06/03/2012

நங்கையர் நாணமும் நல்கூர்ந்தார் நாணமும்!

அனைவரும், தங்கள் பெருமைக்குக் களங்கம் ஏற்பட்டால் பிறரைக் காண நாணுவர். ஆனால், பெண்களுக்கு நாணம், பிறக்கும்போதே தோன்றிய அணிகலனாக விளங்குகிறது. நாணம், பெண்ணின் அழகுக்கு அழகு தரும் பிறவிச் செல்வமாகும். எவ்வெப்பொருள்களுக்கு எவை அழகு தருகின்றன என்ற கருத்தைப் பதினெண்கீழ்க்கணக்கு நூலான நான்மணிக்கடிகை சிறப்பாக விளக்குகிறது.

"நிலத்துக்கு அழகு தருவது நெல்லும் கரும்பும். குளத்துக்கு அழகு தருவது தாமரை. பெண்மையின் பெருமைக்கு அழகு தருவது நாணம். அனைவருக்கும் அழகு தருவதுதான் செல்லும் உலகத்துக்குப் பயன்படும் நல்லறம்' என்ற கருத்தை,


""நிலத்திற் கணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்திற் கணியென்ப தாமரை - பெண்மை
நலத்திற் கணியென்ப நாணம் தனக்கணி
தான்செல் லுலகத் தறம்''

ஒரு பெண், பாண்டிய மன்னனின் வீரத்தையும் அழகையும் கேள்விப்பட்டு அவன் மீது காதல் கொண்டாள். பாண்டியன், அவள் வீடு உள்ள தெரு வழியாக தினமும் யானை மீது கம்பீரமாக உலா வருகிறான். அப்போது அப்பெண் தன் தோழியரிடம், அவன் செல்லும் கம்பீரத்தையும் அழகையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். தோழியர் எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

தனியாகத் தன் வீட்டில் இருந்த அப்பெண், தான், பாண்டியன் மீது கொண்டுள்ள காதலை விளக்க வேண்டும், அவனுடைய அழகான மார்பைத் தழுவ வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறாள். பாண்டியன் தினமும் அவள் வீட்டுத் தெரு வழியாக உலா வருகிறான். அப்போது அப்பெண், தான் பாண்டிய மன்னன் மீது கொண்டுள்ள காதலை வெளிப்படுத்த எண்ணுவதும் நாணம் தடுப்பதுமாகப் பல நாள்கள் செல்கின்றன.

ஒருநாள், பாண்டிய மன்னன்மேல் உள்ள காதலை அவனுக்கு உணர்த்த முடியவில்லையே என்று வருந்திக் கூறுகிறாள். பாண்டிய மன்னனைக் காணாதபோது அவனுடன் பேசுவதாக ஆயிரமும் சொல்வேன். அவனைக் கண்டபோது பகைவரை வென்று புறம் கண்டதும் ரத்தினக் கண்டிகைகள் அணியப்பட்டதுமான அழகான மார்பைத் தழுவமுடியவில்லையே. ஏனென்றால், இந்தப் பாழாய்ப்போன நாணம், நான் பிறக்கும்போதே ஒரு நோய்போல் என்னுடன் பிறந்துவிட்டதே என்று கூறுகிறாள்இதை அப்பெண்ணே கூறுவதாக முத்தொள்ளாயிரப் பாடல் கூறுகிறது.

""மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்வேன் கண்டக்கால்
பூணாகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன்பிறந்த நான்''
(பா:1)

இப்பாடலில் பாண்டியனுடன் பேசுவதற்கு முடியாமல் தடுக்கும் நாணத்தை ஒரு நோய்போல் கூறினாலும், அந்த நாணம் அவள் பெண்மையின் பெருமையைக் காக்கும் கவசமாகவும் அவள் அழகுக்கு அழகு செய்யும் அணிகலனாகவும் விளங்குவதையே இப்பாடல் உணர்த்துகிறது.

பெண்களின் நாணத்தை நல்கூர்ந்தார் நாணத்தோடு ஒப்பிட்டு முத்தொள்ளாயிரத்தின் மற்றொரு பாடல் விளக்குகிறது.


சேர மன்னன், தெருவில் யானைமேல் உலா வருகிறான். அப்போது ஒரு பெண் அவனுடைய அழகையும் கம்பீரத்தையும் காண வேண்டும் என்ற ஆசையால் கதவைத் திறக்கிறாள். நாணத்தால் கதவை மூடுகிறாள். அவள் ஆசையால் கதவைத் திறக்கவும், நாணத்தால் மூடுவதுமாக உள்ளாள்.

பெண்ணின் இச்செயல் எதுபோன்று உள்ளதென்றால், நேற்றுவரை செல்வராக இருந்தவர்கள், இன்று செல்வத்தை இழந்து வறியவர்களாகி விட்டதால் வறுமையின் கொடுமையால் தம் முன்னாள் நண்பர்களாகிய இந்நாள் செல்வர்களின் வீடு நோக்கி உதவிகேட்கச் செல்கிறார்கள். நேற்றுவரை அந்தச் செல்வர்களுக்குச் சமமாக செல்வத்துடன் வாழ்ந்த நாம், இன்று உதவி கேட்பதற்காக அவர்களின் வீட்டுக்குச் செல்வதா என்று நாணம் தடுப்பதால் வாசல் வரை வந்தவர்கள் வீட்டினுள் செல்லாமல் திரும்புகிறார்கள். மீண்டும் வறுமையின் கொடுமை அவர்கள் வீட்டுக்குள் செல்லும்படி துரத்த, நாணம் உள்ள போகவிடாமல் தடுக்க, அவர்கள் நாணத்துக்கும் வறுமைக்கும் நடுவே சிக்கித் தவிப்பதைப்போல் உள்ளதாம். அதுபோல, என் உள்ளம் காதலுக்கும் நாணத்துக்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது என்று கூறுகிறாள் அப்பெண்.

""ஆய்மணிப் பைம்பூண் அலங்கலங் கோதையைக்
காணிய சென்றேன் கதவடைத்தேன் - நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு''

நாணத்தோடு உடன்பிறந்தவள் என்னும் பாடலும், நல்கூர்ந்தாரின் நாணத்தோடு பெண்களின் இயல்பான நாணத்தை ஒப்பிட்டுக் கூறும் பாடலுமான இவ்விரண்டு முத்தொள்ளாயிரப் பாடல்களும், நாணம் பெண்கள் தாம் விரும்பிய காதலனிடம் தன் உள்ளத்தில் உள்ள காதலைத் தெரிவிக்க முடியாமலும் தன் காதலனை வெளிப்படையாகக் காண முடியாமலும் தடுப்பதனால், பெண்களுக்கு நாணம் தீமை செய்வதுபோல் தோன்றினாலும் இயற்கை அன்னை பெண்களுக்குச் சீதனமாகத் தந்திருக்கும் அழியாத அணிகலன் நாணம் என்னும் பண்பு என்பதை முத்தொள்ளாயிரப் பாடல்கள் இரண்டும் இலக்கிய நயத்துடன் விளக்குகின்றன.

கருத்துகள் இல்லை: