கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

திரிகடுகம் - சாமி. சிதம்பரனார்

நூல் வரலாறு

திரிகடுகம் நூறு வெண்பாக்களைக் கொண்டது. புறப்பொருள் பற்றிக்
கூறும் நூல். இதை அறநூல், நீதிநூல் என்றே சொல்லிவிடலாம். இதன்
வெண்பாக்கள் அவ்வளவு கடினமானவை யல்ல. எளிதில் பொருள் தெரிந்து
கொள்ளக்கூடியன. தமிழர்களின் ஒழுக்கம்-பழக்க வழக்கம்-நேர்மையாக
நடக்க வேண்டும் என்பதிலே அவர்கள் காட்டிய கவலை-
இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலிகளைத் திரிகடுகம் என்று நாட்டு வைத்தியர்கள்
கூறுவார்கள். இந்த மூன்று மருந்துகளைக் கொண்டே, உடல் நோயைத்
தடுத்துக்கொள்ள முடியும்; இது நாட்டு வைத்தியர்களின் நம்பிக்கை. இன்றும்
திரிகடுகச் சூரணம் என்னும் மருந்து பல நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டு
வருகின்றது. இந்த மருந்தின் பெயரையே இந்நூலுக்கு வைத்தனர். இதற்குக்
காரணம் உண்டு. இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று
மூன்று அறங்கள் சொல்லப்படுகின்றன. இம்மூன்று நீதிகளையும் பின்பற்றி
நடப்போர்உள்ளத்திலே ஒரு நோயும் இன்றி உவகையுடன் வாழமுடியும்;
வாழ்விலே குற்றம் வளராமல் மாசற்ற வாழ்வு நடத்த முடியும். இந்த
உண்மையைக் கருதித்தான் இந்நூலுக்குத் திரிகடுகம் என்ற பெயர்
வைத்தனர்.


இந்நூலில் கூறப்படும் அறங்கள் எல்லாம் இக்காலத்திற்கு ஏற்றவை
என்று சொல்ல முடியாது. கொள்ளத்தக்கவை பல; தள்ளத்தக்கவையும் சில உண்டு. இவ்வுண்மையை உணர்ந்து படிப்பதே
அறிவுள்ளவர் கடமை.

இந்நூலாசிரியர் பெயர் நல்லாதனார். இவருடைய பெயரால், வேறு
நூல்களோ, செய்யுட்களோ காணப்படவில்லை.

நூறு வெண்பாக்களோடு, கடவுள் வாழ்த்து வெண்பா ஒன்றும்
காணப்படுகின்றது. இது திருமால் வணக்கம். இக் கடவுள் வாழ்த்து
நூலாசிரியரால் இயற்றப்பட்டதா? அல்லது பிற்காலத்தாரால் பாடிச்
சேர்க்கப்பட்டதா என்பது ஆராயத்தக்கது. இந்நூலில் உள்ள பாடல்களில்
பல, சிறந்த கருத்துள்ளவை.

நன்மை தராதவை

இந்நூலில் கூறப்படும் அறங்கள் பல; அவை ஒவ்வொரு மனிதனும்
பின்பற்றக்கூடிய வகையிலே அமைந்திருக்கின்றன; மக்கள் முன்னேற்றத்திற்கு
வழிகாட்டுவனவாக இருக்கின்றன; அநுபவத்திலே கண்டறிந்த
உண்மைகளாகவும் காணப்படுகின்றன.

                ‘‘கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்குஅறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும், பாத்து உண்ணும்
தன்மை யிலாளர் அயல்இருப்பும், இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊர்; வழக்கைத் தீர்த்து
வைக்கின்ற அறிவு முதிர்ந்தவர் இல்லாத சபை; தமக்கு உள்ளதைப்
பிறருக்கும் பகுத்துக்கொடுத்து உண்ணும் தன்மை யில்லாதவர்களின்
பக்கத்திலே வாழ்வது; இம்மூன்றும் நன்மை தருவதில்லை’’ (பா.10)

மூன்று அருமையான செய்திகள் இவ்வெண்பாவிலே
அடங்கியிருக்கின்றன. ஒரு ஊர் என்றால் அந்த ஊரிலே கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இருக்கவேண்டும். ஆசிரியர் இருந்தால்தான் ஊரில்
உள்ள பிள்ளைகள் கல்வி கற்க முடியும். இல்லாவிட்டால் மக்கள்
தற்குறிகளாகத்தான் இருக்க முடியும். அக்காலத்திலே
ஊர்ப்பொதுக்காரியங்களைக் கூட ஆசிரியர்கள்தான் முன்னின்று நடத்தி
வைத்தனர்.

ஒரு சபையென்றால் அதில் கல்வி கேள்விகளிலே சிறந்தவர்கள்
இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சபையில் உள்ளவர்கள் பயனுள்ள
பொருள்களைத் தெரிந்துகொள்ள முடியும். சபையினர்க்குள் கருத்து
வேற்றுமை ஏற்படும்போது, சரியான கருத்து இதுவென்பதையும் கண்டறிய
முடியும். அறிஞர் இல்லாத சபையால் யாருக்கும் எப்பயனும் இல்லை. அது
வெறும் வம்பர் மகா சபையாகத்தான் இருக்கும்.

நமது பக்கத்திலே குடியிருப்போர் உதவி செய்யும்
தன்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களாயிருந்தால்தான் ஒருவர்கொருவர் உதவி செய்து கொண்டு வாழலாம்.அவர்களால் நமக்கும் நன்மையுண்டு; நம்மால் அவர்களுக்கும் நன்மையுண்டு. பக்கத்தில் இருப்பவர்கள் தந்நலமே குறியாகக் கொண்டவர்களாயிருந்தால் நமக்கு யாதொரு பயனும் இல்லை.

செல்வத்தைச் சிதைப்பன

ஒருவனுடைய செல்வத்தைச் சிதைக்கும் படைகள் இன்னின்னவை என்று
ஒரு வெண்பாவிலே கூறப்படுகின்றது.

 ‘‘தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும்-முன்னிய
பல் பொருள் வெஃகும் சிறுமையும், இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை

தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு கர்வ மடைதல்;
எடுத்ததற்கெல்லாம் திடீரென்று வீணாகக் கோபித்துக் கொள்ளுதல்; தன் முன்னே காணப்படும் பல பொருள்களின் மேலும் ஆசை
வைக்கும் சிறுமைக் குணம்; இவைகள் ஒருவனுடைய செல்வத்தைக்
கெடுக்கும் ஆயுதங்களாகும்’’. (பா.38)

ஒருவன் தன் செல்வத்தைச் சிதையாமல் பாதுகாத்துப் பெருக்கிக்
கொள்ள வேண்டுமானால் மேலே கூறிய மூன்று குணங்களையும் விட்டுவிட
வேண்டும். தற்பெருமை கூடாது; கோபம் கூடாது; கண்ட பொருள்கள்
மேலெல்லாம் ஆசைப்படக் கூடாது; என்ற உண்மையைக் கூறிய செய்யுள் இது.

மனைவியின் மாண்பு

இல்லறத்திலே இன்பம் தவழ வேண்டுமாயின் இல்லாள்
கற்புடையவளாயிருக்க வேண்டும். தன் காதலனுக்குக் கூட்டாளியாகவும்,
தாயாகவும், மனைவியாகவும், இருந்து உதவி செய்வதே கற்புள்ள பெண்ணின்

கடமை என்று கூறுகின்றது ஒரு செய்யுள்,

 ‘‘நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம்; வைகலும்
இல்புறம் செய்தலின் ஈன்றதாய்-தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி, இம்மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்.

நல்ல விருந்தினரைப் பாதுகாப்பதனால் கணவனுக்கு நட்பினளாம்;
இல்லறத்தை வழுவாது நடத்தலால் பெற்ற தாயாவாள்; தன் பழமையான
குடும்பம் விளங்குதற்குரிய மக்களைப் பெறுவதனால் மனையாள்; இம்மூன்றும் கற்புள்ள மனைவி கொண்ட கடமையாகும்’’. (பா.64)

இச்செய்யுள் ஒரு பெண்ணின் கடமை இன்னது என்று எடுத்துக்
காட்டுகின்றது. விருந்தினரைப் பேணுதல்.

இல்லறத்தை நன்றாக நடத்தல், பிள்ளைபெறுதல், இதுவே கற்புள்ள
மங்கையின்கடமை என்று கூறப்பட்டது. இது பண்டைத் தமிழர்
இல்லறத்திலே மகிழ்ச்சியும், இன்பமும் தழைப்பதற்குக் கண்டறிந்த
வழியாகும்.

அறமுணர்வோர் பண்பு

அறநெறியே சிறந்தது; அந்நெறியிலே நடப்பதே நமது கடமை; என்று
நினைப்பவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிடம் மூன்று பண்புகள்
முதன்மையாகக் காணப்படும்.

அவர்கள்தம் செல்வத்தைத் தமக்குமட்டும் பயன்படுத்திக்
கொள்ளமாட்டார்கள். வீணாகச் சேர்த்து வைத்து அழகு பார்த்துக்
கொண்டிருக்கவும் மாட்டார்கள். இல்லாமையால் வருந்தும் எளியோர்க்கு
வழங்குவார்கள்; அவர்கள் துன்பத்தை நீக்கி இன்பம்அடைவார்கள்.
இதற்கே தங்கள் செல்வத்தைச் செலவழிப்பார்கள்.

அவர்கள் இவ்வுலக இயல்பை நன்றாக அறிந்திருப்பார்கள். உலகில்
தோன்றும் பொருள்கள் எல்லாம் என்றும் நிலைத்திருப்பன
அல்ல;அழிந்துவிடக் கூடியன; என்ற உண்மையை அறிந்திருப்பார்கள்.
நிலைத்து நில்லாதவைகளை நிலைத்து நிற்பன என்று
எண்ணும் புல்லறிவு அவர்களிடம் இல்லை. இத்தகைய உண்மையறிவு
காரணமாகத்தாமும் என்றோ ஒரு நாள் மாண்டு மடிவது உறுதி என்பதை
மறக்க மாட்டார்கள். ஆகையால் இறப்பதற்கு முன் நல்லறங்களைச்
செய்யவேண்டும் என்ற உணர்ச்சி அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும்.

அவர்கள் எவ்வுயிர்க்கும் தீமை செய்யமாட்டார்கள். பிற உயிர்களைத்
துன்புறுத்தி அதனால் மகிழ்ச்சியடையும் மடமைக் குணம்
அவர்களிடம்இருக்காது. பிறருடைய உழைப்பைச் சுரண்ட மாட்டார்கள்; செல்வத்தைக் கொள்ளை  கொள்ளமாட்டார்கள். மற்ற மக்கள் மனம் வேதனையடையும்படி எச்செயல்களையும்செய்யமாட்டார்கள்; இத்தகைய பண்பே குற்றமற்ற குணமாகும்; தூய தன்மையாகும். இந்த மாசற்ற குணம் அவர்களிடம் அமைந்திருக்கும்.

வறியோர்க்கு உதவும் செல்வம்; உலகப் பொருள்கள் நிலையற்றவை
என்று அறியும் அறிவு; எவ்வுயிர்க்கும் கொடுமை செய்யாதிருத்தல்;
இம்மூன்றும் அறநெறியை அறிந்தவர்களின் பண்பாகும். இதனை ஒரு
செய்யுள் விளக்கமாகக் கூறுகின்றது. அச்செய்யுள் கீழ்வருவது:

 ‘‘இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும், இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க்குள் வறியவர்க்கு அவர் விரும்பும் ஒன்றைக் கொடுக்கும் செல்வம்இவ்வுலகில் உள்ள பொருள்களின் நிலையாமையைப் பற்றி நினைக்கும் நல்லொழுக்கம்; எவ்வுயிர்க்கும், அவைகள் துன்புறும்படியான கொடுமையைச் செய்யாதநற்குணம்; ஆகிய இம்மூன்றுதன்மைகளும் அறத்தின் உயர்வை
அறிந்தவர்களிடம் உள்ளவை.’’ (பா.68)

அரசியல்

அரசன் நீதியுடன் நடந்தால்தான் நாடு செழிக்கும்; குடிகள்
இன்புறுவர்;என்ற கருத்தை இந்நூலாசிரியர் வற்புறுத்திக் கூறுகின்றார்.

‘‘தான் வாங்கிக்கொள்ளும் பொருளுக்கு ஆசைப்பட்டுக் குடிகளைக்
கொடுமைப்படுத்தும் அரசன் உள்ள நாட்டிலே மழை பெய்யாது’’ (பா.50)
    ‘‘கொடுங்கோல் அரசன் பெருமையடையமாட்டான்’’
 (பா.66)

‘‘கொடுமைகளை நீக்கிக் குடிகளுக்கு நன்மை செய்கின்றவனே அரசன்
ஆவான்’’                                      (பா.96)

‘‘நம்பிக்கையுள்ள சேனை; எதிரிகள் பலர் முற்றுகையிட்டாலும் எளிதில்
அழிக்க முடியாத எல்லைப்புறப் பாதுகாப்பு; நிறைந்த செல்வச் சேமிப்பு;
இவைகளே அரசர்க்குச் சிறந்த உறுப்புக்களாகும்.’’                          (பா.100)

இவ்வாறு அரசாட்சியைப் பற்றிக் கூறுகிறது இந்நூல்.

பார்ப்பார்

பார்ப்பாரைப்பற்றி இந்நூலிலே பலவிடங்களில் கூறப் பட்டிருக்கின்றன.

‘‘நன்கு உணர்வின் நான்மறையாளர்

அறத்தை நன்றாக உணரும் அறிவினையுடையவர்கள்; நான்கு
வேதங்களையும் கற்றவர்கள்’’                           (பா.2)

       ‘‘மூன்று கடன் கழித்த பார்ப்பானும்

தேவர், முனிவர், பிதிரர் ஆகிய மூவருக்கும் செய்யும் மூன்று
கடமைகளையும் செய்து முடித்த பார்ப்பான்’’                          (பா.34)

        ‘‘செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தல்

வேள்வியிலே செந்தீயை வளர்க்கும் அந்தணர்கள் தமக்குரிய அறத்தை
மறவாமல் பின்பற்றி வாழ்தல், மாதம் மும்மாரி பெய்வதற்குவிதையாகும்’’

                        (பா.98)

வேதம் ஓதல், மூன்று கடன்களையும் செய்தல், வேள்வி செய்தல்,
அறநெறி தவறாமை இவைகள் அந்தணர் கடமையாகும் என்பதை மேலே
காட்டிய பகுதிகள் அறிவித்தன.
   ‘‘பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல்

எவ்வளவு நாட்கள்தான் பழகியிருந்தாலும் பார்ப்பாரை
நெருப்பைப்போல் நினைத்துப் பழகவேண்டும். நெருப்பு இன்றியமையாதது,
அதைப்போல அவர்களும் அவசியமானவர்கள்; ஆதலால், அவர்களிடம்
நெருங்காமலும், நீங்காமலும் பழக வேண்டும்’’.

இப்பகுதி, பண்டைக் காலத்திலே பார்ப்பார்கள் தமிழர் சமுதாயத்திலே
பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுவதாகும்.

பழக்க வழக்கங்கள்

மனைவியைக் கோல்கொண்டு அடிப்பது அறியாமையாகும்.            (பா.3)

மாட்டு மந்தைக்குள், கையில் கோல் இல்லாமல் செல்லக்கூடாது.       (பா.4)

தேவர், முனிவர், பிதிரர் இவர்களுக்கான கடன்களைச் செய்பவரே
அறிவுடைய பார்ப்பார் ஆவர்.                                                    (பா.34)

முயற்சியுள்ளவன் சூதாட்டத்தால் பொருள் சேர்க்க விரும்பமாட்டான்;
விளையாட்டுக்காகச் சூதாடினாலும், அதிலே இலாபம் கிடைத்தால்
அப்பொருளையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.                               (பா.42)

குடிகாரன் குடும்பம் வாழாது; வாழ்வது போலக் காணப்பட்டாலும்
விரைவில் அழிந்து விடும்.                                                      (பா.59)

பார்ப்பார் கடமை, வேதங்களைக் கற்றிருத்தல், வேதங்களைக் கற்றறிந்த
பார்ப்பனரே சிறந்த செல்வம் உள்ளவர்கள்.                                     (பா.70)

கொடுக்கும் பணத்திற்கு வட்டி வாங்குவோன் பேராசைக்காரன்;
ஆசைக் கடலில் அழுந்தியிருப்பவன் ஆவான்.                             (பா.81)
நூல்களை எழுதும் புலவர்கள்-எழுத்தாளர்கள்-அறநெறிகளைக்
கூறும்நூல்களையே செய்யவேண்டும்; மக்களை நன்னெறிப் படுத்தும்
நூல்களையே எழுத வேண்டும்; இதுவே மக்களுக்கு நன்மை செய்வதாகும்;
நூலாசிரியர்களும் நன்மை பெறும் வழியாகும். இதனை ‘‘அறநெறி,
சேர்தற்குச் செய்க பெருநூலை’’ என்று கூறியிருப்பதனால்
காணலாம். செய்க என்பதற்குக் கற்க என்று பொருள் கூறுவர். இதைவிட
இயற்றுக என்று பொருள் கூறுதல்சிறந்ததாகும்.

விலைமாதர்களின் சொற்களை நம்பக்கூடாது. அவர்களின் இன்பத்தை
விரும்புவதால் துன்பந்தான் உண்டாகும்.

பிறர் மனைவியை விரும்புதல் குற்றமாகும்.

இவைபோன்ற கருத்துக்களும் பல பாடல்களிலே காணப்படுகின்றன.
நம்பிக்கைகள்

அருந்ததியே சிறந்த கற்புடையவள்; கற்புள்ள மகளிர்க்கு அருந்ததியே
உதாரணம்.

நான்கு வேதங்களையும் அறிந்த வேதியர்கள் சொல்லும் அறங்களைப்
பின்பற்றி நடப்பதே நல்லொழுக்கமாகும்.

கூற்றுவன் ஒரு தெய்வம்; அவன் உயிர்களைக் கவர்ந்து செல்வான்.

குடிகளைத் துன்புறுத்தி வரி வாங்கும் அரசன்; பொய் பேசும் மக்கள்;
குடும்பத்திலிருந்து கொண்டே விபசாரம் செய்யும் பெண்; இவர்கள் உள்ள
நாட்டில் மழை பெய்யாது.
செய்நன்றி மறந்தவன்; அறிஞர்கள் முன்னே பொய் புகல்வோன்;
அடைக்கலமாக வைத்த பொருளைத் திருப்பிக் கொடுக்காதவன்; இம்மூவரும்
மக்கள் பேற்றை இழப்பார்கள்.

கணவன் குறிப்பறிந்து நடக்கும் மனைவி; நெறி தவறாத தவசி;
செங்கோல் செலுத்தும் அரசன்; இவர்கள் மழை பெய் என்று சொன்னால்
மழை பெய்யும்.

அறநெறியிலே தவறாமல் வேள்வி செய்யும் அந்தணர்கள்; செங்கோல்
செலுத்தும் அரசன்; கணவன் கருத்தின்படி ஒழுகும் பெண்கள்; இவர்கள்
உள்ள நாட்டிலே மாதம்மும்மாரி பெய்யும்.

அறம் புரியாதவர்கள் நரகத்தை அடைவார்கள்; பழவினையினால் தான்
ஒவ்வொருவர்க்கும் இன்பதுன்பங்கள் உண்டு.

உயிர்க்கொலை செய்தல் பாவம்; புலால் உண்ணுதல் அறநெறிக்கு
ஏற்றதன்று.

இவைபோன்ற பல நம்பிக்கைகள் தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்தன.
இவைகளைத் திரிகடுகப் பாடல்களிலே காணலாம்.

திருக்குறளின் கருத்துக்கள் பல, திரிகடுகப் பாடல்களிலே சுருக்கமாகக்
கூறப்படுகின்றன.

‘‘மறுமைக்கு அணிகலம் கல்வி’’                (பா.52)

என்பது, ‘‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும்
ஏமாப்பு உடைத்து’’ என்ற குறளின் கருத்தாகும்.

‘‘இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமை’’      (பா.68)

என்பது ‘‘வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறி எதிர்ப்பை
நீரது உடைத்து’’ என்ற குறளின் கருத்தாகும்.
‘‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி
         .......பெய்யெனப் பெய்யும் மழை’’          (பா.96)

என்பது ‘‘தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்,
பெய்எனப் பெய்யும் மழை’’ என்ற திருக்குறளின் கருத்தாகும்.

இவ்வாறு திருக்குறளின் கருத்துக்கள் பல, திரிகடுக வெண்பாக்களிலே
காணப்படுகின்றன. பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்களையும்,
சமூகவாழ்க்கையையும் தெரிந்து கொள்ளுவதற்கு இந்நூல் மிகவும்உதவி
செய்கின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ