கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

பிள்ளைத்தமிழ்

நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப்  பார்க்கலாம்.
இருவகை பிள்ளைத்தமிழ்
கடவுளையோ, மனதிற்குப் பிடித்த தலைவனையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். குழந்தை பிறந்தது முதல் சிறுவனாகும் வரை பத்து பருவங்களாகப் பிரிப்பர். பருவத்திற்கு பத்து பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்கள் பிள்ளைத்தமிழில் இடம்பெறும். பிள்ளைத்தமிழை ஆண்பாற்பிள்ளைத் தமிழ்,பெண்பாற்பிள்ளைத்தமிழ் என்று இரண்டாகப் பிரிப்பர்.
ஏழு பருவங்கள்
இருவகைப் பிள்ளைத்தமிழுக்கும் பத்து பருவங்கள் இருந்தாலும், ஏழு பருவங்கள் மட்டுமே பொதுவாக அமையும். மற்ற மூன்று பருவங்களும் வேறுபடும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இரண்டு பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை. சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்கல், சிறுதேர் உருட்டல் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே வரும். பெண்பாற் பிள்ளைத்தமிழில் நீராடல், அம்மானை ஆடல், ஊசல் ஊடல் ஆகிய மூன்று பருவங்களும் வரும்.
பருவம் என்றால் என்ன?
காப்பு என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் காப்பாற்றி அருள்செய்யும் படி பல்வேறு தெய்வங்களை வேண்டிப் பாடுவதாகும். ஒரு காலை மடக்கியும், ஒரு காலை நீட்டியும் இரு கைகளை தரையில் ஊன்றியும் தலையை அசைத்தாடும் பருவம் செங்கீரையாகும். குழந்தையைத் தொட்டிலில் இட்டு, நாக்கை அசைத்து ஒலியை எழுப்பி உறங்க வைக்கும் பருவம் தாலப்பருவம். குழந்தை தன் இரு கைகளையும் சேர்த்து ஓசை எழக் கொட்டும்படி கேட்கும் பருவம் சப்பாணி பருவம். பெற்றோர் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து முத்தம் தரும்படி வேண்டுவது முத்தப்பருவமாகும். தளர்நடையிடும் பிள்ளையை வருக! வருக! என்று அழைத்து மகிழ்வது வருகையாகும். அம்புலி என்றால் நிலா என்று பொருள். வானில் உலவும் நிலாவைக் குழந்தையோடு விளையாட அழைக்கும் பருவம் அம்புலி.
ஆண்குழந்தைகளுக்கான பருவம்
மணலில் சிறுவீடு கட்டி விளையாடும் போது, காலால் உதைத்து கலைத்தல் வேண்டாம் என்று சிறுவனிடம் வேண்டிக் கொள்வது சிற்றில் சிதைத்தல் ஆகும். பெற்றோர் பிள்ளையிடம் சிறுபறை என்னும் இசைக்கருவியைக் கொட்டி விளையாடும்படி கூறும் பருவம் சிறுபறை முழக்கல் ஆகும். மரத்தால் செய்யப்பட்ட சிறுதேரினை உருட்டி விளையாடச் சொல்லி மகிழ்வது சிறுதேர் உருட்டல் ஆகும்.
பெண் குழந்தைகளுக்கான பருவம்!
பெண் குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டும் பருவம் நீராடல் எனப்படும். பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானை ஆகும். பொம்மையை மேலே வீசி விளையாடும் படி பெற்றோர் பெண் பிள்ளையிடம் வேண்டுவது அம்மானைப் பருவமாகும். குழந்தையை ஊஞ்சலில் ஆட்டி விட்டு பெற்றோர் மகிழும் பருவம் ஊசல் ஆடலாகும்.
பிள்ளைத்தமிழ் நூல்கள்
குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழும் புகழ்பெற்றவை. இது தவிர, பகழிக்கூத்தரால் எழுதப்பட்ட திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையால் எழுதப்பட்ட சேக்கிழார் பிள்ளைத்தமிழும் சிறப்பானவை. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போது அம்மனே குழந்தையாக வந்து திருமலைநாயக்கரின் மடியில் அமர்ந்து  பாடலைக் கேட்டு ரசித்ததோடு, முத்துமாலை ஒன்றைப் பரிசாகக் கொடுத்து மறைந்ததாகவும் சொல்லுவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ