19/02/2011

தேசியக் கவிஞர் பாரதியார்

பாரதியார் 1882, டிசம்பர்11ல் எட்டையபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். செல்லப்பெயர் சுப்பையா. 11 வயதிலேயே எட்டையபுரம் சமஸ்தான புலவர்களால் பாராட்டப்பெற்று "பாரதி' என்ற பட்டம் பெற்றார். "பாரதி' என்றால் "கலைமகள்' என்று பொருள். இவருடைய முதல் கவிதை "தனிமையிரக்கம்' என்பதாகும். மதுரை விவேகபாநு இதழில் 1904ல் வெளியானது. முதல் கவிதை தொகுதியை "சுதேச கீதங்கள்' என்னும் பெயரில் 1908ல் வெளியிட்டார். சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி இதழ்களில் உதவியாசிரியராக, பொறுப்பாசிரியாகப் பணியாற்றினார். மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், 1906ல் "இந்தியா' என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலிசபதம், தேசியகீதங்கள், புதிய ஆத்திசூடி, பாப்பா பாட்டு, முரசு ஆகியவை இவர் எழுதிய நூல்கள். ஞானரதம், தராசு, சந்திரிகையின் கதை, சின்ன சங்கரன் கதை ஆகிய உரைநடை நூல்களையும், வேடிக்கை கதைகள், நவதந்திரக் கதைகள் ஆகிய கதை நூல்களையும் எழுதினார். பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார். ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனக்கு "ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார். ஞானகுருவாக சாருநிவேதிதாவையும் (விவேகானந்தரின் சிஷ்யை), அரசியல் குருவாக பாலகங்காதர திலகரையும் ஏற்றுக் கொண்டார். "மகாகவி' என்றும், "தேசியகவி' என்றும் மக்களால் போற்றப்பட்டார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை ""பைந்தமிழ்த்தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த்தேனீ, சிந்துக்குத் தந்தை'' என்று பாராட்டி மகிழ்ந்தார். பாரதியார் தன்னுடைய கடமையாக, ""நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தன்னுடைய தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக கண்ணனைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

கருத்துகள் இல்லை: