கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

யுகபாரதி - நேர்காணல்


"மனப்பத்தாயம்' கவிதைத் தொகுப்பின் வழியே தமிழ்க் கவிதையுலகில் கால் பதித்தவர் கவிஞர் யுகபாரதி. கிராமிய வாழ்வின் நுட்பமான தரிசனங்களை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டு விரியும் இவரது கவிதைகள், சொற்சிக்கனம், எளிமையான படிமங்கள், மென்மையான பகடி ஆகிய மூன்று முக்கிய இயல்புகளோடு, கவிதையின் அரசியலையும் முன்னெடுத்தபடி துலங்குபவை.

"மனப்பத்தாயம்' கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து, "பஞ்சாரம்', "நொண்டிக்காவடி', "தெப்பக்கட்டை', "தெருவாசகம்' ஆகிய தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் இவருக்கு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, ஸ்டேட் பேங்க் விருது, மாநில அரசு விருது போன்ற பல விருதுகள் கவிதைக்காக வழங்கப் பட்டுள்ளன.

கவிதைக்காகத் தொடர்ந்து இயங்கிவரும் யுகபாரதி, திரைப்பாடல் துறையில் அறுநூறுக்கும் அதிகமான பாடல்களை எழுதி, முன்னணி பாடலாசிரியராகவும் வெற்றி பெற்றிருப்பவர். "கணையாழி'யில் சிலகாலம் பத்திரிகையாளராகப் பணியாற்றியபின்பு, "படித்துறை' இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தியவர். தற்போது "நேர்நிறை' என்ற பதிப்பகம் தொடங்கி கவிதை உள்ளிட்ட இலக்கிய வெளியீடுகளைப் பதிப்பித்து வருகிறார். இனி "இனிய உதயம்' இதழுக்காக அவர் அளித்த நேர்காணல்...

உங்கள் தந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாகப் பொறுப்பு வகித்து வருபவர். அரசியல் வாசனை வீசும் வீட்டிலிருந்து உங்களைக் கவிதையின்பால் திசை திருப்பிய புள்ளி எது?

""அப்போது நான் அப்பாவின்மீது மிகுந்த அதிருப்தி கொண்டி ருந்தேன். ஒரு இடதுசாரியிடம் இந்த சமூகம் கொள்ளக் கூடிய நியாயமற்ற கோபம் எனக்கும் இருந்தது. காரணங்கள் இவை என்ற அறிவில்லா பேதமையில் நானும் என் வீட்டில் இன்னபிறரும் அப்பாவின் தியாக வாழ்வைப் பொறுப்பில்லாத்தனம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருந்தோம். தன்வீடு, தன் சுற்றம், தன் பிள்ளை என்ற அக்கறையில்லாமல் அப்பா சதா மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததால் சொல்லொணா வறுமையில் சூழப்பட்டிருந்தோம். ஒரு வீட்டின் தலைவராக மட்டுமே அவரை குறுக்கிப் பார்த்த என் மனம், அவரிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வேறொரு அடையாளத்தைத் தேடத் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் அப்பா மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு காட்டினார்.

தமிழ்த்தேசிய பொதுவுடமைக் கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார். அதனால், பேராசிரியர் சுபவீரபாண்டியன், கவிஞர்கள் தணிகைச் செல்வன், அறிவுமதி, இன்குலாப் போன்றோர் எங்கள் வீட்டிற்கு வருகை தருவதும் நிகழ்ந்தது. அந்த நிகழ்வு இயல்பாக என்னைக் கவிதையின் பக்கம் துரத்தி விட்டது என்று எண்ணுகிறேன்.

மாவட்ட அளவிலான பொறுப்பு மட்டுமே அப்பாவுக்குத் தரப் பட்டிருந்தது. அவருடைய பதினைந்து ஆண்டுகால அரசியல் வாழ்வில் அவரைப் பற்றிச் சொல்லுவதற்கும் அவருடைய பணியை உலகு அறியவும் கவிதையே கை கொடுத்திருக்கிறது என்பதால், கவிதையின்பால் நான் திசை திரும்பிய புள்ளியை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியல் அப்பாவுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தி விட்டது. அது அரசியலின் பிழையில்லை. அப்பா சார்ந்திருந்த கட்சியின் பொறுப்பிலிருந்த சிலருடன் அப்பாவுக்கு ஏற்பட்ட தனியான முரண்பாடே என்பதை நானறி வேன். தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்த அப்பாவால் செயல் படாமல் இருக்க இயலவில்லை. எனவே, தன் பழைய பாதையை மறுபடியும் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவருடைய ஒவ்வொரு முடிவுகளும் என்னை மேலும் மேலும் அரசியல் மீதிருந்த தனிப் பட்ட விரக்தியைக் கூட்டிக்கொண்டே இருந்தது. அரசியல்மீது விரக்தி குவியக் குவிய கவிதைமீது கவனம் அதிகரித்து விட்டது. கவிதையும் அரசியல்தான் என்பதைப் பின்னால் நான் அறிந்து கொண்டேன்.''

உங்களின் முதல் கவிதைத் தொகுப்பான "மனப்பத்தாய'த்தில், "காம்ரேடுகள் என்பவர்கள், ஒருபோதும் வரவே வராத புரட்சிக் காகக் கனவு காண்பவர்கள்' என்று "வணக்கம் காம்ரேட்' கவிதை மூலம் பகடியான விமர்சனத்தை கம்யூனிஸ்ட்கள்மீது வைத்தீர்கள். அந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்து பத்தாண்டுகள் ஆகி விட்டன. இப்போதும் காம்ரேடுகள் அப்படியேதான் இருக்கிறார்களா?

""என்னுடைய "வணக்கம் காம்ரேட்' கவிதை நான் முன்னமே சொன்னதுபோல இயல்பாக எனக்கிருந்த விமர்சனம்தானே தவிர, அதில் ஒட்டுமொத்த இடதுசாரிகளையும் பகடி செய்ய வேண்டும் என்கிற நோக்கமல்ல. புரட்சிகர முழக்கங்களுடன் தன்னை முன்னிறுத்தும் ஓர் இயக்கம் அதற்கான செயல்பாடுகளில் ஏற்படும் தேக்க நிலையைச் சரிவரக் கண்டடையாமல், தேர்தல் அரசியலில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அக்கவிதை.

நமக்கு விருப்பமில்லா ஒருவர்மீது நாம் ஒருபோதும் விமர்சனம் வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் அந்த விமர்சனம் எத்தகைய தன்மையைக் கொண்டிருக்கும் என்பதை நீங்கள் அறியாததல்ல. என் விமர்சனம் அவர்களை நேசித்ததால் வந்ததே அன்றி வெறுப்பினால் தோன்றியது அல்ல. இன்றும் காம்ரேடுகள் அப்படியேதான் இருக்கி றார்களா என்ற கேள்விக்கான பதிலை ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர்கள் எடுக்கும் அல்லது எடுத்துக் கொண்டிருக்கும் முடிவுகளில் இருந்து நீங்களே புரிந்து கொள்ளலாம். தேசிய இன அடையாளத் தைக் கையில் எடுக்காமல் எந்த நாட்டிலாவது புரட்சி வந்திருக்கி றதா என இன்னமும் அவர்கள் யோசிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான கனவுகளில் தமிழ்த் தேசிய முன்னெடுப்புக்களை அவர்கள் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஓர் அகில இந்திய கட்சிக்கு இருக்கும் நெருக்கடியினால் அவர்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை என்றால், தொடர்ந்து தேக்கநிலையே கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் அத்தனை துறையினரும் ஈழ மக்களின் விடுதலையை ஆதரித்துப் பேசும் காலத்திலும்கூட அதை உள்வாங்கிக் கொள்ளாத மார்க்சிஸ்ட் காம்ரேடுகள் எப்படி புரட்சிகர இந்தியாவை உருவாக்குவார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த விஷயத்தில் பாராட்டுக்குரிய பணியைச் செய்து வருவது ஆறுதல் அளிக்கிறது. குறைந்தபட்ச நம்பிக்கைகளால்தான் ஓர் இயக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும். இதை எனது காம்ரேடுகளே எனக்குச் சொல்லிக் கொடுத் தார்கள்.''

ஒருசில குடும்பங்கள் மட்டுமே ஊடகம் உள்ளிட்ட சமூகத்தின் மொத்தத் தொழில்களை யும் கைப்பற்றிக் கொள்ளும் ஏகபோகம் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில், அனைத்து எந்திரங்க ளையும் சமூகமயமாக்கும் மார்க்சியத்தின் தேவை பற்றிய உங்கள் கருத்து என்ன?

""ஏகபோகம் என்ற சொல் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் மார்க்சியத்தின் தேவை இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இன்று சமூகத்தில் தனிநபர்கள் ஏகபோக முதலாளி களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதுவும் அரசியலை லாபமீட்டும் தொழிலாகச் செய்து உருவான முதலாளியை அதே அரசியலைக் கொண்டுதான் வீழ்த்த முடியும். சில குடும்பங்கள் என்று நீங்கள் பொதுவாகக் கேட்டாலும், எந்தெந்த குடும்பங்கள் என்று மக்களுக்குத் தெரியும். அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரங்களைத் தங்கள் வசதிக்கு ஏற்ப நெளித்தும் வளைத் தும் நிறைய பித்தலாட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை முற்று முழுக்க அப்புறப்படுத்திவிட்டுத்தான் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால், அவர்களை யார் அப்புறப்படுத்துவது என்பதுதான் கேள்வி!

மாற்று அரசியல் தலைமையை எதிர்நோக்கி இருக்கும் மக்களுக்கு அந்த ஒளியின் கீற்று சிறிதாகத் தெரியும் சாத்தியம்கூட இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் கிடக்கும் உதவாத கட்டை களாகவே தென்படுகிறார்கள். சீட் கொடுத்தால் ஏகபோக தரகர் களுக்கு சீட்டியடிக்கப் போய்விடுகிறார்களே! மக்களிடம் மாறுதல் காணப்படுகிறது. புதிய அரசியல் தலைமைக்காக ஏங்குகிறார்கள். தங்களை வாழ்விக்கப் போராடும் ஒருவனுக்காக - ஒரு இயக்கத்திற் காகக் காத்திருக்கிறார்கள். மண்ணுக்கேற்ற மார்க்சியத்தால் ஏக போகம் மட்டுமல்ல; இந்திய அரசின் உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும்.''

தஞ்சையில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு, தஞ்சை பிரகாஷின் கதைசொல்லி அமைப்போடு தொடர்பிருந்ததா? தஞ்சை பிரகாஷ் படைப்புகள் பற்றி உங்கள் பார்வை என்ன? அவர் வாழ்ந்த காலத்திலும் மறைந்த பிறகும் அவரது படைப்புகள் பற்றிப் பேச நாதியற்றுப் போனது ஏன்?

""எனக்கும் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷுக்கும் அவருடைய கடைசி ஐந்து ஆண்டுகளில் மிக நெருக்கமான தொடர்பிருந்தது. இன்னும் சொல்லப்போனால் என்னை நேர் சீரான தீவிர இலக்கியத் திற்கு மடைமாற்றி விட்டவரே அவர்தான். க.நா.சு. தொடங்கி கண்ணதாசன் வரை அவருடைய ரசனை பரந்துபட்டிருந்தது. எதையும் அவருடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் விவாதிக்க முடிந்தது. பாலியல் தொடர்பான கேள்விகளைக்கூட அவர் சகஜ மாகவே எதிர்கொள்வார். கதைசொல்லி அமைப்போடு இணைந்து செயலாற்றிய போதும்கூட எனக்கு கதை சொல்வதைவிட கதை கேட்பதில்தான் ஆர்வமிருந்தது. பிரகாஷ் அவர்களும் என்னை கவிதையாளனாகவே பார்த்தார். நான் "கணையாழி'யில் பணியாற்றத் தொடங்கியதும் அலுவலகத்திற்கே வந்து வாழ்த்திவிட்டு தொடர்ந்து இலக்கியத்தில் நான் ஆற்றவேண்டிய பணியைப் பற்றியெல்லாம் ஆலோசனை வழங்கினார். இறுதி நாட்களில் அவர் சென்னையில் உள்ள ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் என் இரண்டாவது நூலான "பஞ்சார'த்திற்கு அணிந்துரை வழங்கியவர். நான்கூட, "உடல்நிலை மோசமாக இருக்கிறதே அய்யா இந்த சிரமத்தில் முடியுமா' என்று கேட்டபோது, "நான் சொல்லச் சொல்ல நீங்கள் எழுதிக் கொள்ளுங் கள்' என்று மனமுவந்து வாழ்த்தினார். அந்நூலில், தஞ்சையின் வரலாற்றை மையமாகக் கொண்ட "நிசும்பசூதனி' என்ற காளி கோவில் பற்றிய தகவல்கள் முழுக்க அவரே எனக்கு வழங்கினார். அவர் படைப்புகளைப் பொறுத்த மட்டில் கவனிப்பு பெறவில் லையே என்ற உங்கள் ஆதங்கம் தவறானது. உரிய கவனிப்புக்கும் வாசிப்புக்கும் அவர் படைப்புகள் எப்போதும் உள்ளாகித்தான் வருகின்றன. பிற படைப்பாளர்கள் வியந்து சொல்லுமளவுக்கு அவர் உழைப்பு பிரதானப்பட்டே வருகிறது. தவிர, எல்லா தளங்களிலும் அவர் இயங்கியபடியால் அவர் படைப்புகள் எண்ணிக்கை அளவில் குறைவுதான். ஆனால், எழுத்து வீரியத்தில் தஞ்சை மாவட்டப் படைப்பாளிகளில் சிலரே உச்சம். உழைப்புக்கு உரிய உயரத்தை காலம் சிலருக்கு வழங்கியே தீரும். இயங்கிக் கொண்டிருப்பதுதான் படைப்பாளியின் வேலை. அவர் இயங்கினார். எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.''

தேடிவருகிற எல்லாரையும் தலைநகரம் வாரியணைத்து, உச்சிமுகர்வதில்லை. உங்களது சென்னை வாசம் எப்படி அமைந்தது? அது கற்றுத் தந்த அரசியல் என்ன?

""வளர்ந்துவிட்ட பிறகும் நீங்கள் மாறவே இல்லையே என்று என்னை அறிந்த நண்பர்கள் சொல்வதுண்டு. வளர்ந்த பிறகும் நான் மாறவில்லை என்றால் உண்மையில் வளரவில்லை என்றுதானே அர்த்தம் என்று நகைப்பேன். உண்மையில் மாற வேண்டும். வாழ்வின் மாறுதலுக்காகவே நாம் பாடுபடுகிறோம். மற்றவர்களையும் மாற வேண்டும் என நிர்ப்பந்திக்கிறோம். மாற்றத்திற்காகவே அரசிய லில் ஈடுபடுகிறோம். அரசியல் நம்மை மாற்றி விடுகிறது. நம்மால் உலகத்திற்கு எதுவும் செய்ய இயலாமல் போகும்போது உலகம் நம்மை மாற்றிவிடுகிறது.

தலைநகரம் என்னை உச்சி முகர்ந்து வாரியணைக்கவில்லை. நான்தான் தலைநகரை விரும்பினேன். வீட்டில் வறுமை. விவசாயம் படுத்தாகி விட்டது. அப்பாவுக்கு வயதாகி விட்டது. படித்த படிப்புக்கு வேலை தேடி முயற்சித்தும் கிட்டவில்லை. தெரிந்தது கவிதையும் பத்திரிகைத் துறையும்தான். எனவே எழுத்தை நம்பியே வந்தேன். என் நோக்கமே எழுத்தினால் பிழைப்பதுதான். அதைச் செய்யவே நான் சென்னைக்கு வந்தேன். எழுத்தை நம்பிப் பிழைக்க முடியுமா என்ற யோசனை ஒருபக்கம் இருந்தாலும், ஊரிலும் வேறு வழி யில்லை என்பதால் சென்னையின் தொடக்க நாட்கள் என்னை வெகுவாக மிரட்டவில்லை. வந்துவிட்டோம்... இனி என்ன செய்வது என்றபோதுதான் "கணையாழி'யும் அதன் மூலம் கிடைத்த நண்பர்கள் பலரும் உதவினார்கள். சுந்தரபுத்தன், இரா. சரவணன், பாலமுருகன், ஆர்.சி. ஜெயந்தன், ஓவியர் சேகர், அன்வர், ஓவியர் ஸ்யாம், வடிவமைப்பாளர் ஆர்.சி. மதிராஜ் என்று என்மீது அன்பு செலுத்திய அருந்தகையாளர்கள் நட்பாகக் கிடைத்தது என் வாழ்வில் நான் செய்த பேறு. ஒரு வழியாகக் கடை சேர்ந்தபிறகு திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது. என் வீடும் என் நண்பர்களும் இல்லாமல் போயிருந்தால் இப்போது கிடைத் திருக்கும் இந்தச் சின்ன அடையாளம் சாத்தியப்பட்டிருக்குமா தெரியவில்லை.

சுய முனைப்போடு செயல்படும் யார் ஒருவரையும் சென்னை கைவிட்டதில்லை. வந்த நோக்கத்தை மட்டும் குறியாக வைத்துச் செயல்பட்டால் நினைக்கும் அளவுக்கு இல்லை என்றாலும் முடிந்த அளவுக்கு வாழ்வை ஓட்டிவிட முடியும். இது கற்றுத் தரும் அரசியல், நிதானமிழக்காமல் முன்னேறு என்பதுதான். பொருளா தாரத் தேவைகளையும் சேர்த்துதான் வாழ்வின் மறுபக்கத்தைப் பார்க்க வேண்டும். எனக்கு அந்த அரசியல் போதிய அளவுக்குக் கைவரவில்லை; விரைவில் வந்துவிடும்.''

"கணையாழி'யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிற அரிய வாய்ப்பைப் பெற்றவர் நீங்கள். இன்று "உயிர்மை', "காலச்சுவடு' என ஐம்பதுக்கும் அதிகமான சிற்றிதழ்கள் வெகுஜன இதழ்கள் போல் வளர்ந்து வரும் நிலையில் "கணையாழி'க்கு என்ன நேர்ந்தது?

""என்னவாகப் போகிறோம் என்றே தெரியாத கட்டத்தில் தவித்து சிதைந்து உருக்குலைந்து வாடி நின்ற நேரத்தில் "கணையாழி' என்னை வாரியணைத்து வாழ்வித்தது. என் செல் தடத்தையும் அதற்கான தயாரிப்புகளையும் அதுவே எனக்குக் கற்றுக் கொடுத்தது. தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் பலருடனும் எனக்குத் தனிப்பட்ட பரிச்சயம் ஏற்படவும் "கணையாழி'யே காரணம். தசரா அறக்கட்டளையைச் சேர்ந்த சுவாமிநாதன், தமன் பிரகாஷ், மய்திலி ராஜேந்திரன் மூவரும் என் வாழ்வில் மறக்கக்கூடாத பெயர்கள். அதுபோலவே கஸ்தூரிரங்கன், இந்திரா பார்த்தசாரதி, விஜய ராகவன் ஆகியோரும் என்னை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு வகித்தவர்கள். இலக்கியத்திற்கு அப்பாலும் என்மீது நேசம் பாராட்டி அறிவுதானம் செய்தவர்கள். அவர்கள் இன்றி நான் இன்று உங்கள் முன் எழுத்துக்காரனாக எழுந்து நிற்க இயன்றி ருக்காது.

இன்று வரும் சிற்றிதழ்கள் குறித்துச் சொல்வதற்கு எதுவு மில்லை. இதழ்கள் நடத்தும் பலர் ஒரு பதிப்பகத்தை உருவாக்கிக் கொண்டு பதிப்பகத்தின் விளம்பரத்திற்காக - விற்பனைக்காக இதழ்களில் கட்டுரைகளைப் பிரசுரிக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட சந்தை உலகத்தில் பாவம் சிற்றிதழ்காரர்களும் தங்கள் படைப்பு களை விற்பனைப் பொருளாக மாற்றிக் கொண்டிருப்பதுதான் வேதனை.

முதலில் "காலச்சுவடு' காட்டிய வழியை இப்போது "உயிர்மை' பின்பற்றி வருகிறது. தனிநபர் சாடல்கள் மற்றும் குழு மனப்பான்மை யோடு அவர்கள் இயங்கினாலும், அவர்கள்தான் தமிழ் இலக்கியத் தின் புதிய புதிய திசைகளை நமக்குக் காட்டி வருகிறார்கள். கேடில் வரும் நன்மையை உத்தே சித்து அவர்களை மறுக்காமல் ஏற்பதே உத்தமம். நான் அத்தனை சிற்றிதழ்களையும் வாசிக்கிறேன். அவற்றின் அட்டைகளை நீக்கிவிட்டு பைண்ட் செய்தால் யாவும் ஒரே தளத்தில் ஒரே தரத்தில்தான் இருக்கின்றன. சிற்றிதழ்களைப்போல வெகுஜன இதழ்களும் இணைய இதழ்களும் நம்பிக்கை யளிக்கவே செய்கின்றன. "கணையாழி'க்கு என்ன நேர்ந்தது என்றால் வழக்கமான சிற்றிதழ்களுக்கு என்ன நேருமோ அதுவே நேர்ந்தது என்பதுதான் என் பதில். இப்போது வரும் சிற்றிதழ்களுக்கும் அதுவே நேரும். ஒரு சிற்றிதழ் தொடர்ந்து வந்தால் அது சிற்றிதழே அல்ல. எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்பதுதான் சிற்றிதழில் உள்ள சௌகர்யம். "கணையாழி' சௌகர்யமாக இருக்கிறது.''

திரையுலகம் உங்களைக் கவர்ந்து கொண்டதா? அல்லது நீங்கள் அதை நோக்கி நகர்ந்தீர்களா?

""திரையுலகம் என்னைக் கவர்ந்து கொண்டது என்றால், ஏதோ நான் விரும்பாமல் அது என்னை சுவீகரித்துக் கொண்டுவிட்டது என்றாகிவிடும். நான் நகர்ந்தேன் என்றால் அதன் விருப்பமில்லாமல் நான் என்னைத் திணித்துக் கொண்டதாகிவிடும். இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தவைதான். சரியான வாய்ப்பை நண்பர் தியாகு ஏற்படுத்தினார். அதை முழுதாக நான் பயன்படுத்திக் கொண்டேன். நுழைவைவிட அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள மனரீதியாகவும் நான் மேற்கொண்ட முயற்சிதான் முக்கியம். "கணையாழி' மாதிரியான தீவிர இலக்கிய ரசனைக்கு என்னை உட்படுத்திக் கொண்டுவிட்டு வெகுஜன ரசனைக்கு மாறியதில் ஏற்பட்ட சிக்கலைத்தான் இப்படிச் சொல்கிறேன். இதை அனுபவப் பூர்வமாக உணர வேண்டுமானால் ஸ்பென்சருக்குள் தள்ளுவண்டி யில் வெள்ளரிக்காய் விற்கும் மனநிலை எனலாம்.''

"சொற்சிக்கனம், கிராமிய வாழ்வின் நுட்பமான கவனிப்பு கள், தரிசனங்கள் என தனித்துவம் பேணும் இளம் நவீனக் கவிஞன்' என்று மூத்த படைப்பாளிகளால் பாராட்டப்பட்ட யுகபாரதி இப்போது எங்கே? கவிஞனை சினிமா சிரச்சேதம் செய்துவிடும் என்ற மதிப்பீட்டின்படி யுகபாரதி இப்போது கவிஞரா? பாடலாசிரியரா?

""இப்போதும் யுகபாரதி யுகபாரதியாகத்தான் இருக்கிறேன். சினிமா வெளிச்சத்தில் என் படைப்புகள் கூடுதல் கவனம் பெற்றிருக் கின்றன. என் நூல்களில் என்னை நான் எந்த மாதிரி வெளிப்படுத்த வேண்டுமோ அவ்வாறே வெளிப்படுத்தி வருகிறேன். முந்தைய இரண்டு தொகுப்புகளைக் காட்டிலும் பின்னால் வந்த தொகுப்பு கள் பற்றியே மூத்த படைப்பாளிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கி றார்கள். குறிப்பாக என் கட்டுரை நூல்களில் அவர்கள் என் முழு ஆளுமையும் வெளிப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், உங்கள் கேள்வி நான் தொலைந்துவிட்டதுபோல் இருக்கிறது. நாம் பார்க்காதபோது ஒரு பொருள் தொலைந்துவிட்டதாகக் கருதுவதில் ஆச்சர்யமில்லை.

யுகபாரதி இப்போது கவிஞரா? பாடலாசிரியரா என்று நீங்கள் கேட்பது இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்வதில் ஏற்படும் நிலை. இரண்டும் வெவ்வேறு வடிவம். இரண்டும் வெவ்வேறு செயல்பாடு. பாடலாசிரியராக இருப்பது எளிது. கவிஞராகச் செயல்படுவது அதைவிட எளிது. சமூக பிரக்ஞை அற்ற ஒரு கவிஞன் பாடலாசிரியனின் பணியைச் செய்வதுபோல சமூக பிரக்ஞை உள்ள பாடலாசிரியனின் பணி கவிஞர்களின் வேலையை விட மேலானது. உடுமலை, பட்டுக்கோட்டை ஆகியோரின் பாடல் களில் தென்படும் சமூகப் பிரக்ஞை அந்தக் காலத்துக் கவிஞர்களாக அறியப் பட்டவர்களைக் காட்டிலும் தகுதி கூடியது. உண்மையில் நவீனம் என்ற சொல் வெகுசன தளத்திற்கு எதிரானதும் அல்ல. என்னை அறிகிறவர்களின் பிரச்சினைக்காக நான் கவலைப்படு வதில்லை. கவிஞன், பாடலாசிரியர் என்பதைத் தாண்டி மனிதனாக வாழ்வதில் - நடந்து கொள்வதிலேயே நானிருக்கிறேன். மதிப்பீடு களைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள். அது காலத்தின் செயல் என்பதை நீங்களும் அறிவீர்கள். கவிதைக் குழந்தையைக் கையில் வைத்திருக்கும் என் பொம்மை. உடைக்கப்பட்டாலும் மகிழ்ச்சியே.''

திரைப்பாடல் துறை எப்படி இருக்கிறது? யுகபாரதிகள், முத்துக்குமாரர்கள், தாமரைகள் வந்தபிறகும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் பாடல் வரிகள் எழுதப்படுவது ஏன்? பெண் பாடலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இது தீருமா?

""திரைப்பாடல் துறை எப்படி இருக்கிறது என்ற கேள்வியையும் கேட்டு பதிலையும் நீங்களே பிற்பகுதியில் சொல் கிறீர்கள். எனவே, திரைப்பாடல்துறை அடுத்த தலைமுறையின் கையில் வந்துவிட்டது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. குறிப்பிடத்தக்க மாற்றங்களை விரைவில் காணலாம். தாமரையும் முத்துக்குமாரும் கபிலனும் அவரவர்க்கு உரிய தனித் தன்மையோடு இயங்கிவருவது கண்கூடு. என் படைப்புகளைப் பற்றிப் பிறர் கூறுவதே சிறப்பு. முற்று முழுக்க ஆங்கிலக் கலப்பை தவிர்த்துவிட்டே நால்வரும் எழுதுகிறோம். அங்கொன்றும் இங் கொன்றுமாக வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது. பெண்களைக் கொச்சைப்படுத்தும் வரிகள் எங்கள் நால்வரிடமும் காணப்பட்டால் அதற்காக நீங்கள் வருந்தலாம். புதிதாக எழுத வரும் பெண்களிடம் போதிய பெண்ணியப் பார்வை இல்லாமல் இருப்பதால் அவர்களைப் பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தாமரையைத் தவிர்த்துவிட்டு பிறர் இன்னும் அதிக எண்ணிக்கையில் எழுதும்போதுதான் அதைக் கணிக்க முடியும். தவிர சமூகமே பெண்களைக் கொச்சைப்படுத்தும் சமூகமாக இருக்கும்பட்சத்தில் இதை எப்படி சாதுர்யமாக மாற்று வது என்பதைப் பற்றி மேலும் யோசிக்க வேண்டும். பெண்கள் எழுத வரவேண்டும். திரைப்பாடலை புதிய அழகோடு மெருகேற்ற அவர்களால் முடியும். ஆனால் பாலியல் மேலிட எழுதுகிறார்கள் என்ற சிற்றிதழ்க் கவிஞர்களின் குற்றச்சாட்டு அப்போது என்ன வடிவம் எடுக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.''

நல்ல கவிதையோ திரைப்பாடலோ எழுதும் புதியவர்கள் எங்கே இருந்தாலும் தேடிப்போய் பாராட்டுவது கண்ணதாசனின் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்று திரைப் பாடலாசிரி யர்களிடையே சுமூகமான உறவு இல்லாமல் இருப்பது ஏன்?

""அப்படி ஒரு மரபு இருந்ததாக நாம் கருதிக் கொள்வது நல்லது தான் என்றாலும், அப்போதும் கருத்து முரண்பாடுகளும் கரடு முரடான விமர்சனங்களும் இருந்தன என்பதுதான் உண்மை. வைரமுத்துவின் வருகையின்போதும் பழநிபாரதியின் வருகையின் போதும் வாசனின் வருகையின்போதும் மூத்தவர்களாக அறியப் பட்டவர்கள் செய்த விமர்சனங்களை நான் பட்டியலிட விரும்ப வில்லை. இப்போது இளம் கவிஞர்கள் ஒரே அணியில் இருக்கிறோம். மூத்தவர்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை என்ற ஆதங்கம் உண்டு தான். ஆனால், கவிதையிலும்கூட அதைத்தானே நடைமுறையில் உணர்கிறோம். எந்த மூத்த படைப்பாளியாவது பின்னால் வரும் தலைமுறையைப் பாராட்டி எழுதுகிறார்களா? சு.வெ.வின் நாவலை எஸ்.ரா. விமர்சிப்பதும் எஸ்.ராவை ஜெயமோகன் விமர்சிப்பதும் சரியாகவா இருக்கிறது? முதலில் படைப்பாளிகள் பிற படைப்பாளி களின் படைப்பை விமர்சிக்காமல் அல்லது அவர்களைக் கருத்திற் கொள்ளாமல் வாசகனைக் கணக்கில் கொண்டாலே நல்ல படைப்புகள் வரும் என்பது என் எண்ணம். புதியவர்களை வியாபாரப் போட்டியாளராகக் கருதுவதால் வரும் காழ்ப்பை எல்லாரும் தவிர்த்துக் கொள்வது தமிழுக்கு நலம் சேர்க்கும்.''

கவிதை, திரைப்பாடல் இரண்டில் எதைப் படைப்பதில் நிறைவு கிடைக்கிறது? இரண்டுக்குமான உழைப்பில் என்ன வேறுபாடு உணர்கிறீர்கள்?

""எதிலுமே நிறைவுறா மனமே படைப்பு மனம். நிறைவு அடைந்த பின் படைப்பு ஏது? படைப்பாளிதான் ஏது? படைப்பை உணர்வாகப் பாராமல் உழைப்பாகப் பார்க்க எனக்குத் தெரிய வில்லை. உழைப்பாகப் பார்க்கத் தொடங்கிய பின்புதான் இதற்கான விடையை சரியாகச் சொல்ல முடியும்.''

மற்ற இளம் கவிஞர்களோடு ஒப்பிடும்போது, ஆழமான யாப்பறிவும், மரபுக்கவிதை எழுதுவதில் தேர்ச்சியும் கொண்டவர் நீங்கள். இன்று மரபுக்கவிதையின் தேவை முடிந்து விட்டது என்ற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

""எந்த இலக்கிய வடிவத்தின் தேவையும் முடிந்துவிடாது. புதிய வடிவத்தின்மீது இருக்கும் மோகமும் கவர்ச்சியும் விடைபெறும் வரை பழைய வடிவத்தின் அழகை நாம் கவனிக்க மறுக்கிறோம்; அவ்வளவுதான். யாப்பின் தேவை பாடல் எழுதுவதற்கு உதவுகிறது. ஞானக்கூத்தனின் கவிதைகளில், விக்கிரமாதித்யன் கவிதைகளில் இப்போதும் மரபின் வாடையை நம்மால் உணரமுடிகிறது. ஓசையில் இயங்கும் கவிதைகளின் தன்மையைக் காட்டிலும் ஓசையற்ற வாக்கியங்களின் தன்மை இப்போது வசீகரிக்கிறது. எனவே, பின்னால் மரபின் பக்கம் நாம் திரும்பிப் போகலாம். மூன்றாம் உலக நாடுகளில் கலை இலக்கிய வடிவத்தைத் தீர்மானிக் கும் சக்தி அந்த நாடுகளின் அரசியலில் இருந்துதான் அரும்புகிறது. மத்தியில் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற வாய்ப்பில் லாதது போலதான் இலக்கியமும் இலக்கிய வடிவங் களும்.''

இன்றைய நவீனத் தமிழ்க் கவிதைப் பரப்பு- சாரமற்ற காதல் கவிதைகள், யாருக்கும் புரியாத இருண்மைக் கவிதைகள், பெண் மொழியே கவிதை என்று கூறுபோடப்பட்டு கூச்சலும் குழப் பமுமாக இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

""நடந்தால் நதி, கிடந்தால் குட்டை இரண்டும் நீர்நிலைதான். இப்போதைய கவிதைச்சூழலைப் பற்றி நிறைய பேசலாம். அணி அணியாக இருந்து செயல்படும் ஆரோக்கியமான போக்குதான் இது. எந்த அணியாக இருந்தாலும் கவிதைக்குப் பெருமை சேர்க்கவே துடிக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கசடுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. காலமே அவற்றைக் கழுவி சுத்தம் செய்துவிடும். கூச்சலும் குழப்பமும் என்ற பார்வையைத் தவிர்த்து அவற்றை புதிய பாய்ச்சலுக்கான ஒத்திகையாகப் பாருங்கள். சாரமற்ற காதல் கவிதைகள் - சாரமற்ற என்ற சொல்லால் நீங்களே அவற்றை புறந்தள்ளிவிடுகிறீர்கள்தானே. அதுபோலத்தான் ஒவ்வொரு படைப்பின் மீதும் நமக்குள்ள தெளிவை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றபடி நாம் யாரையும் ரட்சிக்கப் பிறந்த வரில்லை.''

ஈழ இனப் போராட்டத்துக்கு ஆதரவாக தாய்த் தமிழகத்தில் நடைபெற்றுவரும் இன உரிமைப் போராட்டங்களிலும் கருத்து முழக்கங்களிலும் உங்களைக் காணமுடியவில்லை, ஏன்? நீங்கள் இன அழிப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்ற தனித்த சித்தாந்தம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா? அல்லது தி.மு.க. சார்புடையவரா?

""மேடையில் ஏறி போஸ்டருக்கும் செய்தித்தாளுக்கும் காட்சி கொடுப்பவர்களை மனதில் வைத்துக் கொண்டு என்னை நீங்கள் அதிலே எதிர்பார்த்தால் நான் இருக்க மாட்டேன். போராட்டம் என்பது மக்களிடம் சென்றடையத்தானே ஒழிய மேடைகளில் முழங்குவது அல்ல. இனப்போராட்டத்திற்காகப் போராடும் பல இளைஞர்களோடு எனக்கு நேர்ப்பட பரிச்சயமுண்டு. என் இல்லத்திற்கு நீங்கள் வந்தால் இலங்கைத் தோழர்கள் எத்தனை பேரோடு நானிருக்கிறேன் என்பது புரியும். என்னை தி.மு.க. சார்பு டையவராக எப்படிக் கருதுகிறீர்கள்? இலங்கைப் பிரச்சினைக்குச் சார்பில்லாதவராக ஒருவரை முன்னிறுத்த வேண்டுமென்றால், அவரை தி.மு.க. சார்பாளராகப் பார்க்கலாம் என்ற அளவுக்கு தி.மு.க. வின் நிலைமை ஆகிவிட்டது. நேற்று முதல் ஜெயலலிதா தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பதாகச் சொல்வதும், மொத்த தமிழக மக்களும் ஜெயலலிதாவை வாழ்விக்க வந்த அம்மையாகப் பார்ப்பதும் தான் வேடிக்கை - விநோதம்.

அரசியல் லாபத்துக்காகக் கூறப்படும் தேர்தல் வாக்குறுதி களால் நாம் பின்னடைவையே கண்டிருக்கிறோம். இந்த ஆதரவு ஜெயலலிதாவுக்குச் சாதகமில்லை. அவருடைய அரசியல் பிறழ்வுக் கான அத்தாட்சி. ஆளில்லாத ஈழத்திற்கு விடுதலை பெற்று யாரிடம் தருவார்கள்? கேப்பையில் வழியும் நெய்யை அந்த அம்மையார் தன் தோழியோடு நக்கிவிடுவார். கொள்ளையடிப்பதில் மட்டுமே கொள்கைகளில் பல்டி அடிப்பதும் அவருக்கு கைவந்த கலை. நான் ஒவ்வொரு கட்சியிலும் உள்ள நல்ல அம்சங்களைக் காதலிப்பவன். எனக்கு அரசியல் உண்டு. கட்சி அரசியலில் என்னை முடிச்சிட்டுக் குறுக்கி விடாதீர்கள். அதற்காகவே சில இளம் கவிஞர்கள் ஆர்வத் தோடு இருக்கிறார்கள். பதவியும் பவிசும் அவர்களுக்குக் கிடைக் கட்டும்.''

ஒரு பதிப்பாளராக "படித்துறை' சிற்றிலக்கிய இதழையும், "நேர்நிறை' வெளியீடுகளையும் கொண்டுவந்தீர்கள். சில இதழ் களுக்குப் பிறகு "படித்துறை'யை நிறுத்திவிட்டு, "நேர்நிறை'யை மட்டும் தொடர்கிறீர்கள். இந்தக் குழப்பத்துக்கான காரணம் என்ன? இலக்கிய இதழை நடத்துவது அசாதாரணமான ஒன்றா? அதிலிருந்து உங்களது அனுபவம் எப்படிப்பட்டதாக மாறியிருக்கிறது?

""இது குழப்பமில்லை. தெளிவு. திரைத்துறையில் பணியாற்றத் தொடங்கியதும் நிறைய நேரத்தை "படித்துறை'க்கு ஒதுக்கிட முடிய வில்லை. அதனால் கிடைக்கிற நேரத்தில் "படித்துறை'க்கு ஈடாக "நேர்நிறை'யைக் கவனிக்கிறேன். இதுவும் என் நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவே. நல்ல படைப்புகளை மேலும் மேலும் வாசகனுக்குத் தருவதில் உள்ள ஆர்வத்தை முன்னிட்டே "நேர்நிறை' முயற்சி. இலக்கிய இதழ் நடத்துவது அசாதாரணம் என்றால் எப்படி ஐம்பதுக்கும் மேலான நல்ல சிற்றிதழ்களின் வருகை சாத்தியம்? ஒரு பத்திரிகையாளனாக இருப்பது போன்ற நிறைவு வேறு எந்தத் துறை யிலும் இல்லை என்பதுதான் என் இத்தனை ஆண்டு களில் நான் கண்ட உண்மை. கருத்தே இல்லாமல் எல்லாக் கருத்துகளைப் பற்றியும் விவாதிப்பது தனி சுகம். அந்த சுகத்தை அதிகம் விரும்புகிறேன். மீண்டும் பாடல் துறையை விட்ட பிறகு பத்திரிகையில் பணியாற்றவே ஆசை.''

நேர்காணல் : ஆர்.சி. ஜெயந்தன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ