கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

அந்தக் கோழைகள்!... - ஜெயகாந்தன்

காம்பௌண்ட் கேட்டிற்கு நேரே வராந்தா விளக்கு வெளிச்சத்தில் சாய்வு நாற்காலியில் ஆள் காட்டி விரலைப் பக்க அடையாளத்திற்காக நடுவில் நுழைத்துப் பிடித்த 'பால்ஸாக்'கின் புத்தகம் ஒரு கையிலும், இன்னொரு கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டுமாய் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த டாக்டர் ராகவன் சாய்ந்து படுத்தான்.
அப்போது மணி மாலை ஏழுதான். அவன் தலைக்கு நேரே வராந்தா சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போர்டில் கண்டுள்ளபடி பார்த்தால் இது நோயாளிகளைச் சந்திக்க வேண்டிய நேரம்தான். நோயாளிகள் வரவில்லையென்றால் ஆஸ்பத்திரி அறைக்குள்ளேயே டாக்டர் அடைந்து கிடக்க வேண்டுமா என்ன? வழக்கமாக, இந்த நேரத்தில் அவன் தனது நண்பர்களையே எதிர்பார்ப்பான். இன்று அவர்களும் வரவில்லை.
டிஸ்பென்ஸரிக்குப் பாதியும், தான் வசிப்பதற்குப் பாதியுமாய் இரண்டாய்த் தடுக்கப்பட்ட அந்த வீட்டின் பின்புறத்தில் சமையற்கார ராமன் நாயர் 'மலையாள ராக'த்தில் எதையோ பாடிக்கொண்டு தன் வேலையில் முனைந்திருந்தான். இன்னும் சற்று நேரத்தில் அவனும் போய்விடுவான். ஒண்டிக்கட்டை ராகவனுக்குப் புத்தகங்களைத் தவிர வேறு துணையில்லை. ராகவனுக்குத் துணையும் அவசியமில்லை. எனினும் அவன் விரும்பிப் படிக்கின்ற பால் உணர்ச்சியைத் கிளறிவிடும் தன்மை மிகுந்த 'லவ்ஸ் ஆப் காசனோவா' வையோ 'லேடி சாட்டர்லீஸ் லவ்வர்'ஸையோ படித்து முடித்த போதெல்லாம் அவற்றின் இடையிடையே பென்சிலால் கோடிட்ட ரசமான பகுதிகளைக் கூச்சமில்லாமல் கொச்சையான வார்த்தைப் பிரயோகங்களோடு விளக்கிப் பேசி ரசனையைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை கிடைக்காதா என்று ஏங்கிய போதெல்லாம் அவன் தனது நண்பர்களைத் தேடியே போவதுண்டு.
கையிலிருக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்காத காரணத்தினாலேயே இன்று அவன் யாரையும் தேடிப் போகவில்லை.
ஈஸி சேரில் சாய்ந்து கண்களை மூடி சிகரெட்டில் ஆழ்ந்து புகையை இழுத்த பின் அதை வீசி எறிந்தான். மீண்டும் நிமிர்ந்து உட்கார்ந்த ராகவன் கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்தான். மூக்குக் கண்ணாடியின் மேல் சிகரெட்டு சாம்பலோ தூசோ படிந்து பார்வைக்கு இடையூறு ஏற்பட்டதால் அதைக் கழற்றித் துடைத்துக் கொண்டபின் காதோரங்களில் குறுகுறுக்கும் கிளுகிளுப்பு உணர்ச்சியோடு உள்ளில் விளைந்த லயமிக்க புன்னகையொளி முகமெங்கும் பரவ, அந்தப் பதினெட்டாம் நூற்றாண்டுப் பிரெஞ்சு வாழ்க்கையின் ஒழுக்கக் கேடான திருட்டுக் களியாட்ட வர்ணனைகளில் மூழ்கிப் போனான் ராகவன்.
ராகவனது புத்தக ரசனையையும், ஆண் பெண் உறவு சம்பந்தமான அவனது அலுப்புச் சலிப்பில்லாத சம்பாஷணைகளையும் கேட்டு அவன் முகத்துக்கெதிரே விழுந்து விழுந்து ரசித்த போதிலும் அவனது நண்பர்கள் அவனைப் பற்றி உள்ளூற ஒரு மாதிரியாகவே நினைத்திருந்தார்கள். இருப்பினும் முப்பத்தைந்து வயது வரையிலும் கட்டைப் பிரம்மச்சாரியாய் வாழ்ந்து வரும் ராகவனின் ஒழுக்க நடவடிக்கைகளில் எவ்விதமான களங்கத்தையும் அவர்களில் யாரும் இதுவரை கண்டதில்லை.
பகிரங்கமாக இவ்விதம் பேசிக்கொண்டு ரகசியமாக இவன் தவறு செய்கின்றானோ என்று வேவு பார்த்தவர்களும் உண்டு; அந்த முயற்சியில் அவர்கள் தோல்வியே கண்டு சலிப்புற்றார்கள்.
பொதுவாக, கூச்ச நாச்சமில்லாமல் சதா சர்வ காலமும் ஆண் பெண் உறவு பற்றியே இங்கிதமற்றுப் பேசிக் கொண்டிருக்கும் ராகவனோடு தங்களுக்கிருந்த தொடர்புகளை அறுத்துக் கொண்டு போன நண்பர்களும் உண்டு. அவர்களில் பலர் அவனைப் போன்ற பிரம்மச்சாரியாய் இருந்தபோது அவனது இத்தகைய பேச்சை வெகுவாக ரசித்தவர்கள்தான்.
ராகவனுக்குத் தான் பேசுகின்ற பேச்சைப் பற்றி மட்டுமல்லாமல், ஆண் - பெண் உறவு என்கிற விஷயத்தைப் பற்றியே எந்தவிதமான அசூயை உணர்வும் இல்லை. அது மாத்திரமல்லாமல், அந்த உறவே ஓர் உன்னதமான சமர்ப்பணமாகும் என்ற கருத்தும் அவன் கொண்டிருந்தான். ஆகவே தன்னைப் பற்றியோ, தனது கருத்துக்களைப் பற்றியோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற கவலையே அவன் கொண்டதில்லை. தன்னைத் தவறாகச் சிலர் நினைக்கக் கூடும் என்ற சம்சயம் கூட அவனுக்கு எழுந்ததில்லை. அவனது ரசனை சுய நோக்கில் எழுந்ததல்ல. வாழ்க்கையின் எண்ணற்ற லீலைகளை ஆழ்ந்து பயிலும் ஞானியைப் போல், தேர்ந்து ரசிக்கும் கலைஞனைப் போல், தான் என்ற தன்மை ஒட்டாது விலகி நின்று அவற்றை அனுபவித்ததனால் ஆண் - பெண் உறவு சம்பந்தமாய் அவன் அறிய நேர்ந்தவை அனைத்திலும் - அவை மற்றவர்களுக்கு எவ்வளவுதான் கீழ்த்தரமாகவும், அருவருக்கத் தக்கதாகவும் இருந்த போதிலும் கூட - அதிலுள்ள நிறைவையும் உயர்வையுமே அவன் புரிந்து கொண்டான்.
பிரபஞ்சத்தின் சகல உற்பவங்களுக்கும் அடிப்படை அதுவே என்னும் ஒரு சாதாரணமான உண்மை அவன் மனத்தில் ஒரு மகத்தான தத்துவமாய் நிலைத்தது. தனது பேச்சுக்கள் யாவும் அந்த மகத்தான உணர்வைப் புகழ்ந்து பாடும் உன்னதக் கவிதைகளாகவே அவனுக்குத் தோன்றின. அதனால்தான் தனது நிர்வாணமான சிந்தனைகளை வெளியிடும்பொழுது அதற்கு ஆடை கட்டி அலங்காரம் செய்ய வேண்டியது அவசியமில்லை என்று அவன் கருதினான்.
இந்த அடிப்படை உணர்வான ஆண் - பெண் உறவு குறித்து மனிதர்கள் ஏன் வெட்கமும் அருவருப்பும் கொண்டு ஆபாசம் என்ற பொய் வேஷமிட்டு ரகசியமான ஒரு குற்றமாய்ப் பேணி வளர்த்து வருகிறார்கள் என்று எண்ணி அவன் ஆச்சரியம் கொண்டதுண்டு. அதற்கான காரணத்தையும் அவன் கண்டான். 'ஒவ்வொருவரும் இது சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் தன்மயமான நோக்கிலேயே தரிசிக்கின்றனர். ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நிகழ்ந்த உறவினை விளக்கும் காட்சியானாலும், வர்ணனையானாலும் அதனை விலகி நின்று 'இது இயற்கையின் பொதுவான ஓர் இயல்பு' என்று காணாமல், தன்னையும் அதில் சம்பந்தப்படுத்தியே ஒவ்வொருவரும் 'சொந்தமாய்'ப் புரிந்து கொள்கிறார்கள்.'
'ஓர் ஆணாயிருந்தால் விவரிக்கப்பட்ட காட்சியில் அல்லது வர்ணனையில் குறிக்கும் ஆணின் ஸ்தானத்தில் தன்னை ஏற்றிக் கொள்கிறான். பெண்ணாக இருந்தால் அந்தப் பெண்ணின் ஸ்தானத்தை அவள் பிடித்துக் கொள்கிறாள். எனவே தான் இது பற்றிய பொதுவான எண்ணமே அற்றுப்போய்ச் சுயமான உறுத்தலே எஞ்சி நிற்கிறது. ஆகவே அவர்கள் வெட்கப்படுகிறார்கள்; வேஷம் போடுகிறார்கள். இது பற்றிய எந்தவொரு வர்ணனையும் ஒவ்வொருவருக்கும் தன்னையே குறிப்பதாகப் படுகிறது. தனிமையில் தன்னைத்தானே ரசிக்கும் ஒவ்வொருவரும் பிறர் முன்னிலையில் தம்மை மறைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர்; வேஷம் என்பதே அதுதான்.'
டாக்டர் ராகவனின் இந்தக் கருத்துக்கள் என்னதான் தர்க்க ரீதியாகவும் உயர்ந்தவையாகவும் இருந்த போதிலும், அவனது நண்பர்கள் மத்தியில் அவனுக்கு, 'பெர்வர்ட்' - வக்கரித்துப் போனவன் - என்ற பட்டத்தையே அவை வாங்கித் தந்தன. அவன் சிறிது சிறிதாக நண்பர்களால் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே வந்தான். அதனால் அவனது தொழிலும் கூடப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ராகவன் மட்டும் எதனாலும் பாதிக்கப்படுவதே இல்லை. நூல் நிலையங்களிலும் புத்தகக் கடைகளிலும் அவனுக்கு வேண்டிய புத்தகங்கள் உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்து குவிந்து கொண்டேயிருக்கின்றன.
கையிலிருந்த புத்தகத்தின் அத்தியாயம் ஒன்றைப் படித்து முடித்த நிறைவில் நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காகப் பக்கத்தில் வராந்தா கைப்பிடிச் சுவர் மீது வைத்திருந்த சிகரெட் டின்னை எடுத்தான் ராகவன்.
டின் காலியாக இருக்கவே உட்கார்ந்த நிலையிலேயே ராமனை அழைத்தவாறே உட்பக்கம் திரும்பியபோது சமையற் காரியங்களை முடித்துவிட்டு ஈரத் துண்டால் முகம் துடைத்துக் கொண்டே வந்தான் ராமன் நாயர்.
பாஷை தெரியாத காரணத்தால் ராகவனின் பேச்சும் சிந்தனையும் அவனுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. ஆயினும் தனது அன்றாடக் காரியங்களில் எவ்வித நிர்ணயமும் இல்லாத பேர்வழி இவன் என்று ராகவனைப் பற்றி ராமன் நாயர் அறிந்து வைத்திருந்தான். நேரங் கெட்ட நேரங்களில் அவன் சாப்பிடுவதையும், பல சமயங்களில் சாப்பிடாமலேயே படித்துக் கொண்டிருப்பதையும் கண்ட ராமன் நாயருக்கு அவன் மீது ஒரு பரிதாபமுண்டு. கூடியவரைக்கும் அங்கு வேலைக்கு வரும்போது ஏற்பட்ட ஒப்பந்தப்படி அவனது காரியமான சமைக்கும் வேலை முடிந்தவுடன் போக மனமின்றி, தான் புறப்படுவதற்கு முன் தன் கையாலேயே அவனுக்குச் சோறு பரிமாறி விட்டும் போய் விட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு ஒவ்வொரு வேளையும் அவன் காத்து நிற்பான். பலசமயம் தன்னைக் கவனியாது சம்பாஷணைகளிலோ அல்லது புத்தகங்களிலோ மூழ்கி கிடக்கும் ராகவனுக்குச் சாப்பாட்டு நினைவை ஊட்டும் முறையில் "அப்போ ஞான் வரட்டே?" என்று புன்னகையோடு கேட்டு நிற்பான். அதில் உள்ள பொருள் புரியாமல் ராகவன் அவனைப் போகுமாறு சொல்லி விடுவான்.
எத்தனையோ முறை அடுத்த வேளைக்கு அவன் சமைக்க வந்தபோது, முதல் வேளைக்குச் சமைத்தது அப்படியே இருக்கக் கண்டு ராமன் நாயர் மனம் நொந்ததுண்டு.
அவ்விதம் ராகவனுக்கு இரவுச் சாப்பாடு பரிமாறிவிட்டுப் போகக் காத்திருந்த ராமன் நாயர் அவன் தன்னை அழைத்தது கண்டு குதூகலத்தோடு அருகில் வந்தான்.
"ஊணு கழிக்கான் வருந்தோ - ஸாரே?" என்று கேட்டவாறு எதிரில் நிற்கும் ராமன் நாயரைத் தலை நிமிர்ந்து ஒன்றும் புரியாமல் பார்த்தான் ராகவன். தான் அவனை எதற்கு அழைத்தோம் என்பதை அந்த ஒரு வினாடியில் திடீரென்று அவன் மறந்து போய் இருந்தான். அதை யோசித்தவாறே கையில் இருந்த காலி சிகரெட் டின்னைத் திறந்த போதுதான் அவனுக்கு நினைவு திரும்பியது.
"எனக்குப் பசிக்கலே; உள்ளே என் டேபிள் மேலே சிகரெட் டின் இருக்கு, அதைக் கொண்டு வந்து கொடுத்துட்டு நீ வீட்டுக்குப் போ" என்று சொல்லி விட்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். உள்ளே ஹால் சுவரில் இருந்த கடிகாரத்தில் எட்டு மணி அடித்தது.
சிகரெட் டின்னைக் கொண்டு வந்து கொடுத்த ராமன் நாயர் இரும்புக் கேட்டைத் திறந்து கொண்டு வெளியேறினான். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு ஆள் காட்டி விரலைப் பக்க அடையாளத்துக்கு நுழைத்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தவாறே சாய்வு நாற்காலியில் சரிந்து படுத்தான் ராகவன்...
ஒரு புதிய அத்தியாயத்தின் சுவாரஸ்யமான முதல் பாராவை அவன் படித்துக் கொண்டிருக்கும்போது இரும்புக் கேட்டை யாரோ திறக்கும் சப்தம் கேட்டது. மூக்குக் கண்ணாடியை உயர்த்தி விட்டுக் கொண்டு அவன் நிமிர்ந்து பார்த்தான். இருளில் உருவம் சரியாகத் தெரியாததால், தனது நண்பர்களில் யாராவது வரலாம் என்று ஊகத்தில் அவன் மனம் குதூகலித்தது. அந்தப் புத்தகத்தை முழுக்கப் படித்து அவன் முடிக்காதிருந்த போதிலும், படித்தவரை அவன் மனசைக் கொள்ளை கொண்டு விட்ட சில விஷயங்களை யாருக்காவது விளக்கிக் காட்ட அவன் துடித்துக் கொண்டிருந்தான். அந்த இன்பானுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணை வருகிறது என்ற ஆர்வத்தோடு அவன் காம்பௌண்ட் கேட்டையே பார்த்துக் கொண்டிருக்கும்போது அவனை நோக்கி மெல்ல மெல்ல வந்த அந்த உருவம் ஒரு பெண்ணென்று புரிந்தது.
அவனது வைத்தியசாலைக்கு வைத்தியம் செய்து கொள்ளப் பெண்கள் யாரும் வருவதில்லை. நோயாளிகளைச் சந்திக்கும் நேரமும் கடந்து போய்விட்டது. இருப்பினும் தன்னைத் தேடி வந்த யாரையும் புறக்கணிக்க முடியாத நிலையில் தன் அருகே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு, வந்தவளை உட்காரச் சொல்லி உபசரித்தான் ராகவன்.
அவளை அதற்கு முன்பு பார்த்திருந்த நினைவும் பார்க்க நேர்ந்த சம்பவங்களும் அவன் மனத்தில் படிப்படியாய்த் தோற்றங் கொண்டன. எனினும் அவளது பெயர் அவனது நினைவுக்கு வரவில்லை.
அவளைப் பற்றித் தனக்கு நினைவிருக்கிறது என்று காட்டிக் கொள்ள - அவளது பாட்டியைப் பற்றி விசாரித்தான் ராகவன்.
அவனது விசாரிப்பைச் செவிகளில் ஏற்றும் தலை குனிந்த சிந்தனையோடு கைவிரல் நகத்தைப் பிய்த்தவாறு உடல் குறுகி உட்கார்ந்திருந்தாள் அந்தப் பெண். அவள் அவனைப் பார்க்காமல் முகம் கவிழ்ந்து உட்கார்ந்திருந்ததால் அவளை அவனால் தீர்க்கமாகப் பார்க்க முடிந்தது.
இரண்டு வருஷங்களுக்கு முன்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவன் அவளைப் பார்க்க நேர்ந்தபோது இருந்ததை விடவும் இப்பொழுது அவள் தோற்றம் வெளிறியும் வரண்டும் இருந்தது. உடல் நிலை மட்டுமல்லாது அவளது வாழ்க்கை நிலையே மிகவும் நொறுங்கிப் போயிருக்கிறது என்பது அவள் அணிந்திருந்த சாயம் போன கந்தல் புடவையில் தெரிந்தது.
அவளது புறங்கையின் மேல் ஒரு துளி கண்ணீர் சிந்தியதை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டு முகம் நிமிர்த்தி அவனை நோக்கிக் கரகரத்த குரலில் "ஆயா செத்து ஒரு வருஷம் ஆச்சி..." என்று கூறும்போது அவளது உதடுகள் துடித்தன.
ஒரு பெருமூச்சுடன் அவன் வேறுபுறம் பார்வையை மாற்றினான்.
இந்தப் பேத்தியின் மீது உயிரையே வைத்திருந்த இந்தக் கிழவியின் முகம் அவன் கண்களில் தெரிந்தது. அந்தச் சம்பவம் அவன் நினைவில் புரண்டது. அவளிடம் கேட்டான்: "உன் பெயர்..."
இதற்கிடையே அவன் முகம் திரும்பாமலேயே தலை நிமிராமலே அவள் பதில் சொன்னாள்: "ராதா".
அவள் சொல்வதற்கு முன்பு நிலவிய ஒரு விநாடி மௌனத்தில் அவனுக்கே அந்தப் பெயர் நினைவுக்கு வந்தது.
"ராதா" என்று முனகியவாறே அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளும் முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. உணர்ச்சிக்கே இடமில்லாமல் ஒளி மங்கிய சூன்யமான விழிகள். பாழடைந்த மாளிகையின் இடிபாடுகளிடையே கூட பதுங்கிக் கிடக்கும் 'பழைய பெருமை' போல், அவளிடமிருந்து குடியோடிப் போன அழகின் சுவடுகள் அவள்மீது ஒரு பச்சாதாபமே கொள்ளச் செய்தன.
டாக்டர் ராகவனுக்கு - தன் சுபாவப்படி அவள் பெயர் திடீரென்று மறந்து போனாலும் கூட - அவளைப் பற்றி நன்கு தெரியும்...
இரண்டு வருஷங்களூக்கு முன் ஒரு நாள் இதே நேரத்தில், கண்ணீரும் கம்பலையுமாய் ஓடி வந்த ராதாவின் பாட்டி, ஈஸிசேரில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த ராகவனின் அருகே தரையில் மண்டியிட்டு, இரண்டு கைகளையும் ஏந்தி, "டாக்டரையா! ஒரு உசிரைக் காப்பாத்துங்க - நாங்க ஏழைங்க... கொஞ்சம் வந்து பாருங்க சாமி" என்று அழுது புலம்பி அழைத்தபோது அவளுக்கு ஆறுதலும் கூறி அவள் பின்னே சென்றான் ராகவன்.
நகர அபிவிருத்திக்கென்று புதிதாகக் கட்டப்பட்ட வீடுகள் நிறைந்த அந்தப் பகுதியை ஒட்டியே இவ்வளவு சீர் கேடான ஒரு பகுதி இருக்குமென அவன் நினைத்தும் பார்த்ததில்லை.
கிழவையைப் பின்தொடர்ந்து சிறிய சந்துக்களில் நுழைந்து, தெருவின் குறுக்காகப் பாய்ந்த சாக்கடைகளைத் தாண்டி, சமயங்களில் 'சளக்'கென்று சாக்கடை நீரில் கால் பதித்து - ஒருவாறாக அந்த இருண்ட குடிசையின் உள்ளே வந்து நுழைந்தான் ராகவன்.
வாசற்படி அருகிலேயே அவனை நிறுத்தி வைத்து விட்டுப் பக்கத்துக் குடிசையிலிருந்து தீப்பெட்டியை வாங்கிக் கொண்டு வந்து மாடத்திலிருந்த விளக்கைப் பொருத்தினாள் கிழவி.
அந்த மங்கிய விளக்கொளியில் சுவரோரமாய் மல்லாந்து படுத்திருந்த அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்டு, காரியம் கை மீறிப் போய்விட்டதோ என்று துணுக்குற்றான் ராகவன். கையில் விளக்கோடு அவள் அருகில் அமர்ந்த கிழவி, "ராதாம்மா... இதோ பாரு, டாக்டரு வந்திருக்காரு..." என்று அவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு விம்மி அழுதாள்.
"கொஞ்சம் நகந்துக்கம்மா" என்று கிழவியை விலக்கி அவள் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்து அந்தப் பெண்ணின் கண்ணிமைகளை விலக்கிப் பார்த்தான் ராகவன். பின்னர் அசைவற்றுக் கிடந்த அவள் கரத்தைப் பற்றி நாடியைப் பரிசோதித்தான்.
"பாவிப் பொண்ணு! இப்படிப் பண்ணிட்டாளே, பயமா இருக்குது சாமி... நீங்கதான் தெய்வம் மாதிரி..." என்று புலம்பிக் கொண்டிருந்த கிழவியை நிமிர்ந்து பார்த்து "என்ன நடந்தது?" என்று விசாரித்தான் ராகவன்.
சேலைத் தலைப்பை வாயில் அடைத்துக் கொண்டு "அது இன்னா எழவு மருந்தோ... இத்தெக் கரைச்சுக் குடிச்சிட்டிருக்கா" என்று ஒரு அலுமினியம் தம்ளரை எடுத்து அவன் முன் நீட்டினாள் கிழவி. அந்தத் தம்ளரைக் கையில் வாங்கி வெளிச்சத்தில் நீட்டி, பின்னர் மோந்து பார்த்தான் ராகவன் - தம்ளரைத் தரையில் வைத்து விட்டு எழுந்து நின்றான். ஒரு தடவை நெற்றியைச் சொறிந்து கொண்டு கண்ணை மூடி யோசித்தான்.
"தரும தொரை... நாங்க ஏழைங்க... பொண்ணு பொழைப்பாளா..." என்று கெஞ்சிப் புலம்பியவாறே அவன் காலடியில் மண்டியிட்டு உட்கார்ந்த கிழவியை "ஸ்..." என்று கை அமர்த்தி அமைதியாய் இருக்கும்படி சொன்னான். பின்னர் விளக்கை எடுத்து மாடத்தில் அவனே வைத்தான். தனது கைப் பையை வெளிச்சத்தில் எடுத்துத் திறந்து 'சிரிஞ்சை' எடுத்தான். வெளிச்சத்துக்காக விளக்கைத் தூண்டினான். இன்ஜக்ஷன் மருந்தைத் தேடி எடுத்தவாறே "கொஞ்சம் தண்ணி குடுங்க.." என்று கூறினான். கிழவி அவன் அருகே இருந்த அலுமினியம் தம்ளரை எடுத்தாள். ஒரு வினாடி அவளை முறைத்துப் பார்த்து "வேறே பாத்திரமே இல்லையா?..." என்றதும் தன் பிழையை உணர்ந்த கிழவிக்குப் பயத்தால் கை நடுங்க ஆரம்பித்தது.
"பயப்படாதீங்க, உங்க பொண்ணுக்கு ஒண்ணும் ஆபத்தில்லே" என்று கூறி 'சிரிஞ்சி'ல் இறக்கிய மருந்தை அந்தப் பெண்ணின் கரத்தில் ஏற்றுவதற்காக அவளின் கையை உயர்த்தினான்.
வேறொரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்த கிழவி, "அது என் பொண்ணு இல்லீங்க. மக வவுத்துப் பேத்தி... சின்ன வயிசிலேயே அனாதையா ஆயிடிச்சி... அதுந்தலை எழுத்து. இப்ப அது ஊத்தற கஞ்சிதான் நான் குடிக்கிறேன். என்னெத் தவிக்க உட்டுட்டு எப்படித்தான் சாவறதுக்கு மனசு வந்திச்சோ..." என்று மீண்டும் ஒருமுறை புலம்ப ஆரம்பித்தாள் கிழவி.
அந்த வார்த்தைகள் மனத்தில் ஆழமாகத் தைத்தும் முகத்தில் சலனமேதுமின்றி 'சிரிஞ்சை'க் கழுவினான் ராகவன்.
புறப்படு முன் சில மாத்திரைகளைப் பொட்டணமாக மடித்துக் கிழவியிடம் தந்து "ஒண்ணும் பயப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நாழியிலே முழிக்கும். முழிச்சா - மோர் கெடைக்குமா? இல்லாட்டி பச்சைத் தண்ணி குடுங்க. வேறே ஒண்ணும் வேணாம். ரெண்டு மணிக்கு ஒரு தடவை இந்த மாத்திரையிலே ரெண்டு குடுங்க..." என்று கூறி அவன் திரும்பும்போது,
"சோடா குடுக்கலாங்களா...?" என்று பின்னால் வந்தாள் கிழவி.
"ஓ... குடுக்கலாம். காலையிலே வந்து எப்பிடி இருக்குதுன்னு சொல்லுங்க மருந்து தர்ரேன்" என்று சொல்லி விட்டுச் சுவரோரமாய்ப் படுத்திருந்த அந்தப் பெண்ணை மீண்டும் ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு வெளியேறினான் ராகவன்.
அவன் முதுகுக்குப் பின்னாலிருந்து "புண்ணியவான்; நல்லா இருக்கணும்" என்று கிழவி நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகின்ற குரல் கேட்டது.
அதன் பிறகு அந்தப் பெண்ணே இரண்டொருமுறை அவனது டிஸ்பென்ஸரிக்கு வந்திருக்கிறாள். ராகவன் கேட்ட கேள்விகளுக்குத் தலை குனிந்திருந்த அவளது மௌனமான பதில்களிலிருந்தும், அவள் வாய் மூலமே அறிந்த செய்திகளிலிருந்தும் அவளது 'வியாதி'யையும் அவளது வாழ்க்கையையும் அவன் பூரணமாக அறிந்து கொண்டான்.
அவளையும் அவளது பாட்டியையும் நினைக்கும்போது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை நேரிடையாகச் சாமாளிக்கும் ஆத்ம பலம் அவர்களுக்கு இல்லாததனால், அந்தப் பலவீனத்தாலேயே வாழ்க்கையின் அந்தப் பிரச்னைகள் யாவும் அவர்களுக்குத் தவிர்க்க முடியாத சிக்கல்களாயின என்று அவன் உணர்ந்தான்.
குழந்தைப் பருவத்திலேயே தாய் தந்தையரை இழந்துவிட்ட அவளை எடுத்து வளர்த்த பாட்டியைத் தள்ளாத வயதில் தனிமையில் விட்டுவிட்டுச் செத்துப் போக அவளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ என்ற எண்ணம் வந்த போது, அதே நினைவில் அன்று கிழவி கூறிய வார்த்தைகள் அவனுக்கு நினைவு வந்தன.
"...இப்ப அது ஊத்தற கஞ்சிதான் நான் குடிக்கிறேன். என்னைத் தவிக்க விட்டுட்டு எப்படித்தான் சாவறத்துக்கு மனசு வந்துச்சோ?"
அவள் அவனது டிஸ்பென்சரிக்கு வந்தபோது மிகவும் சுயாபிமானத்தோடு நடந்து கொண்டாள். மருந்து வாங்கிக் கொண்டு திரும்பும்போது ராகவனின் மேஜையின் மேல் இரண்டு ஒற்றை ரூபாய் நோட்டுக்களை அவள் வைத்தாள்.
"என் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு என்னால் தர முடிந்தது இவ்வளவே" என்று வாய்விட்டுக் கூறாத நன்றியுணர்ச்சி, நின்ற தயக்கத்திலும் நீர் மல்கிய கண்களிலும் தெரிந்தது.
ராகவனின் உதடுகள் துயர உணர்ச்சியில் விளைந்த ஒரு லேசான புன்னகையில் துடித்தன: "எனக்கு இது தொழில்தான்; ஆனாலும் நான் எல்லார்கிட்டேயும் பணம் வாங்கறதில்லே" என்று அவள் கொடுத்ததை ஏற்க மறுத்ததும் அவள் உதட்டைக் கடித்தவாறே அந்த ரூபாய்களை எடுத்துக் கொண்டாள். அவள் மௌனமாக நின்றிருப்பதைக் கண்டு எதிரில் உள்ள பெஞ்சியில் உட்காரச் சொன்னான். அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று அவளைக் கேட்டான்: "ஆமாம், உனக்கு என்ன தொழில்? - நான் தெரிஞ்சிக்கிறதிலே தவறில்லையே...?"
அவள் ராகவனின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்து - இந்த டாக்டர் தன்னைத் தவறாக நினைத்து விட்டார் என்ற உறுத்தல் மனத்தில் இருந்தும் - நிதானமாகவே பதில் சொன்னாள்: "தவறான தொழில் எதுவும் செய்யலே! ஒரு தவறான ஆணைச் சரியான துணை என்று நம்பினதாலேதான் எனக்கு இந்தக் கதி! அதுக்காக - நான் பண்ண தப்பாலே எனக்குக் கிடைச்ச..." என்று உடலிலிருந்து கழன்றும் மனசிலிருந்து நீங்காத அந்த வடுவை வாய்விட்டுக் கூற முடியாமல் அவள் தவித்தாள்.
ராகவன் தன் சுபாவப்படியே 'படீ'ரென்று கேட்டான்: "கலைஞ்சி போன அந்த விஷயத்தைப் பத்திச் சொல்றியா?"
அந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் உள்ளிலும் உடலிலும் ஒரு நடுக்கம் பிறந்தது. அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் குனிந்த தலையோடு கண்களில் நீர் பெருக அவள் பேசினாள். "அதைக் கலைக்கணும்னு நான் ஒண்ணும் பண்ணலே; உயிரையே மாய்ச்சிக்கலாம்னுதான் வெஷம் குடிச்சேன்... அப்படி ஒரு பாவத்தைச் செய்துட்டு உயிர் வாழணும்னு எனக்கு ஆசையுமில்லை" என்று அவள் அழுது அழுது பேசிக் கொண்டிருக்கும்போது அவன் குறுக்கிட்டுப் பேசினான்.
"இதெல்லாம் நீ சொல்லாமலே எனக்குத் தெரியும்; நான் கேட்டது, நீ எப்படி வாழ்க்கை நடத்தறே? உனக்குத் தொழில் என்னங்கிறதுதான். சதா நேரமும் ஏதோ தப்பு செய்துட்டோம்னு நெனச்சுக்கிட்டே இருந்தா யார் என்ன கேட்டாலும் தப்பாத்தான் படும். நீ செய்த பெரிய தப்பே தற்கொலை செய்துக்கப் பார்த்ததுதான். தப்பான மனுஷன்னு முடிவு பண்ணாம அவனுக்குத் தைரியம் கொடுத்திருந்தா நீ இந்தக் கதிக்கு ஆளாயிருக்க மாட்டே" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆக்ரோஷத்துடன் அவள் குறுக்கிட்டாள்.
"தைரியம் கொடுத்து வருமா? கோழைகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கத்தான் முடியுமா?". தன்னைக் கைவிட்டுவிட்ட அந்த எவனோ ஒரு கோழையின் மீது அவள் நெஞ்சில் குமைகின்ற குரோதமும் துவேஷமும் அவள் முகத்தில் கொப்பளிப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சில விநாடி மௌனத்துக்குப் பிறகு அவள் மனநிலையை மாற்றுவதற்காக மாறுபட்ட தோரணையோடு அவன் அவளிடம் பேச்சுக் கொடுத்தான்: "இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லலியே? தன்னந்தனியா, அதுவும் அதிகம் படிக்காத ஒரு பொண்ணு இந்த உலகத்திலே என்ன தொழில் செய்து வாழ முடியும்னு நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேன்..."
அவளும் பொங்கி எழுந்த உணர்ச்சிகள் சமனப்பட்டு மாறிய ஒரு மனநிலையில் பேசினாள்: "என் தொழிலைப் பத்திச் சொன்னா - இந்தத் தொழில்லே இருக்கிறவங்களே இப்படித்தான்னு தவறா நெனச்சிக்கக் கூடாது; நல்லதும் கெட்டதும் எங்கேயும் உண்டு" என்ற பீடிகைக்குப் பின் "நான் ஒரு நடிகை" என்று அவள் கூறியதைக் கேட்டு சினிமா பார்க்கும் வழக்கமே இல்லாத தனக்கு அவளைத் தெரிந்திருக்க நியாயமில்லை என்ற எண்ணத்தோடு "சினிமாவிலா?" என்று கேட்டான் ராகவன்.
அவள் ஒரு வரண்ட புன்னகையுடன் பதில் சொன்னாள்: "இல்லை; நாடகத்திலே! சினிமாவிலே நடிக்கலாம்ங்கிற நம்பிக்கை... முன்னே இருந்தது; இப்ப இல்லை."
அவளைப் பற்றி அவன் அறிந்து கொள்ள விரும்பிய விஷயங்கள் அவ்வளவே. அதன்பிறகு அவள் அங்கு வர நேர்ந்த சந்தர்ப்பங்களில் அவள் உடம்புக்குத் தேவையான மருந்துகளைக் கொடுத்து உதவியதைத் தவிர அவள் மனத்தை மாற்றவோ தேற்றவோ அவன் அவளோடு ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. ராகவனுக்கு வரட்டு உபதேசங்களில் நம்பிக்கை கிடையாது.
இரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவங்களுக்குப் பின் அவளைப் பற்றி நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை ராகவனுக்கு. இப்போது அவளை அதனினும் மோசமான ஒரு நிலையில் சந்திக்க நேர்ந்ததால் அவளுடைய அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க இறந்தகாலச் சம்பவங்களை அவன் எண்ணிப் பார்த்தான்.
இரண்டு வருஷங்களில் அவள் இருபதாண்டு தளர்ச்சியைப் பெற்றிருந்தாள். வந்ததிலிருந்து குனிந்த தலையுடன் நிமிராமலே உட்கார்ந்திருக்கும் அவளைப் பார்த்து அவன் கனிவோடு கேட்டான்: "உன் உடம்புக்கு என்ன? உன்னைக் கவனிச்சிக்கிற உன் பாட்டி இப்ப இல்லேங்கறது உன்னைப் பார்த்தாலே தெரியுது..."
அவள் ஒன்றுமே சொல்லாமல் குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்தாள். அவளாகப் பேசுவாள் என்று வெகு நேரம் காத்துக் கொண்டிருந்த பின் அவளைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கவே, அவனாகவே அவளிடம் கேட்டான்: "சரி, இப்போ இந்த நேரத்திலே எங்கே வந்தே?"
"முன்னே ஒரு தடவை செய்த மாதிரி உசிரை மாய்ச்சிக்க மனசில்லாமதான் உங்ககிட்ட வந்தேன்..."
இப்போது, அவன் மௌனமாய்த் தலைகுனிந்திருந்தான். அந்த மௌனத்தைப் புரிந்து கொண்டு அவள் பேசினாள். "வேற லேடி டாக்டருங்கிட்டே போகலாம்ணா எங்கிட்டே பணமில்லே" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் அவன் தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
இரண்டு வருஷங்களுக்கு முன்பு தான் சந்திக்க நேர்ந்த அவள் வேறு, இவள் வேறு என்று தீர்க்கமாய் உணர்ந்தான்.
"இந்தக் காரியத்தை விட உயிரை விடறதே மேல் என்று நெனச்சிருந்த நீயா இப்படிப் பேசறே?" என்று அந்த விழிகள் தன்னைக் கேட்பது அவளுக்குப் புரிந்தது.
தனக்குத் தானே பேசிக் கொள்வது போல், அவள் தொடர்ந்து சொன்னாள்: "அன்னிக்கி மாதிரி நான் மானத்துக்குப் பயந்து இப்ப இந்தக் காரியத்தைச் செய்துக்க வரலே" என்று சொல்லி, அன்று தன் தொழிலைப் பற்றி அந்த டாக்டர் கேட்டபோது 'தவறான தொழிலில்லை' என்று ஆக்ரோஷமாகப் பதில் சொன்னதை எண்ணித் தனக்கு இன்று நேர்ந்துள்ள சீரழிவையும் உணர்ந்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். "என்னைப் பத்தியும் இப்ப நான் செய்யற என் தொழிலைப் பத்தியும் யாருக்குத்தான் தெரியாது" என்று பெருமூச்செறிந்தாள்.
ராகவன் திடீரென்று குரலில் வரவழைத்துக் கொண்ட கடுமையுடன் சொன்னான்: "நீ செய்ய விரும்பற காரியம் சட்டப்படி ஒரு குற்றம். மனுஷ தர்மப்படி ஒரு பாவம்; முன்னே அப்படி ஆனதற்குக் காரணம் நீ இல்லே; ஒரு கோழையை நம்பி ஏமாந்த ஏதோ ஒரு விரக்தியிலே உன் உயிரை அழிக்கச் செய்த முயற்சியிலே 'அது' அழிஞ்சு போயிடுச்சு, ஆனா இப்ப நீ பண்ண விரும்புகிற காரியம் கேவலமான சுயநலம். இந்த எண்ணத்தைக் கைவிடு."
'இந்த ஆள் சரியான புத்தகப் புழு' என்று அவளுக்குத் தோன்றியது.
"இதை அழிக்கப் போற காரியந்தான் குற்றமா? இதை நான் ஆக்கிக்கிட்ட முறையே சட்டப்படி குற்றந்தான்... மனுஷ தர்மப்படி பார்த்தா... அப்பன் யாருன்னு தெரியாம 'இப்படிப்பட்ட ஒருத்திக்கு ஏன் பொறந்தோம்'னு வாழ்க்கை பூரா வதை படறத்துக்கு ஓர் உயிரைப் பெத்து எடுக்கறது ரொம்ப புண்ணியமான காரியமா?... 'என்னை இவ ஏன் பெத்தா?'ன்னு அது சபிக்கிறதைவிட அதிகமான பாவம் இதனாலே சேர்ந்துடாது... நானும் இதையெல்லாம் ரொம்ப யோசிச்சேன். 'இதோ உன் அப்பா'ன்னு அந்தக் குழந்தைக்கு மனசு ஆறுதலுக்குக் கூட யாரைக் காட்டறது? அப்படி நெனைக்கக் கூட எனக்கு ஒருத்தர் இல்லியே..." என்று தன்மன உணர்ச்சிகளை நிறுத்தி நிறுத்தி வெகுநேரம் அவள் தன் கை விரல்களை நெறித்துக் கொண்டே பேசினாள்.
அந்தக் கொடூரமான உணர்ச்சியை அதிலுள்ள ஒரு முரண்பட்ட நியாயத்தை ஆழ்ந்து ஆழ்ந்து உணர்ந்து பிரமிப்படைந்தான் ராகவன்.
ஒத்த மனசோடு அந்தக் கசப்பான உண்மையைப் பற்றி அன்று அவர்கள் வெகுநேரம் சம்பாஷித்தார்கள்...
கடைசியாக அவளை அவன் வீட்டுக்குள் அழைத்துச் சென்று சாப்பிடச் சொன்னான். அவளோடு அமர்ந்து தானும் சாப்பிட்டான்.
இதற்கிடையே மௌனமான ஒரு மணி நேர ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு தீர்மானமான உறுதியுடன் அவன் கூறிய வார்த்தைகள் அவனுக்கு - அல்லது தனக்கு - புத்தி பேதலித்து விட்டதோ என்று அவளை அச்சங் கொள்ள வைத்தது.
அவன் சொன்னான்:
"ஒரு உயிரைக் கொல்லக் கூடாது; அதைவிட எனது வைத்திய சாஸ்திரத்துக்கோ உனது பெண்மைக்கோ அவமானம் எதுவுமில்லை. உன் குழந்தைக்கு ஒரு அப்பன் தானே வேண்டும்? அந்த அப்பனின் பெயர் டாக்டர் ராகவன் என்று சொல். எந்த நிலையிலும் நான் இதை மறுக்க மாட்டேன். இது சத்தியம்..." என்று ஒரு ஆவேசத்தில் உதடுகள் துடிக்க அவன் கூறிய போது அவள் வாய் பொத்திப் பிரமித்து நின்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் மௌனமாய்ச் சில வினாடிகள் பார்த்துக் கொண்டனர்.
தான் சொன்ன வார்த்தைகளை தான் சொன்ன முறையில் தொனித்த ஆவேச முறையில் - இவளது உணர்வு நம்ப மறுக்கிறது என்று புரிந்து கொண்ட ராகவன், மிகவும் சாதாரணமான முறையில் அவளுக்குத் தன் கருத்தை விளக்கினான்: "இது கருணையோ பச்சாதாபமோ இல்லே. இதிலே கொஞ்சம் சுயநலம் கூட இருக்கு. நாளைக்கு இந்த ஊர் பூரா, என் சிநேகிதர்கள் பூரா உன்னையும் என்னையும் இணைச்சுக் கதை பேசுவாங்க, பேசட்டும். என்னைப்பத்தி நாலு பேரு அப்படிப் பேசறதைக் கேக்கணும்னு எனக்கும் ஆசைதான்..." என்று கூறி வெறித்துப் பார்த்து அந்தக் காட்சிகளைக் கற்பனை செய்தான் ராகவன்.
தகுதியற்ற தன் மீது இவர் இவ்வளவு அன்பு கொண்டிருப்பதை இத்தனை காலம் அறியாமல் இப்படிக் கெட்டழிந்து போனோமே என்ற ஏக்கத்துடன் விம்மியவாறே அவன் காலடியில் தன்னைச் சமர்ப்பித்துக்கொண்டு அவள் கெஞ்சினாள்: "நீங்கள்தான் என் தெய்வம். உங்க காலடியிலேயே உங்களுக்காக நான் உயிர் வாழ்வேன். இப்படிப் பட்ட ஒரு உத்தமருக்கு எத்தனை கொழந்தை பெத்தாலும் இந்த உடம்பு தாங்கும்..."
அவள் வெளியே சொன்ன, தன்னுள் முனகிய அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் ஊசி தைப்பதுபோல், நாசியும் உதடுகளும் துடிதுடிக்க ராகவன் தொண்டை கரகரக்க குழந்தைபோல் அழுதான்.
ஒரு ஆணின் கனத்த குரலில் வெடித்து அமுங்கிய அந்தக் குமுறலைக் கேட்டு அவள் தேகாந்தமும் நடுங்கப் பிரமித்து நின்றாள். அவன் முகத்தை மூடிக் கொண்டு திரும்பி நின்று கழுத்து நரம்புகள் புடைக்க, தோளும் புஜங்களும் குலுங்க, சிதறிப்போன தனது உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்துத் தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொண்டு மீண்டும் அவள் எதிரே திரும்பி நின்றான்.
"ராதா! நிறைவேற முடியாத ஆசையைத் தூண்டி விட்டுட்டேன். மன்னிச்சிடு. இப்ப உன் வயத்திலே இருக்கற குழந்தைக்கு மட்டும்தான் நான் அப்பனாக இருக்க முடியும், நீ நெனைக்கிற மாதிரி எனக்கு..." அதை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தவித்து அவள் செவியருகே குனிந்து 'அதை' அவன் ரகசியமாய் கூறினான்.
- அந்த விஷயத்தை... அவனது வழக்கமான சுபாவப்படி - பச்சையாக அவனால் சொல்ல முடியவில்லை. பிறரைப் பற்றிய அவன் கருத்துப்படி, அதில் இப்போது அவனுக்கே தான் என்ற தன்மையும், தன்மயமான நோக்கும், இது இயற்கையின் இயல்பு என்ற பொதுவான எண்ணமும் அற்றுப்போன சுயமான உறுத்தலுமே எஞ்சி நின்றது.
தனது செவியில் கூறிய அந்த ரகசியமான உண்மையைக் கேட்டு அவனது முகத்தைச் சேர்த்து அணைத்துக் கொண்டு "இல்லை இல்லை" என்று பிரகடனம் செய்வது போலப் பலமாக முணுமுணுத்தாள் அவள்.
இருளில் வந்து தன்னோடு உறவு கொண்டு ஒரு மாயைபோல் மறைந்து போன முகமறியாத அந்தக் கோழைகளைப் பற்றி அவள் எண்ணிப் பார்த்தாள்! தன் ஆத்மாவிலே கலந்து தன்னைப் புனிதப்படுத்தித் தன்னோடு நெருங்கி இருக்கும் இந்தப் புதிய உறவின் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்தி ஆர்வமுடன் கண்ணெதிரே பார்த்தாள். அந்தக் கோழைகளை எல்லாம் விட இந்தத் தைரியமிக்கவன் மகத்தான ஆண் சிங்கம் என்றே அவளுக்குத் தோன்றியது.
தனது இரண்டு கரங்களாலும் ஏந்திப் பிடித்த அந்த முகத்தில் தனது பெண்மை இதுவரை அனுபவித்தறியாத பௌருஷத்தின் தேஜஸைத் தரிசித்த நிறைவில் பெருமிதமும் திருப்தியும் கொண்டு அவனை அவள் ஆரத் தழுவிக் கொண்டாள்.
ராதாவின் காதோரத்தை ராகவனின் வெப்பமான கண்ணீர் நனைத்தவாறிருந்தது.
(எழுதப்பட்ட காலம்: 1964)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ