இரா. முருகன் - நேர்காணல்
எண்பதுகளின் தொடக்கத்தில் சிறுபத்திரிகை களில் நவீன கவிஞராக அறிமுகமான இரா. முருகன், பின்னர் சிறுகதையாசிரியராக- நாவலாசிரியராக- கட்டுரையாளராக இலக்கிய வடிவங்களின் அனைத்து நீட்சிகளை யும் தொட்டு நிற்கும் சம கால நவீனப் படைப்பாளி யாவார். "ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்' இவரது முக்கியமான கவிதைத் தொகுதியாகும். இதுதவிர, "தேர்', "ஆதம்பூர்க் காரர்கள்', "சிலிக்கன் வாசல்', "முதல் ஆட்டம்', "ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர்', "மந்திரவாதியும் தபால் அட்டைகளும்', "சைக்கிள் முனி' போன்ற சிறுகதைத் தொகுதிகள்; "மூன்று விரல்', அரசூர் வம்சம்', "40, ரெட்டைத் தெரு' ஆகிய நாவல்கள்; இருபதுக்கும் மேற்பட்ட குறு நாவல்கள்; "கொறிக்க கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்', "கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம்' ஆகிய அறிவியல் கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை பல நூல்கள் வெளிவந்துள்ளன.
சிறுபத்திரிகைகளில் எழுதி வரும் அதே நேரம், வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவருடைய எழுத்துகளைத் தொடர்ந்து வாசகர்கள் வரவேற்று வருகிறார்கள். மேஜிக்கல் ரியலிச கதை சொல்லும் உத்தியைப் பயன்படுத்தி இவர் எழுதிய "அரசூர் வம்சம்' நாவல் ஆங்கிலத்திலும் வெளியாகி இருக்கிறது. தற்போது "அரசூர் வம்ச'த்தின் தொடர்ச்சியாக "விஸ்வரூபம்' நாவலை எழுதிக் கொண்டி ருக்கிறார். "முருகனின் சிறுகதைகள் வடிவம் மற்றும் நடை ஆகிய அம்சங் களில் வெகு இயல்பான பரிசோதனைகளைக் கொண்டிருக்கின்றன. காலம், களம் இரண்டும் அவருடைய படைப்பில் மனித மனம்போல எப்போதும் சலசலத்துக் கொண்டிருப்பவை' என்று அசோகமித்திரனால் பாராட்டப்பட்ட இரா. முருகன், சுஜாதாவுக்குப் பிறகு அறிவியல் தமிழை வாசகத் தோழமை யோடு வெகுஜனப் பத்திரிகைகளின் வழி எடுத்துச் செல்பவர்.
ஒரு தாகம் கொண்ட மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கிவரும் இரா. முருகன், மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தவர் இவர். சிறுகதைக்காக "இலக்கியச் சிந்தனை' ஆண்டுப் பரிசு, "கதா விருது'; நாவலுக்காக "பாரதியார் பல்கலைக் கழக விருது' போன்ற பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
பரிசோதனைப் பாணி எழுத்து வகையில், வாசகனைப் பயமுறுத்தாத பின் நவீனத்துவப் படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் இரா. முருகன், தற்போது தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். கமல்ஹாசன் நடித்துள்ள "உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தின் உரையாடல்களை எழுதியிருக்கும் இரா. முருகனுக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டு கள் குவிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் "இனிய உதயம்' இதழுக்காக அவரைச் சந்தித்தோம்...
உங்களின் எழுத்துப் பயணம் கவிதை, சிறுகதை, நாவல் என்கிற ஒரு நேர்கோட்டில் வளர்ந்து வந்திருக்கிறது. இலக்கிய வடிவங்களுடைய ஒவ்வொரு நிலையையும் கடந்து வந்திருக்கி றது. படைப்பாளி இரா. முருகன், தனிமனிதன் இரா. முருகன்- இரண்டுபேரும் வெவ்வேறு மனிதர்களாக இருக்க முடியாது. தனிப்பட்ட வாழ்வில் இரா. முருகன் என்னவாக வேண்டும் என்று நினைத்தீர்களோ, அந்த நிலையை அடைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?
""இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னால் அதில் சிறிய மாற்றம். கவிதை, சிறுகதை, நாவல், அறிவியல் கட்டுரை என்பதோடு தற்போது திரைப்படத் துறையில் நுழைந்திருப்பதும்... நான் 25 வருடங்களாக எழுத்துத் துறையில் இருக்கிறேன். வெளியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த தாகவே இருக்கிறது. கவிதை எழுதும்போது அதில் சிறுகதையின் சுவடு இருந்திருக்கிறது. சிறுகதை எழுதும்போது அதில் நாவலுடைய சில வேர்கள் இருந்திருக்கின்றன. நாவல் எழுதும்போது- அதை விஷுவலாகச் சொல்லும்போது அதில் திரைக்கதையின் வடிவம் இருந்திருக்கிறது. பாம்பு சட்டையை உரிப்பது போலதான் நான் ஒன்றிலிருந்து ஒன்றாக என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த சமுதாயத்திலும் சரி; எந்தச் சமுதாயத்திலும் சரி- எழுத்தாளனை தனிமனிதனாகப் பிரித்துப் பார்க்க முடியுமா என்பது எனக்குக் கஷ்டமான காரியமாகவே உள்ளது. இரா. முருகன் என்ற எழுத்தாளன் தனியாக இயங்க முடியாது. மேல்நாட்டு கலாச்சாரத்தில் வேண்டுமானால் ஓர் எழுத்தாளனுக்கு அவனுடைய எழுத்து தொழிலாகப் பயன்படும். ஆனால் நமக்கோ எழுத்துத் துறை என்பது ஒரு பற்றுதலுக்குரியது. இதை எழுதியாகணும், இதை அடைந்தாகணும் என்கிற ஒரு வெறி, வைராக்கியம் போன்றவை இதில் அடங்கும். இதனால் எழுத்தாளனுக்கு வருமானம் வருமா என்பது தெரியாது.
நிம்மதியாக எழுதுவதற்கு ஏழு நாட்கள் வேண்டாம்; ஒருநாள் போதும். மீதி ஆறு நாட்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். ஒருநாளின் நிம்மதி மீதி இருக்கிற ஆறு நாட்களுக்குத் தரவேண்டும். நான் வங்கி அதிகாரியாக இருந்தேன். அங்கு கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றினேன். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் கன்சல்ட்டன்சியாக இருக்கிறேன்.
நான் படைக்கும் படைப்புகள் எல்லாவற்றிலும் நான் ஊடுருவி இருப்பேன். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென் றால் நான் நானாகவே இருப்பேன். முக்கியமாக வங்கியிலிருந்து கம்ப்யூட்டர் துறைக்கு வந்தபிறகு இத்துறையானது என்னை மிகவும் பாதித்திருக்கிறது. எழுத்தில் இந்தத் துறை சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் அலசிப் பார்த்திருக்கிறேன். முக்கியமாக இந்தப் பிரச்சினைகளை "மூன்று விரல்' நாவலிலும், "இந்தியா டுடே'யில் வெளிவந்த "சிலிக்கான்', "லாசரஸ் 40' போன்ற சிறுகதைகளிலும் கொண்டு வந்திருக்கிறேன். இதைத் தவிர, நான் சொன்னா நீங்க சிரிப்பீங்க... கம்ப்யூட்டர் துறையில் நுழையும்போது கோடிங் டிசைனிங், வங்கி சம்பந்தமான பணிகள் செய்து வந்தேன். அதை கரண்ட் ஸ்லாங்கில் சொல்ல வேண்டுமானால் பொட்டி தட்டுவது என்பார்கள். கையில் லேப்டாப் எடுத்துச் சென்று அங்கங்கு புரோகிராம் செய்வது தான் தற்போதைய பணி. அந்தக் காலத்தில் பாணர்கள் கையில் யாழ் எடுத்துச் சென்று மன்னர்களிடம் பாடி பரிசு பெறுவது போல, நாங்கள் லேப்டாப்பை எடுத்துச் சென்று புரோகிராம் எழுதி அதற்கான சன்மானமாக மாதச் சம்பளம் பெறுகிறோம். அதாவது "குளோரிஃபைடு' பாணர்களாக இருக்கி றோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உதாரணமாக "சி' யோ, "சி. பிளஸ்ஸோ' போன்ற டேட்டா பேஸ் கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்து எப்படி கையாள்கிறோமோ அதைப் போன்று எழுத்தில் என்னையறியாமல் கதைக்கான சிந்தனைகளிலும் இந்த கம்ப்யூட்டர் மொழிகள் ஊடுருவி விடுகின்றன.
நான் வங்கிப் பணியில் இருந்தபோது- பகுதி நேரமாக கம்ப்யூட்டர் துறையில் நுழைந்தபோது "ஜம்ப் கட்'டுவது என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. "தேர்' என்ற முதல் சிறுகதையைக் கொண்டு வந்தேன். அவற்றை நான்கு அல்லது ஆறு பக்கத்தில் முடித்தாக வேண்டும் என்பதற்காக அந்தக் கதையை "ஜம்ப்' பண்ணி "ஜம்ப்' பண்ணி விஷுவலாக முடித்திருப்பேன். அசோகமித்திரன் முன்னுரை கொடுத்திருந்தார். "ஜம்ப் கட் யுக்தியை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். எழுத்துத் துறையில் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். எல்லாமே சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்' என்று தனது முன்னுரையில் சொல்லி இருந்தார்.
முக்கியமான வேலையில் நாம் இருக்கும்போது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலிருந்து என்னைச் சந்திக்க வாடிக்கை யாளர்கள் வருவார்கள். அதில் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ""தினமும் நீங்கள் அலுவலகத்திற்கு எத்தனை மணிக்கு வருவீர்கள்?'' என்று கேட்டேன். அவர், ""ஏழு மணிக்கு'' என்றார். ""நானும் ஏழு மணிக்கு வந்துவிடு வேன்'' என்றேன். இருப்பினும் அவரிடம் கேட்டேன்: ""உங்கள் நாடுகளில் ஏழு மணிக்கு வரவேண்டிய அவசியம் இருக்காதே? நீங்கள் எதற்காக ஏழு மணிக்கு வருகிறீர்கள்?'' என்று. அதற்கு அவர், ""ஏழு மணிக்கு வந்தால் மாலை மூன்றரை மணிக்கு வீட்டுக்குத் திரும்பி விடலாம்'' என்றார். ""தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதற்குப் பின் என்ன செய்வீர்கள்?'' அதற்கு அவர், ""வீட்டிற்குப் போனவுடன் மனைவிக்குச் சாப்பாடு ஊட்டிவிடுவேன்; அவளோடு பேசிக் கொண்டிருப்பேன்; பின்பு அவளை படுக்கையறைக் குச் சுமந்து கொண்டு சென்று தூங்க வைப்பேன்'' என்றார். ""ஏன் படுக்கைக்குச் சுமந்து செல்ல வேண்டும்?'' என்றேன். ""என் மனைவியால் மூன்று வருடங்களாக நடக்க இயலாது'' என்றார். மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்று வியந்தேன். ஏனெனில், அவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். குறிப்பாக, நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கான விவாகரத்து வழக்குகள் சர்வசாதாரணமாக நடைபெறும். அப்படி இருக்கையில் இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரா என்று வியந்தேன். இச்சம்பவங் களை என்னிடம் அவர் எடுத்துரைக்கும்போது, நான் என் பதவியை மறந்து, ஒரு எழுத்தாளனாகவே மாறிவிட்டேன். இதை தமிழில் கதையாக எழுதினால் ரொம்ப மிகையாக இருக்கும். தனிமனித வாழ்க்கை இரா. முருகனை எப்படி பாதித்தது, இரா. முருகனின் எழுத்து தனிமனித வாழ்க்கையை எப்படி பாதித்தது என்பதற்கு இதுவே சரியான பதிலாக இருக்குமென கருதுகிறேன். இந்த நிகழ்வைக் கதையாக கொண்டுவர முடிவு செய்துள்ளேன். இந்தக் கதை நிச்சயமாக வெளிவரும்.''
தீவிரமான எழுத்துக்கு ஒரு ஜீன் சார்ந்த பின்னணியோ அல்லது இளமைக் காலத்தில் தங்களுக்குக் கிடைத்த இலக்கிய வாசிப்போ காரணமாக இருக்கும். இதில் உங்களுக்கு எழுத்துலகத்திற்கு வித்தாக அமைந்தது எது?
""மரபணு தொடர்பாகப் பார்க்கும்போது எங்கள் முன்னோர்கள் கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசூரில்தான் குடியேறினார்கள். ஐந்து தலைமுறையை அலசிப் பார்த்திருக்கிறேன். எங்கள் வம்சாவழியினர் சமையல் தொழிலையே செய்து வந்துள்ளனர். அதற்குப் பின் வந்தவர்கள் வக்கீல்களுக்கு குமாஸ்தாவாக இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இலக்கியத் தேடல் என்பதற்கு நேரமே கிடையாது. வாழ்க்கைத் தேடலே மிகவும் பிரதானமாக இருந்திருக்கிறது. எனது அப்பா கொஞ்சம் மாறுபட்ட நிலையில் இருந்தார். வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். இருப்பினும், அவருக்கு பாரதிமேல் அளவுகடந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. இதனால் எங்கள் வீட்டில் பாரதியின் புத்தகங்கள் அதிகம் உண்டு. எழுத்தாளர் நா. பார்த்தசாரதி எனது அப்பாவின் நெருங்கிய நண்பர். ஆகையால் "தீபம்' இதழைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எழுத்தாளர் ஆதவன் அதில் எழுதிய "காகித மலர்கள்' கதை வெளிவந்தது. அதைப் படித்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. உதாரணமாக ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு மத்தியில் இந்த இதழ் எனக்கு மாறுபட்டதாகவே தெரிந்தது.
எனது பள்ளிப் படிப்பு சிவகங்கையில்தான். சிவகங்கை என்றாலே ஜாம்பவான்கள் நிறைந்த ஊராகும். அவர்களில் மூன்று ஜாம்பவான்கள் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். ஒருவர் பேராசிரியர் நா. தர்மராஜன். இவர் கலை இலக்கியப் பெருமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். தமிழ் மொழிக்காக இவர் செய்த தொண்டு அளப்பரியது. உதாரணமாக ஜெர்மானிய மற்றும் ரஷ்ய படைப்பு களைத் தமிழாக்கம் செய்தவர். இவர் என் பேராசிரியர் மட்டுமல்ல; சிறந்த படைப்பாளியாகவும் என் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அடுத்து மலையாளத்திலிருந்து முக்கியமான இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வந்த பேராசிரியர் இளம்பாரதி. இவருடைய இயற்பெயர் ருத்ர துளசிதாஸன். இவர் மலையாள எழுத்தாளர் முகுந்தனின் நாவலைத் தமிழில் மொழி பெயர்த்ததன் மூலம் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான "சாகித்ய அகாடமி விருது' பெற்றவர். இவரும் தர்மராஜன்போலவே என் மனதில் குடி பெயர்ந்தவர்.
இவர்கள் இரண்டு பேருமே முக்கியமானவர்கள்தான். இருப்பினும் இலக்கிய உலகில் என்னை மிகவும் பாதித்தவர் கவிஞர் மீராதான். இவர் என் தமிழாசிரியர். இவரது புதுக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பினும் இதெல்லாம் ஒரு கவிதையா என்று பலரும் விமர்சிக்கிறார்கள். தமிழில் புதுக்கவிதையென்றால் என்ன என்பதை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் மீராதான். இக்கவிதையில் சொல் புதுசா இருக்கு, கருத்து புதுசா இருக்கு, எழுத்து சுயமாகவும் இருக்கு. அவருடைய கவிதைகளில் வெளிவந்த "கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள்' என்னை மிகவும் கவர்ந்தது. மீரா "அகரம்' பதிப்ப கத்தை நடத்தி வந்தார். அதன் மூலம் முக்கியமான எழுத்தாளர்களை யெல்லாம் அறிமுகப்படுத்தினார். விக்கிரமாதித்தன், கல்யாண்ஜி, கலாப்பிரியா போன்றவர்களின் படைப்புகளையும், அவரின் சகோதரர் வீ. மனோகரன் எழுதிய "மருது பாண்டியரின் வாழ்க்கை வரலாறு' உட்பட ஒன்பது நூல்களைப் பதிப்பித்தார். இதனால் அவர் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். இருப்பினும் அவர் சோர்ந்து போய் விடவில்லை. அவரின் அயராத உழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது.
எனது முதல் கவிதையை "தீப'த்திற்காக எழுதினேன். கி. ராஜநாராய ணன் எழுதிய "பிஞ்சுகள்' எனும் நாவல் என்னை மிகவும் பாதித்தது. இந்நாவலைப் படிக்கும்போது என்னையும் அறியாமல் அக் கதைக்குள் ஒருவனாக நானும் ஊடுருவி நின்றேன். அடுத்ததாக அவர் எழுதிய "கோபல்லபுரம்' படைப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. "பிஞ்சுகள்' பற்றி கட்டுரை ஒன்றை எழுதினேன். அதை மீராவிடம் கொடுத்தேன். அப்போது அவர் அவசரமாக ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் என்னிடம் அவர், ""படிச்சிட்டு அப்புறம் சொல்றேன். இங்கே வைத்து விட்டுச் செல்'' என்றார். அதன்பின் அவர் ஊரிலிருந்து திரும்பியவுடன், ""கட்டுரை நன்றாக இருந்ததா?'' என்று அவரிடம் கேட்டேன். அவரும் பாராட்டினார். அந்தக் கட்டுரை "தாமரை' இதழில் விமர்சனமாக வெளிவந்தது கண்டு ஆச்சரியமடைந் தேன். எனக்குத் தெரியாமலேயே எனது கட்டுரையை அந்த இதழுக்கு அனுப்பிவைத்து, அதுவும் பிரசுரமாகி எனக்கு மிகப் பெரிய கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். என் வாழ்நாளில் மறக்கமுடியாத நபராக என் உள்ளத்தில் குடிபெயர்ந்து விட்டார். இவர் என் பரம்பரையைச் சார்ந்தவர் அல்ல. இருப்பினும் என்னை ஓர் இலக்கியவாதியாக உருவாக்க அச்சாரம் போட்டவர் கவிஞர் மீராதான்.
மேற்சொன்ன மூன்று ஜாம்பவான்களும் எனது கல்லூரி ஆசிரியர்கள். இவர்கள் மூவரும் இலக்கிய உலகில் எனக்குக் கற்றுத் தந்தவை ஏராளம். உதாரணமாக தமிழ் இலக்கியம், பிறமொழி இலக்கியம் போன்றவற்றைப் படிக்குமாறு ஊக்கப்படுத்தியவர்கள். எனது இலக்கியத் தேடல் இங்கிருந்துதான் தொடங்கி யது. எனது பால்ய பருவம்- அதாவது பதினேழு வயதிருக்கும். அப்போதெல்லாம் மலையாள எழுத்தா ளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் படைப்புகளில் ஆழ்ந்திருந்த நேரம். அவருடைய படைப்புகள் சினிமாவாக வெளிவந்தபோது என்னை மிகவும் பாதித்தது. அப்போதெல்லாம் கல்லூரிகளில் பதினாறு எம்எம். திரைப்படத்தைப் போட்டுக் காண்பிப்பார்கள். அவற்றில் வாசுதேவன் நாயரின் படைப்பில் வெளிவந்த "ஏணிப்படிகள்' என்னும் திரைப்படம் மிகவும் பிரபலம். அதற்குக் காரணமாக அமைந்தது, அவரின் கதையோட்டம்தான். இந்நிலையில் எனது பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் இளம்பாரதி என்ற ருத்ர துளசிதாஸன், ""நீ ஏன் மலையாள நாவல்களை நேரடியாகப் படிக்க முயற்சி செய்யக் கூடாது. "நீ நன்றாக மலையாளம் பேசுகிறாய். அப்படி இருக்கும்போது, அதன் எழுத் தாற்றலை அறிந்து கொண்டால் இலக்கிய உலகில் உனக்கு மிகவும் பயன்படும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், உங்கள் பரம்பரை கேரளாவைச் சேர்ந்தது என்பதை நீயும் நினைவில் கொள்ள வேண்டும். இதன்மூலம் இம்மொழியைக் கற்பதில் உனக்கு எவ்வித சிரமமும் இருக்காது என எண்ணுகிறேன்' என்றார். அதற்கு பிறகுதான் நான் மலையாளம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.''
நீங்கள் பள்ளி, கல்லூரிக் காலங்களில் எழுதியிருக்கிறீர்களா?
""பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது கவிதை எழுதும் பழக்கம் உண்டு. ஏழாம் வகுப்பு படிக்கும்போது, சொன்னா சிரிப்பீங்க... என் மானசீக குருவாக அழ. வள்ளியப்பா இருந்தார். பின்பு தமிழ்வாணனின் "மர்ம மனிதன்' நாவலைப் படித்து விட்டு, அதேமாதிரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து கையெழுத்துப் பிரதி ஒன்றை நடத்தினோம். அதில் "மர்மமனிதன்' போன்ற நாவலை எழுதினேன். அவற்றை சக மாணவர்களிடம் படிக்கக் கொடுத்தேன். சிலர் "நன்றாக இருக்கிறது' என்றார்கள். சிலர் "புரிய வில்லை' என்றார்கள். இதுதான் என் பள்ளிப் பருவத்து இலக்கியத் தேடல்.
கல்லூரிக் காலத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. அதன் காரணமாக ஆங்கிலத்தில் நான்கைந்து கதைகள் எழுதினேன். அவற்றையெல் லாம் நானே ஒருமுறை படித்துப் பார்த்தேன். இருந்தாலும் இந்தக் கதையை நான் ஏற்கெனவே படித்ததுபோல உணர்ந்தேன். அப்போது என் மனம் சொல்லியது, "இதை நீதான் எழுதின, ஆனா ஆர்.கே. நாராயண் சாயல் இதில் இருக்கு'ன்னு. இதுதான் என்னுடைய கல்லூரிக் காலத்தில் நான் எழுதிய முதல் முயற்சி. இருப்பினும் முப்பது ஆண்டு காலம் கழித்து "40 இரட்டைத் தெரு' எழுதி முடித்தபோது, அந்த பால்ய காலத்து நினைவு என்னுள் வந்து சென்றது. அப்போது ஆங்கிலத்தில் எழுதியதால் அவற்றை முழுமையாக உணர முடியாமல் போனது.''
உங்கள் எழுத்து மொழிகளில் பல்வேறு பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களின் எழுத்தில் தனித்துவமாகக் காணப்படும் பகடி, நகைச்சுவை உணர்வு சிறுவயது முதலே உங்களோடு தொடர்ந்து வருகிறதா? அல்லது வாழ்க்கையின் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இடையில் புகுந்த ஒன்றா?
""என்னுடைய ஆசிரியர்கள் பற்றி சொன்னேன்- மற்ற ஆசிரியர்கள் போலல்லாமல் என் எழுத்துக்கு அச்சாரம் போட்டவர்கள் என்று. அதுபோலத்தான் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பகுதி மலையாளிகள் என்பர். மலையாளின்னு சொல்லக் கூடாது. நாங்கள் தமிழர்கள்தான். இருப்பினும் மலையாளத்தில் எனது வேர்கள் சில உண்டு. மலையாளத்தில் நம்பூதிரிபலிதம் என்று சொல்வார்கள். அதாவது சிரிப்பு பற்றிய கதைகள். இக்கதைகளில் ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டால் விபரீதமான அர்த்தங்கள் தரும். இவற்றை நாங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லாதபோது நகைச்சுவைக்காக விபரீதமான வார்த்தைகளையெல்லாம் தேடிப்பிடித்து பயன்படுத்துவது உண்டு. இது எல்லாரையும் சிரிக்க வைக்கும். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிவகங்கை. தெற்கத்திய குசும்பைப் பற்றிச் சொல்லவே வேணாம். எங்கள் ஊர் (ஊரணி) தண்ணீரைக் குடித்தாலே போதும். நகைச்சுவை உணர்வு தன்னாலே வந்துவிடும். இவ்வுணர்வானது தெற்கத்திய மண்ணுக்குரியது. தெற்கத்திய மக்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நகைச்சுவை உணர்வானது வெளிப்படும். அவ்வார்த்தைகளை அங்குள்ள மக்கள் கிண்டலும் கேலியுமாகப் பேசி தங்களுக்குள் நகைத்துக் கொள்வார்கள்.
நான் கவிதை எழுதத் துவங்கிய நேரம், மூன்று விதமாக கவிதையை வடிவமைத்தேன். அவற்றில் காலைப்பொழுது, மதியப் பொழுது, இரவுப் பொழுது ஆகியன அடங்கும்.
விடியும்போது
ஒலிபெருக்கி எழுப்ப
சேவல் அடித்தனர்
விருந்து சமைக்க
பூப்பூ நீராடப் போனாள் சிறுமி
காய்கறிக் கடைக்கு
கூடை சுமந்து
கிளம்பிய அலிக்கு
சோப்பு வாங்க
கடையே திறக்கலை
- இது காலைப் பொழுதுக்கானது.
கரகக்காரனை
பகலில் பார்த்தேன்
நாவிதர் கடையில்
ஆள்வரா பொழுதில்
முகத்தைக் கொடுத்து
தூங்கத் துவங்கி
செண்டை மேளம்
முழங்கும் தெருவில்
கருப்புச் சாமிகள்
ஊர்வலம் வந்தனர்
துடைத்தால் போதுமோ
துடைத்தால் போகுமோ
சிந்திய ரத்தம்
- இது மதியப் பொழுதுக்கானது.
நாடக அரங்கில்
கூட்டம் குறைவு
வசனம் மறந்து
இருமி இரந்து
பணத்தை வாங்கி
வெளியே நடந்தான்
ஒற்றை அறையில்
கூட்டத் தூக்கம்
மனைவியை உசுப்ப
அம்மா இருமினாள்.
மருந்து வாங்க
மறந்து போனது
- இது இரவுப் பொழுதுக்கானது.
இது "கணையாழி'யில் வெளிவந்தது.
இந்தக் கவிதையை "கணையாழி'யில் படித்த எனது நண்பர் ஒருவர், "எவ்வளவு பெரிய விஷயத்தை ஒரு சிறு கவிதையில் அடக்கியுள்ளாய். இதை நீ ஏன் கதையாகக் கொண்டுவரக் கூடாது' என்றார். "இதற்கு ரொம்பவும் மெனக்கெடணும். நான் ஒரு அறியப்படும் அல்லது அறியப்படாத கவிஞனாக இருப்பதைவிட வெறும் கவிஞனாகவே இருக்க விரும்புகிறேன்' என்று அவரிடம் சொன்னேன்.
அடுத்து "அலுவலகம் போகும் கடவுள்' என்ற கவிதை எழுதினேன். அதைப் படித்துவிட்டு சில நண்பர்கள் இதைக் கதையாக எழுதியிருக்கலாம் என்றனர். "தேர்' என்ற கதையின் மூலம்தான் உரையாடல் பக்கம் வந்தேன். அந்தக் கதையைப் படித்த சுஜாதா, "கணையாழி'யின் கடைசிப் பக்கத்தில் "இரா. முருகன் கவிதையா, சிறுகதையா என்று யோசிக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் கிடந்து அல்லாட வேண்டாம்' என்று எழுதியிருந்தார். அது எனக்கு பாசிட்டிவ்வாக இருந்தது. அப்போது தான் தீர்மானித்தேன்- கவிதை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் சிறுகதை எழுதலாமே என்று.
"கணையாழி' கஸ்தூரி ரங்கன் "தினமணி கதி'ரில் பொறுப்பாசிரியராக இருந்தார். அவர் என்னிடம் சிறுகதை கேட்டிருந்தார். நானும் "அலுவலகம் போகும் கடவுள்' கவிதையை என்னால் முடிந்தவரை சுவாரசியமாக்கி சிறுகதையாக மாற்றி எழுதி அனுப்பினேன். அதைப் படித்த உதவி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், "மிகவும் நன்றாக உள்ளது. இருப்பினும் சிறுகதையைப் பொறுத்தவரை பக்க அளவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சிறுகதைக்காக மட்டும் "தினமணி கதிர்' அல்ல. இன்னும் நிறைய விஷயங்கள் அதில் சேர்க்க இருப்ப தால் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முருகன்' என்றார். அதற்குப் பிறகுதான் கதைகளை எப்படி எடிட் செய்ய வேண்டும் என்று சுயமாகக் கற்றுக் கொண்டேன்.
அதற்குப் பிறகு எனது கதைகளில் சற்று சுஜாதா பாணி கலந்திருந்தது. அது எனது குறையாகவும் இருக்கலாம். அல்லது நான் அவர்மீது கொண்ட அபிமானமாகவும் இருக்கலாம். அதன்பின் அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வெளியே வந்தேன்.
அடுத்து என் பரிசோதனை முயற்சியில் கதை யம்சமும் கதை சொல்கிற விதமும் புதிதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படியே "மந்திரவாதியும் தபால் அட்டையும்' என்ற தொகுப்பு அமைந்தது.
லத்தீன் அமெரிக்கன் எழுத்தாளர்கள், ஜெர்மன் குந்தர் கிராஸ், கார்சியோ மார்க்கஸ் போன்றோரின் மேஜிக் ரியலிசம் எழுத்துகளைப் படிக்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர்களுடைய கதைகள் கொஞ்சம்கூட சோர்வு தட்டாமல் என்னை அழைத்துச் சென்றன. கேப்பிரியேல் கார்ஸியோ மார்க்கஸின் "நூறாண்டு தனிமை' என்ற புத்தகத்தை மலையாளத்தில்தான் படிக்கக் கிடைத்தது. இது தமிழில் கிடைக்கவில்லை. இந்நூல் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்நூலைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு எப்போது கிட்டியது என்றால்- டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தபொழுது, இங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. தண்ணீர் பிடிப்பதற்காக இரவு பன்னிரண்டு மணிவரை கண்விழித்திருக்கும் சூழ்நிலை உருவானது. அந்த நேரத்தில்தான் அந்த புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதன் அனுபவத்தை வைத்து "கார்ஸியோ மார்க்ஸும் அடி பம்பும்' என்ற கதையை எழுதினேன்.
தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் "விசுவரூபம்'. எல்லா விதமான கதைகளையும் எழுதிய போதிலும் எனது துறை சம்பந்தப்பட்ட- அதாவது கம்ப்யூட்டர் துறை தொடர்பாக எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. ஏனெனில், இதில் உள்ள கஷ்டங்கள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. உதாரணமாக கம்ப்யூட்டர் துறை என்றாலே கடவுளுக்குச் சமமாகக் கருதப்பட்ட காலமும் உண்டு. தற்போது கம்ப்யூட்டர் துறை என்றாலே பொண்ணு கொடுக்க யோசிக்கிறார்கள். ஏனெனில் இதில் வேலை என்பது நிரந்தரம் அல்ல. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் துறை மிகவும் மேலோங்கி நின்றது. இத்துறையில் வேலை பார்ப்பவர்களை "இவர்களுக்கென்ன... அதிகபட்சமாக சம்பாதிக் கிறார்கள்' என்று பலரும் கூறுவர். ஆனால் இன்றைய நிலை வேறு. கம்ப்யூட்டர் துறையிலும் என்னென்ன கஷ்ட- நஷ்டங்கள் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக "மூன்று விரல்' என்னும் நாவலை ஆரம்பித்தேன். இந்நாவலைப் படித்துப் பார்த்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
இப்போதெல்லாம் காலையில் மேஜிக் ரியலிசம் பற்றியும் மதியம் அறிவியல் கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதி வருகிறேன். மாலையில் "மூன்றுவிரல்' நாவலின் அடுத்த அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரைக்கும் பாம்பு சட்டையை உரிப்பதுபோல ஒரு நாளைக்கு நான்கு முறை சட்டையை மாற்றிக் கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமா ஹீரோபோலன்னு வச்சுக்குங்களேன்.''
சுஜாதாவின் எழுத்து, அதன் பாதிப்பு உங்கள் எழுத்தில் இருப்பது பற்றிச் சொன்னீர்கள். சுஜாதா காலமாகி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. வெகுஜன மக்களுக்குப் புரியும் வகையில் அறிவியல் சம்பந்தமான நூல்களை எழுதுவதில் சுஜாதா நமக்கெல்லாம் ஒரு முன்னோடி. சுஜாதாவின் பாதிப்பு தொடர்பானதா, உங்கள் அறிவியல் சம்பந்தமான நூல்?
""நிச்சயமாக அவர் முன்னோடிதான். இருப்பினும் அவர் அனுமதி யுடன்- அவர் நிச்சயமாக அனுமதிப்பார்னு வச்சுக்கங்களேன். அவரையும் கடந்து அவருக்கு முன்னால் போகிறேன். தமிழில் முதலில் அறிவியலை புரியும்படி எழுதி, வாசகனின் தோளில் கைபோட்டு வந்த முதல் எழுத்தாளர் பேனா. அப்புசாமிதான். சொன்னா நம்பமாட்டீங்க, 1935- ஆம் ஆண்டிலேயே கம்ப்யூட்டர் பற்றி எழுதியிருக்கிறார். அப்போதுதான் கம்ப்யூட்டர் அறிமுகப் படுத்தப்பட்ட காலம். எப்படி பாரதியார் சென்னையில் வசித்துக் கொண்டு, பத்திரிகைகள் மூலம் உலக நிகழ்வுகளை அலசி ஆராய்ந்தாரோ- அதாவது ரஷ்யப் புரட்சியாளர் லெனினைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தவர். அவரை அடையாளம் கண்டு பாராட்டியவர். உலக அரசியலில் எது நியாயம், எது அநியாயம் என்று எடுத்துச் சொல்லத் தயங்காதவர். அவருடைய எழுத்தாற்றல் உலகில் நடக்கும் நிகழ்வுகளை ஒன்றிணைக்க வழிவகை செய்தது. அதுபோலதான் பேனா. அப்புசாமியும் கம்ப்யூட்டர் துறை சார்ந்த அரிய விஷயங்களை எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தனது படைப்புகளில் பதிவு செய்தார். அறிவியல் வளர்ச்சியை அந்தக் காலத்திலேயே அடையாளம் கண்டு வெளிப்படுத்தியவர் பேனா. அப்புசாமி. அவரது வாழ்க்கை முழுவதும் அறிவியலுக்காக அர்ப்பணித்தவர். உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர் எழுதிய ஒரு அறிவியல் கட்டுரையை தபால் மூலம் அனுப்புவதற்காக தள்ளாத வயதிலும் (சுமார் 85 வயதிருக்கும்) அஞ்சலகம் சென்று, தபால் பெட்டியில் கட்டுரையைப் போட்டு விட்டுத் திரும்பியபோது இறந்து போனார் என்பார்கள். அந்த அளவுக்கு அறிவியலோடு ஒன்றிப் போனவர். இவரது நூல்கள் மூலம் உலக அளவில் தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்தவர். இவரது தொகுப்பு பற்றி ஒரு கட்டுரைகூட "இந்தியா டுடே'யில் எழுதியிருக்கிறேன். இவருக்குப் பிறகு ஒரு வெற்றிடம் உண்டானது. அதற்குப் பிறகு ரேடியோ தொழில் நுட்பம் குறித்து சிலர் எழுதத் துவங்கினார்கள். அவற்றில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஓம். அருணாசலம் என்பவர் என்னை மிகவும் கவர்ந்தவர். இவர் அங்கே ரேடியோ ரிப்பேர் ஷாப் நடத்தி வந்தார். டையோடு, டிரையோடு வால்வு ரேடியோ பற்றி மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார். இவரது நூல்களைப் படித்துப் பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு எளிய நடையைத் தமிழில் கையாண்டுள்ளார். அறிவியல் என்றால் இவ்வளவுதானா? ரேடியோ தொழில் நுட்பம் என்றால் இவ்வளவுதானா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல என்பது போல இவரது படைப்புகள் அமைந்திருக்கும்.
அடுத்து 1960-ல் சுஜாதா எழுதிய அறிவியல் நூல்கள் அனைவரையும் கவர்ந்தது. இவர் கம்ப்யூட்டர் மூலம் அறிவியலைப் புகுத்தினார். உதாரணமாக ஒரு மூளை எப்படி செயல்படுகிறது என்பதை அக்குவேறு ஆணிவேறாக வெளிப்படுத்தியிருப்பார். இவர் அறிவியலைத் தமிழில் கையாண்ட விதம் அளப்பரிய செயலாகும். மேலும் இவர் தனது படைப்புகள் மூலம் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டினை அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கதை, கவிதை, கட்டுரை என்று எழுதிக் கொண்டிருந்த எனக்கு அறிவியல் சார்ந்த கட்டுரையை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் சுஜாதாதான் என்றால் அது மிகையாகாது.
அதற்குப் பிறகுதான் எனது கட்டுரைகள் "கல்கி'யில் பிரசுரமாகியது. அதிலும்கூட வேடிக்கையான சம்பவங்கள் நடந்ததுண்டு. எனது படைப்புகளை பிளாப்பியில் காப்பி செய்து அங்கு அனுப்புவேன். அங்கிருந்து போன் வரும். "என்ன சார், உங்க கட்டுரைக்கு மத்தியில் ஏதாவது இரண்டு இடத்தில் நகைச்சுவை இருந்தால் போதாதா? எல்லாமே சிரிப்பான முகமாக உள்ளதே' என்று. ஏன் இப்படி சொல்லுகிறார்கள் என்றால், நான் அனுப்பிய படைப் பானது அங்கிருந்த சாப்ட்வேருடன் பொருந்தவில்லை. ஆகையால் தமிழ் எழுத்துகள் எல்லாம் சிரிக்கும் முகங்களாகக் காட்சியளித்தி ருக்கிறது. மொத்தத்தில் ஃபாண்ட்தான் பிரச்சினை. இதை நானும் புரிந்து கொண்டு எழுதிக் கொடுக்க ஆரம்பித்தேன்.
"கல்கி' கி. ராஜேந்திரனோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பிறகு அவர் சொன்னார்: "அறிவியல் பற்றியே எழுதுகிறீர்களே.. நீங்கள் வங்கியில் பணிபுரிகிறீர்கள். அதுவும் ஐ.டி டிப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறீர்கள். அது தொடர்பாக எழுதினால் என்ன? சுஜாதாதான் அறிவியல் தொடர்பாக எழுதுகிறாரே' என்றார். நானும் அவர் சொன்னதற்கிணங்க "மல்டி மீடியா' பற்றி முதலில் எழுதினேன். தொடர்ந்து பன்னிரண்டு கட்டுரைகள் வரை வெளிவந்தன. அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து "கொறிக்க கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்' என்று புத்தகமாகப் போட்டோம். இதற்கு என்சிஆர்டி விருது கிடைத்தது. அந்த நூலுக்கு கி.ரா.வே முன்னுரை கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து "கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம்' என்ற நூலை நானும் என் சக நண்பருமான ராஜாராமனும் சேர்ந்து எழுதினோம். என்னுடைய அறிவியல் சம்பந்தமான படைப்புகளில் சுஜாதா மற்றும் பேனா. அப்புசாமியின் தாக்கம் நிச்சயமாக இருக்கும். அது தவிர்க்க முடியாத ஒன்று. சமீபத்தில் "கல்கி'யில் எழுதிய "டிஜிட்டல் கேண்டின்' வரைக்கும் இதுதான். இந்நூல் மிகவும் நன்றாக வந்தது. வாசகர்களின் பாôராட்டையும் பெற்றது. ஒருவகையில் கி.ரா. அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இது தவிர "சில்' என்ற அறிவியல் கதையை அம்பலம் டாட் காமிற்காக எழுதினேன். இருந்த போதிலும் எனது எல்லா படைப்புகளிலும் சுஜாதாவின் பாதிப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். அதை நான் பெருமையாகவே கருதுகிறேன்.''
நவீன வாசகர்களைப் பொறுத்தவரைக்கும் சுஜாதாவின் இடத்தை நீங்கள் நிரப்புவதாகச் சொல்கிறார்கள். உங்கள் அளவிற்கு சுஜாதா சோதனை முயற்சிகளில் இறங்கினாரா என்றால் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். அவர் ஒரு கட்டத்தோடு பின்தங்கிவிட்டதாகச் சொல்லலாம். அதற்கு அவர் சினிமாவில் நுழைந்ததுகூட காரணமாக இருக்கலாம். அவரை நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளியாக எடுத்துக் கொள்ளலாமா?
""நீங்கள் கேட்ட கேள்வியானது, மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டீர்களா என்பது போல் உள்ளது. இதற்கு நான் ஆமாம் என்றோ இல்லை யென்றோ பதில் சொல்ல இயலாது. ஏனென்றால் நானும் சினிமாவில் நுழைந்திருக்கிறேன். படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காகப் பதில் சொல்கிறேன். தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவிற்கென்று தனித்துவம் உள்ளது. சுஜாதாவின் இடத்தை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அந்த இடம் காலியாகத்தான் இருக்கிறது. இதை தன்னடக்கத்திற்காகச் சொல்ல வில்லை. அவரது இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. உதாரணமாக "தேவர் மகன்' படத்தில் சிவாஜி சார் அமர்ந்திருந்த நாற்காலி எப்படி காலியாக இருக்கிறதோ அப்படித் தான். அந்த நாற்காலியில் உட்காருவது என்பது என்னுடைய குறிக் கோளும் அல்ல. நான் கடந்து வந்த பாதை, செல்ல வேண்டிய தூரம், இலக்கு எல்லாமே வித்தியாசமானது. என்னுடைய குறிக்கோளானது முன்னோக்கியே செல்லும். உருள்கிற கல்லுக்கு வேகம் கூடும். அதற்குக் கீழ் பாசி படியாது. அதுபோல என்னுடைய இந்த இலக்கியப் பணியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.''
வெகுஜனப் பத்திரிகை, சிறுபத்திரிகை இரண்டிலும் எழுதிவருகிறீர்கள். நவீன வாசகர்களுக்கு பின்நவீனத்துவமோ மேஜிக்கல் ரியலிசமோ ஓரளவுக்குப் பரந்துபட்ட அறிமுகம் கிடைத்திருக்கிறது. உள்வாங்கிக் கொண்டு வாசிக்கிற பக்குவத்தை அடைந்திருக்கிறார்கள். வெகுஜன வாசகர்களுக்கு இந்தக் கட்டுடைக்கிற எழுத்தைக் கொண்டு போக ஏதாவது தடை இருக்கிறதா? வெகுஜனப் பத்திரிகைகளில் கட்டுடைக்கிற எழுத்தை உங்களுக்கு எழுதத் தயக்கமாக இருக்கிறதா?
""எனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது. உதாரணமாக ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவரின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருந்தது என்பதில் மேஜிக்கல் ரியலிசம் இல்லையா? எல்லாமே நாம் எழுதுகிற முறையில்தான் இருக்கிறது. காடாறு மாதம், நாடாறு மாதம் என்னும் விக்கிரமாதித்தன் கதைகளிலும் இந்த மேஜிக்கல் ரியலிசம் அடங்கியிருக்கிறது. இதில் வாசகர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்றால், எளிய நடையில் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவதுதான்.
புத்தகத்தை எடுத்துக் கொண்டால் கடகடவென படித்துக் கொண்டே போகவேண்டும். அந்த அளவிற்கு எழுத்தில் வேகமும் வேண்டும்.''
வெகுஜன வாசகர்களுக்கு ஒரு வாசகத் தயாரிப்பு வேண்டு மென நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அது தேவையில்லை என்கிறீர்களா?
""அந்தத் தயாரிப்பே தேவையில்லை. நீங்கள் சொல்ல விரும்புவதைப் படிக்க வைக்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் ஊடகங்களுக்கு அப்பால் ஒருவரைப் படிக்க வைப்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளது. அதையெல்லாம் தாண்டி ஒருவரைப் படிக்க வைக்க வேண்டும் என்றால் சொல்லும் விஷயத்தைச் சுலப மாக்குங்கள்; சுவையாக்குங்கள்; எழுத்து நடையையும் எளிமைப் படுத்துங்கள். இப்பணியை நிறைய பேர் செய்கிறார்கள். நானும் இதைத்தான் செய்து வருகிறேன்.''
உங்களுடைய சிறுகதைகளுக்கு நவீன வாசகர்களிடையே எப்படி வரவேற்பு இருந்ததோ அந்த அளவுக்கு "அரசூர் வம்சம்' நாவலை உங்கள் மாஸ்டர் பீஸாகச் சொல்கிறார்கள். நாவலுக் காக நீங்கள் உழைத்தது பற்றிச் சொல்லுங்கள்? மேஜிக்கல் ரியலிசம் யுக்தியைப் பயன்படுத்தியதில் உங்களுக்கு சௌகரியத் தைக் கொடுத்ததா? கால விளையாட்டுக்கு ஏற்ப நீங்கள் கையாண்டிருக்கும் விதவிதமான எழுத்து மொழிகளுடைய தாவல்பற்றி..
""மாஸ்டர் பீஸ் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நாவல் ஆங்கிலத்திலும் வெளியானது. இந்தி இயக்குனர்களும் பாராட்டி னார்கள். விக்கிரமன் அதன் கருப்பொருள் பற்றி விசாரித்தார். இந்தக் கதையின் மூலமாக இந்த மாதிரியான நட்புகள் கிடைத்திருக்கிறது. "அரசூர் வம்சம்' நாவலை எடுத்துக் கொண்டால் 1850-லிருந்து 1880 வரைக்கானது. அக்கால கட்டத்தில் நான் இல்லை. இருப்பினும், என் வம்சாவழிகளான என் தகப்பனார், தாத்தா, பாட்டி போன்றவர்களிடமிருந்து பெற்ற விஷயத்தைத் தான் இந்நாவலில் எழுதினேன். இதில் நிறை- குறைகள் அதிகமுண்டு. ஏனெனில் முழுமையான விஷயத்தை நம்மால் பெற இயலாது. இருப்பினும் இம்முயற்சியைக் கையில் எடுத்தது மிகவும் சுவாரசியமானது. பிராமின் கிறிஸ்டியன் என்கிற புதிய சமுதாயம் உருவான காலகட்டம் அது. அந்தச் சூழ்நிலை யில் நடந்த இச்சம்பவத்தை இந்நாவலில் உட்புகுத்தியாக வேண்டும். அதற்காக இந்த மேஜிக்கல் ரியலிசம் எனக்கு கை கொடுத்தது. முன்னோர்கள் செய்த நடவடிக்கைகள்- அதாவது நடுவீட்டில் சிறுநீர் கழிக்கும் இவர்களது செயல்களைக் கண்டும் காணாமல் போவது இதெல்லாம் ஒரு குறியீடுதான். இதுபோன்ற செயல்களை நாம் எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பதைதான் இந்நாவலில் புகுத்தியிருந்தேன். இப்படி எண்ணற்ற செயல்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கான நேரமும் காலமும் போதாது. இதில் அந்தக் காலத்திய சென்னைப் பட்டணம், சிவகங்கை, அரசூர், அம்பலப்புழை ஆகியவற்றில்-அம்பலப் புழையானது இன்றளவிலும் பெரும் மாற்றத்தைச் சந்திக்கவில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் உள்ளது. மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை படித்த ஊரும் இதுதான். இவற்றையெல் லாம் இக்கதைக்குள் கொண்டு வருவதற்கு எனக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. கேரளத்தில் வாழ்ந்த தமிழ்க் குடும்பத்தினர், மலையாளம் கலந்த கொஞ்சும் தமிழைப் பேசுபவர்கள்- இவற்றை எப்படி இந்நாவலில் புகுத்துவது என்கிறபோது, அந்தப் பேச்சு வழக்கையே நானும் பயன்படுத்தினேன். மொத்தம் 52 அத்தியாயங்கள் இதில் உண்டு. அவற்றில் கடைசி அத்தியாயத் தில் மிகவும் சரியான முறையில் முடிவு அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது. மொத்தத் தில் "அரசூர் வம்சம்' எனக்குப் புத்துயிரைக் கொடுத்தது.''
வரலாற்றை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்தும் வருகிறீர்கள். வரலாறு தெரியாத- வரலாற்றுப் பாடத்தை இழந்து வருகிற இன்றைய தலைமுறையினர் எதையெல் லாம் இழந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
""முக்கியமாக நாம் வரலாறு என்று எதைச் சொல் கிறோம். பெரும்பாலும் பள்ளிகளிலும் கல்லூரி களிலும் அரச வம்சத்தைச் சார்ந்தவற்றை மட்டுமே வரலாறாகப் படித்து வந்துள்ளோம். ஆனால், அடித் தட்டு மக்களின் வாழ்க்கை நிலை என்ன? விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் நம் வரலாற்றில் இல்லை. இது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இவற்றை மறைக்கப்பட்ட வரலாறு என்றுகூட சொல்லலாம். இச்சூழ்நிலை காரணமாகத்தான் எனது ஆய்வு தொடர்ந்த வண்ணமாக உள்ளது. நிச்சயமாக எந்த மாணவரும் வரலாற்றைப் படிப்பதற்குத் தயக்கம் காட்டக்கூடாது.''
இன்றைய சூழ்நிலையில் முன்னோர்களின் வரலாறு, நாட்டின் வரலாறு- ஏன் குறைந்தபட்ச வரலாற்றைக்கூட தெரியாத நிலையில் இருப்ப வர்களுக்கு தாங்கள் என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்? இன்றைய கல்வித் திட்டத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா?
""கல்வித் திட்டத்தை உருவாக்குபவர்கள் யார்? நாம்தான். நம் பிள்ளைகள் எதைப் படிக்க வேண்டும் என்பதை நம்மாலேயே தீர்மானிக்க முடியவில்லை. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் எல்லாருமே கம்ப்யூட்டர் பணிக்குத்தான் போக வேண்டுமென்று விரும்புகிறார்கள். இது ஒரு தவறான கருத்தாகும். எல்லாருமே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதலை நாம்தான் இத்தலைமுறைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். நம்முடைய வழிகாட்டுதல் சரியாக இருந்தால் நிச்சயமாக நம் குழந்தைகளும் வெற்றி என்னும் இலக்கை நோக்கிப் பயணம் செய்வார்கள். அதற்கான சூழ்நிலையை- அதாவது கல்வித் திட்டத்தை நாம்தான் அமைத்துக் கொடுக்க வேண்டும்.''
"உன்னைப்போல் ஒருவன்' படத்திற்காக கமலோடு பணிபுரிந்த அனுபவம், ஆளுமை குறித்துச் சொல்லுங்களேன்...
""இந்தப் படத்தில் கமலோடு பணியாற்றியபோது, எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்தது. கமல்கூட சொன்னார், "தமிழ் எழுத்தாளர்கள் நல்ல திறமைசாலிகள். நன்றாக வசனம் எழுதுகிறார்கள். ஆனால் திரைக்கதை அமைப்பதில் மட்டும் பொறுமை மிகவும் குறைவாக உள்ளது' என்று. அவரோடு உரையாட வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கமலை உலக நாயகன் என்று உயர்த்தியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. சிலர் சொல்லலாம்... இவர் கமலை ஐஸ் வைப்பதற்காக இப்படியெல்லாம் சொல்லுகிறார் என்று. அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. இப்படத்தில் வசனம் எழுதுகிற வாய்ப்பைப் பெற்றபோதிலும் அதில் ஏகப்பட்ட திருத்தங்களை எனக்கு கமல் கற்றுக் கொடுத்தார். அவருடைய ஆளுமையைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. சினிமா உலகிற்கே தெரியும். அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. ஒரு படம் நன்றாக வரவேண்டுமென்பதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி அலாதியானது; வியப்பிற்குரியது; சிந்தனைக்குரியது; இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படத்தில் வசனம் மட்டுமே நான் எழுதியிருக்கிறேன். இனி வரும் படங்களில் திரைக்கதை, வசனம் எழுதவிருக்கிறேன். இதுவும் கமலிடமிருந்து நான் கற்றக் கொண்ட ஒரு பாடம்தான்.''
தமிழ்த் திரையுலகில் தமிழ் எழுத்தாளர்களை கமல் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச் சாட்டை எழுத்தாளர் ஞானி குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தங்களின் கருத்து என்ன?
""இதில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. சுஜாதா, ரா.கி. ரங்கராஜன், மதன், கிரேஸிமோகன், ஞானசம்பந்தன், புவியரசு போன்ற எழுத்தாளர்களையெல்லாம் பயன்படுத்தியவர்தான் கமல். இப்படியிருக்கையில் தமிழ் எழுத்தாளர்களை கமல் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது பொருந்தாத ஒன்றாக உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அடுத்த படத்திலும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இது ஏதோ பணம் கிடைக்கும் என்பதற்காகச் சொல்லவில்லை. கமல் விரும்பினால் சும்மாவே பணியாற்றுவேன்.''
நவீன தமிழ் இலக்கியம் பதிப்புத் துறையில் பெரும் அளவில் வளர்ந்திருக்கிறது. நிறையபேர் பதிப்பிக்க முன்வருகி றார்கள். வாசகர்கள் பெருகியிருக்கிறார்கள். உங்களுடைய படைப்புகளை வாசகர்களிடம் எடுத்துச் செல்ல உறுதுணையாக இருந்த சக எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
""இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன். ஜெயமோகன் "உன்னைப் போல் ஒருவன்' படத்தைப் பார்த்துவிட்டு, மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்று பாராட்டினார். எனக்கும் கொஞ்சம் வயிற் றெரிச்சலாகவும் இருக்கிறது என்று நகைச்சுவையாகவும் கூறினார். அதுபோலதான் என்னுடைய படைப்புகளை சக எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணன், பா.ரா., சுப்ரபாரதி மணியன், எஸ். சங்கரநாராயணன், கலாப்பிரியா, மாலன் போன்றவர்கள் ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைவருக்கும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
நேர்காணல் : ஆர்.சி. ஜெயந்தன்.
கருத்துகள்