கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

உலகின் முதல் இலக்கியம் - புலவர் அ.சா.குருசாமி

தாய்மை உணர்வு வழங்கிய உலகின் முதல் இலக்கியமே "எழுதா இலக்கியம்' என்று கூறப்படும் "தாலாட்டு' இலக்கியமாகும்.

தாயின் வயிற்றிலிருந்து அழுத குரலோடு குழந்தை உலகைப் பார்க்கும்போதே "ஆராரோ' என்ற தாலாட்டு இசையும் பிறக்கிறது. இவ்வாறு மனித குலம் தோன்றிய காலம்தொட்டே தாலாட்டு தோன்றி வளர்ந்து வருகிறது. எனவே, எல்லா இலக்கியங்களுக்கும் முற்பட்டது என்ற சிறப்புடன் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது "தாலாட்டு' இலக்கியம்


தாலாட்டு என்ற சொற்றொடர் தால்+ஆட்டு என்று பிரியும். "தால்' என்றால் நாக்கு; குழந்தையின் அழுகை ஒலியை நிறுத்த, தாய் தன் இதழ்களைக் குவித்து நாவை ஆட்டி அசைப்பதால்தான் "தாலாட்டு' எனப் பெயர் பெற்றது.

எல்லா மொழிகளிலும் அவரவர் தத்தம் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் சூழலுக்கு ஏற்ப தாய்மார்கள் தாலாட்டுப் பாடுகின்றனர்.
இசை இன்பத்தில்தான் குழந்தை தூங்குகிறது என்றாலும், அதன் பிற்கால வளர்ச்சியில் நல்வழிப் பாதையில் பயணிக்கப் பயன்படும் வகையில் கருத்து வளமும் மூளையின் ஒரு பகுதியில் பதிவு செய்யப்படுகிறது என்று மன இயல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தாய்க்குலம், உலக்குக்கு அளித்துவரும் அழியாக் கருவூலம் தாலாட்டு. ஒரு தாய் தன் குழந்தையைத் தாலாட்டும்போது, அக்குழந்தை மெய்மறந்து தூங்குகிறது. அதைக் கேட்கும் மற்றவர்களது செவியும் மனமும் குளிர்கின்றன.

தாலாட்டு - "இலக்கியத்தின் தாய் ஊற்று' என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.
குழந்தைப் பருவத்தையும், மொழி அறிவின் இளமைப் பொலிவையும், இலக்கியச் சிறப்பின் தாய்மைக் கனிவையும் தாலாட்டுப் பாடல்களில் காணமுடிகிறது.

இந்தக் கண்ணோட்டத்துடன் தாலாட்டு உள்ளிட்ட நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றறிந்த சான்றோர் உற்று நோக்கின், இன்றைய இலக்கியங்கள் பலவற்றுக்கும் வேர், மூலம், ஊற்று, அடிப்படை தாலாட்டுதான் என்பதைப் புரிந்து கொள்வர்.

எழுதா இலக்கியமாக உலாவந்த தாலாட்டுப் பாடல்களை முதன் முதல் இலக்கியத்தில் பதிவு செய்தவர்கள் பன்னிரு ஆழ்வார்களே ஆவர்! கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து, தங்களைத் தாய் நிலையில் வைத்து அவர்கள் பாடிய பாசுரங்கள் தாலாட்டு இலக்கியங்களாயின.

தாலாட்டு இலக்கியம் அரங்கேறிய காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு. பெரியாழ்வார்தான் முதன்முதலில் தாலாட்டுப் பாடியவர். எடுத்துக்காட்டுக்கு அவரது பாசுரம் ஒன்று:
""மாணிக்கம்கட்டி வயிரம் இடைக்கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறு தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே, தாலேலோ
வையமளந்தானே தாலேலோ''
(நா.தி.பி.: 1-ஆம் பத்து; 3-ஆம் திருமொழி-தாலப்பருவம்)

அதையடுத்து, "பிள்ளைத்தமிழ்' என்ற சிற்றிலக்கிய வகை நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கு அணிசேர்த்தன. பிள்ளைத் தமிழில் வரும் பத்துப் பருவங்களுள் ஒன்று "தாலப்பருவம்'. அதனால் ஒவ்வொரு பிள்ளைத் தமிழ் நூலிலும் தாலாட்டு இடம் பெறலாயிற்று.

தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் பலர் தாய்மை வழங்கும் தாலாட்டின் இசை, நடை, மொழிகளையே அடிப்படையாகக்கொண்டு தனிப்பாடல்கள் புனைந்து வருகின்றனர். இவையே தாலாட்டின் இலக்கிய வளர்ச்சியாகும்.

காலங்காலமாக செவி வழியாகத் தொடர்ந்து வந்த தண்டமிழ் நாட்டுத் தாலாட்டுப் பாடல்களைக் கண்டறிந்து, அவை நூல்களாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குழந்தை பிறந்தவுடன் மங்கலச் சடங்கு, தொட்டிலிடுதல், பெயர் சூட்டல், காதுகுத்தல், ஆண்டு நிறைவு, பள்ளியில் சேர்த்தல் ஆகிய சடங்குகள் தமிழர் நாகரிகத்துக்கு உரியதாக ஒளிர்கின்றன. இந்நிகழ்வுகள் பற்றிய சிறப்புகள் யாவும் தாலாட்டுப் பாடல்களில் மிளிர்வதைக் காணலாம்.

தாலாட்டு தாய்மைக்குரிய இலக்கியமாகையால், அதில் தாய்மாமன்மார் பெருமைகளும் அவர்களின் சீர்வரிசை மேன்மைகளும் முன்னோர்கள் தம் சாகசங்களும் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வள்ளியம்மை தாலாட்டு, சங்ககாலக் காதல் முறையையும், சொக்கர்-மீனாள் தாலாட்டு உழவுத் தொழிலின் உயர்வையும், பாண்டிய நாட்டுத் தாலாட்டு தமிழகத்தின் செல்வச் செழிப்பையும், நாகரிகத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

தமிழகம் முழுவதும் ஊருக்கு ஊர் வழங்கிவரும் தாலாட்டுப் பாடல்கள், நமது மண்ணின் மாண்பு, பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை நெறி போன்றவற்றை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றன. அவைகளை ஒருங்கிணைத்துப் பாதுகாக்க வேண்டியது தமிழர்தம் தலையாய கடமையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ