23/09/2011

இராசா தேசிங்கு கதைப்பாடல் - முனைவர் மு.வசந்தமல்லிகா

முன்னுரை

தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்புகளும் உணர்வோட்டங்களும் இலக்கியப் படிவங்களாகத் தமிழகமெங்கும் காலங்காலமாகப் படிந்து கிடக்கின்றன. மக்களின் பண்பாட்டைப் புலப்படுத்தும் காலக் கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன. இலக்கியச் செல்வங்கள் பலவகையான அமைப்பில் உருவாக்கப்பெற்றுப் பல இடங்களில சிதறிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றே கதைப்பாடல்.

மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விழாக்கள், வரலாற்றுச் செய்திகள், பண்பாட்டுத் தன்மைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே கதைப்பாடல்கள் எழுதப்படுகின்றன.

நல்லதங்காள் கதை, சின்னதம்பி கதை, மருதுபாண்டியர் கதை, கட்டபொம்மன் கதை, அல்லி அரசாணி மாலை, தேசிங்குராசன் கதை போன்ற கதைப் பாடல்களில் தேசிங்குராசன் கதைப் பாடல் வரலாற்றுச் சிறப்பு பெற்ற வீரர்களில் வரலாற்றைக் கதையாகக் கூறுகின்ற பகுதியிலே அமைந்துள்ளது. இக்கட்டுரையில் தேசிங்கு ராசன் கதைப்பாடல்கள் மூலமாக அவனுடைய வீரம், போர் முறை, பக்தி போன்றவற்றைப் பற்றி விளக்கப்படுகிறது.

கதைச்சுருக்கம்

நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து செஞ்சியில் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவன் ஆட்சி புரிந்தது பத்தே மாதங்கள் தாம். எனினும் நீண்ட நாட்கள் அரசாண்டவனைப் போல் பேரும் புகழும் அவனுக்கு வாய்த்தன. தேசிங்கு பெயர் தெரியாதவர் எவரும் இல்லை எனலாம். ஒரு லட்சம் படைவீரர்களையும் நானூறு பீரங்கிகளையும் கொண்ட முகலாயர் படையை, முன்னூறு குதிரை வீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு, முகலாயப் படையை முற்றிலுமாக வென்று, இறுதியாகத் தானும் உயிர் நீத்தான். எதிரிகளின் கடல் போன்ற படையைக் கண்டு அஞ்சாத வீரன் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலை வணங்குகிறது.

இலக்கியத்தின் பல சுவைகளில் ஒன்றான வீரச் சுவையை விளக்கிக் காட்டவே புகழேந்திப் புலவர் இக்கதைப் பாடலை இயற்றினார் எனலாம்.

தேசிங்கின் இளமை வீரம்

டில்லியை ஆட்சி புரிந்த அரசனுக்கு கொங்குப் பக்கிரி என்பவன் பரிசாகக் கொடுத்த குதிரையின் பெருமையை கூறுவதன் மூலமாகத் தேசிங்கின் வீரத்தை அறியலாம்.

''தெய்வ வரத்தினால் பிறந்த பிள்ளை வந்து ஏறுவேணும்

வரத்தினால் பிறந்த பிள்ளை வந்து ஏறவேணும்

பூமிபாரம் தீர்க்கவந்தவன் இப்புரவி ஏறவேணும்

தேவரடியிற் பிறந்த பிள்ளை தேசியேற வேணும்''

என்று அக்குதிரையை அடக்கப் போகும் வீரனின் சிறப்பைக் கூறும் வழியாக தேசிங்கு ராசனின் ஆற்றல், சிறப்பு கூறப்படுகின்றது.

''குதிரை களைத்த சப்தத்திலே கொப்பென்று விழுந்தார்கள்

அண்ட மிடிந்து விழுந்தாற்போல அலறி விழுந்தார்கள்

கோட்டையிடித்து விழுந்தாற்போலக் குப்புற விழுந்தார்கள்'' !

என்று அக்குதிரையை அடக்க வந்தவர்களின் நிலையைப் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.

இத்தகைய முரட்டுக் குதிரையை அடக்கப் போகும் பாலகன் தேசிங்கு எத்தகையவன் என்றால்,

''பாலன்பிறந்த மூன்றாம் மாதம் பதைத்து விழுந்தானாம்

குழந்தைபிறந்த ஏழாம்மாதம் குலுங்கி விழுந்தானாம்

தொட்டிலைவிட்டுக் கீழேயிறங்கித் துள்ளி விழுந்தானாம்

தங்கத் தொட்டியை எட்டியுதைத்துத் தரையில் விழுந்தானாம்''

இவ்வீர பாலகன், குதிரையை அடக்கச் சென்று சிறைப்பட்ட தந்தையை மீட்க தனது ஐந்தாவது வயதில் டில்லி அரசவைக்குச் சென்றான். அவன் அரசவையிலே வந்து நின்றதைக் கண்டவர்கள்,

''நிறைந்த கொலுவில் இருக்கும் துரைகள் சட்டென்று எழுந்தார்கள்

தகத்திலிருக்கும் டில்லித் துரை தானும் எழுந்தானாம்''

குதிரையை அடக்கச் சென்ற தேசிங்கு அக்குதிரை மீது ஏறித் தன் தந்தையை நோக்கி,

''புரவிஏறிச் சவாரி போறேன் பெற்றவரே ஐயா

தப்பித்தவறி வந்தேனேயானால் தழுவிக் கொள்ளுமய்யா

இன்றைக்குஞ்சாவு நாளைக்குஞ்சாவு இருக்குது தலைமேலே

ஒன்றுக்கும் நீ அஞ்சவேண்டாம் உறுதி கொள்ளுமய்யா''

என்று விரிவுரை ஆற்றிச் சென்ற தேசிங்கு வீராதி வீரர்களாலும் அருகில் கூட நெருங்க இயலாத குதிரையை ஐந்து வயதான பாலகனான தேசிங்கு அடக்கினான் என்று உலகோர் போற்றும்படியாக அடக்கினான். இளவயதிலேயே அவன் வீரமுடையவனாக திகழ்ந்தான் என்பதற்கு இது தக்க சான்றாகும்.

பாளையக்காரர்களின் கூற்றின் வாயிலாகத் தேசிங்கின் வீரம்

தேசிங்கு ராசாவிடம் இருந்து திறைப் பணம் பெற்று வர புறப்பட்ட தோன்றமல்லனுக்கு, அவன் செல்லும் வழியில் தேசிங்கின் வீரத்தைப் பற்றிப் பலரும் எடுத்துரைக்கிறார்கள்.

''நானொரு வார்த்தை சொல்லுகின்றேன் கேளும் தோன்றமல்லண்ணா

அவனும் மகா சூரனையா ராசா தேசிங்கு

செஞ்சிக் கோட்டைச் சிப்பாயையா ராசாதேசிங்கு

அவன் கண்ணை உருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு

கால் பலங்களும் கைபலங்களும் கதறியோடுமேதான்

தாறுமாறாய்த் தீர்த்துப் போடுவான் ராஜா தேசிங்கு

சண்டை பண்ணிச் செயிக்கமாட்டாய் தோன்றமல்லண்ணா''

என்று வழிப்போக்கன் கூறக் கேட்ட தோன்றமல்லன். தேசிங்கு முன் செல்ல அஞ்சி நெற்றியிலே நாமம் இட்டு அவன் முன்னே நடுநடுங்கிச் சென்றான். இதன் மூலம் தேசிங்கின் வீரமும் பக்தியும் புலனாகின்றன.

தீச்சகுணங்களை கண்டு அஞ்சாத வீரதேசிங்கு

தேசிங்கு திறைப்பணம் செலுத்த மருத்ததால் அவன்மீது கோபம் கொண்டு அவனை அழிக்க மோவுத்துக்காரன் பெரும்படையோடு வந்தான். அவனை எதிர்த்து போரிடச் சென்ற தேசிங்கு முதலில் அரங்கநாதரை வணங்க சென்றான். அரங்கநாதரை வழிபட்டு நின்றபோது அரங்கநாதரின் மாலை கருகியது. முத்தாரங்கள் கழன்று விழுந்தன. திருவிளக்கு கீழே விழுந்தது. அவர் கண்களில் நீர் வடிந்தது. நெற்றிமணியும் துளிசிமாலையும் அருந்து விழுந்தன. கோபுரம் இடிந்தது. தீச்சகுணங்களைக் கலைக்கண்ட தேசிங்கு ஆண்டவன் மீது கடும்கோபம் கொண்டான். போருக்கு நான் அஞ்சேன். போர் முகத்தில் எனக்கு வீரச்சாவு அளிப்பாயாக என வேண்டிப் புரவி ஏறினான்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஆண்டவனே வந்து தடுத்தாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டாத சுத்த வீரன் தேசிங்கு என்பதை அறியமுடிகிறது.

பெரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சாத தேசிங்கு

தேசிங்கின் படையின் பலத்தை கண்டு பங்காரு நாயக்கன் நவாபின் உத்தாரம் பெற்று ஏறி நீரினை ஆற்றிலே இணைத்தான். இதனால் ஆற்றிலே பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனைக் கண்ட வீர தேசிங்கு தன் படைவீரர்களை நோக்கி

பாலூஞ்சோறும் தின்கிறவனனால் செஞ்சிக்குப் போங்களடா

ரத்தச்சோறு தின்கிறவனனால் என்பின்னே வாங்களடா

போர்களத்தில் செத்தோமானால் புகழும் கீர்த்தியுமுண்டு

இரணகளத்தில் செத்தோமானால் நல்ல பதவியுண்டு

சாவுக்கென்று பயப்படவேண்டாம் சமேதாருமாரே!

சல்தி சல்தி வாருமென்றான் ராசாதேசிங்கு.

என்று வீரவுரை ஆற்றி வீரர்களை உற்சாகப்படுத்தி போர்மேற்கொள்ள செய்தவன் மூலம் எவருக்கும் அஞ்சாத தேசிங்கின் வீரம் புலனாகிறது.

மாவீரன் தேசிங்கு

ஆற்காடு நவாபை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டான் தேசிங்கு. போர் கடுமையாகியது. ஒவ்வொரு பாளையக்காரனையும் தேசிங்கு கொன்றான். தேசிங்கு கரகரவென்று கத்தியைச் சுழற்றினான். தலைகள் பந்துகளாய் நாற்புறமாய் உருண்டன. நவாபும் அவன் படைகளும் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்டனர். தேசிங்கு படையில் அவனைத் தவிர அனைவரும் மாண்டனர். எதிர்த்துப் போரிட எவருமில்லாத நிலையில் தேசிங்கு தான் மட்டும் தனியனாய் நாடு திரும்ப விரும்பவில்லை. ஆண்டவனை வணங்கிவிட்டு மார்பை விரித்துக் கீழே படுத்தான். ஆகாயத்தில் கத்தியைத் தூக்கிப் போட்டான். அது மார்பில் வந்து வீழ்ந்தது. தேசிங்கு உயிர் நீத்தான்.

இந்த இறுதி முடிவு வீரத்திற்கு சான்றாக முடிகிறது. எதிர்பாரின்மையால் வீரத்தை வெளிப்படுத்த இனி வழியில்லை. உடன் வந்தோர் அனைவரும் இறந்துவிட்டமையால் தனியே திரும்பவும் மான உணர்வு இடந்தரவில்லை. ஆதலில் நெஞ்சிலே வாளைப் பாய்ச்சிக் கொண்டு வீர மரணம் அடைந்த தேசிங்கு இறப்பிலும் தன் வீரத்தை வெளிப்படுத்திவிட்டான்.

முடிவுரை

சுருங்கக் கூறின், வீரச்சுவையை விண்டுரைக்கும் கட்டபொம்மன் கதைப்பாடல்கள், கான்சாகிபு சண்டை, புலித்தேவன் கதை, மருதுபாண்டியர் கதை முதலிய கதைப்பாடல்கள் யாவற்றிலும் தேசிங்கு ராசன் கதை, காட்சிக்குகாட்சி உயர்ந்து நிற்கிறது எனலாம். ஒவ்வொரு வரியிலும், வரிகளில் அமைந்த சொற்களிலும் எழுத்துக்களிலும் கூட வீரச்சுவை சொட்டச் சொட்ட ஆசிரியர் பாடியுள்ளார். நூலினுள் எங்கு நோக்கினும் ஆசிரியர் கையாளும் உத்திகள் அனைத்தும் தேசிங்கின் வீரத்தை வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. இது ஒரு ஒப்பில்லா வீரகாவியம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி - வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: