28/03/2012

இலக்கணம் சொல்லாத புதிய விதி! - முனைவர் மலையமான்

நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் (.கா. கொத்தனாரின் கொல்லூறு) காலப்போக்கில் குறுகிச் சிறியதாய்விடும். இந்த வடிவக் குறுக்கம் மொழிக்கும் பொருந்தும். தமிழ் சிறிய சொற்களைக்கொண்ட மொழி. இதில் ஐந்து எழுத்துகளுக்கு மேற்பட்ட அடிப்படைச் சொற்கள் கிடையாது. தமிழ் நெடுங்காலத்திற்கு முன்பு தோன்றிய மொழி என்பதற்கு இந்தச் சிறு சொற்களே சான்றாக அமையும்.

தமிழின் சொற் சுருக்கத்திற்கு இலக்கணம் வழி வகுத்துள்ளது. முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்பது அது அளித்துள்ள வழிகளுள் ஒன்று.

தாமரை - மரை - முதற்குறை
உள்ளம் - உளம் - இடைக்குறை
நீலம் - நீல் - கடைக்குறை

இவற்றில் எழுத்து மறைந்தாலும் பொருள் மாறாது. இடுசொற்களின் சேர்க்கையில் (புணர்ச்சியில்) எழுத்து மறையும் (தேன்+மொழி-தேமொழி). ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சச் சொல்லிலும் ஓர் எழுத்து குறையும் (பறவாத+வண்டு - பறவா வண்டு).

மற்றொரு வழியிலும் சொற்சுருக்கம் ஏற்படுகிறது. எந்த இலக்கணமும் சொல்லாத புதிய விதியாக இது உள்ளது. இது சமுதாய நடைமுறையில் அமைந்திருக்கிறது; சில சொற்களில் மட்டும் இது காணப்படுகிறது.
ஒரு சொல்லில் அடுத்தடுத்து இரு குறில் எழுத்துகள் இருந்தால், முதல் குறில் நெட்டெழுத்தாகிறது, இரண்டாம் குறில் மறைகிறது; சொல் சுருங்குகிறது. இந்த விதி நடைமுறையிலுள்ள சொற்களுக்கு விளக்கம் தருவதாயுள்ளது.
இவ்விதிப்படி சுருங்கிவிட்ட சொற்கள்: அகலமரம் - ஆலமரம்; அகப்பை - ஆப்பை; அகங்காரம் - ஆங்காரம்; இடுதல் - ஈதல்; கழனி - கானி-காணி; குதித்தாடல் - கூத்தாடல்; சிகழிக்காய் - சீழிக்காய்;-சீக்காய்; சிவப்பு; செய்தி - சேதி; செய்யவன் - சேயவன்-சேயோன்; தரு - தா; தந்தை - தாதை; தெய்வ ஆரம் - தேவஆரம் -தேவாரம்; தொகுப்பு - தோப்பு; பகுதி - பாதி; பெயரன் - பேரன்; பரவுதல் - பாவுதல்; மிகுதி - மீதி; விழுதல் - வீதல் இப்படிப் பல சொற்கள் உள்ளன.

மரத்தின் கனக்கோட்டம் (மிகுதியான கோணலை) தீர்க்கும் நூல்போல் மனக்கோட்டம் தீர்ப்பதால், "நூல்' என்பதை உவமை ஆகுபெயராகக் கொண்டார் பவணந்தியார் (நன்னூல்). ஆனால், நுவல், நுதல் (சொல்லுதல்) என்ற சொல், மேற்கூறிய புதிய விதியின்படி "நூல்' என்றாகிவிடும். இது ஏற்கத்தக்கது. இந்த விதி ஒரு சொல்லின் முதற் பகுதியில் மட்டுமன்றி, பிற்பகுதியிலும் அமைந்து சொற்சுருக்கத்துக்கு வழி வகுக்கிறது. இதைப் பின்வரும் சொற்களில் காணலாம்.

அஞ்சாதவர் - அஞ்சாதார்; அடங்கியவன் - அடங்கியான்; அதியன் மகன் - அதியன்மான்-அதியமான்; அரவு - அரா; இல்லவள் - இல்லாள்; கனவு - கனா; சிறியவர் - சிறியார்; கோமகன் - கோமான்; நிலவு - நிலா.
சொல் மாறிய நிலையிலும் இந்த விதி பொருந்தியுள்ளது. இல்வழி (வீட்டுக்குள் செல்லும் வழி) இது, வழியில் (வழி இல்) என்று மாறுகிறது. இவ்விதிப்படி, வழியில் என்பது "வாயில்' என்றாகிறது. முந்தையர் என்பது மூதையர் என்றாகி, மூதாதையர் என்று கூறும்போதும் இந்த விதி பொருந்துகிறது.

இவ்விதி மலையாள மொழியிலும் அமைந்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. மகனே - மானே-மோனே; மகளே - மாளே-மோளே; என்று மலையாளத்திலும் இவ்விதி ஆட்சி செலுத்துகிறது.

கருத்துகள் இல்லை: