05/03/2012

கவரிமா(ன்) - வே.சிதம்பரம்

மானம் பெரிது என்று வாழ்கின்றவர்களை "கவரிமா'(ன்)னுக்கு உவமை கூறும் மரபு இலக்கியங்களிலும், மக்கள் வழக்கிலும் உள்ளது. "கவரிமா' என்று அறியப்பட்டுள்ள விலங்கு மான் இனத்தைச் சேர்ந்தது அல்ல. தவறாக அவ்வாறு குறிப்பிடப்படுகிறது. "கவரி' என்று சங்க இலக்கியங்களிலும் "கவரிமா' என்று திருக்குறளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கவரிமா தமிழ்நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் உயர்ந்த திபெத் பீடபூமியில் வாழும் ஒரு விலங்கு. மாட்டு வகையைச் சேர்ந்தது. இந்த விலங்கு ஆங்கிலத்தில்  Yak என்று பொதுப்பெயராலும், போஸ் க்ரன்னின்ஸ் என்று விலங்கினப் பெயராலும் குறிப்பிடப்படுகிறது. கவரிமா பற்றிய செய்தி பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு கவரிமா பற்றிய பி.எல்.சாமி, செந்தமிழ்ச்செல்வி இதழில் "சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது நூலாக 1970-இல் வெளிவந்தது. பிறகு மு.வை.அரவிந்தன் தனது "உரையாசிரியர்கள்' நூலில், கவரிமா பற்றி குறிப்பிட்டுள்ளார்.


2007-இல் ஆனந்த விகடன் வெளியீடாக வந்துள்ள பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் முதல் தொகுதியில், கவரிமா  பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க இலக்கியமான புறநானூற்றில் கவரிமா பற்றி,

""நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண்நிழல் பிணை யொடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமயம்'' (பா-132)

என்று, இமயமலையில் நரந்தை என்ற புல்லை மேய்ந்து, கவரிமா துணையுடன் வாழும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்தில்,

""கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
........ ...... நரந்தை கனவும்
....... ..... பேரிசை இமயம்'' (பா-11)

என்று, இமயமலையில் நரந்தை புல்லை மேய்ந்து வாழும் கவரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு இடங்களிலும் "கவரி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் "மா' என்பது விலங்குகளுக்கான பொதுப்பெயர். ஆகவே, "மா' சேர்க்காமல் "கவரி' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவரிமா 6 அடி உயரம் உள்ளது. அடர்ந்த கரிய உரோமம் உடல் முழுதும் மூடியுள்ளது. குட்டையான கால்கள், உயர்ந்த திமில் உள்ளது. தலை தரையைத் தொடும் அளவுக்கு தொங்கியே இருக்கும். வாலில் அதிகமான உரோமம் இருக்கும். குளிர் நிறைந்த பகுதியில் வாழ்வதால் அதன் உரோமம் அதற்குப் பாதுகாப்பாக உள்ளது. கவரிமா பொதி சுமக்கவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதன் உரோமம் பெண்கள் தலை முடியாகப் பயன்பட்டதை சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, ""கவரிமுச்சிய கார்விரி கூந்தல்'' என்று குறிப்பிடுகிறது. கவரி என்பது சவரி என்று ஆகி, சவரிமுடி என்று ஆகியுள்ளது. கவரி சாமரமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குறளில்,
""மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்'' (குறள்-969)

என்று கவரிமா உரோமத்தை இழந்தால் உயிர்வாழாது இறந்துவிடும் என்ற செய்தியை உவமையாகக் கூறியுள்ளார். ஆனால், பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்திலோ, தமிழ் கலைக்களஞ்சியத்திலோ, கவரி-யின் தன்மையாக உரோமம் நீக்கப்பட்டால் அது இறந்துவிடும் என்பது குறிப்பிடப்படவில்லை. உரோமம் நீக்கப்பட்டால் இறந்துவிடும் என்பது "கவரிமா'வின் சிறப்புப் பண்பாக இருக்குமானால், நிச்சயமாக கலைக்களஞ்சியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், திருவள்ளுவர் "கவரிமா'வின் முக்கிய பண்பாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் கூற்றுக்கான ஆதாரத்தை விலங்கு பற்றிய ஆராய்ச்சியாளர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும். சங்க இலக்கியங்கள், கவரிமா இமயமலையில் வாழ்பவை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

திருவள்ளுவர் கவரிமா என்று குறிப்பிட்டுள்ள நிலையில், உரையாசிரியர் பரிதியார், கவரிமான் என்று குறிப்பிடுகிறார். மற்ற உரையாசிரியர்கள் கவரிமா என்றே குறிப்பிட்டுள்ளனர். பரிதியார் தனது கூற்றுக்கு ஆதாரமாக எதையும் கூறவில்லை. மேலும், திருவள்ளுவர் "மயிர் நீப்பின்' என்று பொதுப்படக் கூறியுள்ள நிலையில், உரையாசிரியர்கள் ஒரு மயிர் என்று சேர்த்து புதிய விளக்கத்தைக் கூறியுள்ளனர். இந்த விளக்கங்களே பின் வந்த தவறான கருத்துக்கு அடிப்படையாக அமைந்துவிட்டது. சீவகசிந்தாமணி "மானக்கவரி' என்றும் கம்பராமாயணம், "மானமா' என்றும், பெருங்கதை,

""வான் மயிர் துடக்கின் தானுயிர் வாழாப்
பெருந்தகைக் கவரி''

என்றும்; கவரி மானமுள்ள விலங்கு என்றும் மான உணர்ச்சியை அதன் பண்பாகக் கூறிச்சென்றுள்ளனர். திருவள்ளுவர், கவரிமா மானமுள்ள விலங்கு என்று குறிப்பிடவில்லை. ஆனால் மான உணர்ச்சிக்கு உதாரணமாகக் கூறியுள்ளார். சங்ககாலப் புலவர்கள் கவரிமாவின் உரோமம் நீக்கப்பட்டால் இறந்துவிடும் என்றோ, அது மான உணர்ச்சி உள்ள விலங்கு என்றோ குறிப்பிடவில்லை என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

மக்கள் வழக்கில் "கவரிமான்' என்பது மான உணர்ச்சிக்கு உதாரணமாக வழங்கிவருகிறது. "இவர் பெரிய கவரிமான் பரம்பரை' என்று கூறும் வழக்கு உள்ளது. கவரிமா(ன்) தமிழர் சிந்தனையில் ஆழப்பதிந்துள்ளது. இதன் உண்மைத் தன்மை புதிய ஆராய்ச்சி மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.


நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: