27/03/2012

அம்பும் யாழும்! - குடந்தை பாலு

வெளித் தோற்றத்தைக் கண்டு எவரையும், எதனையும் எடை போடுதல் சரியானதல்ல. தோற்றத்தில் உத்தமர்களைப்போல இருப்போர் பலர், உண்மையில் வஞ்சகர்களாக, கபட வேடதாரிகளாக, வன்நெஞ்சம் படைத்தவர்களாகக் கூட இருப்பதைப் பார்க்கிறோம். அதனால்தான் வள்ளலார்,

""உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்''

என்று வெளிப்பகட்டு மனிதர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்றார்.

நல்லவர்களையும் பொல்லாதவர்களையும் உண்மையாளரையும் வெளிவேஷக்காரர்களையும் பிரித்தறிவது மிகவும் கடினமானது. இதைத் திருவள்ளுவர் ஓர் உவமை மூலம் கீழ்க்கண்டவாறு தெளிவு
படுத்தியுள்ளார்.


ஒன்று வில்லில் தொடுக்கும் அம்பு; இன்னொன்று யாழ். அம்பு என்பது கோணல் இல்லாமல் நேராக - சீராக வடிவமைக்கப்பட்ட கருவி. ஆனால், அதன் செயல், குறி பார்க்கும் உயிரைப் பறிபோக வைக்கும் படுபாதகச் செயல்.
அதனால்தான் அம்பாகிய கணையைச் சுடுகணை, வெங்கணை, கொடுங்கணை, மாக்கடுங்கணை என்றெல்லாம் அறிஞர் கூறுவர்.
யாழ் என்னும் இசைக் கருவியின் தன்மை, தண்டு கோணலாகவும், அதன் அடிப்பாகம் அகன்றும், கனமாகவும், மேலே செல்லச் செல்ல சிறுத்தும் இருக்கும்.

அழகற்ற தோற்றத்தை யாழ் கொண்டிருந்தாலும் அதன் பயன், கேட்கும் செவிகளுக்கு இன்னிசை நாதத்தைத் தருவது.

காந்தருவதத்தை என்ற பெண், யாழ் மீட்டிப் பாடியபோது சோலை மரங்கள் எல்லாம் வளைந்தனவாம்; கின்னர மிதுனம் என்ற பறவைகள் மெய்மறந்து வீழ்ந்தனவாம். சீவகன் யாழ் வாசித்தபோது,

""விண்ணவர் வீணை வீழ்ந்தார்
விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
மண்ணவர் மருளின் மாய்ந்தார்
சித்தரும் மனத்துள் வைத்தார்''

என்று பாடினார் "சீவகசிந்தாமணி' காப்பியம் படைத்த திருத்தக்கதேவர்.
 நேரான தோற்றத்துடன் காணப்படும் அம்பின் செயலோ கொடுமையானது. ஆனால், வளைந்த தண்டைக் கொண்ட யாழ் தரும் பயனோ இனிமையானது. எனவே, புறத்தோற்றத்தை மட்டும் கண்டு நல்லதென்றும், தீயதென்றும் நாம் முடிவு செய்துவிடக் கூடாது. அதனால் விளைகின்ற பயனைக் கொண்டுதான் முடிவைக் காணவேண்டும்.

""கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்'' (279)
என்கிறது திருக்குறள்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: