இரண்டு
குட்டி ஆடுகள் எதிர் எதிரே
நின்றுகொண்டு எம்பி எம்பி முட்டிக்கொள்ள
ஆரம்பித்தன. அதைப் பார்த்த தங்கம்மாள்,
”சீ… கழுதவுள எதுக்கு இப்பிடி
முட்டி மோதிச் சாவுறீங்க?” என்று
திட்டிவிட்டு, சண்டை போட்டுக்கொண்டு இருந்த
குட்டிகளின் பக்கம் ஒரு கைப்பிடி
மண்ணை அள்ளி விசிறினாள். சண்டையை
நிறுத்தி விட்டு, இரண்டு குட்டிகளும்
ஓடி வந்து அவளுடைய முகத்தை
முகர்ந்து பார்க்கவும் நக்கவும் ஆரம்பித்தன. அதைப் பார்த்து ஆடும்
மற்றொரு குட்டியும் ஓடி வந்து அவளைச்
சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்து
பார்க்கவும் கால்களில் நக்கவும் ஆரம்பித்தன.
அவளால்
களை வெட்ட முடியவில்லை. கையால்
தள்ளிவிட்டும் நெட்டிவிட்டும் பார்த்தாள். அவளைவிட்டு ஒன்றும் நகர்வது மாதிரி
தெரியவில்லை. ”சீ கழுதவுள… ஒங்க பவுச இப்பத்தான்
ஒரே முட்டாக் காட்டுறீங்களா? போங்க, அப்பிடிப் போயி
மேயுங்க. வவுத்த நொப்ப அடிக்கிறதவுட்டுட்டு
எதுக்கு வந்து இப்பிடி ஆல
வட்டம் அடிக்கிறீங்க?” என்று திட்டினாள். அவளுடைய
பேச்சு ஆடுகளின் காதில் விழுந்த மாதிரி
தெரியவில்லை. அவளையே சுற்றிச் சுற்றி
வந்தன. ”ஒங்ககூட வெளயாடிட்டு இருந்தா,
என்னோட வேலய யாரு பாப்பா?
ஊருல எந்த ஆம்பள, பொட்டச்சி
இப்ப வேலக்கி வாரங்கிறா? இப்பத்தான்
கொளம் வெட்டுறன், ஏரி வெட்டுறன்னு தலக்கி
நூறு ரூபா தரான். போயி
தலயக் காட்டிப்புட்டு பத்துப் பதினோரு மணி
முட்டும் குந்தியிருந்துப்புட்டு, வூட்டுக்கு வந்துடுதுவோ. சும்மா குந்தியிருக்கவே பணம்
தர்றப்ப…
எவ கள வெட்ட வருவா?”
என்று அங்கலாய்த்தபடி, மீண்டும் களை வெட்ட ஆரம்பித்தாள்.
ஆடுகள் அவளை முகர்ந்தபடி, சுற்றி
வந்தன.
மொத்தமே
ஒரு காணி வரகு நிலம்தான்.
ஆறு, ஏழு நாட்களாக அவள்
ஒருத்தியாகவே களை வெட்டிக்கொண்டு இருந்தாள்.
ஆள் வரும் வரும் என்று
ஒரு வாரம், பத்து நாள்
உட்கார்ந்து பார்த்தாள். ஒரு ஆள்கூட வரவில்லை.
பக்கத்து வீட்டுப் பெண்களைக் கெஞ்சாத குறையாகக் கூப்பிட்டுப்
பார்த்தாள். ஒருத்தியும் வரவில்லை. நிலம் பில்லேறிப்போகும் என்ற
கவலையில், தினமும் தனியாகவே வந்து
களை வெட்ட ஆரம்பித்தாள். இன்னும்
நான்கு நாட்களுக்கு வெட்டினால், நிலம் சுத்தமாகிவிடும். இப்போது
கூலி ஆள்வைத்துக் களை வெட்டாததே நல்லது
என்று நினைத்தாள். கூலியும் மிச்சம். தானே களை வெட்டுவதால்
நிலமும் சுத்தமாக இருந்தது. அரசாங்கம், கூலி ஆட்களுக்கு நூறு
ரூபாய் தந்து ஊரைக் கெடுத்துவிட்டதாக
நினைத்தாள். ஊரில் காட்டு வேலைக்கு
ஆள் கிடைப்பதும் அரிதாகி விட்டது.
”இதெல்லாம் இன்னம் எம்மாம் காலத்துக்கு
ஓடும்?” என்று சொன்ன தங்கம்மாள்,
களை வெட்டியை வேகமாகப் போட்டு வெட்டினாள். கைக்கு
எட்டிய தூரத்தில் இடது கைப் பக்கமாக
ஒரு வரகுச் செடி லேசாக
ஓடிந்து இருந்தது. களை வெட்டுவதை நிறுத்திவிட்டு,
ஒடிந்த செடியை நிமிர்த்திவிட்டு தூங்கச்
செய்வது மாதிரி தடவிக் கொடுத்தாள்.
வீட்டுக்குப்
போகலாமா என்று நிமிர்ந்து நின்று,
மேற்கில் பார்த்தாள். சூரியன் நன்றாகச் சாய்ந்துவிட்டு
இருந்தது. வெயில் தாழ்ந்து லேசாகக்
குளிர்ந்த காற்று வீசிக்கொண்டு இருந்தது.
இப்போது வெட்டினால், உடல் களைப்புத் தெரியாமல்
களை வெட்டலாம் என்ற எண்ணம் வந்தது.
மீண்டும் குனிந்து வெட்ட ஆரம்பித்தாள். மூன்று
நான்கு தோட்டப் பாய் அளவுக்குத்தான்
வெட்டிஇருப்பாள். அப்போது பேச்சுக் குரல்
கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். மேற்குத் தெரு கண்ணன் மகன்
சேகரும், வண்டிக்காரன் வீட்டு கணேசனும் வருவது
தெரிந்தது. எதற்காக இந்த நேரத்தில்
வருகிறார்கள். வேறு எங்காவது போகிறார்களா,
எங்காவது நிலம் பார்க்க வந்திருப்பார்களா
என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே, இவளிடம் வந்து விட்டார்கள்.
”என்னா
கெய்வி, நாங்க வாரது தெரிஞ்சி,
வேணுமின்னே கள வெட்டுறாப்ல பாசாங்கு
பண்றியா?” என்று சேகர் கேட்டான்.
அதற்குக் களை வெட்டுவதை நிறுத்தாம
லேயே ”நீ…. என்னடா எம் மவளயா
கட்டியிருக்கிற? மருமவன் வந்திருக்காருன்னு ஆடிப்
பறக்குறதுக்கு?” என்று சீண்டலாகக் கேட்டாள்
தங்கம்மாள்.
”ஒம்
மவ வாணாம்… நீ வா. ஒன்னியே
கட்டிக்கிறன்” என்று
சிரித்தான் சேகர்.
”ஆமான்டா,
நான் வயசிக் குட்டியா இருக்கிறப்பவே,
இந்த ஊருப் பயலுவ ஒருத்தனுக்கும்
எங்கிட்டெ வாரதுக்குத் தெம்பு இல்லெ. இப்ப
இவுருதான் வந்திருக்காரு…
மீச வெச்சிக்கிட்டு.”
”அதெல்லாம்
அப்புறம் பேசிக்கலாம், செத்த ஒக்காரு… ஒங்கிட்டெ ஒரு விசியம் பேசணும்.”
”இப்பதான்
வயசுக்கு வந்த குட்டியாட்டம் தளதளன்னு
இருக்கன். இவுரு எங்கிட்டெ விசியம்
பேச வந்திருக்காரு.”
”வயசிக்
குட்டியா இருந்தாலும், கெய்வியா இருந்தாலும்… விசியம் ஒண்ணுதான் கெய்வி.
செத்த ஒக்காரு” என்று சேகர் உட்கார்ந்தான்.
அவனை அடுத்து கணேசனும் உட்கார்ந்தான்.
அவன் உட்கார்ந்து சிறிது நேரத்துக்குள்ளாகவே, மூன்று
நான்கு போன் வந்துவிட்டது. அவன்
மாறி மாறி ஒவ்வொரு செல்போனிலும்
பேசியதைப் பார்த்துவிட்டு, ”சும்மா ஊரச் சுத்துற
ஒனக்கு மூணு செலுபோனா?” என்று
கேட்டாள்.
”எல்லாம்
ஒன்னெக் காதல் பண்ணத்தான்” என்று சிரித்தவன், ”செத்த
ஒக்காரு ஒங்கிட்டப் பேசணும்” என்றான்.
”ஒங்கூட
கதெ பேசுனா, என்னோட வேலய
யாருடா செய்வா?”
”நான்
செய்யுறன்” என்றான்
சேகர்.
”ஆமா… செஞ்சி
கிழிச்ச”
என்றவள், களை வெட்டியை எடுத்து
மண் சுரண்டிக்கொண்டே, ”என்னா?” என்று கேட்டாள்.
”இந்த
நெலத்தக் குடுத்துடுறாப்ல இருக்கியா?” என்று கேட்டான் கணேசன்.
”இதென்ன
மாத்து சீலயா… இன்னிக்கிக் குடுத்துட்டு நாளக்கி வாங்கிக்கிறத்துக்கு?”
”இல்லெ
பெரியம்மா. நான் சொல்றதக் கேட்டுக்க.
சுத்திலும் பாத்தியா? கண்ணுக்கு எட்டுன தூரமுட்டும் யாராச்சும்
நெலம் வெச்சி இருக்காங்களா? நீ
மட்டும் வர நெலத்த வெச்சுக்
கிட்டு, என்னா பண்ணப்போற? சுத்திலும்
பயிர் நிலம் இல்லாததால, பூச்சி
அதிகமா அடிக்கும்… நோவு அதிகமாத் தாக்கும்.
ஆடு, மாடு தொல்லெ தாங்க
முடியாது. வெளஞ்சது வூட்டுக்குப் போனாத்தான் உண்டு. போட்ட மொதலே
கெடைக்குமாங்குறது சந்தேகம்தான். அப்புறம் ஒன்னிஷ்டம் என்று நிதானமாகச் சொன்னான்.
அவனுடைய பேச்சைக் கேட்ட தங்கம்மாள், கண்
எட்டும் தூரம் வரை பார்த்
தாள். ஒரு இடத்தில்கூடப் பயிர்
இல்லை. கடலை, எள், சோளம்,
பயிர், மொச்சை என்று விளைந்த
நிலங்கள் எல்லாம் புல் மண்டிப்போய்
தரிசு மாதிரிக் கிடந்தன. பல இடங்களில் கம்பி
வேலி போட்டு நிலத்துக்கு அடையாளம்
இட்டு இருந்தார்கள். மூன்று நான்கு மைல்
தூரத்துக்கு யாருமே பயிரிடவில்லை. ஊர்க்காரர்களிடம்
நிலமும் இல்லை. சென்னை, கோயம்புத்தூர்
என்று எங்கெங்கு எல்லாமோ இருந்து வந்து
ஆட்கள் நிலத்தை வாங்கிவிட்டார்கள். ஒருஆள்
கூட ஒரு செடியை நட்டுவைக்கவில்லை.
நிலத்துக்கு அடையாளமாக நின்றுகொண்டு இருந்த மரங்களை எல்லாம்
வெட்டிச் சாய்த்துவிட்டார்கள். செடி, கொடி, மரம்
என்று எதுவுமே இல்லை. புல்
மட்டும்தான் இருந்தது. கூறுகூறாக, வீட்டு மனைகளாகப் பிரித்து
கல் நட்டுவிட்டார்கள். அதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள
காடுகளில் இருக்கிற பூச்சிகள், வண்டுகள், குருவிகள் என்று மொத்தமும் தன்னுடைய
நிலத்துக்குத்தான் வரும். வந்து பெரும்
அழிம்பை ஏற்படுத்தும். காட்டில் உள்ள மொத்த எலிகளும்
இங்கேதான் வந்து குடியேறும். அப்படி
நடந்தால், ஒரு படி வரகுகூட
மிஞ்சாதே என்ற கவலை வந்தது.
”ஒவ்வொருத்தனும்
நிலம் வாங்குறதப் பாத்தா, வூடு கட்டுறதப்
பாத்தா, காலாகாலத்துக்கும் கருங்கல்லு மாரி இங்கியே குந்தி
இருக்கப்பாறது மாரிதான் இருக்கு. இவுங்களுக்கு எல்லாம் சாவே வராதா?”
என்று சொன்னாள்.
கணேசன்,
”என்ன பெரியம்மா சொல்ற?” என்று கேட்டான்.
‘நெலத்தக்
குடுத்துப்புட்டா, எனக்கு யாரு சோறு
போடுவா?”
”அதான்
கட்டுக்கட்டாப் பணம் தரமில்லெ” என்றான் சேகர்.
”பணத்தக்
காட்டுல போட்டா, மொளைக்குமா? இல்லெ,
பணத்தத்தான் திங்க முடியுமா?”
”கெழவியோட
கீவுட்டுப் பேச்சப் பாருடா. ஓங்கி
வுட்டன்னா பாரு. சாவப்போற காலத்திலெ
கஷ்டப்படுறியே… பணத்த
வாங்கிக் குடுத்தா, வாங்கிவெச்சிக்கிட்டு வூட்டுல குந்திக்கிட்டு சாப்புடுவியேனு
பாத்தா… மசுருப் பேச்சு பேசுற.”
”யான்டா,
ஒனக்கு அம்மாம் கோவம் வருது?”
என்று தங்கம்மாள் சொன்னாள். அப்போது ஒரு ஆட்டுக்
குட்டி வந்து அவள் மீது
ஏற முயன்றது. ஏற முடியாமல் தவிப்பதைப்
பார்த்து, நின்று இருந்தவள் உட்கார்ந்தாள்.
மறு நொடியே ஆட்டுக் குட்டி
அவளுடைய மடியில் வந்து படுத்துக்கொண்டது.
மற்ற குட்டிகள் அவளுடைய முதுகையும், காலையும்,
கையையும், முகத்தையும், முகர்ந்து பார்க்கவும், நக்கவும் ஆரம்பித்தன.
சேகர் சொன்னான், ”நெலம் நெலங்கிறியே கெழவி.
வருசத்துக்கு இந்த ரவ நெலத்துல
இருந்து என்னா வந்துடும்? பத்து
மூட்டெ வரவு வருமா? அரிசி
ஒரு ரூவான்னு வந்திட்டெ காலத்திலெ, ஒன்னோட வரவ யாரு
சீந்திப் பாக்கப்போறா? மீறி காட்டுல பயிர்
பண்ணுனாலும், கூலி வேலக்கி இப்ப
எவன் வரங்கிறான். சரி, நான் ஒரு
கேள்வி கேக்குறன்… நீ சொல்லு பாக்கலாம்.”
”நீ
என்னடா வந்து என்னெக் கேள்வி
கேக்குறது?”
”சொல்றத
என்னான்னு புரிஞ்சிக்காமப் பேசுனா, மனுசனுக்குக் கோவம்
வருமா… வராதா?”
”சொல்லுடா
விசியத்த ஒரேமுட்டா, ரொம்ப இது காட்டுற…”
”இத்தினி
வருசமா இந்தக் காட்டுல வேல
செஞ்சியே…
ஒன்னால ஒரு குண்டுமணி அளவுக்குத்
தங்கம் வாங்கிப் போட முடிஞ்சிதா? ஒழுவுற
கூர வூட்டுக்கு ஒரு ஓடு போட
முடிஞ்சிதா? இல்லெ, நல்ல துணிதான்
கட்ட முடிஞ்சிதா? நல்ல சோறுதான் தின்னுஇருப்பியா?”
”இல்லெ…”
”அதனால
நான் சொல்றதக் கேளு. கிராசுக் கேள்வி
கேக்காத…
இப்ப இந்த நெலத்துக்கு பத்து
லட்சம் தர்றங்கிறான். ஊருக்குத் தெரியாமப் பணத்தெ வாங்கி, ஒரு
அஞ்சி லட்சத்த பேங்குல போட்டுட்டு… மிச்சப்
பணத்தில ஒரு வூட்டக் கட்டு.
வேணுங்கிற நகய வாங்கிப் போட்டுக்க.
மாசாமாசம் பேங்குல போட்ட பணத்திலெ
இருந்து வட்டிப் பணத்த எடுத்துச்
சாப்புட்டுக்க ஒரு நல்ல வழி
இருக்கும்போது, நாற வழியிலெ போவாதடி
கெழவி.”
”வணக்கம்
சுணக்கம் இல்லாமப் பேசுறயேடா, மருவாத கெட்ட பயலே.
நீ சொல்றபடி நகய வாங்கி மாட்டிக்கலாம்.
மெத்த வூட்டுல படுத்துக்கலாம். வேல
செய்யாமக் குந்தியிருந்தா, தின்ன சோறு எப்பிடிச்
செரிக்கும்?”
”வேல
செஞ்சித்தான் சாவுன்னா… இந்தப் பணத்த வெச்சி,
உள் காட்டுல போயி நெலம்
வாங்கிக்க.”
”ரோட்டு
மேல இருக்கிற என்னோட தங்கத்த வுட்டுட்டு,
பித்தளயப் போயி வாங்கச் சொல்லுறியா?”
”ஒன்னோட
நல்லதுக்குத்தான் சொல்றன். கேட்டாக் கேளு. வுட்டா வுடு.
இதியே போன வருஷம் வுட்டிருந்தா,
அஞ்சிலச்சம்தான் வந்திருக்கும்.”
”இன்னமுட்டும்
நீ எனக்கு என்னா நல்லது
பண்ணுனெ? இப்பப் புதுசா நல்லது
பண்ண வந்துட்டெ?”
”வாடா
மாப்ளே… போவலாம். இந்த கெழவிகிட்டெ பேசிச்
சமாளிக்க முடியாது. சாவும்போது இந்த நெலத்த எந்த
மடியிலெ கட்டித் தூக்கிக்கிட்டுப் போறானு
பாப்பம்”
என்று சலித்துக்கொண்டான் சேகர்.
”அதயேதான்டா
நானும் கேக்குறன். காலயில எயிந்திரிச்சி, கொல்லயில
இருக்கிற பயிரு மொகத்தில முழிச்சாத்தான்டா
குடிக்கிற கஞ்சி வவுத்தில தங்கும்.
ஒங்கள மாரி டீக்கடயில போயி
நின்னுக்கிட்டு, எவன் ஒரு டீ
வாங்கித் தருவான்னு நிக்குறவளாடா நானு?”
”இந்தப்
பேச்செல்லாம் எங்கிட்டெ பேசக் கூடாது.”
”பின்னெ
என்னடா? எவன் ஒரு டீத்தண்ணி
வாங்கித் தருவான், எவன் ஓசி பீடி
வாங்கித் தருவான்னு திரியுறதா? எவன் பயிரு புடுங்கப்
கூப்புடுவான், எவன் கரும்பு வெட்டக்
கூப்புடுவானுங்கிற காலமெல்லாம் மலயேறிப் போயிடிச்சா? வெள்ள வெளேர்னு தும்பப்
பூவாட்டம் சட்ட வேட்டி, கயித்துல
சங்கிலி, கையில செயினு, கையிக்கு
நாலு மோதிரமின்னு மாட்டிக்கிட்டா, பழய காலம் மறந்திருமா?
எல்லாம் ரெண்டு வருசமாத்தான். இந்த
ஆடம்பரம் அலங்காரமெல்லாம் எங்கிருந்து வந்திச்சி?” என்று சேகரை மட்டப்படுத்தி
தங்கம்மாள் திட்ட ஆரம்பித்தாள்.
”அப்பிடின்னா,
சாவுற முட்டும் மண்ணப் பிசஞ்சிக்கிட்டே கெட.
இதுதான் ஒன் விதின்னா, அதெ
யாரால மாத்த முடியும்?” என்று
தன் தலையில் அடித்துக்கொண்டவன், ”அப்பப்
பத்து லட்சத்த வாணாங்கிற?” என்றான்
சேகர்.
”நாளக்கி
சாவப்போற கெழவிக்கு எதுக்குடா அம்மாம் பணம்? அம்மாம்
பணத்த வெச்சிக்கிட்டு நான் என்னா பண்ணப்போறன்?”
இரண்டு,
மூன்று வருடங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு
யார் கூப்பிடுவார்கள் என்று அலைந்த சேகரும்
கணேசனும், இப்போது ஊரில் பெரிய
மனிதர்களாகிவிட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல… ஊரில் ‘தறுதலை’யாகச் சுற்றிக்கொண்டு, டீக்கடையிலும்,
பெட்டிக் கடையிலும் நின்றுகொண்டு இருந்தவர்கள், பள்ளிக்கூடத்தில், காலேஜில் ஃபெயிலாகி ஊருக்குள் சும்மா சுற்றிக்கொண்டு இருந்தவர்கள்
எல்லாம் இப்போது ஊருக்குப் பெரிய
மனிதர்கள். பஞ்சாயத்துக்காரர்கள். பணக்காரர்களும் ஆகிவிட்டார்கள். மெத்தை வீடு. பணம்,
நகை, வண்டி, வாகனம் என்று
ஆகிவிட்டது. இதற்கு எல்லாம் பத்து
பைசாகூட முதல் கிடையாது. வாய்
வார்த்தைகள்தான். தளுக்குப் பேச்சும் ஜாலாக்குப் பேச்சும்தான். முதல் மூன்று நான்கு
வருசத்துக்கு முன்பு பத்தாயிரம், இருபதாயிரத்துக்குக்கூட
விலை போகாத, சீந்துவார் அற்றுக்கிடந்த
வாரி வரப்பு. தரிசு, உவர்
நிலம் எல்லாம் இப்போது ஐந்து
லட்சம், பத்து லட்சம் என்று
மாறிவிட்டது. அதற்கே நிலம் கிடைக்கவில்லை.
சென்னை,
பாண்டிச்சேரி கோயம்புத்தூரில் இருந்து எல்லாம் கார்
எடுத்துக்கொண்டு ஆட்கள் வருகிறார்கள். அவர்களுடைய
ஒரே நிபந்தனை, சாலை ஓரத்தில் நிலம்
இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். நல்ல
நிலமா, தண்ணீர் இருக்குமா என்பது
எல்லாம் இல்லை. விலை ஒரு
பொருட்டே அல்ல. அதிலும் சென்னையில்
இருந்து சினிமாக்காரர்கள் வந்த பிறகுதான், மடுவில்
கிடந்த நிலத்தின் விலை மலை அளவுக்கு
உயர்ந்தது. நிலம் கொடுத்தவனும் ஏமாந்தான்.
நிலம் வாங்கியவனும் ஏமாந்தான். குறுக்கே வந்தவர்கள்தான் கொள்ளை லாபம் அடைந்தார்கள்.
சாலையில்
ஒரு கார் நின்றால் போதும்,
குறத்தியை நாய் மொய்த்துக்கொள்வதுபோல ஏஜென்ட்டுகள் ஓடிப்
போய் மொய்த்துக்கொள்வார்கள். காரில் இல்லை… பேருந்தில் வெள்ளை வேட்டியிலோ, பேன்ட்டிலோ
வந்து இறங்கினால்கூடப் போதும்… மொய்த்துவிடுவார்கள். ஊருக்குச் சம்பந்தம் இல்லாத இடத்தில், ஊரில்
இருந்து ஏழு எட்டு மைல்
தூரம் தள்ளி இருக்கிற அநாதைக்
காட்டில்கூட வீட்டு மனை என்று
நிலத்தைக் கட்டம் கட்டிக் கூறு
போட்டுக் காட்டினால், அதை வாங்கவும் ஈரோடு,
திருப்பூர், சேலம் என்று எங்கெங்கு
இருந்து எல்லாம் சனங்கள் வந்து
குவிகிறார்கள். சம்பந்தமே இல்லாத ஊரில், அதுவும்
ஆள் இல்லாத காட்டில் வீட்டு
மனை வாங்க சனங்களுக்கு எப்படித்
துணிச்சல் வருகிறதோ… சனங்களுக்கு இவ்வளவு பணம் எப்படி
வருகிறது என்பதுதான் தங்கம்மாளுக்குப் புரியவில்லை. போன மாதம் ஒரு
சாவுக்காக கொணலவாடி என்ற ஊருக்குப் போனாள்.
முப்பது மைல் தூரம் வரைக்குமே
சாலை ஓரத்தில் ஓர் இடத்தில்கூட ஆடு
மாடுகளைக் காண முடியவில்லை. பயிர்
பச்சையைக் காண முடியவில்லை. கிணறு,
மோட்டார் கொட்டகை, ஏரி, குளம், ஓடை,
வாரி என்று எதுவுமே இல்லை.
மேடு பள்ளங்களும் இல்லை. எங்கு பார்த்தாலும்,
காணிக் கல்லாக நடப்பட்டு இருந்தது.
தமிழ் நகர், காவேரி நகர்
என்று போர்டுவைத்து, வண்ண வண்ண நிறத்தில்
கொடி கட்டி இருந்தார்கள். நிலத்தில்
மரம் நடுவார்கள். செடி நடுவார்கள், பயிரிடுவார்கள்.
வண்ண வண்ண நிறத்தில் கம்பிகளில்
கொடிகள் கட்டி எதற்காக நிறுத்தி
இருக்கிறார்கள் என்பது அவளுக்குப் புரியவில்லை.
இவ்வளவு தூரத்திலும் ஒரு வீடுகூடக் கட்டப்படவில்லை.
காடுகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு,
துணிக் கொடிகள் நடப்பட்டு இருந்தன.
மேடு பள்ளங்கள் சீர் செய்யப்பட்டு இருந்தன.
கிணறுகள் மூடப்பட்டு இருந்தன. இடையிடையே வெள்ளையடிக்கப்பட்ட கற்கள் மட்டும் இல்லை என்றால், விளையாட்டு
மைதானம் போன்றுதான் தெரியும். கொணலவாடிக்குப் போயிருந்தபோது பார்த்தது எல்லாம் நினைவுக்கு வந்தது.
”பெத்த
தாய இன்னொருத்தன்கிட்டெத் தள்ளிவுடுறதும், அம்பது அறுவது வருசமா
சோறு போட்ட நெலத்த விக்கிறதும்
ஒண்ணுதான்டா. பெத்தவகூட ஒரு வருசமோ ரெண்டு
வருசமோதான் பாலு குடுத்திருப்பா. ஆனா,
நெலம் அப்பிடியா?”
”இப்பலாம்
டவுன்ல யாரும் புள்ளெக்கிப் பால்
கொடுக்கிறதில்லெ தெரியுமா? எதுக்கு அதெயும் இதெயும்
பேசிக்கிட்டுக்கெடக்குற? உண்டு, இல்லென்னு ஒரே
வார்த்தயிலெ வெட்டிவுடு” என்று சேகர் முறைப்பது
மாதிரி சொன்னான்.
குறுக்கிட்ட
கணேசன் நிதானமாகச் சொன்னான், ”கேளு பெரியம்மா… நாங்க ஒன்னெக் கெடுக்கிறதுக்குச்
சொல்லல. இன்னிக்கு இல்லன்னாலும், நாளக்கி நீ குடுத்துத்தான்
ஆவணும். ஒன்னெ மாரி வீம்பு
புடிச்சிக்கிட்டு நின்னவங்க எல்லாம், இப்ப நெலத்த வாங்கிக்கச்
சொல்லிக் கெஞ்சுறாங்க. நூறு காணி, எரநூறு
காணின்னு ஃப்ளாட்டு போட்டுட்ட பின்னால… நடுவுல, ஓரத்திலெ காக்காணி,
அரக்காணின்னு வெச்சி இருக்கிறவங்க, ஆடு
மாடு அழிச்சாட்டியம் தாங்க முடியாம, தானாவே
இப்ப எல்லாரும் நெலத்தக் குடுத்துக்கிட்டு வராங்கங்கிறது ஒனக்கே தெரியும். இப்ப
வெல தலகீழாப் போயிடிச்சி. கேட்டப்ப குடுத்திருந்தா, நல்ல வெல கெடச்சிருக்கும்.
இப்ப அடிமாட்டு வெலதான். அதனாலதான் சொல்றம்… வெல வரும்போதே குடுத்திரு.
அப்புறம், ஒன்னோட இஷ்டம். நாங்க
தலயிடல.”
”நான்
இந்த ஊருக்குத் தாலி கட்டிக்கிட்டு வரும்போது வயசுக்குக்கூட
வரல. அதுல இருந்து, நீங்க
சொல்ற இந்தப் பீத்த நெலம்தான்
எனக்குக் கஞ்சி ஊத்திக்கிட்டு இருக்கு.
நான் சாவுறமுட்டும் என் ஜீவனத்துக்கு நாலு
படி வரவு வெளஞ்சாப் போதும்.
இதெயும் குடுத்துட்டு சோத்துக்கு நான் என்னா செய்வன்?
பிச்ச எடுக்கிறதா?”
”காட்டெ
வித்தவங்க எல்லாம் பிச்சதான் எடுக்குறாங்களா?”
”காட்டு
வேல செஞ்சவனக் காட்டுலயிருந்து துரத்திப்புட்டா, அவன் என்னா வேல
செஞ்சி பொழப்பான்?”
”இம்மாம்
பேரு பிளாட்டு வாங்கிப் போட்டிருக்காங்களே அவுங்க எல்லாம் முட்டாளா?
இல்லெ, நெலம் விக்கிறவங்கதான் முட்டாளா?
கண்ணெத் தொறந்து பாரு… ஒலகம் எங்க போய்க்கிட்டு
இருக்குன்னு.”
‘வூட்டு
மன சோறு போடுமாடா? பெத்த
தாயிகூட காயப் பூவத் தின்னாத்தான்டா
பாலு கொடுப்பா. எதயாச்சும் தின்னாத்தான் வவுத்தோட நெருப்பு அடங்கும்.”
”ம்ம்ம்… நல்லது
சொன்னா, ஒனக்குப் புரியலெ” என்று கசப்புடன் சொன்னான்
கணேசன்.
”ஒன்னோட
பேச்சிப்படியே வரன்… காட்டெக் குடுத்துப்புட்டு நான் எங்க போயிக்
குந்தியிருக்கிறது? இட்லிக் கடயிலியா?”
”இப்பத்தான்
அரசாங்கத்திலெ கல்லு வூடு கட்டித்
தர்றாங்கள்ல. அப்புறம் வூட்டுக்கு வூடு எலவச டி.வி குடுத்திட்டாங்க. அதெப்
பாத்துக்கிட்டு இரு” என்று சிரித்தான் சேகர்.
”ஆமான்டா… நானு ரிக்காடு டான்ஸ்காரி பாரு… டி.வி-யில
ஆடுறதப் பாத்துக்கிட்டு இருக்கிறதுக்கு. அதெப் பாத்தா… வவுறு பசிக்காதா? டி.வி-யப் பாத்துக்கிட்டே
இருந்தா, டி.வி-க்காரன்
சோறு போடுவானா?”
”கொல்லெ
கொல்லெங்கிறியே… கொல்லெயோட
மதிப்பெல்லாம் போயிடிச்சி. இப்ப பணத்துக்குத் தான்
மதிப்பு.”
”வூட்டுல
டி.வி பாத்துக்கிட்டுக் குந்தியிருந்தா,
இந்த ஆடுவுள யாரு மேய்க்கிறது?”
”வித்துட்டுப்
போ.”
”நீ
பேசறது நல்ல நாயம்தான்டா.”
”ஊருல
ரெண்டு வருசத்துக்கு மின்னெ, எத்தன மெத்த
வூடு இருந்துச்சி. இப்ப எத்தன வூடு
இருக்கு?”
”வெளயுற
காட்டெ வித்துத் தூங்குற வூட்டெக் கட்டுறவன்
குடியானவனாடா?”
”வண்ணத்துக்குக்
கிண்ணம் பேசுற கிழவிகிட்டெ என்னாப்
பேச முடியும்? எப்பிடித்தான் ஒம் புருசன் ஒங்கிட்டெ
இருந்தானோ? காட்டெ வித்து வூடு
கட்டுறவன், வண்டி வாங்குறவன் எல்லாம்
முட்டாப் பசங்க. நீ ஒருத்திதான்
ஒலகத்திலெ அறிவாளி.”
”இத்தினி
வருசத்திலெ இந்த கொல்லெ முவத்திலெ
முழிக்காம, நானு ஒரு நாளாச்சும்
இருந்திருப்பனா? இத்தினி வருசமா என்னெப்
பெத்தவங்க எனக்குச் சோறு போடல. என்னெக்
கட்டிக்கிட்டு வந்தவன் சோறு போடல.
நான் பெத்த புள்ளயும் சோறு
போடல. தன்னோட வவுறே சதம்னு
ஓடிப் போயி மண்ணாவும் ஆயிட்டா.
சொந்தம் பந்தமின்னு ஒருத்தரும் எனக்கு ஒரு நாளும்
சோறு போட்டது கெடயாது. எனக்குச்
சோறு போடுற இந்த ரவ
நெலத்த விக்கச் சொல்லி, பட
படயா ஆளுவோ வருது. நான்
கஞ்சி குடிச்சிட்டு உசுரோட இருக்கிறது ஊருக்காரப்
பயலுவுளுக்குப் புடிக்கிலென்னு இப்பத்தான் தெரியுது.”
”நீ
செத்தா, ஊருக்காரன் தூக்கிப் போடாம, வேற யாரு
ஒன்னெத் தூக்கிப் போடப்போறா?”
”ஆமான்டா… நான் செத்த பெறவு, அதத்தான்
பாக்கப்போறன்.”
”சாவத்தான்
போறங்கிற…
ஒரு கையெழுத்தப் போட்டுட்டு சாவென்” என்று சிரித்தான் சேகர்.
”ஒரு
எடத்தெப் புடிச்சிக் கொடுத்தா, ஒங்களுக்கு எம்மான்டா கெடைக்கும்?”
”கேக்குறதுக்கு
முடிவெச் சொல்ல முடியல. இப்பத்தான்
நோணிக் கேள்வி கேக்குற.”
”நெலத்த
வித்துப்புடு வித்துப்புடுன்னு இதோட நூறு எரநூறு
வாட்டி வந்து சொல்லுறியே… இந்த நெலத்த நானாடா
உண்டமிச்சன்? பொறந்தப்ப மடியிலெ கட்டிக்கிட்டு வந்தனா?
இதெ விக்க எனக்கு என்னா
உரிம இருக்கு? கடவுளு படச்சான். அதுல,
உசுரோட இருக்கிறமுட்டும் அதெயும் இதெயும் போட்டு
வெளயவச்சித் தின்னுட்டுச் சாவ வேண்டியதுதான? வருசத்துக்குப்
பத்து மூட்டெ வரவோ, சோளமோ
வெளயாதா? அது இந்த ஒருத்திக்கிப்
போதாதா?”
”வீம்புப்
புடிச்ச கெழவிடா இவ. செத்தாலும்
சாவுவா. ஆனா, நல்ல பேச்சக்
கேக்க மாட்டா? இவளோட இந்தப்
புத்தியாலதான், இவ பெத்த மவ
இவள வுட்டுட்டு ஓடிப்போயிட்டா. நல்ல புத்தி இருந்தா,
எதுக்குச் சாவுற வயசிலெ தனிப்
பொணமாக் கெடக்குறா? சாதி சனமின்னு யாரையாச்சும்
கிட்டெ அண்டவுட்டிருக்காளா? நடக்க முடியல… பேச முடியல… ஆனா, வீம்பு மட்டும்
கொறயல. தனி ஆளா வந்து
இந்த அநாதக் காட்டுல கள
வெட்டுறா பாரு. இப்பியே இப்பிடி
இருந்தா, வயசிக் காலத்திலெ எப்பிடி
இருந்திருப்பா? மாமனாரு, மாமியாருக்குச் சோறு போட்டிருப்பாங்கிறியா? பச்சத் தண்ணிகூடக்
குடுத்திருக்க மாட்டா. இவ செத்தா,
எடுத்துப் போடக்கூட ஆள் இல்லாமத்தான் கெடப்பா.
நாம்ப ஏறி வயிந்து போயிக்
கேக்குறதாலதான், இம்புட்டுப் பேசுறா. வாடா மாப்ளெ
போவலாம்”
என்று எழுந்தான்
சேகர்.
அவன் பேசிய அதே வீறாப்பிலேயே
தங்கம்மாளும் கத்தினாள். ”போடா… இவன்
வந்து தூக்கிப் போடலன்னுதான் எம் பொணம் காத்துக்கிட்டுக்
கெடக்குதாட்டம் இருக்கு. ஒன்னெ நம்பியாடா நான்
பொறந்தன்”
என்று சொல்லிவிட்டு, களை வெட்டியைக் கையில்
எடுத்தாள்.
”வயசி
ஆயியும் ஒன்னோட வீம்பு போவல
பாத்தியா?”
இப்போதுதான்
என்று இல்லை. எப்போதுமே அவள்
வீம்புக்காரிதான். அவளுடைய புருசன் சாகும்போது
அவளுக்கு இருவத்தியோரு வயசுதான். அதனால், அவள்கூடப் பிறந்தவர்கள்
வந்து, ”இந்த வயசிலியே நீ
தாலிய அறுத்திட்ட… இனிமே நீ இங்க
தனியா இருக்க வாணாம். கைப்பிள்ளயோட
இருந்தா, ஊரு ஒலகம் ஒண்ணு
சொல்லும். அவப் பேராயிடும். வா,
ஊரோட போயிச் சேரலாம்” என்றார்கள். கட்டாயப்படுத்திக் கூப்பிட்டார்கள். ”எம் புருஷன் இருந்த
வூட்டுலதான் நான் இருப்பன். கூடப்
பொறந்த தோசத்துக்காக நீ கூப்புடுற. ஆனா,
ஒங்க பொண்டாட்டிவோ எங் கூடப் பொறக்கலியே.
நாளக்கி ஒரு நாளு சண்ட
வந்தா, ‘புடிச்சா இரு. இல்லன்னா ஒம்பாட்டயப்
பாத்துக்கிட்டுப் போயிக் கிட்டே இரு’ம்பா. எனக்கு எதுக்கு வீண்
சொல்லு? குடிச்சனோ… குடிக்கலியோ… என்னோட தாவுலியே இருந்திட்டுப்
போறேன். நான் சாவுற அன்னிக்கு,
இதே மாரி நாலு பேரும்
வந்து, ஒரு துணிய எடுத்து
எம் பொணத்து மேல போட்டுட்
டுப் போங்க. இதான் நான்
சொல்றது. இதுக்கு மேலெ என்னெக்
கூப்புடாதீங்க. நாலடி தூரம் தள்ளி
இருந்தாத்தான் தாயும் புள்ளயா இருந்தாலும்
மருவாத” என்று சொல்லிவிட்டாள்.
அதே வீம்போடுதான் இன்று வரை இருக்கிறாள்.
அவளுடைய மகள் வயசுக்கு வந்த
மூன்றாவது வருசமே கூத்தாடி ஒருவனுடன்
ஓடிப் போய்விட்டாள். முதல் பிரசவத்தில் அவள்
இறந்து விட்டாள். மகளுடைய சாவுக்குக்கூட அவள்
போகவில்லை.
”ஒனக்கு
நெலம் இருக்குன்னு சொல்லி, நீ வாங்குற
அநாதப் பணத்த நிறுத்திப்புடுவன்” என்று சேகர் சொன்னான்.
”சும்மா
இருடா சேகரு… நான் சொல்றதக் கேளு
பெரியம்மா. நீ நெலத்தக் கொடுத்தா,
கவுருமன்ட்டு எல்லாத்துக்கும் இப்ப மெத்த வூடு
கட்டித் தரப்போவுது. அதுல ஒனக்கு ஒரு
வூடு போடச் சொல்றன். அதுக்கு
செலவுக்குன்னு பரம் பைசா நீ
தர வாணாம். ஒனக்கு நான்
சகாயம் பண்ணித் தரன். என்னா
சொல்ற?”
”ஒருத்தன்
சகாயமும் எனக்கு வாணாம்” என்று முகத்தில் அடிப்பது
மாதிரி தங்கம்மாள் சொன்னாள்.
”ச்சீ
வாடா… இவகிட்டெப் போயிப் பேசிக்கிட்டு… நம்ம வடக்குத் தெரு
ராமசாமியப் பார்த்தாலும் காரியத்த முடிக்கலாம்” என்று சேகர் சொன்னதும்,
கணேசன் எழுந்தான். அவர்கள் இருவரும் மேற்கு
நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ”பெரியம்மா,
யோசன பண்ணி வையி. நாளக்கி
வர்றம்” என்று சொல்லிக்கொண்டே போனான்
கணேசன்.
வேலையைக்
கெடுத்துவிட்டார்களே என்று திட்டிக்கொண்டே குனிந்து
களை வெட்ட ஆரம்பித்தாள். சிறிது
நேரம்தான் வெட்டியிருப்பாள். ஆடும் குட்டிகளும் கத்த
ஆரம்பித்தன.
தண்ணீர்
தாகமாக இருக்குமோ என்று சந்தேகப் பட்டு
தூக்குப்போணியில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து மூடியில்
கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒவ்வொரு குட்டியாகக்
குடிக்கவைத்தாள். அவசரப்பட்ட ஆடு போணியில் முகத்தைநுழைத்து
தண்ணீரைக் குடிக்க முயன்று, இருந்த
தண்ணீரையும் கீழே தட்டிவிட்டது. ஓங்கி
ஆட்டை ஒரு அடி அடித்தாள்.
ஆட்டை கெட்ட வார்த்தையில் திட்டினாள்.
பிறகு ஊர்க்காரர்களையும் நிலம் வாங்கிப் போட்டு
இருப்பவர்களையும் திட்டினாள்.
முன்பு
மெயின் ரோட்டில் இருந்து இவளுடைய நிலத்துக்கு
இறங்கி வருகிற இடத்தில், செட்டிக்குளம்
என்று ஒரு சிறிய குளம்
இருந்தது. குழந்தை இல்லை என்று
குப்புசாமி செட்டி என்பவர் வெட்டிய
குளம் அது. குளத்தோடு நான்கு
சுமை தாங்கிக் கல்லும் வைத்திருந்தார். குளத்தைச்
சுற்றி ஆல மரங்கள் இருந்தன.
வழியே போகிறவர்கள், வருகிறவர்கள் ஆல மர நிழலில்
உட்காராமல் போக மாட்டார்கள். தெற்கில்
உள்ள காட்டுக்காரர்கள் எல்லாம் அந்தக் குளத்தில்தான்
தண்ணீர் எடுத்துக்கொண்டு போவார்கள். அதைவிட்டால், இரண்டு மூன்று மைலுக்குத்
தண்ணீர் கிடையாது.
போன மழைக்குக்கூட அந்தக் குளத்தில் தண்ணீர்
இருந்தது. சனங்கள் மட்டுமல்ல… ஆடு மாடுகளும் அதில்தான்
தண்ணீர் குடித்தன. ஆனால், இப்போது குளம்
இல்லை. நிலம் வாங்கி வீட்டு
மனை போட்டவர்கள், ரோட்டில் இருந்து நிலத்துக்கு ரோடு
போடுகிறேன் என்று குளத்தை நிரவி
விட்டார்கள். மரங்களையும் வெட்டிவிட்டார்கள். சுமை தாங்கிக் கல்லையும்
அகற்றிவிட்டார்கள். ஆறு ஏழு மாதமாக
தெற்குக் காட்டுக்காரர்கள் எல்லாம் குடிப்பதற்கு வீட்டில்
இருந்துதான் தண்ணீர் கொண்டுபோகிறார்கள்.
செட்டிக்குளம்
மட்டும் அல்ல… ரோட்டு ஓரமாக ஓடிக்கொண்டு
இருந்த வாரியும் இப்போது இல்லை. வாரியில்
நின்றுகொண்டு இருந்த பனை மரங்கள்
ஒரே நாளிலேயே காணாமல் போய்விட்டன. செட்டிக்
குளத்துக்குக் கிழக்குப் பக்கமாக ஆல மரத்துக்கு
அருகில் பெரிய புற்று இருந்தது.
அதில் சனங்கள் ஒவ்வொரு வருசமும்
மூட்டை மூட்டையாக ஈசல் பிடிப்பார்கள். புற்றும்
போன மாயம் தெரியவில்லை.
நூறு நூறு வருசங்களாக, எள்,
கடலை, கொத்துமல்லி, வரகு, சோளம், துவரை
என்று விளைந்த நிலங்கள் என்பதற்கு
எந்த அடையாளமும் இன்றி, இப்போது மைதானம்
மாதிரிக் கிடந்தது. அவள் கண்ணில்பட்ட நிலப்
பரப்பு தார் ரோடு மாதிரி
இருந்தது. செட்டிக்குளம் இருந்த திசையில் பார்த்த
தங்கம்மாள் சலிப்புடன் மீண்டும் களை வெட்ட ஆரம்பித்தாள்.
பொழுதாகிவிட்டதா
என்று பார்ப்பதற்காக நிமிர்ந்து மேற்கில் பார்த்தபோது திடுக்கிட்டுப்போனாள். மூன்று பெண்களும் இரண்டு
ஆண்களும் கம்பி வேலி போட்ட
நிலத்துக்கு அருகில் நின்றுகொண்டு இவளுடைய
நிலத்தைப் பார்ப்பது தெரிந்தது. அவர்களுக்குச் சிறிது தூரம் தள்ளி
ஒரு கார் இருந்தது. இந்தப்
பக்கம், அந்தப் பக்கம் என்று
நகர்ந்து நின்று நின்று நிலத்தைப்
பார்த்தது, தங்கம்மாளுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. ”ரோட்டுல போற நாயி,
வார நாயி எல்லாம் எதுக்கு
வந்து என் நெலத்தப் பாக்குதுவோ?
என்ன அதிசயமா இருக்கு… ஒலகமே கொள்ளக் கூட்டமா
மாறிடிச்சா?” என்று
கத்தினாள். அவர்கள் காரில் ஏறிப்
போய்விட்டார்கள். அந்த வேகத்திலேயே களை
வெட்ட ஆரம்பித்தாள். அவளுடைய மனம் களை
வெட்டுவதில் நாட்டம் இல்லாமல் அலைந்தது.
ஒரு வருசமாக உள்ளூர்க்காரப் பையன்கள்
மாறி மாறி வந்து நிலத்தைக்
கேட்டுப் பார்த்துவிட்டார்கள். எதற்கும் தங்கம்மாள் மசியாததால், அவளுடைய மூத்தார் வீட்டுப்
பையன்களிடம் போய்ச் சொன்னார்கள். இவள்
செத்தால், அவர்கள்தான் கொள்ளிவைக்க வேண்டும். பிணத்தையும் எடுக்க வேண்டும். பையன்களுடைய
தொல்லை தாங்க முடியாமல் இவளிடம்
வந்து, ”சின்னம்மா, நெலத்தக் குடுத்திடு. வயசான காலத்திலெ எதுக்குக்
காட்டுக்கு அலஞ்சிக்கிட்டு இருக்க?” என்று கேட்டார்கள். ”நான்
சாவுறமுட்டும் இருக்கட்டும். அதுக்குப் பின்னால ஒங்க இஷ்டம்போல
செஞ்சிக்குங்க” என்று
சொன்னாள். மறு வார்த்தை பேசாமல்
போய்விட்டார்கள்.
நிலத்தைக்
கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக
இருந்தாள். நிலத்தைக் குடு… குடு என்று
ஆளாளுக்கு சொல்லச் சொல்ல, அவளுடைய
உறுதி கூடிக்கொண்டே இருந்தது.
மொத்த உறுதியும் சிறிது நேரத்துக்கு முன்பு
தகர்ந்துபோனது. முதன்முதலாக தன்னுடைய நிலம் பறிபோய்விடுமோ என்ற
கவலை அவளுக்கு வந்தது. யார் யாரோ
அவளுடைய நிலத்தை வந்து பார்க்கிறார்கள்.
யார் யாரோ அவளுடைய நிலத்துக்கு
விலை வைக்கிறார்கள். ஒரு நிலையில் நிலமே
இவளுடையது இல்லை என்றும், இவளுடைய
கையெழுத்தைப் போட்டு, நிலத்துக்கும் இவளுக்கும்
சம்பந்தம் இல்லை என்று துரத்தினால்கூட,
ஆச்சர்யப்பட முடியாதுபோல் இருக்கிறது என்று நினைத்ததுமே… அவளுக்குத் தலை சுற்றுவது மாதிரி
இருந்தது. புருசன் இறந்தபோதுகூட, அவளுடைய
மனம் இவ்வளவு கலங்கியது இல்லை.
தன்னுடைய
நிலத்துக்குப் பக்கத்தில் கம்பி வேலி போட்டு
இருந்ததைப் பார்த்ததும், தங்கம்மாளுக்குச் சொல்ல முடியாத கோபம்
உண்டானது. எரிச்சலில், ”ஆடு மாடு மேயுறதுக்குக்கூட
வய இல்லாம எதுக்குக் கம்பி
வேலி போட்டிருக்கானுவ? ரொம்பத்தான் தரும காரியம் பண்ணியிருக்கானுவ… ஆடு மாடு மேஞ்சா தர
வீணாப்போயிடுமோனு கம்பி வேலி போட்டிருக்கானுவோ… இப்பிடிப்பட்ட
நாயிவோதான் கோவுலு கட்டுது. கள்ளெ,
சோளம், எள்ளு, வரவுன்னு வெளஞ்ச
காடுதான்…
இப்ப சுடுகாடுமாரிக் கெடக்கு. பச்சயக் கண்ணால பாக்கணுமின்னா… ஆடு மாடுகூட மூணு மைலு… நாலு மைலு போவணும்போல இருக்கு” என்று
கசந்து போய்ச் சொன்னாள்.
ஆடும் குட்டிகளும் கத்த ஆரம்பித்தன. தங்கம்மாளை
வந்து முட்டின. அதோடு, முன்னால் ஓடி
ஓடித் திரும்பி வந்தன. எதையும் பார்க்காமல்
பித்துப் பிடித்தவள் மாதிரி உட்கார்ந்திருந்தாள். சேகர் சொன்னதுதான்
நிஜமாகப்போகிறதோ என்று சந்தேகம் வந்தது.
அவளுடைய
நிலத்துக்கு அருகில் பயிர் நிலம்
என்று ஒரு வேட்டி அளவுக்குக்கூட
இல்லை. குறைந்தது, இரண்டு மூன்று மைல்களுக்கு
வீட்டு மனைகளாகக் கூறு போட்டு கல்
நடப்பட்டுக்கிடந்தது. காட்டில் உள்ள மொத்தப் பூச்சிகளும்,
வண்டுகளும், எலிகளும் இந்த சிறு துண்டு
நிலத்துக்கு வந்து உட்கார்ந்துவிட்டால், ஒரு படி
வரகுகூட மிஞ்சாதே என்ற பயம் விஷம்
மாதிரி உடலெங்கும் பரவியது.
”நாலு
ரோடுன்னு என்னிக்கி திருச்சிக்கும் மெட்ராஸுக்கும் போட ஆரம்பிச்சானுவளோ… அன்னிக்கே என் வூட்டுல எமன்
வந்து ஒக்காந்திட்டான்னு தெரியாமப்போச்சே” என்றாள்.
ஒரு குட்டி வந்து அவளுடைய
முகத்தை முகர்ந்துவிட்டுக் கத்தியது. ஆடுகளின் தொந்தரவு கூடவே, வேறு வழி
இன்றி களை வெட்டியை எடுத்துத்
துடைத்தாள். தூக்குப் போணியைக் கையில் எடுத்தாள். மேற்கில்
பார்த்தாள் பொழுது மறைந்துவிட்டு இருந்தது.
வீட்டுக்குப் போக அவளுக்குத் துளிகூட
விருப்பம் இல்லை. ராத்திரியே வந்து
நிலத்தை யாராவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்
என்பது மாதிரி கவலைப்பட்டாள். அரை
மனதுடன் நடக்க ஆரம்பித்தாள். ஆடும்
குட்டிகளும் அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டு இருந்தன.
தங்கம்மாள்
ரோட்டுக்கு வந்ததுமே திரும்பிப் பார்த்தாள். அவளுடைய நிலத்தை இருள்
மறைத்து இருந்தது. ரோட்டைப் பார்த்தாள். சாணி போட்டு மெழுகியது
மாதிரி வழவழவென்று இருந்து. இரண்டு பக்கமும் இருந்த
புளிய மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு,
ரோட்டுக்கு நடுவில் பூச்செடிகள் நட்டு
இருந்தார்கள். ”பூச்செடி நிழல்ல யாரு போயிக்
குந்துவாங்க?” என்று சொன்னாள்.
நாலு ரோடு போடுவதற்கு முன்பு,
காட்டில் இருந்து வீட்டுக்குப் போகும்போது
சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த
புளிய மரங்களுக்குக் கீழே பார்த்துக்கொண்டே போனால்… ஒரு குழம்புக்குப் புளி கிடைத்துவிடும். மரத்தை
ஒட்டியிருந்த அடப்பைப் பார்த்தால், அன்று இரவு அடுப்பெரிக்கக்
குச்சிகள் கிடைத்துவிடும். இப்போது காசு போட்டுப்
புளி வாங்க வேண்டிஇருக்கிறது. குச்சிக்காக
ஒரு நாள் ஒதுக்க வேண்டியிருக்கிறது.
மரங்கள் மட்டும் அல்ல… சருகுகள்கூட இப்போது இல்லை.
ராட்சசத்தனமான
சத்தத்துடனும் வெளிச் சத்துடனும் காற்று
வேகத்தில் வடக்கிலும் தெற்கிலும் கார், பஸ், லாரி
என்று ஓடிக்கொண்டு இருந்தன. காரணம் இன்றி வீட்டுக்குப்
போய்ச் சேருவோமோ என்ற கவலை அவளுக்கு
வந்தது. அவளுக்கு முன்னால் இருட்டில் ஆடும் குட்டிகளும் உற்சாகமாக
முன்னே முன்னேவென்று நடந்துகொண்டு இருந்தன!
நன்றி
– விகடன்
கருத்துகள்