06/03/2012

அந்திவானம்

தங்கம் உருக்கித் தழல் குறைத்து எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ' என்று பாரதி, அந்தி வானத்தின் அழகைக் கண்டு பாடல் இசைத்தான். அத்தகையதொரு காட்சி அகநானூறிலும் வருகிறது. ஒருவேளை அந்தப் பாடல்தான் பாரதிக்கு இப்படியொரு கற்பனையை வழங்கியதோ என்னவோ?

கதிரவன் ஒரு சக்கரமுடைய தேரில் உலா வருகிறான். அவன் மணமார்ந்த பொழிலில் பகல் முழுவதும் கழித்து, அந்திப்பொழுதில் மேற்கிலுள்ள பெரிய மலைகளில் முலாம் பூசிக்கொண்டு ஒளிர்கிறான்.


பகலெல்லாம் பரிதி தங்கியிருந்த சோலையின் பக்கத்தில் உப்பங்கழிகள் உள்ளன. அவற்றில் திரண்ட தண்டினை உடைய நெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அப்பூக்களில் உள்ள தேனை வண்டுகள் சுவைத்தன. பசியாறிய அவை, கூட்டமாகப் பறக்கின்றன. அவ்வண்டுகள் கருநிறத்தன. அக்கூட்டம் புகைபோல் நீலமாகக் காட்சி அளிக்கிறது.

ஞாயிறின் மறைவால் ஏற்பட்ட செவ்வானமும் வண்டுகள் கூட்டத்தால் ஏற்பட்ட நீல வானமும் ஒருங்கே தெரிகிறது. இக்காட்சி, இருபெரும் தெய்வங்களான சிவனும் திருமாலும் இணைந்து தரும் காட்சிபோல் இருந்தது. அத்தோற்றம்தான் சங்கர நாராயணத் தோற்றம்.

இக்கற்பனை, எயினந்தை மகனார் இளங்கீரனார் என்ற சங்கச் சான்றோரின் எண்ணத்தில் எழுந்ததாகும். இதை ஓர் அகப்பாடலில் (30) காணலாம். பாடல் வருமாறு:

""பல்பூந் தண்பொழில் பகலுடன் கழிப்பி
 ஒருகால் ஊர்திப் பருகுதிஅம் செல்வன்
 குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித்
 தண்சேற்று அணைய கணைக்கால் நெய்தல்
 நுண்தாது உண்டு வண்டினம் துறப்ப
 வெருவெரு கடுந்திறல் இருபெரும் தெய்வத்து
 உருவுடன் இயைந்த தோற்றம் போல''
 (அகம்.30:1-7)

இம்மாலைக் காட்சி அரனும் அரியும் இணைந்த தோற்றம் என்பதற்கு மாறாக, அரனும் உமையும் இணைந்த மாதொரு பாகனாகக் கொள்வதும் பொருத்தமே!

இதுபோன்ற வர்ணனைகளை நாயன்மார்களும் ஆழ்வார்களும் கூடக் கையாண்டிருக்கிறார்கள். அந்த அகநானூற்றுக் கற்பனை இன்றுவரை நமது திரைப்படப் பாடலாசிரியர்களுக்குக்கூட முன்னோடியாக இருக்கிறதே, கவனித்தீர்களா?

கருத்துகள் இல்லை: