15/02/2011

வெ. இறையன்பு - நேர்காணல்

தமிழக அரசின் சுற்றுலாத் துறை செயலாளர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். பன்முகத் தன்மை கொண்ட அதிகாரி. நேர்மையான- நேர்த்தி யாகப் பணியாற்றக் கூடிய மிகச் சில அதிகாரிகளில் ஒருவர். அதிகாரம் என்பது அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்  ஒரு கருவி என்ற பார்வை கொண்டவர். சமீபத்தில் "இந்தியா டுடே' வார இதழ் தனது 35-ஆவது ஆண்டு நிறைவை யொட்டி, இந்தியா முழுக்க உள்ள வர்களில் 35 பேரை செயலூக்கமுள்ள மனிதர் களாகத் தேர்வு செய்தது. அதில் இவரும் ஒருவர் என்பது தமிழர்கள் பெருமைப் படக்கூடிய விஷயம்.

அரசுப் பணி தவிர்த்து, இலக்கிய ஆர்வம் உள்ளவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதை, இலக்கியச் சொற்பொழிவு, இளைஞர் களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் நூல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய "ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்' புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனை ஆகி இருக்கிறது.

சுற்றுலாத் துறையில் தமிழ்க் கலாச்சாரம், இலக்கியப் பார்வையோடு பல புதுமைகளைச் செய்து வருபவர். அவரோடு "இனிய உதயம்' நேர்காணலுக்காக உரையாடியதிலிருந்து...

உங்கள் பால்ய காலம் பற்றிச் சொல்லுங்களேன்?

""ஆனந்தமயமான பருவம். சாதி, மத முத்திரைகள் இன்றி அனைவரையும் சமமாக பாவிக்கக் கற்றுக் கொடுத்த குடும்பச் சூழல். நடுத்தரக் குடும்பம் என்பதால் எதிர்பார்ப்பில்லாமல் வாழப் பழகிய இயல்புத் தன்மை. புத்தகங்கள் கிடைப்பது அரிதான சூழல். பேச்சுப் போட்டிகளில் கிடைக்கும் பரிசுப் புத்தகங்களே வாசக சாலையாக விரியும். மதிப்பெண்கள் பதக்கங்களாக சட்டையில் மாட்டி விடப்படாத- கழுத்தை நெரிக்கும் போட்டியில்லாத பள்ளியில் படிப்பு. விடுமுறை நாட்களில் முழு நேர விளையாட்டு. இரவு அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் அக்கா படிக்கும் "பொன்னியின் செல்வன்' கதைத் தொடரே பொழுதுபோக்கு. மாதம் ஒருமுறை அருகிலிருக்கும் திரையரங்கில் பெற்றோர் பார்த்தபிறகு அனுமதி அளிக்கும் திரைப்படம். எல்லாரும் சாப்பிடச் சோம்பல்படும் தருணத்தில் அம்மா உருட்டிக் கையில் ஆசையாய்ப் போடும் சாம்பார் சாதம் பசியை அதிகரிக்கச் செய்யும் அலாதியான அனுபவம். எதிரே இருந்த மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் அன்பின் வெளிப்பாடு. இவை அனைத்தும் இனிப்புமயமாக்கிய சிறுவர் பருவம்.''

பள்ளியில் படிக்கும்போதே சிவில் சர்வீஸ் பற்றிய யோசனை இருந்ததா? அதற்கான தூண்டுதல் எங்கிருந்து கிடைத்தது?

""பள்ளியில் படிக்கும்போது அந்த எண்ணமே ஏற்படவில்லை. கல்லூரிப் படிப்பு முடித்து பணியில்லாமல் இருந்த காலத்தில் சில நண்பர்கள் வற்புறுத்தினார்கள். என் தந்தையும் கட்டாயப்படுத் தினார். நான் சிறிது காலம் தயாரித்து விட்டு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால், உடனடியாக எழுதும்படி பெற்றோர் உற்சாகம் ஊட்டினார்கள். பள்ளியிலேயே படிக்கின்ற எண்ணம் வந்திருந்தால் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் முன்பே இப்பணியில் நுழைந்திருக்க முடியும்.''

கல்லூரி வாழ்க்கை என்ன மாதிரியான அனுபவம் தருவதாக இருந்தது? இலக்கிய அறிமுகம், எழுதும் ஆர்வம் அங்குதான் தொடங்கியதா?

""எங்கள் கல்லூரிப் பருவம் இயற்கை சார்ந்ததாக இருந்தது. வேளாண்மைப் படிப்பு என்பதால் உடல் உழைப்பு சார்ந்ததாகவும், ஊரகப் பகுதிகளின் சாரம் நிறைந்ததாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த பூங்காக்கள் கவிதை எழுதும் ஆர்வத்தை ஊட்டின. சிவப்புச் சிந்தனை படிய ஆரம்பித்தது. சமூக உணர்வும் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணமும் அங்கேதான் ஏற்பட்டது. அந்த வகையில் என் கல்லூரி வாழ்க்கை என் வாழ்வின் திசையைத் தீர்மானித்த திருப்புமுனை. அங்கே வைராக்கியத்தையும் விடாமுயற்சியையும் வளர்த்துக் கொண்டேன்.''

நீங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வானவுடன் பார்த்த முதல் பணியைப் பற்றி?

""நாகையில் சாராட்சியராகப் பணியில் சேர்ந்தேன். அங்கிருக்கும் மக்கள் இன்னமும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவு எல்லா இடங்களுக்கும் சென்று அவர்களோடு கலந்து பணியாற்றினேன். அப்போது பல முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. அவற்றிலெல்லாம் என்னை முதன்மைப்படுத்திக் கொண்டு பணியாற்ற முடிந்தது. அந்த வகையில் முதல் கவிதையைப்போல நெஞ்சில் ஈரமாய் இருக்கும் நினைவு அது.''

இந்திய ஆட்சிப் பணியாளர் என்பவர் யார்? அவர்களுக்குத் தனி வரையறைகள், எல்லைகள் இருக்கின்றனவா?

""இந்திய ஆட்சிப் பணி மையத் தேர்வாணையத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு ஒதுக்கப்படும் அகில இந்தியப் பணி. அதில் தேர்வு பெறுகிறவர்கள், இந்திய அரசுக்காக மாநிலங்களில் பணிபுரிகிறார்கள். அதனால் அவர்கள் சுதந்திரமாகவும் தேசியப் பார்வையுடனும் செயல்பட வேண்டும். அதுதான் அவர்களுடைய வரையறை.''

கடலூரில் சப்- கலெக்டராகப் பணியாற்றியபோது, மீனவ மக்களுடன் பழகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது. குறிப்பாக முதலியார்குப்பம்... அந்த அனுபவம் எப்படி இருந்தது?

""சாராட்சியராகப் பணியாற்றியது நாகப்பட்டினத்தில். நாகை புயலுக்குப் பெயர்போன ஊர். புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடும்போது அங்கிருந்த அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் போன்ற மீனவப் பகுதிகளில் தொடங்கி வேட்டைக்காரனிருப்பு வரை அங்கிருந்த மீனவர்கள் எனக்குப் பழக்கம். நான் அங்கிருந்து கடலூருக்கு மாறுதல் பெற்ற போது அவர்கள் சிந்திய கண்ணீர் இன்னமும் இதயத்தைக் கனக்க வைக்கிறது. கடலூரில் மீனவர்களுக்காக வீடு கட்டுவதற்கு முனைந்த போது முதலியார்குப்பம் நெருக்கமானது. அந்த அனுபவம் எனக்குப் பொறுமையையும் அன்பை யும் கற்றுத் தந்தது.''

முதலியார்குப்பம் மீனவர் குடியிருப்பு உருவாக்கத்தில் நீங்கள் நேரடியாகப் பெற்ற படிப்பினை என்ன?

""தமிழகத்திலுள்ள பல கிராமங்கள் சரியான வழிகாட்டுதலுக் காகக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு நல்ல நண்பர் கிடைத்தால் அது அபரிமிதமாக வளர்ச்சியடையும் என்பதற்கு முதலியார்குப்பம் சாட்சி.''



காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது நிலவுப் பள்ளிகள் தொடங்கினீர்கள். அந்த எண்ணம் வந்தது எப்படி? அந்தப் பள்ளிகள் இன்னமும் இயங்குகின்றனவா?

""பதினைந்து பள்ளிகள் இப்போது இரண்டு பள்ளிகளாக இளைத்துப் போய்விட்டன. தறிகளில் பணியாற்றுகின்ற குழந்தைத் தொழிலாளிகளை மீட்டு ஆரம்பப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் சேர்த்தோம். பதினான்கு வயதுக்கு மேற்பட்ட பலர் படிப்பதற்கு இரவு நேரத்தில் இயங்கும் நிலவொளிப் பள்ளிகள் உதயமாயின. அதில் படித்த பலர் இன்று நல்ல நிலையில் இருப்பது ஆறுதலான விஷயம். அதில் படித்த இரண்டு பேர் காவல் துறையில் பணியாற்றுகிறார்கள். இரண்டு பேர் கிராம நிர்வாகப் பணியிடத்தைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சி மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது. நடுவில் தொய்வடைந்திருந்த நிலவொளி இயக்கத்தைத் தூக்கிப் பிடிக்க என் நண்பர் ஒருவர் மூலம் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுத் தந்தேன். இப்பொழுது மறுபடியும் அவற்றை செம்மையாக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.''

மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு சில நேரங்களில் எதிர்ப்புகள் எழும். இப்படியான அனுபவம் உண்டா?

""நிறைய உண்டு. அப்போதெல்லாம் அவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைப் படிய வைத்ததும் உண்டு. ஒருமுறை ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை இடிக்கும்போது என் மனைவியின் உறவினர் வீடும் இடிபட்டது. அவர் அதை எதிர்த்து நீதிமன்றம்கூடச் சென்றார். அரசுப் பணியில் கண்டனக் கடிதங் களும், எதிர்ப்புச் சுவரொட்டிகளும் தன்னைப் பற்றி யாரும் ஒட்ட வில்லை என்று யாராவது சொன்னால், அவர்கள் எந்த ஆக்கப் பூர்வமான பணியையும் ஆற்றவில்லை எனப் பொருள்.''

கடலூரில் பணியாற்றியபோது முதல் கவிதைத் தொகுப்பான "பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்' வெளியிட்டீர்கள். அரசு நிர்வாகத்தின் நெருக்கடிகளுக்கிடையில் எழுதுவதற்கான படைப்பு மனநிலையை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

""என் படைப்புகள், பணியென்னும் உணவைப் பரிமாறும் வாழை இலையாக ஒத்தாசை புரிந்திருக்கின்றனவே தவிர, என் பங்களிப்பைக் கெடுக்கும் சாதத்தில் கிடக்கும் கற்களாக இருந்ததில்லை. அவையே எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஊட்டச்சத்து.''

கவிதை, சிறுகதை, நாவல், வாழ்வியல் கட்டுரைகள் என பலதரப்பட்ட படைப்புகளில் பயணம் செய்கிறீர்கள்.  தற்போது கவிதை எழுதுவதை விட்டுவிட்டீர்களா?

""அண்மையில்கூட "வைகை மீன்கள்' என்ற நீண்ட கவிதை யொன்றை எழுதியிருக்கிறேன். விஜயா பதிப்பகம் வெளியிட்டுள் ளது. படைப்பின் தேவைக்கேற்ப ஊடகத்தைத் தேர்ந்தெடுக்கிறேன். "சறுக்கு மரம்' என்பது கவிதை நடையில் எழுதப்பட்ட அனுபவத் தொகுப்பு. சுற்றுலா தொடர்பான பல பாடல்களும் எழுதியிருக் கிறேன். நான் முழுநேரப் படைப்பாளியோ தீவிரப் படைப்பாளியோ அல்ல; மக்கள் மொழியைப் பேசும் சாமானிய வழிப்போக்கன் மட்டுமே.''

நீங்கள் இலக்கிய மனம் படைத்தவர் என்பதால், சுற்றுலாத் துறையில் பணியாற்றுவது மிக இயல்பாக இருக்கிறதா?

""உண்மைதான். படைப்புத் திறனுடன் இருப் பவர்கள் பல புதுமைகள் செய்ய ஏற்றதாகச் சுற்றுலாத் துறை இயங்குகிறது. நூற்றுக்கணக்கில் சுற்றுலா தொடர்பான கட்டுரைகளை எழுதி, பல இதழ்களில் வெளியிடச் செய்தது என்னுடைய தனிப்பட்ட முயற்சி. "இலக்கியம்' என்பது புதியன படைத்தலோடு தொடர்புடையது என்பதால், அந்த வகையில் சுற்றுலாத் துறை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது.''

விருந்தினர் போற்றுதும், சுற்றுலா நட்பு வாகனம், அறியப்படாத சுற்றுலாத் தலங்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆங்கிலம் என நிறைய புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறீர்கள். இவை எந்த அளவுக்குப் பயனளித்திருக்கின்றன?

""சுற்றுலாவைப் பொறுத்தவரை அது உடனடியாகப் பயன் தருவதில்லை. "குடும்பக் கட்டுப்பாடு' மக்கள் மனத்தில் வேரூன்ற எத்தனையாண்டுகள் ஆயின என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தொடர்ந்து தீவிரமாகத் தொய்வு விழாமல் செயல் படுத்தினால் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஊடகங்கள் இதில் பெரும் பங்கை ஆற்ற வேண்டும். அப்போதுதான் இது சாத்தியப்படும்.''

சுற்றுலாவுக்கும் இலக்கியத்துக்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறது. தமிழகத்தில் அந்தத் தொடர்புகள் சுற்றுலா மேம்பாட்டுக்கு உதவுகின்றனவா?

""இப்போதுகூட செம்மொழி மாநாட்டின் இறுதியில், "குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தமிழ் இலக்கிய நில அமைப்புகள் அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் சார்ந்த சுற்றுலாவிற்கு இது வழிவகுக்கும். இலக்கியத்தை முதன்மைப்படுத்தி இன்னும் அதிக அளவில் நாம் சுற்றுலாத் தலங்களை உருவாக்க முடியும். அதற்குத் தொலைநோக்குப் பார்வை தேவை.''

வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்வதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது. இந்த சிகரத்தை அடைந்தது எப்படி?

""இதற்கான முயற்சிகள் கடந்த நான்காண்டு காலமாகப் பல்வேறு வகையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய முகாம்களில் தவறாமல் கலந்து கொண்டதும், விளம் பரங்களைச் சிறப்பான முறையில் சர்வதேச இதழ்களில் வெளியிட் டதும் முக்கிய காரணம். இந்தியா என்கிற இடம் தெரிந்த அளவுக்கு "தமிழ்நாடு' என்பது வெளிநாட்டினருக்குத் தெரியவில்லை. அதை முதன்மைப்படுத்துவது அவசியம். அண்மையில் நேபாளம் சென்றிருந்தோம். அங்கு தென்னிந்தியா தெரிந்த அளவு, தமிழ்நாடு என்கிற பகுதி அவர்களுக்குத் தெரியவில்லை. நம் மாநிலத்தில் 36,000 கோவில்கள் இருக்கின்றன என்றவுடன் அவர்கள் அசந்து போனார்கள். நம் கோவில்களின் பிரம்மாண்டத்தைப் பார்த்தால் அவர்கள் லட்சக்கணக்கில் சுற்றுலா வரத்தொடங்கி விடுவார்கள்.

விளம்பரம் என்பது அறிமுகம்தான். அதனாலேயே முதலிடம் பெற்றுவிட முடியாது. நம் மருத்துவ வசதி, கல்வி நிறுவனங்கள், நாம் அறிமுகப்படுத்திய "விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும்' திட்டம், நேர்நிகர்ச் சுற்றுலா, கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு, நாம் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், "மாமல்லபுரம் இந்திய நாட்டியத் திருவிழா' போன்ற பல முயற்சிகள் இந்த இடத்தை அடைய உதவியிருக்கின்றன. வழிகாட்டிகள் பயிற்சியும் இதற்குக் காரணம்.

திருமலை நாயக்கர் ஒலி- ஒளிக் காட்சி போன்று இன்னும் பல இடங்களில் நம்மால் ஒலி- ஒளிக் காட்சியை அமைக்க முடியும். இது மாதிரியான தகவல்கள் இன்னும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். இப்போது மாமல்லபுரத்தில் அமைந்துள்ள செம்மொழிச் சிற்பப் பூங்கா, மாட்டுவண்டிச் சுற்றுலா போன்ற புதுமைகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். "எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்' என்ற பேருந்து வசதி மாமல்லபுரம் வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலிடத்தைத் தக்கவைக்க இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கிருக்கிறது. எல்லா தரப் பினருடைய ஒத்துழைப்பும் இருந்தால்தான் இதை நிலைநிறுத்த முடியும்.

நான்கு ஆண்டுகளாக இதே பணியில் நான் நீடித்ததும், சுற்றுலாவையும் பண்பாட்டையும் இணைத்துத் தமிழக அரசு புதுத் துறையை உருவாக்கியதும் இதை அடையப் பெருமளவில் உதவின.''

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழர் களுக்கு சுற்றுலா மனோபாவம் இருக்கிறதா?

""ஆன்மிகத் தலங்களுக்கு மட்டுமே சென்று கொண்டிருந்தவர்கள், இப்போது ஓய்வுச் சுற்றுலா வும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இன்றும் வார இறுதியில்தான் கோடை விடுமுறையில்கூடச் சுற்றுலா மேற்கொள்கிறார் கள். இம்மனநிலை மாற வேண்டும். வங்காளிகள் போல தமிழர்கள் சுற்றுலா மேற்கொண்டால், நம்முடைய மாநிலத்தின் பெருமையும் அருமையும் அவர்களுக்குப் புரியும்.''

"தொல்லியல் சுற்றுலா' என்றொரு திட்டத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். அது என்ன? அதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

""பழமையை நாடும் கல்வியியலார் இச்சுற்றுலாவைப் பெரிதும் விரும்புவார்கள். கல்வெட்டுகள், சிதிலமடைந்த கோட்டைகள் போன்றவற்றைக் கண்டு, நம் அறிவை இன்னும் ஆழப்படுத்திக் கொள்வதே "தொல்லியல் சுற்றுலா'. இது வரவேற்பைப் பெற குறைந்தபட்சம் இன்னும் மூன்று ஆண்டுகளாவது தேவைப்படும்.''

பட்டி மன்றங்களே சிரிப்பு மன்றங்களாக மாறி வழக்கொழிந்து வருகின்றன. இந்த நேரத்தில் நீங்களும் பட்டிமன்றத்திற்கு வந்திருக்கிறீர்கள். இதை எப்படி உணருகிறீர்கள்?

""தரமான பட்டிமன்றங்களை முன்னின்று நடத்தினோம். "போர்கள் விளைவித்தது ஆக்கமா? அழிவா?' என்றெல்லாம் தலைப்பு வைத்தோம். இருந்தாலும் அதிகாரியாக இருந்துகொண்டு பட்டிமன்றங்களில் பேசுவது சிரமமாக இருந்தது. எனவே நிறுத்தி விட்டேன்.''

நீங்கள் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசி வருகிறீர்கள். அது மனதுக்குத் திருப்தி அளிக்கிறதா?

""திருப்தி அளிக்காத எதையும் எந்தக் கட்டாயத்தின் பேரிலும் நான் செய்வதில்லை. அதைப்போலவே நான் செய்யாதது எதையும் அடுத்தவர்களுக்குச் சொல்வதுமில்லை.''

பத்து ஆண்டுகளுக்கு முன்பு "நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்' என்ற நூலை எழுதியிருக்கிறீர்கள். அந்த நூல் இளைஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி சொல்லுங்களேன்?

""அந்த நூல் "ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்' என்பது. அதன் தாக்கத்தைப் பற்றி நானே சொல்வது முறையாகாது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் இதுவரை விற்றிருக்கின்றன என்பதிலிருந்து நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.''




சுய முன்னேற்றம் தரும் வாழ்வியல் கட்டுரைகள் எழுதும் நீங்கள், "சாகாவரம்' என்ற நாவலில் மரணத்தைப் பற்றி எழுதக் காரணம் என்ன?

""மரணம் எல்லாருக்குள்ளும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிற வலி. மற்றவர்கள் மரணம் அடையும்போதெல்லாம் நமக்குள்ளும் சிறிது செத்துப் போகிறோம். மரணம் குறித்துப் பேசப் பயப்படு பவர்களைக்கூடப் பார்த்திருக்கிறேன். மரணம் இயல்பானது என்பதை கட்டுரை மூலமாகச் சொல்வதைவிட நாவல்வழியாகச் சொல்வது நல்லது என நினைத்தேன். என்னைச் சுற்றியே கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவையெல்லாம் என்னைத் தீவிரமாகச் சிந்திக்க வைத்தன.

மரணம் என்பது ஒரு "இருத்தலியல் கேள்வி'. அதைப் படைப்பில் கொண்டுவர எண்ணி தினமும் ஒரு மணி நேரம் எழுதி, ஒரு மாதத்தில் முடித்த நாவல் அது. படித்தவர்கள் சிலர் மரண பயத்திலிருந்து தாங்கள் விடுபட்டு விட்டதாகக் கூறியபோது மகிழ்ந்தேன்.

"மரணத்திற்கடுத்த வாழ்வு' பற்றி அடுத்த நாவலைக் கட்டமைக்க உள்ளேன்.''

இலக்கியம், பேச்சுக் கலை, நிர்வாகம் என நீங்கள் ஈடுபடும் துறைகளில் திறம்படப் பணி செய்திருக்கிறீர்கள். அதற்கான மன நிறைவும் அங்கீகாரமும் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?
""மன நிறைவு கிடைத்திருக்கிறது. இன்னும் நிறைய பணிகள் ஆற்ற முடியும். அதற்கான ஆற்றலை இயற்கை வழங்கியிருக்கிறது. உலகம் இன்னும் வாய்ப்பை வழங்கவில்லை. வழங்கும்போது இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவேன்.''

விளைநிலங்கள் வீட்டு மனைகளாக நிலப்பரப்புகள் சுருங்கி வரும் நிலையில் சுற்றுலாத் துறையின் தேவை அதிகரிக்கிறதா?

""சுற்றுலா இன்றைய அயர்வுச் சூழலில் ஆடையைப்போல அவசியம். உடல்நலம் ஓங்கவும் மனநலம் சிறக்கவும் சுற்றுலாவே அபயம் தரும் இடம் என்பதை மக்கள் உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. கான்கிரீட் காடுகளில் மூச்சுத் திணறுபவர்கள், பயணத்தின் மூலம் மட்டுமே பரவசமடைய முடியும்.''

மாமல்லபுரம், மீனாட்சியம்மன் கோவில் போன்ற சில சுற்றுலாத் தலங்களில் வியாபாரக் கடைகள் அதிகமாகி, மகிழ்ச்சியாகப் பார்க்கும் அழகு குறைந்து வருகிறதே?

""உண்மைதான். எல்லா இடங்களையும் வர்த் தகத்தால் எச்சப்படுத்தும் நிலை மாற வேண்டும். அதற்கான பல முயற்சிகளை சுற்றுலாத் துறை எடுத்து வருகிறது.''

தனிப்பட்ட முறையில் நீங்கள் பார்க்க விரும்பும் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்கள்?

""ரோம், கிரேக்கம், எத்தியோப்பியா ஆகிய நாடுகள்.''

சமீபகாலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்வு விகிதம் அதிகரித்திருக்கிறதா?

""மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு பல மடங்காகி இருக்கிறது.''

ஒரு வார இதழில் (இந்தியா டுடே) சிறந்த செயலூக்கமுள்ள மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். முதலியார்குப்பம் தவிர்த்து உங்களுக்கு மன நிறைவளிக்கும் பணி எது?

""அரசின் நிர்வாகப் பணிகளில் பொதுமக்களுக்கு நிறைய பங்களிப்பு செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவை அனைத்துமே மன நிறைவைத் தருபவை. சில பணிகளை இப்போது நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறது.

சாராட்சியராக இருந்தபோது பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது ஆளுங்கட்சியின் கட்சி அலுவலகப் படிகளையே அகற்ற நேர்ந்தது; நாகை அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வாங்கி, வெகுகாலமாகக் கோரிக்கையாக இருந்த சுற்றுச்சுவரைக் கட்டியபோது ஏற்பட்ட திருப்தி; மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு நிலம் தேர்வு செய்தது; திருத்துறைப்பூண்டியிலிருந்து கடத்தப் பட்ட சிலிகான் மணலைக் கைப்பற்றி, அவர்களை அரசுக்கு முதன்முறையாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து, அரசுக்கு வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தமை; ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் நிறுவன நடவு மூலம் சிறைச்சாலை, பள்ளி வளாகம், மருத்துவமனை போன்ற இடங்களில் பயனுள்ள மரங்கள் நட்டமை; நரிக்குறவர்களுக்கு வேறு தொழில்களுக்குக் கடனுதவி வழங்கியது; சிறைச்சாலைக் கைதிகளுக்குத் தொழில் கற்றுத் தந்தது; பெண்களுக்குத் தமிழகத்திலேயே முதன் முறையாக ஆட்டோ ஓட்டப் பயிற்சி தந்தது; காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தைப் புதுப்பித்தமை; குழந்தைத் தொழிலாளர்களை காஞ்சி நெசவுத் தறிகளிலிருந்து கட்டுப்படுத்தியது; மணல் லாரிகளைத் தார்ப்பாய் போர்த்திச் செல்லும் நடைமுறையை அமல்படுத்தியது; வீராணம் குழாய்களைக் கொண்டு மாவட்டத்தில் பாலங்களைக் கட்டியமை; எண்ணற்ற ஏரிகளின் வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரியமை; கேளிக்கைப் பூங்காக்களுக்கு வரிவிதிக்க முன்மொழிவு அனுப்பி அரசுக்கு வருமானம் ஈட்டிட வழிவகுத்தமை; செய்தித் துறையில் "தமிழரசு' இதழில் இலக்கிய மலர் கொண்டு வந்தமை; வார இதழ்களுக்குச் செய்தியாளர் அடையாள அட்டை வழங்கியமை; தமிழகச் சுற்றுலாத் துறை எட்டு தேசிய விருதுகளையும், ஒரு சர்வதேச விருதையும் பெற ஒரு கருவியாக இருந்தமை; சென்னைப் பூங்காக்களில் "பூங்காக்களில் பூங்காற்று' நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியமை; பிரபலமாகாத சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை; "தூரிகையில் தமிழகம்' என்ற காஃபி டேபிள் புத்தகம் கொண்டு வந்தது போன்ற பணிகள் மன நிறைவைத் தருகின்றன.''

ஒருமுறை மாமல்லபுர நாட்டிய விழாவில் இசைக் கருவிகள் பிறந்தது பற்றி உரையும் பாடலும் எழுதியிருந்தீர்கள். உங்களுக்கு பாடல் எழுதும் ஆர்வம் இருக்கிறதா?

""பாடல் எழுதும் தாகமும் உண்டு.''

சுற்றுலாவை மேம்படுத்த வேறென்ன புதுமையான திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

""சாகசச் சுற்றுலாவை பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம். நூறு இடங்களுக்குமேல் நேர்நிகர் சுற்றுலாவில் இடம் பெற வைக்க உள்ளோம்.

சுற்றுச்சூழல் சுற்றுலாவையும் மேம்படுத்த பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.

வண்ணத்துப்பூச்சி பூங்கா, நீர் விளையாட்டுகள் போன்றவை விரைவில் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இளைஞர் களை ஈர்க்க இப்புதிய திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.''

உங்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு திருக்குறளை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? அந்த ஆய்வு நூலாக வெளிவந்துள்ளதா?

""மேற்கத்திய நூல்களில் உள்ள மேலாண்மைக் கருத்துகள் நூல்களாக வந்துள்ளன. திருக்குறளில் முறையான ஆய்வு மேற் கொள்ள வேண்டும் என எண்ணி இந்த முயற்சியை மேற்கொண் டேன். இப்போது நூலாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.''

நேர்காணல்: கணியன் தமிழ்

கருத்துகள் இல்லை: