கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

ஏன் எழுதுகிறேன்? - ஜெயகாந்தன்

எழுதுகின்ற நம்மிடையே இப்படி ஒரு கேள்வி பிறந்திருப்பதும் இதற்குப் பதில் சொல்வதும் அவசியம் என்று நாம் உணர்ந்து இங்கு கூடியிருப்பதும் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். 'எதற்காக எழுதுகிறேன்?' என்ற கேள்வியிலேயே ஓரளவு - பொதுவான - பதில் ஒன்று அடங்கியிருக்கிறது. எதற்காகவோதான் நாம் எழுத வேண்டும் என்பதைத் தாங்கி நிற்கும் இக்கேள்வி எதற்காகவோதான் எழுதுகிறோம் என்ற பொதுவான பதிலுடன், ஒவ்வொரு எழுத்தாளனிடமும் குறிப்பாக 'நீ எதற்கு எழுதுகிறாய்?' என்று குறிப்பான ஒரு பதிலையும் எதிர்பார்த்து நிற்கிறது.
ஒருவனைப் பார்த்து 'உன் பெயர் என்ன?' என்று கேட்டால், அவனுக்கு ஒரு பேரிருக்கிறது என்று நம்பியே அவ்விதம் கேட்கப்படுகிறது என்று கொள்வோம். பதில்- ராமன், கிருஷ்ணன் என்று எதையோ கூறுவதாகத்தான் இருக்க வேண்டுமேயல்லாது 'பேரொன்றுமில்லை' என்பதாக இருக்க முடியாது. அதற்குக் கேள்வி, உனக்குப் 'பேர் ஏதாவது உண்டா?' என்பதுதானே?
'எதற்காகவேனும் எழுதுகிறேனா?' என்றொரு தலைப்பின் கீழ் நம்மைப் பேச அழைத்திருந்தால், 'ஆம்' 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லி முடிப்பது அழகாக இருந்திருக்கும்.
எதற்காகவோதான் எழுதுகிறேன் என்பவருக்காவது பேச நியாயம் உண்டு. எதற்குமில்லை என்பவர் ஏன்தான் பேச வேண்டும்? ஆகையினால் இங்கு இந்தத் தலைப்பின் கீழ் பேச வந்திருக்கும் நண்பர்கள் அனைவரும், எழுத்து என்பது எதற்காகவோதான் பிறக்கிறது, எதற்காகவோதான் அது பயன்படுகிறது, பயன்பட வேண்டும் என்கிற கொள்கையுடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று எண்ணி மகிழ்வுறுகிறேன் நான். அது தவறாகாது.
சரி, 'நான் எதற்காக எழுதுகிறேன்?' எல்லாவற்றுக்குமே ஒரு காரணமும், ஒரு காரியமும் உண்டு. எது என்னை எழுத வைத்தது என்பதும், எதற்காக நான் எழுதுகிறேன் என்பதும் என் எழுத்தின் இருபுடையும் சம்பந்தமுடையவனவாகும்.
நான் எழுதுவதே, ஏதோ தன்னியல்பாக - தெய்வ வரம் போல், அல்லது தெய்வ சாபம் போல் என் ஆளுகைக்கு அப்பாலான ஏதோ ஒரு நிகழ்ச்சிபோல் என்னிடம் நிகழ்வதா?...
குறியும் நெறியுமில்லாமல் என்னிடம் உள்ள அதீத, அபூர்வ மனுஷத்வத்தில் கிளைப்பதா?
'மலர் எதற்காகப் பூக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?' என்றெல்லாம் அழகாக எனது நண்பரொருவர் என்னிடம் கேட்டாரே அது போலத்தானா?... அதெல்லாம் வெறும் ஹம்பக்!
நான் ஏன் இப்படி எரிச்சலுடன் சொல்லுகிறேன் என்றால் இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாய் வேஷங்கட்டி ஆடுகிறார்கள். அதனாலேயே இவர்களைப் பார்க்க எனக்கு அருவருப்பாயும் ஆத்திரமாயும் இருக்கிறது. எல்லா மனிதனைப் போலும், எல்லா விதமான அழுக்குகளையும் தன்னுள் ரகஸ்யமாகச் சுமக்கிறான் இவன். தன் முயற்சியால் மிகவும் சிரமப்பட்டு விஷயங்களை இவன் கூறுகிறான்; எந்த நேரத்தில் இதன் உருவம் திரிந்துவிடுமோ, உள்ளடக்கம் நைந்துவிடுமோ என்று கவனத்தோடு வரிவரியாய் மிகுந்த மனிதப் பிரயாசையுடன் இவன் எழுதுகிறான். பத்திரிகைக்காரன் எப்படியாவது இதைப் பிரசுரிக்க வேண்டும் என்று அசிங்கமாகக் கூட இவன் ஆசைப்படுகிறான்; அதன் மூலம் பணம் சம்பாதிக்க இவன் அலைகிறான். எங்கோ வேலை செய்து வாங்கும் சம்பளம் வயிற்றுச் சோற்றுக்குச் சரியாகிவிடுகிறது. மாதாமாதம் ஒரு 'துண்டு' பட்ஜெட் விழுகிறது. அதையும் மனசில் கொண்டு இவன் பேனா பிடிக்க ஆரம்பிக்கிறான். 'எப்படி ஸார் இருந்தது? கதை படிச்சீங்களா?' என்று பாராட்டைப் பிச்சை கேட்கிறான். கடைசியில் 'எதற்காக நீ எழுதுகிறாய்? உன் எழுத்துக்கு ஒரு லட்சியம் உண்டா?' என்று, அவன் எழுத்தில் ஆங்காங்கே காணப்படும் சில கருத்துக்களினால் ஆகர்ஷிக்கப்பட்டவன் கேட்டால் - அவ்விதம் கேட்கும்போது இவன் மனசில், தான் எது எதற்காக எழுதினோம் என்ற காரணங்கள் உண்மையாய் எழுகின்றன. அந்தக் காரணங்களிலேயே அமிழ்ந்து கிடக்கும் நியாயங்களும், சமூகப் பிரச்னையும் இவனது தத்துவ தரிசனத்தில் அல்பமாகவும் இழிவாகவும் படுகின்றன. இப்படிப்பட்ட சம்பிரமங்களுடன் எழுதும் தன்னைப் போய் 'ஏதாவது லட்சியம் உண்டா' என்று ஒருவன் கேட்டு விட்டானே... என்று அவன் மனம் தாழ்வுணர்ச்சியால் ஒரு வினாடி செத்துப் புரள்கிறது. அதை அந்த வாசகன் தெரிந்து கொள்ளக் கூடாதே! உடனே அவனைப் பார்த்து இவன் 'ஓ'வென்று சிரிக்கிறான். தனது தாழ்வுணர்ச்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள அந்த வாசகனைத் தாழ்வுபடுத்துகிறான்! "அடடா முட்டாளே... யாரைப் பார்த்து இவ்விதம் கேட்டாய்? கலைக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லை. சீ சீ, கேவலம் அரசியல்வாதியிடம் கேட்க வேண்டிய கேள்வியையா என்னிடம் கேட்கிறாய்? மலர் ஏனப்பா பூக்கிறது? அதுபோல்தான் கலைஞனின் சிருஷ்டியும். லட்சியம், கொள்கை என்பது எல்லாம் பிரசாரம்... நான் கலைஞன்" என்று கூறித் தப்பித்துக் கொள்கிறான்.
நான் எழுதுவதற்கு ஒரு urge-ம் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு லட்சியமும் உண்டு. நான் எழுதுவது முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனி முயற்சியின் பலனுமாகும்.
இந்த Philistinesகளைப் பற்றிப் பேசும்போது, அழகியல் உணர்வே இல்லாத நம் அரசியல் தோழர் கலையென்ற பேரில் குதியாட்டம் போடுவதும் எனக்கு உடன்பாடாயில்லை.
அர்த்தமில்லாமல் கலை இருக்க முடியாது. அதே போழ்தில் அழகியல் இன்றி மட்டும் கலை உருவாகிவிட முடியுமா? வாழ்க்கைக்கும், உலகுக்கும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் அர்த்தம் கற்பிப்பவன் மனிதன். இயற்கைக்கே அர்த்தம் கற்பிக்கின்ற மனிதன், தன்னால் இயற்றப்படுவதற்கு அர்த்தமில்லையென்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனாலேயே லட்சியமில்லாத கலை இருக்க முடியாது என்பது தௌ¤வாகிறது. ஒரு லட்சியம் இருப்பதனால் மட்டுமே ஒன்று கலையாகிவிட முடியாது என்பதைக் கலைஞர்கள் அழுத்திக் கூற வேண்டியதும் அவசியமாகின்றது.
மலர் இப்படித்தான் பூக்கும் என்பதனால் அதற்கு இலக்கணமும் வேண்டாம் விமர்சனமும் தேவையில்லை என்று சொல்லி அழகியல் உணர்வே இல்லாமல் ஒருவர் தனது கொள்கைப் பிரசாரத்தையே இலக்கியம் என்று எழுதி தப்பித்துக் கொள்ள முடியுமல்லவா?....
இந்த இருவருமே தத்தமது பலவீனம் கருதியே ஒருவரை ஒருவர் மறுத்துக் கொள்கின்றனர் என்பது எனக்குப் புரிகிறது. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முரணல்ல; கலை விவகாரத்தில் இந்த இருவருமே சம்பந்தப்பட்டவர்கள். இவர்களின் அக்கறையான 'கலையின் உருவம்' 'கலையின் ஆத்மா' ஆகிய இரண்டும் தனித்தனியே விலகிக் கிடப்பது சரியன்று என்பதை உண்மைக் கலைஞர்கள் உணர முடியும்.
தனிமனிதக் கலைஞர் ஒருவர் என்ன சொல்கிறார்? இதெல்லாம் என்னய்யா வீண் விவகாரம்! எனக்குப் புகழ் வேண்டும், பணம் வேண்டும், எனது வாசகனை நான் திருப்திப்படுத்துவதன் மூலம் எனக்கு இவை இரண்டும் கிடைக்கிறது. இதற்காகத்தான் நான் எழுதுகிறேன் என்கிறார் ஒருவர்.
ரொம்ப சரி, நானும் அப்படித்தான். நான் பணத்துக்காகவும் எழுதியிருக்கிறேன். நான் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதித்தும் இருக்கிறேன். ஆனால் இங்கு ஒரு உண்மையை உரத்த குரலிலோ, அல்லது மெதுவாகவோ நான் உங்களூக்குச் சொல்லித்தான் ஆக வேண்டும் - நான் எழுதுவதே பணத்துக்காக அல்ல!...
அப்படியென்றால் வேறு எதற்காக? புகழுக்காகவா?...
ஆம்! புகழுக்காகத்தான்... நிரந்தரமான புகழுக்காக!...
நிரந்தரமான புகழ் எதனால் கிடைக்கும்? வெறும் கழைக்கூத்தாடித்தனத்தால் கிடைக்குமா? கூடியிருக்கும் ஜனங்கள் அந்த நிமிஷம் கைதட்டுவது ஒரு புகழாகுமா?
மனித குலத்தைப் பற்றி, சமூக வாழ்க்கையைப் பற்றிப் பொறுப்போடு சிந்தித்தவர்கள், சேவை புரிந்தவர்கள் உயிரையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்கள் - இவர்களே நிரந்தரப் புகழடைந்தார்கள். சிந்தனையும், சேவையும், தியாகமும் கலைஞர்களுக்கு வேண்டாம் என்பவர்கள் மனித குலத்தின் விரோதிகள், கலையைக் கொச்சைப் படுத்துகிறவர்கள், கோழைகள்... இவர்கள் வாழ்க்கையால் தமக்கு நிர்ப்பந்திக்கப்படும் பொறுப்பையெல்லாம் உதறிவிடவே கலைப் போர்வைக்குள் வந்து ஒளிந்து கொள்கிறார்கள். இவர்களின் சாதுரியத்தால் இவர்கள்தான் பிழைப்பார்கள்; கலை வளராது.
சரி, தௌ¤வாக, நான் எதற்கு எழுதுகிறேன் என்று சொல்லி விட வேண்டும் அல்லவா?
இந்த நாட்டில், வியாசன் முதல் பாரதி வரை எதற்காக எழுதினார்கள் என்று உங்களூக்குத் தெரியுமா? இவர்களில் யாராவது கலையைத் தாங்கிப் பிடிக்க என்று சொல்லிக் கொண்டதுண்டா? இவர்களைவிடக் கலையைத் தாங்கியவர்களும், காலம் காலமாய் வாழும், வாழப் போகும் கலா சிருஷ்டிகளைத் தந்தவர்களும் உண்டா?
தர்மார்த்தங்களை உபதேசிக்கவே வியாஸர் பாரதத்தை எழுதினார்.
பாரதி எதற்காகப் பாடினார் என்ற கேள்வியை நாம் எழுப்பிக் கொள்வது வெறுமே விவாதம் செய்ய நமக்கு இருக்கும் ஆசையைத்தான் காட்டும். தமிழிலக்கணமே நூலினியல்பாவது என்னெவென்று சொல்லும்போது,
'நூலினியல்பே நுவலின் ஓரிருபாயிரந்தோற்றி மும்மை யினொன்றாய்நாற்பொருட் பயத்தோடு... எழுமதந்தழுவி'
என்று நூலின் பயன், அறம், பொருள், இன்பம், வீடு அதற்கும் மேல் புதியதாய் எழுகின்ற ஒரு கொள்கையைத் தழுவியும் இருக்க வேண்டும் என்று நான்கு பயனுக்காக என்று சொல்லி அதன் பின்னர்தான் பத்துக் குற்றம், பத்தழகு, முப்பத்திரண்டு உத்தி முதலிய இலக்கண விளக்கங்களை கூறிச் செல்கிறது.
அறம் - தர்மம் எது என்பதில் நாம் மாறுபடலாம். அதை விவாதிக்கலாம்... அதுவே கூடாது என்கிற கூற்று தகாது.
இந்த உலகில், தர்மம் அழிக்கப்படுகிறது என்றும், அதர்மம் கொண்டாடப்படுகிறது என்றும், ரோஜாவும், மல்லிகையும் எருக்கம் பூக்களாக மதிக்கப்படுகின்றன என்றும், எருக்கம் பூவும் குப்பை மேனியும் ரோஜாவென்றும், மல்லிகை என்றும் கொண்டாடப் படுவது கண்டும் நான் மனம் வெதும்பி இருக்கின்றேன்.
அதனால் எனது ரோஜாக்கள், நண்பர் சிதம்பர சுப்ரமண்யம் போன்றவர்களுக்கு எருக்க மலர்களாய்ப் படுகின்றன.
இவை எருக்கம் பூக்கள் அல்ல; இவைதாம் ரோஜாவும், மல்லிகையும், கடவுளர்க்கும் பிடித்த பாரிஜாத மலர்களுமாகும் என்று காட்டுவதற்காக, தாங்கள் எருக்கம் பூக்கள்தான் என்று எண்ணி குப்பையில் ஒதுங்கி கிடக்கும் அந்த மலர்களுக்கே அவற்றை உணர்த்துவதற்காக நான் எழுதுகிறேன்.
வாழ்க்கை என்பது போராட்டம் என்பதை வெறும் வாசகமாக, ஒரு சொற்றொடராகக் கொள்ளாமல் அதன் பூரணமான அர்த்தத்தோடு அந்த சூத்திரத்தை நான் பார்க்கிறேன். நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறோம்...
எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புகளற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அனுபவித்துத் தனக்குத் தானே, தன் மன அரிப்புக்காக வாழும், 'மனமைதுனக்கார'னல்ல. அரசியல் ஞானியும், விஞ்ஞானியும் கலைஞனும் இந்த உலகத்தை நிர்ணயிக்கிறார்கள். இதன் தன்மையை மாற்றியமைத்து அவர்களே வளர்க்கிறார்கள்.
அவர்களது இந்தப் போராட்டத்தில் நான் எனது பிரிவில் என் கடமையைச் செய்கிறேன். இதை மறுத்தால் நான் வாழும் காலத்திற்கும், எனது உடன் பிறந்தோர்க்கும் நான் துரோகம் செய்தவனாவேன்.
இதனால் அழகியல் கெட்டுப் போய்விடும் என்று யாரும் நினைப்பது சரியாகாது.
மரப்பாச்சிதான் வெறும் அழகியலுக்கு உதாரணம். அதைவிடக் குழந்தையின் ரசனைக்குரியது எது? மனிதனின் பேதைப் பருவ அழகியல் உணர்வு அவ்வளவுதான்.
ஆனால் நடராஜ விக்ரகம் வெறும் அழகியல் உணர்வின் அடிப்படையில் வந்தது மட்டுமல்ல, அதற்கு ஒரு அர்த்தம் வலுவான அர்த்தமும் உள்ளடங்கி இருக்கிறது. இன்னும் தௌ¤வாய்ச் சொன்னால், அந்த அர்த்தமே அந்த அற்புத வடிவத்தை உருவாக்கி இருக்கிறது!
வடிவத்தில் என்ன குறைவு வந்துவிட்டது, அது பிரதிநிதித்துவப் படுத்தும் அர்த்தத்தால்?
அர்த்தமே வடிவத்தை வளமாக்குகிறது அல்லவா? வெறும் வடிவம் மரப்பாச்சிதான். ஆகையினால் இவற்றைப் பிடித்துக் கொண்டு வீண் அவஸ்தைகளுக்குள்ளாகிப் பிறரையும் நமது அறியாமையால் அவஸ்தைக்குட் படுத்தாமல், சமூகப் பார்வையோடு 'கலைப் பணி' புரியவே நான் எழுதுகிறேன். கலைப்பணி என்றாலே, அதனுள் 'பார்வை' அடக்கம். பிரித்துப் பேசும் போக்கு வந்துவிட்டதால் நானும் பிரித்துச் சொல்கிறேன். ஆனால் அது சேர்ந்தே தான் இருக்கிறது.
எனது கொள்கையில் குறையில்லாத போதும் எனது திறமைக் குறைவால் நான் தோற்றும் போகலாம், அது தோல்வியாகாது. போர்க்களத்தில் சந்தித்த மரணத்திற்கு நேராகும் அந்தத் தோல்வி. என் கையிலிருக்கும் கொடி இன்று கேலி செய்யப் படலாம்; பிடுங்கி எறியப் படலாம். ஆனால் அதுதான் நாளைய உலகில் எல்லோரின் தலைக்கு மேலும் பறக்கப் போகிறது. அந்த நாளைய உலகை நிர்மாணிக்கும் மஹா சமுத்திரத்தில் நான் ஒரு துளி. என் எழுத்து ஒரு அலை!
(காலம்: 1960)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ