கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை ம...

பாவம் பக்தர்தானே! - ஜெயகாந்தன்

ஊரின் நடுவே அந்தக் கோயில் இருந்தது. இருந்தாலும் சந்தடியின்றி அமைதியாக இருந்தது. கோயிலென்றால் ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலிருந்தே தரிசித்து 'உயர்ந்த சிகரக் கும்பம் தெரியுது' என்று பாடத் தகுந்த பெரிய கோபுரங்கள் ஏதும் கிடையாது. பார்த்துப் பிரமித்து நிற்காமல், சொந்தத்துடன் நம் வீட்டுக்குள் நுழைகிற உணர்வோடு அந்தக் கோயிலில் எவரும் பிரவேசிக்கலாம். பெரிய கதவுகள் அடைத்துத் தடுக்காது. கோயிலைச் சுற்றி நாலு அடி அகலத்துக்குப் பிரகாரமும் மதிலும் உண்டு. கருங்கள் தளவரிசை, பக்கத்தில் அடர்ந்து நிற்கும் புன்னை மரத்தின் பூக்களாலும் நிழலாலும் எந்த நேரத்தில் கால் வைத்தாலும் சில்லென்று இருக்கும். ஜிலுஜிலுவெனக் காற்றும் அடிக்கும். அங்கே பக்தர்கள் உள்ள இலுப்பைத் தோட்டத்தில் மாடுகளை மேயவிட்ட பின், அந்த மாட்டுக்காரச் சிறுவர்கள் விளையாடும் ஆடு - புலி ஆட்டத்திற்குக் கிழித்த கோடுகள் நிரந்தரமாகி விட்டிருந்தன. பகல் வேளைகளில் அவர்கள் அங்கே விளையாடியோ, படுத்து உறங்கியோ பொழுதைக் கழிப்பார்கள். அதற்கெல்லாம் கோயிலில் ஒரு தடையும் இல்லை. இதன் நடுவே, அந்தக் கம்பிக் கதவினூடே கை நீட்டித் தொட்டுவிடும் தூரத்தில், ஓரடி உயரத்தில், கை ஏந்தி அழைத்தால் தாவி வந்து இடுப்பில் உட்கார்ந்து கொள்ளுமோ என்கிற பாவனையில் - ஒரு பாலகிருஷ்ணன் சிலை.
அந்தப் பகுதியில் உள்ள தெலுங்கு பேசும் ஒரு வகுப்பினரின் அபிமானத்திற்குரிய அந்தக் கோயிலுக்கு ஒரு தமிழ்ப் பிராமணரே அர்ச்சகராய் இருந்தார். கோயிலுக்குச் சுமாரான சொத்து வசதி இருந்ததால் அங்கு சதா நேரமும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காலையிலும் மாலையிலும் பூஜையும், வருஷத்துக்கு ஒரு முறை பத்து நாட்கள் சற்று ஆடம்பரமாகவே திருவிழாவும் நடந்தது. மாலை நேரங்களில் பெண்கள் வருவார்கள். அப்போது மாட்டுக்காரச் சிறுவர்கள் வீடு திரும்பியிருப்பார்கள். இலுப்பைத் தோப்பில் குயில்கள் கூவிக் கொண்டு இருக்கும். மத்தியானம் பூராவும் நிலவிய சூழ்நிலைக்கு முற்றிலும் மாறான ஒரு களை குடிகொள்ளும் அப்போது. இரவு எட்டு மணி வரைக்கும் அந்த அர்ச்சகர் அப்பண்ணா கோயிலிலே இருந்து, சமயத்தில் ஒன்பது மணிக்கு மேலே பாலகிருஷ்ணனை சிறை வைத்த மாதிரி அந்தக் கம்பிக் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொண்டு செல்வார்.
இப்போதெல்லாம் சில கோயில்களில் பூசாரிகள் ஏதோ கடமைக்கு என்று செய்கிறார்களே - அது மாதிரியில்லாமல், உண்மையிலேயே ஒரு சிரத்தையும், அதில் ஒரு சுகானுபவமும் கொண்டு அந்த பாலகிருஷ்ணனுக்கு அவர் அலங்காரம் செய்வார். ஒரு குழந்தைக்கு அதன் தாய் சிங்காரம் செய்கிற மாதிரி செய்வார். அதிலே என்னவோ அவருக்கு அப்படி ஒரு சுகம். அப்பண்ணாவுக்குக் குழந்தை இல்லாத குறையைப் பாலகிருஷ்ணனிடம் தீர்த்துக் கொள்ளூகிறார் என்று சிலர் பரிகாசமாகச் சொல்லுவார்கள். அதற்காகக் குறைபட்டுக் கவலைப்பட்டு, ஏக்கப்பட்டு, எதிர்பார்த்திருந்த காலமெல்லாம் தீர்ந்துபோய் விட்டது இப்போது. அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலேயும், அவர் மனைவிக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயதும் ஆகிவிட்டதால் அந்தக் கவலைகூட அவர்கள் மனத்திலிருந்து கழன்று போய்விட்டது.
அவர் மனைவி பட்டம்மாளும் சில நாட்கள் கோயிலைச் சுற்றியுள்ள பூச்செடிகளில் பூப்பறிக்க வருவாள். அநேகமாக எல்லா நாட்களிலும், அப்பண்ணாதான் காலையில் வந்து பூப்பறித்துக் கொண்டு போவார். அதை அவள் ரொம்பச் சிரத்தையோடு விதவிதமாகத் தொடுத்துத் தருவாள்... காலைப் பலகாரத்தைப் பாலகிருஷ்ணனுக்காகவே அவள் தயார் செய்வாள். அதனைக் கொண்டு வந்து அவர் நைவேத்யம் செய்து எடுத்துக் கொண்டு போன பிறகுதான் சாப்பிடுவார்கள்.
அவர்கள் வீட்டு வாசலில் 'கோயில் பிரசாதம் கிடைக்கும்' என்று தகரத்தில் சுண்ணாம்பால் எழுதிய போர்டு ஒன்று தொங்கும். அதுதான் அவர்களின் ஜீவனோபாயம் என்றுகூடச் சொல்லலாம். என்றாலும் அதனை ஜீவனோபாயம் என்று கருதி ஆசாரமில்லாமல் அவர்கள் தயாரிப்பதில்லை. அது உண்மையிலேயே நைவேத்யம் செய்யப்பட்ட பவித்திரமான பிரசாதம்தான் என்பதை அவ்வூர் மக்கள் அறிவர்.
கிருஷ்ணன் கோயில் பிரசாதம், கிருஷ்ணன் கோயில் அர்ச்சகர், கிருஷ்ணன் கோயில் அர்ச்சகரம்மாள் என்றெல்லாம் அந்தக் கோயிலோடு சம்பந்தப்பட்டு, பெயரேற்றியிருக்கும் இவர்களைத் தவிர, கிருஷ்ணன் கோயிலோடு எவ்வித சம்பந்தமுமில்லாத இன்னொரு நபரும் உண்டு. அவளைக் கிருஷ்ணன் கோயில் கிழவி என்று அழைப்பர். அவளது பூர்வோத்திரம் யாருக்கும் தெரியாது. சில வருஷங்களுக்கு முன்பு அவளை இந்தப் பிரதேசத்தில் மக்கள் கண்டனர். ஒரு கையில் ஊன்றுகோலும், மாற்றுப் புடவையைச் சுருட்டிய ஒரு கந்தல் மூட்டையுமாய் அவள் ஒரு நாளின் அந்திப் பொழுதில் இந்த இலுப்பைத் தோப்பில் பிரவேசித்தாள். வாழ்ந்த வாழ்க்கை போதும் என்று சொல்வது மாதிரி கழுத்துக்கு மேல் அவள் தலை, சதா ஆடிக்கொண்டு இருக்கும்.
இந்த இடத்துக்கு வந்த பிறகு, ஏதோ இந்த இலக்கை நாடித்தான் அவள் இவ்வளவு காலம் நடந்து வந்தது மாதிரி இங்கே நிரந்தரம் கொண்டுவிட்டாள். அதிகாலை நேரத்திலேயே அங்கிருந்து அவள் புறப்பட்டு விடுவாள். உச்சிப்போதிலேயோ, பிற்பகலிலேயோ கந்தலில் முடிந்த அரிசியோடு அவள் திரும்பி வருவாள். வந்த உடனே பொங்கித் தின்றுவிட வேண்டுமென்ற அவசரமில்லாமல் சாவதானமாகப் படுத்துத் தூங்குவாள். இரவு ஒன்பது மணிக்குமேல் அர்ச்சகர் அப்பண்ணா பாலகிருஷ்ணனை சிறைவைத்துக் கம்பிக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு திரும்பும்போது அந்த இலுப்பை மரத்தடியில் மூன்று கற்களை வைத்துத் தீ மூட்டிய அடுப்பின் மீது அந்தக் கிழவி தனது ஒற்றை வயிற்றுக்கு உணவு சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பார். மறுநாள் காலை அவர் பூக்கொய்வதற்காக வரும்போது மரத்தடியில் அந்தக் கரி படிந்த மண் பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அவள் கோயிலுக்கும் வந்து போயிருக்கிறாள் என்பதற்கு அடையாளமாகக் கோவில் பிரகாரம் சுத்தம் செய்யப்பட்டு, நீர் தௌ¤க்கப்பட்டு, அவள் தலையாட்டம் மாதிரியே ஆடி நௌ¤ந்து அலங்கோலமாகக் கோலமும் இடப்பட்டிருக்கும்.
அவளைக் கோயிலுக்குள்ளே அப்பண்ணாவோ அவருடைய மனைவியோ, மாட்டுக்காரச் சிறுவர்களோ யாரும் இதுநாள் வரை பார்த்ததில்லை.
ஆனாலும் அவளுக்குக் கிருஷ்ணன் கோயில் கிழவி என்று பெயர் வந்துவிட்டது.
அவள் யாரிடமும் பேச முடியாத ஊமை என்பதால் அவள் பெயரும் யாருக்கும் தெரியாது. தனக்கு இட்ட பெயரை அவள் ஒப்புக்கொண்டாளா இல்லையா என்பதும் யாருக்கும் தெரியாது.
ஒருநாள் அப்பண்ணா பக்கத்து ஊருக்கு ஏதோ காரியமாகப் போயிருந்தார். திரும்பி வரும்போது நடுநிசி ஆகிவிட்டது. ரயிலடியிலிருந்த இலுப்பைத் தோப்பின் வழியாகக் கிருஷ்ணன் கோயிலைக் கடந்து அவர் வந்தபொழுது கோயிலினுள்ளிருந்து மனிதக் குரல் கேட்கவே, சற்று நின்றார். உள்ளே எட்டிப் பார்க்கையில் பாலகிருஷ்ணனின் சந்நிதியில் உட்கார்ந்திருக்கும் கிழவியின் முதுகுப்புறம் தெரிந்தது.
'இந்த நடுநிசியில் இவள் அங்கே என்ன செய்கிறாள்? வெளியே மழை கூட இல்லையே!' என்று வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் சந்தடியின்றிக் கோயிலுக்குள் நுழைந்தார் அப்பண்ணா. இப்போது கிழவியின் முதுகுப்புறம் மட்டுமல்லாது அவளுக்கு முன்னால் பாலகிருஷ்ணனுக்கும் அவளுக்கும் நடுவே உள்ள இடைவெளியில் உடைந்து மூளியாகிப் போன மண் சட்டியும் அதிலே உள்ள சோறும் கூட அந்தச் சிறிய எண்ணெய் விளக்கின் ஒளியில் தெரிந்தன.
கிழவி சட்டியிலிருந்து ஒரு கவளம் எடுத்துக் கம்பிக் கதவினூடே பால கிருஷ்ணனின் முகத்துக்கு நேரே அதைக் காட்டித் தனது ஊமைப் பாஷையில் உருகி உருகிக் கெஞ்சியபின், கிருஷ்ணன் அதை உண்டுவிட்ட பாவனையில் திருப்தி கொண்டு தான் புசிக்கலானாள். இப்படி ஒவ்வொரு கவளத்தையும் அவள் சாப்பிடுவதற்கு முன் அவனுக்கு ஊட்டிய பாவனையில் அவள் கொஞ்சிச் சிரித்து மகிழ்ந்து உண்டாள்.
அப்பண்ணாவுக்கு முதலில் கோபமும், பின்னர் இந்தப் பைத்தியக்காரக் கிழவியின் செய்கையிலே ஒருவிதப் பரிதாபமும் பிறந்தது. என்றாலும் அந்தத் தெய்வ சந்நிதானத்தை இவள் இவ்வாறு அசுத்தப்படுத்துவதைக் காண அவருக்கு மனம் பொறுக்கவில்லை... அவளது பேச்சை அவர் சற்று உற்றுக் கவனித்தார். அவளது செய்கையைப் புரிந்து கொள்ள முடியாதது போலவே அவளது மொழியும் அவருக்குப் புரியவில்லை. இதுவரை ஒரு கிழவியாக மட்டுமே அறிந்திருந்த அவளை இப்போது ஒரு நான்கு வயது சிறுமி மாதிரி அவர் கண்டார்.
அந்தக் காரியம் நடக்கிற தினுசிலிருந்து இது ஏதோ இன்று மட்டும் நடக்கிற ஒரு திடீர் நிகழ்ச்சி அல்ல; கிழவி இந்தப் பிரதேசத்துக்கு வந்த நாள் தொட்டு தினசரி நடக்கின்ற ஒரு வழக்கமான காரியம் என்று அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. தினசரி அவள் கோயில் சந்நிதானத்தைச் சுத்தம் செய்து, நீர் தௌ¤த்துக் கோலம் இட்டு வைப்பதற்கு இதுதான் காரணமாயிருக்க வேண்டும் என்று அவரால் ஊகிக்க முடிந்தது.
"ஏ கிழவி!" என்று அவர் அதட்டிய குரல், அவள் செவிகளில் விழவே இல்லை.
அவளது ஆனந்தமயமான அந்த அனுபவத்தில் தான் குறுக்கிட்டு இடையூறு செய்வதுகூட ஒரு பாபமாகி விடுமோ என்று பயந்தார் அவர். சற்று நேரம் அங்கேயே நின்று அதைப் பார்த்த பின்னர், தான் வந்தது அவளுக்குத் தெரியாமல் தன் வழியே திரும்பி நடந்த அப்பண்ணாவுக்கு வீட்டுக்குச் சென்ற பிறகு கூடத் தூக்கம் வரவில்லை.
அந்தக் கோயிலின் அர்ச்சகர் என்ற முறையில் அவளை தான் அடித்துத் துரத்தாமல் வந்தது தவறே என்று அவர் மனம் குமைந்தது.
அவள் என்ன என்ன கர்மத்தை எல்லாம் சமைக்கிறாளோ? அதையெல்லாம் கொண்டு வந்து பகவானுடைய சந்நிதியில் இப்படி அசுத்தப்படுத்த அவளுக்கு எப்படித்தான் மனம் வருகிறது என்று பலவாறு எண்ணிக் குழம்பிய அப்பண்ணா, மறுநாள் முதல் அந்தக் கோயிலின் வெளிப்புற வாயிற் கதவுகளையும் தான் வரும்போது இழுத்துப் பூட்டிக் கொண்டு வந்துவிடுவது என்று முடிவு செய்தார்.
*****      *****       *****இப்பொழுதெல்லாம் கிருஷ்ணன் கோயிலுக்குள்ளே அதிகாலையில் சில மணி நேரங்களிலும், மாலைப்போதின் சில மணி நேரங்களிலும் தவிர பிற சமயங்களில் யாரும் பிரவேசிக்க முடியாது. கோயிலின் முன்புறப் பிரகாரக் கதவுகளை - வெகு நாட்களாக அடையா நெடுங் கதவாய்த் தரையோடு தரையாய் அழுந்தி, அறுகம்புல் முளைத்து அழுந்திப்போன அந்த இரும்புக் கதவுகளை - ஒருநாள் பூராவும் பிரயாசைப்பட்டுப் புற்களிலிருந்தும், துருவிலிருந்தும் விடுதலை செய்து, கீல்களுக்கு எண்ணெய் போட்டுச் சென்ற வாரத்தில் ஒரு நாள் சாத்திக் கோயிலையே சிறை வைத்தார் அப்பண்ணா.
மாட்டுக்காரச் சிறுவர்கள் ஆடு - புலி ஆட்டத்திற்காக இப்போது கோயில் படிகளில் கோடு கிழிக்க ஆரம்பித்து விட்டனர். இலுப்பைத் தோப்பில், மாடுகள் மேய்வதும், குயில்கள் கூவுவதும் மட்டும் நிற்கவில்லை. அந்தக் கிழவி மட்டும் இப்போது எங்கும் போகாமல் அந்த மரத்தடியிலேயே உட்கார்ந்துகொண்டு மூடிய கம்பிக் கதவுகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டு இருந்தாள். சில சமயங்களில் அங்கிருந்து எழுந்து சென்று எங்காவது போய் யாராவது தரும் எச்சிலைப் புசித்தாள். நேரம் காலம் வித்தியாசமில்லாமல் மரத்தடியிலேயே படுத்துத் தூங்கினாள். இலுப்பை மரத்தடியில் மூன்று கற்களுக்கிடையே மூண்டெரியும் அவளது அடுப்பு, இப்போதெல்லாம் சூனியமாகவே கிடக்கிறது.
பூஜை செய்வதற்கும், பூப்பறிப்பதற்கும் அப்பண்ணா கோயிலுக்கு வந்து போகும்போது, கிழவி அவரைப் பரிதாபமாக ஏறிட்டுப் பார்ப்பாள். ஏனோ அப்பண்ணாவுக்கு அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவே பயம். அவளைக் கவனிக்காதது மாதிரி வேகமாகப் போய்விடுவார். அன்று நள்ளிரவில் தான் கண்ட காட்சியைப் பற்றித் தன் மனைவியிடம் கூட இன்னும் அவர் சொல்லவில்லை.
*****      *****       *****பத்து நாட்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணன் கோயிலுக்குத் திருவிழா வந்தது. கோயில் முன்னால் கொட்டகை போட்டார்கள்; கொடியேற்றினார்கள். சாதாரண நாட்களிலே பார்த்துப் பார்த்துப் பாலகிருஷ்ணனுக்கு சிங்காரம் செய்கின்ற அப்பண்ணாவோ திருவிழா நாளன்று அதிசிரத்தை கொண்டு அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்.
பாலகிருஷ்ணனுக்கு முன் கையில் கங்கணத்தை எடுத்துப் பூட்டினார்.
'அட பைத்யமே! இதென்ன கால் தண்டையை எடுத்துக் கையில் பூட்டி விட்டேன்? அதுதான் இவ்வளவு தொள தொளவென்று இருக்கிறது' என்று தன்னையே எண்ணிச் சிரித்தவாறு அதனைக் கழட்டிப் பார்த்தார்.
அது கால் தண்டையல்ல; கங்கணம்தான்!
'எப்படி இவ்வளவு பெரிதாகி விட்டது? போன வருடம் - அவன் கைகளில் எவ்வளவு பதிவாய் அழகாக இருந்தது? எப்படிப் பெரிதாகி விட்டது' என்று மனத்துள் ஓர் அரிப்புடன் தண்டையை எடுத்து அணிவித்தார்.
அதுவும் காலில் சேராமல் தனி வளையாமாய்ப் பாதத்தில் வீழ்ந்து கிடந்தது...
அரைவடத்தை எடுத்துக் கட்டினால் அதுவும் பெரிதாகி இருந்தது.
'என்ன சோதனை இது?' என்று ஏக்கத்துடன் அவர் பாலகிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தார்.
ஓ! அந்த முகம்கூடச் சுண்டிச் சுருங்கி வாடி வதங்கிப் புன்முறுவல் இன்றித் தோன்றுவதைக் கண்டார். 'பாலகிருஷ்ணன் இளைத்துப் போய்விட்டானா?'
ஆமாம்! பாலகிருஷ்ணன் இளைத்தேதான் போய் விட்டான்.
'இதைப்போய் யாரிடம் சொல்வது? பகுத்தறிவு வாதம் என்கிற பேரில் நாஸ்திகவாதம் பெருத்துப்போன இக்காலத்தில், என்னைப் பைத்தியக்காரன் என்று அல்லவா சிரிப்பார்கள்! நாத்திகர்கள் சிரிப்பது இருக்கட்டும். இந்தக் கோயிலுக்கு வந்து பக்தியோடு பாலகிருஷ்ணனைத் தரிசித்துச் செல்லும் எந்த ஆஸ்திகனாவது நான் சொல்லுவதை நம்புவானா?...' என்று அப்பண்ணா ஒன்றும் புரியாமல் வெறிக்க விழித்தவாறு வெகுநேரம் உட்கார்ந்திருந்தார்.
இரவு ஒன்பது மணிக்கு அவர் கோயிலுக்கு வெளியே வந்தபோது, அந்தக் கிழவியைப் பார்த்தார். திருவிழாக் கொட்டகையின் விளக்கு வெளிச்சத்தில் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் ஏக அமர்க்களம் செய்து விளையாடிக் கொண்டிருப்பதைத் தன்னை மறந்த லயத்தோடு பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் கிழவி.
அப்பண்ணா அவள் முகத்தை உற்றுப் பார்த்தார். அவள் வாய் பேசமுடியா ஊமை எனினும், அந்த முகத்தில் எத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகள்... எத்தனை அனுபவ ரேகைகள்! எத்தனை சோக முத்திரைகள்...!
அப்பண்ணா அந்தக் கிழவியைப் பற்றி யோசித்தார். 'இவள் இப்போ இங்கே ஒரு அநாதைக் கிழவியா தனிச்சுக் கிடந்தாலும் இவள் வயதுக்கு இவளும் பிள்ளைகள் பெற்றுப் பெருகி வாழ்ந்திருப்பாள், இல்லையோ? என்ன நடந்ததோ? யார் சொல்ல முடியும்? ஒருவேளைச் சாப்பாட்டைக் கூடத் தனியா சாப்பிட்டு அவளுக்குப் பழக்கமில்லாதிருந்திருக்குமொ? அதனாலேதான் பாலகிருஷ்ணனைத் துணைக்கு வச்சுண்டு சாப்பிட்டாளோ? இதைப் போயி இவளிடம் கேட்க முடியாது. ஊமைகள் பேசாது... உணர்த்தும். அப்படி எதையோ பாலகிருஷ்ணனுக்கு இவள் உணர்த்தி விட்டாளோ? - பாலகிருஷ்ணன் மட்டும் பேசறானா? அவனும் இப்ப எனக்கு எதையோ உணர்த்தறானோ?... இதையெல்லாம் பேசி உணர்த்த முடியாது. அறிவு, பக்திக்குப் பகை! நைவேத்யம் பண்றதை பகவான் ஏத்துக்கிறார்னு நான் நம்பறதும், பகவான் பிரசாதம்னு ஊர் நம்பறதும் சரின்னா, அந்தக் கிழவி அந்தரங்கமாயும், அன்பாயும் தர்றதை அவன் ஏத்துக்க மாட்டான்னு நினைக்க நான் யாரு? அதுக்காக அவன் காத்துண்டு இருக்கான். பத்து நாளா நான் பாலகிருஷ்ணனை பட்டினி போட்டேனோ' என்றெல்லாம் அப்பண்ணாவின் மனம் குடைந்தது.
அன்று வீடு திரும்பும்போது அவர் கோயிலின் வெளிப் பிரகாரக் கதவுகளை இழுத்து மூடாமல் - நன்கு விரியத் திறந்து வைத்துவிட்டே போனார்.
சில நாட்களுக்குப் பிறகு இரவு ஒன்பது மணிக்கு மேல் இலுப்பைத் தோப்பில் ஒரு மரத்தடியில் அடுப்பு எரிந்து கொண்டிருந்ததை அப்பண்ணா பார்த்துக் கொண்டே வீட்டுக்குப் போனார். அதில் என்னமோ கொதிக்கிறது. அப்பண்ணா மேல் துண்டால் மூக்கைப் பிடித்துக் கொள்ளுகிறார்.
பாவம், அவர் பக்தர்தானே! பகவானா என்ன?
(எழுதப்பட்ட காலம்: 1967க்கும் 1969 பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ