புயல் - கோபி கிருஷ்ணன்
அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்.
தொழிற்சாலை நேரம் முடிந்து, தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேச, அவரது இல்லத்திற்குச் சென்று, பேசி முடித்துவிட்டு, சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் ஏக்நாத். நைந்துபோன, பித்தான்கள் என்றைக்கோ தெறித்து, அவை இல்லாத நிலையில், ஸேஃப்டி பின்களைப் போட்டு ஒருவாறாக மழைக்கோட்டை அணிந்து கொண்டு, தொப்பி தொலைந்துபோய் வெகு மாதங்கள் ஆகியிருந்தும், அதை வாங்காதிருந்த அசிரத்தையின் தண்டனையான தலைநனைதலை அனுபவித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். தொழிற்சாலையில் ஒரு குப்பைக் கூடை அருகே கிடந்த சிறு துண்டு மழைத்தாள் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தான். வழியில் ஒரு கடையில் புதிதாக சந்தையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த ‘நௌ’ சிகரெட் ஒரு பாக்கெட்டையும் ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி மழைத்தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். இரண்டு மெழுது வர்த்திகளையும் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். நல்ல நாட்களிலேயே அடிக்கடி தடைப்படும் மின்சாரம் மழையில் சீராக இயங்கும் என்று சொல்வதற்கில்லை. குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜூரம். மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை வாங்கினான்.
ஜூரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றவே, ஒரு கடையில் காட்பரீஸ் மில்க் சாக்கலெட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன் உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து அதை அரைகுறையாக ஒருவாறு காத்து கைகளைக் குவித்துப் பற்ற வைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும், ஒரு நீண்ட சந்தையும், இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும்.
வழியில் ஒரு மளிகைக் கடை. வீட்டில் காப்பிப் பொடி. சர்க்கரை காலையில் கொஞ்சம்தான் மீதம் இருந்தது. ப்ரூ ரீஃபில்பேக் காப்பிப் பொட்டலம் ஒன்றையும் 250 கிராம் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப் பையனிடம் சொல்லிவிட்டு சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித்தள்ளிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். “ஸாரி மாமி” - மன்னிப்புக் கோரி, கால்வாசிதான் புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான்.
வீட்டின் மிக அருகாமையில் வந்ததும் நேற்று நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு வீட்டின் முன் கிட்டத்தட்டத் தெருவின் முழு அகலத்தையும் அடைத்தபடி ஒரு பெரிய கோலத்தை ஒரு பெண்மணி போட்டுக் கொண்டிருந்தாள் லயித்து. ஏகநாத் கவனமாகக் கோலக்கோடுகள், புள்ளிகள் முதலியவைகளைத் தவிர்த்து, ஏடாகூடமாகக் கால் வைத்ததில் கீழே சாயப்போய், ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, கோலத்தின் மேல் கால் பாவாமல் சிரத்தையுடன் தாண்டி நடந்து கடந்தான்.
மணி தோராயமாக 9.30. “காலைலே வீட்டெ விட்டுக் கெளம்பினா வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை ஒங்களுக்குக் கொஞ்சங்கூட. நான் ஒருத்தி இருக்கேங்கற நெனெப்பே ஒங்களூக்குச் சுத்தமா மறந்தாச்சுன்னுதான் தோண்றது. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லெ” ஸோனா பொரிந்து தள்ளினாள். “ஆனா, இண்ணெக்கி என்ன விசேஷம்? நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம்?” - இது ஏக்நாத். “ஒண்ணுமில்லெ, சொல்றேன்.” “என்ன வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா?” - “இல்லெ.” “மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா?” “இல்லெ.” “வேறென்ன சொல்லேன்.” ஸோனாவின் முகத்தில் கலவரமும் பரபரப்பும் அவசரமும் குடிகொண்டிருந்ததை ஏகநாத்தால் கண்டுகொள்ள முடிந்தது. கணவனைச் சந்தோஷத்திலாழ்த்தும் செய்தி போன்ற எதுவுமில்லை என்று அவனால் ஊகிக்க முடிந்தது. சராசரிகளுக்குச் சந்தோஷம் என்பதே ஒரு அரிதான விஷயம். அது அவனுக்கு ஒரு அனுபவபூர்வமான நிஜம். “நீங்க மொதல்லெ கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த மழைச் சனியன் வேறெ நின்னு தொலைய மாட்டேங்கறது.” ஸோனா சொன்னபடி சமையற்கட்டின் முன்பகுதியில் முகம், கைகால் அலம்பிக்கொண்டு, தலையைத் துவட்டிக்கொண்டு ஏகநாத் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
ஸோனா ஏகநாத்தின் மனைவி. பெயரைப் போலவே தங்கமானவள். மணமான புதிதில் ஏகநாத் அவள் பெயரை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தான். ஸோனா - தங்கம். இன்னொரு அர்த்தம் உறங்குதல். நம் மனநிலைகளின் அதீதங்களினாலோ பிறத்தியான் பிசகாக நடந்து கொள்வதினாலோ அவன்மீது ஏற்படும் கசப்புணர்வு அறவே மறந்து அடுத்த நாள் அவன் தோள்மீது கைபோட்டு அன்னியோன்னியமாயிருக்க உதவும். தீவிர வெறுப்புகள் தொடராமல் தடைபோடக் கைகொடுக்கும் ஒரு அற்புதமான இயற்கை ஔஷதம். ஸோனாதான் எவ்வளவு ரம்மியமான ஆரோக்கியமான பெயர்!
குழந்தைக்கு ஸிந்தியா என்று பெயரிட்டிருந்தான். ஜனித்தவுடன் முதலில் தன் சிசுவைப் பார்த்ததும் உடனே அவன் நினைவில் நிழலாடியது நீல ஆகாயத்தின் மையத்தில் ஒரு முழு நிலா. சந்திர தேவதையின் பெயரையே அவளுக்கு சூட்டிவிட்டான்.
ஸிந்தியா: “டாடீ, எனக்கு இன்னா கொண்டாந்தே?” “ஒனக்காடா கண்ணா, ஒரு மத்திரெ, ஒனக்கு ஜொரமில்லெ? அப்பறம் ஒரு சாக்கலெட்” “இன்னா டாடீ எனக்கு ஸ்வீட்டு, இன்னெக்கி எனக்கு பெர்த் டேவா?” அவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலெட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள். “இப்பொ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கெ யார் அழுதா?” ஸோனா வெடித்தாள். “என்ன நடந்திச்சு, சொல்லு. காப்பி போடு. சாப்பிட்டிட்டே கேக்கறேன்.” “ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை?” வாந்தியை வாருகாலால் தண்ணீர்விட்டுக் கழுவிக்கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள். “சரி, காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு. தேவதூதன் ஒண்ட்டே வழியிலே சந்திச்சுப் பேசி ஆசியெல்லாம் வழங்கிட்டுப் போனான்ற அற்புத நிகழ்ச்சியெலாம் நீ சொல்லப் போறதில்லெ. அல்ப விஷயம் ஏதாவது சொல்லப் போறே. அதுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? சொல்லேன்.”
“என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க?”
“புதுஸ்ஸா இதிலெ சொல்றதுக்கு என்னா இருக்கு? சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன், கொளந்தெ, அடுப்படி, வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே?”
“என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப் பேச மாட்டீங்க.”
“நானென்ன யேசுநாதரா, பார்க்காமலேயே எல்லாத்தெயும் தெரிஞ்சுக்க? சொன்னாத்தானே தெரியும்?”
“இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர் டெக்னீஷிய ராஸ்கல் கோவிந்தன் டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டெ அம்மணமா போஸ் கொடுத்துண்டு நிக்கிற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவைக் காட்னான். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக. வெக்கங்கெட்ட ஜன்மங்க.”
“இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல்? கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே?”
“ஓ, அந்தக் கண்றாவி வேறெ நடக்கணும்ன்னு ஒங்களுக்கு ஆசையோ?”
“நீ இண்ணெக்கி நல்ல மூட்லெ இல்லே. கொஞ்சம் தண்ணி சாப்பிட்டு அமைதியா இரு.”
“அந்த டாக்டர் கெழம் - பேரம் பேத்தி எடுத்தாச்சு. ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப் - அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்கு - அதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம்.”
என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில் ஏகநாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.
”ஒங்களுக்கென்ன, ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீந்து போச்சு. நான் இங்கெ கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து Creche-க்கு வந்து ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலெ நனைஞ்சு வீட்டுக்கு வந்திண்டிருந்தேன். கொட்ற மழைலெ கொடெ இருந்தும் ஒண்ணுதான் இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட்ஸ், ஷர்ட் போட்டுண்டு கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே உட்கார்ந்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடி வச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி, “மேடம், ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா?”ன்னு கூப்பிட்டது. யாரெக் கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா, “மேடம், ஒங்களெத்தான். ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன்”ன்னது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமாவில் ஸ்ரீகாந்த் லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது. பயந்து நடுங்கிண்டு விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன்.”
ஸோனா தொடர்ந்தாள். “வந்து அரை மணி நேரமாகல்லெ. ஒரு வாரத்துக்கு முன்னாலெ காலி செஞ்சுண்டு போனாங்களே, அந்த பார்வதி வீட்டுக்காரன் வந்தான். ‘எப்படீம்மா இருக்கே? கொளந்தெ சௌக்கியமா?’ன்னு கேட்டுண்டே உள்ளாரெ வந்து சேர்லெ ஒக்காந்துக் கிட்டான். ‘இங்கே இருக்கறப்போ அந்த மனுஷண்ட்டெ பேசினதுகூட கிடையாது. காபி சாப்பிட்றீங்களான்னு கேட்டேன். சரின்னது. போட்டு டேபிள்ல்லெ வச்சேன். ‘வேணாம். சும்மா தமாஷுக்குத்தான் கேட்டேன்’ அப்படின்னான். என்ட்டெ என்ன தமாஷ்ன்னு நெனெச்சிண்டிருக்கறப்போ ‘வாங்களேன், இளமை சுகம் சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் வச்சிருக்கேன். சேர்ந்து போகலாம்’ன்னது. எனக்கு ஒதறல் எடுத்துப் போச்சு. ஸிந்தியவெத் தூக்கிண்டு, அந்தப் பக்கத்து போர்ஷன் பொண்ணு குமுதினி இல்லெ, அதான் நைன்த் படிக்கறதே, அதைக் கூப்பிட்டேன். நல்லகாலம் வந்தது. கொஞ்ச நேரம் அந்த ஆள் அப்படியே ஒக்காந்திண்டிருந்தான். ‘நான் அப்பொ போயிட்டு இன்னொரு நாளெக்கி வர்றேன். நான் இப்பொ ஏன் போறேன் தெரியுமா? நான் இப்பொ ஒங்களோட தனியா இருக்கேன். ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு?’ன்னு சொல்லிட்டே எழுந்தது. குமுதினிப் பொண்ணு கன்னத்தெத் தட்டிக் கொடுத்துட்டே ஏறக்கட்னது. அந்தப் பொண்ணு சொல்றது, அந்த மனுஷன் நல்லவனாம். குடிச்சுட்டு வந்ததுனாலெ இப்படி நடந்துக்கிட்டதாம்.”
ஸோனா இன்னும் முடிக்கவில்லை. “இந்த இழவெல்லாம் முடிஞ்சாவிட்டு கொடெயெ எடுத்துண்டு ஸிந்தியாவெத் தூக்கி இடுப்பிலெ வச்சிண்டு அரைக்கக் கொடுத்த மாவெ வாங்கிவரப் போனேன். ஒரு வீட்டுத் திண்ணைலெ ரெண்டு கேடிப் பசங்க. ‘குட்டி ஷோக்காயிருக்கில்லெ’ அப்படீன்னு கமெண்டு அடிக்குதுங்க.”
ஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்குச் சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனாவுக்கு அமைதியின்மை காரணமாகச் சாப்பிடத் தோன்றவில்லை. ஏகநாத்துக்குத் துக்கம் மனம் பூராவும் வியாபித்திருந்த நிலையில் சாப்பாட்டுச் சிந்தனைக்கே இடம் இல்லாமல் போயிற்று. படுக்கையில் கிடந்தார்கள். ஸோனா ஏகநாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள். “சமூகம் இண்ணெக்கி ஒன்கிட்டெ அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு, அவ்வளவுதான். தூங்கு. எல்லாம் சரியாப் போகும்” என்றான்.
“உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும் சகிக்கல.”
அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் கிடந்தான் ஏகநாத்.
ஏகநாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும், அசிங்கமாகவோ, அநாகரிகமாகவோ, கொச்சையாகவோ, பச்சையாகவோ, விரசமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. அப்பா பண்ணின பாவம் பிள்ளையின் தலைமேல் விடியும் என்று சொல்லக் கேட்டிருக்கிறான். கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை. மேலும் சமீபத்தில், ஒரு மாமி மனம் கோணாமலும், ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச் சன்மானம் கிடைக்கா விட்டாலும், கேடாவது விளையாவது இருந்திருக்கலாம்.
கடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல், “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்று சற்று உரக்கவே கத்தினான். ஏகநாத்தால் இயன்றது அவ்வளவே.
*****
கருத்துகள்