06/03/2012

அரங்கனைத் தொழலாம்... வாருங்கள்! - சீ.குறிஞ்சிச்செல்வன்

இறையை உணர்தலே இறையுணர்வு எனப்படும். இறையுணர்வு கிடைக்க ஐம்பொறிகளும் துணைநிற்றல் அவசியம். அவ்வைம்பொறிகளும் அத்துணை எளிதாய் வசப்பட்டுவிடுமா என்ன? ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் அடங்காப் பிடாரிகள்தான். வெறும் கைகூப்பி வணங்கி வெளிப்படுத்துதல் மட்டுமே பக்தி ஆகிவிடாது.

திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தனது "திருவரங்கக் கலம்பக'த்தில் அடியார்களின் மனநிலையை அழகாகவும் வியந்தும் விவரிக்கிறார்.


எல்லோரும் நாள் தவறாது கோயிலுக்கு வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள். ஆனால், ஆடிப்பாடி அரற்றுதலை எத்தனைபேர் செய்கிறார்கள்? கைகூப்பி வணங்குவதைக்கூட ஒரு பெரிய செயலாக நினைக்கிறார்கள். கரைந்து உருகும் போக்கு எத்தனை பேரிடம் உள்ளது? ஓர் ஆழ்வார் பாசுரமேனும் சொல்ல தலைப்படுகிறார்களா? இல்லை தியானம்தான் செய்கிறார்களா? இறைவனைக் கண்ணுற்றதால் ஏற்படும் பரவச நிலைக்குத்தான் ஆட்படுகிறார்களா? எதுவுமில்லை.

காய்கறிக் கடைக்குப் போய்விட்டு வருவது மாதிரி; மளிகை, நியாயவிலைக் கடை (ரேஷன்)களுக்குப் போய்விட்டு வருவது மாதிரி; போனேன், பார்த்தேன், வாங்கினேன், வந்தேன் என்பதுபோல அங்கரனை தரிசிப்பது முறையாகுமா?

பெரியபெருமாள் எத்துணை அளப்பரியவர். பதின்மர் பாடிய பெருமாள் ஆயிற்றே! திவ்யகவியார், வணங்கும் முறைபற்றி இப்பாடலில் பெரிய இலக்கணமே வகுத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும், ஐம்பொறிகளின் ஆபத்திலிருந்து விடுபடவும், அவர் இப்பாடலில் விடை சொல்லியிருக்கிறார்.

""தேடுகின்றனை, ஐம்பொறிகளுக்கு இரை தேடியும் கிடையாமல்,
 வாடுகின்றனை; வீடு சென்று, என்று,
 இனி மருவுவை? -மட நெஞ்சே!
 ஆடுகின்றிலை, அழுகிலை, தொழுகிலை அரங்கனைக் கரம் கூப்பி,
 பாடுகின்றிலை, நினைகிலை -பதின்மர்தம்
 பாடலின் படியாயே'' (பா-35)

மனித மனோநிலையை உளவியல் ரீதியில் திவ்யகவி அடுத்தப் பாடலில் அளவிட்டுக் காட்டுகிறார். "தாய், மனைவி, மக்கள், தந்தை, சோறு, பொருள் இவை மட்டுமே பெரிது என்று எண்ணும் அறியாமை குணத்தை எப்போது விடப்போகிறீர்?' எனக் கேட்கிறார். நோய், கிழத்தன்மை, பிறப்பு, இறப்பு இவற்றை ஒழிக்கப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்களே, பேசாமல் அரங்கனை வழிபடுங்கள். அவன் அனைத்தையும் கவனித்துக் கொள்வான். நற்கதி தருபவன் அரங்கன் ஒருவனே எனும் நோக்கில் இப்பாடலை அமைத்துள்ளார். வீண் மன உளைச்சலில் உழல்வார்க்கு இப்பாடல் ஒரு மா மருந்து.

 ""ஆயினை, மனையை, சேயினை, பிதாவை
 அனத்தினை, தனத்தினை, விரும்பும்
 பேயினை மறந்து, நோயினை, மூப்பை
 பிறப்பினை, இறப்பினை, துடைப்பீர் -
 ஆயனை, முளரி வாயனை, எங்கள்
 அமலனை, கமலனைப் பயந்த
 தாயனை, நெடிய மாயனை, வடபால்-
 தரங்கனை, அரங்கனை - தொழுமே'' (பா-36)

அரங்கனைத் தொழுவதால் உண்டாகும் பலனை அடியவர்க்கு பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் உணர்த்தியுள்ள பாங்கு மிகவும் போற்றுதற்குரியது.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: