23/09/2011

வாய்மொழி இலக்கியமும் ஏட்டிலக்கியமும் - முனைவர் ச.செந்தில்குமார்

முன்னுரை

ஏட்டிலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்வது வாய்மொழி இலக்கியமே. ஏட்டில் எழுதாத பாமர மக்களின் பரம்பரைச் சொத்தாக இருந்தது, இது படிப்படியே வரிவடிவம் பெற்றது. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய வாய், இலக்கணத்தைப் படித்ததில்லை.

''பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் எட்டுவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல எழுதிவச்சி பழக்கமில்ல

இலக்கணமும் இதுக்குயில்ல தலக்கனமும் எனக்குயில்ல''

என்ற திரையிசைப்பாடல் இதனை உணர்த்துகிறது.

அறிவியல் வளர்ச்சியால் எத்தனையோ முன்னேற்றங்கள் ஊடுருவிய போதிலும், கிராமப்புறங்களில் வாழும் பாமரமக்கள் படிப்பறியா மக்கள் தம் வாழ்விலும் வாக்கிலும் பழந்தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக்காத்து வருகின்றனர். அவர்கள் பாடும் பாடல்கள் யாவும் யதார்த்தமானவை. எனவே, அவர்களின் உள்ளத்தில் உணர்ச்சி துடித்தது. உயிர்ப்பு விளையாடியது. இதயம் விரிந்தது. தேனருவி பெருக்கெடுத்தது. வாய்மொழிப்பாடல் வயலெல்லாம் பாய்ந்து வளம் தந்தது. எனவே, பாமரர் பாடிய பாடல்கள் ஏட்டிலக்கியத்தில் இடம் பெற்றிருப்பதை இக்கட்டுரைவழி உணரலாம்.

தாலாட்டு

தாய் உலகுக்குத் தந்த முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு. இது வாழ்வின் தொடக்கவுரை.

''நெருப்பைச் சந்திக்காத தங்கமோ

உளியைச் சந்திக்காத சிற்பமோ

யுத்தத்தைச் சந்திக்காத தேசமோ

பிரசவத்தைச் சந்திக்காத பெண்ணோ முழுமையடைவதில்ல'' எனவே, முழுமை அடைந்த அந்தத் தாய்மை கொடுத்த கொடைதான் தாலாட்டு.

''தாய் ஆழம் காணமுடியாத அன்புக்கடல். அக்கடலில் விளையும் வலம்புரி முத்தே தாலாட்டு'' என்பார் தமிழண்ணல்.

தூங்கி எழுவதற்காக பல பாடல்கள் இலக்கியத்தில் உள்ளன. தேம்பி அழுவதற்காகப் பல பாடல்கள் இலக்கியத்தில் உள்ளன. ஆனால், மயங்கி உறங்குவதற்காக உள்ள பாடல்கள்தான் நாட்டுப்புறப் பாடல்களில் அதிகம் காணப்படுகின்றன.

அளவும், ஓசையும்

தாலாட்டு, தாயின் அன்பின் வெளிப்பாடு. தாயின் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்த இது ஒரு கருவியாகப் பயன்படுகிறது. குழந்தையின் உறக்கத்திற்கு ஏற்பப் ''பலூன்'' போன்று அதிகம் நீளுவதும், கொஞ்சம் குறைவதும் உண்டு. தாலட்டுப் பாடும் பெண்கள் அனைவரும் ஒரே இசையிலே பாடுவார்கள் என்று கூற முடியாது. ஒலிமுறையே தாலாட்டின் உயிர். பொதுவாக நாட்டுப்புறப் பாடல்களில் ஓசை இனிமையும், பொருட்சிறப்பும், உணர்ச்சியும், உயிரோட்டமும் இருக்கும். தாலாட்டுப் பாடும் தாயின் ஒருவிதமான ஓசையின் ஒழுங்கே குழந்தையின் செவிகளில் பாய்ந்து மனதைக்கிறங்க வைத்து, கண்களை உறங்க வைக்கிறது.

இலக்கியத்தில் தாலாட்டு

தாய்மார்களின் தாலாட்டு இலக்கிய வடிவம் பெற்று இலக்கியத்திற்கு அழகு சேர்க்கிறது. இதனை, ''பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா ராட்டும் பண்ணை'' என்ற கம்பன் பாடல் வரியால் உணரலாம்.

பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் தாலாட்டு ஒரு பருவமாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. பெரியாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் கண்ணனையும் இராமனையும் குழந்தையாகப் பாவித்துப் பாடும் பாடல்கள் பயில்தொறும் இன்பத்தைத் தருகிறது.

ஒப்பாரி

ஒப்புச் சொல்லிப் பாடுவது ஒப்பாரி. இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவே இது பாடப்படுகிறது. ஒப்பாரி சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ''காலக்கண்ணாடியாகத்'' திகழ்கிறது எனலாம். இறந்தவருடைய கடந்த கால வாழ்க்கையை விளக்கும் இப்பாடல்கள் பெண்களாலேயே பாடப்படுகின்றன.

ஒப்பாரியின் வகை

குழந்தை இறக்கதாயின் ஒப்பாரி, மகன் அல்லது மகள் இறக்கதாயின் ஒப்பாரி, தாய் தந்தை இறக்க மகளின் ஒப்பாரி, கணவன் இறக்க மனைவியின் ஒப்பாரி, மாமியார் இறக்க மருமகளின் ஒப்பாரி என ஒப்பாரிகள் பல வகையாகப் பாடப்பெறும். இதில் கணவனை இழந்த பெண்ணின் ஒப்பாரியும் பிள்ளையை இழந்த தாயின் ஒப்பாரியும் மிகவும் கொடுமையானவை எனலாம்.

இலக்கியத்தில் ஒப்பாரி

சங்க இலக்கியத்தில் காணப்பெறும் கையறுநிலைப் பாடல்களை ஒப்பாரிப் பாடல்களின் வழிவந்தனவாகவே கருதலாம்.

கம்பன் காப்பியத்தில் ஒப்பாரியின் வகைகளை விளக்கமாகக் காணலாம். தந்தை இறக்க மகன் புலம்புவதையும், (தசரதன், வாலி இறக்க முறையே இராமன், அங்கதன் புலம்பல்) மகன் இறக்க தாய் மட்டுமின்றி தந்தையும் சேர்ந்து புலம்புவதை, (இந்திரசித்து இறக்க மண்டோதரி, இராவணன் புலம்பல்) கம்பன் அழகுச்சுவை மிகுதிப்படத் தனது காவியத்தில் படைத்திருப்பதைக் காணலாம்.

மாமியார் இறக்க மருகமள் ஒப்பாரி வைத்ததாக எந்த இலக்கியத்திலும் காணமுடியலில்லை. ஒருக்கால் அது வாய்மொழி இலக்கியமாக இருக்குமோ? என எண்ணத் தோன்றுகிறது. மாமியார் இறக்க மருமகள் ஒப்பாரி வைக்கும் பாடலே இதற்குச் சிறந்த சான்று. இதோ அப்பாடல்.

''கொப்பரைய அடகு வச்சி

ஒப்பாரி படிக்கப் போனேன்

ஒப்பாரி படிக்கலியே

கொப்பரையும் திருப்பலியே''

மனைவியின் ஒப்பாரி

ஒரு பெண்ணுக்கு நெருங்கிய சுற்றம் கணவனே! கொண்டானின் துன்னிய கேளிர் பிறரியில்லை'' என்கிறது நான்மணிக்கடிகை. கணவன் இறந்துவிட்டால் வாழ்வில் எல்லாச் சுகங்களையும் பெண் இழந்து விடுகிறாள். அதனினும் பெருந்துயர் அவளுக்குப் பிறிதில்லை

''தள்ளிப் போ என்று சொல்லாத

தங்கராசா போயிட்டாரே

எட்டிப்போ என்று சொல்லாத

ஒசந்தராசா போயிட்டாரே''

என்று அழும் கணவனை இழந்தாளின் புலம்பலை ஈண்டுக் காணலாம்.

அப்பனோ, அம்மையோ, அண்ணனோ, மறைந்துவிட்டால் ''நான் அவர்களைப் போலிருந்து உனக்கு உதவுகிறேன்'' என்று ஆறுதல் கூறலாம். ஆனால், கணவனை இழந்தவளுக்கு எதைக் காட்டி ஆறுதல் கூறுவது? இதனையே, ''கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'' என்று கூறுகிறது சிலப்பதிகாரம்.

பூதபாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு பாடிய ''பல்சான்றீரே! பல்சான்றீரே!" (புறம் 246) என்ற புறப் பாடலும் கணவனை இழந்தாளின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கணவனை இழந்த பெண் புலம்புவதைக் கேட்டு விண்ணும், மண்ணும் அழும்.

''தலைச்சம் பிள்ளை பெத்தவளுக்குத் தாலாட்டும்

புருசனை இழந்தவளுக்கு ஒப்பாரியும் தானே வரும்''

என்பது பழமொழி.

மகளின் ஒப்பாரி

தாய் இறந்து போனால் பிறந்த வீட்டில் பெண்ணுக்கு சிறப்பிருக்காது. இதனை, ''தாயத்துப் போனால் சீரத்துப் போகும்''

என்ற பழமொழியால் நன்கு உணரலாம்.

இங்கே ஒரு பெண்,

''தரையிலே நான் நடந்தால்

பாதம் நோகும் என்று

மடியிலே தாங்கியே

மாதா போயிட்டாளே''

என்று, தனக்கு நாளும் தலை சீவிவிட்ட தன் தாய், தன் தலையெழுத்தை அறியவில்லையே எனப் புலம்புகிறாள். எனவே, மகள் வைக்கும் ஒப்பாரியால் இனிமேல் பிறந்த வீட்டில் தனக்கு எத்தகைய சிறப்பும் இருக்காது என்பதனை அறிய முடிகிறது.

மன்னன் பாரி இறந்த பின்னர் அவன் மகளிர் பாடிய,

''அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்

எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே'' (புறம் -112)

என்ற பாடல், ஒப்பாரிப்பாடலின் அடிப்படையிலேயே தோன்றியது எனலாம்.

காதல்

நாட்டுப்புறக் காதல் இயற்கையானது. யதார்த்தமானது. எத்தகைய கற்பனைக்கும் இடமில்லாதது. தங்களுடைய காதலை மிக எளிமையாகவும், தாங்கள் அறிந்த பொருள்களை உவமையாக்கியும் கூறிவிடுகின்றனர். அதில் அம் மக்களின் உள்ள உணர்வு அழகாக வெளிப்படுகிறது.

''லோலாக்கு போட்டுக்கிட்டு

ரோட்டோரம் போர புள்ள

ரோட்டவிட்டு கீழிறங்கு

கேட்ட தெல்லாம் வாங்கித் தாரேன்''

எனவும்,

''ஓணா முகத்தழகி

ஒட்டவச்ச காதழகி

ஒட்ட வச்ச காதுக் கெல்லாம்

இட்டேனடி தங்க நக''

என யதார்த்தமாய் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆனால் ஏட்டிலக்கியத்தில்,

''மாசறு பொன்னே, வலம்புரி முத்தே

காசறு விரையே, கரும்பே, தேனே"

என்றும்,

''அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்''

என்றும்,

''கற்பகத்தின் பூம் கொம்போ காமன்தன் பெருவாழ்வோ''

''முன்னே வந்தெதிர் தோன்றும் முருகனோ''

என்றும்,

''நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று''

என்றும் வருவதைக் காணலாம்.

எனவே, இலக்கியக் காதல் இலக்கணமுடையது என்றும், நாட்டுப்புறக் காதல் வழிதான் இலக்கியக் காதல் பிறந்தது எனவும் துணியலாம்.

அலர்

வாய்மொழி இலக்கியத்தில் அலரானது மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது.

''ஆலமரம் உறங்க

அடிமரத்து வேர் உறங்க

உன் மடியில் நான் உறங்க

உலகம் பொறுக்கலியே''

இவ்வாறு நாட்டுப்புறப்பாடலில் எளிமையாக விளக்கப்பெற்ற அலர், திரையிசைப் பாடலிலும் பயின்று வருவதைக் காணலாம்.

''உன்னையும் என்னையும் வச்சி

ஊருசனம் கும்மியடிக்குது''

எனவும்,

''ஊருக்குள்ள.......

உன்னையும் பத்தி என்னையும் பத்தி-அட

என்னென்னவோ சொல்லுராங்க.

அது நெசமா? இல்ல பொய்யா? - அத

நீதான் சொல்லவேணும் ராசா''

எனவும்,

''உன்ன நம்பி மூச்சிருக்குது- உள்ளூரில

என்னென்னவோ பேச்சிருக்குது''

எனவரும், திரை இசைப்பாடல் வரிகள் நம் சிந்தைக்கு விருந்தளிக்கின்றன.

நாட்டுப்புறப் பாடல்களில் வரும் அலர், ஏட்டிலக்கியத்தில் திருந்திய வடிவில் கூறப்பட்டுள்ளது.

காதலுக்குத் தடைகள் ஏற்படுவது உண்டு. அதை ஏட்டிலக்கியம்,

''நாய் துஞ்சாமை'' ''ஊர் துஞ்சாமை'',

''காவலர் துஞ்சாமை'', ''நிலவு வெளிப்படுதல்''

என்ற அடிப்படையில் சுவையாக விளக்குகின்றது.

வைதல் (திட்டுதல்)

ஏட்டிலக்கியத்தில் வரும் தலைவி தன்னேரில்லாத் தலைவியாகப் படைக்கப்படுகிறாள். தலைவன் இல்லாதபோது அவன் செய்தவற்றை நினைத்துக் கோபம் கொள்வதற்காகவும், அவனைப் பார்த்தபோது அதனை மறப்பதாயும் ஏட்டிலக்கியம் காட்டுகின்றது.

''எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட விடத்து'' (குறள் -1284)

எனத் திருவள்ளுவர் மகளிர் மனதை உயர்த்தியே காட்டியுள்ளார்.

ஆனால், நாட்டுப்புறப் பெண்கள் தங்கள் துன்பத்தை வெளிப்படையாகவே சொல்லி விடுவதைக் காணலாம்.

''காலையிலே பூத்தப் பூ கனகாம்பரம் நானிருக்க

கவுச்சடிச்சப் பூவுக்கோ கடகடயாய் சுத்துரானே''

இத்தகைய முரண்பாடுகளை நாட்டுப்புற இலக்கியத்தில் காணலாமே தவிர ஏட்டிலக்கியத்தில் காணமுடியாது.

''இம்மை மாறி மறுமை ஆயினும்

நீ ஆகியர் என் கணவனை

யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே'' (குறுந்.49)

ஏட்டிலக்கியத்தலைவி தலைவன் தவற்றை மறந்ததாகவே குறுந்தொகை காட்டுகிறது.

பெருந்திணை

வயதான ஒருவனுக்கு வறுமையின் காரணமாக இளமையும் அழகும் நிறைந்ந பெண்ணை மணமுடிக்க நிச்சயிக்கின்றார்கள் பெற்றோர். அதை எதிர்க்கின்றாள் மகள்.

அதனை,

''சோளச் சோறு தின்ன மாட்டேன்

சொன்ன பேச்சி கேக்கமாட்டேன்

நரச்ச கிழவங்கிட்ட

நானிருந்து வாழமாட்டேன்''

எனும் நாட்டுப்புறப்பாடல்வழி அதனை உணரமுடிகிறது. தொல்காப்பியர், பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்துள்ளார். ''ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்'' (அகத். நூ.51) எனும் நூற்பாவழி இதனை நன்கு உணரலாம்.

பகற்குறி

காதலர்களின் களவு மணம் பகற்குறி, இரவுக்குறி எனும் நிலையில் ஏட்டிலக்கியத்தில் விரிவாகப் பேசப்படுகிறது. தலைவிதான் பகலிலோ, இரவிலோ தன்னை சந்திக்க வரும் தலைவனிடம் இடத்தைத் தெரிவிப்பாள்.

வாய்மொழி இலக்கியத்திலும் காதலிதான் காதலனைச் சந்நிக்க நேரம் காலம் குறிக்கிறாள் என்பதை அறியமுடிகிறது.

''எப்பாவும் வயலிலதான்

எம்மாவும் ஊரிலதான்

காக்காவும் கரையிலதான்

கருக்கலிலே வாங்கமச்சான்''

இவ் வாய்மொழிப் பாடல்தான் ஏட்டிலக்கியத்தில் தலைவி எவ்வாறு விளங்க வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறியதாகக் கூறலாம்.

உடன்போக்கு

தலைவன் பெண்கேட்டு வரும்போது தலைவியின் பெற்றோரும் உற்றோரும் மறுத்தால், அவர்களறியாமல் தலைவியை அழைத்துச் செல்லுதலும் உண்டு. இதற்குப் பெயர்தான் ''உடன்போக்கு''. உடன்போக்கினைச் சுவையாகக் காட்டுவன நாட்டுப்புறப் பாடல்கள்தான்.

''சந்தைக்குப் போவோமடி சட்டிப்பானை வாங்குவோமடி

சந்தை கலையுமுன்னே தப்பிடுவோம் ரெண்டுபேரும்

நீ கறுப்பு நான் சிவப்பு ஊருலேயும் ஓமலிப்பு

ஓமலிப்புத் தீருமுன்னே ஒடிடுவோம் ரெண்டுபேரும்''

எனவே, நாட்டுப்புறப் பாடல்களில் யதார்த்தமும், ஏட்டிலக்கியத்தில் காதலுக்கு இலக்கணமும் இருக்கும் என்பதை உணரலாம்.

முடிவுரை

வரிவடிவ இலக்கியத்திற்குப் பெருமையும் வாழ்வும் தந்தவை வாய்மொழி இலக்கியங்களே. வாய்மொழி இலக்கியம் யதார்த்தமானது. மனதிலே பட்டதை மறைக்காமல் சொல்வது உள்ளத்து உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துவது. சில நேரம் நாகரிகம் அற்ற நிலையிலும் இருப்பது. இருப்பினும் வரிவடிவ இலக்கியத்திற்கு வாழ்வு தருபவை ''வாய்மொழி இலக்கியக் கூறுகளே'' என்றால் அது மிகையாகாது.

வாய்மொழிப் பண்பை வரிவடிவமாக்கும்போது சில விதிகள் உருவாக்கப்படுகின்றன. உண்மையான மக்களின் வாழ்க்கையைத் தெளிவாக வெளிப்படுத்தும் நாட்டுப்புறக் கூறுகள் ஏட்டிலக்கியத்தில் இடம்பெறும்போது ஏட்டிலக்கியமும் வாழும். வாய்மொழி இலக்கியமும் வாழும்.

நன்றி - வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: