கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 31 : தமிழ் இலக்கணச் சிறப்பு!

 வித்துவான் தி.சங்குப்புலவர்

இலக்கண நூல்களும் அவற்றின் சிறப்பும்
நமது தமிழ்மொழி இலக்கண நூல்களிற் கடல்கோளாற் கெட்டனவும், கரையான் வாய்ப்பட்டனவும் நீங்க எஞ்சி நிற்பன சிலவே. அவை தொல்காப்பியம், பன்னிரு பாட்டியல், இறையனாரகப்பொருள், நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், நேமிநாதம், வீரசோழியம், தொன்னூல் விளக்கம், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், சிதம்பரப் பாட்டியல், வெண்பாப் பாட்டியல் ஆகிய நூல்களே. இவற்றுள் எளிதாகக் கற்கப் பயன்படும் நூல்கள், நன்னூல், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் என்பன. தொல்காப்பியம் எல்லாவற்றிற்கும் துணையாக நின்று பண்டைத் தமிழர் பெருமையை எடுத்துக் காட்டுதற்கு ஏதுவாய் இலங்குகின்றது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென ஐவகையாகப் பகுத்தனர் ஆன்றோர். தமிழ் மொழியிலக்கணம் தனிச் சிறப்புடையது. மற்றை மொழிகளின் இலக்கணம் போன்றதன்று.


 எழுத்துக்களின் பிறப்பு
 மக்கள் உந்தியிலிருந்து ஒரு காற்று எழுகின்றது; அதற்கு "உதானன்' என்பது பெயர். அக்காற்று மார்பிலும் மிடற்றிலும் மூக்கிலும் தங்கி நிற்கும். மார்பினின்ற காற்று வெளிவரும்போதுதான் வல்லினமாகிய கசடதபற என்ற ஆறும் பிறக்கும். மிடற்றில் நின்ற காற்று வெளிவரும்போது, உயிரெழுத்துப் பன்னிரண்டும், இடையினமாகிய , , , , , என்ற ஆறும் பிறக்கும். மூக்கில் நின்ற காற்று வெளிவரும்போது மெல்லினமாகிய , , , , , என்ற ஆறும் பிறக்கும் என்று இடப் பிறப்பை எடுத்துரைத்தனர் இலக்கண நூலாசிரியர். வாயைத் திறக்கு முயற்சியால் , , என்ற உயிர் எழுத்துப் பிறக்கும்; வாயைத் திறக்கு முயற்சியுடன் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்தினால் , , , , பிறக்கும்; உதடு குவிதலால் , , , , ஒள இவை பிறக்கும் என்று, எல்லா எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு முறையே கூறியது வியக்கத்தக்கதன்றோ!
 புணர்ச்சி இலக்கணம்
 புணர்ச்சி என்ற சொற்குப் பொருள் ""ஒன்றோடு ஒன்று சேர்வது'' என்று கூறவேண்டும். புணர்ச்சி என்றவுடன் ஆண் பெண்ணுடன் கூடுவதையே குறிக்கும் எனப் பலரும் கருதுவர். அமையம் நோக்கி அச்சொல் ஒன்றாகச் சேர்வதையெல்லாம் உணர்த்தும், இலக்கணத்திற் புணர்ச்சி என வந்தால், ஓர் எழுத்தின் ஒலி மற்றோர் எழுத்தின் ஒலியுடன் கலந்து ஒலிப்பது எனக் கொள்ளவேண்டும். அதைத்தான் "புணர்ச்சியிலக்கணம்' எனப் புகன்றனர் புலவர். இயற்கைதான் இலக்கணம்; இலக்கணம்தான் இயற்கை; கூர்ந்து நோக்குங்கள் எழுத்துக்களின் ஒலி பிறக்கு முயற்சியை யாராய்ந்தால் அதன் உண்மை விளங்கும்.

 புணர்ச்சியின்பம்
 உலகத்துத் தோன்றிய உயிர்கள் எல்லாம் ஆணும் பெண்ணும் கூடியபோது இன்பத்தையடைகின்றன. அதனைப் புணர்ச்சியின்பம் எனப் புகல்கின்றோம். ஆண் பெண் கூடாமல் உலகம் இயங்காது. இஃது உலகியற்கை. எழுத்துக்களும் ஒன்றோடொன்று கூடியபோதுதான் சொல்லின்பம், பொருளின்பந் தோன்றுவதைக் காண்கிறோம். சொற்களைக் கட்டுவதால் யாப்பு எனவும், சொற்கள் தொடர்ந்து நிற்பதால் தொடர்பு எனவும், பரந்துபட்ட ஓசையுடைமையால் "பா' எனவும் பெயர் பெற்றது செய்யுள். எழுவகைத் தாதுக்களால் மனிதனது உடம்பு உயிருக்கிடமாக அமைந்திருப்பதுபோல எழுத்து, அசை, சீர், தளை முதலிய உறுப்புக்களால் பொருளுக்கிடமாக அமைந்திருப்பது பாட்டு. உடம்பிற்கு யாக்கை என்பது பெயர்; பாட்டிற்கு யாப்பு என்பது பெயர்; ஒற்றுமை காண்க. எழுத்துப் புணர்ச்சி, சொற் புணர்ச்சி யில்லையெனில், சொல்லின்பமும் பொருளின்பமும் அமைத்துப் பாட இயலாது.

 அகப்பொருள்
 தமிழ்நாட்டில் பலகலை கற்று உலகியல்பு உணர்ந்து நல்லொழுக்கமுடன் வாழ்கின்ற ஆடவர் பெண்டிர் என்ற இரு பாலாரும் தாம் கூடித்துய்த்த காமவின்பத்தினை இவ்வாறு இருந்தது எனப் பிறர்க்குக் கூறமாட்டார்; அவரவர் அகத்துள் அடக்கி வெளிப்படாதவாறு வாழ்வார்; இக் காமவின்பம் வெளிப்படையாகப் பிறர்க்குக் கூறத்தகாதது என இயற்கை யுணர்ந்து அகத்தே நிகழும் ஒழுக்கத்திற்கு "அகம்' எனப் பெயர் இடுவது தகுதியெனக் கண்டு அகம் எனப் பெயர் அமைத்தனர். பண்டைத் தமிழரின் பண்பாட்டையும், வாழ்வுக்கு வழி காட்டுவதும் அகப்பொருளிலக்கணமே.

 புறப்பொருள்
 பண்டைக் காலத்து வாழ்ந்த குறுநில மன்னர், பெருநில மன்னர், மறவர், வேடர் முதலிய குலத்தினரிற் சிறந்த வள்ளல்கள் இயற்கையை எடுத்துக் காட்டுவதுதான் புறப்பொருள். ஒருவர் நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களை மற்றொருவர் நாட்டிற்குக் கொண்டுவரப் புறப்படுவோர் வெட்சி மலர் சூடுவர்; அங்ஙனம் கொண்டு செல்லும் பசுக்கூட்டங்களை மீட்பதற்கு வருவோர் கரந்தைப்பூச் சூடுவர்; ஒரு வேந்தன் ஆளும் நாட்டைக் கவர நினைத்துப் புறப்படுவோர் வஞ்சிப்பூச் சூடுவர்; அவ்வேந்தனை எதிர்த்துப் போர்செய்ய வருவோர் காஞ்சி சூடுவர்; மதிலை முற்றுகையிடுவோர் உழிஞை என்னும் மலர் சூடுவர்; உள்ளிருந்து மதிலைக் காப்போர் நொச்சி சூடுவர்; குறித்த இடத்தில் வந்து போர் புரிவோர் தும்பை சூடுவர்; வெற்றிபெற்றவர் வாகை சூடுவர் என முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை கண்டு அதனையே இலக்கணமாக வகுத்தனர் முன்னோர். காதல், வீரம், கொடை என்ற நற்பண்புகட்கு இலக்கணம் வகுத்தவர் நம்நாட்டினரே. இது நமக்கு நாட்டின் சிறப்பை எடுத்துக் காட்டுமன்றோ?

 யாப்பு
 யாப்பிலக்கணத்தில் வெண்பா இலக்கணமே சிறந்தது. வெண்பாவில் இயற்சீரும் வெண்பாவுரிச்சீருமே வரும்; நாற்சீர் கொண்ட வடிவே பெறும்; ஈற்றடி முச்சீரடியாக இருத்தல் வேண்டும்; அவ்வடியின் இறுதிச்சீர் ஓரசைச் சீராகவும் குற்றியலுகரம் வந்தால் ஈரசைச் சீராகவும் இருத்தல் வேண்டும். இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை பெற்றுத்தான் நிற்கும் என வரையறை கூறியிருப்பது மக்கள் மனத்தை மயங்கச் செய்கின்றது.

 அணி
 அணிகளில் தொல்காப்பியர் காலத்தில் இருந்தது உவமையணி ஒன்றுதான். அது பல பிரிவாகப் பிரிந்து நிற்கக் காண்கிறோம். உள்ளுறையுவமையும் இறைச்சியும் அக்காலத்தில் இருந்த அணிதான். வழிநூல் ஆசிரியர் ஆகிய தண்டியாசிரியர் தன்மை, உவமை, உருவகம் முதலாக முப்பத்தைந்து அணிகள் காட்டினார். "அணியியல்' என ஓர் இலக்கணம் இருந்தது என்றும் அது நமக்கு முழுவதும் புலப்படாமல் மறைந்தது என்றும் அறிகின்றோம். வடமொழியிலக்கணத்தைக் கொண்டே தண்டியாசிரியர் அணிகளை வகுத்தனர் என்று காண்கின்றோம். அவர்க்குப் பின்வந்த ஆசிரியரும் வடமொழியிலக்கணத்தைத் தழுவியே நூறு அணிகள் காட்டினர். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணமாகப் பின்வந்த ஆசிரியர்கள் அணிகளை நூற்றுக்கு மேலும் தோற்றமாக ஏற்றமுறச் சாற்றிப் போற்றி வருகின்றனர். தமிழ் இலக்கணச் சிறப்பும் அதனைப் புலவர்கள் போற்றி வந்த முறையும் உணர்க.

 செந்தமிழ் நாட்டுச் செல்வர்களே! தமிழ் இலக்கண வரம்பு கடக்க எண்ணாதீர்கள். அயல்நாட்டு மொழியை நம் மொழியுடன் கலக்கும்படி உரையாடுவதை யொழித்துவிடுங்கள். இன்றியமையாத மொழியாயிருப்பின் அதனைத் தமிழ் இலக்கணத்திற்குப் பொருந்துமாறு ஆராய்ந்து அமைத்துக் கொள்ளுங்கள். இலக்கண வழுவின்றிப் பேசவும் எழுதவும் பயிலுங்கள். புணர்ச்சி யிலக்கணத்தைப் பொருத்தியே உரையாடவும் எழுதவும் பயிலுங்கள். பாட்டிலுள்ள பொருள் எல்லார்க்கும் எளிதில் விளங்க வேண்டும் என்றால், செய்யுளை எழுதி அதன்கீழ் ஒவ்வொரு சொல்லாகப் பிரித்துக் காட்டுங்கள். அவ்வாறு பிரித்துக் காட்டினாலும் பொருள் விளங்காது என்று தெரிந்தால் உரையெழுதிக்காட்டுங்கள். உரையெழுதிக் காட்டினும் பொருள் விளங்காது என்று தெரிந்தால் அவர்களுக்கு அப் பாட்டைப் படித்து விரிவுரை கூறுங்கள்.

 இதுவே புலவர்கள் தமிழ்நாட்டிற்குச் செய்யும் தனிப்பெருந் தொண்டாகும். தமிழ்மொழி வளர்க்கும் ஆர்வம் தமிழ் நாட்டார் உள்ளத்திற் பெருகுக! வளர்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ