28/03/2012

கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்! – வேல. ராமமூர்த்தி

எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதி நடந்தே வந்தார். நேற்று புறப்பட்டதில் இருந்து கை வீச்சு குறையாத நடை. களைப்புத் தெரியாமல் இருக்க காற்றோடும் காட்டுக் குருவிகளோடும் உரையாடிக்கொண்டு வந்தார். குயில்களோடு சேர்ந்து பாடிக்கொண்டும் வந்தார். கடந்து வந்த ஒவ்வோர் ஊர்க் கிளிகளும், குருவி, காகங்களும் அடுத்த ஊர் எல்லை வரை உடன் வந்து, பிரிய மனம் இல்லாமல் தத்தம் எல்லைக்குத் திரும்பின.

காடல்குடி மாரிச்சாமி நாயக்கர் வழி மறித்து அழைத்துப் போய் குடிக்கக் கொடுத்த இரண்டு செம்பு கம்பங்கஞ்சி, முத்துச்செல்லையாபுரம் தாண்டும் முன் மூத்திரமாகப் பிரிந்துபோனது. சுக்காய் காய்ந்த உடம்பு குளிக்க வியர்வை. உச்சந்தலையும் வியர்த்தது. முண்டாசு நமத்து, அவியல் நாற்றம் எடுத்தது. நடை வேகம் கூடியது. ஈடுகொடுத்துப் பறக்க முடியாத ஒரு கிளி, பாரதியின் இடது தோளில் அமர்ந்தது. கிளியின் பக்கம் பாரதி திரும்ப, மீசை மயிர், பச்சைக் கிளியின் சிவந்த அலகோடு உரசியது. ஒரு மயிர் கிளியின் நாசித் துவாரத்துக்குள் நுழைய, கிளிக்குத் தும்மல் வந்தது. பாரதிக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வெளியேறியது.

நாலு கை வீச்சு தூரத்தில்தான் பெருநாழி இருக்க வேண்டும். தமிழுக்கு நட்சத்திரக் கவி தந்த கவியோகி கருணையானந்த சுவாமிகள், பெருநாழிக்காரர். 'ª' '«' என்கிற கொம்புகளே இல்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவி மாலைகளை இயற்றிய கோவிந்தசாமிப் புலவன், பொந்தம்புளி கிராமத்தான். அவனுடைய ஓலைச் சுவடிகள் யாழ்ப்பாணம் நூலகத்தில் இருப்பதாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைஅவர்கள் திருவனந்தபுரத்தில் சொன்னார். கவியோகி கருணையானந்த சுவாமிகள் பற்றி வையாபுரி பிள்ளை வாய்க்கு வாய் புகழ்ந்தார். இருவரையும் சந்தித்து அளவளாவ உத்தேசம். நடந்தே வந்தாயிற்று.

எட்டையபுரத்தில் இருந்து புறப்படும்போது கையில் தம்பிடிக் காசு கிடையாது. சீட்டுக் கவி அனுப்பி உதவி கோரியும் எட்டையபுரத்து ராசா கை விரித்துவிட்டான். செல்லம்மாவுடன் புதுச்சேரியில் செத்துச் செத்து ஜீவனம் நடந்த காலங்களில், கேட்காமலே உதவிகளைச் செய்து காப்பாற்றியவர் எட்டையபுரம் வெங்கடேச ரெட்டுத் தேவர்.தேவருக்கு மகா சக்தி அமரத்தன்மை தருக.

பசி அறியும் புலன்கள், புதுச்சேரி வாசத்தில் மரத்துப்போய்விட்டன. பசியே கவியாய் மாறி சாகாவரம் பெறுமன்றோ! உயிர். என்ன உயிர்! உள்ளுக்குள் ஓடும் வரை ஓடட்டும்! வைரவன் கோயில் ஆலமரத்தோடு அந்தி மயங்கியது. ஆலமரத் தூரில் இருந்து வெளியேறிய ஆள் நீளக் கருநாகம், பாதையின் குறுக்கே போகிற போக்கில் திரும்பிப் பார்த்தது. நாகப் பாம்பின் மேனி மினுமினுப்பு பாரதியைக் கிளர்த்தியது. கால்கள் ஓய்ந்து வந்தன.

ஆலமரத்தடியில் உட்கார வாகாக ஒரு சிறு பாறை. சற்றே ஓய்வுகொள்ளப் பொருத்தமான இடம். ஓய்வுக்குப் பின் நடக்கலாமே. பாறைக்கு அருகே வந்தார். பாதை கடந்து போன கருநாகம் திரும்பி வந்து, ஆலமரத்தின் தூருக்கும் பாறைக்கும் இடையில் செருகியது. கருநாகத்தின் வால் நுனி மறையும் வரை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார். மெய் சிலிர்த்தது. முண்டாசைக் கழற்றி பாறையில் மலர்த்தி வைத்தார். தலை வழுக்கையை அந்திக் காற்று மண்டித் தழுவும் சுகம், உள்ளங்கால் வரை பிசைந்தது. உச்சி நோக்கி முகம் ஏந்தி, கண்கள் செருக மூச்சிழுத்தார். வியர்வை உடம்பு நசநசத்தது.

காலையில் விளாத்திக்குளம் கண்மாயில் முங்குக் குளித்த பின் அணிந்த கோட்டு. கழற்றி, பாறை மறைய விரித்தார். காலணிகளைக் கழற்றினார். காலடியில் கட்டெறும்புகள் மொய்த்தன. உளி உளியாய் கறுத்த எறும்புகள். முழங்கால் வரை ஏறின. 'கொடு கொடு...'வென ஊர்ந்து ஏறவும் இறங்கவுமாய் விளையாடின. அடி வயிற்றோடு கூச்சனீ எடுத்தது. 'க்ளுக்' எனச் சிரித்தார். இருளும் வெளியில் நாய்களின் ஊளைச் சத்தம் நெருங்கிக் கேட்டது.

கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையில் வலி எடுத்தது. கடையம் நாராயணப் பிள்ளையின் மீதான கோபத்தைத் தணிக்க 'திடுதிப்'பென மேற்கொண்ட நடைப் பயணம்.

'என்ன திமிர் இருந்தால்... என் மகள் சகுந்தலாவைப் பெண் கேட்பான்?' வலது கால் மிதி ஓங்கி விழுந்தது.

'பிள்ளைவாள்... துப்பாக்கி வைத்திருக்கிறானாம்... துப்பாக்கி! காலனை மிதிக்கக் காலருகில் அழைத்த இந்தக் கவிச் சக்ரவர்த்தியைக் கைத் துப்பாக்கியால் மிரட்டுகிறானாம்!' கறுக்கும் உச்சி வானம் பார்த்து உரக்கச் சிரித்தார்.

''யார்றா... அது?'' - உச்சந்தலைக்கு மேல் அறைந்தது கேள்வி.

இடது புறம் திரும்பினார் பாரதி. ஓங்குதாங்கான உருவம். கண்ணுக்குப் புலப்படாத கறுப்பு.

''நீ... யாரு ஓய்..?'' கண்களை உருட்டி அதட்டினார்.

''காவக்காரன்.''

''யாருக்குக் காவல்?''

''சுத்துப்பட்டி காடு கரை எல்லாம் என் காவல்தான்.''

''நாமகரணம்?''

''இருளாண்டித் தேவன்.''

''... மறப் பயலா நீ?'' - மீசையைத் தடவினார்.

இருளாண்டித் தேவனுக்கு 'சுருக்' என்றது. ''ஏன்டா... என்ன திமிரு ஒனக்கு!'' - விலாவில் இடிக்க வேல் கம்பால் வாகு பார்த்தான். ''இடிச்சேன்... குடல் வெளியே தள்ளிரும். ஆளும் மீசையும்! எந்த ஊரான்டா நீ?''

அலுங்காமல், ''எட்டையபுரத்து சுப்ரமண்ய பாரதி'' என்று ஏற இறங்கப் பார்த்தார்.

''மேக் காட்டுப் பயலா நீ? வாக்கொழுப்பு இருக்கத்தான் செய்யும். என்ன வர்ணாச்சியம்?''

''பிராமணாள்.''

இருளாண்டித் தேவன் பதறிப்போனான். ''சாமி... நீங்க அய்யர் மகனா? மீசையும் கீசையும்... ஆளைப் பாத்தா அப்படித் தெரியலையே சாமி!'' - தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிடும் உள்ளங்கைகளுக்குள் வேல் கம்பு இருந்தது. ''என்ன சாமி... இந்நேரம் இங்கே?''

உதட்டோரம் சிரித்துக்கொண்டார். ''ஓய்... இருளாண்டி! கவியோகி கருணையானந்த சுவாமிகளை உனக்குத் தெரியுமா?''

''எனக்கு மாமன் மொறைதான். பஞ்சம் பொழைக்க தஞ்சாவூர் காட்டுக்குப் போயிட்டாரு. திருவாரூர்ல அச்சாபீஸ் வெச்சிருக்கிறதாக் கேள்வி.''

''பொந்தம்புளி எவ்வளவு தூரம்?''

''கெழக்க கூடி மூணு மைல் சாமி. அங்கே யாரைப் பாக்க?''

''கோவிந்தசாமிப் புலவன்.''

''அந்தக் கிறுக்குப் பயலா?''

''கவி எழுதுபவன் கிறுக்கனா?''

''அட... அந்தாளு பாட்டு மட்டுமா எழுதுறாரு? வாக்கு விடுறாரு சாமி! விட்ட வாக்கு தப்பாது! சொர்க்கமோ... நரகமோ... வாக்கு வாங்குனவன் போய்ச் சேர வேண்டியதுதான்!''

''..!'' கண்களை உருட்டினார்.

''முட்டி முட்டியா... கள்ளு! மூச்சுமுட்டக் கஞ்சா! அதுதான் அந்த ஆளுக்கு அன்ன ஆகாரமெல்லாம்! கண்ணைச் சுருக்கிச் சொன்னா... சொன்னதுதான். அத்தனையும் பலிக்குது!''

பாரதி, நெஞ்சு நிறையச் சிரித்தார். ''அவை எல்லாவற்றிலும் எமக்கும் இஷ்டம் உண்டு. எமது சகவாசத்துக்கு கோவிந்தசாமிப் புலவன் சிலாக்கியமான ஆள்தான் போலிருக்கிறது!''

''எட்டையபுரத்துல இருந்து நடந்தே வந்திருக்கீங்களே. பசி ஆறுனீங்களா சாமி?'' பாரதியின் காலடியில் குத்தவைத்தான்.

''மாரிச்சாமி நாயக்கன் வீட்டில் மதியம் குடித்தது கம்பங் கஞ்சி. இரவு... 'இருளாண்டித் தேவன் வீட்டுக் கஞ்சி' என்பது கொடுப்பினை.''

''சாமீ..!''

''ஏன் பதறுகிறாய்?''

''ஐயர் மகன் நீங்க! நாங்க... கம்பஞ்சோத்தையும் கருவாட்டுக் கொழம்பையும் பெசஞ்சு திங்கிற ஆளுக.''

''ஆஹா... எச்சில் ஊறுகிறதே! போ... போ... போய் கஞ்சியையும் கருவாட்டையும் சீக்கிரம் கொண்டுவா.''

''ஆத்தாடீ! அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன் சாமி'' - இருளாண்டித்தேவன் எழுந்தான். ''கொஞ்சம் இங்ஙனயே தாமசிங்க சாமி. பெருநாழியிலே ஒரு ஐயர் வீடு இருக்கு. குருநாத சாமி வீடு. அங்கே போயி 'ஒங்க சோறு' ஏதாச்சும் வாங்கியாறேன்.''
''ஏய்!'' கை நீட்டினார்.

சொல் கேட்காமல் இருளாண்டித் தேவன் வேகமாக நடந்தான்.

''சாமீ... சாமீ!''

''யார்றா அவன் இந்நேரம்?'' வீட்டுக்குள் இருந்து குருநாத சாமியின் வெண்கலக் குரல், வாசலை அறுத்தது.

''காவக்கார இருளாண்டி வந்திருக்கேன் சாமி.''

''என்னடா... சொல்லு'' - வெளியே வரக் காணோம்.

''ஒங்க வர்ணாச்சியத்தோட ஒரு சாமி வந்திருக்காரு. வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடியிலே ஒக்காந்திருக்காரு. பாவம்... பசிக்குதாம்! 'சாமி வீட்டு ஆகாரம்' ஏதாச்சும் குடுத்தீங்கன்னா... அவரைப் பசி ஆத்தலாம்.''

குருநாதசாமி கதவைத் திறந்தார். ''எந்த ஊர் சொன்னான்?''

''எட்டையபுரமாம்!''

''என்ன பேர் சொன்னான்?''

''சுப்ரமணிய பாரதியாம்!''

''மீசை வெச்சிருக்கானா?''

''ஆமா சாமி. நல்லா முறுக்கிவிட்டுருக்காரு!''

''முண்டாசு கட்டியிருக்கானா?''

''ராசா மதிரி முண்டாசு!''

''பூணூல் போட்டிருக்க மாட்டானே!''

''இருட்டுல நான் கவனிக்கலே சாமி.''

''அவன் பட்டினி கெடந்தே சாகட்டும்'' - வீட்டுக்குள் திரும்பினார்.

''சாமீ!'' - இருளாண்டித்தேவன் கை ஏந்தினான்.

''கோத்திரம் கெட்ட அந்தக் கிறுக்குப் பயலை... எங்காள் ஜாதிப் பிரஷ்டம் பண்ணி இருக்கான்! பச்சத் தண்ணிகூட குடுக்க முடியாது. போ... போ!'' கதவைச் சாத்தினார்.

பாறையில் மலர்த்திவைத்திருந்த முண்டாசுக்குள் கருநாகம் சுருண்டுகிடந்தது. எட்டுத் திக்கும் பறந்து திரும்பிய வெளவால்கள், கனி வர்க்கங்களை பாரதியின் கை வாக்கில் அடுக்கி இருந்தன.

''ஆஹா... என்னே ருசி! என்னே ருசி!'' - கலயத்துக் கம்பங் கஞ்சியை மாந்தினார். ஒரு வாய் கஞ்சிக்கு, ஒரு வெங்காயத்தை, உப்புக் கல்லைத் தொட்டுக் கடித்துக்கொண்டார். மீசையில் ஒட்டி இருந்த கஞ்சியை, இடது கையால் துடைத்துக்கொண்டார். இருளாண்டித் தேவன், பாரதியின் காலடியில் அமர்ந்து, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

''குருநாதனிடம் போனாயா? என்ன சொன்னான்?''

''நான் அங்கே போகலை சாமி'' - கண்களைத் துடைத்தான்.

''டேய்... களவாணிப் பயலே! பொய் சொல்கிறாயா? என் பெயரைக் கேட்டதும் உன்னை அவன் துரத்தி இருப்பானே!'' என உற்றுப் பார்த்தவர்'' கிறுக்குப் பயலே! நீ ஏன் அழுகிறாய்?'' துடைத்துவிட்டார்.
''வேற ஒண்ணுமில்லே சாமி. எங்க வீட்டுக் கஞ்சியை ஒங்களைக் குடிக்கவெச்சு... நான் பாவம் பண்ணீட்டேனோன்னு ஒரு நெனப்பு வந்துச்சு.''

''அட கிறுக்கா... கிறுக்கா! இந்தக் கஞ்சியைக் குடிக்க நான்தான்டா புண்ணியம் பண்ணி இருக்கணும்.'' - கஞ்சிக் கலயத்தை அன்னாக்க விட்டார்.

இருளாண்டித் தேவன் கவிழ்ந்துகொண்டே பேசினான். ''குருநாத சாமி மேலே இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் போச்சு சாமி. ச்ச்சேய்... என்ன மனுசன் அவரு! 'பசின்னா என்ன?'ன்னு தெரியாத அந்த ஆளை ரெண்டு பொழுதுக்குப் பட்டினி போட்டா... சாதியைப் பத்திப் பேசுவாரா சாமி? கோயில்ல அவரு பூஜை பண்ணி, எங்க பாவம் தீரப் போகுதாக்கும்?''

தொண்டை நிறையக் கஞ்சி இறங்கிக்கொண்டு இருந்த தால் பாரதிக்கு வாய்விட்டுச் சிரிக்க முடியவில்லை.

முண்டாசுக்குள் சுருண்டுகிடந்த கருநாகம், அவிழ்ந்து, பாரதியின் வலது தொடையில் ஏறியது!

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை: