கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

செஞ்சொற்கவி - செஞ்சொற் கவியின்பம்! - செ.வைத்தியலிங்கன்

தமிழ்நாட்டுச் சமய ஞான அருளாளர்கள் திருவாக்கிலே செஞ்சொற்கவி - செஞ்சொற் கவியின்பம் ஆகியவை எத்தகைய சமய ஞானக் கருவூலங்களாக அமைந்துள்ளன என்பதை ஓரளவு சிந்தித்து மகிழ்வோம்.

செந்தமிழ்ப் புலமை நலம் வாய்க்கப்பெற்றவர்கள் அருளிய பாடல்கள் "கவிகள்' எனப்படும்; அத்தகைய கவிகளைப் பாடுபவர்களும் "கவிகள்' ஆவர். தேர்ந்தெடுத்த செந்தமிழ்ச் சொற்களால் பாடியருளிய அருளாளர்களாகிய  நம்மாழ்வாரும், கம்பநாட்டாழ்வாரும் செஞ்சொற் கவிகளால் மெஞ்ஞான விருந்தளித்துள்ளனர். முதலில் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரத்தைக் காண்போம்.


""செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட்
செய்ம்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
      மாயக் கவியாய் வந்துஎன்
நெஞ்சும் உயிரும் உள்கலந்து
      நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவைஉண்டு
      தானே யாகி நிறைந்தானே'' (7:1)

என ஆழ்வார் பாடுகையில், செஞ்சொற்கவி பாடவல்ல கவிஞர்களை நோக்கி எச்சரிக்கிறார். அவரே தம் அனுபவத்தைக் கூறுகையில், திருமாலிருஞ்சோலையில் உள்ள மாதவத்திருமால், வஞ்சகக் கள்வனாக மாயம்புரி கவிஞனாக வந்தருளித் தம் நெஞ்சத்தையும் உயிரையும் ஒருமைப்படுத்தி, அவற்றைக் கபளீகரம் செய்து இரண்டறக் கலந்துவிட்டான் என விண்டுரைக்கிறார். இதனால், செஞ்சொற் கவிஞர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமெனில், திருமாலிருஞ்சோலை பக்கம் தலைகாட்ட வேண்டாம் என எச்சரிப்பது தெரிகிறது.

வியத்தகு ஞானக் குறிப்புப் பொருள் யாதெனின், அருட்பாசுரமாகவே - பாசுரம் பாடவல்ல கவியாகவே  தம்மை ஒருமுகப்படுத்திக் கொள்ளுதலும், திருமாலின் திருவருள் நிலையாகும்; அஃதாவது, அடியார்க்கு எளியனாகும் தன்மையாகும்.

நம்மாழ்வாரின் இத்திருவாய்மொழிப் பாசுரம் கம்பநாட்டாழ்வாரை மிகமிகக் கவர்ந்துள்ளது. திருமாலை செஞ்சொற்கவியாக - மாயக்கவியாக மாறும்போது, அவரே இராமாவதாரம் எடுக்கையில், அவருக்குத் தேவியாக சீதை அமைவதும், கம்பரைக் கற்பனை உலகுக்குக் கொண்டுசெல்கிறது.

கம்பராமாயணத்தில் மதிலைக் காட்சிப் படலத்தில் ராமன் சீதையைக் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. அப்போது சீதையை வர்ணிக்கும் பாங்கு, செஞ்சொற் கவியின்பமாக அமைகிறது; அவளே செஞ்சொற் கவியின்பமாக வடிவெடுக்கிறாள். அந்தக் கம்பச்சித்திரம் வருமாறு:

""பொன்னின் ஜோதி போதினில், நாற்றம் பொலிவே போல்
தென்னுண் தேனில் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத் தும்பரின் மாடே கனிபே டொடு
அன்னம் ஆடும் முன்றுறை கண்டு ஆங்கு அயல்நின்றார்'' (28)
சிந்தனைக்கு விருந்தளிக்கும் இப்பாடலை ஒரு திருக்குறள் வெண்பாவை அடியொற்றிச் சிந்தித்தால் கற்பûனைத்திறம் புலனாகும்.
""கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள'' (குறள்-1101)

என்பதில், காட்சிப் புலனாகிய "பொன்னின்சோதி', உயிர்த்தல் புலனாகிய "போதினில் நாற்றம்', வாய்ச்சுவைப் புலனாகிய "தென்னுண் தேனின் தீஞ்சுவை', கேட்டல் புலனாகிய "செஞ்சொற் கவியின்பம்', மெய்யுறு புணர்ச்சிக்கு முன்னதாகிய காதலுக்கு "கனிபே டொடு அன்னம் ஆடும்  முன்றுறை' ஆகியவை இயைந்துள்ளமை காணலாம்.

நம்மாழ்வார் குறிப்பிட்ட "செஞ்சொற்கவி' செளந்தர்ய ஆராதனைக்குரிய குறிப்பாகவும், கம்பர் குறிப்பிட்ட "செஞ்சொற் கவியின்பம்' செளந்தர்ய ஆராதனையாகவும் சிந்திக்க வேண்டும். அருளாளர்கள் இருவருமே கேள்விச்செல்வம் வாயிலாக அழகனுபவ அணுகுமுறையை வழங்கியுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ