14/02/2011

பேராசிரியர் எஸ். நீலகண்டன் - நேர்காணல்

``ஒரு நகரமும் ஒரு கிராமமும்''  நூலின் மூலம் தமிழ் அறிவுலகுக்கும் நவீன இலக்கிய உலகிற்கும் உடனடியான கவனம் பெற்றவர் பேராசிரியர் எஸ். நீலகண்டன். 1935ஆம் ஆண்டு கரூர் நகருக்கு அருகிலுள்ள செட்டிபாளையம் குக்கிராமத்தில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1979இல் முனைவர் பட்டம் பெற்ற இவர், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பொருளியல் பேராசிரியராகப் (1979-1990) பணியாற்றினார்.

1986-87இல் அமெரிக்க `புல்பிரைட்' கல்வியுதவிக்குத் தேர்ச்சி பெற்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் (பின்னர் நோபல் பரிசு பெற்ற) பேராசிரியர். டக்ளஸ் சி. நார்த் மேற்பார்வையில் பணியாற்றினார். தமிழ்நாடு அரசின் சிறந்த கல்லூரி ஆசிரியர் (1986-87) பரிசு பெற்றவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்.ஐ.டி.எஸ்.) இயக்குனராகப் (1990-95) பணியாற்றியவர். 1996இல் சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயப் பணிகளில் ஈடுபட்டார்.

இவரது முன்னாள் மாணவர்கள் இவரது அறிவை இன்றுவரை பயன்படுத்தி வருகிறார்கள். செட்டிபாளையம் குக்கிராமம்தான் என்றாலும் இணையம் மூலம் உலகத்தையே தன் வீட்டிற்குள் வைத்துள்ளார் பேராசிரியர் எஸ். நீலகண்டன். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் செட்டிபாளையம் அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள அவரது தோட்டத்தில் இருந்து பல மணி நேரம் அவரிடம் உரையாடியதிலிருந்து...

தீராநதி : ``ஒரு நகரமும் ஒரு கிராமமும்'' நூல் எழுதுவதற்கான சூழல் எப்போது உருவானது?

எஸ். நீலகண்டன் : மால்கம் ஆதிசேஷையா சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தை 1971ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அதை ஆரம்பித்தபோதே அங்கு மாதம்தோறும் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தார். பின்பு, தொடர்ந்து நடத்தியும் வந்தார். அதில் எந்தத் தொய்வும் இல்லாமல் அவர் உயிருடன் இருந்தவரை நடந்து வந்தது. இருபத்தி நான்கு ஆண்டுகள் மாதம் ஒருமுறை கூட்டம் நடந்தது. ஆதிசேஷையா அந்த மாதக் கூட்டம் நடக்கும்போது சென்னையில் இருந்தால் கண்டிப்பாகப் பிரசன்னமாகி விடுவார்.

அந்தக் கூட்டத்தை ஆய்வாளர்கள், பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியாக அவர் கற்பனை செய்திருந்தார்.

ஆய்வு முடிவுகள் என்பது ஆய்வாளர்களுக்காக மட்டும் எழுதப்படுவது. மிகத் தொழில்நுட்பம் சார்ந்த எழுத்துக்கள். ஆனால், ஆய்வு முடிவுகளை சாதாரண மனிதர்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்.

சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தின் இயக்குனராக 1990ஆம் ஆண்டில் சேர்ந்தேன். நான் அங்கு பணியாற்றிய நான்கு ஆண்டுகளில் மேற்சொன்ன ஆய்வுக்கூட்டத்திற்கு ஆட்களைப் பிடிப்பது சிரமமானதாக இருந்தது. ஏனென்றால், ஆய்வுக் கூட்டத்தில் பேச வருபவர் ஏதாவது ஒரு துறையில் வல்லுநராக இருக்கவேண்டும். அதே சமயம் பலதரப்பட்ட ஆட்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். உதாரணத்திற்கு சொல்லப்போனால், பத்திரிகையாளர்கள், நிர்வாகத்துறையிலிருந்து வருபவர்கள், நீதித்துறையிலிருந்து வருபவர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் இப்படிப் பலரும் வருகிற சிறிய கூட்டம். இப்படியானவர்கள் கலந்துகொள்ளும் சிறிய கூட்டத்தில் பேச வருபவர்கள் அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை. அது பொதுக்கூட்டமோ அல்லது கை தட்டுவதற்காக வரும் கூட்டமோ அல்ல. இந்த ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் உள்ள சிரமத்தை ஆதிசேஷையாவிடமே தெரிவித்துவிட்டேன். ஆதிசேஷையா எப்போதுமே தடைகளைக் கண்டு பயப்படாதவர். அந்தச் சமயம் அவரது மறைவு ஏற்பட்டது. அது 1994 நவம்பர் மாதம். அதன்பிறகு தலைவராகச் சேர்ந்தவர் சர்வபள்ளி கோபால்; ஆதிசேஷையா வகித்த இடத்திற்கு வந்த சர்வபள்ளி கோபால், உலகப் புகழ்பெற்ற சரித்திர ஆசிரியர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன். டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் இருந்தவர். அவரிடம் மாதக்கூட்டம் நடத்துவதில் உள்ள சிரமத்தைச் சொன்னவுடன் புரிந்துகொண்டார்.

ஆதிசேஷையா இருக்கும்போது அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அவருக்காகக் கூட்டத்தில் பேச வருவார்கள். இனிமேல் அப்படி நடைபெறுவது சிரமம். ஆனால், ``அந்த ஆய்வுக் கூட்டத்தை ஆதிசேஷையா தொடங்கி அவரது காலம் முழுதும் நடத்திவிட்டார். இப்போது இறுதியாக ஒரு கூட்டத்தை யாரையாவது கூப்பிட்டு நடத்திவிடுங்கள். டிசம்பர் மாதத்தோடு (1994) முடித்துவிடலாம்'' என்றார் சர்வபள்ளி கோபால். அப்போதுதான் ஆளைத் தேடுவதைவிட நாமே பேசிவிடலாம் என்று `எங்கள் ஊர், எங்கள் நகரத்தைப் பற்றி' பேசிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அதைத் தொடர்ந்து இரண்டு வாரம் நடத்தி இதுவரை நடத்தி வந்த மாதாந்திரக் கூட்டத்தை முடித்துவிடலாம் என்று அறிவித்துவிட்டு நடத்தினோம். எப்போதும் கலந்துகொள்பவர்களோடு சேர்ந்து வேறு சிலரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

இப்படியான ஒரு வரலாறு கொண்ட கூட்டத்தில்தான் முதல் வாரம் நகரத்தைப் பற்றியும், அடுத்த வாரம் கிராமத்தைப் பற்றியும் பேசினேன். அந்தப் பேச்சுக்களுக்கு இரண்டு வாரத்திலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. முன்னாள் நிதித்துறைச் செயலாளர், காலஞ்சென்ற குகன் எம்.ஐ.டி.எஸ்.சில் பேராசிரியராக இருந்தார். அவர் அப்போது என்னிடம் சொன்னார். ``இரண்டு கூட்டங்களிலும் நீங்கள் பேசிய பேச்சுக்கள் ஒலிப்பேழையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை அப்படியே ஒர்க்கிங் பேப்பரை அதாவது `முடிவு பெறாத ஆராய்ச்சிக் கட்டுரை'யாக வெளியிடுங்கள்'' என்று. ``டிசம்பர் (1994) மாதத்துடன் நான் ஓய்வு பெறுகிறேன்'' என்றேன். அவரும் விடாது, ``நீங்கள் அனுமதி கொடுத்தால் அடுத்துப் பணியில் சேருபவர் அதைத் தொடருவார்'' என்றார்.

அப்படித்தான் முதலில் ஆங்கிலப் பதிப்பு வந்தது. 1995-ல் எம்.ஐ.டி.எஸ்.சின் ஒர்க்கிங் பேப்பர் ஆகத்தான் ``ஒரு நகரமும் ஒரு கிராமமும்'' வந்தது. அது இப்போது தமிழில் நூலாக வந்துள்ள வடிவத்தின் சுருக்கம்தான். ஆங்கிலத்தில் 120 பக்கங்கள் இருக்கும்.

தீராநதி : எப்படி ``ஒரு நகரமும் ஒரு கிராமமும்'' நூலாக்கம் பெற்றது?

எஸ். நீலகண்டன் : 2002-ல் என்று நினைக்கிறேன். பூனாவிலிருந்து வெளிவருகிற ஒரு ஆய்வுச் சஞ்சிகையைச் சேர்ந்த நீலகண்ட ரத் என்ற புகழ்பெற்ற பொருளியல் ஆய்வாளர் என்னைத் தொடர்புகொண்டார். ஆங்கிலத்தில் வந்த எனது ஒர்க்கிங் பேப்பரைப் படித்ததாகவும் அதைத் தங்களது சஞ்சிகையில் முழுமையாக வெளியிட விரும்புவதாகவும் நீலகண்ட ரத் எனக்கு எழுதியிருந்தார். அந்த ஒர்க்கிங் பேப்பருடன் அதை எழுதியபிறகு நடந்த சம்பவங்களையும் சுருக்கமாக அனுபந்தமாக எழுதிச் சேர்த்து அவர்களுக்குக் கொடுத்தேன். அதை நீலகண்ட ரத் முழுமையாக வெளியிட்டார்.

2005 அல்லது 2006லேயே சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் ஆ. இரா. வேங்கடாசலபதி பணியில் சேர்கிறார். அவர் பணியில் சேர்ந்தது கொஞ்ச நாட்கள் கழித்துத்தான் எனக்குத் தெரியும். தெரிந்த சமயம் அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரைப் பாராட்டினேன். அப்போது அவர் என்னிடம் உங்கள் ``நகரம் கிராமம்'' பற்றிய ஒர்க்கிங் பேப்பரைப் பார்த்தேன். அதை நீங்கள் தமிழில் எழுதவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்போது நான் மறுத்துவிட்டேன். அதற்கு முக்கியக் காரணம் எனக்குத் தமிழ் தட்டச்சு தெரியாது என்பதுதான். ஆனாலும் அவர் விடவில்லை. என்னை எழுதத் தூண்டினார். கணினி சார்ந்த ஒரு தொழில் செய்துவரும் என் மகனிடம் தமிழ் தட்டச்சு பற்றிக் கேட்டேன். ``ஒரு மென்பொருள் உள்ளது. ஆங்கிலத்தில் நீங்கள் தட்டச்சு செய்தால் அது தமிழில் திரையில் வரும். அதை உங்களது கணினியில் தருகிறேன். அதைப் பயன்படுத்துங்கள்'' எனச் சொல்லி அவர் செய்தும் கொடுத்தார். பிறகுதான் எழுதத் தொடங்கினேன். அதுவும் ஏற்கெனவே உள்ளதை மொழிபெயர்ப்புச் செய்வதைவிடப் புதிதாக எழுதுவது எனக்கு எளிதாக இருந்தது. அதை வேங்கடாசலபதியிடம் சொன்னேன். அவர் மேலும் சில ஆலோசனைகள் சொன்னார். குறிப்பாக, கிராமத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும் சேர்த்தால் படிப்பதற்கு நன்றாக இருக்கும் என்றார். அதனால் ஆங்கில மூலத்தில் இல்லாத சில பகுதிகளைத் தமிழில் எழுதும்போது சேர்த்தேன்.

தீராநதி : நகரம், கிராமம் பற்றிய நிகழ்வுகள் எல்லாமே மிக இயல்பாக வந்துள்ளதே உங்கள் நூலில்?

எஸ். நீலகண்டன் : இந்தப் புத்தகத்தின் அடிப்படையே ``நகரம் வளர்கிறது. கிராமம் தேய்கிறது'' என்பதை ஓரளவிற்குக் காட்டுகிற நூலாகத்தான் இதைப் பார்த்தேன். நகரம் வளர்வதற்கு அது அங்காடி சார்ந்து இருப்பது காரணமாகிறது. கிராமம் தேய்வதற்கு கிராம மரபிலிருந்து விடுபட்டும் விடுபடாமலும் அல்லாடிக் கொண்டிருப்பது காரணம். முழுக்க முழுக்க மரபு சார்ந்திருந்தாலோ, முழுக்க முழுக்க அங்காடி சார்ந்திருந்தாலோ கிராமத்தின் நிலை இப்போது உள்ளது போன்ற நிலை இருக்காது. அங்காடியின் தனித்துவம், அதன் பரப்பு, அதன் ஆளுமை, விரிவு, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை. அங்காடி என்றாலே மாற்றம்தான். ஸம் பீட்டர் என்ற பேராசிரியர் இதை ‘Creative Destruction’ என்கிறார். ஒரு அழிவு, அது ஆக்கபூர்வமான அழிவு. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் டிரான்சிஸ்டர் ரேடியோ  வைத்திருந்தார்கள். இப்போது செல்போனில் பண்பலை (FM) வானொலியைக் கேட்கிறார்கள். இதில் அந்த டிரான்சிஸ்டரின் பயன்பாடு இப்போதும் இருக்கவே செய்கிறது. ஆனால் அது வீட்டில் காணவில்லை. செல்போனில் வந்த FM ஆக்கம், ஆக்கபூர்வமான அழிவாகத்தான் பார்க்கவேண்டும். இந்த மாதிரியான அழிவும், ஆக்கமும் அங்காடியில் மிக மிக இயல்பாக நடைபெறும். அது லாபநோக்கத்தோடு நடைபெறுகிற ஒரு செயல்பாடு ஆகும். இதை நகரம் ஏற்றுக்கொள்கிறது. அதற்குக் காரணம், நகரம் ஒரு நெருக்கமான இடம். தனி நபருடைய முகம் நகரத்தில் தனியாகத் தெரியாது. நான் முகம் தெரியாதவன் என்று சொல்வது நகரத்தில் உள்ள எல்லோருக்கும் பொருந்தக்கூடியது. ஆனால், கிராமத்தின் இதயமே முகம் தெரிவதுதான். ``இன்னார்'' வந்துள்ளார்கள் என்பதில் உள்ள ``இன்னாரு''க்குக் கிராமத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நகரத்தில் நம் வீட்டிற்கு நூறுபேர் விருந்தினர் வந்தால்கூட பக்கத்து வீட்டுக்காரர் அதைப்பற்றிக் கவனம் எடுக்கமாட்டார் என்பது இயல்பான நிகழ்வு. ஆனால் கிராமத்தில் அப்படி இருக்காது. அதற்குக் காரணம் மரபு. மரபு என்பது வழிவழியாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்வரைதான் இருக்கும். இதிலிருந்து மாறுபட்டு வெவ்வேறு வழிகளைத் தேடுவதுதான் அங்காடியின் குணம். எந்த வழி அதிக லாபத்தைத் தருகிறதோ, அந்த வழியை அடைவதுதான் அங்காடியின் ஒரே குறிக்கோள். இப்படி நான் சொல்வதால் நகரத்தையும் கிராமத்தையும் வேலி போட்டுப் பிரிப்பதாக நினைக்கக்கூடாது. பொதுவாக இந்த வேறுபாடுகளைப் பார்க்கமுடிகிறது. அந்த மாதிரி பாரம்பரியமிக்க ஒரு கிராமம் பின்னடைவதையும் பாரம்பரிய வேலிகளைத் தாண்டியவர்கள் முன்னேறியதையும் என் வாழ்க்கையில் கண்கூடாகப் பார்த்ததனால் எனதுநூலில் தெளிவுபடுத்துகின்ற முறையில்தான் இதை எழுதினேன்.

தீராநதி : பாரம்பரியம் என்பதும் மரபு என்பதும் வளர்ச்சிக்குப் பயன்படாது என்கிறீர்களா?

எஸ். நீலகண்டன் : பாரம்பரியம் என்பதற்குப் பலவிதமான உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஒரு செயல் ஏதோ ஒரு சரித்திர விபத்தாக நடக்கலாம். அந்தச் செயல் நடந்த பின்பு அதை நியாயப்படுத்துவதற்கான காரணங்களைப் பின்னால் கற்பித்துவிடுகிறார்கள். உதாரணத்திற்கு தீண்டத்தகாதவர்களுக்கு மோர் ஊற்றக்கூடாது. ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள், இழிந்தவர்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு சமுதாயம் படிநிலைகளை வைத்தது. இது உலகம் முழுவதும்நடந்ததுதான். சிலபேர் மேலே சிலபேர் கீழே என்பது உலகத்தில் எல்லா இடத்திலும் உள்ளதுதான். ஆனால், நம்மிடத்தில் ஒரு புதிய காரணம் ஒன்றையும் சொல்லிவிடுவார்கள். தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு மோர் கொடுத்தால் உங்கள் மாடு பால் கட்டும். பால் வற்றிவிடும். இப்படியான நம்பிக்கைகள் இப்போதும் கிராமத்தில் உண்டு. இந்தப் பழக்கம் எங்கள் ஊரில் இல்லையே தவிர, இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரமே உள்ள அப்பிபாளையம் கிராமத்தில் இந்த நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கை அவர்களது மனதில் ஊற்றி வளர்க்கப்பட்டு பரம்பரையாக வருவது. இந்த நம்பிக்கை நூற்றில் ஒன்று நடந்தும் இருக்கலாம். ஒரே ஒரு நடந்த விஷயத்தை வைத்தே, அதை நிரூபணம் ஆக்கிக் காட்டும் அளவிற்குப் போய்விடுவார்கள். இதுமாதிரி உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ காரணங்கள் கற்பிக்கப்பட்ட பிறகு பரம்பரை பரம்பரையாக வரும் நம்பிக்கையை நாம் விடுவதில்லை. பாரம்பரிய நம்பிக்கைகளில் எத்தனையோ நன்மைகளும் இருந்தது. நான் பிறந்தபோது பாரம்பரியமான ஒரு செட்டிபாளையம் இருந்தது. அதனால் கிடைத்த நன்மைகள் காலப்போக்கில் அழிந்துபோய்விட்டது. இப்போது அது இல்லை என்றாலும் அவற்றை வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருக்கும் மக்கள், மேல்தட்டு மக்கள் அல்ல. என்னுடைய தோட்டத்திலேயே தாழ்த்தப்பட்ட ஒருவர் வேலை செய்கிறார். மேல் சாதிக்காரரும் வேலை செய்கிறார் என்றால் அந்த மேல் சாதிக்காரர் தாழ்த்தப்பட்ட இன்னொருவரை ``டேய் இங்கே வாடா'' என்றுதான் கூப்பிடுவார். இவ்வளவிற்கும் இரண்டு பேரும் ஒரே வேலையைத்தான் செய்வார்கள். இரண்டு பேருமே அன்றாடங்காய்ச்சிதான். சாதியினால் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த ஒரு பழக்கம் சொத்துரிமையாக மாறிவிடுகிறது. ``எங்கப்பா சொத்தை நான் அனுபவிப்பது போல, எங்கப்பா சாதி உயர்வையும் அனுபவிக்கிறேன்'' என்பதை அடித்தட்டு மக்களின் மனதில் இதை விதைத்து நன்றாக வேரூன்றி மரமாக வளர்ந்துவிட்டது, நான் பார்க்கிற இடங்களில் சாதித் தகராறுகள் பெருமளவிற்குப் படித்த மேல்தட்டு மக்களால் நடத்தப்படுவதில்லை. அடித்தளத்தில் வாழும் இரண்டு உழைக்கும் வர்க்கங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டம் போல்தான் சாதித்தகராறுகள் வருகின்றன. இதைத் தூண்டிவிடுபவர்கள் அரசியல் மற்றும் பல காரணங்களுக்காகச் செய்கிறார்கள். இதை எங்கள் ஊரில் கண்கூடாகப் பார்த்தேன். இதைத்தான் என்னுடைய நூலிலும் விவரித்து எழுதியுள்ளேன்.

அத்தோடு இன்னொன்றையும் பார்க்கிறேன். கால மாற்றத்தினால் உழைப்பாளர்களின் தகுதிகள் மாறும்போது கிராமத்தினுடைய அடிப்படைக் கட்டணப்படி உடைந்துபோகிறது. உதாரணத்திற்கு அந்தக் காலத்தில் மாட்டை ஏற்றத்திற்குப் பழக்குபவர், ஏரோட்டிப் பழக்குபவர், பரம்படிக்கப் பழக்குபவர், மாட்டை நன்றாக ஓட்டி உழத் தெரிந்தவர், பார வண்டியை ஓட்ட மாட்டைத் தயார் செய்பவர், சுழி சுத்தம் பார்த்தவர்கள், மாட்டின் சுழியை வைத்து அதிர்ஷ்டம் அமையும் என்று பெரிய நம்பிக்கை உண்டு, இதையெல்லாம் தெரிந்தவர்களுக்கு சமூகத்தில் பெரும் மதிப்பு இருந்தது. பண்ணையம் பார்த்தவர்களின் திறமை அறிந்து மதித்தார்கள். எங்கள் ஊரைச் சேர்ந்த சௌந்தரா கைலாசம் அவர்களின் விவசாயத்தைக் கவனித்துக்கொண்ட மாதான என்ற செருப்புத் தைக்கும் இனத்தைச் சேர்ந்தவர் இருந்தார். அவர் இனத்தில் தாழ்ந்தவராகக் கருதப்பட்டாலும் அவருக்கு இருந்த கால்நடைகள் பற்றிய அறிவு அற்புதமானது. அதனால் சமூகத்தில் அவருக்குப் பெரிய கௌரவம் இருந்தது. அறிவு சார்ந்த கௌரவம். எப்படியான மாடாக இருந்தாலும் அடக்கிவிடுவார். இன்றைக்கு மாடு பழக்கத் தெரிந்தவர்களே இல்லாமல் போய்விட்டார்கள். ஏனென்றால், இன்றைய நிலையில் வண்டி மாட்டைத் தவிர வேறு பயன்களுக்கு மாடுகள் பயன்படுத்தப்படுவதில்லை. இப்போது டிராக்டர் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு மரியாதை அதிகம். `மொபெட்' வண்டியை ரிப்பேர் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு மதிப்புக் கூடுகிறது. நான் பிறக்கும்போது எங்கள் ஊரில் மோட்டார் சைக்கிள் கிடையாது. 1978, 1979 வாக்கில்தான் முதல் மோட்டார் சைக்கிள் வருகிறது. ஆனால், அன்றைக்கு  மோட்டார் சைக்கிள் ரிப்பேர் என்றால் கரூருக்குத்தான் நாங்கள் போகவேண்டும். கரூரில் இந்த மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். கரூரே மாறிக்கொண்டிருக்கும் ஒரு நகரம்தான். நியூயார்க்கில் ஒரு பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் கரூரில் வெளிநாட்டுப் பொருட்களை விற்கும் இடத்திற்கும் வந்துவிடுகிறது. அதுவும் அமெரிக்காவில் வாங்கும் விலையைவிடக் குறைவான விலைக்கே இங்கே வாங்கமுடியும். சிங்கப்பூரில் குறைந்த விலைக்கு வாங்கி வருவதால் குறைவான விலைக்கு இங்கு கிடைக்கும். அந்த அளவிற்கு நகரத்தின் மாறுதல் வேகமாக இருக்கிறது. கிராமத்தில் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கிறது. ஒரு பெண் சுடிதார் அணிந்துகொண்டு வெளியில் போய்வருவதில் எதிர்ப்பு ஏதும் வருவதில்லை. 1994இல் எங்கள் மருமகள் சுடிதார் போட்டு வந்தபோது வயதான ஒரு மூதாட்டி என்னிடம் ``கல்யாணம் ஆன பிறகு புடவை கட்டிட்டு வரச்சொல்லுப்பா'' என்றார். அது அவர்கள் ஆதங்கம்.

தீராநதி : விவசாய மாற்றம் என்பது மிகுந்த பயத்தை உருவாக்கும் விதமாக உள்ளது. ஏனென்றால், வருங்காலத்தில் விவசாயம் என்று ஒன்று இருக்குமா என்று நினைக்கத் தோன்றுகிறதே?

எஸ். நீலகண்டன் : விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மிக முக்கியமானது. நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான். நகரத்தில் வணிக மாறுதல் ஏற்பட்டது. கிராமத்தில் விவசாய மாற்றம் ஏற்பட்டது. இந்த விவசாய மாற்றம் என்பது பலவிதத்தில் கிராமத்தைப் பாதித்துள்ளது. கால்நடையிலிருந்து இயந்திர சக்திக்கு மாறியது. நீண்டகால நெல் பயிர் குறுகிய காலத்திற்கு மாறியது. ஆத்தூர் கிச்சடி சம்பா, சீரகச் சம்பா போன்ற சுவையான அரிசிகள் அதிக நாட்கள் கொண்டவை, விளைவதற்கு நூற்றியெண்பது நாட்கள் வரை ஆகும். குறுகிய காலப் பயிர்களான ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20. இவை நூற்றியிருபது, நூற்றிமுப்பது நாட்கள் வரையே ஆகக்கூடியது. ஐம்பது நாட்கள் குறைந்துபோகிறது. ஒரு போகம் விளைவிப்பதற்குப் பதிலாக இரண்டு போகம் விளைய வைத்தோம். ஒரு கிலோ மீட்டர் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் பதித்து ஆற்றிலிருந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும் பழக்கம் வந்தது. இரண்டு போகம் விளைவிப்பதால், மாட்டை வைத்து உழவு வேலைகள் செய்வதில் சிக்கல் வந்தது. மிகக் குறைவான இடைவெளியே முதல்போகத்திற்கும் இரண்டாம் போகத்திற்கும் இருந்தது. அதனால் ஒரே நாளில் டிராக்டர் மூலமாக நிலத்தைத் தயார் செய்துவிடுவார்கள். மாடு, மனித உழைப்பை மட்டும் நம்பி செய்தால் இதற்கு அதிக காலம் பிடிக்கும். இப்படியான நவீன மாற்றம் விவசாயத்தில் ஏற்பட்டபோது தஞ்சைப் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இதற்குத் தடையாக இருந்தன. டிராக்டர் வரக்கூடாது என்றார்கள்.  வெளியூர் ஆட்களைக் கூப்பிடக்கூடாது என்றார்கள். காண்ட்ராக்டர் சிஸ்டம் கூடாது என்றார்கள். அவர்கள் நோக்கம் கூலி மட்டம் குறைந்துவிடக்கூடாது என்பதுதான். அவர்கள் மாற்றத்தை எதிர்த்ததாகச் சொல்ல வரவில்லை. அப்படி இருந்தும் கம்யூனிஸ்ட் இயக்கம் விவசாய மாற்றத்தைத் தடுக்க முயன்றும் தடுக்க முடியவில்லை. இப்போது எல்லாப் பகுதியிலும் விவசாய இயந்திரங்கள் வந்துவிட்டன. உழுவதிலிருந்து கதிர் அறுப்பதுவரை. ஆனால் இப்படிப் பல மாற்றங்கள் வந்தும் எந்தவித வளர்ச்சி நிலையையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தாததுதான் வருத்தமானது. அரசு விவசாயத்திற்குப் பல மானியங்கள் என்று பல உதவிகள் செய்வதும் உண்மையான விவசாயிக்குப் போய்ச் சேரவில்லை. இப்போது விவசாயமே நசிக்க ஆரம்பித்துவிட்டது. அதை என் நூலில் ஓரளவிற்குச் சுட்டிக்காட்டி உள்ளேன். ஒரு நகரம் வளரும்போது கிராமம் தேய்வதற்கும் இது காரணமாகிவிடுகிறது.

தீராநதி : இன்றைய சூழலில் இந்தியா முழுமைக்குமே விவசாயிகளின் தற்கொலைகள் நடக்கும் காலமாக உள்ளது. விவசாய நிலங்கள் வீடுகளாக மாறிவருகின்றனவே? நகரம் கிராமம் நிலவியல் சார்ந்து ஒன்றாகிறதும் நடக்கிறதே?

எஸ். நீலகண்டன் : விவசாயம் அழிந்துகொண்டிருக்கும் ஒரு தொழில். உலகம் முழுவதும் - எங்கு எடுத்துக்கொண்டாலும் விவசாயம் அழிந்துகொண்டுதான் வருகிறது. ஆனால், விவசாயம் தேயத்தேய விவசாய உற்பத்தி அதிகரித்து வருகிறது. உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் 1860ஆம் ஆண்டில் அமெரிக்க மக்கள் தொகையில் 90 சதவீதம் விவசாயத்தைச் சார்ந்து இருந்தார்கள். அப்போது மக்கள் தொகை குறைவுதான். இப்போது அமெரிக்க மக்கள் தொகை 30 கோடி என்றால் அப்போது ஐந்தோ அல்லது ஆறு கோடியோ இருந்திருக்கலாம். 1910ஆம் ஆண்டில் விவசாயம் சார்ந்தவர்கள் 50 சதவீதமாகக் குறைந்துவிட்டார்கள். மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு காரணம். 1950ஆம் ஆண்டில் 4 சதவீதமாகக் குறைகிறது. 2009 இன்றைய நிலையில் பார்த்தால் அமெரிக்க மக்கள் தொகையில் அரை சதவீதம்தான் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அங்கு விவசாய நிலமாக இருந்த பல பகுதிகள் கேளிக்கை விடுதிகளாகவும் தங்குமிடங்களாகவும் மாறிவிட்டன. நமக்கு அறிமுகமான பெயரான டிஸ்ணிலாண்டின் நிலப்பரப்பு 30 ஆயிரம் ஏக்கர் ஆகும். கிட்டத்தட்ட பத்து சதுர மைல் பரப்பாகும். அவ்வளவு பகுதிகள் விவசாயத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமானது என்னவென்றால் அமெரிக்காவின் அரை சதவிகித விவசாயிகள், தங்களுக்கான உணவையும் அமெரிக்காவின் 99லு சதவீத மக்களுக்கான உணவையும் உற்பத்தி செய்து உலக மக்களின் பல நாடுகளுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறார்கள். மேலும் அமெரிக்காவின் கச்சாப் பொருட்களையும் உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் நம் நாட்டில் நடந்ததே மேற்கு வங்கத்தில். டாடா மோட்டாருக்கு நிலம் கொடுத்ததில் வந்த சிக்கல். அது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்ததாக மாற்றிவிட்டார்கள். இது அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற மாயை. எல்லா ஊர்களிலும் நகரங்கள் விரிவடைகின்றன. ஆனால் விவசாய நிலங்கள் குறைந்தபின்பு விவசாய உற்பத்தி குறைவதற்குப் பதிலாகக் கூடியுள்ளதே! 1950-ல் நம் நாட்டின் உணவு உற்பத்தியை இன்றைய நிலையில் ஒப்பிட்டுப் பாருங்கள். அன்று 56 மில்லியன் டன். இன்றைக்கு 120 மில்லியன் டன். இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து உள்ளது. விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம். நமது அரசின் தவறான அணுகுமுறைதான். விவசாயம் அழியும் தொழில் என்ற முடிவுக்கு வரும்போது, விவசாயிகளின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேறுவிதமான வாய்ப்புக்களை - பொருளாதார ரீதியாக உருவாக்கித் தர வேண்டும். விவசாயிகளைக் காலங்காலமாக விவசாயிகளாகவே இருக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. ஏனென்றால், விவசாயிகளைப் போல விழிப்புணர்வு இல்லாதவர்கள் அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கமாட்டார்கள். சரியான ஓட்டு வங்கி விவசாயிகள்தான். விவசாயத்திற்கு மானியம் கொடுப்பதாகச் சொல்வார்கள். அதில் 70 சதவீதம் வரை வேறு எங்கோ போய்விடும். கிராமத்தில் கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடன் 10,000 ரூபாய் வாங்கினால் அதில் 5,000 ரூபாய்தான் கையில் கிடைக்கும். மீதி 5,000 ரூபாய்க்கு நமக்குத் தேவை இல்லாத உரத்தைத் தருவார்கள். கூட்டுறவு வங்கிச் செயலாளர் வெளியில் போனவுடன், பணியாளர் ஒருவர் வருவார். 5,000 ரூபாய் உரத்தை 4,500 ரூபாய்க்கு விற்றுத் தருவதாகச் சொல்வார். விவசாயிகள் தற்கொலை என்பது விவசாயத்தினால் வந்த இழப்பினால் அல்ல, அரசாங்கத்தின் செயல்பாடுகளால் வந்த தவறாகும். நெல் விளைச்சல் நன்றாக இருக்கும். ஆனால், அதை விற்கும்போது அடிமாட்டு விலைக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். விவசாயம் சாராத பலருக்குத்தான் நன்மை கிடைக்கும். கிடைக்கிறது.

தீராநதி : பொதுவாக வெளிநாட்டு விதைகள் வந்ததால்தான் விவசாயிகள் தற்கொலைகள் நடப்பதாகக் கூறுகிறார்களே?

எஸ். நீலகண்டன் : ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு கருத்தியல் உள்ளது. வெளிநாட்டுக்காரன் செய்வதெல்லாம் தவறு என்ற எண்ணம் நமக்கு உள்ளது. வெளிநாட்டு விதையில் நன்மையும் இருக்கலாம். தீமையும் இருக்கலாம். ஃபோரிஸ் பல்லாக் என்பவர் ஐ.ஆர்.8 என்ற நெல்விதையை நமக்குத் தரவில்லை என்றால், இந்தியாவின் உணவுப் பஞ்சம் 1970இல் தீர்ந்திருக்காது. வீரிய வித்துக்களை இந்தியாவில் பயன்படுத்திதான் உணவு உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. மாண்சான்டோ போன்றவர்கள் ஆராய்ச்சி செய்து சில வீரிய வித்துக்களைக் கொண்டு வருகிறார்கள். இதன் நன்மை தீமை பற்றிப் பரிசோதனைக்குப் பின்னால்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் எனக்கு எந்த ஐயப்பாடும்  கிடையாது. ஆனால், நாம் விரும்பியோ விரும்பாமலோ மாண்சான்டோ விதைகள் உலகத்தின் பல இடங்களில் விற்கப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் பயன்படுத்தும் அரிசியில் 40 சதவீதம் இப்படியான அரிசிகள்தான் விற்கப்படுகின்றன. இதனால் நிறையப் பேருக்குப் புற்றுநோய்  வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனாலும் மாற்றத்தை நாம் ஏதும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

தீராநதி : இதில் பசுமைப்புரட்சியின் தவறையும் பலர் சொல்லி உள்ளார்கள். இதன் தந்தையாகக் கூறப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் தான் செய்தது தவறானது என்று கூடப் பின்னாட்களில் ஒத்துக் கொண்டாராமே?

எஸ். நீலகண்டன் : பசுமைப்புரட்சி மூலம் விவசாயிகளுக்குப் பழைய வித்துக்களை மாற்றிப் புதிய வித்துக்களைக் கொடுத்தார்கள். இதன்மூலம் எங்கள் ஊரான செட்டிபாளையம் வளர்ந்தது. ஆனால் அந்த மாற்றத்தின் தொடர்ச்சியை நாங்கள் செய்யவில்லை. அது பசுமைப்புரட்சியின் தோல்வி அல்ல. அதை நிர்வகித்தவர்கள், அரசு, விவசாயிகள் ஆகிய மூன்று பேரின் தவறாகும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் எதற்கு? இலவச மின்சாரம் கொடுத்ததின் பெருங்கொடுமை என்னவென்றால், சகட்டு மேனிக்கு ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டியதுதான். நிலத்தடி நீரே காணாமல் போய்விட்டது. ஒரு மின் மோட்டாரின் விலை ஐம்பது ஆயிரம் ரூபாய். ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 கட்டச் சொல்லி இருந்தால் இவ்வளவு ஆழ் குழாய் கிணறு தோண்டப்பட்டிருக்குமா? தண்ணீரின் மதிப்பை அப்போது நாம் உணர்ந்திருப்போம். இன்றைக்குத் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் சர்க்கரை ஆலைகள் உள்ளன. அதற்குத் தேவையான கரும்பை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 1 வருடத்திற்கு அதிகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீரின் தேவை அதிகரிக்கிறது. இலவச மின்சாரம் கொடுத்ததால்தான் கரும்பு உற்பத்தி பெருமளவில் அதிகரித்ததற்குக் காரணம். தவறான பயிரிடல்கள் விவசாயிகளை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. வாழையும், நெல்லும், மஞ்சளும்தான் நாங்கள் இங்கு அதிகம் பயிரிட்டோம். மேலும் எண்ணெய் வித்துக்கள், சோளம், கம்பு 1950இல் எங்கள் ஊரில் 40 ஏக்கர்தான் நஞ்சை நிலத்தின் பரப்பு. இப்போது 400 ஏக்கர் உள்ளது. அதில் 200 ஏக்கர் சட்டபூர்வமாக அனுமதி பெறாமல் செய்யப்படும் பாசனம். இது எதனால் வருகிறது? எல்லாம் இலவச மின்சாரத்தினால்தான். இன்றைக்கு இலவச மின்சாரத்தை அரசாங்கம் நிறுத்தினால் ஒரு கிராமத்தில் 100 பேர் வரை தற்கொலை செய்துவிடுவார்கள். இப்போது இலவச மின்சாரம் இல்லாவிட்டால் விவசாயி பிழைக்க முடியாத இக்கட்டானநிலை. மாட்டிக் கொண்டோம். தப்பிக்க முடியாது. மாண்சான்டோ விதை மூலம் அதிக உற்பத்தி, அதிக லாபம் கிடைத்தால் விவசாயி திருட்டுத் தனமாகவாவது அதைப் பயிரிடவே செய்வான். அதைத் தடுக்க முடியாது. தாய்லாந்தில் அதிகம் பயிரிடப்படும் நெல் புதிய வகை மரபணு விதைகளைக் கொண்டதாம். கோழி முட்டையை எடுத்துக் கொள்வோம். ஒரு முட்டை வேண்டும் என்றால் ஒரு கோழி, ஒரு சேவல் வேண்டும் அதுதான் நியதி. சேவல் இல்லாமல் வருஷத்திற்கு முந்நூறு முட்டை போட ஒருவன் கண்டுபிடிக்கிறான். இப்போது நாமக்கல் மாவட்டம் முழுக்க அந்த முட்டைதான். அதை இப்போது சாப்பிடுகிறோமா இல்லையா. அந்த முட்டை புதிதாக வந்த சமயத்தில் விவாதம் வந்தது. இயற்கைக்கு மாறுபட்ட முட்டையைச் சாப்பிட்டால் உடம்புக்குக் கெடுதல் என்று. இதில் உண்மையும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். நீண்ட காலப் பரிசோதனையில் இப்போதுவரை எந்தக் கெடுதலும் வரவில்லை. மாண்சான்டோ விதையை ஏற்றுக் கொள்ளச் சொல்லச் சொல்லவில்லை. ஆனால் இப்போதைய எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இதைக் கட்டுப்பாடான முறையில் பல்கலைக்கழகங்கள் பரிசோதனை செய்து குறைந்தது ஐந்து ஆண்டுகள். அதில் வெற்றி பெற்றால்தான் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்.

தீராநதி : உலகில் பொருளாதார ரீதியாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மாற்றங்களைக் கவனித்து வரும் நீங்கள் இன்றைய இந்திய நிலைமையைப் பற்றிச் சொல்லுங்கள்.

எஸ். நீலகண்டன் : நான் இளவயதில் கற்பனை செய்த பொருளாதாரம் சோவியத் ருஷ்யாவை அடிப்படையாகக் கொண்டது. நான் படிக்கிற காலத்தில் திட்டமிட்ட பொருளாதாரத்தால் வேகமான விஞ்ஞான முன்னேற்றம். கல்வி முன்னேற்றம், விளையாட்டு முன்னேற்றம், நுகர்வு முன்னேற்றம் எல்லாவற்றையும் பெற முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. பின்னாட்களில் இது தவறானது என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது இதைத் தப்பிதம் என நினைக்கவில்லை. அதே சமயம் ஜவஹர்லால் நேருவின் மூலம் திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலம் அடிப்படைக் கட்டமைப்புகள் அனைத்தும் இந்தியாவிற்கு வந்தன. சாலைகள் அமைத்தல், அணைகள் கட்டுதல், மின்சாரம் தயாரித்தல், பணிமனைகள் ஏற்படுத்துதல் மற்றும் அடிப்படையான மற்ற தொழில்களுக்குத் தேவையான தாய்ப் பொருட்கள் (இரும்பு அடிப்படையான ஒரு பொருள். அதைக் கொண்டு பல்வேறு பொருட்களை உருவாக்க முடியும்) உற்பத்தி இவை எல்லாம் நேரு காலத்தில் நடந்தது. ஆனால், 70களுக்குப் பிறகு நேருவின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையை கைவிட்டிருக்க வேண்டும் என்று பலரும் சொல்லி உள்ளார்கள். 1959லேயே ராஜாஜி போன்றவர்கள் சொன்ன கருத்துத்தான் இது. 1970க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சுதந்திரமான பொருளாதாரத்திற்கு மாறி இருக்க வேண்டும் என்று இப்போது நான் கருதுகிறேன். 1980 வரை திட்டமிட்ட பொருளாதாரம் மிக இன்றியமையாதது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சம் அதன்மீது சந்தேகம் வரத் தொடங்கியது. சோவியத் யூனியன் விழுந்த பிறகுதான் திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலம் எத்தனை தவறுகள் நடக்க முடியும், கொடுமைகள் நடக்க முடியும் என்பதையெல்லாம் அறிந்து மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். சோவியத் யூனியன்தான் நம் இலக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சம் அதன்மீது சந்தேகம் வரத் தொடங்கியது. சோவியத் யூனியன் விழுந்த பிறகுதான் திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலம் எத்தனை தவறுகள் நடக்க முடியும், கொடுமைகள் நடக்க முடியும் என்பதையெல்லாம் அறிந்து மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானேன். சோவியத் யூனியன்தான் நம் இலக்கு என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்க முடியும். இது சுதந்திரமான முதலாளித்துவத்தில் இது நடக்காது. முதலாளித்துவம் மூலம் மகா கொடுமைகள் உண்டு. முதலாளி தொழிலாளியைக் கேவலமாக நடத்துவான். ஆனால், சுத்தமாக ஒரு தனிமனிதனை அடக்கி ஆளும் சமுதாயம் கம்யூனிஸ சமுதாயம் தான். 1959லிருந்து 1961 வரை குறைந்தது 1.5 கோடி, அதிகபட்சம் 3.5 கோடி மக்கள் மாசேதுங்கின் சைனாவில் பஞ்சத்தால் செத்து மடிந்த கொடூரம் நிகழ்ந்தது. அதை அவர் வெளியுலகத்திற்கே தெரியாமல் மறைத்தார். பத்திரிகை சுதந்திரமிருக்கிற ஒரு ஜனநாயக ஆட்சியில் இது சாத்தியமில்லை.

தீராநதி : அமெரிக்காவில் என்னவிதமான ஆய்வுக்காகச் சென்றீர்கள்?

எஸ். நீலகண்டன் : என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரை சொத்துரிமை பற்றியது. `இந்திய அரசியல் அமைப்பும் சொத்துரிமையும் பொருளியல் மாறுதலும்' அதன் தலைப்பு. சொத்துரிமை இருந்தால் யாருக்குச் சொத்து உள்ளதோ அவருக்குத் தூண்டுதலாக அமைகிறது. ஆற்று மணலை கிராமத்தின் சொத்தாக அறிவித்திருந்தால் ஊர் மக்கள் அதை யாரும் அள்ளிச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். சொத்துரிமையில் பல நன்மைகள் உள்ளது. பல தீமைகள் உள்ளது. இது பற்றிய ஆய்வுகளைச் செய்ய அமெரிக்கா சென்றது. இப்படியான ஆய்வுகளை மேற்கொண்டவர்களைத் தேடிச் சென்று ஆய்வு செய்ய ஃபுல்பிரைட் என்று அமெரிக்க அரசு கொடுத்த ஒரு உபகாரச்சம்பளம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் டக்ளஸ் நார்த் என்பவரிடம் ஆய்வு செய்யச் சென்றேன். புது அமைப்புப் பொருளாதாரம் என்பது ஒரு பொருளாதார அங்காடியில் விலைகளின் ஆட்சி நடக்கிறது. ஆனால், நடைமுறையில் அமைப்புகளுடைய மாற்றங்கள் இருக்கிறது. ஜாதி என்பது ஒரு அமைப்பு. அமெரிக்காவில் உள்ள ஒரு பொருளியல் மாறுதலை அப்படியே இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது. ஆனால் நம்முடைய சமுதாய அமைப்பு அதைவிட வித்தியாசப்பட்டிருக்கும். அமைப்புகள் பொருளாதார நடவடிக்கைகளை மிகவும் பாதிக்கின்றன. சொத்துரிமைக்கும் அமைப்புக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்தேன்.

தீராநதி : அமெரிக்கா சென்றதன் மூலம் எப்படி உங்களை மேம்படுத்திக் கொண்டீர்கள்?

எஸ். நீலகண்டன் : முதலில் அமெரிக்கர்களின் ஈடுபாட்டைச் சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியர் வகுப்புக்கு வரவில்லையென்றால் மாணவர் ஆசிரியரைக் கேள்வி கேட்பார். `ஏன் வரவில்லை' என்று. தமிழ்நாட்டில் நான் பணிபுரிந்த கல்லூரிகளில் மாணவர்களின் மனநிலை இதற்கு நேர்மாறானது. டக்ளஸ் நார்த்        நான் இந்தியா வந்தபிறகு நோபல் பரிசெல்லாம் பெற்றவர். நான் அங்கு படிக்கும்போதே மிகப் புகழ்பெற்ற பேராசிரியர் அவர். அவரது அனுமதியோடு அவரது வகுப்பில் ஆண்டு முழுவதும் சென்று கொண்டிருந்தேன். அங்கு ஒரு முறை நடந்த சம்பவத்தைச் சொன்னால் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது அவர் ஒருமுறை ஸ்பெயின் நாட்டிக்குச் சென்றிருந்தார். ஒரு வியாழக்கிழமை காலை வரவேண்டியது. பதினொரு மணிக்கு அவருக்கு வகுப்பு. பத்து மணிக்கு அவரது தனி உதவியாளர் நோட்டீஸ் போர்டில் எழுதுகிறார், ``விமானம் தாமதமாக வருவதால் பேராசிரியர் இன்று வகுப்பெடுக்க மாட்டார்'' ``நேற்றே சொல்லியிருந்தால் நாங்கள் வேறு வகுப்புக்குச் சென்றிருப்போம்'' விமானம் தாமதமாக வருவது தவிர்க்க முடியாத ஒரு காரணம். அதற்கே மாணவர்கள் வருத்தப்பட்டார்கள். அதற்கு என்ன காரணம் என்றால், மாணவர்கள் ஒரு செமஸ்டருக்கு 10 லட்ச ரூபாய் பணம் கட்டிப் படிக்கிறார்கள். ஒரு பாட வகுப்பில் ஒரு மணி நேரம் படிக்க ரூ.15,000 செலவு ஆகிறது. அந்தச் செலவுக்குத் தகுந்த படிப்பைப் பெற வேண்டும் என்பதில் மாணவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அங்குதான் சொத்துரிமை வருகிறது. நாம் இங்கு இலவசமாகக் கல்வி கொடுப்பதால் அதை உதாசீனப்படுத்தும் போக்கைக் காண முடிகிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படும் சலுகைதான் நமக்குக் கிடைக்கும் இலவசக் கல்வி. அதை நம் மாணவர்கள் உணரும்படி செய்ய வேண்டும். ஆசிரியர் தொழிலுக்கு வருபவர்கள் மனதளவில் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே வரவேண்டும். அதை ஒரு வேலையாக நினைப்பவர்கள்தான் பெரும்பாலும் உள்ளார்கள். மாணவனுக்கு உள்ள அதே பொறுப்பு ஆசிரியருக்கும் இருக்க வேண்டும். மால்கம் ஆதிசேஷையா லண்டனில் முனைவர் பட்டம் வாங்கிவிட்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பணியில் சேருகிறார். ஒரு பேராசிரியருக்கு அன்றைய நிலையில் என்ன சம்பளம் கிடைத்திருக்கும்? அவர் நினைத்திருந்தால் அதிகச் சம்பளம் வரும் வேறு வேலைக்குச் சென்றிருக்க முடியும். பிரம்மானந்தா என்பவர் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றுவிட்டு ஆசிரியப் பணிக்கு வந்தவர். அவரால் கண்டிப்பாக மாவட்ட ஆட்சித் தலைவராக ஆகி இருக்க முடியும். இவர்களுக்கெல்லாம் ஆசிரியப் பணி மீது பெரும் அர்ப்பணிப்பு இருந்தது.

தீராநதி : அமெரிக்காவின் கல்விமுறை எப்படி இருக்கும்?

எஸ். நீலகண்டன் : அமெரிக்காவில் ஆசிரியரே மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவரே பாடத்திட்டத்தைத் தயாரிக்கிறார். அவரே கேள்வித்தாள்களையும் தயாரிக்கிறார். அவரே தேர்வும் நடத்துகிறார். அவரே விடைகளைத் திருத்தி தேர்ச்சியை அறிவிக்கிறார். எனவே ஒரு மாணவனுக்கும் ஆசிரியனுக்கும் இருக்கும் தொடர்பு நெருக்கமானது. ஒரு மாணவன், நான் பாடத் திட்டத்தை முழுதும் படித்துவிட்டேன். தேர்வு எழுதத் தயாராக உள்ளேன் என்று சொல்லி ஒரு வாரத்திற்குள் தேர்வு எழுத அனுமதிப்பார். குறிப்பிட்ட நாளில் மட்டும்தான் தேர்வு என்பதெல்லாம் அங்கு கிடையாது. ஒரு பாடத்தைக் குறைவான நாட்களும் ஒரு பாடத்தை அதிகமான நாட்களும் படித்துக் கொள்ள முடியும். ஆனால் இந்தியாவில் மாணவர் சேர்க்கையை ஒரு நிர்வாகம் செய்கிறது. பாடத்திட்டத்தை நடத்துவது ஆசிரியர் குழு. தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிப்பது வேறொரு இடத்தில் இருக்கும். அந்தத் தேர்வை நடத்துவது பல்கலைக்கழகம் சார்ந்த நிர்வாகக் குழு. விடைத்தாள்களைத் திருத்துவது பாடம் நடத்தியதற்கு சம்பந்தமற்ற ஒருவர். பட்டத்தைக் கொடுப்பது பல்கலைக்கழகம். இதில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் தொடர்பு அவ்வளவு நெருக்கமானது அன்று. அதே போல ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கடினமான முறையைக் கையாள்வார்கள். விருப்பம் சார்ந்து அல்ல; திறமை சார்ந்தே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தீராநதி : இலவசக் கல்வி கூடாது என்கிறீர்களா?

எஸ். நீலகண்டன் : ஆரம்பநிலைக் கல்வியும் உயர்நிலைக் கல்வியும் பள்ளி இறுதிவரை இலவசக் கல்வி கொடுப்பது சரி. அதற்குப் பிறகு இலவசக் கல்வி, இலவச உடை, இலவச உணவு. இளைய சமுதாயம் 16 வயது வரை அரசாங்க ஆதரவிலேயே வந்தாலும் அதை ஏற்றுக் கொள்வது எனக்கு ஏற்புடையதே. அதற்குப் பிறகும் இலவசக் கல்வி என்பது எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை. அதற்குப் பிறகு தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

அம்பேத்கரோ, இளையராஜாவோ அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பின்னடைவுகள் இருந்தாலும் அதைத் தாண்டி மேலே வந்தவர்கள். எல்லா சமுதாயங்களிலும் இப்படியான அற்புதமான குழந்தைகள் இருக்கின்றன. அவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். இப்போது நடப்பது என்ன? எல்லோரையும் ஒரு சேரத் தூக்குவதாகச் சொல்லி, எல்லோருக்கும் பயனில்லாமல் போய்விடுகிறது. படிக்க வருகிற மாணவருக்கு மேல்நிலை வகுப்புப் படித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாததால், கல்லூரிப் படிப்புக்கு வருகிறார். பி.ஏ. முடித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் எம்.ஏ. படித்துவிட்டு எம்.ஃபில் செய்கிற ஆராய்ச்சி மாணவர், வழிகாட்டியிடம் கோருகிறார் நான் எதைப்பற்றி ஆராய்ச்சி செய்வது என்று. ஆராய்ச்சி என்றால் என்னவென்றே தெரியாமல், தான் படித்ததில் சந்தேகங்கள் வந்து, அதைப்பற்றி ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு, வழிகாட்டி சொல்கிற ஏதோ ஒரு தலைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற மாணவர்கள் இப்போது பார்க்க முடிகிறது. இந்த நிலைக்கு நம்மைக் கொண்டு வந்திருப்பது இலவசக் கல்வி. மேல்மட்ட இலவசக் கல்வி. நாம் தவறான வழியில் போய்விட்டோம் என்று தோன்றுகிறது. மேல்நிலை வகுப்பு வரை இலவசம் இருந்தால் அது பொதுக்கல்வி. அதற்குப் பிறகு சிறப்புக் கல்வி. சிறப்புத் தேர்வு பெற்றவர்கள் பௌதீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் பௌதீகத்திற்கும், புவியியலில் நாட்டம் இருப்பவர்கள் புவி இயலுக்கும், பொருளாதாரத்தில் நாட்டம் இருப்பவர்கள் பொருளாதாரத்திற்கும் போகவேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக மேல்நிலை வகுப்புப் படித்துவிட்டதாலேயே பட்டம் படிக்க வருகிறேன் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. இது அவ்வளவு சரியானதாகத் தோன்றவில்லை. வருங்காலத்தில் எல்லோரும் படித்தவர்களாகும்போது கண்டிப்பாக 5 சதவீதமோ 10 சதவீதமோ அதில் சிறப்பானவர்கள் வருவார்கள். எல்லோரும் படிக்க ஆரம்பித்தால் 5 சதவீதம் கூட மிகப்பெரிய அளவுதான். எனவே கல்வி அழிந்துவிடும் எனப் பயப்படவில்லை. இதைவிட மேலான நிலையே உருவாகும்.

தீராநதி : உங்கள் ``ஒரு நகரமும் ஒரு கிராமமும்'' நூலில் நகரம் பற்றியது பொருளாதாரத்தை மையப்படுத்தியும் கிராமம் பற்றியது சமூக மாற்றங்களை மையப்படுத்தியும் எழுதியுள்ளீர்கள். எழுதும்போது இப்படியான திட்டத்தோடுதான் எழுதினீர்களா?

எஸ். நீலகண்டன் : இது திட்டமிடப்படாமல் நான் எழுதியிருந்தாலும் அது இயல்பான நிகழ்ச்சிதான். காரணம் என்னவென்றால் நகரத்திற்கு வருவதே பொருளாதார முன்னேற்றத்தை  நோக்கித்தான். ``கெட்டும் பட்டணம் சேர்'' என்பது அந்தக் காலத்துப் பழமொழி. பட்டணத்திற்கு ஏன் போகிறோம்? வாழ்க்கையில், பட்டணம் பொருளாதாரத்தால்தான் வளர்கிறது. பட்டணம் என்று சொன்னாலே ஒருங்கிணைப்பு அதிகமான இடம். அந்த ஒருங்கிணைப்பை அங்காடி செய்கிறது.

கிராமம் என்று சொன்னாலே அது ஒரு தீவு. ஒவ்வொரு கிராமமும் தனக்கென்று ஒரு தனித் தன்மையுடன் உள்ளது. அந்தத் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் அந்தக் கிராமத்திற்கே பெருமை. கரூரைச் சுற்றி எடுத்துக்கொண்டால் 1880லிருந்து 1900 வரைக்கும், இருபது ஆண்டுகள் அல்லது முப்பது ஆண்டுகள் இந்த வட்டாரத்திலேயே காக்காவாடி என்கிற கிராமம்தான், மிகமிகச் சிறப்பான கிராமம். புலமை மிக்கவர்களை வரவேற்று உபசரித்து தமிழ்ச் சுவையைப் பகிர்ந்து கொண்ட கிராமம். ஆனால் இப்போது அந்தக் கிராமமே இல்லை. அந்தக் கிராமம் இருந்த இடத்தில் குட்டிச் சுவர்கள்தான் உள்ளது. ஏன் அப்படி ஆனது? அந்தக் கிராமத்திற்கான தனித்தன்மையைக் கொஞ்ச நாட்களில் இழந்துபோனார்கள். பொருளாதார வளர்ச்சி இல்லை. அதனால் ஊரைவிட்டு வெளியே சென்றுதான் பிழைக்கப்போனார்கள். அந்தக் கிராமமே போய்விட்டது. அதற்கு என்ன காரணம் என்றால் சமூக மாற்றங்கள்தான். நான் இப்படி எழுதத் திட்டமிடவில்லை என்றாலும், இயல்பாகவே நகரவளர்ச்சி பொருளாதாரத்தைச் சார்ந்தும் கிராமத் தேய்வு சமூக மாற்றங்களைச் சார்ந்தும் அமைந்தது மாதிரி எனக்குத் தோன்றுகிறது.

தீராநதி : சென்னை வளர்ச்சி ஆய்வுமையத்தின் நிறுவனர் மால்கம் ஆதிசேஷையா பற்றிச் சொல்லுங்கள்.

எஸ். நீலகண்டன் : ஒரு தனிமனிதர் எப்படி உயர்ந்த நிலைக்கு வருகிறார்கள் என்பதை அவரிடம் ஒருநாள் இருந்தாலே தெரிந்து கொள்ளலாம். தன்னுடைய வேலையைத் தவிர வேறு எது பற்றியும் சிந்திக்கக் கூடத் தெரியாத மனிதர். எவ்வளவு பெரியவராக இருந்தாலும், எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் அவரோடு போய் சந்தித்துப் பேச வேண்டும் என்றால் முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்காவிட்டால் அனுமதிக்கவே மாட்டார். சரியாக காலை 10.15க்கு வருவார். அன்றைய வேலையை ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருப்பார். கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு எந்த இடத்தில் என்ன பேசப் போகிறோம் என்பதை முதலிலேயே அட்டவணை செய்து வைத்திருக்கும் பழக்கம் அவருக்குரியது. எந்த வேலையையும் உடனடியாகச் செய்து விடுவார். அவரது எழுத்து கோழி கிறுக்குவதுபோல இருக்கும்.

அவரது 13 வயதிலேயே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். இரண்டு முறை டபுள் புரமோஷன் அவருக்குக் கிடைத்தது. பதினெட்டு வயதில் பி.ஏ. ஹானர்ஸ் முடித்திருக்கிறார்; லயோலா கல்லூரியில் சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் இவரது  மாணவர். ஐந்து ஆண்டுகள் கல்கத்தாவில் பேராசிரியராக இருந்துவிட்டு, லண்டனில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆசிரியராக இருந்துள்ளார். 1946இல் சுவிட்சர்லாந்தில் உள்ள உலகப் பல்கலைக்கழகச் சேவையில் செயலாளராகச் சேர்ந்தார். வேலூர் ஊரீஸ் கல்லூரியில் ஆதிசேஷையாவின் தந்தை ஆசிரியராகப் பணியாற்றினார். அவரது மாணவர் ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அதனால் ஆதிசேஷையா பற்றி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு முன்பே தெரியும். ராதாகிருஷ்ணன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அப்போது அவரோடு வேலை செய்த ஹேஸ்லிட் யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவர் இந்தியாவிலிருந்து யுனெஸ்கோவில் பணியாற்ற ஒருவரை சிபாரிசு செய்யுங்கள் என்றார். ராதாகிருஷ்ணன் ஆதிசேஷையாவைப் பரிந்துரை செய்துள்ளார். 1948இல் யுனெஸ்கோவில் ஆதிசேஷையா சேர்கிறார். அதில் அவரது பணி மிக மிக முக்கியமானது. மிக உயர்ந்த பதவிகளுக்குக் குறைவான காலத்திலேயே நியமிக்கப்பட்டார். 1970இல் விருப்ப ஓய்வு பெற விரும்பியபோது, அப்போதைய யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் விடுவிக்க மறுத்தார். பிடிவாதமாக வெளியே வந்தபோது, ஆதிசேஷையா ஒருவரே பார்த்த வேலைக்கு இரண்டு பேரை அந்த வேலைக்கு நியமித்தார்கள். அப்போதிலிருந்தே அந்த அளவிற்குக் கடுமையான வேலைத் திறன் அவரிடம் இருந்தது.

அவர் தமிழுக்குச் செய்த தொண்டும் போற்றத்தக்கது. யுனெஸ்கோவில் ஆதிசேஷையா பணியாற்றியபோது பாரம்பரியமிக்க இடங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற திட்டத்தின் பெயரில் இந்தியாவில் இருக்கிற அஜந்தா, எல்லோரா இவைகளின் பாதுகாப்பிற்கும் முதன்முதலில் அஜந்தாவின் கலைப் பொக்கிஷங்களைப் புகைப்படம் எடுத்து அவைகள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய இடங்களையும் ஆதிசேஷையா உதவியால் தேர்வு செய்யப்பட்டது. அதில் தஞ்சை பெரியகோயில், திருவரங்கத்துக் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கைலாசநாதர் கோயில் போன்றவை அடங்கும். யுனெஸ்கோவின் பணத்தைக் கொடுத்து இந்தியாவின் பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்க உதவினார்.

திருக்குறள் நூலை ராஜாஜியிடம் கொடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை ரஷ்யன், ஸ்பானிஷ், பிரெஞ்ச் இப்படி ஐந்து மொழிகளில் யுனெஸ்கோ வெளியீடாக ஆதிசேஷையா வெளியிட்டார். பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாடு நடப்பதற்கு முக்கியக் காரணமாகவும் இருந்திருக்கிறார். 1969 அல்லது 1970 ஆக இருக்கலாம். அதில் ஆங்கிலம், பிரெஞ்ச், தமிழ் என மூன்று மொழிகளில் வரவேற்புரை வழங்கினார். அந்த மாநாடு நடப்பதற்கே அவர் அப்போது பாரிஸில் இருந்ததுதான் காரணம். தமிழில் ஆராய்ச்சி செய்வதற்கு ஒரு ஆய்வு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று சொல்லி யுனெஸ்கோவின் பண உதவியோடு 1970இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியதும் ஆதிசேஷையாதான். அவர் இல்லையென்றால் அந்த நிறுவனம் இல்லை. 1946இல் இந்தியாவை விட்டுப் போனவர் 1970இல்தான் திரும்ப இந்தியாவிற்கு வருகிறார். அவருக்கு ஆங்கிலம், ஃபிரெஞ்ச் மொழிகள்தான் புழக்கத்தில் இருந்த மொழிகள். ஆனால், யாராவது தமிழில் கடிதம் எழுதினால் பதில் கடிதம் தமிழில்தான் எழுதுவார். அதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார். பொள்ளாச்சி மகாலிங்கம் அவரது பத்திரிகைக்கு கட்டுரை கேட்டால் தமிழில்தான் கட்டுரை எழுதி அனுப்புவார். அது அவருக்கு மிகவும் சிரமம் தருவதாக இருந்தாலும் சிரமத்தைப் பொருட்படுத்தமாட்டார். தமிழில் `யுனெஸ்கோ கூரியர்' இதழை வெளியிட வைத்தார். இந்தியாவில் இந்திமொழி தவிர தமிழில் மட்டும்தான் யுனெஸ்கோ கூரியர் வெளியிடப்பட்டது. ஐக்கிய நாணய சபையின் மொழிகளாக ஐந்து மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அது தாண்டி வெகு சில மொழிகளில்தான் யுனெஸ்கோவின் கூரியர் வெளியிடப்படுகிறது. ஆதிசேஷையா முயற்சியால்தான் இந்தி, தமிழ் மொழி இரண்டும் சேர்க்கப்பட்டது. அவர் பார்லிமெண்ட்டில் அங்கத்தினராக இருந்தபோது பேசிய பேச்சுக்களில் தமிழ் மேற்கோள்கள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தமிழ் ஆர்வம் மிக்க ஒருவர். வெறியர் அன்று.

தீராநதி : உங்கள் ``ஒரு நகரமும் ஒரு கிராமும்'' நூலில் மொழியின் எளிமையும் கூர்மையும் அற்புதமாக வந்துள்ளது. பொருளாதார சமூக ஆய்வு நூலை எல்லோரும் விரும்பிப் படிப்பதற்கான மொழி எப்படி உங்களுக்கு வாய்த்தது?

எஸ். நீலகண்டன் : நாங்கள் பள்ளியில் படிக்கிற காலத்தைப் பற்றித்தான் சொல்ல வேண்டி உள்ளது. எனக்கு ஐந்து வகுப்பு முந்திப் படித்தவர் வா.செ. குழந்தைசாமி. எங்கள் காலத்தில் ஆங்கிலமும் தமிழும் சிறப்பாகப் படிக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் ஆசையும் விருப்பமும் ஆக இருந்தது. அதற்கு ஆசிரியர்களின் உறுதுணையும் இருந்தது. கரூரில் உள்ள சிதம்பரம் மாணவர் விடுதியில் இருந்தேன். அப்போது அங்கே பாரதியாரையும், பாரதிதாசனையும், புலவர் குழந்தையினுடைய பாடல்களையும் மனப்பாடமாகச்  சொல்லக்கூடிய பத்துப்பேர் இருந்தார்கள். தமிழ் உணர்வு, திராவிடர் உணர்வு அப்போது பரவலாக எல்லோருக்கும் இருந்தது. அதன் காரணமாகத் தமிழை நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆங்கிலத்தைக் கற்பிப்பதிலும் அப்போதைய ஆசிரியர்களுக்கு விருப்பம் இருந்தது.

இப்போது நான் கவனித்தது, மாணவர்கள் தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி முழுப் பயிற்சி எடுத்துக் கொள்வதில்லை. உச்சரிப்பு, `ல'கரம், `ழ'கரம் எல்லாம் கவனிப்பதில்லை. ஆங்கிலத்தில் பயன்படுத்தும்போது நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் பயனிலையில் என்ன வேறுபாடு இருக்கும் என்று பார்ப்பதே இல்லை. ஒரு கட்டுரையைப் படித்துப் பார்த்தால் ``நேற்று நிகழ்ந்ததா இன்றைக்கு நிகழ்ந்ததா'' என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மொழியைக் கையாள்வதில் அக்கறையின்மை வந்துவிட்டது. ஒரு தாழ்வு மனப்பான்மையைப் பார்க்க முடிகிறது. ஆங்கிலம் நமக்கு வராது என்ற தாழ்வு மனப்பான்மை. நாங்களும் பள்ளிப்படிப்பைத் தமிழில் படித்துவிட்டு இண்டர்மீடியட் வரும்போதுதான் ஆங்கிலத்திற்கு மாறினோம். எங்களுக்கும் ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தது. ஆனால், எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஓராண்டுக்குள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தோம்; புலமை பெற்றோம். நாங்கள் தமிழ்வழியில் கல்வி கற்றதால் தமிழை நன்றாகவே பேசவும் எழுதவும் தெரிந்து கொண்டோம். இதை எனக்கு மட்டுமேயானது அல்ல. எங்கள் தலைமுறையைச் சேர்ந்த எல்லோருமே பிழையற்ற தமிழை எழுதத் தெரிந்திருந்தோம். இன்றைக்கு உள்ள மாணவ சமுதாயத்தில் பிழையற்ற தமிழை மட்டுமல்ல, பிழையற்ற ஆங்கிலமும் எழுதத் தெரியவில்லை. இதற்கு அக்கறையின்மைதான் காரணம். எப்படி இருந்தாலும் தேர்வாகி விடுவோம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது இது மாறவேண்டும்.

சந்திப்பு : பவுத்த அய்யனார்

கருத்துகள் இல்லை: