்
நனவுப் புகு விறலியில் தோன்றும்''
(அகம். 82: 1}10)
கவிஞர்தம் கற்பனையில் குறிஞ்சி மலைச்சாரல் அழகிய ஆடுகளமாகிறது; மூங்கில் துளைக் காற்றின் இசை குழலோசை; முழங்கி இறங்கும் அருவியின் ஒலி முழவோசை; மான்களின் சத்தம் பெருவங்கிய ஓசை; வண்டுகளின் முரற்சி யாழோசை என அமைந்து, இனியதொரு குழுவின் இசையாக விளங்குகிறது. மயில் விறல்பட ஆடும் விறலியாகவும், மந்திகள் பார்வையாளர்களாகவும் அமைந்துவிடுகின்றன. இக்காட்சியில் ஈடுபடுபவர்கள் நாட்டிய அரங்கம் முழுவதையும் தங்கள் அகக்கண்ணால் காண்பதோடு, அரங்கில் உள்ளோரில் ஒருவராய் அமர்ந்து நாட்டியஇன்பம் துய்க்கும் உணர்வையும் பெறுகின்றனர்.
சங்ககாலத் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினர். காடு, மலை, கடல், வயல் ஆகிய நானில இயற்கை, இளமையில் அவர்களின் தாய்மடியாகவும், வளர்ச்சியில் பள்ளியாகவும் திகழ்ந்தது. திங்களும் தென்றலும், புல்லும் பூக்களும், மரமும், பறவையும் விலங்கும் அவர்களுக்கு அறிவூட்டும் ஆசிரியர்களாகவும், ஆன்ம நலம் காட்டும் குருவாகவும் அமைந்தன. இயற்கையின் மெüன மொழிகளை உணரும் உள்ளம் படைத்திருந்தனர் சங்ககால மக்கள். அவற்றின் அழகைக் கண்டு உணர்ந்து துய்க்கும் திறன் பெற்றிருந்தனர். சங்ககாலப் புலவர்கள், இயற்கையின் புறத்தோற்ற அழகில் மட்டுமே ஈடுபட்டுப் பாடவில்லை. மக்கள்தம் வாழ்வு நெறிக்கமைந்த நல்லதொரு பின்புலமாகவே அப்பாடல்களில் இயற்கை அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள்