திரைப்பட இயக்குநர் மகேந்திரன் - நேர்காணல்
திரைப்பட இயக்குநர் மகேந்திரன் "முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "நண்டு', உட்பட பல படங்களை இயக்கியவர். தரமான இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்கி தமிழ் சினிமாவுக்குப் புதிய பாதை அமைத்துக் கொடுத்தவர். பக்கம் பக்கமாக வசனம் பேசி திரைப்படத்தை நாடகம்போல் உருவாக்கிக் கொண்டிருந்த போக்கை மாற்றி, "திரைப்படம் விஷுவல் மீடியம்; இதில் உரையாடல்களைவிட காட்சி அமைப்புகள் மூலம்தான் கதை சொல்ல வேண்டும்' என்று நிரூபித்துக் காட்டியவர்.
இவர் இயக்குநராகப் பரிணாமம் பெறுவதற்குமுன் "தங்கப் பதக்கம்' உட்பட பல படங்களுக்கு பக்கம் பக்கமாக வசனம் எழுதியவர். அதுபற்றி இந்த நேர்காணலில் அழகாக- லாஜிக்காக விளக்கம் தந்திருக்கிறார்.
ஃபார்முலா சினிமா, பாடலுக்கு பாடி ஆடும் அபத்தத்தை வெறுக்கும் இவரை அடையாளம் கண்டு, திரைப்படத் துறைக்குக் கொண்டு வந்தவர் யார் தெரியுமா? எம்.ஜி.ஆர். அது எப்படி சாத்தியமாயிற்று என்று மகேந்திரன் இந்த நேர்காணலில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார்.
எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்படக் கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் என்று பன்முகத் திறமைகள் கொண்ட இயக்குநர் மகேந்திரனுடன் "இனிய உதய'த்திற்காக உரையாடினோம். அதிலிருந்து...
உங்களுக்கு இலக்கிய ஈடுபாடு எப்படிப் பூத்தது?
""உங்களின் "பூத்தது' என்ற அழகிய சொல்லே எனக்கு பதில் சொல்லும் வழியைக் காட்டுகிறது. மணக்கிறதோ இல்லையோ இதுதான் உண்மை. எத்தனையோவற்றிற்கு நமக்குக் காரண- காரியம் தெரியாமலே நாட்கள் கழிகின்றன. நமது பராமரிப்பில் வளரும் வீட்டுச் செடிகள் பூத்திடும்போது வராத ஆச்சரியம், அழகிய அனாதை தேவதைகளான காடுகளில் தன்னிச்சையாக வளர்ந்து பூத்துச் செழிக்கும் செடி, கொடி, மரங்களைப் பார்த்து வியப்படைகிறோம். இயற்கையின் எத்தனையோ இடர்ப்பாடுகளுக் கிடையிலும் அவை யாருடைய தயவுமின்றி உயிர்ப்புடன் மலர்கின்றன.
ஆனாலும் காரணம் கண்டுபிடிக்க முயல்கிறோம். அது முற்றிலும் சரியோ தவறோ- "இதுவும் ஒரு காரணம்' என்று நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்கிறோம். என் நிலையும் இத்தகையதே... "குறைமாதக் குழந்தை பிழைக்காது' என்ற நம்பிக்கையும், மருத்துவ வசதியும் இல்லாத காலகட்டத்தில்தான் நான் குறைமாதக் குழந்தையாகப் பிறந்தேன். என்னைச் சாகவிடாமல் காப்பாற்றியவர் என்னைப் பெறாத தாயான டாக்டர் சாரா அம்மை யார்தானாம். என்னை பஞ்சிலே போர்த்தி தனது அடிவயிற்றுச் சூட்டில் மூன்று மாதங்கள் வைத்திருந்து காப்பாற்றி, இன்று உங்களுடன் பேசும் உலக பாக்கியத்தை எனக்குத் தந்தது அந்தத் கேரளத்து தெய்வத் தாயே!
நான் சிறுவனாக இருந்தபோது, "இந்தப் பிள்ளை தெற்கு வடக்கு தெரியாத மனுசனாத்தான் வருவான். போட்டால் சாப்பிடுவான்; தூக்கி விட்டால் நடப்பான்' என்று பலரும் என் காதுபட சொல்லி அனுதாபிப்பார்கள். என் உள்மனம் அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டது எனச் சொல்ல மாட்டேன். முழு மாதத்தில் பிறந்த மற்ற பையன்களைப் பார்க்கும் போதெல்லாம் என்னைப் பற்றி எனக்குள்ளே ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் எனது பள்ளி யில் சக மாணவர்கள் செய்யாததை எல்லாம் நான் செய்ய வேண்டும் என்ற நினைப்போடு (இந்த விவரமான பதில் எல்லாம் பல வருடங்களுக்கு முன்னால் என்னைப் பற்றி நானே சுய ஆய்வு செய்து தெரிந்துகொண்டது.) அவர்கள் எல்லாம் எட்டியே பார்க்காத தூசி அடைந்து கிடந்த பள்ளி லைப்ரரிக்குள் நுழைந்து ஆங்கிலம், தமிழ் என்று பல பாடப் புத்தகங்களையும் அவற்றின் அர்த்தம் தெரியாமலே படிக்கத் தொடங்கினேன். இது தீவிரமான போது அர்த்தம் தெரிந்தது; ரசிக்கத் தெரிந்தது. அந்தப் பழக்கத்தை இன்று வரை தொடரச் செய்திருக்கிறது.
நானே சித்திரங்கள் வரைந்து, கதைகள் எழுதி கையெழுத்துப் பத்திரிகை நடத்தி பள்ளி நிர்வாகத் தின் கவனத்தைப் பெற்றதும் அந்த வாசிப்பால் ஏற்பட்ட விளைவு தான். அதேபோல எனது 6-ஆம் வகுப்பிலேயே சேக்கிழார், பிசிராந்தையார் நாடகத்தை எழுதி, நானே இரு வேடங்களிலும் நடித்து, முதல் பரிசாக கவிஞர் பெருமான் தாகூரின் "கீதாஞ்சலி' (தமிழாக்கம்) புத்தகத்தைப் பெற்றேன். அந்த அரிய புத்தகம் தான் இன்றைக் கும் அர்த்தமுள்ள புத்தகங்களைத் தேடித் தேடி என்னை வாங்கிப் படிக்க வைத்திருக்கிறது. உங்களை இப்படி கேள்வி கேட்க வைத்திருக் கிறது. இதற்கெல்லாம் அடித்தளம்?
"தெற்கு வடக்கு தெரியாத பிள்ளையாக வளரும்' என்று என்னைச் சுற்றியுள்ளவர்கள் வருத்தப்படும்படி நான் குறைமாதக் குழந்தையாகப் பூத்ததே காரணம் என நினைக்கிறேன்.''
நல்ல இலக்கியத்துக்கு அடை யாளமாக எதைக் கருதுகிறீர்கள்?
""இந்தக் கேள்விக்கு திட்ட வட்டமான பதில் சொல்லும் ஞானப்பக்குவம் எனக்குக் கிடையாது. எனக்குப் பாடத் தெரியாது. ராகங்கள் பற்றிய ஞானம் கிடையாது. ஆனால் இனிமையான இசையை காதலியைப்போல ரசிப்பவன். எந்த மொழிப் பாடல் என்றாலும் அந்த இசையின் ரீங்காரத்தில் மயங்கி விடுவேன். அதைப்போலத்தான் என் இலக்கிய ரசனையும். சிறந்த நூல்களை ஒன்றுக்கும் பல முறை படித்து மகிழ்வேன். வருடத்திற்கு ஒரு முறை எல்லா நூல்களையும் மீண்டும் எடுத்து வாசித்து மகிழ் வேன். அவை ஏதோ ஒரு வகை யில் என் இதயத்தை மீட்டி யிருக்கின்றன. என்னோடு அவை மனம் திறந்து பேசுகின்றன. எனது மண்ணின் மணத்தை- என் மக்களின் பல் வேறு முகங்களை- நான் சார்ந்த சமுதாயத்தின் மனிதப் பெருமை- சிறுமைகளை யதார்த்தமாய் ஜீவனுள்ள கண்ணாடியாய்- அழகுணர்ச்சியோடு பிரதிபலிக் கின்றன. என்னை அணைத்து மகிழும் அன்னைபோல- எனது குறைநிறைகளோடு அன்புடன் தாங்கிச் செல்லும் மனைவிபோல- எனக்கு உலகத்தைக் காட்டும் ஆசிரியனாக- இந்த வாழ்க்கையை நேசிக்கச் செய்யும் அபூர்வ சக்தியாக- என்னை ஒரே நேரத்தில் கவிஞனாகவும் குழந்தையாகவும் மாற்றி விடும் வல்லமை கொண்ட எழுத்துருவங்களாக- மொத்தத்தில் என் மண்ணையும் மக்களையும் ஒளிவுமறைவின்றி ஊடுருவிப் பார்க்கும் நிரந்தரத்துவம் படைத்த சூரியனாக நான் வாசிக்கும் அரிய நூல்கள் என்னை உணரச் செய்கின்றன. என் தரப்பிற்கு நான் விரும்பிப் படிக்கும் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய என் உணர்வுகள் இதுதான்.''
இன்றைய இலக்கியப் போக்கு எப்படி இருப்பதாகக் கருது கிறீர்கள்?
""தமிழிலா? உலக மொழிகளிலா? உங்கள் கேள்வி பொதுவான ஒன்றாக- உலக இலக்கியம் பற்றிக் கேட்பதுபோல அமைந்திருக்கிறது. அதற்கான பதில் சொல்லும் தகுதி எனக்கு இல்லை.''
உங்களை மிகவும் கவர்ந்த உலக இலக்கியவாதி? இந்திய, தமிழக இலக்கியவாதி யார்?
“"கோடானுகோடி அதிசயங் களும் அற்புதங்களும் அழகும் மர்மங்களும் மனிதனால் இன்னும் விடைகாண முடியாத பேராச்சரியங் களும் கொண்டதாய்- அதேசமயம் உலகில் உயிரினத்தை- மனித குலத்தையெல்லாம் வாழ வைத்துக் கொண்டிருக்கும் "இயற்கை'தான் உலகின் உன்னதமான இலக்கியம். இந்தியாவைப் பொறுத்தவரையில் என்னைக் கவர்ந்த இலக்கியப் படைப்பாளிகள், வங்கத்தின் தாகூர், பக்கிம் சந்திரர், இயக்குநர் சத்யஜித்ரே... இயக்குநர் மேதை யான ரே எப்பேர்ப்பட்ட அற்புத மான இலக்கியவாதி என்பதை அவரது நாவல்கள், சிறுகதை களைப் படித்தவர்கள் அறிவார்கள். தமிழில்- புதுமைபித்தன், தி. ஜானகி ராமன், கி. இராஜநாராயணன்... எனக்குப் பிடித்தது மாங்கனி வகைகள் என்றால், மற்ற கனி வர்க்கங்களை நான் குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லை.
மலையாளத்தில் எங்களால் உயர்வாக மதிக்கப்படும்- ஆராதிக் கப்படும் இலக்கியப் படைப்பாளி கள் ஏராளம். மலையாள இலக் கியத்தின் மும்மூர்த்திகளான தகழி சிவசங்கரப்பிள்ளை, வைக்கம் முஹம்மது பஷீர், எம்.டி. வாசுதேவன் நாயர்... அவர்களைத் தொடர்ந்து நான் பெரிதும் மதிக்கும் மலையாளப் படைப் பாளிகள் பின்வருமாறு:
எஸ்.கெ. பொற்றெக்காட், காக்கநாடன், எம். முகுந்தன், சக்கரியா, மாதவிக்குட்டி, உண்ணிகிருஷ்ணன் புதூர், மலை யாற்றூர் ராமகிருஷ்ணன், பி. பத்ம ராஜன், பி. கேசவதேவ், ஆனந்த், சேது, உறூப், கோவிலன், பொன் குன்னம் வர்க்கி, எம். சுகுமாரன், புனத்தில் குஞ்ஞப்துல்லா, மோகன சந்திரன், பி.வி. தம்பி, பம்மன், இ. ஹரிகுமார், ஏ.கே. சுதாகரன், கே.எல். மோகனவர்மா.
என்ன... மலைத்து விட்டீர்களா? இவர்கள் அத்தனை பேரின் படைப்புகளையும் ஒன்றுவிடாமல் படித்து வியந்தவன், இன்றும் வியப்பவன் நான். இது எனக்கு எப்படி சாத்தியமாயிற்று? இந்தப் பேராற்றல் கொண்ட படைப்பாளி களை எனக்கும் என் போன்ற லட்சோப லட்சம் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி இலக்கியப் பணி செய்பவர் யார்? "இனிய உதயம்' தான். கடந்த பத்து வருடங்களாக இந்த அரிய இலக்கியப் பணியை முன்னின்று வெற்றிகரமாக நடத்து பவர் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு. நக்கீரன்கோபால் அவர்கள்தான். இலக்கிய வாசகர் கள் எல்லாம் அவருக்குப் பெரிதும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். தமிழகத்தில் வேறு யாரும் செய்யாத இலக்கியப் பணியை இலக்கிய ஆர்வலராகச் செய்து வருகிறார். மலையாளத்து இலக் கியவாதிகளின் படைப்புகளை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மொழிகளில் உள்ள அற்புதமான படைப்பாளிகளின் படைப்புகளை யும் தமிழாக்கம் செய்து கொண்டி ருப்பதோடு, உலக மொழிகளின் பெருமைக்குரிய இலக்கியங் களையும் அற்புதமாகத் தமிழாக்கம் செய்து எங்கள் இலக்கியப் பசிக்கு கல்யாண விருந்து வைக்கிறார். அதுவும் எப்படி? "இனிய உதய'த் தின் ஆரம்ப விலை வெறும் பத்து ரூபாய்தான். இப்பொழுதுதான் பதினைந்து ரூபாய். இப்படி குறைந்த விலையில் விலை மதிக்க முடியாத இலக்கியப் பணி செய்வது இந்த நாட்டிலேயே "இனிய உதயம்'தான்! அத்துடன் எல்லா மொழி நாவல்களையும் "இனிய உதய'த்தில் அற்புதமாக- யதார்த்தமாக- மூலத்தின் ஜீவன் சிறிதளவும் பாதிக்கப்படாமல் தமிழாக்கம் செய்யும் போற்றத்தக்க பணியைத் திறம்படச் செய்யும் அருமை நண்பர் சுரா அவர்களை மிக மிகப் பாராட்ட வேண்டும். மீண்டும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். இது வெறும் புகழ்ச்சி என எண்ணாதீர்கள். அது எனக்குப் பழக்கமில்லை. இத்த கைய இமாலய இலக்கியப் பணி யைச் செய்திடும் திரு. நக்கீரன் கோபால் அவர்களுக்கு இலக்கியப் பிரியர்கள் அனைவரும் நமக்கி ருக்கும் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்ல வேண்டும்.''
ஃபார்முலா படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., அதற்கு நேர்மாறான கருத்து கொண்டி ருந்த உங்களை எப்படி இனம் கண்டார்?
""தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், "தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது' என்று நான் பேசியதும், அவர் அதை வெகுவாகப் பாராட்டி மேடையிலேயே எனக்குக் கடிதம் எழுதிக் கொடுத்ததும், பிறகு சட்டம் பயில சென்னைக்கு வந்த நான், தொடர்ந்து படிக்க வழி யில்லாமல் ஒரு பத்திரிகையாள னாக மாறியதும், ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பில் அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு, நான் முழுமையாக வெறுத்த தமிழ் சினிமாவிற்குள் மதிப்பிற்குரிய அந்த மாமனிதர் என்னை வலுக் கட்டாயமாக இழுத்து வந்ததையும் பல பத்திரிகைகளில் நான் எழுதி நீங்களும் ஏற்கெனவே அறிந்திருப் பீர்கள். இப்போது உங்களின் கேள்வியில் "ஃபார்முலா படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்.' எனக் குறிப்பிடு கிறீர்கள். அவர் அப்படிப்பட்ட நடிகர்தான் என்றாலும், சினிமா பற்றி முழுமையான அறிவாற்றல் கொண்டவர்! ஹாலிவுட் படங் களைப் பார்த்தவர் என்பதால் இருக்கலாம். ஆனால் எதையும் முன்னோக்கிப் பார்க்கும் திறன் படைத்தவர். தமிழ் சினிமாவின் நிகழ்காலம், வருங்காலம் பற்றி யெல்லாம் முற்றிலும் உணர்ந்தவர். எதிலும் அவருக்கு "தீர்க்க தரிசனம்' உண்டு என்று சொன்னால்கூட அது மிகையல்ல.
நான் அவரது லாயிட்ஸ் ரோடு வீட்டில் தங்கி, "பொன்னியின் செல்வன்' நாவலுக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், நான் தொடர்ந்து எழுதிக் களைப் படையக் கூடாது என்று சொல்லி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, நான் படித்த கதைகள், எழுதிய கதைகளைச் சொல்லச் சொல்லி கேட்பார். தனது இனிய நாடக அனுபவங்களையும் என்னு டன் பகிர்ந்து கொள்வார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம்-
"எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய் தேனே... உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்: "நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். இன்றைய சினிமா பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கும் உடன்பாடானது என்பதால்தான் தானே உங்களைப் பாராட்டி மேடையில் வைத்தே கடிதம் எழுதிக் கொடுத்தேன். பேசுவதற் காக உங்களுக்கு மூன்று நிமிடங் களே தரப்பட்டிருந்தும், நீங்கள் 45 நிமிடங்கள் பேசுகிற அளவிற்கு உங்கள் பிரின்சிபாலிடம் கேட்டுக் கொண்டதும் நான்தானே. ஆரம்பகால தமிழ் சினிமா வில் நாங்கள் எல்லாம் பாக வதர் கிராப் வைத்திருந் தோம். இன்று மாடர்னாக விக் வைத்துக் கொள்கிறோம். அன்றைய படங்களில் 50, 60 பாடல்கள் இருந் தன. இன்று 6, 7 பாடல்கள்தான். அந்தக் காலத்துப் படங்களில் நாங்கள் வசனம் பேசும் முறை முற்றிலுமாக மாறி, தற்போது வசனம் யதார்த்தமாகப் பேசும் நிலையை அடைந்திருக்கிறோம். அதுபோல எத்தனையோ மாற்றங்கள். நீங்கள் அன்று என் முன்னால், "சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார் கள். அது அபத்தம்' என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகி றோம். இதே ரசிகர்கள் எதிர்காலத் தில் படத்தில் டூயட் வந்தால் வெளியே போய்விடுவார்கள். ஒரு படத்தின் வெற் றிக்கு கதை தான் மூலதனம்; டூயட்கள் அல்ல என்னும் காலம் வெளிநாடு களைப்போல இந்தியாவிலும் ஒரு நாள் வந்தே தீரும்.'
இப்படி அவர் சொல்லச் சொல்ல அவர்மீது எனக்கிருந்த மட்டற்ற மதிப்பும், அவரது வியக்கத்தக்க சினிமா பற்றிய கண்ணோட்டத் தின் மீதான பிரமிப்பும் உயர்ந்து உயர்ந்து உயர்ந்து கொண்டே போனது.
பின்னாளில் நான் இயக்கிய முதல் படமான "முள்ளும் மலரும்' படத்தை பிரத்தியேகக் காட்சியாக அவருக்குக் காட்டினேன். படம் முடிந்ததும் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டவர், "உண்மை யான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கல்லூரியில் நீங்கள் பேசியதை இன்று நடை முறைப்படுத்தி மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நல்ல சினிமா பற்றிய உங்களின் கனவு மட்டும் அல்ல; எனது எதிர்பார்ப்பும் முழுமையாக நிறைவேறி விட்டது. நமது சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னது இன்று பலித்து விட்டது. இனி புதிய புதிய சோதனைகளைச் செய்து, மேலும் மேலும் சினிமா வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்துவீர்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு' என்றார் அந்தப் பண்பாளர்.
"நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்திற்கு மூன்று தேசிய விருது கள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக் கிறார் என்று கேள்விப்பட்டதும், நானும் எனது டெக்னீஷியன்களும் அவரைச் சந்தித்தோம். எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்த நான், "காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்...' என்றேன்.
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமை யால் வந்தது. ஆனால் ஒன்று நிச்ச யம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமா வும் உங்களால் நிறைவேறி வருகி றது. இதற்கு மேலும் நீங்கள் சினிமா வில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்' என்று ஆசீர்வதித்தார்.
நீங்கள் குறிப்பிட்ட ஃபார்முலா பட நடிகரான அமரர் எம்ஜி.ஆருக் குள் உண்மையான சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இனம் இனத்தை அடையாளம் கண்டுகொண்டது என்பதே உண்மை.''
அடிப்படையில் நீங்களே ஒரு கதாசிரியராக இருந்தாலும், உமாசந்திரனின் நாவலான ("முள்ளும் மலரும்'), புதுமைபித்த னின் "சிற்றன்னை' ("உதிரிப்பூக்கள்'), பொன்னீலனின் ("பூட்டாத பூட்டு கள்') போன்ற பிற எழுத்தாளர் களின் கதையைப் படமாக்கியது ஏன்?
""நான் வெற்றிகரமான கதாசிரிய ராக இருந்தாலும், வெற்றிகரமாக ஒரு குற்றத்தைச் செய்கிறோம் என்பதை உணர்ந்திருந்தேன். ஹோட்டல் சர்வர் சாப்பிட வந்தவர்கள் கேட்பதைத்தான் கொண்டு வந்து தருவார். அந்த சர்வரே வீட்டுக்கு வந்தால் தனக்குப் பிடித்ததை சமைத்துச் சாப்பிடுவார். அதுபோலத்தான் கதாசிரியராக இருந்த நான் இயக்குநராக மாறிய தும் எனக்குப் பிடித்தமானதைச் சமைத்தேன். இந்த உதாரணம் போதுமா? அதுவுமின்றி, மகேந்திர னின் படக்கதைகளால் (அதுவும் கட்டுக்கதை) கற்பனைப் பாத்திரங் கள் உருவாகுவார்கள். சம்பவங்கள் எல்லாம் யதார்த்தமாக இருக்காது. நான் இயக்குநரானதும் (இப்போது மீண்டும் உங்களின் முதல் கேள்விக் கான எனது பதிலை மீண்டும் படியுங்கள்) என்னை ஈர்த்த தமிழ் இலக்கியவாதிகளின் படைப்பு
களில் உள்ள "யதார்த்தத்தை' எனது படங்களில் கொண்டு வர எனக்கு வசதியாக இருந்தது. நமது மண்ணின்- மக்களின் நிஜத்தோற் றத்தை அந்தப் படைப்பாளி களிடம் நான் கண்டதாலும், எனது ஈடுபாடும் அவர்களைச் சார்ந்து இருந்ததாலும் அவர்களின் படைப்புகளையே அங்கீகரித்துக் கொண்டேன்- அவர்களின் அனுமதியோடு.''
ஆரம்பத்தில் வெற்றிப் படங்கள் கொடுத்த நீங்கள் பின்னர் இயக்கிய "நண்டு', "மெட்டி' போன்ற படங்கள் வியாபாரரீதியாக வெற்றி பெறாதது ஏன்?
""பௌர்ணமியும் அமாவாசை யும்போல, இரவும் பகலும்போல வெற்றி தோல்விகள் மாறி மாறி வருவதுதானே இயற்கை என்று நான் பதில் சொல்ல மாட்டேன். எனது வெற்றிப் படங்களுக்கு என்னோடு பணியாற்றிய அனை வரும் காரணம். எனது தோல்விப் படங்களுக்கு நான் மட்டுமே காரணம். அதுவுமில்லாமல் எனது வெற்றிப் படங்களிலிருந்து நான் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் எனது தோல்விப் படங்கள் எனக்குக் கற்றுத் தரும் பாடங்கள் அற்புதமானவை. எனது தவறுகளைத் தெரிந்துகொண்டு அடுத்த பெரிய வெற்றியைத் தர அந்தத் தோல்விப் படங்கள்தான் பெரிதும் உதவுகின்றன.''
நீங்கள் கதை வசனகர்த்தாவாக சினிமாவுக்கு வந்தபோது "தங்கப் பதக்கம்', "ஹிட்லர் உமா நாத்', "நிறைகுடம்', "நாம் மூவர்' உட்பட பல படங்களில் வசனங் கள் நிறைய இருந்தன. ஆனால் நீங்கள் இயக்குநரான பின்னால் விஷுவல்தான் நிறைய பேசும். இந்த மாற்றத்தை எப்படி உங்க ளால் கொண்டுவர முடிந்தது?
""கதாசிரியராக இருந்தபோது நிறைய வசனம் எழுதி விட்டு இயக்குநரானதும் விஷுவலுக்கு மாறி வசனத்தை அடியோடு குறைத்து விட்டேன் என்கிறீர்கள். இந்த மாற்றத்திற்கான காரணத்தைச் சொல்கிறேன். கதாசிரியன் மகேந் திரன் என்பவன் ஒரு மரம்வெட்டி. என் முதலாளிகளுக்காக தினம் தினம் ஏகப்பட்ட மரங்களை நான் வெட்டியிருந்தாலும் என் வீட்டு அடுப்பில் கைத்தண்டி அளவு விறகை எரிய விட்டுத்தானே சோறாக்குகிறேன். அதுதானே நியாயம்- யதார்த்தம். "காட்டருகே குடியிருந்தாலும் சமைப்பதற்கான விறகு குறைச்சலாகவே இருக்கும்' என்ற ஒரு சொல் வழக்கே உண்டு.
ஒன்றை மறந்துவிட்டீர்கள். சினிமா என்பது விஷுவல் மீடியம்... சினிமா என்பது மேடை நாடகமோ, ரேடியோ நாடகமோ அல்ல- பக்கம் பக்கமாக வசனம் பேசுவதற் கும் மிகையாக நடிப்பதற்கும்! இதை என் மழலைப் பருவத் திலேயே நான் பார்த்த ஒருசில ஹாலிவுட் படங் கள் என் கண்களைத் திறந்து விட்டன.
வாய் பேசுவது நாடகத்தில். கண்கள் பேசுவது சினிமா வில். நாடகத்தை ரசிக்க காதுகள் போதும். சினிமாவை ரசிக்க கண்கள் போதும். எளிதான மாற்றத்தை நான் பார்த்த ஒன்றிரண்டு ஹாலிவுட் படங்கள் மட்டும் அல்ல; எனது பெருமதிப்பிற்குரிய தமிழ் இலக்கி யப் படைப்பாளிகளிடமிருந்தும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு அமைதியாக எப்படியெல்லாம் அமையும் என்பதையும் தெரிந்து கொண்டிருந்தேன். யதார்த்த சினிமா என்பது கஷ்டமான காரியமே அல்ல. மிக மிகச் சுலபமான ஒன்று- வலது கையால் சாப்பிடுவது மாதிரி. வணிக ரீதியான படங்களை வெற்றிகரமாக எடுப்பதே மிகக் கடுமையான காரியம் என்பது என் கருத்து.''
சிவாஜியை வைத்துப் படம் இயக்கும் எண்ணம் வரவே இல்லையா? தவற விட்டு விட்டோம் என்ற வருத்தம் எப்போதாவது வந்ததுண்டா?
""அந்த நடிப்பு மேதையை வைத்துப் படம் இயக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாமல் போன துயரம் என் வாழ்வின் இறுதி மட்டும் என்னை விட்டுப் போகாது. அந்தத் துயரம் என்னை எட்டி உதைக்கும் சமயங் களிலெல்லாம் அந்த மாபெரும் இழப்புக்கு வடிகாலாக, நான் எழுதிய "தங்கப் பதக்கம்' நாடகத்தை அந்த இமயம் நடித்து இந்தியா முழுக்க அரங்கேற்றியதையும், அதையே அவர் படமாக்கி இன்றுவரை பேசப்படும் படமாக அவர் செய்திட்ட சாதனையையும் நினைத்து நினைத்து என்னை ஆறுதல்படுத்திக் கொள்வேன்.''
கமல் உங்கள் ஊர்க்காரர். அவரது குடும்பத்தோடு நீங்கள் நெருக்கமுள்ளவரும்கூட! அப்படி இருந்தும் அவரை வைத்துப் படம் இயக்காதது ஏன்?
""நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தூரமோ அவ்வளவுக் கவ்வளவு நாம் மிக மிக நெருக்கம். நாம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமோ அவ்வளவுக்கவ் வளவு தூரத்தில் இருக்கிறோம் என்ற ஒரு இந்திப் பழமொழி உண்டு. அது- "கித்னே தூர் உத்னே பாய்'- இந்தப் பழமொழிக்கு எத்தனை அர்த்தம் வேண்டு மானாலும் எடுத்துக்கொள்ளலாம். கமல் மட்டுமல்ல; கமல் குடும்பத் திற்கும் என் பெற்றோருக்கும் எனக்கும் மிக மிக நெருக்கம். குறை மாதக் குழந்தையாகப் பிறந்த எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்த என் நிஜமான தாயாக நான் நினைக்கும் டாக்டர் சாரா அம்மை யார்தான்- சிறுவனாக இருந்த கமலை ஏவி.எம்.முக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி "களத்தூர் கண்ணம்மா'வில் நடிக்க வைத்தவர். இன்று நாங்கள் இருவரும் திரைப் படத்துறையில் இருப்பதற்கு அந்தத் தாயே காரணம். சாருஹாசன் அவர்களைப் பிரசவம் பார்த்தது என்னைப் பெற்ற தாயான மனோன் மணி. அந்த அலைவரிசை மனதை நிறைத்துக் கொண்டிருப்பதால் கமல் குடும்பத்தில் ஒருவனாக இன்னும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
திரு. சாரு ஹாசன் கமலுக்கு மட்டுமல்ல; எனக்கும் மூத்த அண்ணன்தான்... கமல் நடித்து நான் இயக்கா விட்டால் என்ன? சாருஹாசனை யும், சுஹாசினியையும் எனது படங்களில் அறிமுகப்படுத்தி இயக்கி வெற்றி பெற்றிருக்கிறேனே- அந்த மனநிறைவு போதும். என்னைப்போலவே கமலும் அவர்களைக் குறித்து, அவர்கள் இருவரும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதுகளைப் பெற்றபோது பெருமிதப்பட்டிருக்கிறாரே- அது எனக்குப் போதும். நான் நிம்மதி யில்லாமல் தவித்துக் கொண்டிருந்த போதெல்லாம் என் கவலைகளைத் துடைத்தெறிந்தவர் கமல். "முள்ளும் மலரும்' படத்தில் ஒரு காட்சியை எடுக்க தயாரிப்பாளர் மறுத்துவிட, கமல்தான் எனக்குக் கைகொடுத் தார். தனது சொந்தப் பணத்தில் காமிராவை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து, அந்தக் காட்சியை நான் படமாக்கிட உடனிருந்து கமல் உதவியதை என்னால் மறக்க முடியாது. அன்று மட்டும் கமல் வந்து உதவி செய்யாமல் விட்டி ருந்தால் "முள்ளும் மலரும்' என்னைப்போலவே குறைப் பிரசவக் குழந்தையாகப் போய் தோற்றுப் போயிருக்கும். நானும் காணாமல் போயிருப்பேன்.
கமல் நடித்த "மீண்டும் கோகிலா' படத்தை என்னைத்தான் இயக்கித் தரும்படி சொல்லி கமல் எனக்கு அட்வான்சும் வாங்கிக் கொடுத்து விட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படத்தை நான் இயக்க முடியாமல் போயிற்று.
ஒன்றைத் தெரிந்துகொள்ளுங் கள். நான் நேசித்து, யாசித்து, அரும்பாடுபட்டு இந்தத் துறைக்கு வந்தவன் இல்லை. "கட்டாயக் கல்யாணம்'போல எனக்கு விருப்பமில்லாமல் எனக்கும் சினிமாவுக்கும் முடிச்சு போட்டு விட்டவர் திரு. எம்.ஜி.ஆர். அதற் காக சினிமா என்ற மனைவியிடம் நான் கொடுமைக்காரக் கணவனாக நடந்து கொள்ள வில்லை. மரியாதை யுடன் செயல்பட் டேன். ஆனால் இந்தத் "திருமண பந்தம்' என்னால் வெறுக்கப்பட்ட ஒன்று. அதனாலே தான் இன்றுவரை சினிமாவை ஒரு தொழிலாக நான் நினைப்பதில்லை. சினிமா மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இருந்தது கிடையாது. இயக்குநர் ஆனது எல்லாம் தற்செயல் நிகழ்வுகள்தான்.
"முள்ளும் மலரும்', "உதிரிப் பூக்கள்' என்ற வரிசையில் நான் இயக்கிய படங்கள் புதிய மாற்றங் களைக் கொண்டதாகப் புகழப் பட்டபோதெல்லாம் அந்தப் பாராட்டு எதுவுமே என் தலைக் குள் ஏறியதில்லை. எனது படங்கள் தோற்றாலும் நான் துவண்டு விடுவதில்லை. கடந்த ஏழு வருடங் களாகத்தான் "சினிமா' என்பது உலகின் மிக வல்லமை பொருந்திய ஊடகம் என்பதை உணர்ந்தேன்.
இப்போது? நான் இயக்கி வெற்றி பெற்று பாராட்டப்பட்ட படங்கள் எல்லாம் கடந்த ஏழு வருடங்களாக நான் பார்த்த பெருமைக்குரிய உலக சினிமாக்களின் காலடியில் கிடக்க வேண்டியவை என்பதை உணருகி றேன். இனிமேல்தான் உண்மை யான நல்ல சினிமா எடுக்க உத்தேசித்து ஆயத்தமாகி வருகிறேன். கமல் பற்றிக் கேட்டதற்கு இந்தக் காலட்சேபம் எதற்கு எனக் கேட்கலாம். சினிமா வைப் பற்றி என் மனநிலையை உங்களுக்கு உணர்த்திவிட்டேன். அதனால் வணிக ரீதியாக என்னை நானே சமரசப்படுத்திக் கொண்டு படம் எடுக்கும் நோக்கம் எனக்குக் கிடையாது. தற்போது நான் எடுத் திருக்கும் முடிவின்படி புதுமுகங் களை வைத்துதான் எனது பரீட் சார்த்த படங்களை எடுக்க வேண்டும். எடுக்க முடியும் என்று நம்புகிறேன். அதேசமயம் கமல் குடும்பத்தினருடன் எனக்குண்டான நெருக்கமும் பாசமும் சாசுவதமானது.''
கடந்த பத்தாண்டு கால தமிழ் சினிமாவைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
""வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வருகிறது. அதில் போகிப்பண்டிகை தினத்தில் வீட்டிலிருக்கும் ஓட்டை உடைசல், வேண்டாதது, உதவாதது எல்லாவற்றையும் வெளியில் போட்டு எரித்துவிட்டு, வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடிப் பார்கள். வீடு பளபளவென்று ஜொலிக்கும். அடுத்த மூன்று மாதங்களிலோ நான்கு மாதங் களிலோ வீடு முழுக்க குப்பைக் கூளங்கள் பெருகி, வெள்ளை யடித்த வீடு அழுக்கடைந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கும். இது நமது சினிமாவிற்கும் பொருந் தும். கடந்த பத்து வருடங்களுக்கு மட்டுமல்ல; கடந்த 50 ஆண்டு காலக் கதையும் இதுதான். ஒருவர், இருவர் திடீரெனத் தோன்றி மாறு பட்ட கதைக்களம் கொண்டு புதுமையான படங்களைத் தருவார் கள். தமிழ் சினிமா புதிய பாதைக் குத் திரும்பிவிட்டது என விமரி சனங்கள் பாராட்டும். அது ஒரு வருடமோ இரண்டு வருடமோ தான். தமிழ் சினிமா மீண்டும் புராதன பாதைக்கே திரும்பிவிடும். நம்மிடம் அற்புதமான டெக்னீஷி யன்கள் இருக்கிறார்கள் என்பதை மட்டும் எக்காலத்திலும் மறுக்க முடியாது.''
பிறமொழிகளைப்போல் தமிழில் இலக்கியங்களைத் திரைப்படமாக்கும் முயற்சியே இல்லாமல் போனது பற்றிய உங்கள் கருத்து என்ன?
""வணிக ரீதியான படங்களின் கதைகளுக்கே எள்ளளவும் அக்கறை காட்டாத அலட்சிய பாவத்தோடு நாம் இருக்கும்போது, இலக்கியத்தைப் படித்துப் படமாக் கவா நமக்குப் பொறுமையும் அக்கறையும் இருக்கப் போகிறது?''
என்.எஃப்.டி.சி-க்காக "சாசனம்' படத்தை இயக்கினீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்?
""1998-ல், 26 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட "சாசனம்' திரைப் படம் 2006-ல்தான் திரைக்கு வந்தது. அதுவும் தமிழ்நாடு முழுவதும் அல்ல. ஆனால் அந்தப் படத்தை வெளியே கொண்டு வர ஏழு வருடங்கள் நான் பட்டபாடு இருக்கிறதே... "சித்திரை பின்னேழு, வைகாசி முன்னேழு- அக்னி நட்சத்திரம்' என்று ஒரு சொலவம் உண்டு. எனக்கு அந்த ஏழு வருடங்களும் அக்னி நட்சத் திரம்தான்! இந்த ஏழு வருட நரக நாட்களில்தான் உலகின் அத்தனை வகை சினிமாக்களையும் பார்த்து, சினிமாவின் பெருமையை உணர்ந்து, என் எதிர்கால சினிமாத் திட்டத்தை உருவாக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஒரே நேரத்தில் நரகத்தையும் சொர்க்கத்தையும் என்னைக் காண வைத்த புண்ணியம் "சாசன'த்தால் எனக்குக் கிடைத்தது.''
பட விழாக்களில் தேர்வுக் குழுவிலும் ஜூரியாகவும் இருந்த அனுபவம்? அங்கேயும் அரசியல், சிபாரிசுகள் வருவதுண்டா?
""நாம் போற்றி வணங்கும் பேரறிவாளர்களின் உருவச் சிலைகளின் தலையில் எச்சமிட்டு அசிங்கப்படுத்தும் காகங்களை உங்களால் தவிர்க்க முடியுமா?''
ஈரான், ஹங்கேரி, சீனா உட்பட பல வெளிநாட்டு மொழிப் படங்கள் பார்த்திருப் பீர்கள். அவற்றோடு ஒப்பிடும் போது இந்தியப் படங்களின் தரம் எந்த அளவில் இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
""1948-ல் வெளிவந்த "சந்திர லேகா'வை இன்று ஒரு வெளி நாட்டுக்காரருக்குப் போட்டுக் காட்டுங்கள். அவர் வியந்து மாய்ந்துவிடுவார். எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டம், இயக்கம், எத்தனை அருமையான திரைக்கதை, எப்பேர்ப்பட்ட அடக்கி வாசிக் கப்படும் அபூர்வ நடிப்பு, எத்தனை உன்னதமான கலை, உடை, இசை போன்ற அம்சங்கள் என எண்ணி மாய்ந்து போவார். இந்தப் படம் 1948-ல் வெளியானது என்று சொன்னால் நம்ப மாட்டார். அப்புறம் அவரை நம்ப வைத்தா லும், 1948-லேயே இப்படிப் படம் எடுத்தவர்கள் இந்த 2010-ல் எப்பேர்ப்பட்ட அற்புதமான படங்களை எடுத்திருப்பார்கள் என்று தவிப்பார். பிறகு இன்று வரும் பெரும்பாலான படங்க ளைப் பார்த்துவிட்டு அவர் எவ்வளவு குழப்பமடைவார் என்று எண்ணிப் பாருங்கள். இன்னும் நாம் டூயட் பாடிக்கொண்டி ருக்கிறோம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை நாம் எடுப்பது சினிமாவே அல்ல.''
படவிழா ஒன்றில், நீங்கள் இயக்கிய "உதிரிப்பூக்கள்' படத்தை சப்-டைட்டில் இல்லாமலே பார்த்த வெளிநாட்டவர் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியபோது எப்படி உணர்ந்தீர்கள்?
""2010- மார்ச் மாதம் Indo- Korean Centre- Samsung இணைந்து International women's film festival நடத்தினார்கள் சென்னையில். 55 நாடுகளைச் சேர்ந்த 110-க்கு மேற்பட்ட புகழ் பெற்ற திரைப் படங்கள் திரையிடப்பட்டன. அதில் ஒன்று "உதிரிப்பூக்கள்'. இங்கிலீஷ் sub-title கொடுத்திருந்தேன். இத்தனை நாட்டுப் படங் களைப் பார்த்த வெளிநாட்டு, உள்நாட்டு ரசிகர்கள் முப்பது வருடங்களுக்கு முன்னால் வந்த நமது "உதிரிப்பூக்கள்' படத்தை எப்படி ஏற்றுக்கொள்ளப் போகி றார்கள் என்ற தீர்மானமான சங்கடத்தோடு நான் தியேட்டரில் உட்கார்ந்திருந்தேன்.
படம் முடிந்தது. சில வினாடிகள் மௌனம். அப்புறம் திடீரென எல்லாருமே எழுந்து நின்று கைதட்டினார்கள். என்னைச் சூழ்ந்துகொண்டு என்னுடன் படத்தின் சிறப்பை சிலாகித் தார்கள். நான் அதிச யப்பட்டேன். நீங்கள் கேட்டதுபோல தமிழும் தெரியாத- ள்ன்க்ஷலிற்ண்ற்ப்ங்லிம் படிக் காமல் "அர்த்தம் புரிந்து பல இடங்க ளில் நான் அழுதேன்' என ஒரு வெளி நாட்டவர் சொன்னது என்னை சிலிர்க்க வைத்தது. " "உதிரிப்பூக்கள்' போல இப்போது ஏன் தமிழில் படங்கள் வருவதில்லை?' என்றெல் லாம் அவர்கள் என்னைக் கேட்டது எனக்குப் புத்துணர்ச்சி தந்த அனுபவம்.''
தமிழ்த் திரைப்படங்களின் தரம் உயர்வதற்கு ஒரு படைப் பாளியாக உங்கள் யோசனை என்ன?
""தமிழ்ப் படங்கள்- இந்தியப் படங்கள் என்பதில் விதிவிலக்கு- மராத்தி, அஸ்ஸாம், ஒரியா, மலையாளப் படங்கள். மேல் நாட்டுத் திரைப்படங்ளை அண்ணாந்து பார்த்து வியக்கும் நாம் அந்த நாட்டு மக்கள் தியேட்டர் எனும் நாடகக்கலைக்கு எத்தனை உயர்வான இடம் தந்து கௌரவிக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை. அவர்கள் இலக் கியத்திற்கு எவ்வளவு மதிப்பளிக்கி றார்கள் என்பதை நாம் உணருவ தில்லை. தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில்- சிவாஜி, எம்.ஜி.ஆர். காலம் வரை நாடகக்கலை கொடி கட்டிப் பறந்தது. எத்தனை நாடகக் குழுக்கள்?
1. சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழு.
2. நவாப் ராஜமாணிக்கம் நாடக மன்றம்.
3. யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் குழு.
4. பாய்ஸ் நாடகக் கம்பெனி.
5. சக்தி நாடக சபா.
6. என்.எஸ்.கே. நாடக மன்றம்.
7. எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர் களின் சேவா ஸ்டேஜ்.
8. டி.கே.எஸ். பிரதர்ஸ் நாடக மன்றம்.
9. ஆர்.எஸ். மனோகரின் நேஷனல் ஆர்ட் தியேட்டர்ஸ்.
10. எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றம்.
11. எம்.ஜி.ஆர். நாடக மன்றம்.
12. எம்.ஆர். ராதா நாடக மன்றம்.
13. சிவாஜி நாடக மன்றம்.
14. வி.எஸ். ராகவன் நாடக மன்றம்.
15. மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக் குழு.
16. சோவின் நாடக மன்றம்.
17. கே. பாலசந்தரின் ராகினி கிரியேஷன்ஸ்.
18. சேஷாத்திரியின் சாந்தி நிகேதன்.
19. ஏவி.எம். ராஜன் நாடக மன்றம்.
இந்த நாடகக் குழுக்களிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அற்புதமான கதை கள், அபூர்வமான நடிகர்கள், கதா சிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் எல்லாரும் கிடைத்தார்கள். தமிழ் சினிமா செழித்தது.
இன்று அந்த அற்புதமான தமிழ் நாடகக் கலை அஸ்தமித்து விட்டது. அதனால் தமிழ் சினிமாவும் தள்ளாடுகிறது. புகழின் உச்சி யில் இருந்தபோதே எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாடகங்கள் நடத்தினார்கள். இன்று அந்த அர்ப் பணிப்பு யாரிடம் இருக்கிறது? இன்று நமது தமிழ் இலக்கிய உலகமும் சூனியப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டுமே வளமாக உள்ள மண்ணிலிருந்துதான் நல்ல சினிமாக்கள், பெருமைக்குரிய சினிமாக்கள், கலைஞர்கள் எல்லாம் தோன்ற முடியும். மராத்தி நாடகம், வங்காள நாடகம், கேரள நாடகம் இன்றும் வலுவாக இருக்கிறது. அதனால்தான் தரமான படங்கள் வருகின்றன. ஆனால் அவற்றைப் பற்றி எந்த உணர்தலும் தென்னகத்து மக்களுக்குக் கிடைக்க வழியில்லை.
தமிழ்த் திரைப் படங்களின் தரம் உயர - உலகின் பார்வையில் நாம் உயர்ந்து நிற்க, ஏ.ஆர். ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும்போல நமது கடுமையான அர்ப்பணிப்பை இந்த ஊடகத்துக்குத் தர நாம் முயல வேண் டும். உச்சத்தில் இருக் கும்போதுதான் 'கர்ய்க்ர்ய் க்ழ்ங்ஹம்ள்' என்ற நடன நாடகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத் தார்; பெருமை பெற்றார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.''
இன்றைக்கு இருக்கிற இயக்குநர்களில் உங்க ளைக் கவர்ந்தவர் யார்?
""வெற்றி- தோல்வி பற்றி எல்லாம் பொருட்படுத் தாமல், எந்தவித சமரசத் திற்கும் இணங்கிப் போய் விடாமல், இன்று பெரு மைக்குரிய தமிழ்ப் படங் களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித் துக் கொண்ட இயக்குநர் கள் எவரையும் நான் மனதார மதிக்கிறேன்.''
திரைத்துறைக்கு வரு பவர்கள் வெற்றி பெற்றாலும் சறுக்கினாலும் மீண்டும் யாரை யாவது பிடித்துப் படம் பண்ணத் தான் பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் எப்படி அமைதியாகவும் எப்போதும் படிப்பவராகவும் இருக்க முடிகிறது?
""நான்தான் சொன்னேனே- சினிமாவை பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக நான் கருதவில்லை. அப்படி நடப்பவர்களை நான் தவறாகப் பார்க்கவுமில்லை. அதனால் அமைதியாக இருக்கவும், நல்ல சினிமாவிற்காக மௌன மாகத் திட்டமிடவும் சாத்தியப் படுகிறது.''
நீங்கள் ஒரு தேர்ந்த வாசகர் என்பதை அறிவோம். நீங்கள் படித்த நாவலையோ சிறுகதை யையோ படமாக்கலாம் என் றெண்ணி, அப்படி நிகழாமல் போனது எந்தக் கதை?
""தி. ஜானகிராமன் அவர்களின் "மோகமுள்' ''.
உலக அளவில் நம் இந்தியத் திரைப்படங்கள் இடம் பெற என்ன தேவை என்று கருது கிறீர்கள்?
""உங்களின் 17-ஆவது கேள்விக் கான பதிலைத்தான் இங்கேயும் சொல்ல வேண்டியிருக்கிறது.''
தமிழ் சினிமாவில் நீங்கள் பெருமைப்படும் அம்சம்?
நமது அற்புதமான நகைச்சுவை நடிகர்கள்தான். அயல் நாடுகளைப் பொறுத்தவரை "சார்லி சாப்ளின்' என்ற ஒரு மாமேதையை மட்டுமே உலகில் உள்ள எல்லாரையும்போல என்னாலும் வியக்க முடிகிறது. மற்றபடி இன்றைய தேதியில் நமது தமிழ்த்திரை உலகத்தின் வியக்கத் தக்க நகைச்சுவை நடிகர்களை மிஞ்சக் கூடிய அல்லது இணை யாகவாவது பேசத் தகுதி பெற்ற நகைச்சுவை நடிகர்கள் எந்த நாட்டுத் திரைப்படங்களிலும் பார்க்க முடியாது. என்.எஸ்.கே. காலத்திலிருந்து இன்றைக்கு உள்ள வடிவேலு, விவேக் வரை.
தமிழ் சினிமாவின் நிரந்தரச் சக்கரவர்த்திகள் நமது நகைச்சுவை நடிகர்கள்தான். குணச்சித்திர வேடங்களிலும் இவர்கள் கொடி கட்டிப் பறக்கிறார்கள். நடிப்பிலேயே மிக மிக மிகக் கடினமானது
நகைச்சுவை நடிப்புதான். அதை அனாயசமாக மண்ணின் மணத்தோடு அதிஅற்புத மாகக் கையாளு பவர்கள் நமது நகைச்சுவை நடிகர்கள்தான்.
என்றைக்கு "சிறந்த நடிகர்' விருது நமது நகைச்சுவை நடிகர்களுக்குத் தரப்படுகிறதோ அப்போதுதான் உண்மையான நடிப்பிற்கு விருது என்று பொருள்''.
திரைப்படத் துறையில் உங்க ளின் எதிர்காலத் திட்டம் என்ன?
""மிக மிகக் குறைந்த பட்ஜெட் டில்- அது எவ்வளவு என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத பட்ஜெட்டில்- பாடல்கள் இன்றி அடர்த்தியான கதையையும், தரமான டெக்னீஷியன்களையும், புதுமுகங்களையும் வைத்துப் படம் எடுக்கும் ஒரு புதிய கலை. இந்தக் கலை இன்று உலகம் முழுக்க வெற்றி பெற்றுவருகிறது. அந்த மாதிரி படங்களின் மற்ற புதிய அம்சங்கள் என்னவென்பதை தற்போதைக்குச் சொல்லாமல் அமைதி காத்து, விரைந்து செயல் படத் தொடங்கியிருக்கிறேன். எனது அந்தப் படங்கள் வெளி வந்த பின்னர் நாம் மீண்டும் மனம் விட்டுப் பேசுவோம்.''
கருத்துகள்