கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

கற்பழிக்கத் தூண்டிய கவிதை - எஸ்.இராமச்சந்திரன்

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றார் என்று சைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைவது, மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளகாட்டுமாவது உரித்துஎனத் தொடங்கும் தேவாரப் பதிகமாகும். இப்பதிகத்தில், சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பதற்கு ஆலவாய் அண்ணல் திருவருள் புரியவேண்டும் என்று தமது கோரிக்கையினைப் பத்து பாடல்கள் மூலமாகச் சம்பந்தர் வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பது மட்டுமின்றி, சமண-பெளத்தப் பெண்டிரைக் கற்பழிப்பதும் - அல்லது கற்பழிக்குமாறு பொதுமக்களைத் தூண்டுவதும் - சம்பந்தரின் நோக்கமாக இருந்திருக்கவேண்டுமென்று சிலர் வாதிடுகின்றனர்.
இவ்வாறு சிலர் வாதிடுவதற்கு ஆதாரமாக இருப்பதுபெண்ணகத்து எழிற் சாக்கியப் பேய் அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமேஎன்ற சம்பந்தரின் தேவாரப் பாடல் வரியாகும். ‘பெண்ணகத்து எழில்என்ற அடைமொழி இடம் பெற்றிருப்பதால்கற்பழிக்கஎன்று சம்பந்தர் குறிப்பிட்டிருப்பதுசாக்கிய (பெளத்த) மதத்தையும், சமண மதத்தையும் பின்பற்றும் பெண்டிரைக் கற்பழிக்கஎன்ற பொருளிலேயே ஆகும் என்பது இவ்வாறு வாதிடுவோரின் கட்சியாகும்.


இது எந்த அளவுக்குச் சரியான வாதம் என்பதை ஆராய்வோம். இப்பதிகத்தில் இடம் பெற்றிருக்கும் பத்து பாடல்களிலும், சமணர்களை அழிப்பதற்கு ஆலவாய் இறைவன் திருவருளினைச் சம்பந்தர் வேண்டுகிறார் என்பது உண்மையே. இவற்றுள் ஏழு பாடல்களில் சமணர்களை வாதில் வென்றழிக்க அருள் புரிய வேண்டுகிறார்.

இரு பாடல்களில்பொய்த்த வன் தவ வேடத்தராம் சமண் சித்தரை யழிக்கத் திருவுள்ளமேஎன்றும், “கழிக்கரைப்படும் மீன் கவர்வார் அமண் அழிப்பரை யழிக்கத் திருவுள்ளமேஎன்றும் வேண்டுகிறார். இவ்விரு பாடல்களிலும் வாதத்தில் வெற்றி கிடைக்க வேண்டுமென்று நேரடியாகக் கேட்கவில்லை. ஆயினும், “பொய்யான தவவேடம் பூண்டுள்ள இச்சமணர்கள் தம் அறிவுத்திறனால் அல்லது சித்து வேலையால் வாதம் புரியும் எதிரியை மருட்டுபவர்கள்; கழிமுகப் பகுதியில் ஒதுங்கும் மீன்களைத் தூண்டில் போட்டுப் பிடிப்பதைப் போலத் தமது மதத்துக்கு ஆள் பிடிக்கும் இச் சமணர்கள் வாதத்தில் அழிம்பு வேலை செய்பவர்கள்என்ற தமது கருத்தினை இறைவனுக்குத் தெரிவிப்பதன் மூலம் இறையருள் பெற்று வாதத்தில் வென்று சமணர்களை அழிக்க விரும்புகிறார் எனத் தெரிகிறது. எனவே, இவ்வொன்பது பாடல்களிலும் சமணர்களுடன் வாது செய்து வெற்றி பெற்று அதன்மூலம் சமண மதத்தை அழிக்கவேண்டுமென்று சம்பந்தர் ஆவேசத்துடன் ஆலவாயனிடம் முறையிட்டுள்ளார் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அவ்வாறிருக்க, ஒரு பாடலில் மட்டும் வாதத்தில் கிடைக்கவேண்டிய வெற்றியையோ வாது புரியும் எதிரியையோ மறந்துவிட்டு, எதிரிகளின் மதத்தினைப் பின்பற்றும் பெண்டிரைக் கற்பழிக்குமாறு பொதுமக்களைத் தூண்டும் விதத்தில் சம்பந்தர் பாடினார் எனக் கொள்வது பொருத்தமாக இல்லை. சமண சமயம் அரசியல் மட்டத்திலும் சமூக அரங்கிலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றுக் கோலோச்சி வந்த ஒரு தலைநகரில் - ராஜதானியில் - சமண சமயத்துக்கு அன்று வரையிலும் ஆதரவாகவே இருந்து வந்த ஓர் அரசனின் முன்னிலையில் இத்தகைய ஓர் அராஜகமான கருத்தினை வெளிப்படுத்துவது, தமது வாதத்தின் நோக்கத்திற்கே எதிரான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதனைக்கூட உணராத உன்மத்த நிலையிலா சம்பந்தர் இருந்திருப்பார்? எனவே, கற்பழித்தல் என்ற சொல்லாட்சியைச் சம்பந்தர் என்ன பொருளில் பயன்படுத்தியிருக்கக்கூடும் என ஆராய்வது தேவை.

வடமொழி வேதங்கள், எழுதிவைத்துப் படிக்கப்படாதவை. ஒருவர் சொல்ல அடுத்தவர் தம் காதால் கேட்டு மனப்பாடம் செய்வதன் மூலம் தலைமுறை தலைமுறையாகக் கற்கப்பட்டவை. ஸ்ருதி என்று வேதங்களைக் குறிப்பிடுவர். ‘ஸ்ருஎன்ற சமஸ்கிருத வேர்ச்சொல், காதால் கேள் என்று பொருள்படும். பழந்தமிழில் வேதங்களைக்கேள்விஎன்று இப்பொருளில் குறிப்பிடுவதுண்டு. சங்க இலக்கியமான குறுந்தொகைஎழுதாமல் கற்கப்படுவதுஎன்ற பொருளில்எழுதாக் கற்புஎன வடமொழி வேதத்தைக் குறிப்பிடுகிறது.1 தொலையாத கல்வி என்பதுதொலையாக் கற்புஎனப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.2 எனவே, கல் என்ற வேர்ச்சொல்லடியாகத் தோன்றிய கல்வி, கற்கை, கற்பு முதலிய சொற்கள் பொருள் தொடர்புடைய சொற்களே எனத் தெரிகிறது. Education, Study, Learning என்ற ஆங்கிலச் சொற்களை இவற்றுக்கிணையான சொற்களாகக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் பார்த்தால் சங்ககாலச் சமூகத்தில் ஆணின் தலைமையில் அமைந்த குடும்பம் என்ற நிறுவனம் வலிமையாக வேரூன்றிவிட்ட உயர்குடியினரிடையே குடும்பத்தின் தலைமகனால் குடும்ப உறுப்பினர்களுக்கு - குறிப்பாகப் பெண்டிர்க்குக் கற்பிக்கப்பட்ட சமூக ஒழுங்கே கற்பு எனத் தெரியவரும். இதனை ஒருவகையில் நாகரிகமான நடத்தை என்றும் கொள்ளலாம். இத்தகைய சமூக ஒழுங்குக்கு உட்படாத தாய்வழிச் சமூக அமைப்பிலமைந்த குலக் குழுவினரும் சமூக ஒழுங்கினை இன்னமும் கற்றுக்கொள்ளாத விடலைப் பருவத்தினரும்கல்லாஎன்ற அடைமொழியுடன் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர். கல்லா மழவர், கல்லாக் கோவலர், கல்லா இளையர், கல்லா மாக்கள், கல்லா மாந்தர் - இன்னும் இவை போன்ற சொற்பிரயோகங்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. மதுரைக்காஞ்சியில் வருகிறகல்லா மாந்தர்என்ற தொடருக்குக்3காம நுகர்ச்சியினையன்றி வேறொன்றையும் கல்லாத இளையோர்என நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார்.4 அதாவது, காமம் முதலான உணர்வுகளைச் சமூக ஒழுங்குக்கு உட்பட்ட வகையில் வெளிப்படுத்தத் தெரியாத நிலையே கல்லாத நிலையாக நச்சினார்க்கினியரால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதுவே சரியான புரிதலாகும். அவ்வாறெனில் கற்புநிலை என்பது சமூக ஒழுங்குக்கு உட்பட்ட வகையில் காம உணர்வினை வெளிப்படுத்தல் மற்றும் துய்த்தலே ஆகும். அதனால்தான் உலகுக்குத் தெரியாமல் மறைவாகத் துய்க்கப்படும் காம இன்பத்தினைக்களவு மணம்என்றும், குடும்பம் என்ற கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில் நாடறிய உலகறிய மணம் புணர்தல்கற்பு மணம்என்றும் இலக்கியங்களிலும் இலக்கண மரபிலும் குறிப்பிடப்பட்டன. களவு மணக் காலத்தில் தலைவியின் உடலிலும் நடவடிக்கைகளிலும் நேர்கின்ற மாற்றங்களைக் கண்டு தலைவியின் தாய் தந்தையர் முருகன் (அல்லது பேய்) பிடித்திருப்பதாக ஐயுற்று, வேலன் வெறியாடல் என்ற சடங்கினை நிகழ்த்துவதுண்டு.5 அப்போது தலைவியே, இவ்வாறு வெறியாடுதல் தேவையற்றது என்று வேலனை விலக்குவதும் உண்டு.6 இதுவெறி விலக்குதல்என்ற துறையாக இலக்கியத்தில் வழங்கப்படும் அதே வேளையில் கற்பு மணம் புரிந்த தலைவி, கணவனைத் தவிர வேறு ஒரு தெய்வத்தைத் தொழுவது, தனது கற்புக்கு ஒவ்வாது என்று கூறுவது கலித்தொகைப் பாடல் ஒன்றில்7 இடம் பெற்றுள்ளது. இவள் வான்தரு கற்பினள்; அதாவது உலகம் வறட்சியுற்ற காலத்தில் மழைபொழிய வைக்கக்கூடிய கற்பை உடைய தலைவி.8 இவ்வாறு சமூக ஒழுங்கினையும் தமக்குரிய சமூகக் கடமைகளையும் கற்றறிந்து அவற்றின்படி நடக்கும் தன்மையாகியகற்புஅரசகுலப் பெண்டிர் போன்ற உயர்குடிப் பெண்டிர்க்கு அவசியம் எனக் கருதப்பட்டது. கி.பி. 6-7ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெருங்கதையில்உடன்முடி கவித்த கடனறி கற்பின் இயற்பெருந்தேவி9 எனக் குறிப்பிடப்படுவது இதற்குச் சான்றாகும்.10

குடி, குடும்பம் ஆகிய சொற்கள் நிலவுடைமையுடன் தொடர்புடையவை. குடியானவர், குடும்பர் முதலிய சொற்கள் வேளாண்மை தொடர்பான பொருளிலேயே வழங்கிவருவது இதற்குச் சான்றாகும். குடும்பம் என்ற அடிப்படை அலகிலிருந்தே தனியுடைமை தோன்றுகிறது என்ற கருத்தும் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய சிந்தனையாளர்களால் வலியுறுத்தப்படுகின்றன. பெண் ஓர் உற்பத்தி சக்தி என்ற நிலையிலிருந்து மாற்றமுற்று ஆடவனின் உடைமைப்பொருள் என்ற நிலையை அடைவதும் குடும்பம் என்பது ஆடவனின் தலைமையிலமைந்த நிறுவனம் என்ற தன்மையைப் பெறுவதும், நிலவுடைமையானது பாரம்பரியச் சொத்துரிமை என்ற நிலையை அடைந்துவிட்டதற்கான அடையாளங்கள் ஆகும். இத்தகைய தெளிவான அடையாளங்களை உடைய உயர்குடிப் பாரம்பரியத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே பெண்டிரைப் பொருத்த அளவில் கற்பு பற்றிய விதிகள் கடுமையடைந்தன. ஆனால், இக்கோட்பாடுகளை உயர்குடிச் சமூகத்தைச் சார்ந்த குடும்பத் தலைவனுக்கும் கற்பிக்கவேண்டுமென்று அச்சமூகமும் கற்றுக்கொள்வது அவசியமென்று குடும்பத்தலைவனும் கருதவே இல்லையெனத் தெரிகிறது. இல்லாவிடில் பரத்தையர் என்ற வர்க்கம் இற்பரத்தை, சேரிப்பரத்தை போன்ற பிரிவுகளுடன் செழித்து வளர வழியில்லாமல் போயிருக்கும். மனைவி என்ற ஸ்தானத்துக்குரிய ஆதர்சமான கடப்பாடுகளாக வலியுறுத்தப்பட்டுவந்த - அல்லது ஆணாதிக்க சமூகத்தால் உயர்குடிப் பெண்டிரிடம் எதிர்பார்க்கப்பட்ட - ஒழுக்கக் கோட்பாடுகள், அன்றைய நிலையில் பெண்டிரிடம் மானசீக விலங்காகவே இறுகிப் போய்விட்ட நிலையைக் குறுந்தொகைப் பாடலொன்றில் காணலாம். பரத்தையிடம் சென்றுவந்த கணவனிடம் கோபித்துக்கொண்டு சுடுசொல் பேசுவதுகூட, மனைவியென்ற ஸ்தானத்துக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடியது என்பதால் கோபத்தை அடக்கிக்கொள்கிறாள் இப்பாடல் தலைவி.11

இவ்வாறு, கணவனிடம் சுடுசொல் பேசாதிருத்தல் என்பது, மனைவிக்குரிய முன்னுதாரணமான நடத்தையாகக் கருதப்பட்டது போன்றே, பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றஊராண் மகளிர்’ (ஊராட்சித் தலைவியர்) ‘அவையல் கிளவிஎனப்படும், சபையில் பேசத்தகாத சொற்களைப் பேசிவிட்டால் அது மிகுந்த ஒழுக்கக் குறைவான நடத்தையாகக் கருதப்பட்டது. ஊராண் மகளிர் மது அருந்திவிட்டு மந்திராலோசனை நடைபெறும் மன்றத்திற்கு வருதல் ஒழுக்கக் குறைவாகவோ, கற்புக்குக் களங்கமாகவோ கருதப்படவில்லை; போதையில்கூடத் தடுமாறாமல் இருப்பதுதான் ஒழுக்கம் எனக் கருதப்பட்டது. போதை வேகத்தில் விலங்குகள் - பறவைகள் ஆகியவற்றின் ஆண்பாற் பெயர்களை (சேவல், களிறு போன்ற பெயர்களை) வாய்தவறிக் கூறிவிட்டால் அது ஒழுக்கக்குறைவானது என அவ்வூராண் மகளிர் நாணுவார்கள் எனப் பெருங்கதை குறிப்பிடுகிறது.12 இத்தகையஒழுக்கமானநடத்தையைக் கற்று - பயின்று - தேறியவர்களே உயர்குடிப் பெண்டிர் என்ற அந்தஸ்துக்குரியவர்களாகக் கருதப்பட்டனர்.
இவ்வாறு கற்பு என்ற கோட்பாடு உயர்குடிப் பெண்டிர்க்குரிய ஒழுக்கமான, நாகரிகமான நடத்தை என்ற கருத்தோட்டம் வேரூன்றிவிட்ட பின்னரும்கூட, ‘கற்பிக்கப்பட்டதுஅல்லதுசொல்லிக்கொடுக்கப்பட்டதுஎன்ற இச்சொல்லின் மூலப்பொருள் முற்றிலும் மறைந்துவிடவில்லை. சங்ககாலத் தமிழகத்தில் முறையான கல்வியறிவினை மக்களிடையே பரப்புவதில் முன்னணியில் நின்றவர்கள் சமண பெளத்தரே ஆவர். பள்ளிக்கூடம் என்ற வழக்கு, சமண - பெளத்தப் பள்ளிகளே தொடக்ககாலக் கல்வி நிறுவனங்களாகச் செயல்பட்டமைக்குச் சான்றாகத் திகழ்கிறதென அறிஞர்கள் கருதுகின்றனர். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை நாகரிகம் என்ற கருத்தோட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நகர்ப்புற வாழ்க்கை முறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நகரத்தார் (வணிகர்) சமண-பெளத்த சமயங்களையே முதன்மையாகப் பின்பற்றினர் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன. எனவே, கல்விக்கும் கற்பு என்ற கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் சமண பெளத்தர்களின் பங்களிப்பினை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. மதுரையை எரித்த கற்பின் கனலி கண்ணகி, சமண சமயத்தின் சிராவக நோன்பினைப் பின்பற்றிய பெண்மணி என்பதை இங்கு நாம் எண்ணிப் பார்க்கலாம்.

திருஞானசம்பந்தர் சமண சமயத்தைக் கடுமையாக வெறுத்தார் என்பதில் ஐயமில்லை. சைவ சமயம் என்ற இயக்கத்தின் மூர்க்கமான பிரசாரகர் என்ற வகையில் எதிரியின் கருத்துகளிலுள்ள நியாயங்களைக்கூட உணர ஆயத்தமாக இல்லாமல், கடுந்தாக்குதலில் ஈடுபடுகிறார் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், “அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளம் வைத்தல் வேண்டும்என்று அவர் இறைவனை வேண்டுவது, வாதம் தொடர்பான சொல்லாட்சியே தவிரச் சமணப் பெண்டிரை அல்லது பெளத்தப் பெண்டிரைக் குறித்ததன்று. சமண-பெளத்தர்கள் கற்றுக்கொண்டதெல்லாம் வெறும் ஏட்டுக்கல்வியே; சொல்லிக்கொடுக்கப்பட்டதே. ஆனால், சைவர்களுக்குக் கிட்டக்கூடியது, பக்தியால் கிடைக்கின்ற ஞானம் - என்ற முரண்பட்ட ஒரு சித்திரத்தினை உருவாக்கச் சம்பந்தர் முனைந்துள்ளார். அந்த முனைப்பின் ஒரு வெளிப்பாடாகவே சமண-பெளத்தர்களிடம் தலைதூக்கியிருப்பதாகத் தாம் கருதிய வறட்டுத்தனமான நூற்படிப்பையும் அதன் விளைவாகத் தோன்றுகிற அகந்தையையும் அழிக்க நினைக்கிறார்.

சம்பந்தர்க்கு ஆயிரம் ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த தாயுமானவர், அறிவுச் செருக்கையும், யாரிடமும் எப்படியும் வாதம் செய்து வெற்றிபெற்றுவிட முடியும் என்ற அகந்தையையுமே தாம் கற்ற கல்வி தம்மிடம் ஏற்படுத்திற்று என்ற விரக்தியில்கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்என்று பாடுகிறார்.13 சரியாகவோ தவறாகவோ சமண-பெளத்தர்களைச் சம்பந்தர் இத்தகைய கண்ணோட்டத்தில்தான் நோக்கியுள்ளார். “வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தையினை அழிக்க முனைந்துள்ளார். ‘தெண்ணர்என்று சம்பந்தர் சமணர்களைக் குறிப்பிடுவதுசாமர்த்தியசாலிகள்என்ற பொருளிலாகும். பெண்ணகத்து எழிற்சாக்கியப்பேய் என்ற தொடர் மோகினிப் பேயாக அல்லது விஷ்ணு மாயையாக உருவெடுத்து முப்புர அசுரர்களைக் கலகம் செய்யத்தூண்டியவர் கெளதம புத்தரே என்ற புராணக் கதைக் குறிப்போடு தொடர்புடையதாகும்.14பேயர் பேய் முலையுண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரேஎன்று அப்பர்15 குறிப்பிடுவதை இத்தொடர்பில் எண்ணிப் பார்க்கலாம். எனவே, சமண-பெளத்தர்களின் கல்விச் செருக்கினை அழிப்பதற்குச் சம்பந்தர் சிவபெருமானது அருளை வேண்டுகிறார் எனக் கொள்வதே சரியான புரிதலாகுமே தவிர, சமண-பெளத்தப் பெண்டிரைக் கற்பழிப்பதற்குச் சிவனடியார்களைத் தூண்டுகிறார் எனப் பொருள்கொள்வது சரியாகாது.

அடிக்குறிப்புகள்:
1. குறுந்தொகை பா. 156, வரி 5
2. பதிற்றுப்பத்து 43:31; 80:17
3. மதுரைக்காஞ்சி வரி. 420
4. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பக்கம் 384, .வே.சா. பதிப்பு, 1974.
5. இக்கருத்துகழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்என்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
6. வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் என்ற புலவரின் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் இத்தகைய வெறிவிலக்குதல் இடம்பெற்றுள்ளது:
முருகயர்ந்து வந்த முதுவாய் வேல
சினவல் ஓம்புமதி வினவுவது உடையேன்
பல்வேறுருவிற் சில்லவிழ் மடையடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தியாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே (பா. 362)
7. கலித்தொகை பா. 16
8. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” - என்ற குறள் இப்பாடலுடன் நேரடியாகத் தொடர்புடையது போலத் தெரிகிறது.
9. பெருங்கதை 2:4:23-24.
10. காமம் எனும் யானை, கல்வி என்ற பாகனுக்கும் அடங்காமல் (மதம் பிடித்து) அலையக்கூடியது என்ற கருத்து சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
11. “இது மற்றெவனோ தோழி துனியிடை
இன்னரென்னும் இன்னாக்கிளவி
திருமனைப் பலகடம் பூண்ட
பெருமுது பெண்டிரேமாகிய எமக்கே” - குறுந்தொகை 181.
12. மனமுணக் கிளந்த மந்திரக் கோட்டியுள்
புள்ளும் மாவும் உள்ளுறுத்தியன்ற
ஆண் பெயர்க் கிளவி நாள் மகிழ் கடவ
வழுக்கிக் கூறினும் வடுவென நாணி
ஒழுக்கம் நுனித்த ஊராண் மகளிர் - பெருங்கதை 1:36:277-81.
நாள்மகிழ்என்பது புறநானூறு 123, 400 ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது. “நாட்காலையே மதுவுண்டு நாளோலக்கத்து மகிழ்தல்எனப் பழைய உரை கூறுகிறது. (பக்கம் 238, புறநானூறு மூலமும் பழைய உரையும் - .வே.சா. பதிப்பு, 1971.)
13. தாயுமானவர் பாடல்கள், சித்தர்கணப் பதிகம்.
14. ஆட்சியதிகாரத்தினால் அடையும் செல்வவளம் விஷ்ணு மாயா எனக் கூர்மபுராணத்தில் (2:33) குறிப்பிடப்படுகிறது. புத்தரை விஷ்ணு மாயையாகக் குறிப்பிடுவது திருப்புனவாயில் தலபுராணம் முதலிய பல புராணங்களில் காணப்படுகிறது.
15. தேவாரம் - திருமுறை 5:100:3 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ